ஜெய்சிம்மனின் கட்டளையை ஏற்று, சரியாக பத்து மணிக்கு அவன் அலுவலகத்தில் போய் நிற்க குமுதினிக்குப் பிடிக்கவில்லை. அவினாஷ்தான், நமக்கு வேலை ஆகணும்னா வளைஞ்சுதான் போகணும் என்றதோடு நானும் வருகிறேன் என்றான்.
“இல்லை. நான் மட்டும் போறேன் அவினாஷ். நீங்க வந்தாலும் வேணும்னே வெளிய காக்க வெக்கலாம். எதுக்கு?”, என்று சொல்லி இதோ தனியாக வந்திருந்தாள்.
சிம்மா பில்டர்ஸ் சென்னை் சேமியர்ஸ் ரோட்டின் ஒரு பலமாடிக் கட்டிடத்தில் இருந்தது. சிம்மா டவர்ஸ் என்று அவர்கள் கம்பனி கட்டியதுதான். ஒரு சில தளங்களில் அவர்கள் அலுவலகம் இருக்க, பேர் சொன்னாலே தெரியும் புகழ்பெற்ற பல கம்பனிகள் அந்த இரண்டு டவர்களில் அலுவலகங்களை அமைத்திருந்தார்கள்.
ரிசெப்ஷன் பிரம்மாண்டமாக இருந்தது. உள்ளே அவள் நுழையவும், அருகே வந்த ஒருவன், “மேம், நான் பிரபஞ்சன், சிம்மா சர் செக்ரடரி.” என்று அறிமுகப் படுத்திக்கொண்டு, “ப்ளீஸ், என்னோட வாங்க.”
அமைதியான ஒரு தலையசைப்புடன் அவன் பின்னே ஒரு லிப்ட்டில் ஏறினாள். அதில் ஒரே பட்டன் இருக்க, பிரத்யேகமான லிஃப்ட் என்பது புரிந்தது.
எங்கும் செல்வச் செழிப்பு மிளிர கால் புதையும் கார்பெட்டில் நடந்து, மற்றுமொரு ரிசப்ஷனில் இருந்த ஒரு பொம்மைப் போன்ற பெண்ணிடம் வந்து நின்றனர்.
“வெல்கம் மேம்”, என்ற ஒரு செயற்கை புன்னகை சிந்தியவள், காதில் பொருத்தியிருந்த சிறு கருவியில் வந்த உத்தரவை ஏற்று, பிரபஞ்சனிடம் தலையசைக்க, குமுதினியை அழைத்துக் கொண்டு பக்கவாட்டில் இருந்த ஒரு கதவில் சம்பிரதாயமாக தட்டிவிட்டு திறந்து விட்டான்.
“ நீங்க போங்க மேம்”, எனவும் உள்ளே நுழைந்தாள். அறையின் பிரம்மாண்டம்தான் முதலில் அறைந்தது. அதில் நடு நாயகமாக ஒரு பெரிய மேசை, அதை ஆளுபவனாக கோட்டையின் சக்ரவர்த்தியாக அமர்ந்திருந்தான் ஜெயசிம்மன்.
அவினாஷின் அலுவலகத்திற்கும் சென்றிருக்கிறாள். அதுவும் பெரியதாகத்தான் இருக்கும், ஆனாலும் ஒரு கம்ஃபர்ட் இருக்கும். இங்கே சற்றே அச்சுறுத்துவது போல இருந்தது. ஒரு புறம் சுவரில் பிரத்யேக விளக்கொளியில் ஒரு பெரிய புத்தர் அமைதியாக பார்த்திருந்தார்.
ஆனால் கவனத்தை முழுதுமாக கவர்ந்தது ஜெயசிம்மந்தான். அவள் உள்ளே வந்ததும், லேசாக அறையை உள்வாங்கியதையும் அவதானித்துக்கொண்டிருந்தவன்,
“வாங்க பொண்டாட்டி. உட்காருங்க. இப்பவாவது வழி தெரிஞ்சுதே”, என்று நக்கலாக அழைத்தான்.
அவள் போட்டிருந்த சல்வார் முழங்காலை சுழற்றி வர, தோளில் வழிந்த துப்பட்டாவை மேலே எடுத்து போட்டபடி வந்தவள், முகத்தினை லேசாக சுளித்து, “ஜெய்… ப்ளீஸ் ஸ்டாப்”, என்று இருக்கையில் அமர்ந்தாள்.
தோளை குலுக்கியவன், “எதுவும் சாப்பிடறியா? காஃபி?” உபசரிக்க, வேண்டாம் என்று மறுத்தவள், “எதுக்கு வரச் சொன்ன ஜெய்?”, என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“எங்க உன் ஃபியான்சே? உன்னை தனியா அனுப்பிட்டு அப்படி என்ன வேலை பார்க்கறான்?”
சிம்மாவை அசூயையாய் பார்த்தவள், “வந்திருந்தா நீ வெளிய உட்கார வெச்சிருப்ப. அது எதுக்கு? நீ என்னைப் பார்க்கத்தானே கேட்க?”
லேசான சிரிப்புடன், “எப்படியிருக்கன்னு கேட்க மாட்டேன். அபத்தமா இருக்கும். நீ நல்லாயிருக்கன்னு தெரியுது.” என்று ஆரம்பித்தவன், “அவன் மேல ரொம்ப லவ்வோ? “, என்று ஒரு புருவம் ஏற்றி கேட்டான்.
“ம்ப்ச்… கல்யாணம் செய்ய சம்மதம் சொல்லியிருக்கேன், இதுவும் அபத்தமான கேள்விதான்.”, அலட்டலில்லாமல் அதே நேரம் கேள்விக்கு பதிலும் சொல்லாமல் சொன்னாள்.
அதில் சற்றே கனன்றாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை சிம்மன். “வெல்.. நீ சம்மதம் சொன்னாலும், நான் டைவர்ஸ் தராம நீ கல்யாணம் பண்ண முடியாது.”
“ நாம கல்யாணத்தை ரிஜஸ்ட்டர் பண்ணலை. ஜஸ்ட் கோயில்ல வெச்சு தாலி கட்டினீங்க. அவ்வளவுதான்.”, விவாத மேடை நடத்துபவள் விவாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.
“யா. ரெஜிஸ்டர் பண்ணலைன்னாலும் நாம பண்ண கல்யாணம் செல்லும். என் மனைவியா என்னோட நாலு நாள் வாழ்ந்திருக்க.”
“அதுக்கப்பறம் எட்டு வருஷம் பிரிஞ்சிருந்திருக்கோம்.”
“இது என்ன யூ.எஸ்ஸா? ஆனுவல்மென்ட் வாங்க? இந்தியால எத்தனை வருஷமானாலும் கல்யாணம் செல்லும். ஏழு வருஷம் காணாமல் போனா, அப்பவும் காணலைன்னு ஃபைல் பண்ணனும். கண்டுபிடிக்க முடியலைன்னாதான் பிரிய முடியும்.”, பாடமெடுத்தான்.
“இதுவரைக்கும் நீ வேற கல்யாணம் பண்ணலையே. இப்பவும் பிரச்சனை பண்ணனும்னா, சினிமால வர மாதிரி, தாலி கட்டுற நேரத்துல வந்து நிறுத்தியிருப்பேன். இப்படி தனியா பேசிட்டு இருக்கமாட்டேன்”, அவளுக்கு மேல் முறைப்புடன் வந்தது சிம்மனின் பதில்.
எவ்வளவு பெரிய அசிங்கமாகியிருக்கும்? அத்தனை மீடியாவிற்கும் அல்வா போல் செய்தி கிடைத்திருக்கும். ஆனால் அதில் அவன் பெயரும் அல்லவா கெட்டிருக்கும். அதை நொடியில் உணர்ந்தவள், “உன் பேரும் சேர்ந்துதான் அடிபட்டிருக்கும். அதனால கண்டிப்பா அப்படி செய்யறதுல லாபமில்லை”, என்று அவன் போட்ட பந்தை பெவிலியனுக்கு அடித்தாள்.
ஒரு சிறு நகையுடன், “ஷார்ப் அஸ் ஆல்வேய்ஸ்”, என்று மெச்சினான்.
“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரலை”
“நான் கூடதான் அவனை ரொம்ப லவ் பண்றியான்னு கேட்டேன். நீ பதில் சொல்லலை”. மீண்டும் அங்கேயே வந்து நிற்க, ஆயாசமாகப் பார்த்தவள், “ஆமாம். இப்ப அதுக்கென்ன?” என்றாள் விரைப்பாக.
“நம்ம லவ் பண்ணதைவிடவா?”, யோசனையாகக் கேட்டான்.
“மப்ச்… இப்ப எதுக்கு அதெல்லாம்? நான் பழசை திரும்பிப் பார்க்கறதில்லை.”
‘ஓ அப்படி’, என்பதாக லேசாக உதட்டைப் பிதுக்கியவன், “பாரு, பழசை முழுசா முடிக்காம புதுசை தொடங்கமுடியாது. அப்படி பாதியில விட்டா அதை திரும்பிப் பார்க்காமலும் இருக்க முடியாது”, தத்துவம் பேசினான்.
“லிசன் உனக்கு வேலை இருக்கும், எனக்கு கண்டிப்பா இருக்கு. என்ன வேணும்னு சொன்னா அடுத்து பார்க்கலாம்.”
“அதுதான் ஏன்னு கேட்கறேன். சொல்லாம இழுத்தடிக்கற. எனக்குத் தெரியாமலேயே என் கையெழுத்தைப் போட்டு ரிஜிஸ்டர் பண்ணியா? “
“நோ. கல்யாணம் ரெஜிட்டர் செய்யலை. ஆனா நாம செஞ்ச கல்யாணம் லீகல். உங்கிட்ட நான் பேசிட்டு வந்து ஒரு பன்னெண்டு மணி நேரம் இருக்குமா? இன்னுமா என்ன ஆப்ஷன்ஸ் இருக்கும்னு கண்டுபிடிக்கலை? என்ன லீகல் டீம் வெச்சிருக்கான் உன் ஃபியான்சே?”, கடைசி வார்த்தையை துப்பினான்.
“இது வெளிய யார் கிட்டயும் பேசற விஷயமா?”
“உண்மை சொல்லி விசாரிக்கணும்னு அவசியம் இல்லையே? ஏன் உன் ஷோக்கு விவரம் எடுக்கற டீம்கிட்ட சொன்னாலே எடுத்து தந்திருப்பாங்க.”
அவன் பேச்சில் பல்லைக் கடித்தாள். “நான் என்ன விவரம் கலெக்ட் பண்ணேங்கறது இல்லை இப்ப பிரச்சனை. உன் கிட்ட என்ன இருக்கு. அதை சொல்லு.”
அவள் எரிச்சலுற்றதில் ஏனோ கொஞ்சம் குதூகலம் ஆனான் ஜெயசிம்மன்.
“கோவில்ல நம்ம கல்யாணம் செய்ததுக்கான அத்தாட்சியா சர்ட்டிஃபிகேட் குடுத்தாங்க. அதுக்கு நம்ம கையெழுத்து தேவையில்லை. நாம ஒன்னும் சின்ன கிராமத்துக் கோயிலுக்கு போகலை. அங்க ரெகுலரா கல்யாணங்கள் நடக்கறதுதான? கல்யாணம் செஞ்சு வெச்ச ஐயர் ஒரு லெட்டர் குடுப்பார், அது கூட, கல்யாண போட்டோஸ். இது மூணும் போதும் நம்ம கல்யாணம் லீகல்னு ப்ரூவ் பண்ண. அதை வாங்கி, அப்பறமா ரெஜிஸ்டர் ஆஃபீஸ் போய் மத்த ஃபார்மாலிட்டீஸ் பண்ணலாம்னு நினைச்சேன்…”, என்றதோடு உதடு சுழித்து நிறுத்தினான்.
இதுவாகத்தான் இருக்கும் என்று நேற்றே கூகிள் ஜெமினி புண்ணியத்தில் பார்த்து குமுதினியும் அவினாஷும் தெரிந்துகொண்டிருந்தார்கள்.
மெல்ல நெற்றியை தேய்த்தவள், “அப்போ ம்யூச்சுவல் டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணலாம். எட்டு வருஷம் பிரிஞ்சிருந்தோம்னா பெருசா இழுக்காம தீர்ப்பு கிடைச்சிரும்.”, என்றாள்.
“ம்ம்… ஆறு மாசத்துக்குள்ள முடிக்கலாம். ஆனா பாரு, நான் ஏன் இதுக்கு ஒத்துக்கணும்?”
விலுக்கென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “ஏன்னா? எனக்கு புரியலை”
தோளை குலுக்கினான். “கிட்டதட்ட இரண்டு வருஷம் லவ் பண்ணோம். சந்தர்ப்பம் சூழ்னிலை, கல்யாணம் பண்ணோம். உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போனேன். சில நாள் சந்தோஷமா வாழ்ந்தோம். நான் ஊருக்கு போயிட்டு வரேன், நீ இல்லை. வருஷக் கணக்கா நீ இல்லை. இப்ப திடீர்னு வேற கல்யாணம் செய்யணும்னு வந்து நிக்கற. ஆனா எனக்கு ஒரு க்ளோஷர் இல்லை. நீ ஏன் போன, அப்படியே என்னை விட்டு போகணும்னாலும் என்ன காரணம்? எதுக்கு இத்தனை வருஷம் ஒதுங்கி இருந்த? எதுவுமே தெரியலை. சோ இதுக்கெல்லாம் முதல்ல பதில் வேணும். நீ சொல்றதெல்லாம் சரின்னு பட்டா, அதுக்கப்பறம் யோசிக்கலாம்.”, பேசி முடித்தவன் அவ்வளவுதான் என்பது போல எழுந்து நின்றான்.
என்ன முயன்றும் உள்ளுக்குள் எழுந்த கோபத்தை குமுதினியால் மறைக்க முடியவில்லை. “இது நீ வேணும்னு பழிவாங்கற”
“யா. மே பீ. நீ யோசி. நாம அடுத்த மீட்டிங் சொல்லியனுப்பறேன். இப்ப கிளம்பு. என் அடுத்த அப்பாயின்ட்மென்ட் வந்திட்டு இருக்காங்க.”, என்று நடந்து வந்து கதவைத் திறந்தான். வேறு பேசாது வெளியேறினாள் குமுதினி.