சோபாவில் அமர்ந்திருந்தான் சூர்யா. சைந்தவி என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் திரு திருவென விழித்து கொண்டு நின்றவள் பின் ‘தெய்வமே……’ என்று ராதிகா பின்னால் ஓட போக, அவனோ கால்களை நீட்டி அவளை தடுத்தான்.
‘ஹையோ போலிஸ்கார் எதுக்கு தடுக்கறாரு. என்ன சொல்ல போறாரோ தெரியலையே’என்று மிரட்சியாக பார்த்தாள். அவனோ அங்கிருந்த டேபிளில் காலை போட்டு கொண்டு,அவளையே அழுத்தமாக பார்த்தான்.அந்த பார்வையே கேட்டது ‘நீ எனக்கு பயப்பட மாட்ட’என்று,அவளோ வேகமாக தலையாட்டியவள் “அப்படியெல்லாம் இல்ல போலிஸ்கார்.நான்…. அது சும்மா…..”என்று இழுக்க, மகனுக்கு காபி போட்டு எடுத்து வந்தார் ராதிகா.
“என்னாச்சு சைந்து.என்ன அப்படி எல்லாம் இல்ல” என்று கேட்டுக்கொண்டே மகனிடம் காபியை கொடுத்தவர் மருமகளை பார்க்க, அவளோ “அ…. அ…. அது….. சும்மாங்கத்த”என்றுவிட்டு ‘அப்பனே முருகா இன்னைக்கு என்னென்ன செய்ய காத்திருக்கானோ தெரியலையே. எப்படியாவது இந்த போலிஸ்கார்கிட்ட இருந்து என்னை காப்பாத்து’என்று புலம்பி கொண்டாள்.
சூர்யா,‘ஹோ…. எனக்கு பயப்படாத அளவுக்கு நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கறா”என்பது போல் அவளை பார்க்க.பயந்து போனவள் “இல்லை போலீஸ்கார். அப்பாடக்கர் எல்லாம் இல்ல”என்றவள் உளற, குழம்பி போன ராதிகா “என்ன ஆச்சு சைந்து உனக்கு.அவன் வாயவே திறக்கல. நீ என்னனா அவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்க”என்றார்.
சைந்து புரியாமல் தலையை சொரிந்தவள் ‘டேய் இப்போ நீ என்கிட்ட கேள்வி கேட்டதானே’என்ற பார்வையை அவன் மீது வீச, அவளை முறைத்துவிட்டு வேகமாக எழுந்தவன் “ம்மா நான் போய் பிரஸ் ஆகிட்டு வரேன்”என்றுவிட்டு அவர்கள் அறைக்கு சென்றான்.ராதிகாவும் சரியென்றவர் ஆகாத போகாத சீரியலை பார்க்க ஆரம்பித்தார்.
சைந்துதான் இங்க என்னடா நடக்குது என்று விழித்து கொண்டு நின்றிருந்தாள். பின் நன்றாக யோசித்து பார்த்ததில்தான் புரிந்தது. அவன் கண் பேசும் மொழியை புரிந்து,தான் அவனுக்கு பதில் சொன்னதை.’அச்சோ…..’ என்று தலையில் அடித்து கொண்டவள் ‘ஆமா இவரு பெரிய இவரு வாய திறந்து பேச மாட்டாரு. கண்ணாலையேதான் பேசுவாரு போடா……போலீசு”என்று மனதில் அவனை திட்டி தீர்த்தவள் தனியாக அவனிடம் சிக்காமல் ராதிகா அருகிலேயே போனை நோண்டி கொண்டு அமர்ந்துவிட்டாள்.
இரவு உணவு உண்டபின் மாமியார் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சென்றுவிட, சூர்யாவை சந்திக்கவே பயம் கொண்டிருந்த சைந்து ஹாலையே சுற்றி சுற்றி வந்தாள். பதினோரு மணிக்கு மேல் அவன் தூங்கியிருப்பான் என்ற நம்பிக்கையில் மேலே சென்றவள் கதவை திறக்க,அறை முழுதும் இருட்டாக இருந்தது.’ஹப்பாடா தூங்கிட்டாரு போல’ என்று நினைத்தவள் அறையினுள் செல்ல திடீரென்று ஒரு வலிய கரம் அவள் இடையில் கைவைத்து சுருட்டி தன்னுடலோடு அழுத்தியது. அதில் பயந்தவள் “அம்மா பேயி…….”என்று கத்தினாள்.
சைந்து, ‘எதே கடிப்பிங்களா… ஒரு வேலை….. ச்ச….. ச்ச…போலீஸ் நாய் கடிச்சா தனி டிரீட்மென்ட் எல்லாம் இல்ல. எல்லா நாய் கடிக்கும் ஒரே டிரீட்மென்ட் தான்’ என்று தனக்குள் சொல்லி கொண்டவள் வெளியே “ஏன் போலிஸ்கார் என்னை இப்படி பிடிச்சு வச்சுருக்கீங்க. நான் எந்த தப்பும் பண்ணலையே”என்றாள்.
சூர்யா, “நீ தப்பு பண்ணுனியா இல்லையானு நான்தான் சொல்லணும். இன்னைக்கு நீ என்னை மரியாதை இல்லாம பேசியிருக்க, இன்சல்ட் பண்ணியிருக்க அதுக்கு எல்லாம் தண்டனை உண்டு”என்று கோவம் போல் சொல்ல, அவளோ திகைத்து போனவள் “இல்ல போலீஸ்கார் நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணல”
“என்ன இல்ல. இங்க வா ஒவ்வொன்னா சொல்றேன்”என்றவன் லைட்டை ஆன் செய்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். சைந்தவியும் அமர போக, அவளை தன் எதிரில் கை கட்டி நிற்க சொன்னவன்,”நான் சொல்ற வரை அப்படியே நிற்கணும்.என்ன?”,
சைந்து,“போங்க போலிஸ்கார் இது எல்லாம் அநியாயம். நீங்க உட்கார்ந்து இருப்பீங்க.நான் மட்டும் நின்னுட்டு இருக்கணுமா? அதுவும் கையை கட்டிக்கிட்டு. நான் என்ன ஸ்கூல் ஸ்டூடண்டா” என்று கேட்க,அவனோ கால் மேல் கால் போட்டு அமர்ந்து “சரி தண்டனை லிஸ்ட் சொல்லட்டுமா” என்றான்.அவளோ “சும்மா சொல்லாதீங்க போலிஸ்கார் நான் உங்களை எதுவுமே பண்ணல அப்புறம் எதுக்கு தண்டனை.சரியான போலீஸ் அராஜகமால்ல இருக்கு” என்றாள்.
சூர்யா, “என்னது அராஜகமா. இந்த சூர்ய பிரகாஷ் எப்போவும் தப்பு பண்ணவே மாட்டான்.நீ என்னென்ன பண்ணினன்னு சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. நீ செய்த முதல் தப்பு என்ன தெரியுமா” என்று கேட்க,அவளோ ‘என்ன’ என்பது போல் பார்த்தாள்.
சூர்யா, “அங்க உன் அம்மா வீட்டுக்கு நான் வந்தப்ப நீ என்னை முன்னாடி நின்னு வரவேற்கல”
சைந்து, “எதே…. இது எல்லாம் ஒரு தப்பா….”என்று கேட்க, அவனோ “இதுவும் தப்பு.அடுத்த தப்பு என் பக்கத்துல உட்காராம,உங்க அப்பா பக்கத்துல போய் உக்காந்தியே அது”
சைந்து, “நான் ஏன் உங்க பக்கத்துல உட்காரணும்”
“ஏன்னா நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி நமக்கு விருந்து குடுக்கதான் கூப்பிட்டாங்க. அப்போ நாம சேர்ந்துதானே போகணும்”என்று சொல்ல, அவளோ “என்ன போலிஸ்கார் நானும்தான் நேத்து உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்க என்ன என் பக்கத்துலேயேவா இருந்தீங்க. உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா அது எல்லாம் முடியாது”.
“என்ன நியாயம் உங்க வீட்ல உன்னை தவிர வேற யாரையும் எனக்கு தெரியாது. அப்போ நீதானே என் கூட இருந்து என்னை கம்பர்ட்டபிள்ளா பார்த்துக்கணும், எங்க அம்மா உனக்கு ஒன்னும் புதுசு இல்லையே. நல்லா பேசி பழகுனவங்கதானே”என்றவன் சொல்ல,
சைந்து மனதிற்குள் லாஜிக் சரிதான் ஆனா….. எங்கயோ இடிக்குதே என்று நினைத்தவள், ஏதோ சொல்ல வர,கை நீட்டி தடுத்தன் “ஷ்…ஷ்…… வாயில கை வை. நான் பேசி முடிக்கற வரை நீ பேச கூடாது”என்க,
சைந்தவி மனதில் பயம் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் வீம்பாக “என்ன போலீஸ்கார் ரொம்ப தான் மிரட்டுறீங்க.நான் ஒன்னும் உங்களுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க” என்று கெத்தாக சொல்ல.
சூர்யா, “ஹோ…..அப்படியா…நீ பயப்படமாட்ட அப்படிதானே”என்றவாறு எழ போக,உடனே பதறியவள்”இல்ல…. இல்ல….பரவால்ல,இருக்கட்டும். மரியாதை எல்லாம் மனசுல இருக்கட்டும். எதா இருந்தாலும் உட்கார்ந்தே பேசுங்க.இப்போ என்ன வாயில கை வைக்கணும் அவ்ளோதானே. இதோ இப்படி வச்சா போதுமா. இதுக்கு எதுக்கு எழுந்தெல்லாம் உங்க எனர்ஜிய வேஸ்ட் பண்றிங்க”என்று வெளியில் சிரித்தவாறு சொன்னவள் மனதில் அவனை கழுவி கழுவி ஊற்றினாள்.
சூர்யா அவள் பேச்சை, செய்கையை என அனைத்தையும் ரசித்தாலும், கோபம் போல் முகம் வைத்து கொண்டு “உன்னோட இரண்டாவது தப்பு சாப்பிட உட்காரும்போது என் பக்கத்துல உக்காராம, உன் அப்பாகிட்ட ஓட போனியே அது. இதெல்லாம் கூட பரவால்ல, மூணாவது தப்புதான் பெருசு நீ என்னை மரியாதை இல்லாம டா போட்டு பேசுன”என்று சொல்ல, அவளோ அதிர்ந்து விழிகளை விரித்தாள்.
“போலீஸ்கார்….. நான்….”என்று ஏதோ சொல்ல வந்தவள்,அவன் முறைக்கவும் அமைதியானாள் “இப்போ சொல்லு நீ பண்ணுனது எல்லாம் தப்புதானே. அதுக்கான தண்டனைய நான் யோசிக்கறேன். இப்போ,நீ என்ன சொல்ல வந்தியோ சொல்லு”
“ம்ம்ம்ம்….. ம்ம்ம்ம்”…என்று வாயில் கை வைத்து சைந்து சத்தமிட, மனதுக்குள் சிரித்து கொண்டவன் “கைய எடுத்துட்டு பேசு”.
“இதெல்லாம் அவ்வளவு பெரிய தப்பு இல்லைங்க போலீஸ்காரர். இன்னும் சொல்ல போனா தப்பே இல்லை.அதே மாதிரி நான் உங்களை மரியாதை இல்லாம பேசுனதே இல்ல”
“என்ன போலிஸ்கார்.நீங்க எவ்ளோ பெரிய மனுஷன். நல்லவரு…வல்லவரு…நாலு விஷயம் தெரிஞ்சவரு. சின்ன புள்ள.அறியா புள்ள,தெரியாம பண்ணிட்டேன் பெரிய மனசுபண்ணி மன்னிச்சு விட்றலாமே போலிஸ்கார் தண்டனை எல்லாம் வேணாமே” என்று கண்களை சுருக்கி பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு பேசியவளின் ஒவ்வொரு செய்கையும் ஆணவனை வீழ்த்தியது.
தன்னை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் முன்பு கைகளை ஆட்டியவள் “போலீஸ்கார் என்ன ஆச்சு?”என்று கேட்க,தன்னிலை அடைந்தவன் தலைய இருபுறமும் குலுக்கிக்கொண்டு “சரி…. சரி இவ்ளோ கெஞ்சற அதனால போனா போகுதுனு பெரிய மனசுபண்ணி சின்ன தண்டனை தரேன்”என்க, அவளோ ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’என்று நினைத்து கொண்டு “சரி என்ன தண்டனைனு சொல்லுங்க”
“ம்ம்…..இனிமே தினமும் காலையில காபி போட்டு நீ தான் எனக்கு கொண்டு வந்து கொடுக்கணும்,எனக்கான எல்லா வேலையும் நீ தான் செய்யணும். முக்கியமா என்னோட யூனிஃபார்மா நீ தான் அயன் பண்ணனும்”என்றான்.
சைந்தவியோ மனதுக்குள் இதுக்கு நீ பெரிய தண்டனையே கொடுத்து இருக்கலாம்டா.அந்த யூனிஃபார்மா நான் தொடனுமா’ என்று மனதில் புலம்பியவள், வெளியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு “ஏன் போலீஸ்கார் நான் வேணா உங்களுக்கு வாட்டார் கேன்ல தண்ணி ஊத்தி வைக்கிறது,டிபன் பாக்ஸ் பேக்பண்ணி வைக்கிறது இது மாதிரி பெரிய பெரிய வேலையா செய்யவா”
“எது……இது பெரிய வேலையா”என்று கேட்டவனிடம், ‘ஆமாம் ‘என்று வேகமாக தலையாட்டியவளை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன் “நான் என்ன ஸ்கூலா போறேன். லன்ச் பேக்பண்ணி எடுத்துட்டு போக”என்றான். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள்.
“அதுமட்டும் இல்லாம என்னை நீ மரியாதை இல்லாம டா போட்டதுக்கு பெரிய தண்டனை இருக்கு”என்றவன் கூற,
“அவ்வா….. அவ்வா….. “என்று வாயில் அடித்து கொண்டவள் “இது எல்லாம் அநியாயம் அக்கிரமம் போலீஸ்கார்.போலீஸா இருந்துகிட்டு இப்படி நீங்க பொய் பேசலாமா,பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. நான் உங்களை அப்படியெல்லாம் மரியாதை இல்லாம பேசவே இல்ல”
“ஹோ….. அப்படியே…அப்போ கீழ,நீ என்கிட்ட ஏதோ கேட்டதானடானு சொல்லல”என்று கேட்க,அவளோ ‘ஆத்தி மனசுல நினைச்சதெல்லாம்,இவரு கரெக்டா சொல்றாரு. அம்மா….’என்று மனதுக்குள் அலறியவள் அவனை விழி விரித்து பார்த்தாள்.
“நான் போலீசு அடுத்தவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கனு கூட தெரியாம இருந்தா எப்படி”என்று கேட்டு அழகாக புருவம் உயர்த்தியவனின் அழகில் மயங்கிதான் போனாள்.
“நீ பண்ணுன தப்புக்கு எனக்கு ஒரு முத்தம் குடு”என்றானே பார்க்கலாம். சைந்து அவனை விக்கித்து போய் பார்த்தாள்.அவளையே ரசித்து கொண்டு அமர்ந்திருந்தவன் ஏன் அவ்வாறு கேட்டான் என்று அவனுக்கே புரியவில்லை.
பெண்கள் என்றாலே விலகி நிற்பவன்.ஒரு வருடமாக அவன் பின்னாலேயே சுற்றிய பவித்ராவை கண்டுகொள்ளாமல் இருந்தவன், தாலி கட்டிய ஒரே நாளில் இவளை நினைத்தான். அவளை தன் உரிமையானவளாக எண்ண துவங்கிவிட்டான்.அவளிடம் வாயடித்து அதற்கு அவள் தரும் பதிலை ரசித்தான், அவனை பார்க்கும்போது அவள் விழிகளில் தோன்றும் மிரட்சியை ரசித்தான்.மொத்தத்தில் அவன் மனைவியானவளை முழுமையாக பிடித்து அவள் ஒவ்வொரு செய்கையையும் ரசித்தான்.
நான் நினைப்பதுதான் நடக்க வேண்டும் என்று நினைக்கும் பதின் பருவத்தை சேர்ந்தவர்கள் இல்லை இருவரும். இதுதான் வாழ்க்கை என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டுதான் திருமணத்திற்கு தயராகினர். ஆனால் அந்த பந்தம் இயற்கையாகவே ஒருவர் மேல் ஒருவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டது. சூர்யா அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கதான் அவ்வாறு கேட்டான். ஆனால் இப்போது அவளது மென் இதழ் முத்தம் எப்படி இருக்கும் என்று யோசித்து எதிர்பார்க்க ஆரம்பித்தான். பின் தன் தலையில் மானசீகமாக அடித்து கொண்டவன் ‘சூர்யா கண்ட்ரோல்….. எடுத்தவுடனே டாப் கீர் எடுத்து போகாத, அங்க பாரு உன் பொண்டாட்டி மூஞ்ச, பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு’என்று நினைத்தவன்,இன்னைக்கு இது போதும் அவளை போய் தூங்க சொல்லலாம் என்று அவளை அழைத்து பார்த்தான், அவளிடம் அசைவில்லாமல் இருப்பதை கவனித்து அவள் தோளில் கைவைத்து உழுக்க, தன் உணர்வு அடைந்தவள் அவனை கலவரமாக பார்த்து “போலிஸ்கார் நீங்க ஏதோ சொன்னீங்க…. ஆனா….அது என் காதுல தப்பா விழுந்துச்சு. மறுக்கா ஒரு தடவை சொல்லுங்க”என்றாள்.
சூர்யாவோ ‘எல்லாம் சரியாதான் விழுந்துச்சு’என்று முணகி பின் “என்ன சொன்னேன்”என்று புரியாதது போல் கேட்க,அவளோ “இல்ல ஏதோ தண்டனைனு….” என்று இழுத்தவளை நக்கலாக பார்த்தவன், “தண்டனைய நேரம் வரும்போது சொல்றேன் இப்போ போய் படுனுதான் சொன்னேன்”என்றான்.அவளோ “அப்போ நீங்க தண்டனையா ஏதோ சொன்னீங்களே…”
“நானா…. என்ன சொன்னேன். எதுவும் சொல்லலையே. ஏன்? என்ன சொன்ன மாதிரி உன் காதுல விழுந்தது”என்று அவள் பக்கமே திருப்பிவிட்டவனை, கண்டு மனதில் ஜெர்க் ஆனவள் “ஒன்னும் இல்லை போலிஸ்கார் ஒன்னுமே இல்ல. என் காதுல சரியா விழலனுதானே கேட்டேன். சரி இப்போ எதுக்கு அந்த பேச்சு. போய் தூங்குவோம் டைம் ஆச்சு”என்றவள் பெட்டில் படுத்து போர்வையை தலைவரை இழுத்து போர்த்திக் கொண்டு,’நாளைக்கு முதல் வேலைய அந்த ஜான்சிய போய் பார்க்கணும் என்று நினைத்து கொண்டாள்.
ஜான்சி என்பவர் அவள் ஹாஸ்பிடலில் காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை செய்யும் மருத்துவர்.
சைந்து ஓடுவதை கண்டு சிரித்த சூர்யா தானும் சென்று பெட்டில் படுக்க அவளோ விசுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.வேகமாக எழுந்தவளை கண்டு புருவம் சுருக்கியவன் ‘என்ன’ என்று கேட்க, அவளோ பதில் சொல்ல முடியாமல் அவனையும் சோபாவையும் மாறி மாறி பார்த்தாள்.அவள் என்ன சொல்ல தயங்குகிறாள் என்பதை புரிந்து கொண்டவன் “இது என்னோட ரூம்.என்னோட பெட்.நீ என்னோட பொண்டாட்டி.நான் இங்கதான் படுப்பேன். நமக்குள்ள மேரேஜ் எப்படி வேணா நடந்திருக்கலாம். ஆனா அது உண்மைதான்.இனி வாழ்க்கை முழுவதும் நாமரெண்டு பேரும்தான் கணவன் மனைவி. நமக்குள்ள வாழ்க்கைய ஆரம்பிக்க நேரம் எடுக்கலாம். ஆனா மாற கூடிய உறவு நம்மோடாது இல்லை. புரிஞ்சுதா. படுத்து தூங்கு”என்றுவிட்டு மறுபுறம் திரும்பி படுத்து கொண்டான்.
சைந்தவிக்கு சூர்யா அவளை மனைவி என்றதும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட,அவனை பார்த்து கொண்டே படுத்தவள் அப்படியே தூங்கி போனாள்.
சூர்யா அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டபின், திரும்பி படுத்து அவள் அழகிய முகத்தையே இமைக்காமல் பார்த்து ரசித்தான்.
தனக்கு அவளுடன் திருமணமாகி, இன்றே இரண்டாவது இரவு. முழுமையாக ஒரு நாள் கூட அவளுடன் இருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பற்றி நினைக்க வைத்தாள்.காலையில் அவள் செய்த அனைத்தையும் நினைத்து வேலை நேரத்தில் கூட சிரிக்க,உடன் வேலை செய்பவர்கள் அவனை விசித்திரமாக பார்த்தனர்.அதை அறிந்து தலையில் தட்டிக் கொண்டவன் இவ என்னை இப்படி மாத்திட்டாளே,அதுவும் ஒரு நாள் கூட முழுசா ஆகறத்துக்குள்ள என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவன் விரைவாகவே மதியம் சாப்பிட வந்திருந்தான்.
முதலில் சைந்து வீட்டிற்கு செல்ல தயக்கமாகதான் இருந்தது ஆனால் தன்னவளை பார்க்கும் ஆர்வம் எழ ஒருவழியாக வந்துவிட்டான். ஆனால் தன்னை வரவேற்க முன்னால் நிற்பாள் என்று எதிர்பார்க்க அவள் இல்லை, மஞ்சு அழைத்த பின்பாவது தன் அருகில் வருவாள் என்றவன் எதிர்பார்க்க, அப்போதும் அவன் மனைவி அவனுக்கு பல்ப்தான் கொடுத்தாள். அது மட்டும் இல்லாமல் தன்னை பார்க்கும்போது அவள் கண்களில் வரும் பயத்தை குறித்து கொண்டான்.
சாப்பிட அமரும் போது பவி தன் அருகில் அமர வருவதை பார்த்தவன், உடையவள் இருக்கும்போது வேறொருவள் தன் அருகில் அமர்வதா என்ற பிடித்தமின்மையில் சைந்துவை உரிமையாக பிடித்து அருகில் அமர வைத்தான்.
சைந்தவியின் பயந்த முகம் அவன் கண் முன் வந்து கொண்டே இருக்க, மதியம் ஆபிஸ் சென்ற சற்று நேரத்தில் ராதிகாவை அழைத்து பேச்சு கொடுத்து அவர்கள் திருமணத்திற்கு முன் சைந்தவி சொன்ன விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டான்.
இப்போது அவனவளை ரசித்து கொண்டே “ஹேய் முயல்குட்டி உன் வாழ்க்கைல போலீஸ்க்கு இடம் இல்லைனு சொன்னியாம். ஆனா பாரு நான்தான் உன் வாழ்க்கைல வந்துருக்கேன் உன் பாஷைல சொல்லனும்னா இந்த போலீஸ்காரன்தான் உன் வாழ்க்கை.சீக்கிரம் உன் பயத்தை போக்கி உன் மனசுல இடம் பிடிக்கறேன்’என்று தனக்குள் பேசி கொண்டே உறங்கி போனான்.