“சொன்னா புரிஞ்சிக்கோணும்… முன்ன மாதிரி முறுக்கிட்டு திரிஞ்சா என்ற மருமவளுக்குத் தான் சங்கடம். உன்ற ஆசைக்காக மருமவளை வாட்டாத…” என்று பழனிவேல் நடுவீட்டில் அஞ்சனிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்க, அவனோ அலட்சியமாய் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.
“பெரியவனே நீயாது உன்ற தம்பிக்கு புரியுற மாதிரி எடுத்துச் சொல்லு.” என்று பெரிய மகனிடம் சரணடைந்தார்.
தந்தை சொல் பேச்சை தட்டாத பெரிய மகன், “அஞ்சு அப்பா சொல்றது சரிதான… கண்ணால அலைச்சல்ல ரெண்டு பேருமே சோர்வா தெரியுறீங்க. இப்போ பைக்ல தான் போயாகணுமா? நான் கார் சொல்லி இருக்கேன். வந்துடும் ராகுகாலம் முடிஞ்சதும் கிளம்புங்க.”
“எப்போதும் நீங்க சொல்றதுதான் நடக்கணுமா? என்ற விருப்பத்துக்கு குறுக்கால வர்றதே வேலையா போச்சு உங்க எல்லாருக்கும்.” என்று பொரிந்தான் அஞ்சன்.
“அப்படியில்லை அஞ்சு… சரி வுடு… நீ மட்டும் முடிவு எடுக்காம ஒரு வார்த்தை கீர்த்தியையும் கேளு.” என்று சமரசம் பேச நுழைந்தான் குருநாதன்.
“எங்கூட எப்டினாலும் எங்கண்ணு வரும்… நீங்க என்ற விஷயத்துல மூக்கை நுழைக்காதீங்க…” என்று கீர்த்தியின் முடிவையும் தானே எடுத்து நகர,
அந்நேரம் வரை அமைதியாய் இருந்த கீர்த்தி, “கார்லையே போலாம்.” என்றிருந்தாள்.
அவளின் பதிலில் அஞ்சனின் நடை நின்று முகம் சுருங்கி இறுகியது. எதுவும் சொல்லாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
குருநாதன், “கிளம்புங்கமா… கார் வந்துடும்.” என்று கீர்த்தியை அனுப்பி வைக்க, தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள் கீர்த்தி.
உள்ளே நுழைந்ததுதான் தாமதம் அவளை நெருங்கிய அஞ்சன், “நான் சொல்றதை நீ கேப்பேனு சொல்லிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு குறுக்கால வர… அம்புட்டு பேரையும் நான் சமாளிச்சிட்டு இருக்கேன். என்ற விருப்பத்தை நீகூட புரிஞ்சிக்க மாட்டியா? அவனுங்க முன்னால என்னை மறுத்துப் பேசுற…” என்று எகிறியவன் கீர்த்தியின் அதிருப்தியான முகம் கண்டு நிதானித்து,
அவனுக்கு குறையாத கோபத்துடன் நீட்டிய அவன் விரலை பட்டென்று தட்டி விட்டவள், “என்னை பத்தி யோசிக்காம நீங்கபாட்டுக்கு முடிவு எடுப்பீங்க நான் அதை ஏத்துக்கணுமா?” என்று சண்டைக்கு நின்றாள்.
“அப்படி என்ன முடிவு எடுத்துப்போட்டேன்னு அக்கப்போரு பண்ணுறவ? இப்போதான் என்ற கூட நல்லா பேசி பழகுற… பைக்ல போனா நல்லா இருக்கும்னு நினச்சேன்.” என்று பதில் சண்டை போட்டான் அவன்.
மறுவீட்டு அழைப்பிற்கு பைக்கில் தான் செல்வோம் என்று அஞ்சன் அடம் பிடித்து நிற்க, அவன் பைக்கில் செல்ல விழையும் காரணம் அறிந்த பெண்ணவள் அக்காரணத்திற்காகவே அதை மறுத்தாள்.
“எனக்கு சோர்வா இருக்கு… பைக்ல அவ்வளவு தூரம் வர முடியாது.” என்று காரணம் தேடிப்பிடித்து கீர்த்தி மறுக்க, அஞ்சன் முகம் சுருங்கினாலும் விடாது,
“என்ற தோள்ல சாஞ்சி தூங்கிட்டு வா கண்ணு. நான் மெதுவா ஓட்டுறேன். ஒரு மணி நேரந்தானே!”
“ம்ச் சொன்னா புரியாதா? அப்படி என்ன பைக்ல போயே ஆகணும்னு இம்சை பண்றீங்க?” என்று கத்தியே விட்டாள் கீர்த்தி.
“என்ன கண்ணு நீ! இப்போ வேன்ல தானே வந்தோம். அதான் பைக்ல போனா அப்படியே கொஞ்சம் பேசி பழகி சிரிச்சி உரசி போலாம்னு பாத்தா இம்புட்டு கோவப்படுற?” என்று அவன் இதழிடுக்கில் முணுமுணுத்தாலும் அது அவளுக்கு நன்றாகவே கேட்டது.
அவன் எண்ணம் அதுதான் என்று தெரிந்தாலும் அதை வாய்மொழியாய் கேட்கும் போது அவள் இதயம் நின்றுத் துடித்தது.
ஒன்றும் சொல்லாமல் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாய் இருக்க, சில நொடிகள் கீர்த்தியின் முகத்தை பார்த்த அஞ்சன் தான் அவளுக்காக இறங்கி வர வேண்டி இருந்தது.
காரில் ஏறியதும் கீர்த்தி கண் மூடி இருக்கையின் பின் சாய்ந்துவிட, அவளை நெருங்கி அமர்ந்த அஞ்சனோ அவள் விழி மூடி சாய்ந்தமர்ந்த தோரணையில் சோர்வாய் இருக்கிறாள் என்றெண்ணி அப்படியே தள்ளி அமர்ந்துவிட்டான். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் கீர்த்தியின் வீட்டை நெருங்க, அஞ்சன் அவள் தோள் தட்டி எழுப்பினான்.
அவனின் தொடுகையில் பயந்து விழித்தவள் நிமிர்ந்து அமர்ந்து தலையை ஒதுக்க, “நாந்தான் கண்ணு பதறாத.” என்று கைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
மெல்ல அவன் பிடியிலிருந்து தன் கையை உருவிக்கொண்ட கீர்த்தி ஜன்னல் புறம் திரும்பி பார்வையை வெளியே பதிக்க, அவளிடமே பார்வை பதித்திருந்தான் அஞ்சன்.
“என்ன அமைதியா இருக்க? கோவில்ல அப்படி பேசுன கண்ணு..” என்று ஏக்கமாய் பேச்சை துவங்கி அஞ்சன் சற்று நெருங்கி அமர, வீட்டுக்கு சீக்கிரம் சென்றுவிட மாட்டோமோ என்று எக்கி எக்கி ரோட்டை பார்த்தாள் கீர்த்தி.
“ம்ச்… இன்னும் அஞ்சு நிமிஷத்துல வூட்டுக்கு போயிடுவோம்… அதுக்குள்ள ஏதாவது பேசுவேன்னு பார்த்தா…” அவனும் எவ்வளவு முயன்றும் அவளிடம் எதிர்வினை வரவே இல்லை அவளின் வீடு தான் வந்தது.
வீட்டுக்கு வந்ததும் முதல் ஆளாய் கீர்த்தி காரிலிருந்து இறங்கி ஓட சுணக்கத்துடன் பின்னோடே இறங்கி வந்தான் அஞ்சன். ஆர்வமாய் உள்ளே நுழையப்போன கீர்த்தியை கமலம் தடுத்து அஞ்சனுடன் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து புது மணமக்களை உள்ளே அழைத்துக் கொண்டார்.
வீட்டினுள் நுழைந்த நொடி கீர்த்தி அங்கிருந்த அறையினுள் செல்ல, அவள் கை பிடித்து நிறுத்திய கமலம், “எங்க ஓடுற… மாப்பிள்ளையோட உக்காந்து பேசிக்கிட்டு இரு.” என்க, அஞ்சன் முகம் பிரகாசமாகியது.
அவளின் தாய்மாமா குடும்பம் வேறு அங்கிருக்க எதுவும் சொல்ல முடியாமல் கீர்த்தி அஞ்சன் அருகில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
“என்ற மாமியாரே சொல்லிட்டாங்க… இப்போ நீ பேசித்தானே ஆகாணோம்.” என்று கீர்த்தி புறம் லேசாய் குனிந்து அவள் காதில் சொல்ல, அஞ்சனுக்கு ஒரு முறைப்பை பரிசளித்தவள் உர்ரென்று முகத்தை சுருக்க, அதற்கு மேல் அவன் பேச முடியா வண்ணம் கீர்த்தியின் மாமா அஞ்சனிடம் பேச்சு கொடுக்க, ஆசுவாசப் பெருமூச்சு கீர்த்தியிடம்.
அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்க அமைதியாய் நழுவி தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் பெண்ணவள். கமலம் மகள் மீதே பார்வை வைத்திருப்பார் போலும்… பின்னோடே வந்துவிட்டார்.
வந்ததும் கேள்விகள் பாய்ந்தது, “ஏன் மாப்பிள்ளைகிட்ட முகம் கொடுத்து பேச மாட்டேங்குற? எனக்கென்னனு உக்காந்து இருக்க… நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு கூட இருந்து என்ன வேணும்னு எதுவும் கேக்க மாட்டியா? அவரை தனியா விட்டுட்டு வர?”
“நான் கேக்கலைனா நீங்க அப்படியே கவனிக்காம இருந்துடுவீங்க?” குற்றம் சாட்டும் பார்வை மகளிடம். பின்னே வந்ததும் மாப்பிள்ளைக்கு பழரசம், காபி, இனிப்பு என்று விரும்தோம்பல் கவனிப்பு பலமாய் இருந்ததே.
“இப்படி இடக்கா பேசுனா என்ன அர்த்தம்? இன்னும் அருணை நினைச்சிக்கிட்டு மாப்பிள்ளையை தள்ளி வச்சிருக்கியா?” என்று கமலம் ஒரு வேகத்தில் கேட்டுவிட, மகளும் அதே போக்கில்,
“உன் மாப்பிள்ளை அப்படியே தள்ளி இருந்துட்டாலும்… எப்போ திண்ணை காலியாகும் வந்து படுக்கலாம்னு இருக்கான்.” என்றிட, கமலம் மகள் பேச்சில் அதிர்ந்தார்.
“என்ன பேச்சு பேசுற? தெரிஞ்சுதான் பேசுறியா?” என்று மகள் முதுகில் ஒரு அடி வைத்தார்.
“கிறுக்குத்தனமா ஏதாவது பேசி உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத… எல்லாம் புரிஞ்சி ஒத்துக்கிட்டு தான் கல்யாணம் பண்ணி இருக்க. பழசை நினைச்சி உனக்கு அமைஞ்சி இருக்குற வாழ்க்கையை கெடுத்துகிட்டா அதுக்கு முழு பொறுப்பு நீதான். பாதிக்கப்படப்போறதும் நீதான்…”
“சும்மா நான் ஒத்துக்கிட்டேன்னு சொல்லாத… நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டே ஆகணும்ங்குற நிலைமைக்கு என்னை தள்ளுனது நீயும் உன் அண்ணனும் தான்.” என்று சீறினாள் பெண்.
“நாங்க தள்ளுனோமா? இது எல்லாத்தையும் ஆரம்பிச்சு வச்சது நீ.”
ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டு குற்றம்சாட்டும் பார்வையை சரமாரியாய் வீசிட, கண்டிப்புடன் வந்தார் கமலத்தின் அண்ணன்.
“அம்மாவும் பொண்ணும் இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்கீங்க… மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும் நீ வா கமலா…” என்று தங்கையை தன்னுடன் அழைத்துக் கொள்ள, அஞ்சன் அறைக்கு வந்தான்.
அஞ்சனைக் கண்டதும் கீர்த்தி வெளியேற முனைய, அவள் கைப்பிடித்து நிறுத்தியவன், “சோர்வா இருக்குனு சொன்னீல்ல ரெஸ்ட் எடுக்கலாம் வா கண்ணு.”
அவன் அழைப்பும் பிடியும் எரிச்சல் உண்டாக்க முயன்று தன்னை கட்டுப்படுத்தியவள் அவன் கையை விலக்கி, “நான் கார்லையே தூங்கிட்டேன். நீங்க ரெஸ்ட் எடுங்க… நான் அம்மாகிட்ட போறேன்.” என்று நகர,
“அப்போ நானும் வரேன்…” என்று பின்னோடே அவனும் கிளம்ப, எரிச்சலை அப்பட்டமாய் விழிகளில் வெளிப்படுத்திய கீர்த்தி வார்த்தைகளிலும் அதை இடைச்சொருகினாள்.
“குட்டி போட்ட பூனையாட்டம் என் பின்னாடியே சுத்திட்டு இருக்கீங்க… என்னை ப்ரீயா விடமாடீங்களா?”
“குட்டி போட வைக்கலாம்னு தான் பின்னாடியே வாரேன்.” என்று அவளை அருகில் இழுத்திருந்தான்.
‘என்ன?’ கீர்த்தி அதிர்ந்து விழிக்க, நேரத்தை விரயம் செய்ய விரும்பாத அஞ்சன் அவள் கன்னத்தை மென்மையாய் பற்றி நெற்றியோடு நெற்றி முட்டி பின் அதில் அழுந்த முத்தமொன்று இட்டு அடுத்து அவள் இதழில் சங்கமிக்க, அவன் உதடுகள் தன்னிதழில் உரசிய நொடி அவனை தள்ளிவிட்டு வெளியே ஓடி இருந்தாள் பெண்.
இம்முறையும் தன்னவளுக்கு வெட்கம் என்று சரியாக தவறான காரணத்தை கற்பித்துக் கொண்டு அங்கு கீழே விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் பொத்தென்று விழுந்தான்.
அகத்தில் அகமுடையாளின் அருகாமையும் அது தந்த சிலிர்ப்பும் இதத்தை பரப்ப, சட்டையின் மேல் இரண்டு பட்டனை கழற்றி விட்டான். மனையாள் தெளிந்துவிட்டாள் இனி எல்லாம் சுகம் என்று குழைந்து எண்ணிய மனது அந்நாளின் இரவை எதிர்நோக்கத் துவங்கியது. ஆனால் அதற்கு வேட்டு வைக்கும் விதமாய் அன்றும் முழுதும் அவனிடம் தனிமையில் சிக்காமல் போக்கு காட்டியவள் மாலை ஆனதும் அழுது கரைந்தாள்.
“அழாத கீர்த்தி… விருந்து எல்லாம் முடிஞ்சதும் ஒரு வாரம் போல இங்க தஙகிட்டு போகலாம். இப்போ கிளம்பு மாப்பிள்ளை நிக்குறாரு பாரு…” தன்னை கட்டிப்பிடித்து அழும் மகளை தன்னிடமிருந்து பிரித்து அவள் கன்னத்தை கமலம் துடைத்துவிட,
“அடுத்த வாரம் வரலாம் கண்ணு.” என்றான் அஞ்சனும் சமாதானமாய்.
வழிந்த நீரை புறங்கையால் துடைத்த வண்ணம், “இரண்டு நாள் இருந்துட்டு போறேனே.” என்ற வேண்டலுடன் அஞ்சன் முகத்தைத்தான் பார்த்தாள்.
அவள் அப்படி வேண்டலுடன் பார்க்கவும் அஞ்சனுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
“கீர்த்தி இங்க இருக்கட்டும் நான் நாளைக்கு வந்து அழைச்சிட்டு போறேன்.” என்று விருப்பமே இல்லாமல் அவன் வாக்கு கொடுக்க, கீர்த்தியின் முகம் ஆனந்தத்தை தத்தெடுத்தது. அதற்கு ஆயுள் குறைவென்று அடுத்த நொடியே புரியவும் செய்தது கீர்த்திக்கு.
“ஐயோ கெட்டுது சங்கதி. அவ ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பேசுறா… கல்யாணமான ரெண்டாவது நாளே பிரிஞ்சி இருக்குறது எல்லாம் கூடாது மாப்பிள்ளை. நீங்களும் இங்கேயே தங்கிடுங்க… நான் அப்பாகிட்ட பேசுறேன்.” என்ற அவள் மாமனின் பேச்சில் கீர்த்தியின் முகம் விழுந்தது என்றால் அஞ்சனின் முகம் மலர்ந்தது.
“டிரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையே.” என்று அஞ்சன் ஒரு நொடி தயங்க,
“புதுசு வாங்கிக்கலாம் மாப்பிள்ளை… ஒன்னும் பிரச்சனையில்லை…” என்று மகளுக்கு சிக்கலை இழுத்துவிட்டார் கமலம்.
“அப்போ நாங்க கிளம்புறோம்… நாளைக்கு வேலை இருக்கு.” என்று சற்று நேரத்தில் அவள் மாமன் குடும்பமும் கிளம்பியது.
இரவு உணவு முடித்து அஞ்சன் அறைக்குச் சென்றுவிட, கீர்த்தி வேலை செய்வது போல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள்.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படி குட்டி போட்ட பூனையாட்டம் சுத்திட்டே இருக்க போற?” என்ற கமலத்தின் கேள்வியில் திடுக்கிட்டு நின்றாள் கீர்த்தி.
அன்னையின் பேச்சில் அஞ்சன் சொன்னது வேறு நினைவு வந்து இம்மசிக்க, எரிச்சலானவள், “குட்டி போட்ட பூனை மட்டும் தான் சுத்திட்டு இருக்குமா? கோழி கூட தன் குஞ்சை அடைகாக்கும்.” என்றாள்.
“எப்படி இப்போ நீ உன் பழைய காதலை அடைகாத்துட்டு இருக்குற மாதிரியா?” என்று மகள் அருகில் வந்து மெல்லிய குரலில் அதே நேரம் அழுத்தமாய் கேட்க, அன்னையை சந்திக்க முடியாது திணறி நின்றாள் கீர்த்தி.
“இன்னும் எத்தனை நாளைக்கு அவன் துரோகம் பண்ணிட்டானு அழுதுகிட்டே இருக்க போற? அழுறதால என்ன கிடைக்கும்னு நினைக்குற?”
அன்னையின் கேள்விக்கு மகளிடம் பதில் இல்லை.
“மாப்பிள்ளையை தள்ளி வைக்குறதால உன் வாழ்க்கை தான் வீணாப்போகும் கீர்த்தி. அவரை தள்ளி வைக்கறதுக்கு பதில் உன்னோட கடந்தகால வலியை தள்ளி வச்சிட்டு மாப்பிள்ளை கூட பழகு. இதுவரைக்கும் எப்படியோ ஆனா நீ நடந்துகிற ஒவ்வொரு செயலுக்கும் இனி சந்தோசப்படப்போறதோ பாதிக்கப்படப்போறதோ எல்லாமே மாப்பிள்ளை தான். அவரை பாதிச்சா அது உன்னையும் பாதிக்கும் கீர்த்தி. அவரோட கோபம், ஏக்கம், குழப்பம் எல்லாம் ஏதோ ஒரு வடிவத்துல உன் பக்கம் தான் திரும்பும். புரிஞ்சிக்க முயற்சி பண்ணு.” என்று மகளுக்கு கொட்டு வைக்காத குறையாய் புரிய வைக்க முயன்றார்.
ஆனால் எதற்குமே மகள் அசைந்து கொடுக்கவில்லை.
“நீ இப்படி ஊமைக்கொட்டானா இருக்குறது எனக்கே கடுப்பாகுது. ஒழுங்கா உள்ள போ.” என்று அந்த ஒற்றை அறையினுள் கிட்டத்தட்ட மகளை தள்ளியே விட்டார்.
“ம்ச்… அவரே பரவாயில்லை போல… விடு என்னை.” தாயின் கையை உதறி தானே உள்ளே சென்று கதவடைத்தாள் கீர்த்தி.
“எம்புட்டு நாழியா உனக்காக காத்திருக்கிறது கண்ணு?” என்ற வினாவில் திரும்பியவளுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த சிறிய ஒற்றை அறை முழுதும் பன்னீர் ரோசா இதழ்கள் சிதறிக் கிடக்க, மெத்தையின் அருகில் பூக்கவருடன் நின்றிருந்த அஞ்சன் கண்ணில் பட்டான். மெத்தையில் இதழ்கள் கொண்டு இதயம் வரைந்து கொண்டிருந்தான் போலும் அவள் வரவும் பையோடு எழுந்திருந்தான். பூ அலங்காரத்தையும் அவனையும் அதிர்வுடன் அவள் மாறி மாறிப் பார்க்க,
என்னை மாதிரி உனக்கும் ஆசை அக்கறையெல்லாம் இருக்கும்னு காலையிலேயே கோவில்ல நீ தெளிவா காட்டிட்டியே கண்ணு…” என்று அஞ்சன் புன்னகைத்து நிற்க, தான் செய்த மடத்தனத்தின் உச்சம் புரிந்தது மனைவிக்கு.
தாமதமாய் புரிந்து என்ன பயன்? கணவன் அதற்குள் நெருங்கி அவளை அணைத்து பிடித்தப்படி மெத்தையில் சாய்த்திருந்தான்.