சற்று நேரம் கடந்து ஒருவழியாக மாமியாரை தேடி கண்டுபிடித்த சைந்து சாமி கும்பிட்டுவிட்டு “அத்த இங்க பிரசாதமா தர பொங்கல் செம்மயா இருக்கும். நான் போய் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்ணுங்க”என்றவள் செல்ல, சூர்யாவோ அவளை சந்தேகமாக பார்த்தான்.

‘இவ முழியே சரி இல்லையே எங்க போறா…’என்று புருவம் சுருக்கியவன் பின் தாயிடம் “ம்மா இருங்க. இப்போ வரேன்”என்றுவிட்டு செல்ல அங்கு சைந்து இவனிடம் பேசிய பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டு கொண்டிருந்தாள். அதை பார்த்து சூர்யா நெஞ்சில் கை வைத்துவிட்டான்.’அடி பாவி அமைதியா, பயந்த புள்ளையாட்டம் இருந்தா இப்போ என்னென்னா அந்த பொண்ண அடிக்கறா, இவ பயம் எல்லாம் போலீஸ்கிட்ட மட்டும்தானோ. ஒருவேலை நான் போலீசா இல்லைனா என் நிலைமை’ என்று அதிர்ந்தவன் மனசாட்சி ‘உன் பொண்டாட்டி பயம் போக ஆரம்பிச்சுடுச்சு ராசா. பாத்தல்ல போலிஸ்காரன் பொண்டாட்டி ஆகிட்டா. பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு.முழு பொண்டாட்டி ஆக இன்னும் கொஞ்சம் தெளிவாகனும் அவ்ளோதான் அது மட்டும் ஆச்சு .உன் கதி…ஊ…ஊ.. ஊ ….’ என்று சொல்ல, அவனோ அசால்ட்டாக தோளை குலுக்கி ‘பரவால்ல என் பொண்டாட்டிதானே நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு’என்றுவிட்டு அங்கு நடப்பதை கவனிக்க துவங்கினான்.

அடி வாங்கிய பெண் கன்னத்தில் கை வைத்து பாவமாக நின்றிருக்க, சைந்தவியோ “அவரு என் புருஷன் இன்னொரு முறை ஹாய் சார்….. என்ன பண்றீங்க…. நொன்ன பண்றீங்கன்னு பல்ல காட்டிட்டு நின்ன…அடிக்கற அடில பல்லு முப்பத்தி ரெண்டும் கீழ விழுந்துடும். கோவிலுக்கு எதுக்கு வருவாங்க. சாமி கும்பிட வந்தீங்களானு கேட்கற. மூஞ்ச ஒடச்சுருவேன் பாத்துக்கோ. கேள்வி கேட்கறா பாரு கேள்வி”என்று அவளை லெப்ட் ரைட் வாங்கியவள் பின் மூச்சுவாங்க “இனி அவரு இருக்க ஏரியா பக்கம் கூட நீ போக கூடாது புரிஞ்சுதா”என்றுவிட்டு மாமியார் இருக்கும் இடம் நோக்கி செல்ல,அங்கு கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டு நின்றிருந்தான் சூர்யா. அவனை அங்கு எதிர்பார்க்காதவள் மனதில் திகைத்தாலும் வெளியே “நீங்க இங்க என்ன பண்றீங்க”

“நான் பண்றது இருக்கட்டும்.நீ என்ன பண்ணிட்டு வர”.

“அதுவாங்க உங்க தங்கச்சி கும்பல்ல காணா போகாம பத்திரமா வீட்டுக்கு போக வழி சொல்லி குடுத்துட்டு வரேன்.சரி….சரி…. நீங்க தொலைஞ்சு போய்டாதீங்க வாங்க போகலாம். அத்தைய ஏன் தனியாவிட்டுட்டு வந்தீங்க”என்று கேட்டவாறு அவன் கையை பிடித்தவள் மாமியாரிடம் இழுத்து சென்று கொண்டே மனதில் ‘இனிமே இவரை தனியா விடவே கூடாது.போற இடத்துல எல்லாம் எவளாவது வந்து கடலை போடறா. இந்த மனுஷன் அதைக்கூட புரிஞ்சுக்காம பேசிட்டு நிக்கறாரு’என்று நினைத்தவள் மனசாட்சி அவள் முன் வந்து குதித்தது.

‘என்ன’என்று பார்த்தவளிடம் ‘ஏன் ராசாத்தி போலீஸ்னா பயம்னு சொன்ன, இப்போ அந்த மனுஷன் கைய புடிச்சு நாய்க்குட்டி மாதிரி இழுத்துட்டு போற’என்று கேட்க, அவளோ ‘பயம்தான் அதுக்காக என் புருஷன விட முடியுமா.பொண்டாட்டி நான் குத்து கல் மாதிரி பக்கத்துல நிக்கறேன். என்னை கூட கண்டுக்காம அந்த லூசு வந்து மொக்க போட்டுட்டு இருக்கு.புருஷன்னு வந்துட்டா பயம் எல்லாம் பின்னாடி ஜன்னல் வழியா எகிறி குதிச்சு ஓடிடும். நீ போ முதல்ல’என்று மனசாட்சியை விரட்டியவள் வேகமாக நடந்தாள்.

சூர்யாவின் கையை பிடித்து தன் கைக்குள் இடுக்கி கொண்டு நடந்தவளின் இடையில் சூர்யாவின் கரம் உரச அதை கூட உணராமல் அவள் நடந்தாள்.சூர்யாதான் அவள் மென்மையில் தன்னை மறந்து போனான்.பின் சுற்றி பார்வையை சுழட்டி பார்த்துவிட்டு தைரியம் வந்தவனாக அவள் இடையில் கையை அழுத்த, நடந்து கொண்டிருந்தவளின் நடை டக்கென்று நின்றது.கண்கள் அதிர்ச்சியில் விரிய அவன் கைகளோடு இணைந்திருந்த தன் கையைவிட்டவள் அவனை தயக்கமாக பார்க்க, அவனோ கையில் சிக்கிய இடையை அழுத்தமாக கிள்ளிவிட்டு நகர்ந்து நின்று கொண்டான்.

சைந்தவி வலியில் கத்தகூட முடியாமல் திணற, அவள் தவிப்பை ரசித்தவன் பின் “என் மேல தப்பு இல்ல. நீதான் கைக்கு வழி போட்டு குடுத்த”என்றுவிட்டு விசில் அடித்தவாறு செல்ல, அவளோ முகம் சிவக்க அவன் பின்னால் சென்றாள்.

சாமி தரிசனம் முடிந்து இருவரையும் வீட்டில்விட்டவன், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சென்றுவிட்டான். சைந்தவி மனம் பல கேள்விகளை எழுப்ப, குழப்பத்துடனே அவர்கள் அறைக்கு சென்றாள்.

இரவு பத்து மணி. பவி இன்னும் வீட்டிற்கு வரவில்லை, போன் செய்தாலும் போகவில்லை என்று பயந்த பெற்றோர் சைந்தவிக்கு அழைத்து சொல்ல, உடனே அவள் தாய் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். ராதிகா இரவு மாத்திரையை போட்டு உறங்கிவிட்டதால் அவரை தொல்லை செய்யாமல் சென்றுவிட்டாள்.

சைந்தவி வீட்டிற்கு சென்ற போது மஞ்சு அழுது கொண்டு இருக்க, குமார் கோபியிடம் பேசி கொண்டு இருந்தார். அவனிடமும் எந்த தகவலும் உருப்படியாக கிடைக்காததால் குமார் சோர்ந்துதான் போனார்.

சைந்து, “கோபி என்னப்பா சொல்றான்”.

குமார், “ஆறு மணி போலவே அக்கா கிளம்பிட்டாங்கன்னு சொல்றான். எங்க போனாலும் சொல்லிட்டு போவா. இன்னைக்கு போன் பண்ணவே இல்லை. நாம பண்ணாலும் சுவிட்ச் ஆப்னு வருது. பிடிவாதகாரி நாம காஷ்மீர் போக ஓகே சொல்லலனு நம்ம அழைக்களிக்கறா”என்று தொய்ந்து போன குரலில் சொன்னவர் “இனி இந்த நேரத்துல நான் எங்க போய் தேடுவேன்” என்று புலம்பினார்.

சைந்து, “கவலைப்படாதீங்க அப்பா. நான் அவர்கிட்ட சொல்லிட்டேன்.. அவரு கண்டிப்பா நம்ம பவிய கண்டுபிடிச்சிடுவாருப்பா” என்றவள் நம்பிக்கை கணவனின் மீது அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

மஞ்சு, “நாடு இருக்க நடப்புல பொம்பள புள்ளைய வெளிய விடவே பயமா இருக்கு. இவ என்னன்ன எங்களை புரிஞ்சுக்காம இப்படி பண்ணிட்டு இருக்கா”என்று அழ, தாயை தன் தோளில் சாய்த்து கொண்டாள் சைந்து.

இரவு ரோந்து பணியில் நின்றிருந்தவர்களிடம் பேசி கொண்டிருந்த சூர்யா பவியை தேடி கலைத்து போய் இருந்தான். அப்போது அவனிடம் வந்த ஒரு கான்ஸ்டபிள் “சார் ரொம்ப நேரமா இவங்க பீச்ல தனியா நின்னுட்டு இருந்திருக்காங்க, ரவுடி பசங்க வந்து வம்பிலுத்திருக்காங்க, அவங்க எல்லாரையும் அடி வெளுத்துட்டாங்க, நான் போன இடத்துல பார்த்து கூட்டிட்டு வந்தேன். யாரு என்னன்னு கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டிகிறாங்க”என்று சொல்ல,

“ரவுடிங்கள அடிச்சாங்களா” யார்ரா அது என்று பார்த்தவன் அங்கு நின்றிருந்த பவியை கண்டு ஆச்சர்யபட்டான் “பவித்ரா நீயா…”என்று கேட்க,அவளோ அமைதியாக நின்றிருந்தாள்.அந்த கான்ஸ்டபில் “சார் இவங்கள உங்களுக்கு தெரியுமா”என்று கேட்க,

சூர்யா, “ம்ம்…. தெரியும் என் வைப்போட தங்கச்சி. நான் வீட்டுக்கு கூட்டி போறேன். நீங்க போய் அந்த ரவுடிங்க யாரவது சிக்கறாங்களா பாருங்க”என்று கூற,

பவி அவனைதான் கசங்கிய முகத்தோடு பார்த்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் இருக்கும் வலியை புரிந்து கொண்டவன் “வாங்க போகலாம்”என்று விலக்கி நிறுத்தும் தொணியில் கூறியவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

கார் சென்று கொண்டிருக்க அமைதி மட்டுமே அங்கு நிலைத்திருந்தது. பின் சூர்யாவே பேச்சை ஆரம்பித்தான்.“இவ்ளோ நேரம் வெளிய உனக்கு என்ன வேலை. போனும் பண்ணல. தேவி போன்பண்ணி ஒரே அழுகை உன்னை காணோம்னு”என்றவன் சொல்ல, அவளோ எதுவும் பேசாமல் வந்தாள். இன்றே அனைத்தையும் பேசி முடிக்க வேண்டும் என்று எண்ணியவன் “இங்க பாரு பவித்ரா. நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல…. இந்த வயசுல……”என்றவன் மேலும் பேசும் முன் கை நீட்டி அவன் பேச்சை தடுத்தவள் “எனக்கு தலை வலிக்குது நான் தூங்கறேன். வீடு வந்தவுடனே எழுப்பிவிடுங்க”என்றுவிட்டு தூங்க, அவளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.

பின் சைந்துவிற்கு போனில் அழைத்தவன் “உன் தங்கச்சிய கூட்டிட்டு வரேன். அழாம இரு. அவங்க சேப்பாதான் இருக்காங்க. அத்தைக்கும், மாமாக்கும் டீ போட்டு குடு பத்து நிமிஷத்துல வீட்ல இருப்போம். அப்புறம்……நீ சாப்டியா”என்றவன் கேட்க, அந்த பக்கம் சொன்ன பதிலில் கோபமுற்றவன் “சரி வை வரேன்” என்றுவிட்டு வேகமாக வண்டியை செலுத்தினான்.

பவி காதிலும் அவன் பேசிய வார்த்தைகள் விழதான் செய்தது. ‘இதுதான் உண்மை நான் உனக்கு யாரும் இல்லை என்று மூளைக்கு புரிகிறது. ஆனால் மனம் கேட்காமல் அடம் பிடித்து அழுகிறதே. நான் என்ன செய்வேன்’என்று வேதனையில் சுருங்கிய அவள் முகத்தில் கண்கள் உறங்குவது போல் மூடி இருந்தாலும், அதில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தது.

அணைப்பாள்……