பலவிதமான போட்டோக்கள் அத்தனையும் அவள் மட்டுமே அடுத்தடுத்து வர பின்னணியில் – உன் கைகள் கோர்த்து, உன்னோடு போக, என் நெஞ்சம்தான் ஏங்குதே …என்று இசை கசிந்து ஓ பெண்ணே ஓ பெண்ணே என்று கோரஸ் வரும் நேரம் அவள் சம்மதம் சொன்னாள் என்று ஆங்கிலத்தில் இரண்டு இதயங்களுடன் எளிமையாக முடிந்தது.
அவள் பார்க்கப் பார்க்கவே வாழ்த்து மெசேஜ்கள் குவிய ஆரம்பிக்க, அவினாஷ் அழைத்திருந்தான்.
“வாவ்… பெருசா எதிர்பார்க்காதேன்னு சொல்லிட்டு என்ன ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் குமுதினி. தாங்க்யூ டியர். நீ எப்பவும் சிரிக்கறதைப் பார்க்கத்தான் எனக்குமே ஆசை!”
இவர்களின் இன்ஸ்டா போஸ்ட் மறு நாள் பலரை சென்றடைந்தது. அதில் ஒருத்தனிடமிருந்து தனிக் கவனம் பெற்றது. “டாமிட்… நோ”, என்றவன் குடித்துக்கொண்டிருந்த காஃபி கோப்பையை வீசி எறிந்தான்.
இருவரும் பார்ட்டிக்கு சென்ற செய்தியைப் படித்த போது கூட தோளைக் குலுக்கிவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றிருந்தான். அவினாஷ் பற்றி ஏற்கனவே விவரங்கள் அவன் கைவசம் வந்திருந்தது. குறை சொல்லும்படி எதுவும் இல்லை. அதுவும் கடுப்பை கிளப்பியிருந்தது.
பெங்களூரு சென்ற அவினாஷ் தினமும் குமுதினியை அழைத்துப் பேசியிருந்தான். இருவருக்கும் பொதுவான நட்பு வட்டம் வாழ்த்தியதோடு எப்போது கல்யாணம் என்று கேட்க, சென்னை வந்ததும் முடிவு செய்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார்கள். அவினாஷின் தாயார் அதற்குள்ளாகவே இரண்டு மூன்று தேதிகளை குறித்திருந்தார்.
ஒரு அழகிய மரகதப் பச்சை மைசூர் சில்க் ஷார்ட் குர்த்தியும், ஃபேடெட் ஜீன்ஸ், கருப்பு பூட்ஸ் என்று எளிமையும் நளினமும் ஒன்றாய் மிளிர தயாராகிக்கொண்டிருந்தாள் குமுதினி. லேசான மேக்கப் முடித்து, உடையில் பெர்ஃபூமை தெளித்தவள், சிறிய கைப்பையில் பர்ஸ், போன் இருப்பை சரிபார்த்துக்கொண்டு அவள் அப்பார்ட்மென்ட்டின் வரவேற்பறைக்கு வந்தாள். அவளொருத்திக்கு அந்த இரண்டு படுக்கை அறை ஃபளாட் கச்சிதமாக இருந்தது. அவள் சேமிப்பில் வாங்கிய வீடு. எவரும் துரத்திட முடியாதபடி அவள் பெயரில் இருக்கும் வீடு.
கண்களை சுழல விட்டாள். ராதையுடன் கிருஷ்ணன் இருக்கும் பிரம்மாண்டமான தஞ்சாவூர் பெயிண்டிங் ஒரு சுவரில் இருந்தது மட்டுமே அலங்காரம். அழைப்பு மணி ஒலிக்க, கதவை திறந்தாள்.
“வா அவினாஷ். எதுவும் குடிக்கறியா?”
“ஹே லூக்கிங் கூல் குமுதினி. இல்ல. நீ ரெடினா கிளம்பலாம்”, அவளை லேசாக அணைத்து விடுவித்தான்.
“ஷூர்”, கதவை பூட்டிவிட்டு அவனுடன் நடந்தாள். அவனும் ஒரு க்ரே ஜீன்ஸ், சில பல ஆயிரங்களை முழுங்கிய வெள்ளை பால்மெயின் டீ-ஷர்ட் அணிந்திருந்தான். இன்று நண்பர்களுடன் அவர்கள் நிச்சயத்தை முன்னிட்டு ஒரு சிறு விருந்து. அடுத்த மாத இறுதியில் நெருங்கிய சுற்றமும் நட்பும் சூழ ஒரு நிச்சயதார்த்த விழா ஏற்பாட்டை துவங்கியிருந்தார் பிருந்தா, அவினாஷின் தாயார்.
குமுதினியைப் பொறுத்தவரை உறவென்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரே ஜீவன் அவள் அன்னையைப் பெற்றவர், கமலம் பாட்டி. அவரும் இரண்டு வருடங்கள் முன்னர் காலமாகிவிட, பிருந்தாவின் விருப்பப்படியே ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது.
“ம்மா… ஏற்கனவே பெருசா பண்றேன்னு ஃப்ளாஃப் ஆனது போதும். இந்த வாட்டி சிம்பிளா, இன்ட்டிமேட்டா இருக்கட்டும். ப்ளீஸ்”, என்ற அவினாஷின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டிருந்தார் பிருந்தா. மகன் மீண்டும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க விரும்புவதே அவருக்கு போதுமானதாக இருந்தது. அது குமுதினி என்பதில் இன்னமும் திருப்தியே.
ஹோ வென்று கத்தி வரவேற்றது நட்பு வட்டம். ஜெய்கிஷன் முதல் ஆளாக ஒரு பெரிய பூங்கொத்தை தந்து இருவரையும் வரவேற்றான். அவர்களுக்கென்று பிரத்தேயகமான தனி பார்ட்டி ஹால். மது பானங்களும் ஸ்டார்ட்டர் வெரைட்டிகளும் வந்தவர்கள் கைகளில் ஏற்கனவே சேர்ந்திருந்தது. அவினாஷின் செக்ரட்டரி ஜாஸ்மின் சிறப்பாக ஏற்பாடுகளை கவனித்திருந்தாள். குமுதினி விரும்பும் தர்பூசணி ஜூஸ், அவினாஷிற்கு ஷாம்பெயின் என்று ட்ரேவில் வைத்து காத்திருந்தான் ஒரு சர்வர்.
கூடியிருந்த பதினைத்து நட்புகளின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு, சர்வரிடமிருந்து அவர்களின் பானங்களை எடுத்துக்கொண்டு அமர்ந்தனர்.
மைக்குடன் ஜாஸ்மின் அனைவரையும் வரவேற்று, ஒரு சிறிய வினாடி வினா என்று ஆரம்பித்தாள். கண்ணாடிக் கோப்பையில் காகிதங்கள் இருந்தன.
“அவினாஷ், வந்த கெஸ்ட்ஸ் எல்லாரும் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்காங்க. நான் படிக்க, நீங்க இரண்டு பேரும் அது யார் கேட்டிருப்பான்னு கெஸ் பண்ணணும். கேள்விக்கான பதிலும் சொல்லணும்”, என்று விதிகளைக் கூறி முதல் பேப்பரை எடுத்தாள்.
“இருவரில் முதலில் யார் காதலைச் சொன்னது?”, என்று வழக்கமான கேள்வி, அவினாஷ் குமுதினியைப் பார்த்து சிரிக்க, “சொன்னோமா என்ன?” என்று முணுமுணுத்தாள்.
“நான் தான் முதல்ல சொன்னது” என்று அவினாஷ் கை உயர்த்தினான்.
“முதல் முத்தம் “, என்று அடுத்து வர, ஓ என்று இரைச்சல். இதற்கு முன்னரும் இருவரும் சேர்ந்து வந்திருக்கின்றனர் என்றாலும் கூட அனைவர் முன்னிலையிலும் எப்போதும் கண்ணியமாகவே இருப்பார்கள். அப்படியெல்லாம் எளிதில் விஷயம் வராது இருவரிடமும். அதனாலேயே சில ஏடாகூடக் கேள்விகளும் இருந்தது.
சிரித்தவன், “டேய் ஜெய்… நீதான கேட்டது? குமுதினி பத்தி தெரிஞ்சும் கேட்கறீங்களேடா? ஹ்ம்ம்ம்… இன்னமும் அதுக்குக் காத்திருக்கிறேன்”, என்று இராகமாய் இழுக்க கலகலத்து சிரித்து அவன் புஜத்தில் அடித்தாள் குமுதினி.
கலாட்டாவாக கேள்விகள் முடிய, ஜாஸ்மின் பெரிய கேக் ஒன்றை எடுத்து வந்தாள். அதை வெட்டி ஊட்டி முடித்து, போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து முடிய, உணவுக்கான நேரம்.
பேசிக்கொண்டே உணவு ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் நடனமாடிக்கொண்டிருந்தார்கள்.
“வா குமுதினி. ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடிட்டா அப்பறம் தொந்தரவு பண்ண மாட்டாங்க”, என்று அழைத்துச் சென்றான் அவினாஷ். குமுதினிக்கு இதில் அவ்வளவாக விருப்பம் இருக்காது என்று தெரியும், அதனாலேயே ஜாஸ்மினிடன் சைகை செய்து ஒரு மூன்று நிமிட ஆங்கிலப் பாட்டை ஒலிக்கச் சென்று அழைத்தான்.
இவர்கள் சென்று ஆடவும், நட்புக் கூட்டம் இன்னும் நெருக்கமாக ஆடச் சொல்லிக் கேட்டது. சிரித்து மழுப்பி, ஓரிரு முறை அவளை சுழற்றி வளைத்துக் கைகளில் சாய்த்து என்று ஆட, “ஹே அவினாஷ்…”, என்றாள் மூச்சு வாங்க.
அவளின் லேசான மிரட்சியைப் பார்த்து சிரித்தவன், “ஒன்னு கட்டிப்பிடிச்சு நெருக்கமா ஆடணும், இல்லை இப்படி. அப்பதான் அடங்குவாங்க. உனக்கு இது பெட்டரா இருக்கும்னு தோணுச்சு. வேண்டாமா? ஸ்லோ டான்ஸ் பண்ணுவோமா டார்லிங்?”, காதருகில் அவினாஷ் கேட்கவும் சிரித்தாள். “தாங்க்ஸ் அவினாஷ்!” என்று அவன் புஜம் பற்றியபடி இருவருமாக ஒரு டேபிளில் அமர்ந்தார்கள்.
“டின்னர் ஆரம்பிக்கலாமா?”, அவள் சம்மதிக்கவும் ஜாஸ்மினைப் பார்த்து சைகை செய்தான். இருவருமாக சூப்பை அருந்த, அருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் ஒருவன்.
“கங்க்ராஜுலேஷன்ஸ்…”, அவனைப் பார்த்து உறைந்து போயிருந்த குமுதினிக்கும், அவன் யார் என்று அறிந்திருந்தாலும், இவனை அழைக்கவில்லையே இவன் எப்படி வந்தான் என்ற சின்ன புருவச் சுருக்கலுடன், ஒரு அறிமுகப் புன்னகையை சிந்திய அவினாஷையும் கண்டு, “…சொல்லத்தான் ஆசை, ஆனா பாருங்க, நம்ம நாட்ல பிகாமி இல்லீகல்…ம்ப்ச்”, என்று போலியாக வருத்தப்பட்டான்.
இத்தனை நெருக்கத்தில், இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கின்றாள். முகம் சற்றே இறுக்கமாக இருந்தது. எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அலட்டலாய் கருப்பு சில்க் சர்ட், கருப்பு பாண்ட் சகிதம் அந்த இடத்தையே ஆளுபவன் போல அமர்ந்திருந்தான், அவன் ஜெயசிம்மன்.
“சாரி? கம் அகேய்ன்? பிகாமியா? ஐ’ம் அ டிவோர்சி. ப்ளஸ் உங்களுக்கென்ன போச்சு? இது ப்ரைவேட் பார்ட்டி”, விரைப்பாக பதிலளித்தான் அவினாஷ்.
“ஹேய்… நான் உங்களைச் சொல்லலை அவினாஷ். பை த வே, நான் ஜெயசிம்மன், ஆஃப் சிம்மா பில்டர்ஸ். நீங்க கல்யாணம் செய்துக்க விரும்பறது என் மனைவியை. ஸோ இதுல எனக்குத்தான் முக்கியமான பங்கு. என்ன மிஸஸ். குமுதினி ஜெயசிம்மன் ?”, அவனது அழுத்தமான ஆளுமையான குரலில் தூக்கிவாரிப் போட்டது போல சிலிர்த்து அமர்ந்தாள் குமுதினி.
“குமுதினி? “, சற்றே குழப்பமாக அவினாஷ் அவளை நோக்க, “ம்ப்ச்…அந்த ஒரு வார கல்யாணம்? அது இவர்தான்”, என்று குமுதினி மொட்டையாகக் கூறினாலும் அவினாஷுக்கு புரிந்தது.
“ஹ்ம்ம்… எல்லாத்திலேயும் நேர்மையா இருக்கறவ, கண்டிப்பா அவ கல்யாணத்தைப் பத்தி சொல்லியிருப்பான்னு நினைச்சேன். ஆனா பாருங்க, எங்கிட்ட டிவோர்ஸ் வாங்காமலேயே நீங்க டேட் ஃபிக்ஸ் பண்ணதுதான் சர்ப்ரைசிங்”, என்னவோ கிரிக்கெட்டில் டீம் செலக்ஷனைப் பற்றிப் பேசுவது போல இலகுவாகப் பேசிக்கொண்டிருந்தான்.
இவர்கள் மூவரும் அமர்ந்திருப்பது அதற்குள் மற்றவர்களுக்கும் தெரிய, ஜெய்கிஷன், “சிம்மா சர்.. வாட் அ ப்ளெஷர்? அவினாஷ் தெரியுமா உங்களுக்கு?”, என்று அருகில் வந்தான்.
“குமுதினியை தெரியும். விஷ் பண்ண வந்தேன். வெல் நாளைக்கு காலையில் என் ஆஃபீஸ்ல பார்க்கலாம். சீ யூ அட் டென் ஷார்ப்”, என்றதோடு வெளியேறினான் ஜெயசிம்மன்.
அவனை முறைத்தவள், “ரிஜிஸ்டர் ஆஃபீஸ் எல்லாம் போகலை அவினாஷ். அதுகூட தெரியாதா எனக்கு? போறதா இருந்தது, பட் அதுக்குள்ள…”, என்று தோளைக் குலுக்கினாள்.
நெற்றியை தேய்த்தவன், “அப்ப இது லீகலா செல்லாதே, அதுவும் எட்டு வருஷமாச்சு. ஆனா அவன் எப்படி அவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்றான்?”
“நான் ஒன்னும் மறைஞ்சு ஒளிஞ்சு இல்லை அவினாஷ். அதுவும் இந்த லாஸ்ட் இரண்டு வருஷமா தமிழ் நாடு பூரா பாப்புலர்தான். இத்தனை நாள் இல்லாம இப்ப வந்து இப்படி பேசறதுதான் ஏன்னு தெரியலை. ஆனா அவன் எதுவும் ஜஸ்ட் லைக் தட் பண்றவன் இல்லை. நாளைக்கு நான் போய் பேசினாத்தான் என்ன நினைச்சிருக்கான்னு தெரியும்.”
“நீ ஏன் சொல்லலை குமுதினி? ஊர்ல காலேஜ் லவ், கல்யாணம். ஒரே வாரத்துல பிரிச்சு மிரட்டி அனுப்பிட்டாங்கன்னு சொல்லவும், உன் ஊர்ல யாரோன்னு நினைச்சேன். நீ இது பத்தி பேச விரும்பலைன்னு நானும் அதிகம் கேட்டுக்கலை.“, சற்றே குற்றம் சாட்டும் அவன் தொனியில் முறைத்தவள்,
“நீ இப்ப சொன்னது எல்லாமே உண்மை. அவன் என் ஊர்தான், காலேஜ்தான். அவன் அப்பாதான் மிரட்டி அனுப்பினார். இப்ப அவன் தொழில்ல பெருசா வளர்ந்து நிக்கறான். சோ வாட்? பேர் தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன மாறியிருக்கும்?”
உண்மைதான். அவினாஷிடம் பதில் இல்லை. ஆனால் கூகிள் ஜெமினியிடம் சில யூகங்கள் இருந்தது.