அத்தியாயம் -14

இன்றைய என் வேலை முடிந்தது, இனி ஓய்வு எடுக்க போகிறேன் என்பது போல் சூரியன் தன் வெப்பத்தை குறைத்து கொள்ள, பறவைகள் அனைத்தும் தன் கூட்டை நோக்கி செல்லும் அழகிய மாலை நேரம் சைந்தவி வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

அறையைவிட்டு வெளியில் வந்தவளை கடந்து இரண்டு நர்சுகள் பேசிக்கொண்டே சென்றனர் “ஆள் செம ஹேன்சமா இருக்காரு. எதுக்கு இங்க வந்திருக்கறாருன்னு தெரியல. சீக்கிரம் வா உனக்கும் காட்டறேன்”என்று ஒருவள் மற்றொருவளை இழுத்து செல்ல, சைந்தவியோ ‘இந்த பொண்ணுங்களுக்கு வேற வேலை’என்று நினைத்து கொண்டு வாசலை நோக்கி சென்றாள்.

செல்லும்போதுதான் கவனித்தாள் மருத்துவமனைக்கு வந்திருந்த இளம் பெண்கள், ரிசப்ஷனில் இருக்கும் பெண், நர்ஸ்கள் என அனைவரும் அங்கங்கு நின்று வாசலை பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருந்தனர். இவங்க எல்லாம் யாரை பார்க்கறாங்க?என்ன ஆச்சு இவங்களுக்கு?என்று குழப்பத்தோடு வந்தவள் அங்கு ஓரமாக நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த இவளது அசிஸ்டன்ட்டை அருகில் அழைத்தாள்.

அந்த பெண் வந்தவுடன் “நீ ஏன் இன்னும் கிளம்பாம இங்க நிக்கற. முதல்லயே ஏதோ வேலை இருக்குன்னு சொன்ன”என்க,

அந்த பெண்ணோ வெட்கம் கொண்டு தலை குனிந்தாள். அதை ‘என்ன கண்றாவி இது’ என்பது போல் சைந்தவி பார்த்து கொண்டிருக்கும்போதே அவள் “அது வந்துங்க டாக்டர் என்னோட க்ரஷ் இங்க வந்துருக்காரு.அவரை எப்போவாவதுதான் பார்க்க முடியும். ஆள் செம்ம பிசி.இப்போ இங்க அவர் நிற்கவும் நானும் அவர் இருக்க வரை இருந்து சைட் அடிக்கலாம்னு….“என்றவள் இழுக்க அவளை முறைத்த சைந்து திட்ட வருவதற்குள்,அவர்கள் அருகில் வேகமாக வந்த மற்றொரு நர்ஸ் “என்னது. உன் க்ரஷா. ஹேய் என்ன? நம்ம சிட்டில இருக்க முக்கால் வாசி பொண்ணுங்களுக்கு அவருதான் க்ரஷ். மனுஷன் என்ன அழகு.ஹும்….ஆனா அவரு கண்ணுதான் பொண்ணுங்க இருக்க பக்கமே திரும்பமாட்டிகுது.நீ ஏன் உனக்கு மட்டும் க்ரஷ்னு சொல்ற”என்று அவள் தோளில் இடிக்க, சைந்து அவர்களை ஆச்சர்யமாக பார்த்தாள்.

‘பார்றா…’என்று தனக்குள் சொல்லி கொண்டவள் ‘இத்தன பேர் பார்க்கற அளவுக்கு யாருடா அந்த பிரஷ் ச்சி…….க்ரஷ்…’என்று எண்ணியவாறு நிமிர்ந்து அவர்கள் பார்வை செல்லும் இடத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.ஏனெனில் அங்கு நின்று போனில் யாருடனோ பேசி கொண்டிருந்தான் சூர்யா.

‘இவரா…. இவர்…. எங்க, இங்க வந்தாரு. எதுக்கு வந்தாரு?’ என்று யோசித்தவள் பின் ‘நிஜமா இவர்தான் வந்திருக்காரா?இல்ல என் கண்ணுதான் பொய் சொல்லுதா’என்று கண்களை நன்றாக தேய்த்துக்கொண்டு பார்க்க, அவனவள்தான் அங்கு நின்றிருந்தான். அவனை எதிர்பாராததால் அவள் மனதுள் இனம் புரியா மகிழ்ச்சி எழ, என்னை கூட்டி போக வந்திருப்பாரோ என்று எண்ணியவளுக்கு அப்போதுதான் அங்கிருக்கும் அனைத்து இளவட்டங்களின் கண்களும் அவள் கணவன் மீது இருப்பதை கண்டு கடுப்பானாள்.

‘இவங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷன இப்படி பார்ப்பாங்க’ என்று கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், பொறாமையில் அவள் காதிலிருந்து புகை வரத் துவங்கியது.’எல்லாம் இந்த போலீஸ்காரராலதான் இவரை யாரு இங்க வர சொன்னது’ என்று புகைந்தவள் கோபமாக அவனை நோக்கி சென்றாள்.

முதன் முதலாக அவனைப் பார்த்து பயம் என்ற உணர்வு போய்,பொறாமை, கோவம் என்ற உணர்வுகள் அவளிடம் வரத் துவங்கியது.வேகமாக அவன் அருகில் சென்றவள் கோபமாக “இங்கு என்ன பண்றீங்க” என்று கேட்க, அவனோ அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.போனில் பேசியவரிடம் பிறகு பேசுவதாக சொல்லி கட் செய்தவன் அவளை மேலிருந்து கீழ் ரசனையாக பார்த்தான்.பின் காலையில் தன்னை பார்த்து பயந்து தெறித்து ஓடியவள் இப்பொழுது கோபமாக பேசுவதை கண்டு புருவம் உயர்த்தினான்.

“உங்ககிட்டதான் கேட்கிறேன் பதில் சொல்லுங்க. உங்களுக்கு இங்க என்ன வேலை”என்று கேட்க, அவனோ புரியாமல் அவளை பார்த்து “எதுக்கு தேவி கோவப்படுற.உன்ன கூட்டிட்டு போகதான் வந்தேன்”என்றான். அவன் அழைப்பை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லாதவள் மனம் ‘என்னவனை எப்படி அவர்கள் பார்க்கலாம் என்ற கோபத்திலேயே நிலைத்திருக்க,திரும்பி அங்கு நின்றிருந்தவர்களை பார்த்தாள்.அங்கிருந்தவர்கள் அனைவரும் அவளைதான் பொறாமையாகவும் ஆச்சர்யமாகவும் பார்த்து கொண்டிருந்தனர். அது அவளுள் குதூகலத்தை ஏற்படுத்த இன்னும் அவர்களை வயிறெரிய வைக்க எண்ணி வேண்டுமென்றே அவனுடன் சிரித்து சிரித்து பேச துவங்கினாள். “ஹா…. ஹா…. அப்படியா…. ஹா…ஹா…. என்ன கூப்பிட வந்தீங்களா. மதியம் சாப்டீங்களா”என்று சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் பேசி,வேண்டுமென்றே அவன் காலரை சரி செய்வது, தலை முடியில் ஏதோ இருப்பது போல் தட்டிவிடுவது என்று செய்து கொண்டே அங்கிருந்தவர்களின் முகத்தை ஓர கண்ணால் பார்க்க அவர்கள் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போல் கோணியது. அதை கண்டு திருப்தியானவள் மேலும் வேண்டுமென்றே ஏதேதோ பேசி சிரிக்க, அவளை வினோதமாக பார்த்தான் சூர்யா.

ஒருவேலை பைத்தியமே பிடிச்சிடுச்சோ என்று பயந்து போனவன் “ஹேய் ஆர் யூ ஆல் ரைட். நீ நல்லாதானே இருக்க”என்று பயந்து போய் கேட்க, அவன் எண்ணத்தை புரிந்து கொண்டவளுக்கு கடுப்புதான் வந்தது.’என்ன லூசுன்னு நினைச்சுட்டான் போல, ஹையோ அந்த கும்பலை சமாளிக்க நான் என்னென்ன பேர் வாங்க வேண்டி இருக்கு’என்று மனதில் கோபமாக நினைத்தாலும் வெளியே சிரித்து கொண்டே “என்ன போலிஸ்கார் எனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சுனு நினைக்கறீங்களா. பயப்படாதீங்க நான் நல்லாதான் இருக்கேன் வீட்டுக்கு போலாமா. வாங்க”என்று வேண்டுமென்றே அவன் கை பிடித்து நடக்க சூர்யாவோ ‘என்னடா நடக்குது இங்க’என்றவாறு அப்போதுதான் பார்வையை சூழலவிட்டான். பார்த்த இரண்டு நிமிடத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டவனுக்கு சிரிப்பு வர, அதை அடக்கி கொண்டவன் மனம் ‘ம்ம்…. இப்படியாவது என் பொண்டாட்டி பயம் போகுதே அதுவரை சந்தோஷம். அவனவன் எடுக்கற முடிவு நமக்கு சாதகமாதான் அமையுது’என்று நினைத்து கொண்டு காரில் ஏறினான்.

காரில் அமர்ந்த சைந்து ‘ஹப்பாடா சிரிச்சு சிரிச்சு வாயே வலிக்குது’என்று கன்னத்தை தேய்த்தவளை ஓரகண்ணால் பார்த்த சூர்யா நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டான். கார் அவர்கள் வீட்டுக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு பக்கம் செல்லவும் அவனை புரியாமல் பார்த்தவள் “எங்க போறோம் போலிஸ்கார்”என்று கேட்டாள்.

சூர்யா, “கோவிலுக்கு. அம்மா அங்க நமக்காக வெயிட்பண்ணிட்டு இருப்பாங்க”

சைந்து, “கோயிலுக்கா. ஆனா போலிஸ்கார் அத்தை என்கிட்ட ஒன்னும் சொல்லலையே”

“என்கிட்டயும்தான் சொல்லல, திடீர்னு போன் பண்ணி, உன்னையும் கூட்டிட்டு வர சொன்னாங்க.வேலை இருக்குனு சொல்றேன் காதுலயே வாங்கல.கோயில்க்கு போய்ட்டு, நைட் ரவுண்ட்ஸ் போகணும்” என்றவன் சொல்ல, அவ்வளவு நேரம் கருத்தில் பதியாத அவன் யூனிஃபார்மை அப்போதுதான் கவனித்தாள்,அவனை ஒரு நிமிடம் விழி அகலாமல் பார்த்தவள் பின் எதுவும் சொல்லாமல் திரும்பி வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

சைந்து அப்படி அமைதியாக திரும்பவும் சூர்யாவிற்கு சப்பென்று ஆனது. ‘இவ்வளவு நேரம் நல்லாதானே இருந்தா, இப்போ என்ன ஆச்சு’என்ற யோசனையுடனே வண்டியை செலுத்த இருவரும் கோவிலை வந்தடைந்தனர்.

கோவிலில் அன்று ஏதோ யாகம் நடத்துவார்கள் போல, அதனால் கும்பல் அதிகமாகவே இருந்தது. சூர்யாவும், சைந்தவியும் ஜோடியாக கோவிலின் உள்ளே செல்ல,அனைவரும் இவர்களை பார்ப்பது போலவே எண்ணம் தோன்றியது சைந்துவிற்கு.உடனே அவனை ஒட்டி நடக்க துவங்கினாள்.

சூர்யா அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவன் போல் அவள் கைகளை தன் கையோடு கோர்த்து இறுக்கமாக பிடித்து கொண்டான். அந்த செயல் அவளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியதுடன், முகத்தில் சிரிப்பை வரவழைத்தது.

இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும் மன அமைதியுடன் உள்ளே சென்றபோது அவர்களை நோக்கி ஒரு பெண் வர அந்த பெண்ணை பார்த்து சிரித்தான் சூர்யா.

பார்க்க கல்லூரி மாணவி போல் இருந்தவளை சைந்தவி யார் என்பது போல் பார்க்க, அந்த பெண்ணோ அவளை கண்டு கொள்ளாது சூர்யாவிடமே பேசி கொண்டு இருந்தாள்.அந்த பெண்ணின் பார்வையை வைத்தே சைந்து கண்டுகொண்டாள் அந்த பெண் வேண்டுமென்றே பேச்சை வளர்க்கிறாள் என்று.’ச்ச…. இவனை யாரு இவளோ அழகா பிறக்க சொன்னா, போற இடத்துல எல்லாம் பொண்ணுங்க இவனையே சுத்தி சுத்தி வருதுங்க. கடுப்பேத்தறாங்க மை லார்ட்’என்று மனதில் கருவியவள் வேண்டுமென்றே “பாவா நாம போகலாமா. டைம் ஆச்சு அத்த நமக்காக வெயிட் பண்ணுவாங்க” என்று சொல்ல, சூர்யா,அந்த பெண் இருவருமே அவளை திகைத்து போய் பார்த்தனர்.

சூர்யா ‘என்ன ஒரு மாற்றம் என் பொண்டாட்டிகிட்ட. அதுவும் ஒரே நாளுல. டேய் சூர்யா உன் காட்டுல மழைதான் போல சீக்கிரமே உன் பொண்டாட்டி பயம் எல்லாம் போய்டும் போலயே, சும்மாவா காலைல அவ்ளோ பேச்சு பேசியிருப்பா. சரி எப்படியோ பயம் போனா சரி’என்று தனக்குள் நினைத்து கொண்டவன் அவளையே பார்த்திருந்தான்.

சைந்து, “என்னம்மா அண்ணன்கிட்ட பேசிட்டியா. முடிச்சுட்டேனா அண்ணனும், அண்ணியும் போய் சாமி கும்பிடுறோம்.அம்மா வேற வெயிட் பண்ணுவாங்க”என்று அந்த பெண்ணிடம் சொல்ல, அவளோ “எது….. அண்ணாவா……நான் எப்போ இவரு எனக்கு அண்ணன்னு சொன்னேன்” என்பதை போல் விக்கித்து நிற்க, அதை கண்டு சூர்யாவிற்கு சிரிப்பு வந்தது.

கணவனின் சிரிப்பை கண்ட சைந்து “உங்க தங்கச்சிகிட்ட அப்புறம் பேசலாம். இப்போ வாங்க போலாம்”என்றவள் அவன் கை பிடித்து இழுத்து செல்ல, அந்த பெண்ணோ செல்லும் அவர்களையே பார்த்து கொண்டு இருந்தாள்.