நடு இரவு நேரம் அந்த பெரிய வீட்டின் அணைத்து விளக்குகளும் அணைந்திருக்க,கருப்பான ஒரு உருவம் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று பார்த்து கொண்டே அழுத்தமான காலடிகளுடன் மாடி ஏறி ஒரு அறை முன் வந்து நின்றது. பின் மீண்டும் ஒரு முறை தன் கூர் பார்வையால் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று ஆராய்ந்துவிட்டு மெதுவாக அந்த அறையின் கதவை தள்ளி திறந்தது.
கதவு திறக்கும் சத்தத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அந்த யுவதி கண்ணை கசக்கி கொண்டே விழிக்க, அங்கு ஆறடி உயரத்தில் கட்டான உடல் அமைப்புடன் நின்றிருந்த உருவத்தை கண்டு திடுக்கிட்டு போனாள்.இருட்டில் அந்த உருவத்தின் முகம் அவளுக்கு சுத்தமாக தெரியவில்லை.ஆனால் அந்த உருவம் ஒரு ஆண் என்பதும் உயரத்திற்கேற்ற உடற்கட்டுடன் முரட்டு ஆள் போல் இருப்பதையும் கவனித்தவளுக்கு பயத்தில் இதயம் வாய் வழியாக வெளியில் குதித்துவிடும் அளவிற்கு பட படப்பானது.
திடீர் அதிர்ச்சியில் மூளை செயலிழக்க என்ன செய்வது, ஏது செய்வது என்று எதுவும் புரியாமல் படுக்கையில் இருந்தவாறே தன்னை நெருங்கி வரும் அந்த உருவத்தையே விழி விரித்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த பேதை.
தன் பெரிய கால்களை கொண்டு நான்கு எட்டில் கட்டில் அருகில் சென்றவன் தான் அணிந்திருந்த ஆடையை கலைந்து.பெண்ணவள் போர்த்தியிருந்த போர்வைக்குள் புகுந்தவன் அவள் காது மடலில் தன் சூடானா மூச்சு காற்றை செலுத்தியவாறு படர்ந்தான்.
ஆணவனின் செயலில் உடல் தூக்கி வாரி போட,மனதில் அரண்டு போய் இருந்தவள் பயத்தில் கத்த கூட தோன்றாமல் அப்படியே சமைந்து போய் இருக்க, அவளின் வெற்றிடையில் அவன் முரட்டு கரம் அழுத்தமாக பதிய, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் அவ்வளவுதான் என்று எண்ணி கத்த போனவளின் இதழ்கள் அந்த ஆடவனால் சிறை பிடிக்கப்பட்டது.
ஆணவனின் செயலில் துடித்து போனவளின் கண்கள் கலங்க, எதுவும் செய்ய முடியா தன் நிலையை நொந்து கொண்டு இருந்தவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “ஹேய்….முயல்குட்டி மயக்கறடி……”என்று மோகம் தலைக்கேற கரகரப்பான குரலில் கூறியவன் உணர்வுகளின் தாக்கத்தால் “சாரிடி முயக்குட்டி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ”என்று சொல்ல, அவளோ ‘இவன் என்ன சொல்கிறான்’என்று புரியாமல் பார்த்தவள் அவன் செயலில் விதிர்த்து போனாள். ஆம், மோகம் மேலிட அவள் கழுத்தில் பல் பதிய அழுத்தமாக கடித்திருந்தான். இதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவெடுத்தவள் தன் முழு பலத்தையும் திரட்டி அந்த உருவத்தை தள்ளி “ஐயோ…..அம்மா….இல்ல….. வேண்டாம்……”என்ற அலறலோடு எழுந்து அமர்ந்தாள் சைந்தவி தேவி.
இதயம் வேகமாக துடிக்க வேர்த்து விறு விறுத்து போய் வந்த கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் கைகள் நடுங்க அமர்ந்திருந்தவளின் காதில் “ஹேய் சைத்தான்…. என்னடி ஆச்சு?எதுக்கு இப்படி அர்த்த இராத்திரி மூணு மணிக்கு கத்தற” என்று கடுப்படிக்க, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தங்கை சொன்னதை கேட்டு மனதில் அரண்டு “அடியே பாவி….. ச்சி…. ச்சி…. பவி விடியகாலைல கண்ட கனவு பழிக்கும்னு சொல்லுவாங்க இல்ல”என்று கேட்ட அக்காவை இடுப்பில் கை வைத்து முறைத்தவள் “இதை கேட்கவா இப்படி கத்தி என்னை எழுப்புன. லூசு நானே நைட் நீயூஸ் கலெக்ட்பண்ண போயிட்டு லேட்டாதான் வந்து படுத்தேன்.நீ என்னென்ன இப்படி கத்தி எழுப்பிட்டு இருக்க. பேசாம படுடி. சும்மா எதாவது உளறிக்கிட்டு”என்றவள் போர்வையை தலை வரை இழுத்து மூடி கொண்டு தூங்க,
“அடியே நீ எல்லாம் ஒரு தங்கச்சியா?அக்கா கனவு கண்டு அரண்டு போய் இருக்காளே அவளை பேசி ஆசுவாசபடுத்துவோம்னு பொறுப்பு இருக்கா?”
“அந்த பருப்ப வாங்க மறந்துட்டேன். காலைல மறக்காம நியாபகப்படுத்து முக்கு கடைல போய் வாங்கிட்டு வந்துடறேன். முன்னாடியே சொல்லி இருந்தா வாங்கி ஸ்டாக் வச்சிருப்பேன்ல. திடுதிப்புன்னு மிட்நைட்ல கேட்டா நான் எங்க போக”என்று தூக்க கலக்கத்தோடு சொல்ல,
தலையில் அடித்து கொண்டு தங்கையை பார்த்த சைந்தவி அவள் போர்வையை பிடித்து இழுத்து “சரி நீ தூங்கு. நான் டிஸ்டர்ப்பண்ண மாட்டேன். ஆனா என்னோட ஒரே டவுட்ட மட்டும் கிளியர் பண்ணிட்டு தூங்குடி நல்ல பிள்ளை இல்ல“
“நான் மாட்டேன்னு சொன்னா மட்டும் விடவா போற”என்று ஒன்னரை கண் திறந்து அக்காவை பார்த்து கேட்டவளுக்கு ‘இல்லை என்ற பதில் தெளிவாக வர, பல்லை கடித்தவள் “சொல்லும் சொல்லி தொலையும்”.
“அதான் முதல்லயே கேட்டேனேடி பாவி”
“ம்ம்ம்ம்…….”என்ற முறைத்த தங்கையை பார்த்து “ஈஈஈ……”என்று இளித்தவள் “சாரி….. பவி”என்க,
“ம்ம்ம்….. அந்த பயம் இருக்கட்டும்.சீக்கிரம் சொல்லு எனக்கு தூ….. க்கம் வருது”என்று கொட்டாவி விட்டவளை பார்த்தவள் “அதான்டி விடியற்காலைல வர்ற கனவு பலிக்குமா”என்று பயத்தோடு கேட்டாள் சைந்தவி.
அக்காவை கடுப்பாக பார்த்த பவி “ஏன்டி படுத்துற. ஒரு பேமஸ் ரிப்போர்ட்டர்கிட்ட கேட்கற கேள்வியா இது.என்கிட்ட நேத்து என்னென்ன க்ரைம் நடந்துச்சுனு கேளு சொல்றேன். அடுத்த தெருவுல இருக்காங்களே அலமேலு ஆன்டி அவங்க பொண்ணு அவள் கூட படிக்கற பையன் கூட ஓடி போய்ட்டா, அப்புறம் அந்த நாலாவது தெரு சொட்ட அங்கிள் இருக்காறே அவரு பையன் நேத்து நைட் ஒரு பொண்ணுகூட பப்க்கு போனான். அப்புறம்…………”என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவளின் வாயை விழுந்து மூடியவள் “ஏன்டி இதைய கண்டுபிடிக்கவா நைட் முழுக்க ஊரு சுத்திட்டு லேட்டா வந்த”.
“ரொம்ப முக்கியம். நீ சின்ன புள்ள பயப்பட கூடாதுனு இதை சொன்னேன். இன்னொரு டெரர் விஷயம் தெரியுமா…..”
“போதும்டி….போதும்….”என்று தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்ட சைந்தவி “நீ தூங்கு ராஜாத்தி தூங்கு. உன்னை எழுப்புனது என்னோட தப்புதான்” என்று சொல்ல,
“இந்த அறிவு முன்னாடியே இருந்திருக்கணும்”என்றவள் மீண்டும் போர்வையை தலைவரை இழுத்து போர்த்தி கொண்டு “பாரு சைத்தான் நான் என் க்ரஷ்கூட டூயட் பாட போறேன். மறுபடியும் என்னை டிஸ்டர்ப் பண்ணுன, கழுத்துல கடிச்சு வச்சுடுவேன் பார்த்துக்கோ”என்றவள் ‘கை புள்ள இன்னும் ஏன் முழிச்சுட்டு இருக்க தூங்கு……’என்றுவிட்டு தூங்க ஆரம்பித்தாள்.
தங்கை சொல்வதை கேட்டு திகைத்து போனவள் “என்ன இப்படி சொல்றா.கழுத்துல கண்டிப்பாளா!!…. அவனும் அங்கதானே கடிச்சான்…. என்று யோசித்தவளின் கண் முன் அந்த கனவு மீண்டும் வர, உடல் தூக்கி வாரி போட, ‘கடவுளே……இது என்ன கனவு இப்படி எல்லாம் வருது.இப்போ கண்ட கனவு பலிக்குமா இல்லையான்னு தெரியலையே”என்று மண்டையை சொரிந்தவள் ‘பேசாம கூகுல் ஆண்டவர்கிட்டயே கேட்போம்’என்று போனை எடுத்து பார்க்க அதில் வந்த பதிலை கண்டு தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டாள்.
நிலவு மகள் இரவு முழுக்க சுற்றி வந்த களைப்பில் ஓய்வெடுக்க செல்ல, ஆரஞ்ச் பந்தாக உதித்த ஆதவன் தன் கரங்களால் ஏழை, பணக்காரன் என்ற எந்த ஏற்ற தாழ்வும் இல்லாமல் அனைவரையும் அணைத்து கொள்ள துவங்கும் காலை வேலை அந்த சென்னை நகரமே பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.
அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் வசிக்கும் அந்த ஏரியாவில் இருக்கும் இரண்டடுக்கு மாடி வீட்டில் கிச்சனை உருட்டி கொண்டிருந்தார் மஞ்சுளா.
“யாரவது வீட்ல நான் சொல்றதை கேட்குறாங்களா.எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்காங்க”என்று முணு முணுத்து கொண்டே காபி போட்டு ஹாலுக்கு வந்தவர் பேப்பரை முகம் வரை மறைத்து கொண்டு அமர்ந்திருந்த கணவன் முன் டொக்கென்று வைத்தார்.
கப் சத்தத்தில் பேப்பரை கீழே இறக்கி மனைவியை பார்த்தவர் “என்ன மஞ்சும்மா காலைலயே எண்ணெய்ல போட்ட கடுகாட்டம் பொறியற என்ன விஷயம்”.
“ஆமா….. என்ன விஷயம்னு சொன்னா மட்டும் அப்படியே அதை சரிபண்ணிட்டுதான் மறுவேலை பார்ப்பீங்க”.
“அட என்ன மஞ்சும்மா. நீ சொல்லி நான் கேட்காம இருப்பேனா”
“ம்கூம்……இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல”என்று மோவாயை தோளில் இடித்தவர். போக திரும்ப அவர் கையை பிடித்து நிறுத்தியவர் “என்ன ஆச்சு இப்போ? ஏன் இவ்ளோ டென்ஷன். முதல்ல இங்க உட்காரு”என்றவர் அருகில் இருந்த சேரில் மனைவியை அமர வைத்து “இப்போ சொல்லு என்ன பிரச்சனை”.
“என்ன…என்ன பிரச்சனை? நம்ம பொண்ணுக்கு கல்யாணம் பண்ற எண்ணம் உங்களுக்கு இருக்கா? இல்லையா? அவகூட படிச்ச புள்ளைங்க எல்லாம் இப்போ கல்யாணம் முடிஞ்சு கைல ஒரு புள்ளைய புடிச்சுட்டு போகுதுங்க. நீங்க என்னனா……”என்றவரின் பேச்சை கேட்டு சிரித்தவர் “அவ்ளோதானே, நானே இதைபத்தி உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். நைட் மீட்டிங் போயிட்டு வந்த டயர்ட்ல தூங்கிட்டேன்”என்று சொல்ல, கணவனின் முகத்தை ஆர்வமாக பார்த்தார் மஞ்சுளா.
குமார்,“நேத்து என் பிரண்டு ஒருத்தனை ஹோட்டல்ல பார்த்தேன். அவன் பையன் போலீசா இருக்கானாம். பொண்ணு பார்த்துட்டு இருக்கறதா சொன்னான்.அப்புறம் நம்ம பேமிலி போட்டோ காட்ட சொன்னான். நானும் போன்ல ஆயுத பூஜையப்ப நாம ஒன்னா நின்னு எடுத்த போட்டோவை காட்டினேன். நம்ம சைந்தவிய பார்த்து அவனுக்கு ரொம்ப புடிச்சு போய் அவன் பையனுக்கு கேட்டான்” என்றவர் அமைதியாக மனைவி முகத்தை பார்த்தார்.
மஞ்சு,“ஹாப்பா….. கடவுளே. என் புள்ளைக்கு நல்ல வழி காட்டிட்ட”என்றவர் கணவரிடம் “நீங்க என்ன சொன்னீங்க என்று கேட்க. அவரோ “வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்”என்றார்.
“இதுல கேட்க என்ன இருக்கு. உங்க பிரண்டு பையன்னு சொல்லறீங்க. நல்ல வேலைல இருக்கார். அப்புறம் என்ன”என்ற மனைவியை கண்டிப்பாக பார்த்தவர் “இல்லை மஞ்சு. இது நாம முடிவு பண்ற விஷயம் இல்ல. நம்ம பொண்ணு முடிவுபண்ண வேண்டியது. வாழ போறது அவதான். அதனால அவ முடிவு ரொம்ப முக்கியம்”என்று சொல்ல, அவர் மனைவி ஏதோ பேச வருவதற்குள் “டொய்….. டொ…. டொ…. டொ….. டொ…டொய்……நான் ரெடிதான் வரவா……”என்ற பாடல் ஹோம் தியேட்டரில் அந்த வீடே அதிரும்படி கேட்டது.
“ம்ம்ம்….. இந்தா ஆரம்பிச்சுடுசுங்க. தினமும் இதுங்களுக்கு பஞ்சாயத்து பண்றதுதான் என் வேலை ச்ச…..” என்று தலையில் அடித்து கொண்டு எழுந்து செல்ல, உடனே “அழகாய் பூக்குதே……சுகமாய் தாக்குதே……”என்று மெல்லிய பாடல் அதிர, விஜய குமாரோ கிச்சனை எட்டி பார்த்தவர் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறி கொண்டிருப்பதை பார்த்து அரண்டு ‘இருக்கு இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு’ என்று தனக்குள் சொல்லி கொண்டு பாக்கெட்டில் இருந்த பஞ்சை எடுத்து காதில் வைத்து கொண்டு விட்ட வேலையை தொடர்ந்தார். அதாங்க பேப்பர் படிக்கறது.
அவர் பேப்பர் ஒரு பக்கம் படிக்கட்டும். பாட்டு ஒரு பக்கம் அதிரட்டும் நாம அதுக்குள்ள இவங்களை பத்தி தெரிஞ்சுக்கலாம்.
விஜயகுமார், மஞ்சுளா தம்பதிதான் இவர்கள். குமார் மிக பெரிய ஜவுளி கடை வைத்திருக்கிறார்.அவர் மனைவி மஞ்சுளா இல்லத்தரசியாக வலம் வருபவர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் சைந்தவி தேவி,பவித்ரா.
சைந்தவி பெரியவள் மருத்துவராக பிராக்டிஸ் எடுத்து கொண்டு இருக்கிறாள். பாலில் குங்குமபூ கலந்தது போல் அப்பழுக்கற்ற அழகிய முகம். வீட்டில் மட்டும் நன்றாக பேசுபவள். வெளி இடங்களில் எப்போதும் அமைதியாக இருப்பாள். சைந்தவி பொண்ணு ரொம்ப அமைதி என்று உறவினர்கள் சொல்லும்போது வாயில் கைவைத்துவிடுவர் அவள் குடும்பத்தினர்.
அடுத்து பவித்ரா நல்ல சிவந்த நிறம் புகழ் பெற்ற ஒரு பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக இருக்கிறாள்.மிகவும் தைரியமானவள். தன் துறையில் சாதிக்க வேண்டும் என்று வெறிகொண்டு இருப்பவள். அதிரடி சரவெடிதான் நம்ம பவி. இப்போதைக்கு இது போதும் இனி கதை போக்கில் அவர்களைபற்றி அறிந்து கொள்வோம்.
“அம்மா…….. இவளை பாருங்கம்மா…..”என்று சைந்தவி முன்னால் ஓடி வர, “அடியே நில்லு. எதுக்குடி பாட்டை மாத்துன.ஒழுங்கா ரிமோட் குடு.என்று அவளை துரத்தி கொண்டு ஓடி வந்தாள் பவி.
சைந்து,“அது எல்லாம் முடியாது. நேத்து பாட்டு உன்னோட டர்ன். இன்னைக்கு பாட்டு என்னோட டர்ன் என்னோட டைம்ல நீ எப்படி உனக்கு பிடிச்ச பாட்டு வைக்கலாம்”
பவி, “அது எல்லாம் முடியாது. யாரு பர்ஸ்ட் எந்திரிச்சு பாட்டு போடறாங்களோ அவங்களுக்குதான் அன்னைய பாட்டு.உன்னைய யாரு இவ்ளோ நேரம் தூங்க சொன்னது.ரிமோட்ட குடுடி சைத்தான்”என்று கத்த,’ச்ச…. கனவுல வந்த லூசு பயலாளதான் தூக்கம் வராம புரண்டு, அப்புறம் தூங்கி லேட்டா எந்திரிச்சு ச்ச…..எல்லாம் அவனாலதான். யாருனு வேற தெரியல’என்று திட்டியவள். ஓடி கொண்டே “அது எல்லாம் முடியாது. இன்னைக்கு எனக்கு பிடிச்ச பாட்டுதான் கேட்கணும்”என்க, பவி பதில் பேச அந்த வீட்டை சுற்றி சுற்றி ஓடி கொண்டிருந்தனர் சகோதரிகள்.
பாட்டு ஒரு பக்கம் அலற, இவர்கள் இருவரும் ஒரு பக்கம் அலற, இதில் கடுப்பான மஞ்சு கையில் இருந்த பாத்திரத்தை தூக்கி கீழே போட்டு கிச்சனை அலறவிட இவர்களிடம் தனியாக சிக்கிட்டோமே, சேதாரம் இல்லாம இன்னைக்கு கடைக்கு போவோமா என்று குமார் மனதில் அலற ஆரம்பித்தார்.
ஒரு வீடு இப்படி அதிரி புதிரியாக இருக்க, அதன் பக்கத்து வீடோ ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்திருந்தது.இவர்கள் வீடும் இரண்டடுக்கு வீடுதான்.ராதிகா அந்த வீட்டின் ஓனர். தூங்கும் மகனை தொந்தரவு செய்ய கூடாது என கந்த சஷ்டி கவசத்தை சத்தம் குறைவாக ஓடவிட்டுவிட்டு காலை உணவை தயாரித்து கொண்டு இருந்தார். அவர் மகனோ இரவு ரெய்ட் போன இடத்தில் நேரமாக இரண்டு மணி போல்தான் வீட்டிற்கு வந்து உறங்க ஆரம்பித்தான்.
ராதிகா பக்கத்து வீட்டில் வரும் பாட்டு சத்தத்தை கேட்டு மென்மையாக புன்னகைத்து ‘ம்கூம்…. பையனை பெத்ததுக்கு பதிலா,பொண்ண பெத்துருக்கலாம். அந்த வீடு மாதிரி இந்த வீடும் உயிரோட்டமா கலையா இருந்திருக்கும்’என்று பெரு மூச்சுவிட்டார். (இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும் அவர்கள் புள்ளைகள் இல்லை தொல்லைகள் என்று…..யாரோ சொன்னது. நான் இல்லப்பா…..)
மஞ்சு பொறுத்து பொறுத்து பார்த்தவர் ‘பொறுத்தது போதும் பொங்கி எழு…….’ என்பது போல் முகம் முழுவதும் கோபத்துடன் கையில் கரண்டியோடு வெளியில் வந்தவரை முதலில் கண்ட சைந்தவி தங்கை அருகில் சென்று அவள் தோளில் கை போட்டு “மூடிட்டு என்ன பாலோபண்ணு இல்ல ரெண்டு பேருக்கும் சேதாரம் அதிகம் ஆகி போகும்”என்று கிசு கிசுத்து “நம்மை போல அன்பை கொண்ட அக்கா, தங்கை யாரும் இல்லை…..”
பவி, “ஊரே கண்டு பொறாமை கொள்ளும் அன்பை கொண்ட அக்கா தங்கை நாம் தான் இங்கே”என்று பாடி கொண்டே மாடிக்கு தங்கள் அறை நோக்கி ஓடிவிட, கீழதானே வரணும் வாங்க பேசிக்கறேன் என்று கருவி கொண்டார் மஞ்சு.
அறைக்குள் வந்த சகோதரிகள் பாட்டை நிறுத்திவிட்டு “அடியே பவி இன்னைக்கு ரெட் சிக்னல் ரொம்ப ஹெவியா தெரிஞ்சுதே ஒருவேலை அந்த பனிஷ்மென்ட் குடுத்துருவாங்களோ”என்று தலையில் கைவைத்து சைத்து அமர,
“இல்லை….. இல்லை….. இல்லை…. அது மட்டும் வேண்டாம்”என்று சரோஜா தேவி போல் நெஞ்சில் கை வைத்து கொண்டு சொன்னவளை கொலைவெறியோடு பார்த்த சைத்து “உன் டிரமாவ நிறுத்து. நான் குளிக்க போறேன். ஆனா அந்த பனிஷ்மென்ட் மட்டும் இருந்துச்சு. உன் பாக்கெட் மணி போட்டு ஒரு வாரத்துக்கு நீதான் எனக்கு டிபன் அரேஞ் பண்ணனும்”.
“நீ வாங்கி தரல. நைட் நீ இன்வஸ்டிகேசன் பண்றேன்னு. யாருக்கும் தெரியாம வெளிய போனது. அப்புறம் காலேஜ்ல அரியர் வச்சுட்டு பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ்பண்ணிட்டேன்னு புளுகுனது. அப்புறம்……”என்றவள் வாயை ஓடி போய் மூடிய பவித்ரா “வாங்கி தந்து தொலையறேன். தயவு செஞ்சு உன் திரு வாயை மூடு”என்றவள் கண்கள் மின்ன “ஹேய் நான்தான் படிச்சு முடிச்சு வேலைக்கே போய்ட்டேன்ல அப்புறம் என்ன இன்னும் அரியர் வச்சதை எல்லாம் சொல்லி காட்டிட்டு இருக்க”. என்ற தங்கையை கிண்டலாக பார்த்த சைந்து அவள் தோளில் கை போட்டு “நீ பாஸ்பண்ணியிருக்கலாம் செல்லம். ஆனா பொய் சொல்லிட்டியே. அம்மா பொய் சொன்ன என்ன பண்ணுவாங்கன்னு தெரியும்ல. போ…. போ… போய் பைசா எடுத்து வை. உன் ஒரு வருஷ பாக்கெட் மணிய ஒரு வாரத்தில் கரைக்கறேன்”என்றவள் பாத்ரூமினுள் நுழைந்தாள்.
அக்கா சொல்வதை கேட்டு அதிர்ந்த பவி “ஹேய் நீ ……”என்றவள் பேசும் முன்னே “சோ சாரி செல்லம். இந்த ஒரு வாரத்துக்கு வித விதமா சாப்பிடலாம்னு முடிவுபண்ணிட்டேன்.சோ பைசா எடுத்து வச்சுக்கோ”என்ற அக்காவின் குரல் காதில் விழ, நெஞ்சில் கை வைத்தவள் ‘ஹையோ என் பாக்கெட் மணி…..’ என்று அரண்டு பின் ‘கடவுளே அது மட்டும் இன்னைக்கு வேண்டாம். பாத்து கொஞ்சம் கருணைகாட்டு’என்று வேண்டி கொண்டு தன் வேலைக்கு தேவையானதை எடுத்து வைத்து கிளம்ப ஆரம்பித்தாள்.
அக்கா தங்கை இருவரும் கிளம்பி கீழே வர மஞ்சு சோபாவில் அமர்ந்து கூலாக பிக்பாஸ் பார்த்து கொண்டு இருந்தார். அம்மாவின் செயலை கண்டு இருவரும் திகைத்து அப்பாவை பார்க்க அவரோ தலையை இரு பக்கமும் ஆட்டி மேல் நோக்கி கை காட்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து “சோலி முடிஞ்சுது….”என்றவாறு பயந்த முகத்துடன் சென்று டைனிங் டேபிளில் இருந்த ஹாட் பாக்ஸை திறக்க அதில் உப்புமா அவர்களை பார்த்து பல் இளித்தது.