அடுத்து என்ன? 39 2 3872 அத்தியாயம் – 39_2 “வைஷு, எங்கே இருக்க?” என்று கேட்ட அருண், அவனுடைய தலையை உயர்த்த, கண்ணில் தெரிந்த படிகள் அனைத்தும் செங்குத்தாக இருந்தது. இதுவரை ஏறியதை சுலபமாக்கி விடும் அந்தப் படிகள். அவனுடைய முகத்திலிருந்தும், உடலிருந்தும் வழிந்த வேர்வை, ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு முழங்கால் முட்டுகள், இரண்டு உள்ளங்கைகள், பத்து விரல்கள் மட்டும் அதை உணராத விதமாக, அத்துணைக்கும் வெவ்வேறு அளவு, வடிவம் என்று தனி தனியாக ஸ்பெஷல் ஃபேப்ரிக்கில் உறை தைத்து கொடுத்திருந்தாள் அபி. அதன் உதவியோடு, தவழ்ந்து, தவழ்ந்து பெருந்தேவனின் மலையை ஏறிக் கொண்டிருந்தான் அருண். “இங்கே தான் இருக்கேன் அண்ணா.” என்று அவன் பின்னாலிருந்து குரல் கொடுத்த வைஷு, அவனருகே வந்து, அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள். அதை குடித்து முடித்தவன், மீண்டும் கை நீட்ட, அடுத்த பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். அப்போது, மேலேயிருந்து கீழே இறங்கி வந்த சந்தீப்,”இருபது படிக்கு மேலே, மடக்குப் படி போட்டிருக்கேன்..அந்தப் படிகள் ரொம்ப உயரமா இருக்கற மாதிரி தோணுது..உங்களாலே இப்படியே ஏற முடியும்னா எடுத்திடறேன்.” என்றான். “வேணாம்..நான் நினைச்சதை விட டயமெடுக்குது..வீட்டிலே செய்த பயிற்சி பத்தலை..அபி சொன்ன மாதிரி, முன்னாடியே ஒருமுறை ஏறிப் பார்த்திருக்கணும்.” என்றான். “பயிற்சி செய்ய நான் வரேன்னு சொன்னேன்..நீங்களும், அபியும் வேணாம்னு சொல்லிட்டீங்க.” என்றான் சந்தீப். அப்போது,”அண்ணா, நான் முன்னாடி போகட்டுமா?” என்று கேட்டாள் வைஷு. “நீ போ..இனித் தண்ணீர் தேவைப்படாது.” என்று அவளை அனுப்பி வைத்தான். அவனுக்காக, தண்ணீரோடு, அவன் பின்னாடியே ஏறி வந்து கொண்டிருந்தாள் வைஷு. அதே போல், அவனுக்கு முன்னால், மடக்குப் படிகளைச் சுமந்து கொண்டு போய், மிக உயரமாக இருந்த படிகளில் அதைப் பொருத்தி, சரிப் பார்த்து, அருண் ஏறுவதுவற்கு ஏது செய்து கொண்டிருந்தான் சந்தீப். பெங்களூரிலிருந்து திரும்பியவுடன், அவளுடைய அம்மாவின் மனத்தில், வைஷு பற்றி புதிதாக முளைத்திருந்த எண்ணத்தை, அதை முளையிலேயே கிள்ளி விட்டாள் என்ற விவரத்தையும் அருணுக்குத் தெரியப்படுத்தினாள் அபி. அவனுடைய அம்மாவின் மனத்திலும் அதே போன்றொரு எண்ணம் வந்திருப்பதையும், வைஷுக்கு பிடித்தமிருந்தால் தான் என்று அவன் சொன்னதையும் அபிக்குத் தெரியப்படுத்தினான் அருண். இந்தமுறை, பெங்களூர் செல்ல வைஷு மறுத்ததற்கு அந்த எண்ணம் தான் காரணம். அவளுக்குச் சந்தீப் மீது விருப்பமில்லை என்று அவன் யுகித்ததையும் அவளுடன் பகிர்ந்து கொண்டான். சந்தீப்பின் விருப்பம் என்னயென்று அபிக்குத் தெரியவில்லை. அப்படியே அவன் விருப்பப்பட்டாலும், வைஷுவிற்கு பிடித்தமில்லை என்பதால் அது போன்ற பேச்சுக்களை வளர விடக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டாள். அன்றிலிருந்து, சந்தீப், வைஷு இருவருக்கும் அவர்களைப் புரிந்து கொள்ளும் துணை அமைய வேண்டுமென்று பெருந்தேவனிடம் பிரார்த்தனைச் செய்தனர் அருணும் அபியும். அவர்களுடைய அந்தப் பிரார்த்தனையில், சரிபாதிச் சிறிது நேரத்தில் நிறைவேறப் போவதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. அடுத்து வந்த நிமிடங்களில், உயரமாக இருந்த படிக்கட்டுகளில் ஏற, அருண் செய்த முயற்சியை, மலையேறி கொண்டிருந்தவர்களும் மலையிலிருந்து இறங்கி கொண்டிருந்தவர்களும் வேடிக்கை பார்த்தனர். சில பேர் அவர்களுடைய கைப்பேசியில் படம் பிடித்தனர். அன்று காலையில், மலையடிவாரத்தில், பெருந்தேவனுக்கு சிறப்பு பூஜை ஏற்பாடு செய்து, சந்தீப்பின் மடியில் தாராவை, அவளுடைய மதூர் பெட்டியுடன அமர்த்தி, முடி இறக்கி, காது குத்தி, அவளுடைய முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர். அந்தப் பெட்டியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, கொஞ்சமும் பயமில்லாமல், முடி இறக்க அவளுடைய தலையையும், துளையிட அவளுடைய இரண்டு காதுகளையும் அழகாகக் காட்டினாள் தாரா. அதன் பின், அவளுடைய தாத்தாக்கள் இருவரும், அவளுடைய மதூர் பெட்டியுடன் அவளை மாறி மாறி தூக்க, சில சமயம், பாட்டிகள் இருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, பெட்டியையும் இழுத்துக் கொண்டு, அவளுடைய பெற்றோர்களுக்கு முன்னால் மலையேறி, மலை உச்சியில் அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள் தாரா. தொடர்ந்து மலை ஏற முடியாமல், சில நிமிடங்களுக்குப் பெரியவர்கள் இளைபாறிய போதெல்லாம்,”அம்மா நேணும்..அத்தை நேணும்.” என்று சிணுங்கியவளைச் சமாதானம் செய்த அருணின் மாமியாருக்கும், அபியின் மாமியாருக்கும், அவர்கள் நினைத்ததைச் செயல்படுத்த இதைவிடச் சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணம் வந்தது. அதை எண்ணத்தோடு தான் வைஷுவின் வருங்கால மாமியாரும் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் என்பதை அந்த மாமியார்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. அருணின் ஊன்றுகோல்களோடு தனியாக மலையேறிய கொண்டிருந்த அபி, ஒவ்வொரு படியிலும் அருணிற்காக பெருந்தேவனிடம் பிரார்த்தனை செய்தாள். இந்த முயற்சிக்கு கீர்த்திவாசன், விஜயா இருவரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதை ஒதுக்கி வைத்து, அவள், தாரா, அவன், என்று அவர்கள் மூவருக்காக இந்த முயற்சியை செய்கிறான் அருண். அவளுக்கே இத்தனை கடினமாக இருக்கும் போது அவனுக்கு எப்படி இருக்குமென்று அவளால் யோசனை கூட செய்ய முடியவில்லை. மலை உச்சியில் குடியிருந்த ஆறுமுகனின் தரிசனத்தை முடித்துக் கொண்டு, கீழே இறங்க, இதைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப் போகிறான். எல்லாம் முடிந்து அவர்கள் வீடு போய்ச் சேர மதியமாகி விடும். இன்றிரவு, தாராவை வைஷுவிடம் தூங்க வைத்து விட்டு, அருணுடைய முழுங்கால், முழுங்கை, பாதம் என்று அனைத்திற்கு வெந்நீர் ஒத்திடம் கொடுத்து, தேவைப்பட்டால் வலி நிவாரணி மாத்திரை கொடுக்க வேண்டுமென்று திட்டமிட ஆரம்பித்தாள் அபிதா. காலையில், காதணி விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு அழைத்திருந்தனர். இவர்கள் வந்து சேரும் வரை, விருந்தினர்களை உபசரிக்கும் பொறுப்பை சாமி நாதன் அங்கிளின் குடும்பம் ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த முறை, அனைவர்க்கும், புது வீட்டில், அதாவது, அவர்களுடைய பக்கத்து வீட்டில் மதிய விருந்து சாப்பிட ஏற்பாடாகியிருந்தது. அந்த வீட்டின் முன்புறத்தைக் கடையாக மாற்றி, பின்புறத்தை வீடாக புழங்கிக் கொண்டிருந்தார்கள். அதில், சமையலறையை சிறிதாக்கி, சாப்பிடும் அறையோடு அதை இணைத்து, பெரிய கூடமாக்கியிருந்தார்கள். மூன்று படுக்கையறைகள், அதோடு இருந்த நவீன பாத் ரூம்கள், அனைத்தையும் அருணிற்கு ஏற்றார் மாற்றி அமைத்திருந்தனர். அந்த வேலைகள் நடந்து கொண்டிருந்த போது தான், ‘காலியாக இருந்த பக்கத்து வீட்டிலிருந்து அவனுக்கும் பல ஐடியாக்கள் வந்தது. ஆனால், அதைச் செயல்படுத்த அவளைப் போல அவனிடம் வசதி இல்லாததால் அதை வெளிப்படுத்தவில்லை.’ என்று அபியிடம் மனம் திறந்தான் அருண். அதற்கு,’இனி, என்னோட ஐடியா, உங்களோட ஐடியான்னு எதுவும் தனி தனியாக் கிடையாது..எல்லாம் நம்மளோடது..நாம இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம்.’ என்று அவர்களுடைய புது வியாபாரத்திற்கு அடிக்கல் நாட்டினாள் அபிதா. கல்யாணத்தின் போது மகளின் புகுந்த வீட்டிற்கு வராமல், ஹோட்டலுக்குச் சென்ற மோகனா, இந்த முறை. பேத்தியின் முதல் பிறந்த நாள் விழாவிற்கு வந்த போது, ஹோட்டலுக்குச் செல்ல மறுத்து, மகளின் புது வீட்டில், குடும்பத்தோடு தங்கியிருந்தார். அதனால், விஷால் தங்குவதற்கு மட்டும் ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலையில் வர வேண்டியவன், விழா முடிந்த பின்னும் வந்து சேரவில்லை. ‘எங்கேயிருந்து வருகிறான்? எந்த ஃபிளைட்? ஏன் தாமதமாகிவிட்டது? என்ற விவரம் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை. அவனை அழைத்துப் பேச வேண்டும்.’ என்ற அபியின் யோசனையை, “அம்மா..வா..வா” என்ற அழைப்பு கலைத்தது. கடைசி படியில், அவளுடைய மாமியாரின் மடியில் அமர்ந்திருந்தாள் தாரா. அவளுடைய மடியில் மதூர் பெட்டி. விஜயாவை அடுத்து மோகனா அமர்ந்திருக்க, அவரை அடுத்து, சற்றுத் தள்ளி, விநாயகம், கடைசியில் கீர்த்தி வாசன் அமர்ந்திருந்தார். அடுத்து வந்த படிகளை வேகமாக ஏறி, ஊன்று கோல்களை ஓரமாக வைத்து விட்டு, தாராவைக் கையில் அள்ளிக் கொண்டாள் அபி. உடனே,“வாய் ஓயாம அம்மா, அத்தைன்னு சொல்லிட்டு இருந்தா குட்டி..இப்படித் தான் அபி பெங்களூர் வந்திருந்த போது, அத்தை, அத்தைன்னு வைஷுவைத் தேடிட்டு இருந்தா.” என்று அவருடைய எண்ணத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தார் மோகனா. “வைஷுவோட தான் விளையாடறா, அவகிட்டே தான் சாப்பிடற..சில நாள் அவளோட தான் தூங்கறா..அதான் அத்தை எங்கேன்னு கேட்கறா..கொஞ்ச நேரம் இவ கண்ணுலே வைஷு படலைன்னா ஏங்கி போயிடறா..அவ தேடினது எனக்குத் தெரியாது..அடுத்த முறை வைஷுவைக் கண்டிப்பா பெங்களூருக்கு அனுப்பி விடறேன்..உங்களுக்கும் உதவியா இருக்கும்.” என்று அவருடைய எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் விஜயா. மனைவிகளின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர் விநாயகமும் கீர்த்தி வாசனும். அருண், அபியின் கல்யாணம், கட்டாயத்தில் நடந்த கல்யாணம். சந்தீப், வைஷு இருவருக்கும் அது போன்ற கட்டாயம் எதுவுமில்லை. அதனால், அவர்கள் இருவரையும் கட்டாயப்படுத்த நண்பர்கள் இருவரும் விரும்பவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அவர்களுடைய மனைவிகள் தான். இன்று ஒரே போல் பேசுபவர்கள், எப்போது, எதிரிகளாக மாறி, கண்டபடி ஏசுவார்களென்று சொல்ல முடியாது. அதே சமயம், வைஷுவும் சந்தீப்பும் இந்த எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், பெருந்தேவனின் விருப்பமும் அதுதான் என்றால், அப்படியே நடக்கட்டுமென்ற முடிவிற்கு வந்திருந்தனர். வைஷு அவளுக்கு வேலைக்காரி இல்லை என்று சொன்ன அவளுடைய மாமியார், இப்போது, அதே வைஷுவை அவளுடைய அம்மாவிற்கு வேலைக்காரி ஆக்கியவுடன், அருண் சொன்னது போல், சந்தீப்பை அவருடைய மாப்பிள்ளை ஆக்க பார்க்கிறார் என்று அபிக்குப் புரிந்து போனது. அது போன்ற எண்ணம் வைஷுவிற்கு இல்லாததால், இந்த விஷயம், வைஷு, சந்தீப் இருவரிடமும் போவதற்கு முன், அப்போதே அதை முடித்து வைத்தாள். “ஊனமுற்றோருக்காக நானும் அவரும் சேர்ந்து டிஸைன் செய்த பாத்ரூம் ஸீட், மடக்குப் படிகள் இரண்டோட டிரையல் நடந்திட்டு இருக்கு. இதுவரை நல்ல ரெஸ்பான்ஸ். அதனாலே, அவங்களுக்குச் சௌகரியமா இருக்கற அறைகலன்கள் செய்ய கம்பெனிகள் ஆர்வம் காட்டியிருக்காங்க..அந்த வேலைலே நாங்க இரண்டு பேரும் பிஸிங்கறதுனாலே தான் தாராவை வைஷு பார்த்துக்கறா..சில சமயம் அவளைக் குளிக்க வைக்கறா, அவளுக்குச் சாப்பாடு ஊட்டறா..இராத்திரி, எங்க இரண்டு பேருக்கும் லேட்டாகும் போது வைஷுவோட தாரா தூங்கறா.. பெங்களூர்க்கு போயிருந்த போது, முதல் இரண்டு நாள் தான் வைஷுவைக் கேட்டா. அப்புறம், அவ கேட்கலை..அதிகபட்சம் இன்னும் இரண்டு வருஷம் கேட்கப் போறா..அப்புறம், ஸ்கூலுக்குப் போயிட்டா அவளுக்கு யாருமே நியாபகத்துக்கு வர மாட்டாங்க..இப்போ, அவளோட வாழ்க்கைலே அத்தை, அம்மா, அப்பா முக்கியம்..கடைசிவரை அந்த மாதிரினு சொல்ல முடியாது..குடும்பம் முக்கியமில்லை பிரண்ட்ஸ் தான் முக்கியங்கற காலம் கூட வரும்..எல்லாத்துக்கும் அவளும் பழகிக்கணும், நாமளும் பழகிக்கணும்.” என்று அவர்களின் வாயை அடைத்தாள் அபி. ****************** Readers, இந்தக் கதையை 40 பதிவு வரை கொண்டு போக விரும்பலை. ஆனால், அங்கே தான் போய்கிட்டு இருக்கு. அதுக்கும் மேலேயும் ஒரு பதிவு போகும்னு நினைக்கறேன். Thanks for the support. Stay blessed.