மறு நாள் காலையிலேயே யூட்டூபில் பிரபல சின்னத்திரை அரசியல் நெறியாளர் முன் மோதிக்கொண்ட தொழிலதிபர்கள். என்ன விவாதம்? என்று கசிந்தது.
ஒரே நல்ல விஷயம், இவர்கள் சண்டையை பதிவு செய்தவன் தூரத்திலிருந்து எடுத்ததால் இவர்கள் பேசுவது பதியவில்லை. ஆனாலும் சிம்மா கழுத்தை பிடித்தது, குமுதினி சிம்மனின் நெஞ்சில் கைவைத்து தள்ளுவதும், அவினாஷ் சிம்மனின் முன் கையை அடிப்பது என்று அனைத்தும் பதிவாகியிருந்தது. சிம்மன் இவளிடம் முறைத்துக்கொண்டு செல்வது வரை எல்லாம் இருந்தது. ஆளாளுக்கு கற்பனையாக டப்பிங் டயலாக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
ஜாஸ்மின் முதலில் அவினாஷிற்கு தகவல் சொல்ல, அவன் குமுதினியை அழைத்திருந்தான். வீடியோவினைப் பார்த்தவள், “ஐயோ! இதுக்குத்தான் பயந்தேன். இப்ப தேவையில்லாம நம்ம மூணுபேர் பேரும் லிங்க் ஆகுது!”
“ம்ப்ச்…விடு இரண்டு மூணு நாள்ல அடங்கும். யாரும் கேட்டா எங்க இரண்டு பேருக்கும் சண்டை நீ விலக்க பார்த்தங்கறதோட நிறுத்திக்குவோம். அந்த காட்டான் கிட்ட சொல்லணும்”, அவினாஷ் சொல்ல, “நானே சொல்லிக்கறேன். நீ எதுவும் அவனை கான்டாக்ட் பண்ண வேணாம் அவினாஷ், திரும்ப ஒரு சண்டை வேணாம்.”
“நான் மதியம் ஆன்ட்டிகிட்ட பேசறேன்”, என்று சமாதானம் செய்து வைக்கவும், அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் ஜெய் இணைப்பில் வந்தான்.
கல்லூரி நாட்களில் வைத்திருந்த அதே மொபைல் எண்ணைப் பார்த்து ஒரு நொடி முழித்து பின்பு எடுத்தாள்.
“ஹ்ம்ம்…எடுப்பியா இல்லை மறந்துட்டியான்னு யோசிச்சேன். பரவாயில்லை எடுத்துட்ட”, சிம்மன் குரலில் ஒரு திருப்தி இருந்தது.
“எதுவும் மறக்கலை. இந்த நம்பர்லர்ந்து போன் வராதான்னு ஏங்கி, இனிமே வராதுன்னு புரிஞ்ச நாட்கள் உட்பட. அதை விடு, இப்ப சந்தோஷமா? நீ பப்ளிக்ல வெச்சு அடிச்சதுல நாமதான் வைரலாயிருக்கோம்”, கடிந்தாள்.
‘அப்போ, என்னை பிரிஞ்சாலும், நான் போன் பண்ணுவேன்னு காத்திருந்தாளா?’, என்று நினைத்தவன், “உன் சிம்மையும் தாலியோட கழட்டி வெச்சிட்டு போயிட்டு என் போனை எதிர்பார்த்தன்னு சொன்னா எப்படி குமுதினி?”
“இது ரொம்ப அவசியம் இப்ப?”
“நீ சொன்னதுக்கு நான் பதில் கேள்வி கேட்டேன். சரி அதை அப்பறமா பேசுவோம். நீ என்ன நேத்து எல்லா தப்பும் நான் செஞ்ச மாதிரி பேசற?” , எகிறிக்கொண்டு வந்தான்.
“பேச்சு பேச்சோட இருந்திருந்தா ஒரு பிரச்சனையும் ஆகியிருக்காது!”, சிலுப்பினாள் குமுதினி.
“அவனுக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா நீ பண்ணதெல்லாம் கல்யாணமான்னு கேட்டிருப்பான்? ஊரைக் கூட்டி இவன் கல்யாணம் பண்ணானே? மூணு மாசத்துலேயே அத்துகிட்டு ஓடிட்டாளே இவன் பொண்டாட்டி? அது மட்டும் கல்யாணமா?”, காரமாய் வந்தது சிம்மனின் குரல்.
“ஸ்ஸ்ஸ்… என்ன பேச்சிது ஜெய்?”
“என்னை சீண்டினா பால்டப்பா மாதிரி பாலிஷா ஊசி ஏத்த மாட்டேன். கைதான் பேசும்.”
“என்னத்த சீண்டினான் உன்னை?”
“பஞ்சுமிட்டாய் கலர்ல நீ ரவிக்கை போட்டா, அதே கலர்ல டீ-ஷர்ட் போடுவானாமா அவன்? பேசி வெச்சி போட்டீங்களா? ஒழுங்கா டைவர்ஸ் வர வரை இந்த மாதிரி கிறுக்குத்தனமெல்லாம் பண்ணக்கூடாது பார்த்துக்கோ!”
அவன் மிரட்டும் குரலை அசட்டை செய்தவள், “போட்டா உனக்கு என்ன இப்ப? இதெல்லாம் நீ கண்டிஷனா சொல்லக்கூடாது!”, குமுதினியின் குரலிலும் கோபம் தெரிந்தது.
“அப்படி மாட்ச் பண்ணனும்னா பஞ்சுமிட்டாய் கலர்ல கோவணம் வேணா கட்டிக்கச் சொல்லு. அடுத்தவங்க பார்க்கற மாதிரி கலர் மாட்ச் பண்ணா, அது என்னை சீண்டற மாதிரின்னுதான் எடுத்துக்குவேன். “
அவன் கூறிய பஞ்சுமிட்டாய் கோவணத்தில் அவினாஷை ஒரு கணம் நினைத்தவள், பக்கென்று சிரித்துவிட,
“ஏய்…எதுக்கு சிரிக்கற? அவனை கோவணத்தோட யோசிச்சு பார்த்தியா? கொன்னுடுவேன் உன்னை!”
இப்போது கலகலவென்று சிரித்தவள், “நீதான் அந்த எண்ணத்தை குடுத்த, அப்பறம் எப்படி கற்பனை செய்யாம இருக்க?”
சிம்மன் பல்லைக் கடிக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது. “ஹ்ம்.. அப்ப என்னை நினைச்சிக்கோ. கற்பனை பண்ணவேணாம். உனக்குத்தான் அல்ரெடி ..”
“ஜெய்! ஷட் அப்! இனிமே இந்த மாதிரி எங்கிட்ட நீ பேசக்கூடாது. இருக்கற பிரச்சனையை பாரு. யாராவது ரிப்போர்ட்டர் கேட்டா “, என்று அவினாஷ் சொன்னதைச் சொன்னவள் அவளாக சொல்வது போலக் கூறினாள். இது அவினாஷ் சொன்னது என்று சொன்னால், அதற்காகவே முரண்டு பிடிப்பான் முரடன்.
தேவையில்லாமல் அவளைக் கலாய்ப்பதை விட்டவன், சீரியசாக, “ஹ்ம்ம்… நானும் அதுதான் யோசிச்சேன். இது நீ சம்பந்தப்பட்ட சண்டைன்னு தெரிய வேணாம். எங்க இரண்டு பேருக்குள்ளன்னே இருக்கட்டும்.”, அவனும் ஏதுவாக பேச ஒரு ஆசுவாசப் பெருமூச்சுடன் கைப்பேசியை வைத்தாள்.
சனிக்கிழமை காலை என்பதில் அலுவலகம் காத்து வாங்கிக்கொண்டிருந்தது. பிரபஞ்சன் உள்ளே நுழைந்தான்.
“சார்… நம்ம ஸ்டாஃபே என்னாச்சுன்னு கேட்கறாங்க. நானும் அந்த வீடியோல இருக்கவும் ஒன்னு இரண்டு பேர் பிரஸ்லர்ந்தும் கேட்கறாங்க. எனக்கே தெரியாதுன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க. அவங்க சைட்ல என்ன சொல்லப் போறாங்கன்னு தெரிஞ்சு ஒரே மாதிரி பேசணும்.”
நேற்று சிம்மன் இருந்த கோவத்தில் ஒரு வார்த்தை பேசவில்லை. பிரபஞ்சனும் எதுவும் கேட்கவில்லை.
“குமுதினிகிட்ட பேசிட்டேன். எனக்கும் அவினாஷுக்கும் ஆகாது, ஒரு அர்க்யூமென்ட்ல கைகலப்பாகிடுச்சு. கூட இருந்த குமுதினி விலக்கிவிட பார்த்தாங்க. இதே கதை நீயும் சொல்லு.”
“கை நீட்ற அளவுக்கு என்னதான் சர் நடந்துச்சு? அவினாஷ் அடாவடி பண்றவர் இல்லையே? “
“ஆமாம்டா. எல்லாம் என்னையே சொல்லுங்க! தூண்டிவிட்ட அவன் நல்லவனாகிட்டான். கை நீட்டின நான் பண்ணதுதான் தப்பு.”, முகத்தை திருப்பினான்.
“அப்படின்னு வேற யார் பாஸ் தைரியமா உங்ககிட்டயே சொன்னது?”
“அதைத்தான் கேட்கறேன். நீங்க எங்க சொல்றீங்க? குமுதினி அன்னிக்கு ஆஃபீஸ் ஏன் வந்தாங்க, நான் ஏன் ஸ்பெஷலா கூட்டிட்டு வரணும்னு கூட சொல்லலை!”
“முதல்ல குமுதினியை மரியாதையா பேசு!”, சிம்மன் கை நீட்டி எச்சரிக்க, பிரபஞ்சன் முழித்தான்.
“சரிங்க சார். அவங்க நம்மகிட்ட ப்ராபர்ட்டி வாங்கப்போறாங்களா இல்லை அவங்க நிலம் எதாவது நாம வாங்கப்போறமா?”
“அதெதுக்கு உனக்கு?”, எதுவாகினும் அவனிடம்தானே பேப்பர்ஸ் வரவேண்டும் என்பதில் பிரபஞ்சன் முழித்தான்.
“சரி… அதை விடுவோம். இப்ப அவினாஷ் சார் கூட என்ன பிரச்சனை?”
“அவனுக்கு எதுக்குடா மரியாதை?”, மீண்டும் சிம்மன் சீற, பிரஞ்சனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. ‘இன்னிக்கு எழுந்துக்கும்போதே துடைப்பத்தோடு அம்மாவை பார்த்ததுக்கு இப்பவே காட்ட ஆரம்பிச்சிடுச்சு!’
“என்னை விட வயசுல பெரியவர்னு கூப்பிட்டேன். சரி, அந்த அவினாஷ் கூட நமக்கு என்ன பகை? எனக்குத் தெரிஞ்சு அவர் கூடவோ இல்லை அவர் கம்பனி கூடவோ எந்த டீலிங்கும் இல்லையே?”
“கம்பனி டீலிங் எல்லாம் இல்லை. இது பர்சனல். நீ முதல்ல கடைக்குப்போய் எல்லா கலர்லேயும் எனக்கு ஃபார்மல் சட்டை எடுக்கற. அதை எப்பவும் கார்ல வெக்கற. ம்ம்…இன்னொரு செட் இங்க ஆஃபீஸ்ல, அப்பறம் வீட்ல.”, சிம்மன் பேசுவதைக் கேட்ட பிரபஞ்சனுக்கு இன்னமும் குழப்பமே.
“சரி பாஸ். அவன் உங்க ட்ரெஸ் பத்தி எதுவும் சொன்னானா? அதான் சண்டைக்கு போனீங்களா? ஆனா நீங்களும் ஸ்மார்ட்டாதான இருந்தீங்க? என்ன பிரச்சனை?”
“டேய்….”, என்றவன் “ என் ட்ரெஸ்ல பஞ்சுமிட்டாய் கலர்ல எதுவுமே இல்லை. அதான் பிரச்சனை. போதுமா விளக்கம்? போ…போய் நான் சொன்னதை செய்”, கையை கதவின் புறம் நீட்டினான் சிம்மன்.
இந்த பதிலில் நிஜமாகவே தலையைப் பிடித்துக்கொண்டான் பிரபஞ்சன். ‘பஞ்சுமிட்டாய் கலர்ல எதுக்கு’, என்றவனுக்கு அவினாஷின் டீ-ஷர்ட்டில் பளீரென்று இருந்த கோடுகள் ஞாபகம் வந்தது. வீடியோவில் கூட பளிச்சென்று தெரிந்ததே. குமுதினி போட்டிருந்த ப்ளவுஸ் கலர், கப்பிள்ஸ் கலர் மேட்ச் பண்ணாங்க சரி…இவருக்கு எதுக்கு அந்த கலர் என்றவன் விலுக்கென்று நிமிர்ந்து,
“ஐயோ…சார்… அவினாஷும் குமுதினியும் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க. நீங்க நடுவுல என்ன பண்றீங்க? குமுதினியை அம்.. மேடத்தை லவ் எதுவும்…”, என்று அதிர்ந்து நெஞ்சில் கைவைக்க,
“பண்ணா என்னடா? இங்க நடுவுல புகுந்திருக்கறது நான் இல்லை அவன்!”
“பாஸ்! அவங்க ஒரு வருஷமா லவ் பண்றாங்க பாஸ்… நீங்க இப்ப…”, என்றவனை முடிக்க விடவில்லை.
ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்த சிம்மன், “டேய் எட்டு வருஷத்துக்கு முன்னாடியே அவ என் பொண்டாட்டி, அதுக்கு முன்னாடி காதலி. இன்னமும் நாந்தான் அவ புருஷன். டைவர்ஸ் எல்லாம் ஆகலை. போதுமா விளக்கம்?”
திறந்த வாய் மூடாது கண்கள் தெறிக்க நின்றிருந்தான் பிரபஞ்சன். தான் கேட்டதை ஒரு நொடி மீண்டும் ஓட்டிப் பார்த்தவன், சிம்மனின் இறுகிய முகம் பார்த்து உண்மையைத்தான் சொல்கிறான் என்று புரிய தலையை லேசாக உலுக்கினான்.
“இந்த விஷயம் உன்னைத் தாண்டி போச்சு, வகுந்துடுவேன்”, என்று அவன் நெஞ்சில் கோடு இழுத்தவன், “இப்ப போ”, என்று பிரபஞ்சனை லேசாய் தள்ளினான்.
ஊருக்கே தெரிய வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று புரியாது, சிம்மன் இருக்கைக்கு வந்து அமர, கேட்ட செய்தியின் அதிர்ச்சி விலகாமலேயே பிரபஞ்சன் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.