Advertisement

சத்ரிய வேந்தன் – 03 தாமரைக்குளம்
மருத கோட்டையின் நடுவினில் கம்பீரமாய் வீற்றிருந்தது மருத தேசத்தின் அரண்மனை. அரண்மனையின் முன்வாயிலில் இருந்து பார்ப்பவருக்கே அதன் பிரமாண்டம் வாயை பிளக்க வைப்பதாக இருக்கும். பலவகை மாட மாளிகைகள், பிரமாண்டமாய் வீற்றிருக்கும் அரசவை அரண்மனை, ஆங்காங்கே அமைந்திருந்த தோட்டங்கள் என பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பினில் ஆழ்த்திவிடும்.

மருத தேசத்து அரச குடும்பத்தினர் வாழும் மிகப்பெரிய அரண்மனை நடுவினில் வீற்றிருக்க, அதனை சுற்றிலும் பல மாட மாளிகைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புடன் அமைந்திருக்கும். அரண்மனையிலிருந்து தென்புறத்தில் ஒரு கோடியில் அமைந்திருந்தது அந்தப்புரம்.

அந்தப்புர மாளிகை முற்றிலும் பளிங்கு கற்களினால் கட்டப்பட்டு இருந்தது. அந்தப்புரத்தின் நடுவே ஒரு பிரமாண்ட தோட்டம் அமைந்திருந்தது. அந்த தோட்டத்தில் அனைத்து விதமான மலர்களும் நிறைந்து இருந்தது. அந்த தோட்டத்திலிருந்து வந்த மலர்களின் நறுமணம் அந்தப்புரம் எங்கும் பரவி அங்கே இருப்போர் அனைவரையும் மகிழ்ச்சியான சூழலில் வைத்திருந்தது.

பல நாட்டு அரச குடும்பங்கள் வைகாசி திருவிழாவினை ஒட்டி மருத அரண்மனைக்கு வருகை தந்து இருந்ததால், அந்தப்புரத்தினில் இளவரசிகள் பெரும்பாலானோர் குழுமி இருந்தனர்.

இளம் பிராயாயத்தில் இருக்கும் பெண்கள் ஒன்று கூடும் பொழுது கலகலப்பிற்கு பஞ்சம் உண்டோ? அங்கேயும் கேலிகளும் சீண்டல்களுமாய் அந்த இடமே மிகுந்த கலகலப்புடன் இருந்தது. அனைவரும் அன்று நடந்த வைகாசி திருவிழாவின் தொடக்க விழாவினைப் பற்றியும், வரப்போகும் இரண்டு தினங்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும், அன்று காலையில் நடந்த வில்வித்தையை பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

பேச்சு தீட்சண்ய மருதரைப் பற்றி வந்ததும், அவருடைய புகழ் பாட தொடங்கி விட்டனர். ‘என்ன ஒரு வீரம்? எத்தனை தன்னடக்கம்?’ என்று வியந்தபடி பெரும்பாலானோர் பேசிக்கொண்டிருக்க, எப்பொழுது பேச்சினை மாற்றுவார்கள் என்று நிலைகொள்ளாமல் தவித்தது ஒரு உள்ளம்.

தோகையினி, பெயருக்கு ஏற்றார் போலவே தோகை விரித்தாடும் வண்ண மயில். வேங்கை நாட்டு மன்னர் தசர வேந்தரின் இளைய மகள். தசர வேந்தரின் மனையாள் சுபமித்திரை பரத நாட்டியத்தின் மீது கொண்ட அளவுகடந்த விருப்பத்தின் பெயரில் தமது மகளுக்கு தோகையினி என பெயரிட்டார். அதே ஆர்வத்தோடு சிறிய வயதினில் இருந்தே மகளுக்கு நாட்டிய பயிற்சியும் வழங்கப்பட்டது. அன்னைக்கு இருந்தது போலவே தோகையினிக்கும் இயல்பிலேயே நாட்டியத்தில் ஆர்வம் இருக்க அவளும் விரும்பி கற்றுக்கொண்டாள்.

தோகையினி முறைப்படி பரதம் பயின்று முடித்து சில மாதங்கள் முடிந்து இருந்தது. அவள் பயின்று முடித்ததுமே, அவளுடைய அரங்கேற்றத்திற்காக நாள் குறிக்கலாம் என்றபொழுது வேங்கை நாட்டு மன்னர் தசர வேந்தர், வைகாசி திருவிழாவின் பொழுது அரங்கேற்றத்தை வைத்துக் கொள்வோம் என்று கூறிவிட்டார்.

நாளை முதன்முறையாக தோகையினியின் அரங்கேற்றம் நடைப்பெற போகிறது. தோகையினிக்கு நாளை மேடை ஏறப்போகும் பதற்றம் சிறிதும் இல்லை, மாறாக அந்த நொடிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தாள் என்பதே உண்மை.

இப்பொழுது மற்ற நாட்டு இளவரசிகளுடன் அந்தப்புரத்தில் அமர்ந்திருப்பவளுக்கு, தீட்சண்ய மருதரின் புராணம் சற்றே சலிப்பைத் தட்டியது. அதற்கான மிக முக்கிய காரணம் காலையிலிருந்தே அவள் செவியில் ஒலிப்பது அவருடைய புராணங்கள் மட்டுமே.

என்னதான் அவர் முதன்முதலில் சிவன் கழுத்தினில் மாலையை சூட்டியவராக இருந்தாலும், அவர் மட்டும்தானா அதனை சாதித்தார்? அதன் பிறகு சில இளவரசர்கள் கூட அதனை சிறப்புடன் செய்தனர். அதற்காக அனைவரும் அவரை மட்டும் புகழோ புகழோ என்று புகழ்வது அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.

ஒரு மனம் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்க, இன்னொரு மனம் காலையில் அவர் மாலையை சிவனுக்கு சரியாக எய்திய பிறகு, அங்கு கூடியிருந்தோர் அனைவரும் அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும், அத்தனை கரவோஷங்களுக்கும் லேசான தலையசைப்போடு, மிகவும் தன்னடக்கத்தோடு வெற்றியின் தடத்தை முகத்தில் ஏற்றாமல் சாந்தமாய் நின்றவரை நினைக்க இப்பொழுதும் பிரமிப்பாக இருந்தது.

இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசர் இத்தனை தன்னடக்கத்தோடும், எளிமையோடும் இருக்க முடியுமா? என்பதை எண்ண எண்ண வியப்பே மேலோங்கியது.

தோகையினியின் மனம் இவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே, ‘என்ன இது இவர்கள் அனைவரும் பாடும் பாட்டு போதாதென்று நீயும் அதே பாட்டை பாடுகிறாயே!’ என முயன்று தன் மனதினை அடக்கி அங்கிருந்த மலர்களின் மீது மனதை படரவிட்டாள்.

தோகையினிக்கு இயல்பிலேயே மலர்கள் என்றால் அலாதி பிரியம். மருத அரண்மனை முழுவதும் இருந்த மலர்த்தோட்டங்களை பார்க்க பார்க்க அவளுக்கு தெவிட்டவில்லை. இங்கு வந்த மூன்று தினங்களில், தினமும் அவள் தங்கி இருக்கும் விருந்தினர் மாளிகையின் எதிரினில் உள்ள மலர் தோட்டத்தில்தான் பெரும்பாலான மாலைப் பொழுதினை கழிப்பாள். அப்படியே அங்கே இருக்கும் மல்லிகை மலர்களையும் அவள் கையால் பறித்து பணிப்பெண்களிடம் கொடுத்து அவள் சூடுவதற்கு கட்டி தர சொல்லுவாள்.

பணிப்பெண்கள் பலமுறை தாங்களே பறித்து தருவதாக கூறினாலும் அவள் மறுத்து விடுவாள். என்னவோ அவள் கைகளினால் மலர்களைப் பறிப்பது கூட அவளுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

இப்பொழுது கூட அவள் கூந்தலில் சூட்டி இருந்த மல்லிகையின் மணம் இதமான ரம்மியமான சூழலை தந்தது. அவள் சூடி இருந்த மலர்களின் மணத்தை விடவும் அந்தப்புர தோட்டத்தில் பூத்துக் குலுங்கி கொண்டிருக்கும் மலர்களின் மணம் மேலும் மேலும் இதத்தினை தந்தது. தோகையினி அந்த இதத்தினில் லயித்திருக்க, இளவரசிகள் குழுமியிருந்த இடத்தை நோக்கி சமுத்திர தேவிகை வந்தார்.

அப்பொழுதே இளம் பிரயாயத்தில் அடி எடுத்து வைக்கும் இளவரசி சமுத்திர தேவிகை, அங்கிருந்தோர் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டிருந்தார். மிகவும் அழகாகவும், வயதுக்கு மீறிய திறமையுடனும், அறிவுடனும், துறுதுறுவென துள்ளித்திரிபவளை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்?

சமுத்திர தேவிகை பிரசன்னமான பிறகு அங்கே கலகலப்பு மேலும் கூடியது. அனைவரிடமும் நலம் விசாரித்து பெரிய மனித தோரணையோடு பேசுபவளை அனைவரும் ரசனையோடு பார்த்தனர். அங்கிருந்த பலருக்கும் சமுத்திராவை சிறு வயதினிலிருந்தே தெரியும் என்பதினால், இப்படி பெரிய பெண் தோரணையோடு பேசுவதை பெருமிதத்தோடு பார்த்தனர்.

“என்ன எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். நேற்றே இன்றைய பொழுதுக்கான விளையாட்டை கூறி இருந்தேன் அல்லவா…?” என்றாள் சமுத்திரா.

“நாங்கள் உனக்காகத்தான் காத்திருக்கிறோம் சமுத்திரா. நீ வருவதற்குத்தான் தாமதமாகி விட்டது” என்றாள் ஒரு இளவரசி.

“ஆகட்டும் அக்கா நான்தான் வந்துவிட்டேன் அல்லவா? இன்றைய விளையாட்டினை தொடங்குவோம். நான் நேற்றே கூறியதைப் போன்று உங்கள் அனைவரின் கண்களையும் கட்டிவிட்டு அரண்மனையின் வெவ்வேறு இடங்களில் விட்டுவிடுவேன். நீங்கள் அனைவரும் திரும்பி இதே இடத்திற்கு சரியாக வந்துவிட வேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவரே வெற்றியாளர்” என இதழ்களோடு விழிகளும், விரல்களும் பேச, தான் சொல்ல வந்ததை கூறியிருந்தாள்.

“அது சரி சமுத்திரா. என்னதான் நாங்கள் ஒவ்வொரு வருடமும் இங்கே வருகிறோம் என்றாலும் இவ்வளவு பெரிய அரண்மனை வளாகத்தில் கிழக்கு, மேற்கு கண்டு பிடிப்பதே பெரும் சிரமம் போல. இதில் எங்களால் சரியாக வழி காண முடியாமல் போனால் என்ன செய்வது?” என தங்கள் சந்தேகத்தை முன் வைக்க,

“நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அப்படி உங்களால் வழி கண்டு கொள்ள இயலாவிட்டால், உங்கள் அருகினில் அமைந்திருக்கும் மாளிகையில் பணிபுரியும் பணிப்பெண்களின் உதவியோடு அந்தப்புரத்தையோ, விருந்தினர் மாளிகையையோ அடைந்து விடுங்கள்” என சந்தேகம் போக்கினாள் சமுத்திர தேவிகை.

“ஆகட்டும் சமுத்திரா விளையாட்டினை தொடங்குவோம்” என அனைவரும் உற்சாகமாகி விட,

அதன்பின்னர் அங்கிருந்த இளவரசிகளின் கண்களை கட்டிவிட்டு, பணிப்பெண்களிடம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தினில் விட சொல்லி சமுத்திரா கூறி விடவே, பணிப்பெண்களும் இளவரசிகளோடு அரண்மனையின் வெவ்வேறு இடத்திற்கு சென்றனர்.

தோகையினியை அழைத்துச் சென்ற பணிப்பெண் அவளை வடகிழக்கு பகுதியில் ஒரு மாளிகையில் விட்டுவிட்டு, அவளுக்கு வந்த திசை தெரியக்கூடாது என்பதற்காக அவளை ராட்டினமாய் சுற்றிவிட்டு அதன் பிறகு திரும்பி வந்துவிட்டாள்.

பணிப்பெண் சென்ற பிறகும் தன்னை நிதானப்படுத்தவே தோகையினிக்கு சிறிது நேரம் ஆனது. அதன்பிறகு தனது கண்கட்டினை விடுவித்தவளுக்கு தாம் எங்கிருக்கிறோம் என்பதே சிறிது நேரம் புரியவில்லை. அவளுடைய மீன் விழிகளை கசக்கி தன்னை நிலைப்படுத்தினாள்.

பணிப்பெண் அவளை குழப்பி விட்டதில், தாம் எங்கிருக்கிறோம்? எந்த வழியினில் வந்தோம்? என்பதே புரியாமல் போனது. சுற்றிலும் பலவகை மாட மாளிகைகளும் அரண்மனையும் இருக்கவே மிகவும் குழம்பி விட்டாள். மிக சரியாக வந்த வழிக்கு எதிர் திசையில் தனது பயணத்தை தொடர்ந்தாள்.

இரண்டு மாளிகைகளை கடந்தவள் ஒரு தாமரை குளத்தின் அருகினில் வந்திருந்தாள். அந்த குளம் முழுவதும் வெள்ளை மற்றும் இளம்சிவப்பு வண்ண தாமரைகளாலும், ஊதா, வெள்ளை, இளம்சிவப்பு வண்ண அல்லி மலர்களாலும் சூழ்ந்து இருந்தது.

தோகையினி இதுவரை ஊதா வண்ண அல்லி மலர்களைக் கண்டதே இல்லை. இருக்கும் இடத்தையே மறந்தவள் அந்த அல்லி மலரினை பறிக்க பேராவல் கொண்டு அந்த முயற்சியில் இறங்கி இருந்தாள். குளத்தினில் இருக்கும் மலரை பறிப்பது என்ன அவ்வளவு எளிதான காரியமா? நேரம்தான் கரைந்ததே தவிர, அவளால் மலரை தொடக்கூட இயலவில்லை.

அருகினில் இருந்த மரக்கிளையைக் கொண்டு கூட முயற்சித்துப் பார்த்துவிட்டாள். பலன்தான் கிடைப்பதாய் இல்லை.

அப்பொழுது, “இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” என்ற கம்பீரமான குரல் செவியை தீண்டவே, திடுக்கிட்டு திரும்பினாள்.

அவள் பின்புறம் குரலுக்கு ஏற்ற கம்பீரத்தோடு ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். நிலவொளியில் அவர் முகம் தெரிந்தது. எத்தனை கம்பீரம்! அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வயதிலும் இத்தனை கம்பீரமா என்றிருந்தது. ஆனால் அந்த முகம் மட்டும் எங்கோ பார்த்தது போல அவளுக்குத்தோன்ற எங்கு என்றுதான் புலப்படவில்லை.

‘நாம் இந்த தேசத்திற்கே புதியவர். இதில் இங்கு வசிப்பவரை எப்படி தெரிந்து வைத்திருக்க முடியும். நமது கற்பனைக்கு எல்லையே இல்லை’ என தன்னைத்தானே மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.

“உங்களைத்தான் கேட்டேன். இந்த நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்?” மீண்டும் அதே கம்பீரத்துடன் சற்று அழுத்தமாக கேட்க, 

‘இந்த நேரத்திலா அப்படியென்றால்… ஆமாம் மாலை மங்கி நிலவு கூட வந்துவிட்டதே. என்ன மடத்தனம் செய்து கொண்டிருக்கிறேன். இங்கிருந்து எப்படி திரும்பி செல்வேன். ஆள் நடமாட்டமும் இருப்பது போல தெரியவில்லையே’ என்று மனதினுள் எண்ணியபடி,

“அது… ஐயா… வந்து… வழிதவறி…” ஏனோ புது இடம், யாருமற்ற மாலை மங்கிய வேளை என அவளுடைய பயம் அதிகரிக்க, வார்த்தைகள் திக்கித்திணறி வெளிவந்தது.

அவளையே கூர்ந்து நோக்கிய முதியவர், “இப்படி இருட்டியபிறகு, தாமரைக்குளத்தில் இருக்கும் மலரை பறிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறீரே அம்மா. வேறு ஏதும் விஷ ஜந்துக்கள் அருகினில் வந்தால் கூட உணர முடியாதே. இப்படியா கவனமில்லாமல் இருப்பீர்?” அவளுடைய பதற்றத்தில் கோபத்தை கைவிட்டு நிதானமாகவே பெரியவர் கேட்டார்.

ஏற்கனவே பயத்தில் வெளிறி இருந்த முகம் மேலும் வெளிறியது. “ஐயா… எனக்கு விருந்தினர் மாளிகைக்கு வழி சொல்கிறீர்களா?” மிகவும் மெல்லிய குரலில் தவிப்பான முக பாவத்துடன் கேட்க, 

“இங்கிருந்து அடுத்த கோடியில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு வழி கேட்கிறீர். நான் கூறினால் மட்டும் தனியே சென்று விடுவீர்களா? நானும் அங்கேதான் செல்கிறேன். உங்களையும் அழைத்துச் செல்கிறேன். வாருங்கள்” என்றபடி முன்னே நடக்க தொடங்கினார்.

“என்ன இது வருகிறீரா என்று அனுமதி கேட்காமல், வாருங்கள் என்று கட்டளையிட்டு செல்கிறாரே!” என்று மனதினில் எண்ணியபடி அவருடன் நடந்தாள்.

உடன் நடந்தபடியே, “இங்கே இத்தனை தோட்டங்களும் மாட மாளிகைகளும் இருக்கிறது. வழி கண்டுபிடிப்பதே சிரமமாகி விடுகிறது. நல்ல வேளையாக நீங்கள் வந்தீர்கள். மிகவும் நன்றி ஐயா” என்று கூறினாள்.

“விருந்தினராக வந்து இருக்கிறீர்கள். இப்படித்தான் அலட்சியமாக இருப்பதா?” சற்றே கண்டிப்புடன் கேட்டவரைப் பார்த்து அவளுக்கு வியப்பாக இருந்தது.

‘இவரைப் பார்த்தால், உயர் பதவியில் இருப்பவர் போலவும் இல்லை. ஆனாலும் ஒரு நாட்டின் இளவரசியிடம் இப்படி கண்டிப்போடு கேள்வி கேட்கிறாரே? ஒரு வேளை பார்க்க மிகவும் சாதாரணமாக இருக்கலாம். ஆனாலும் ஏதேனும் தலைமைப் பொறுப்பு வகிப்பவராக இருக்குமோ?’ மனதிற்குள் அவள் ஆராய்ந்ததை அவள் முகத்திலேயே அந்த பெரியவர் படித்துக் கொண்டிருந்தார். இருப்பினும் அதனை வெளியினில் காட்டாமல் இருந்தார்.

தோகையினி தனது எண்ணத்தினூடே அவருக்கு தான் இங்கே எப்படி வந்தேன் என்ற விவரத்தைக் கூறினாள்.

“ஆக இது இளவரசி சமுத்திராவின் வேலை தானா?” என்ற அவருடைய குரலில் இருந்த பேதம் தோகையினிக்கு தெளிவுற புரிந்தாலும் அவருடைய குரல் மாறுபாட்டிற்கான காரணம் புரியவில்லை.

அவர்கள் செல்லும் வழியில் இளவரசர் தீட்சண்ய மருதரின் புராணத்தையே அங்கே காவலில் இருந்த பணியாளர்கள் பாடிக்கொண்டிருக்க, தோகையினிக்கு சலிப்பாய் இருந்தது. அவ்வப்பொழுது அவளுடைய முகபாவத்தையே கவனித்து வந்த பெரியவருக்கு அவளுடைய சலிப்பு தெளிவுற புரிந்தது.

“ஏன் இளவரசி? தங்களுக்கு எங்கள் இளவரசரைப் பிடிக்கவில்லையா?” அவள் முகபாவத்தை கவனித்தபடியே கேட்க, 

திடீரென கேட்ட கேள்வியில் திடுக்கிட்டவள், “ஏன் பெரியவரே இப்படி கேட்கிறீர்கள். தங்கள் இளவரசரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதோடு நானே விருந்தினராக இங்கே வந்து இருப்பவள். அப்படி இருக்க இதில் விருப்பு, வெறுப்பு எங்கிருந்து வந்தது?” என்றாள் சமாளிக்கும் விதமாக. 

“இல்லை இங்கே கேட்கும் பேச்சுக் குரல்களால் தங்கள் முகம் மாறுபடுகிறதே… அதை வைத்துதான் கேட்டேன்” என்றார் அவர்.

‘அவ்வளவு தெளிவாகவா என் முக பாவனைகள் இருக்கிறது!’ என்று எண்ணியபடி, “அவ்வாறெல்லாம் இல்லை பெரியவரே, காலையிலிருந்து இதை புராணத்தை கேட்பதனால் முகம் அப்படி இருக்கிறது போலும்” என்று மென்று முழுங்கினாள்.

ஆனால், அந்த பெரியவர் விடுவதாய் இல்லை. “அப்படியென்றால் நான் கூறியது சரிதானே, தங்களுக்கு இளவரசரின் புகழ் பிடிக்கவில்லை. அப்படித்தானே?” என்று மீண்டும் கேட்க,

‘இவரென்ன விடுவேனா என்கிறாரே?’ என்று எண்ணியபடி, “அவ்வாறெல்லாம் இல்லை பெரியவரே. அனைவரும் அவர் ஒருவரின் புகழினை மட்டும் பாடுவது ஏனோ சரியென படவில்லை. இதே சாதனையை மற்ற இளவரசர்களும் செய்தார்கள் அல்லவா! அவர்களின் புகழையும் பாட வேண்டும் அல்லவா?” என்றாள் மீண்டும் தயக்கத்தோடு.

“ஆம்! இளவரசி நீங்கள் சொல்வதும் சரிதான். சென்ற ஆண்டும் கூட சில இளவரசர்கள் இதே சாதனையை செய்தனர். ஏதோ முதல் முறையாக ஒரு சாதனையை நிகழ்த்தியதைப் போன்று தலையினில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்” என்றார் சலிப்புடன்.

கருத்தொருமித்த நபரை கண்டதும், தோகையினியும் ஆர்வத்துடன் தனது மனதிலிருப்பதை கூறலானாள். “ஆனால் பெரியவரே, இது ஒரு பெரிய சாதனைதான். மக்களும், பார்த்தவர்களும் இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு கொண்டாடுகின்றனரே தவிர, இளவரசரின் முகத்தை கவனித்தீரா? அவர் முகத்தில் வென்ற கர்வம் துளியும் இல்லை. என்ன ஒரு சாந்தமான முகம்!” என்றவளின் மனத்திரையில் காலையில் வெற்றி பெற்றவுடன் மெல்லிய புன்னகையுடன் நின்றிருந்த தீட்சண்யரின் முகம் தோன்றி, அவள் அல்லி வண்ண இதழ்களை மெல்லியதாய் விரிவடைய செய்தது.

அவளின் முகத்தினிலே பார்வையை பதித்திருந்த பெரியவர், “நீங்கள் அவரைப் பார்த்தீர்களா இளவரசி?”

“என்ன கேள்வி இது பெரியவரே, அங்கே இருந்த அனைவரும்தான் அவர் முகத்தினை பார்த்தார்கள். பார்த்தவர் அனைவரின் மனதிலும் பதியக்கூடிய முகம் அல்லவா?” என்றவளுக்கு சட்டென ஏதோ உறுத்த, அந்த பெரியவரை உற்று நோக்கிய பொழுது இருவரும் விருந்தினர் அரண்மனையை அடைந்திருந்தனர்.

“இளவரசி வந்துவிட்டீர்களா?” என்றபடி தோகையினியை கண்ட பணிப்பெண் ஒருத்தி, வேகமாக உள்ளே சென்று சமுத்திராவை அழைத்துவர,

அதைக்கூட கவனிக்காமல், இங்கே அந்த முதியவரின் முகத்தையே சற்று தயக்கத்தோடும், ஒருவித பயத்தோடும் தோகையினி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் அங்கு வெளிப்பட்ட சமுத்திரா, “வந்துவிட்டீர்களா? நான் பயந்தே போய்விட்டேன். உங்களைத்தேடி பணிப்பெண்களைக் கூட அனுப்பி இருந்தேன் தெரியுமா?” என்று பதறியபடி கூறியவள், அதன்பிறகே அருகினில் இருந்த பெரியவரை கவனித்தாள்.

சுற்றிலும் யாரும் இல்லாததை உறுதி செய்து மெல்லிய குரலில், “அண்ணா… என்ன இது இன்னும் நகர்வல வேடத்தை மாற்றாமல் இருக்கிறீர்கள்! இன்றைய இரவு உணவு விருந்தினர்களோடு உண்ண வேண்டும் என்று தந்தை கூறி இருந்தாரே மறந்துவிட்டீர்களா? உடனடியாக இந்த வேடத்தை களைந்து விட்டு வாருங்கள்” என்றாள் பெரியவர் வேடத்தில் இருந்த தீட்சண்யரிடம்.

தோகையினிக்கு ஏற்கனவே புரிந்த விஷயம் இப்பொழுது உறுதியாகி விடவே திருதிருவென விழித்தபடி இருந்தாள். அவளது முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த தீட்சண்ய மருதர் சிறு புன்னகையுடனும், தலையசைப்புடனும் சமுத்திராவிடம் விடைபெற்று விட்டு அங்கிருந்து மறைந்தார்.

Advertisement