அவர்கள் இருவருக்கும் குளிர்பானங்கள் கொடுத்து உபசரித்தார் மதன். அடுத்த சில நிமிடங்கள் மூவரும் உலக நடப்பில் ஆரம்பித்து நாட்டு நடப்பின் வழியாக வீட்டு நடப்பிற்கு வந்து சேர்ந்தனர். சினேகாவின் குடும்பம், அவளது வேலை என்று பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று,
“அன்னைக்கு பிரகதி மைதானத்திலே, அந்த ஒரிஸா கடைலே கைலே புத்தகம், கைப்பேசியோட நின்னிட்டு இருந்தது நீதானே?” என்று கேட்டார்.
அத்தனை தெளிவாக அவர் விவரித்ததைக் கேட்டு வியப்பானவள்,”நானே தான் ஸர்..இவங்க அங்கே வருவாங்கண்ணு நான் எதிர்பார்க்கலை..கொஞ்சம் அதிர்ச்சியா இருந்திச்சு..அன்னைக்கு தான் இவங்க..” என்று ஆரம்பித்தவள் அதை முடிக்கமால் ஷண்முகத்தின் புறம் திரும்பி அவனது உதவியை நாட, லேசாக புன்னகைத்தபடி அவர்கள் திருமணம் நிச்சயமான விதத்தில் ஆரம்பித்து கல்யாணம், காசியப்பன் வரை மதனோடு பகிர்ந்து கொண்டான் ஷண்முகவேல். அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது, வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் நடுத்தர வயது பெண்மணி ஒருவர்.
புன்னகைத்தபடி அவர்களை நோக்கி வந்தவர்,”நான் அனிதா கிஷோர்..மதனோட ஸிஸ்டர் இன் லா.” என்று அறிமுகம் செய்து கொண்டார். சினேகா, ஷண்முகம் இருவரும் சுயஅறிமுகம் செய்து கொண்டனர்.
“கிஷோர் எங்கே?” என்று அவரிடம் மதன் கேட்க,
“அவருக்கு லேட்டாகும் மதன்..நாம லன்ச் ஸ்டார்ட் செய்திடலாம்..அவர் வந்து ஜாயின் செய்வார்.” என்று மதனுக்கு பதில் அளித்தவர், சினேகாவிடம்,”வாங்க..வீட்டைக் காட்டறேன்..மதன் வீடும் இதே போல தான் இருக்கும்.” என்று பேசியபடி சினேகாவை அவருடன் அழைத்துச் சென்று விட்டார். அவனுடைய அம்மா வந்தது கூட தெரியாமல் அவனது வேலையில் மூழ்கியிருந்தான் சுதன்.
அவனை ஆதுரத்துடன் பார்த்தபடி,”ஆக்குபெஷனல் தெரபிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட், எக்ஸஸைஸ், மருந்து, மாத்திரைன்னு இவனை நார்மலாக்க இன்னும் முயற்சிகள் நடந்திட்டு தான் இருக்கு..கொஞ்ச நாளா சின்ன சின்ன அமர்க்களமெல்லாம் குறைஞ்சு போயிருக்கு..பெரிய யுத்தம் வரப் போகுதோன்னு அண்ணன், அண்ணி இரண்டு பேருக்கும் அச்சமா இருக்கு..பருவ வயதிலே வர்ற மாற்றங்கள் அவனோட முன்னேற்றத்தை பின்னே தள்ள நிறைய வாய்ப்பிருக்குதாம்..அந்த நேரத்திலே இவங்களுக்கு உறுதுணையா இங்கே இருக்கணும்னு நினைக்கறேன்..சர்கார் என்ன கணக்குப் போட்டு வைச்சிருக்குதுன்னு தெரியலை.” என்று சுதனைப் பற்றி ஷண்முகத்திடம் மதன் சொல்லி கொண்டிருக்க, அறையினுள்ளே அதே வேலையைச் செய்து கொண்டிருந்தார் அனிதா.
அப்போது அழைப்பு மணியோசை கேட்க, கதவைத் திறக்கப் போனார் மதன். அறையின் கதவைத் திறந்து கொண்டு அனிதா, சினேகா இருவரும் வெளியே வந்தனர். அவனது தலையை உயர்த்தி அவனுடைய அம்மாவைப் பார்த்தவுடன் புத்தகத்தோடு எழுந்து வந்த சுதன்,”அம்மா” என்று அழைத்து பெரிய இடைவெளிக்குப் பின்,”நேத்து பார்த்தோ மில்லே…. அந்தக் காரோ டதை வரைஞ்சி. ட்டேன்.” என்று திக்கி திக்கி சொல்லி முடித்து, அந்தப் புத்தகத்தை அனிதாவிடம் காட்டினான். அந்தப் பக்கத்தில் பென்சிலை வைத்து காரின் ஹெட் லைட் ஒன்றை வெகு நுணுக்கமாக வரைந்திருந்தான்.
“ரொம்ப நல்லா இருக்க டா.” என்றார் அனிதா.
அப்போது கதவைத் திறந்ததும் உள்ளே வந்த வேலைக்காரி அனைவர்க்கும் பொதுவாக வணக்கம் சொல்ல,”தெரேஸா..காலைலே செய்து வைச்சதை சூடு செய்திடுங்க..சலாடுக்கு காய்கறி நறுக்கி வைங்க..நான் ரொட்டிக்கு மாவு பிசையறேன்.” என்று பேசியபடி அனிதா சமைலறைக்கு செல்ல, அவரைப் பின் தொடர்ந்து சென்றாள் சினேகா.
கதவை மூடி விட்டு வந்த மதனிடம் அவனது லேட்டஸ்ட் டிராயிங்கை காண்பித்தான் சுதன். அவனது தலையைக் கோதி,”ஆஸம்.” என்ற மதன் அந்தப் புத்தகத்தை ஷண்முகத்திடம் கொடுத்தார். அதன் பின் பத்து நிமிடங்கள் போல் அந்தப் புத்தகத்தில் இருந்த விதவிதமான ஹெல்லைட்டுகள், அது பொருத்தப்பட்டிருந்த வண்டியில் பெயர், இன் ஜின் அளவு, நீளம், அகலம் அன்று அனைத்து விவரங்களையும் அவனது பாணியில் அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தான் சுதன்.
சாப்பாடு மேஜையில் விருந்தின் சுவையை விட விருந்தினர்களை கவர்ந்திழுத்தது சுதன் தான். அவனுக்கு தெரிந்தது அதாவது வகுப்பில் நடந்தது, பாடப் புத்தகத்தில் பயின்றது என்று அனைத்தையும் பகிர்ந்து கொண்டான். இவனிடம் அந்தச் சிறு பிழை மட்டுமில்லாமல் இருந்தால் குடும்ப வாழ்க்கை எத்தனை சிறப்பாக இருக்குமென்று தோன்றியது சினேகாவிற்கு.
விருந்து முடிந்ததும் சுதனின் டிராயிங் புத்தகத்தை கையில் புரட்டியபடி ஆதங்கத்துடன், அனிதாவிடம்,”எவ்வளவு ப்ரிலியண்ட் இவன்..இவனுக்கு ஏன் இந்தக் குறை வரணும்?” என்று கேட்டு விட்டாள்.
“இத்தனை திறமைசாலியா இருக்கறதே அந்தக் குறைனாலே தான்..இந்த வயசுலே நார்மல் குழந்தையாலே இந்த மாதிரி வரைய முடியாது..அந்தக் கார்களை சுதன் ஒருமுறை இல்லை இரண்டு முறை தான் பார்க்கறான்..அதை அப்படியே தத்ரூபமா பேப்பர்லே கொண்டு வந்திடறான்..இவனை நார்மல் ஸ்கூல்லே போடாதீங்க..படிக்க முடியாது..வராதுன்னு நிறைய பேர் நிறைய ஆலோசனைகள் கொடுத்தாங்க..இவனாலே என்ன முடியும் முடியாதுன்னு இவன் தானே முடிவு பண்ணனும்..அதுக்கு நாங்க கொஞ்சம் உதவி செய்தோம்..சையன்ஸ், மேத்ஸ் நல்லா வருது..லாங்குவேஜஸ்லே கொஞ்சம் கஷ்டப்படறான்..அதுவும் போக போக சரியாகிடும்னு நினைக்கறேன்..ஆனா எந்தப் புள்ளிலே பின்னடைவு ஏற்படும்னு சொல்லவே முடியாது..ஒரு நொடிலே இதுவரை போட்ட அத்தனை உழைப்பும் மறைய வாய்ப்பிருக்கு..நம்மை போல ரீசெட் பட்டன் அவன் மூளைலே கிடையாது..திரும்ப முதலேர்ந்து ஆரம்பிக்கணும்..அதான் அவனை ஒரு கண்ட் ரோல்டு அட்மாஸ்ஃபியர்லே வைச்சிருக்கோம்..அவனோட நிலைக்கு எந்தத் தீர்வும் இல்லை..கடைசிவரை கட்டுபாடான சூழ்நிலைலே தான் வைச்சிருக்கணும்.” என்றார்.
“யெஸ்..என்னோட அம்மா ரொம்ப தைரியசாலி..முடிவு எடுக்க வேண்டிய நேரத்திலே தைரியமா முடிவு எடுத்தாங்க.” என்றான் ஷண்முகம். அதன் பின் சிறிது நேரம் மதனின் அண்ணன் கிஷோருக்காக காத்திருக்க, அவரிடமிருந்து சாரி மெஸேஜ் வந்தவுடன்,
“ஸர்..அடுத்த முறை சந்திக்கறோம்..இதுக்கு மேலே என்னாலே காத்திருக்க முடியாது..அக்காவைப் பார்க்கப் போகணும்.” என்று விடைபெற்றுக் கொண்ட ஷண்முகத்திற்குத் தெரியவில்லை அன்றைய இரவை கிஷோர், மதன் இருவருடன் மதனின் வீட்டில் தான் கழிக்கப் போகிறானென்று.
விமான நிலையம் போகும் வழியில் வசந்தியைச் சந்திக்க சென்றனர். ஒருமுறை கூட நேரில் சந்தித்திராத அவளுடைய நாத்தனாரை அவருடைய நாத்தனார் வீட்டில் சந்திப்பது சினேகாவிற்கு சங்கடமாக இருக்க ஷண்முகத்திற்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. டாக்ஸியை வெய்ட்டிங்கில் போட்டு விட்டு அவனுடைய அம்மா அனுப்பிய முகவரியை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பார்த்து விட்டு, சரியாக ராதிகாவின் ஃபிளாட்டின் அழைப்புமணியை அழுத்தினான் ஷண்முகம்.
சில நொடிகள் கழித்து வாசல் கதவைத் திறந்த சீதாவுக்கு பெரும் அதிர்ச்சி. வ்சந்தியின் மாமியாரென்று அவரைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டான் ஷண்முகம். அவரும் அவனை சரியாக அடையாளம் கண்டு கொண்டதால் தான் அந்த அதிர்ச்சி.அதை மிகச் சரியாக படித்து விட்ட போலீஸ்க்காரன் அவனது பார்வையை வீட்டினுள்ளே செலுத்தினான். வரவேற்பறை சுவரொன்றில் டி வி ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்க்காமல் தரையில் அமர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள் இருவர். டி வியைப் பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தனர் பெரியவர்வகள் இருவர். அந்த இருவரில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண். அவர்கள் அவனுடைய அக்கா, மாமா இல்லையென்று நொடியில் கண்டு கொண்டவன் வீட்டின் உள்புறம் அவனது பார்வையைச்க் கொண்டு சென்றான். வசந்தி அக்கா கண்களில் படவில்லை. வெங்கடேஷ் மாமாவும் அவனுக்குத் தென்படவில்லை. எங்கே அவர்களென்று அவன் விசாரிக்குமுன்,
“பொண்ணைக் கட்டிக் கொடுத்த பின்னாடி அவ இருக்காளா? செத்தாளான்னு பார்க்க மாட்டீங்களா? இப்படித் தான் மாசக் கணக்கா ஒருத்தி சீக்கா இருந்தா என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டீங்களா?” என்று அப்படியே விஷயத்தைத் திருப்பி போட்டு வசந்தியின் பிறந்த வீட்டினரை குற்றவாளி ஆக்கினார் சீதா.
******************
மதியிறுக்கம் (Autism) அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு அல்லது தன்னுழப்பல் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும். மதியிறுக்கத்தின் குறிப்பிட்ட மருத்துவக் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிட்டாலும், ஆய்வாளர்கள் சுற்றுச்சூழல் காரணிகளின் பாதிப்புக்கு ஒருவர் உள்ளாகும் வண்ணம் அமையும் மரபுக் கூறுகளினாலேயே இவ்வேறுபாடு ஏற்படுகிறது எனக் கருதுகின்றனர். (wikipedia)