வீட்டிற்குள் நுழையும் நேரம் கைப்பேசி அழைத்தது.

“இப்பதான் வீட்டுக்குள்ள நுழையறேன் அவினாஷ்”

“என்ன சொன்னான்? டிவோர்ஸ் அப்ளை பண்ணனுமா? என்ன ப்ரூஃப்?”, கேள்வியாய் அடுக்கவும் குமுதினிக்கு தலை விண்விண்ணென்று தெரித்தது.

“ஹ்ம்ம்…கோவில்லர்ந்து கல்யாணம் செஞ்சு வெச்சதுக்கு சர்ட்டிஃபிகேட் தந்திருக்காங்க. ஆனா இது கொஞ்சம் சிக்கலா இருக்கும் அவினாஷ்.  திரும்ப பேச அப்பாயிண்ட்மென்ட் தரதா சொல்லியிருக்கான். “, சோர்ந்து வந்தது குமுதினியின் குரல்.

“என்ன? என்ன சிக்கல்?”

“அவினாஷ்…ப்ளீஸ். தலை வலிக்குது. அப்பறமா டீடெயிலா சொல்றேன். எனக்கு தூங்கணும். நீங்க உங்க வேலையை பாருங்க. பார்த்துக்கலாம் விடுங்க.”

இணைப்பை துண்டிக்கவும், அங்கே அவினாஷுக்கு குழப்பமே மிஞ்சியது. ஆனாலும் அவள் மேல் இருந்த நம்பிக்கையில், மாலையில் சந்திப்போம் என்று முயன்று கவனைத்தை வேலையில் திருப்பினான்.

மாலை அவள் ஸ்டூடியோ வந்திருப்பதாக ஜாஸ்மின் சொல்லவும், தன் அலுவலகத்திலிருந்து அங்கே கிளம்பினான். டீமுடன் அடுத்த நிகழ்ச்சிக்கான விவாதத்தில் இருந்தாள். அவ்வப்போது அவனும் கலந்துகொள்ளுவான் என்பதால் அங்கிருப்பவர்கள் வித்தியாசமாக நினைக்கவில்லை.

பேச்சு ஓடிக்கொண்டிருக்க, அவினாஷின் பார்வை குமுதினியைத்தான் பார்த்திருந்தது. சற்று ஓய்ந்துபோய் தெரிந்தாள். சிம்மா மீது கோவம் வந்தது. பிரச்சனைகள் கண்டு அவ்வளவு எளிதாக சோர்ந்து போகக்கூடியவள் இல்லை குமுதினி. அரை மணி நேர சந்திப்பில் என்ன சொல்லி அவளை இந்த அளவிற்கு கொண்டுவந்தான் என்று தெரியவில்லை. தன்னை வரவேண்டாம் என்று விட்டுச் சென்றதில் குமுதினியின் மேல் சற்று சுணக்கம் கூடியது.

மேலும் பத்து நிமிடங்களில் மீட்டிங் முடிய, மற்றவர்கள் வெளியேறினார்கள்.

“சொல்லு அவினாஷ். இதை முடிச்சிட்டு நானே போன் செய்திருப்பேன். நீ எதுக்கு வந்த?”, அவன் அருகில் வந்து அமர்ந்தாள் சோபையான புன்னகையோடு.

“உன்னைப் பார்க்க வரது எனக்கு புதுசா? காலையில அப்செட்டா இருந்த, அப்படியே விட சொல்றியா? உன்னை சங்கடப் படுத்தற மாதிரி என்ன சொன்னான் அவன்?”, முறைப்புடனே வினவினான் அவினாஷ்.

விதண்டாவாதங்களைத் தவிர்த்துவிட்டு, மற்றதை சுருக்கமாகக் கூறினாள்.

யோசனையாக தாடையை தடவிய அவினாஷ், “அவன் கிட்ட என்ன ப்ரூஃப் இருக்குன்னு ஈசியா சொல்லிட்டான். சோ நிஜமாவே அவங்கிட்ட இருக்கு. அதுல எதுவும் உள்குத்து இல்லை. ஆனா என்ன க்ளோஷர் வேணுமாம்? சரி அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதிலை சொல்லிட்டா இது முடிஞ்சிடுமா? உனக்கு அப்படி ஃபீல் ஆச்சா?”

அவினாஷின் இந்தக் கேள்விக்கு குமுதினியால் உடனே பதிலளிக்க முடியவில்லை. அவளுமே அதை யோசித்துதான் மண்டை காய்ந்திருந்தாள்.

“ஹானஸ்ட்டா தெரியலை. நான் சொல்ற பதில் அவனுக்கு ஏத்துக்கற மாதிரி இருக்கணும்னு சொல்றான். முதல்ல ஏன் போனேன்னு சொல்லணும்னா அவங்க அப்பா எவ்வளவு பெரிய அயோக்கியன்னு சொல்லணும். அப்படியே நான் சொன்னாலும் அவர் அப்படி இல்லைன்னா அவன் யாரை நம்புவான்? எங்கிட்ட ஒரு சாட்சியும் கிடையாது. இப்பவுமே, ஜெய் என்னை பார்க்கறதா விஷயம் தெரிஞ்சா அந்த பெரிய மனுஷன் மறுபடியும் என்னை டார்கெட் பண்ண வாய்ப்பு அதிகம்.”

குமுதினி பேசவும், “இப்ப நீ தனி ஆள் இல்லை குமுதினி. நான் அவன் குடும்பத்தைப் பத்தி விசாரிக்கறேன். அவங்க அப்பா எந்த மூவும் பண்ணா நமக்கு உடனே தெரிய வர மாதிரி ஏற்பாடு பண்றேன். அதை விடு.”, அவினாஷ் குமுதினியின் கைபிடித்து ஆறுதல் கூறவும், அவள் கண்கள் கலங்கியது. அன்று பாட்டியின் உயிரை வைத்து மிரட்டினார்கள், இப்போது அவரில்லை. ஆனால் அவினாஷை அவ்வளவு எளிதில் தொட்டுவிட முடியாது. தன்னையும் சேர்த்து அவன் பார்த்துக்கொள்வான் என்பதில் ஒரு ஆசுவாசம்.

ஜெயசிம்மா அவன் அலுவலகத்தில் யோசனையாக அமர்ந்திருந்தான். காலையில் வந்து சென்றவளைப் பற்றி யோசிக்கவே இப்போழுதுதான் நேரம் வாய்த்தது. பிரபஞ்சன் கொண்டு வந்து கொடுத்த காஃபியை பருகியபடியே அசைபோட்டான்.

இரட்டை ஜடை, ஒரு காட்டன் சுடிதாரில் கையில் ஆட்டுக்குட்டியை ஏந்தியபடியே அதனிடம் தீவிரமாக பேசிக்கொண்டு வரும்போதுதான் அவளை முதன் முதலில் பார்த்தான்.

ஆட்டுகுட்டியிடம் அப்படி என்ன பேசுகிறாள் என்றுதான் எண்ணம் சென்றது. அவனைக் கடந்து செல்லும்போது கேட்டது, “லீனியர் மாடல் கம்யூனிகேஷன்றது ஒன் வே  அதாவது செண்டர் …”

“அடிப்பாவி ஆட்டுகுட்டி பாவம்டி”, என்று நினைத்து சிரித்தது இப்போதும் புன்னகை பூக்க வைத்தது. பின் நண்பர்கள் மூலமாக அவளும் அவன் படிக்கும் கல்லூரியில் படிப்பது தெரிந்தது.

சிவில் எஞ்சினியரிங் முடித்த கையோடு, எம்.பி.ஏ படிக்க அனுப்பிவிட்டார் அவன் தந்தை நரசிம்மன். இடைவெளி விட்டால், படிப்பதில் ஆர்வம் போய்விடும் என்று சொல்ல, திருநெல்வேலியில்தான் சேருவேன் என்று சேர்ந்தான். இவன் எம்.பி.ஏ படிக்க, இரண்டாம் ஆண்டு மீடியா கம்யூனிகேஷன்ஸ் படித்துக்கொண்டிருந்தாள் குமுதினி.

கைப்பேசி அழைப்பு கவனம் கலைத்தது. பேசி வைத்தவன் தலையில் தட்டிக்கொண்டு, ‘என்ன யோசிக்க ஆரம்பிச்சு என்னடா யோசிக்கற?’ என்று திட்டிக்கொண்டான்.

முப்பத்தியோரு வயதில் பக்குவமும் தைரியமும் நிறைந்து காணப்பட்டாள். முன்பே அறிகுறிகள் தெரிந்ததுதான், ஆனால் அதிகம் உலகத்தைப் பார்த்திராததில் சற்று வெள்ளந்தியாக இருந்தாள். அகத்தை காட்டும் முகத்தை இப்போது தொலைத்திருந்தாள். நாகரிகப் பூச்சு முகத்தில் மேக்கப்பாக, உடையின்  நளினமாக வெளிப்பட்டது. பேச்சு கவனமாக வந்தது. கடைசியில் அவளையும் மீறி கடுப்பானதற்கு முன்பு வரை முகத்தில் ஒரு உணர்வும் பெரிதாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் என்ன பேசியும் அவள் பிடியிலேயே நின்று வந்த விஷயத்தை வாங்கத்தான் பார்த்தாள்.

அவள் நிகழ்ச்சியில் ஏன் சிறப்பாக இருக்கிறாள் என்று அனுபவபூர்வமாக கண்டுகொண்ட தருணம். அதனாலேயே அவளை வெறுப்பேற்றியது சந்தோஷத்தைக் கொடுத்தது. தொலைக்காட்சியில் அவ்வப்போது அவள் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டுதான் இருந்தான். எதிராளியை திணறடிப்பாள் ஆனால் இவள் தடுமாறாமல், வளைத்து வளைத்து பதில் வரும் வரையில் கேள்விகளை கேட்பாள்.

“ஹ்ம்ம்…என்ன ஆதாரம் இருக்குன்னு சொல்றதுக்கே அலைய விடணும்னு நினைச்சேன், கடைசியில இந்தா வெச்சிக்கோன்னு நானே சொல்லிட்டேன். செம்ம டாலண்ட்தான். இனி பேசும்போது உஷாரா இருக்கணும்டா சிம்மா”, தன்னிடமே எச்சரித்துக்கொண்டான்.

‘வெல்.. சாதிக்கணும்னு கிளம்பினா. சாதிச்சிட்டா. அப்பறம் எங்கிட்ட வராம அது என்ன புது லவ்? சிரிக்க வெச்சா அவன் பெரிய இவனாயிடுவானா? அப்ப என் லவ் என்ன தொக்கா? ஜஸ்ட் லைக் தட் தூக்கிப் போட்டுட்டு போன? இப்ப அவனைக் கட்டிக்க நான் டைவர்ஸ் தரணுமா? வாடி வா… ஆறு மாசம் பைத்தியக்காரனா சுத்த வெச்சியே அதுக்கு பழி தீர்க்க வேண்டாமா? உன் புது லவ் எவ்வளவு ஸ்ட்ராங்க்ன்னு சோதிச்சு பார்த்துடுவோம். அதைவிட அந்த பால்டப்பா எவ்வளவு தூரம் உறுதியா இருக்கான்னு பார்த்துடுவோம்.”

என்னதான் கோட் சூட் போட்டாலும் அவன் ஆளுமை கவர்ந்தாலும், மா நிறமும், அடர்ந்த மீசை, லேசான தாடி, கடினப் பார்வை என்று சற்று மிரட்டலான தோற்றமுமாக இருப்பான் ஜெயசிம்மன். தன்னைவிட நாகரிக அழகிலும், கலரிலும் சிறப்பாக இருப்பதினால் அவினாஷிற்கு பால்டப்பா என்று பெயர் வைத்திருந்தான்.

“இருக்கட்டும் கும்கியிட்ட அவனை பால்டப்பான்னு சொல்றேன். அவ முகம் போற போக்க பார்க்கணும்”, என்று திருப்திபட்டுக்கொண்டான். குமுதினியை கல்லூரி நாட்களில் கும்கி என்று அழைத்து வெறுப்பேற்றுவான், அது அவனையும் மீறி நினைவில் வந்தது.

இவன் இங்கே யோசித்திருக்க, அங்கே அவினாஷ் குமுதினியுடன் டின்னரில் இருந்தான்.

“இந்த வருஷம் கல்யாணம் வைக்க முடியாது அவினாஷ். ஆன்ட்டிகிட்ட பக்குவமா சொல்லுங்க. டைவர்ஸ் ஃபைல் பண்ணியாச்சுன்னா ஒரு ஐடியா கிடைச்சுடும். ஆனாலும் ஜெய் சம்மதிக்க ஒரு மாசம்னு வெச்சாலும், அப்பறம் ஒரு ஆறு மாசம், சோ அனேகமா சித்திரை ஐ மீன் ஏப்ரல் மாசம்?”   

ஒரு பெருமூச்சுடன், “இப்ப எங்கேஜ்மென்ட் என்ன செய்யறது? அம்மா செம்ம எக்சைட்மென்ட்டோட எல்லாத்தையும் ப்ளான் பண்றாங்க.”

தர்மசங்கடமாகப் பார்த்தவள், “வெச்சா தேவையில்லாம அவனை சீண்டற மாதிரி ஆகிடுமோன்னு இருக்கு அவினாஷ். வேணா ஆன்ட்டிகிட்ட உண்மையை சொல்லிடுங்க.”

“இல்ல. வேணாம்.” மறுத்தான்.

“ஏன்? தப்பா நினைப்பாங்கன்னு நினைக்கறீங்களா?”

“உன்னோட அந்த கல்யாணம் ..ம்ப்ச் அதை கல்யாணம்னே சொல்ல முடியாது.  இது யாருக்கும் தெரியவும் தெரியாது. அப்படியே இருக்கட்டும். அம்மாகிட்ட கூட சொல்ல வேணாம். ஜஸ்ட் கொஞ்ச நாள் டேட் பண்ணிட்டு அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்னு சொல்லிடறேன்.” அவினாஷ் எளிதாக நினைத்துவிட்டான்.

பிருந்தாவிடம் நிச்சய ஏற்பாடெல்லாம் வேண்டாம் என்றதும் பிபி எகிறி ஹாஸிட்டலில் சேர்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்.