“என்னா பாஸ் நீங்க? ஜெபா சார் கண்டிப்பா உங்களுக்கு இன்ட்ரோ குடுப்பார். அப்படியே நானும் கூட வந்து ரிக்வெஸ்ட் கேட்டுக்கறேன். நீங்க சும்மா செட் ப்ராபர்ட்டி மாதிரி இருந்துக்கோங்க. நான் அவங்க பக்கத்துல நின்னு…”, என்றவன் சிம்மாவின் பார்வையில் நிறுத்தினான்.
“தானும் அனுபவிக்கறதில்லை அடுத்தவனையும் விடலைன்னா எப்படி? நேரம் காலம் பார்க்காம உழைக்கறவனுக்கு கொஞ்சமாச்சம் பாவம் பார்க்கலாமில்ல?”, கெஞலில் இறங்கினான்.
“ம்ம் அதுக்குத்தானடா சம்பளம் போனஸ்னு வாரி வழங்கறேன்?”
“அதை அனுபவிக்க எங்க விடுறீங்க? என் குடும்பம்தான் கும்மாளம் போடுது. நான் அனுபவிக்க எப்பவோதான் இப்படி சான்ஸ் கிடைக்குது, அதுக்கும் நோ சொன்னா எப்படி பாஸே?” அழமாட்டாத குறையாக நியாயம் கேட்பவனைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.
“எமகாதகப் பயடா நீ ! பொழைச்சு போ”, என்றவனிடம், “படம் முடிஞ்சதும் அப்படியே கிளம்பி வந்துடக் கூடாது. ஆஃப்டர் பார்ட்டி இருக்கு. அங்கதான் அவங்ககிட்டல்லாம் ஃப்ரீயா பார்த்து பேச முடியும். படம் எவ்வளவு மொக்கையா இருந்தாலும் ஆஹா சூப்பர்னு சொல்லணும்”, பாடமெடுத்தான் சிஷ்யன்.
“அந்த புண்ணாக்கெல்லாம் தெரியும். அடங்கு. ஜெபா கூப்பிடும்போதே பார்ட்டிக்கும் வரணும்னு சேர்த்துதான் கூப்பிட்டார். “, சிம்மாவின் பதிலில் இன்னும் குஷியானான் பிரபஞ்சன்.
இவர்கள் சென்று சேரும் நேரம் படம் துவங்க சில நிமிடங்கள் முன்னர் என்பதால், ஜெபா வரவேற்றவர், அவர்களை உள்ளே அழைத்து செல்ல, நாங்க இங்க பின்னாடி உட்கார்ந்துக்கறோம் ஜெபா. நீங்க அங்க பாருங்க”, என்று அமர்ந்துவிட்டான்.
“பார்ட்டிக்கு இருப்பீங்க இல்ல சிம்மா?”
“கண்டிப்பா.”
“அப்ப சரி. அந்த டைம் எல்லாருக்கும் இன்ட்ரோ தரேன்”, என்று விடை பெற்றுக்கொண்டார்.
“ஹ்ம்ம்… சீக்கிரம் வந்திருந்தா அப்பவே எல்லா கெஸ்ட் ஆக்டரையும் பார்த்திருக்கலாம். “, பிரபஞ்சன் புலம்பி முடிய, படம் துவங்கிவிட்டது.
படம் கடுப்படித்தால் லாப்டாப்பில் வேலை பார்க்கலாம் என்று வந்தவன், அதிசயமாக படத்தை முழுதுமாக பார்த்திருந்தான். இடை வேளையின் போது இருக்கைக்கே சிற்றுணவு, பானம் என்று வர, பிரபஞ்சன் மட்டுமே முன்னால் சென்று பராக்கு பார்த்துவிட்டு வந்திருந்தான்.
“நேரத்துக்கு நானும் கிளம்பி போயிட்டா உங்களுக்குத்தான் கஷ்டம். நீங்க முதல்ல கல்யாணத்தை முடிங்க. அடுத்து நான். அதுவரைக்கும் கொஞ்சம் நானும் வாழ்ந்துக்கறேன் சாரே. விடுங்களேன்”, என்று தாடை பிடித்துக் கெஞ்ச, சிரிப்புடன் கையை தட்டிவிட்டான்.
படம் முடிந்து பெரும்பான்மையான ஆட்கள் வெளியேற, சிப்பந்தி ஒருவன் இவர்களை பார்ட்டி ஹாலிற்கு அழைத்துச் சென்றான். ஜெபா இவர்களைப் பார்த்தவுடன் வந்து படத்தின் டைரக்டர், ஹீரோ ஜெய்கிஷன், ஹீரோயின் ஸ்ரீலா என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்தினார்.
பிரபஞ்சன ஸ்ரீலீலாவிடம் பின்தங்க, ஜெய்கிஷனோ மலர்ச்சியோடு, “சிம்மா சாரை நல்லாவே தெரியும் ஜெபா சார்”, என்றதோடு, “உங்க ஃப்ரெண்ட் குமுதினியும் அவினாஷும் கூட வந்திருக்காங்க சிம்மா சார், அங்க பஃபே டேபிள்ல இருக்காங்க. வாங்க”, என்று அழைத்துச் செல்ல, மறுப்பு சொல்லாது அவனுடன் சென்றான் ஜெயசிம்மன்.
வெளிர் நீலத்தில் சன்ன சரிகையிட்டு வழ வழவென்று குமுதினியின் உடலை தழுவியிருந்தது சேலை. நேர் எதிராக பஞ்சுமிட்டாய் கலரில் ரவிக்கை. இது என்னடா காம்பினேஷன் என்று நினைக்கும்போதே குமுதினி இவனைப் பார்த்துவிட்டாள். அருகில் இருந்த அவினாஷ் திரும்ப, பஞ்சுமிட்டாய் கலரில் இரண்டு கோடுகள் போட்ட ஒரு டீ-ஷர்ட் அவன் உடலை கவ்வியிருந்தது. நீல ஜீன்ஸ் அணிந்து ஹீரோவைப் போலத்தான் இருந்தான்.
தன் ப்ளேசர் சற்று அதிகப்படியோ என்பது போலத் தோன்றியது சிம்மனுக்கு. ஆனால் முகத்திலிருந்த அலட்சிய பாவனை மாறவில்லை. ஜெய் “அவினாஷ், யார் வந்திருக்கா பாருங்க!”, என்று சொல்ல, மரியாதை நிமித்தம் கை குலுக்கினான். “பொண்டாட்டிக்கும் அவ காதலனுக்கும் கை குலுக்கற பாக்கியமே பாக்கியம்”, என்று குமுதினி காதருகில் முணுமுணுத்து தன் எரிச்சலை அவளுக்கும் கடத்தினான்.
“நான் பொண்டாட்டியும் இல்லை. யாரும் உங்களை தேடிட்டு இங்க வரவும் சொல்லலையே?”, பல்லிடுக்கில பதிலுக்குக் கடித்தாள்.
“சட்டம் அப்படித்தான் சொல்லுது. நானா வரலை, அந்த பால்டப்பாக்கு பி.ஆர்.ஓ மாதிரி இவந்தான் கூட்டிட்டு வந்தான்.”, முறுக்கினான் ஜெயசிம்மன்.
பால்டப்பா என்ற விளிப்பில் ஒரு நொடி முழித்து, முறைப்பும் அதே நேரம் சற்று சிரிப்பும் வந்துத் தொலைய,
“உன்னை…. ரொம்பத்தான் திமிரு”, எனவும் சிம்மனுக்கு ஒரு பெரிய புன்னகை பூத்தது.
அப்போதுதான் ஜெய்கிஷனை ஒரு வழியாக அனுப்பிவிட்டு திரும்பிய அவினாஷ், இருவரும் இணக்கமாக சிரிப்புடன் இருக்க, “என்ன ஜோக் குமுதினி?”, என்று கேட்டான்.
“உனக்கு புரியாது அவினாஷ், இது எங்க காலேஜ் டேய்ஸ் விஷயம்”, வேண்டுமென்றே அவனைக் கடுப்பேற்றக் கூறினான். ‘அடிங்க, அவ கூட ஜோடியா வந்ததே தப்பு, இதுல அவ ட்ரெஸ் கலருக்கு நீ மாட்சிங்கா வேற போட்டுட்டு வருவியா’, என்று உள்ளுக்குள் கறுவினான் சிம்மா.
சற்று பாடுபட்டு முகம் மாறாமல் வைத்த அவினாஷ், “வெல். அடுத்து எப்ப பேசி மூவ ஆன் பண்றது சிம்மா? எங்கம்மாக்கு எங்க கல்யாணம் டிலே ஆகறது பிடிக்கலை.” சிம்மனின் வயிற்றெரிச்சலை பதிலுக்குக் கொட்டிக்கொண்டான் அவினாஷ்.
அங்கிருந்த டென்ஷனை கத்தி கொண்டு வெட்டும்படி இருந்தது. “என் வசதிக்குத்தான் பார்க்கமுடியும் அவினாஷ். எப்படியும் நீ வரப்போறதில்லை, அப்பறம் என்ன? குமுதினிகிட்ட நான் பேசிக்கறேன்.”
“அவினாஷ்… நீ விளக்கம் சொல்லணும்னு அவசியமில்லை. ப்ளீஸ்”, என்றாள் குமுதினி.
“ஆமாமாம். நீ ஒன்னும் சொல்ல வேணாம். விளக்கம் சொல்ல வேண்டியது என் பொண்டாட்டிதான்.”, வேண்டுமென்றே சிம்மன் சீண்ட, அதில் முகம் சிவந்த அவினாஷ்,
“நீ பண்ணதுக்கு பேர் கல்யாணமா? ஒரு வாரம் கூட கட்டிகிட்டு வந்தவளை பார்த்துக்க துப்பில்லை, இதுல எட்டு வருஷம் கழிச்சு..”, இன்னும் பேசியிருப்பான், ஆனால் அதற்குள்தான் ஜெயசிம்மன் அவினாஷின் கழுத்தை பிடித்திருந்தானே.
“ஜெய்… பப்ளிக் ஜெய். ஸ்டாப் திஸ்”, என்று அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள, அவினாஷ் சிம்மனின் கையை குறுக்கில் அடித்து கழுத்தை மீட்டிருந்தான்.
“அவினாஷ்!”, மென்மையானவனிடமிருந்து இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்காதவள் இரண்டு பேரையும் இடுப்பில் கை வைத்து முறைத்திருந்தாள். முன்கையை அவினாஷ் அடித்ததில் சிம்மன் லேசாக கையை உதறியபடியே இருவரையும் முறைத்தான்.
“நானா ஆரம்பிச்சேன்?”, என்று அவினாஷ் நியாயம் கேட்க குமுதினிக்கு கண்ணைக் கட்டியது. அதற்குள் பிரபஞ்சன் ஓடி வந்தான்.
“சார்… என்னாச்சு? எல்லார் கையிலும் போன் இருக்கு சார். இங்க வெச்சு என்ன செய்யறீங்க, போலாம்”, என்று ஜெயசிம்மனை அழைக்க,
“சொல்லி வை அவங்கிட்ட”, குமுதினியிடம் உறுமிவிட்டு கிளம்பினான்.
குமுதினி வேகமாக அறையை சுற்றிப் பார்க்க, நல்லவேளையாக இந்தப் பக்கம் யாரும் பார்க்கவில்லை. அனேகம் பேரின் கவனம் அப்போதுதான் மனைவியோடு உள்ளே நுழைந்த வேறொரு நடிகரின் மேல் இருந்தது.
“நல்ல வேளையா யாரும் இந்த கார்னர்ல இல்லை. என்ன அவினாஷ் இது?”, என்று கடிய, “சரியான காட்டுமிராண்டி! பேசும்போதே கழுத்தை பிடிப்பானா?”, என்று கோபப்பட்டான்.
“எதுக்கு அவனை சீண்டற மாதிரி பேசின அவினாஷ்?”
“அப்ப என் பொண்டாட்டி வந்து விளக்கம் சொல்லணும்னு அவன் சொன்னது மட்டும் சரியா? அவன் தெரிஞ்சுதான் கடுப்படிக்கற மாதிரி பேசினான். பதிலுக்கு நான் பேசினா தாங்கிக்க முடியலை!”
அவினாஷின் பேச்சில் கண்களை உருட்டியவள், “கிளம்பலாம் வா. உங்க இரண்டு பேருக்குமே இன்னிக்கு புத்தி மழுங்கிப்போச்சு. இதுக்கு மேல இதை பேச வேணாம்”, என்று முன்னே நடந்தாள்.