அடங்காத நாடோடி காற்றல்லவோ 11 1 18771 அடங்காத நாடோடி காற்றல்லவோ 11 அன்றிரவு திருப்பதி சென்றிருந்த ஈஷ்வரை பிக் அப் செய்ய காரோடு பல்லவி வீடு பக்கம் சென்ற விஷ்ணுவிற்கு மகா பேசினதே மூளையில் ஓடி கொண்டிருந்தது. “இப்போ ரொம்ப பிடிக்குதே..” அவள் சொன்னது திரும்ப திரும்ப காதில் ஒலித்தது. “உண்மையாவே அவளுக்கு என்னை பிடிக்குதா..?” முன் கண்ணாடி பார்த்தான். தாடி, மீசை, பரட்டை தலையாக தான் இருந்தான். “சும்மா சொல்லியிருப்பா.. அப்போவே என்னை அவளுக்கு பிடிக்காது, இப்போ போய் பிடிக்குமாக்கும், அதுவும் இப்படி இருக்கிற என்னை.. வாய்ப்பே இல்லை.. அதான் அவளே சொன்னாளே அத்தை மகனுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு, ம்ம்.. கொடுத்தா கூட ஓகே தான்..” உதடுகள் தானாக விரிந்தது. “டேய் விஷ்ணு என்ன இப்படியாகிட்ட, அந்த சிங்காரி உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு சொல்றா நீ சிரிக்கிற..? ஏன்.. என் மாமா மக தானே..? அவளுக்கு நான் உரிமைபட்டவன் தானே.. கொடுத்தா வாங்கிக்க வேண்டியது தானே..?” வாதாடி சிரித்தவன் முகம் அவள் கடைசியாக சொன்னதில் இப்போதும் சிவந்தது. “எவ்வளவு ஏத்தம் அவளுக்கு, நான் என்ன சொன்னா அவ என்ன சொல்றா.. தாங்கிப்பாளாமே..” அவன் முகம் அவனுக்கே தெரியாமல் மின்னி கொண்டிருந்தது. “ச்சு விஷ்ணு.. நீ அந்த அகங்காரியை நினைக்காத, அவ உன்னை மயக்குறா.. மயங்கி கியங்கி தொலைச்சிடாத..” கடிவாளம் உடைந்தது கூட தெரியாமல் இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறான். “என்ன இன்னும் ஈஷ்வரை காணோம்..” நேரம் பார்த்தவன் ரோடை பார்க்க, ஈஷ்வர் வந்து கொண்டிருந்தான். காரை திறந்து எறியவன் முகம் பார்க்க, மிகவும் சோர்வாக இருந்தான். “ஏன் இப்படி..? இதுக்கு பேசாம பல்லவியை தேடி கண்டுபிடிச்சுடலாமே..?” கேள்வியுடன் காரை எடுத்தான். வழியில் டீ கேட்க நிறுத்தி குடித்தவர்கள் வீடு வர, ஈஷ்வர் பெட்டில் விழுந்தான். என்னமோ அதிகம் பல்லவி நினைவு. “இன்னும் கொஞ்ச நாள்டி சீக்கிரம் உன்னை தேடி வந்துடுவேன்.. இந்த ஆப்பரேஷன் ரொம்ப கிரிட்டிகலா போகுது.. இப்படின்னு வெளியே தெரிஞ்சா உங்களுக்கு பாதுகாப்பு இல்லை, இருக்கிற இடத்துலே நீ பாதுகாப்பா இரு.. நான் வந்துடறேன்..” நினத்தபடி படுத்திருந்தவன் கண்கள் மேலிருந்த பேனை வெறித்தது. இன்று பார்த்த அவளின் அண்ணன் மகள் அதிகம் பல்லவியை நினைக்க வைத்தாள். “எங்களுக்கு பாப்பா இருந்திருந்தா அவளை மாதிரி இருப்பா இல்லை..” அவள் பாட்டி சொன்னது வேற கண்ணீரை வரவழைத்தது. “இத்தனை நேரம் அவளுக்கு எத்தனை பாப்பா வந்திருக்குமோ..?” “வரலையே.. வந்திருந்தா கூட என்னை விட்டு போயிருக்க மாட்டாளே.. அப்பாவே அவர் பேரன், பேத்தியை அப்படி விட மாட்டாரே..” நரசிம்மன் மேல் அப்போதும் ஒரு நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையும் உடைந்து போனதே. பல்லவியின் அண்ணன் ஈஷ்வர் என்று கூப்பிட்டதிலே தெரிந்தது அவனை தேடி வருவான் என்று. “வரட்டும் அப்படியாவது அப்பா சொல்வாரா அவ எங்க இருக்கான்னு.. ம்ஹூம்.. இன்னும் அவரை ஏன் ஈஷ்வர் நம்புற, நம்பாத, அவர் சொல்ல மாட்டார்..” உள்மனம் சொல்ல, ஈஷ்வர் மனைவியை நினைத்து கண்ணீரோடு தூங்கி போனான். மறுநாள் கங்கா கையில் உணவுடன் வர, நரசிம்மன் வந்துவிட்டார் மகனை பார்க்க. அவருக்கு மகனிடம் பல்லவி, பேத்தி பத்தி சொல்லிடலாமா என்ற எண்ணம் வந்துவிட்டது. ஆனால் பயம். பேத்தி இருப்பது தெரிந்தும் சொல்லவில்லை என்று மகன் சண்டையிட்டால், அது கூட பரவாயில்லை அவரை வெறுத்துவிட்டால்.. நினைக்கவே முடியவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு தைரியத்தில் வந்துவிட்டார். மகனோ இவர் வெளியே நிற்பது தெரிந்து உள்ளே கத்தி ரகளை செய்ய, இன்னும் அச்சம் கூடியது. அந்நேரம் சரியாக பல்லவி அண்ணன், அம்மா வர, நரசிம்மனுக்கு புரிந்து போனது சூழ்நிலை அவரை நெருக்குகிறது என்று. “நல்லது தான், பேத்திக்கு இன்னும் ரெண்டு நாள்ல பர்த் டே வருது.. இனியாவது அவங்க குடும்பமா இருக்கட்டும், நான் நினைச்சது தான் நடக்கல..” அவரின் ஐபிஸ் கனவு சிதைந்து போனதில் இப்போதும் மனதில் வெறுமை. அவர் நினைத்தது போல உள்ளே பரணி ஈஷ்வரிடம் கேட்டு கொண்டிருந்தான். “என் தங்கச்சியை எங்களுக்கே கொடுத்துடுங்க..” என்று. அவர்கள் பல்லவியை கேட்பார்கள் என்று ஈஷ்வருக்கும் தெரியும் ஆனால் அவன் ஏதோ கொடுமை காரன் போல பேசியது தாங்க முடியவில்லை. அதையும் அப்பா பார்த்து பேசாம இருப்பது இன்னும் வலித்தது. விஷ்ணு தோளில் முகம் புதைந்து அழுதுவிட்டவனுக்கு தன்னை தானே பிடிக்கவில்லை. வெளியே வர, பரணி அவர்கள் காதலை, என்ன ம*று காதல் என்றுவிட மொத்தமும் துடித்தது அவனுக்கு. பல்லவி மீதான காதலே அவன் வாழ்க்கையாக இருக்க, பரணி அப்படி பேசியது அவ்வளவு கோவத்தை கொடுத்தது. நானே பல்லவியை தேடி கொடுக்கிறேன்.. என்றுவிட்டான். “ஆனா அவ எப்படி உங்களோட வருவான்னு நானும் பார்க்கிறேன்.. ராத்திரில வீட்டை விட்டு துரத்திட்டு இப்போ அவங்க வீட்டு பொண்ணாம்..” அவர்கள் மேல் கோவம் பொங்க, அந்த நொடியே மனைவியை தேட ஆரம்பித்துவிட்டான். அதற்கு முதல் அவன் பேசியது சக்ரவர்த்தியிடம். இப்படி என்று சொல்லவும், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றார் அவர். “ஏன் மாமா..?” ஈஷ்வர் கேட்க, “நம்ம டீம் குணாக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரியும் இல்லை..” என்றார் அவர். “மாமா.. நான் பார்த்துகிறேன்.. இனியும் என்னால பல்லவியை தேடாம இருக்க முடியல, அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே.. பார்த்துக்கலாம்..” என்றுவிட்டவன் இரண்டாம் நாளே மனைவி, மகளை கண்டுபிடித்துவிட்டான். ஆனால் பல்லவியே பிரிந்து சென்றது, அனு இருப்பது எல்லாம் தெரிய, எப்படி தாங்குவான். அவன் படும் கஷ்டங்களை கூடவே இருந்த பார்த்த விஷ்ணுவிற்கு என்ன செய்து அவனை சமாதான படுத்த முடியும்..? பல்லவி, நரசிம்மன் செயல்கள் பிடிக்கவில்லை. “அப்படியென்ன என் ஈஷ்வரை விட அவங்களுக்கு அந்த ஐபிஸ் முக்கியமா போயிடுச்சு..” அவர்களை மனதில் காய மட்டும் முடிந்தது. உடனே கிளம்பி நேரிலே சென்றனர். பல்லவி கையில் அனுவை பார்க்க, ஈஷ்வர், விஷ்ணு இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதுவும் அப்பாவாக ஈஷ்வர் கண்கள் கலங்கி தான் போனது. “பார்த்துக்கோடா..” அவன் தோள் தட்டி தள்ளி சென்றுவிட்டான் விஷ்ணு. அவர்களை தொடர்ந்து மொத்த குடும்பமும் வந்துவிட அன்றே பல்லவி ஊர்க்கு திரும்பினாள். ஆனால் அம்மா வீட்டிற்கு. விஷ்ணுவாலே அதை ஏற்க முடியவில்லை. காருக்கு வந்த ஈஷ்வர் முகம் பார்த்தான். “எப்படி அமைதியா வந்துட்டான்..? நான் போய் கேட்டுடவா..?” விஷ்ணுவிற்கு துறுதுறுத்தது. “விஷ்ணு விடு.. எல்லாம் எங்க போயிடுவாங்க..” என்றான் ஈஷ்வர் புரிந்து முகம் இறுக. “எப்படிடா பல்லவி அந்த வீட்டுக்கு போறா..? என்னால இதை ஏத்துக்கவே முடியல..” அவர்கள் விஷயம் பேசாதவன் முதல் முறையாக தாங்காமல் பேசிவிட்டான். “நான் கூப்பிடலன்னு போறா போல.. போகட்டும்..” “என்ன நீ கூப்பிடுணுமா..? உன்னை கேட்டா பல்லவி வீட்டை விட்டு போனா..?” என்றவன் ஈஷ்வர் முகம் பார்த்துவிட்டு, “ம்ப்ச் விடு டென்சன்ல பேசிட்டேன், நீ உன்னை கஷ்டப்படுத்திக்காத, அடுத்து நமக்கு என்ன பிளான்..?” என்று கேட்டான். “சென்னை தான்..” என்ற ஈஷ்வர் காரில் இருந்து இறங்கி சென்று அனுவிற்கு மட்டும் சொல்லிவிட்டு காருக்கு வர, விஷ்ணு காரில் இருந்தே அனுவை பார்த்து கொண்டான். பல்லவி நேரே தாய் வீடு செல்ல, அன்றிரவு ஈஷ்வர் அங்கு கிளம்பிவிட சுப்ரமணியும் வீட்டிற்கு சென்றுவிட, விஷ்ணு தனியாக இருக்க முடியாமல் பீச்சிற்கு சென்றான். எப்படியோ ஈஷ்வர், பல்லவி, மகளுடன் ஒரு குடும்பமாக அமைந்ததில் அவ்வளவு நிம்மதி. பல்லவி மீதான ஈஷ்வரின் காதல் தெரிந்தவன் ஆயிற்றே. அலைகளின் ஓசையில் கரையோரமாக நடக்க ஆரம்பித்தான். பேண்ட் முட்டி வரை ஏற்றி விட்டிருக்க, முன் உச்சி முடிகள் காற்றில் பறக்க, அலைகள் காலை நினைக்க நினைக்க நடந்தான். மனதில் தனிமை இல்லை. வெறுமை இருந்தது. விரக்தி இருந்தது. சின்னு நினைத்து வேதனை, குற்ற உணர்ச்சி இருந்தது. வீட்டிற்கு சென்று அவனை பார்க்க மனம் துடியாக துடித்தது. ஆனால் அவன் உணர்வு இல்லாமல் படுத்திருப்பதை பார்க்க தைரியம் இல்லை. ண்ணா.. என்று கூப்பிடும் சின்னு தான் அவனுக்கு வேண்டுமே தவிர இப்படி அண்ணா என்பவன் உடன் இருக்கிறான் என்றே தெரியாமல் படுத்திருக்கும் சின்னு இல்லை. அவனை அவனால் பார்க்க முடியாது. தாங்க முடியாது முதலில். நான் இவ்வளவு தானா..? அவனுக்கே அவன் புதிது தான். போலீஸ் வரும் வரை அங்கு தான் இருந்தான். அதன் பிறகு பைக் எடுத்து கிளம்பிவிட்டான் ECR பக்கம். எவ்வளவு தூரம் சென்றானோ அவனுக்கே சோர்வாக இருக்க, பைக்கை வீட்டுக்கு திருப்பினான். மறுநாள் காலையிலும் சீக்கிரம் எழுந்துவிட, ஈஷ்வரை கூப்பிட சென்றான். நேற்றிரவு அவனை அங்கு விட்டு தான் பீச் வந்திருந்தான். ஈஷ்வரோ கையில் மகளுடன் வர, அதுவரை இருந்த மனநிலை மாறியது. அனுவை அவ்வளவு ஆசையுடன் பார்த்தான். அவள் ஈஷ்வரின் கைகளில் இருந்தபடி இவனை பார்க்க, இவனும் அவளை தூக்க முயற்சிக்கவில்லை. அவளே இப்போது தான் அப்பாவிடமே இருக்கிறாள். தானும் கேட்டு அவளை மிரள வைக்க மனதில்லை. “லவி தூங்கிட்டு இருந்தா, அதான் தூக்கிட்டு வந்துட்டேன்.. அவளுக்கு பசிக்குது போல விஷ்ணு..” ஈஷ்வர் சொல்ல, மூவரும் பக்கத்தில் உள்ள ஹோட்டல் சென்றனர். “என்ன கொடுக்கணும்டா..?” புது அப்பாவிற்கு தெரியவில்லை. “இட்லி சொல்லலாம் சாப்பிட்டா பார்ப்போம், இல்லை பால் ம்ஹூம்.. உன்னை மாதிரி உன் மகளுக்கும் பால் பிடிக்காது இல்லை..” விஷ்ணு கிண்டலாக சொல்ல, ஈஷ்வர் மலர்ந்த புன்னகையுடன் மகளை நெஞ்சோடு அணைத்தான். “நெருக்காதடா பேபிய..” விஷ்ணு பார்த்து அதட்டல் இட்டவன், இட்லி வரவும் கொடுக்க, அனு வாயை திறக்கவே இல்லை. “இப்போ என்னடா பண்ண..?” ஈஷ்வர் மகள் பசியில் இருக்கவும் கவலையுடன் கேட்டான். “பல்லவி கொடுத்து பழக்கம்டா, அதான்.. விடு.. வீட்டுக்கு போயிடலாம்..” என்று அவர்களுக்கு வந்த காபி எடுக்க, அனு அதையே பார்த்தாள். “செல்லத்துக்கு காபி வேணுமா..?” விஷ்ணு அவள் முகம் பார்த்து கொஞ்சலாக கேட்க, ஈஷ்வர் காபியை மகளுக்கு ஆற வைத்து கொடுத்தான். அவள் குடித்து முடிக்கவும் மூவரும் வீட்டிற்கு சென்று அனுவை பல்லவியிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர். சக்ரவர்த்தி ஈஷ்வரை பார்க்க கூப்பிட, அவன் ஷாப்பிங் போறேன் என்று கிளம்பிவிட்டான். நேற்று போல இன்றும் மகளுக்கு ஏதாவது வாங்குவான் போல என்று விஷ்ணு வீட்டிலே படுத்துவிட்டான். “என்ன ஆச்சு ஈஷ்வர் நாள் போயிட்டே இருக்கு.. என்ன ஸ்டேட்டஸ்..?” மேலதிகாரியாக கேட்டார். “சார்.. அவனை நெருங்கிட்டோம், ஆனா அவனுக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை.. அதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டிருக்கோம்..” என்றான் ஈஷ்வர்.