‘பாவி லூசு எதாவது அவ லவ்வரைபத்தின டீடெயில வச்சிருக்காளா பாரு. ஒன்னையும் காணோம். அஞ்சு வருஷமா லவ் பண்றதா அந்த டைரில எழுதியிருந்தா, இப்போ அந்த டைரிய கூட காணோம்.எங்கதான் வச்சு தொலைச்சாளோ. போன ஜென்மத்துல அலாவுதீன் பூதமா இருந்திருப்பாளோ. இந்த விளக்கு, பிளவர் வாஷ், இது மாதிரி எதுலயாவது ஒளிச்சு வச்சிருப்பாளோ’ என்று தங்கையை திட்டி கொண்டே தேடிகொண்டிருந்தாள்.
வெகுநேரம் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் போக,‘ச்ச போலீஸ்காரன் பொண்டாட்டியா லட்சனமா எதாவது துப்பு கண்டுபிடிக்கலாம்னு வந்தா, நாம மூஞ்சில நாமே காரி துப்பிக்கற மாதிரி ஒன்னுமே கிடைக்கலையே’என்று தலையை சொரிந்து கொண்டு திரும்பியவள் அங்கு கைகளை கட்டியவாறு கதவில் சாய்ந்து நின்றிருந்த பவியை கண்டு அதிர்ச்சி ஆனாள்.
“ஹாய் பவி எப்போ வந்த. ரொம்ப போர் அடிச்சுது. அதான் நான் சும்மா கப்போர்ட அடுக்கலாம்னு…….” என்றவளின் வார்த்தை தங்கையின் கூரிய பார்வையில் அடங்கியது.
சைந்துவோ வழிசலாக சிரித்து கொண்டே, கலஞ்சு இருந்தாதானே மறுபடியும் அடுக்க முடியும் அதான் கலச்சு போட்டேன். இப்போ எப்படி நீட்டா அடுக்கறேன்”என்றவள் துணிகளை விதியே என்று மடிக்க, பவிக்கு அக்காவின் செயல் சிரிப்பை வர வைத்தது.
‘பவி சிரிக்காத அப்புறம் மொத்த வேலையையும் உன் தலைல கட்டிட்டு போய்டுவா. எதுக்கும் மூஞ்ச வெறப்பாவே வச்சுக்கோ’என்று தனக்குள் சொல்லி கொண்ட பவி அவளையே பார்த்து கொண்டிருந்தாள்.
தங்கையின் பார்வையை கண்ட சைந்து “என்னடி தங்க அச்சி அக்காவ அப்படி சைட் அடிக்கற. அக்கா அவ்ளோ அழகா இருக்கனா என்ன” என்று தலை சாய்த்து கண்களை சிமிட்டி கேட்க, பவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘பக்கென்று’ அவள் சிரித்து விட,
“ஹப்பாடா சிரிச்சுட்டியா? இந்த துணிய எல்லாம் மடிச்சு வச்சிரு. அக்கா கீழ போய் சூடா காப்பி குடிச்சிட்டு வரேன்” என்றவள் வெளியே ஓட போக,
அவள் முடியை பிடித்து இழுத்து தன் முன் நிற்க வைத்த பவி “ஓய் எங்க ஓட பார்க்கிற.ஒழுங்கா துணியை அடுக்கி வச்சிட்டு அப்புறமா போ”
“என்னடி பாவி அக்காவுக்காக இது கூட பண்ண மாட்டியா” என்று பாவமாக அவள் கேட்க, அவளை யோசனையாக பார்த்த பவி “ஆமா எதுக்கு என் கபோர்ட கலச்ச”,
என்ன பதில் சொல்வது என்று விழித்த சைந்து பின் நினைவு வந்தவளாக “ஹலோ… இது உன் கப்போர்டு மட்டும் இல்ல. என்னோட துணியும் அதுலதான் இருக்கு. நான் அவரோட ஷர்ட் எடுக்கறதுக்கு இங்க வந்தேன்”,
பவி அவளை புரியாமல் பார்த்து “என்னது அவரோட சர்ட்டா….. ஆனா…அவரோட ஷர்ட் இங்க எப்படி வரும். என்ன காமெடி பண்ணிட்டு இருக்க”
“ஹோ…..உனக்கு தெரியாது இல்ல. அன்னைக்கு காட்டுல என்ன காப்பாத்துனது அவர்தான். அவரோட ஷர்ட்டதான் நான் அன்னைக்கு வீட்டுக்கு போட்டுட்டு வந்தேன். அதை தேடிதான் இப்போ வந்தேன். போதுமா” என்றவள் கூற,
பவிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் அப்படியே நின்று இருக்க, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சைந்து தன்னுடைய ஜடையை அவள் கையில் இருந்து இழுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்.
பவி ஓடும் அக்காவை முறைத்து “அடியே சைத்தான் துணிய கலச்சு விட்டுட்டு எங்க போற. ஒழுங்கா அடுக்கி வச்சுட்டு போ….இல்ல மஞ்சுகிட்ட சொல்லிடுவேன்” என்றவளின் குரல் காற்றோடுதான் போனது. ஏனெனில் சைந்து லாவகமாக அவளிடம் இருந்து ஜடையை இழுத்து கொண்டு ஓடிவிட்டாள்.
‘லூசு…. லூசு…. எனக்கு வேலை வைக்கவே பிறந்திருக்கா போல’ என்று நினைத்தவள் அப்படியே யோசனையாக அமர்ந்துவிட்டாள்.
பவியை அன்று ஆபிஸ் வர சொன்னதால் அங்கே செல்வதாக சொல்லி கிளம்பிவிட , இதை அறிந்த சைந்து இதுதான் நல்ல சான்ஸ் அவ காதலனைபற்றி எதாவது கிடைக்குமானு ரூம்ல போய் தேட வேண்டியதுதான் என்று முடிவெடுத்து கொண்டு, ஹாஸ்பிடல் போகாமல் லீவ் போட்டுவிட்டு வீட்டில் இருந்தாள்.ஆனால் அப்படி தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை .
கீழே சென்ற சைந்து மஞ்சுவிடமும், ராதியிடமும் அரட்டை அடிக்க துவங்கினாள்.
சற்று நேரம் அவர்களுடன் பேசியவள், டிவி பார்க்கலாம் என்று எழுந்து வந்து டிவியை போட,அதில் ஃப்ளாஷ் நியூஸாக ஒரு செய்தி வந்தது முதலில் அதை அலட்சியமாக பார்த்தவள், பின் அதில் வந்த தகவலை கண்டு, “நோ……. இல்ல….. இருக்காது….”என்று கத்திவிட்டாள்.
அவளின் குரலை கேட்டு பவி, மஞ்சு, ராதி என அனைவரும் அங்கு வந்தனர்.
கண்ணில் நீருடன் பயந்து போய் நின்றிருந்த மகளின் அருகில் சென்ற மஞ்சு “என்ன சைந்து என்ன ஆச்சு” என்று கேட்க அவளிடம் பதில் இல்லை.
பவி அக்காவின் அருகில் வந்தவள் அவள் தோளில் கை வைத்து உளுக்கி “என்ன ஆச்சு சைந்து? ஏன் அழற?என்று கேட்க,அவளோ உள்ளமும் கைகளும் நடுங்க டிவியை நோக்கி கையை காட்டினாள்.
இவ எதுக்கு டிவிய காட்டுறா என்று புரியாமல் இருந்த மூவரும் டிவியை பார்க்க அதில் வந்த செய்தியை கண்டு அவர்களும் அதிர்ந்து போயினர்.
ஏனென்றால் அதில் ‘காவல் துறையினர் ஏற்கனவே பிடித்து வைத்திருந்த கடத்தல்காரர்களை விசாரித்ததில் அவர்களின் தலைவன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் கிடைக்க, அசிஸ்டன்ட் கமிஷனர் சூர்ய பிரகாஷ் தலைமையில் அனைவரும் அவர்களை பிடிக்க சென்றனர். அங்கு இரு சாரருக்கும் இடையே மோதல் ஏற்பட,
அசிஸ்டன்ட் கமிஷனர் சூரிய பிரகாஷ் குண்டடிபட்டார் . அதனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையில் போலீசார் தள்ளப்பட, அந்த கும்பலை சேர்ந்த அனைவரும் சுடபட்டனர். அந்த கடத்தல் கும்பல் தலைவன் உட்பட யாரும் உயிர் பிழைக்கவில்லை.
காவல் துறை அதிகாரி சூர்ய பிரகாஷ் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.’ என்பதே அது..
அனைவரும் அதை கண்டு விக்கித்து நிற்க,சைந்து கதறி அழ துவங்கினாள். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் வந்து நின்றனர்.அவர்களை பார்த்து உடல் நடுங்கிய சைந்து, அருகில் இருந்த தங்கையின் பின்னால் சென்று நின்று கொண்டு,
“அவங்க இங்க எதுக்கு வந்திருக்காங்க. அவங்களை போக சொல்லு பவி. எனக்கு அவங்களை பார்த்தா பயமா இருக்கு. அவருக்கு எதுவும் ஆகல, காலைல கூட என்கிட்டே நல்லா பேசிட்டுதான் போனாரு. அவருக்கு ஒன்னும் இல்ல. போக சொல்லு பவி, ம்மா…. அவங்கள போக சொல்லுங்க”என்று அழ,
பவியோ அவர்களை புருவம் சுருக்கி பார்த்தாள். ஆனால் சைந்துவோ கணவனை நினைத்து, அவனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து வேதனையில் துடிக்க ஆரம்பித்தாள்.
“அம்மா அவருக்கு ஒன்னும் ஆகலதானே. சொல்லுங்கம்மா ப்ளீஸ்…ஏன் அமைதியா இருக்கீங்க சொல்லுங்க”என்று அவரை அணைத்து கொண்டு கதற மஞ்சு கண்களிலும் நீர்.
பவி அக்கா அழுவதை கண்டு மனம் வருந்தினாலும் வந்த தகவல் பொய்யோ என்றுதான் அவளுக்கு நினைக்க தோன்றியது. அதே யோசனையில் இருந்தவள் பின்தான் அங்கு தயக்கமாக நின்றிருந்தவர்களை கண்டு, அவர்கள் அருகில் சென்றாள்.
அதற்கு அவரோ சைந்துவை பாவமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு “சாரா ஏ ஜே ஹாஸ்பிடல சேர்த்துருக்கோம் மேடம். ஐ சி யூல வச்சிருக்காங்க. அங்க பிரச்சனை எல்லாம் முடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு. அதான் உங்ககிட்ட இன்பார்ம் பண்ணலாம்னு….”என்றவர் இழுக்க,
சைந்துவோ “நோ……”என்று கத்தி முகத்தை மூடி கொண்டு கதறி துடிக்க ஆரம்பித்தாள். யாராலும் அவளை சமாளிக்க முடியவில்லை. மகள் நிலை கண்டு மஞ்சு பயந்துதான் போனார். உடனே அவர் குமாருக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, அவரும் தான் வந்து கொண்டிருப்பதாக சொல்லி வைத்தார்.
அடுத்த பத்து நிமிடத்தில் வேர்க்க விறு விறுக்க குமார் அங்கு வந்து சேர, அவரை பார்த்தவுடன் அவரிடம் சென்றவள் “ப்பா…. ப்பா…. அ…. அவர்……” என்று சிறுபிள்ளை போல் தேம்பி கொண்டே சொல்ல,
“ஒன்னும் இல்லடா. வா ஹாஸ்பிடல் போய் பார்க்கலாம்” என்று அழுகையில் அடைத்த தன் தொண்டையை செருமி சரி செய்து கொண்டு சொன்னவர் அனைவரையும் அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றார்.
ஹாஸ்பிடல் செல்லும் வழி முழுதும் சைந்து கண்கள் கண்ணீரை பொழிந்து கொண்டே இருந்தது. மருத்துவமனை வந்தவுடன் வேகமாக இறங்கியவள் ஓடி சென்று, வரவேற்பில் நின்ற பெண்ணிடம் கணவன் இருக்கும் அறையை கேட்க,ஐ சி யூ என்றனர். அதை கேட்டு இடிந்து போனவள், மறுநிமிடம் வேகமாக அங்கு சென்று கண்ணாடி கதவு வழியாக கணவனை பார்க்க, உடலில் ஆங்காங்கே ஒயர்கள் செருகபட்டு , கண்கள் மூடி ஓய்ந்து போய் படுத்திருந்தான்.
‘போலிஸ்கார் என்னை பயமுறுத்ததானே இப்படி எல்லாம் பண்றீங்க. நான் பயந்துட்டேன். ரொ…ரொ…ரொம்ப ரொம்ப பயந்துட்டேன். ப்ளீஸ் எழுந்து வாங்க’ என்று தனக்குள்ளேயே சொல்லி அழுதாள்.
ராதிகா மகன் நிலை கண்டு கவலை கொண்டு , அங்கிருந்த சேரில் தலையில் கைவைத்து ஓய்ந்து போய் அமந்துவிட்டார்.
குமார் மருத்துவரை சென்று பார்த்து சூர்யாவின் உடல்நிலைபற்றி கேட்க, அவரோ இன்னும் இரண்டு நாட்கள் கடந்துதான் எதுவும் சொல்ல முடியும் என்றுவிட, மகளுக்கு என்ன பதில் சொல்வது என்று திணறி போனார்.
சைந்து அழுது அழுது முகம் சிவந்து சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள். அவளிடம் சென்ற குமார் “சைந்தும்மா…”என்று அழைக்க, அதுவரை தன்னுள் மூழ்கி போய் இருந்தவள் தந்தையை கண்டதும் “என்னாச்சுப்பா? அவர் எப்படி இருக்காராம்? டாக்டர் என்ன சொன்னாங்க? என்று பீதி நிறைந்த குரலில் கேட்க,
மகள் தலையில் கை வைத்தவர் “ஒன்னும் பிரச்சனை இல்லடா நாளைக்கு காலைல கண் விழிச்சுடுவாரு” என்று சொல்ல,
சைந்துவிற்கு அப்போதுதான் மனம் அமைதியானது. “எனக்கு தெரியும்ப்பா அவருக்கு எதுவும் ஆகாது. வேணும்னே என்னை அழ வைக்க உங்க மருமகன் பண்ற வேலை இது. கண் விழிக்கட்டும் அவரை என்ன பண்றேன் பாருங்க” என்று அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் சொல்ல, குமாருக்கு கண்கள் கலங்கியது. சோர்ந்து போய் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தார்.
சைந்து நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து சென்று கண்ணாடி வழியாக கணவனை பார்த்து கொண்டே இருந்தாள்.
குமாரின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை பார்த்த மஞ்சு. அவரிடம் சென்று என்னவென்று கேட்க, ஒன்றும் இல்லை என்று சொன்னவரின் முக மாற்றத்தை வைத்து கண்டு கொண்டவர் பிடிவாதம் பிடித்து கேட்க, அவரை முறைத்த குமார்.
மகள் காதில் கேட்காதவாறு டாக்டர் சொன்னதை சொல்ல, மஞ்சு விக்கித்து போனார்.
“கடவுளே என் பொண்ணு வாழ்க்கை” என்று நெஞ்சில் கை வைத்தவருக்கு அந்த இரண்டு நாட்கள் எப்போது முடியும் என்று ஆனது.
இரவு யாரவது ஒருவர்தான் பேஷண்ட்டோடு இருக்க வேண்டும் என்று சொல்லிவிட,. சைந்து டாக்டர் என்பதால் தானே அவரை பார்த்து கொள்வதாக சொல்லி பெரியவர்களை அனுப்பிவிட்டு சூர்யா அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.
பவி முகம் யோசனையாகவே இருந்தது. எப்படி….. எப்படி…. என்ற கேள்வி அவளுள் எழுந்து கொண்டே இருக்க அமைதியாக இருந்தாள். பின் சைந்து சொல்லவும் தாய், தந்தையை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
நடு இரவு நேரம் சைந்து அழுத களைப்பில் உறங்கிவிட, திடீரென்று ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டது. உடனே அடித்து பிடித்து எழுந்தவள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு . கட்டிலை பார்க்க அதிர்ந்து போனாள்.
ஏனென்றால் சூர்யா அங்கு இல்லை. அவன் எதிரிகள் கடத்தி சென்றுவிட்டார்களோ என்று பயந்தவள், விக்கித்து போய் நிற்க, அவள் முன்னும் பின்னும் யாரோ வேகமாக ஓடுவது போல் இருந்தது.
இதயம் பட படவென அடித்து கொள்ள “யாரு….. யார் அது. என் புருஷன் எங்க ஒழுங்கா அவரை என்கிட்டே குடுத்துருங்க இல்லை…. அவ்வளவுதான் சொல்லிட்டேன் “ என்று நடுங்கிய குரலில் அவள் மிரட்ட,
திடீரென்று யாரோ அவள் பின் பக்கமிருந்து கழுத்தை இறுக்கி பிடித்தவாறு “இல்லைனா…. என்ன பண்ணுவ?” என்று தன் கட்டை குரலில் கேட்க,
பவிக்கு பயத்தில் மூச்சே நின்றுவிடுவது போல் ஆனது. உதடு துடிக்க பயந்து போய் இருந்தவள் கண்களை மூட, நொடி நேரத்தில் அவள் முகத்தில் மாற்றம்.பயம் இருந்த இடம் தெரியாமல் போக, அந்த முகத்தில் நிம்மதியின் சாயல்.
“என்ன போலிஸ்கார் இது விளையாட்டு. குண்டடிபட்ட உடம்பு ஒழுங்கா வந்து படுங்க”என்று சொல்ல,
மனைவி தன்னை கண்டு கொண்டதில் ஆச்சர்யப்பட்டவன் “என்ன போலி டாக்டரே எப்படி கண்டுபிடிச்ச”
“உங்களோட மூச்சு காத்த வச்சே உங்களை என்னால கண்டுபிடிக்க முடியும்” என்றவள் சொல்ல,
மனைவியை மெச்சும் பார்வை பார்த்தவன் பின் “வேற என்ன எல்லாம் டாக்டரே உன்னால கண்டுபிடிக்க முடியும்” என்று கேட்டவாறு அவள் முன் வந்து நிற்க, அப்போதுதான் அவனை நன்றாக கவனித்தவள் முகம் இறுகியது.
“ஹேய் என்ன ஆச்சு? உன் முகம் ஏன் இப்படி……”என்றவனை தீயாக முறைத்தவள் பின் அழுத்தமான குரலில் “எதுக்கு இந்த டிரமா…”என்று கேட்க,
சூர்யா அவளை திகைத்து போய் பார்த்தான்.
“நான் டாக்டர் எங்க அடிபட்டா எவ்ளோ வலி இருக்கும். ஐ சி யூ ல வச்சு பாக்கற அளவுக்கு அடிப்பட்டவங்க என்ன நிலமைல இருப்பாங்கன்னு எல்லாமே எனக்கு தெரியும். நீங்க இப்போ நார்மலா நிக்கறதை பார்த்தாலே தெரியுது. உங்களுக்கு ஒரு அடியும் படலன்னு, அப்புறம் எதுக்கு இப்படி பண்ணுனீங்க. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா”என்று கண் கலங்க, அவளை இழுத்து அணைத்து கொண்டான் அந்த காவலன்.
“ஹேய் தேவி என்ன? எதுக்கு அழற? ஒன்னும் இல்லடா. அங்க பெரிய பிரச்சனை. ஒரு கான்ஸ்டபிள சுட்டுட்டாங்க. அந்த கடுப்புலதான் வேணும்னே…..இது மாதிரி பிரச்சனை நடக்கற இடத்துக்கு போகும்போது எடுத்துட்டு போற ரெட் பெயிண்ட எடுத்து மேல ஊத்திட்டு சுட பர்மிசன் குடுத்தேன். ஆனா நீ இவ்ளோ பயப்படுவன்னு நான் நினைக்கல. சாரிடா”என்று சொல்ல,
கண்ணீரோடு மேலும் அவனை நன்றாக இறுக்கி கட்டி கொண்ட சைந்து “இனி இதுமாதிரி எல்லாம் பண்ணாதீங்க. என் உயிரே என்கிட்ட இல்ல தெரியுமா”என்றாள்.
“சரி விடுடா அழாத. அப்புறம் இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும். வேற யாருக்கும் சொல்ல வேண்டாம். மீடியாக்கு தெரிஞ்சுதுனா பெரிய பிரச்சனை ஆகிடும்”
“வேற யார்கிட்டயும் சொல்லல நம்ம வீட்ல இருக்கவங்ககிட்ட மட்டும் சொல்றேன். அத்த பாவம் ரொம்ப கவலையா இருந்தாங்க. தலைல கை வச்சுட்டு அப்படியே சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தாங்க”
“ஹா…. ஹா…ஹா….. எது அம்மா பயந்தாங்க. அத நீ பார்த்த. லூசு…. லூசு…”என்று மனைவியின் மூக்கை பிடித்து திருகியவன்,
“அம்மாக்கு நான் என்ன பண்ணுனாலும் தெரிஞ்சுடும். அவளோ ஏன்? எனக்கு அடிபட்டது டிரமானு கூட அவங்களுக்கு தெரியும். மீடியா முன்னாடி சிரிச்சா எல்லாருக்கும் பிரச்சனை ஆகும்னு அப்படி நடிச்சாங்க. இன்னொன்னு சொன்னியே தலைல கை வச்சு எடுக்கலன்னு ப்ளூ டூத்த காதுல மாட்டிட்டு சீரியல் கேட்டுட்டு இருந்திருப்பாங்க. நான் எத்தன தடவை இப்படி செஞ்சுருக்கேன். மை மம்மி ஆல்வேஷ் தெளிவு. நீதான் ரொம்ப அழுதுட்டே இருக்கன்னு டாக்டர் சொன்னான் அதான் என் பொண்டாட்டிகிட்ட பேசி அவளை சமாதானபடுத்தி கொஞ்சம் எதாவது…….” என்று இழுத்தவனின் கைகள் அவள் மென்மைகளை தேடி போக, அதில் ஒரு அடி போட்டவள்.
“என்ன இன்னைக்கு புல்லா அழ வச்சுட்டு சாருக்கு இப்போ ரொமான்ஸ் கேட்குதோ, ஒழுங்கா கை எடுங்க போலிஸ்கார். நான் உங்க மேல கொலை வெறில இருக்கேன்”என்றவளை கட்டிலில் சரித்தவன் தானும் அவள் மேல் விழுந்து,
“நானும் உன் மேல கொலவெறிலதான் இருக்கேன்” என்று சொல்லி அவள் இதழை அடாவடியாக சிறை செய்ய அதிர்ந்து போனவள் பார்வை அறை கதவை பயத்துடன் பார்த்தது.
அது ஏற்கனவே தாழிடப்பட்டிருக்க, அதை கண்டு அவள் கண்கள் விரித்தவள் கணவனை பார்க்க, அவனோ கண்ணடித்து தன் வேலையை தொடர, “என்ன பண்றீங்க இது ஹாஸ்பிடல்”.
“இல்ல. டாக்டர் என்னோட பிரண்டு. அவனோட ரூம் இது. நான் அடிக்கடி இது மாதிரி பண்றதை பார்த்து அவனே கடுப்பாகி. இந்த ரூமை எனக்குன்னு ஒதுக்கி வச்சுட்டான். சோ நோ பிராப்ளம். நம்ம வேலைய ஆரம்பிக்கலாமா”என்று கேட்டவாறே அவளுள் மூழ்க துவங்கினான்.
அவனுக்கு அடிபட்டுவிட்டது என்று கேட்டதில் இருந்து பயந்து போய் இருந்தவளுக்கு அவனது தொடுகையும், அருகாமையும் கணவன் தன்னுடன்தான் இருக்கிறான் என்ற எண்ணத்தை பதிய வைத்து, மன அமைதியை கொடுத்தது என்னவோ உண்மை.
இவர்களின் மகிழ்ச்சி நாளையோடு முடிய போகிறது என்பது தெரிந்தால் என்ன செய்திருப்பார்களோ…