Advertisement

சத்ரிய வேந்தன் – 02 வைகாசி திருவிழா
விடியலில் மலர்ந்த மலர்களைப் போல
ஒளி வீசும் மக்களின் முகங்கள்
தெளிந்த நீரோடையினைப் போல
நல்லுள்ளம் கொண்ட அமைச்சர்கள்
கொலுசொலியின் கீதம் போல
சலசலத்தபடி ஓடும் வற்றாத ஜீவ நதிகள்
பச்சை பட்டாடை உடுத்தியதைப்போல
நிறைந்திருந்த வயல்வெளிகளும்தோட்டங்களும்
இதுவன்றோ நற்சான்று
மருத தேசத்தின் வளத்திற்கும்,
வீரேந்திர மருதர் ஆட்சியின் சிறப்புக்கும்
மருத தேசத்தின் கிழக்கு வாயிலிலும், வடக்கு வாயிலிலும் இருந்த கோட்டைக்கதவுகள் திசைக்கு மூன்றாக, மொத்தம் ஆறு இடங்களில் திறந்து வைக்கப் பட்டிருந்தது. ஆறு கோட்டைக்கதவுகளும் விண்ணை முட்டும் உயரத்துடனும், ஒரே நேரத்தில் அந்த வாயிலின் வழியாக முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய ஏதுவான அகலத்துடனும் மிகவும் பிரமாண்டமாக இருந்தது.
அதிலும் முன் வாசலில் கிழக்கு முகமாக அமைந்த, முதன்மை கோட்டைக்கதவு ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பாட்டோர் செல்லும் அளவு அகலமாக இருந்தது. இருப்பினும் அத்தனை கதவின் வழியேயும் கோட்டைக்குள் நுழையும் மக்கள் கூட்டம் குறைவானவர்களாக இருக்கவில்லை. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
கோட்டை வாயிலின் மேல் அடுக்குகளில் காவல் இருந்த வீரர்கள், எட்டு திசைகளிலும் இருந்து வரும் மக்கள் வெள்ளங்களை மேற்பார்வையிட்டபடி இருந்தனர்.
“பார்த்தாயா எத்தனை கூட்டம். அதிகாலையில் இருந்து வந்து கொண்டே இருக்கிறார்கள்” என மேல் அடுக்கினில் இருந்த ஒரு வீரன் ஒருவன் கூறினான்.
“ஆம் ஆம். வைகாசி திருவிழா தொடங்குகிறது என்றால் சொல்லவும் வேண்டுமா? எட்டுத்திக்கும் மக்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். கோட்டையினுள் மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும்” என்றான் இன்னொருவன்.
“அங்கே பார்த்தாயா! ஓடை நீரினை ஒட்டியுள்ள பகுதியில் மக்கள் வருவது எத்தனை அழகாக தெரிகிறது!” என்று சிலாகித்தான் மூன்றாமவன்.
மூவரும் அவன் காட்டிய திசையினை பார்க்க அங்கே மக்கள் சகல அலங்காரங்களோடு திருவிழாவிற்காக கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சூரியன் தனது அதிகாலை வேளை இளம்சிவப்பை பொன்னிறமாக மாற்றிக் கொண்டிருக்கும் இளங்காலை வேளை, அதன் கதிரொளியில் ஓடை நீரெல்லாம் தங்கமும், வெள்ளியும் குழைத்து பூசிய நிறத்தினில் சிறிய அலைகளை எழுப்பிய வண்ணம் அழகாய் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் செழிப்புடன் இருந்த வயல்களும் தோட்டங்களும் வித விதமான பசுமையை பறைசாற்ற, அதன் நடுவினில் மக்கள் வெள்ளம் நடந்து வந்தபடியும், குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வந்தபடியும் இருந்தனர். அந்த காட்சியை காண்பதற்கே பேரழகாய் இருந்தது. அதைத்தான் அந்த வீரர்களும் ரசித்தனர்.
மருத கோட்டைக்கு அருகினில் இருக்கும் ஊரிலிருந்து ஒரு குடும்பத்தினர் திருவிழாவிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களில் புதிதாக திருமணமான தம்பதியரும் இருந்தனர். அந்த புதுப்பெண் சில காத தூரம் தொலைவில் இருந்த ஊரினை பிறப்பிடமாக கொண்டு வளர்ந்தவளாததால், இதுவரை திருவிழாவிற்கு வருகை தந்ததில்லை. இதுவே அவளுக்கு முதல்முறை.
அவர்களுடன் வந்த சிறுமி ஒருத்தி அந்த புதுப்பெண்ணிடம், “அத்தை முதன் முறையாக திருவிழாவிற்கு வருகை தருகிறீர்கள் தானே?” என கேட்க, அந்த பெண் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
அந்த இளம்பெண், அவளுடன் வந்த மூதாட்டியிடம், “பாட்டி இந்த திருவிழாவைப் பற்றி கூறுங்களேன்?” என ஆர்வம் மேலோங்க கேட்க,
மூதாட்டியும் தான் மிகவும் ரசிக்கும் வைகாசி திருவிழாவைப் பற்றி ஆசையாய் விவரிக்கலானார். “நம் மருத தேசத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று இந்த வைகாசி திருவிழா. வைகாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி மூன்று தினங்கள் தொடர்ந்து நடைபெறும். திருவிழாவில் பல விதமான கலை அரங்கேற்றங்கள் நடைபெறும். நடனக் கலைவிழா, நாடகங்கள், வீர விளையாட்டுகள், இசைக் கச்சேரிகள் என பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்” என்று திருவிழாவை பற்றி சுருக்கமாக கூறி முடித்தார் அந்த மூதாட்டி.
“அதனால்தான் இத்தனை கூட்டமா பாட்டி?” என விழி விரித்தாள் அந்த இளம்மனைவி.
“இதனையே கூட்டம் என்கிறாயா? கோட்டையினுள் இப்பொழுது ஜன சமுத்திரமே இருக்கும்” என்றார் புன்னகையோடு. கோட்டைக்குள் நுழைந்ததும் அதன் அலங்காரத்தில் அனைவரும் மெய்மறந்து போயினர்.
கோட்டை வீதிகள் எல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தது. வண்ண வண்ண மலர்களைக் கொண்டு கோட்டை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, மாவிழை தோரணங்களையும், தென்னங் குருத்தோலை தோரணங்களையும் தெருவெங்கிலும் தொங்கவிட்டு மருத தேசத்து கோட்டை பேரழகாக ஜொலித்தது.
அதைக் கண்டவள், “ஆம் பாட்டி நீங்கள் கூறியது சரிதான் எவ்வளவு கூட்டம்? எத்தனை அலங்காரங்கள்?” என மெய் சிலிர்த்தாள் அந்த பெண்.
“வைகாசி திருவிழாவிற்கு மருத தேசத்து மக்களும், மருத தேசத்தின் கீழே இயங்கும் தேசத்து மக்களும், மருத தேசத்தோடு இயங்கும் அரசர்கள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள் என அரச குடும்பத்தினரும், மருத தேசத்திடம் நட்பு பாராட்டும் அண்டை தேசத்து அரச குடும்பத்தினருமாக பலரும் கலந்து கொண்டு திருவிழாவினை சிறப்பிப்பார்கள். ஆகையால்தான் கோட்டை முழுவதும் இத்தனை கூட்டம்” என்று விளக்கம் தந்தார் மூதாட்டி.
அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே, “அங்கே பார்!” என அவளுடைய கணவரும் உடன் வந்தவர்களும் கூற, அவள் பார்த்த திசையில் வரவேற்புக்காக யானைகள் அணிவகுத்து இருந்தது.
பட்டத்து யானைகளுக்கு பட்டாடைகளை போர்த்தி, நேர்த்தியான அலங்காரத்துடன் ஒவ்வொரு வாயிலிலும் பல யானைகளை வரவேற்பிற்காக நிறுத்தியிருந்தனர். யானையின் அணிவகுப்பை பார்க்கவே மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. பொதுமக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கண்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் அனைவரும் யானைகளிடம் ஆசி பெற்றும், துள்ளி குதித்தும் தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். இவர்களும் பொதுமக்களோடு இணைந்து ஆசி பெற்றனர்.
வாயிலிலே இத்தனை பிரமிப்பாக இருக்க, கோட்டையினுள் இருந்த வீடுகளையும் திருமண விசேஷம் நடக்கும் வீடுகளைப் போன்று அலங்கரித்திருந்தனர்.
மருத தேசத்து மக்கள் தத்தம் இல்லங்களுக்கு வெள்ளை அடித்தும், வாயிலில் தோரணங்களை தொங்க விட்டும், வாசலில் சாணம் இட்டு மெழுகி பல விதமான மாக்கோலங்களை தெருவெங்கும் அடைத்த வண்ணம் போட்டும் தங்களது இல்லங்களை அலங்கரித்து மருத கோட்டையை எழில் நகரமாக மாற்றி இருந்தனர்.
அதனை ரசித்தவள், “ஏன் பாட்டி இத்தனை மக்களும் எங்கு தங்குவார்கள்? மூன்று நாள் திருவிழா என்று கூறினீர்களே?” என அடுத்த சந்தேகத்தை முன்வைத்தாள்.
“திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து வந்த மக்கள் கோட்டையிலோ, அதன் சுற்றியுள்ள ஊர்களிலும் இருக்கும் உறவினர் வீடுகளிலேயோ, சத்திரங்களிலேயோ அல்லது கோவில் மடங்களிலேயோ தங்கி விடுவார்கள். திருவிழாவிற்கு வந்த அரச குடும்பத்தினர் தங்குவதற்காக அரண்மனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அரச குடும்பத்தினர் பெருமளவு வந்திருப்பார்கள்” என்றார் மூதாட்டி.
மக்களோடு மக்களாக அனைவரும் இணைந்து கோட்டையின் அலங்காரங்களை ரசித்த வண்ணம் வர, சிலர் வீதியெங்கும் அமைந்திருந்த திருவிழா கடைகளில் வணிகம் செய்த வண்ணமும், மேலும் சிலர் தங்கள் குழந்தைகள் விரும்பும் விளையாட்டு திடலுக்கு அழைத்து சென்று அங்கே குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல்களிலும், ராட்டினங்களிலும் அவர்களை விளையாடவிட்டு ரசித்த வண்ணமும், மேலும் சில மக்கள் கூட்டம் மலர்களையும், செடிகளையும் கொண்டு அலங்காரம் செய்த தோட்டத்தை பார்வையிட்டபடியும் கோட்டையை வலம் வந்தனர்.
மருத கோட்டையில் வணிகம் செய்ய வந்திருந்த வியாபாரிகளுக்கும், திருவிழாவை ரசிக்க வந்த மக்களுக்கும் தேவையான அனைத்தையும் கவனித்துக்கொள்ள ஆங்காங்கே அரச பணியாளர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.
வந்தவர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவும், ஆங்காங்கே மக்கள் தேவைக்கு ஏற்ப நீர்மோர் பந்தல்களும், அமர்வதற்கும் களைப்பாறுவதற்கும் தேவையான மேடைகளும் அமைக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிகளையும் கண்காணிக்க ஒவ்வொரு தலைவர்களும் இருந்தனர். மன்னரின் சிறந்த திட்டமிடும் பண்பை திருவிழாவின் ஏற்பாடுகள் தெளிவுற உணர்த்தியது.
விழா தொடங்கும் நேரம் வரவே, விழா மேடையை நோக்கி மக்கள் வெள்ளம் நகர இவர்களும் மக்களோடு மக்களாக விழா மேடைக்கு சென்றனர்.
** விழா மேடை முழுவதும் மக்களால் நிறைந்திருந்தது. முதல் நாள் தொடக்க விழா மிகவும் கோலாகலமாக தொடங்கியது. யவன் தேசத்தின் சக்கரவர்த்தி வீரேந்திர மருதர், மற்ற பெரிய தேசத்து அரசர்களுடன் ஒரு பிரமாண்டமான மேடையில் வீற்றிருந்தார்.
முதலில் வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. அணிவகுப்பினை தலைமை தாங்கியபடி, மருத தேசத்தின் படைத்தளபதி, அவருடைய பிரத்யேக வெண்ணிற புரவியில் மருத தேசத்தின் கொடியான பாயும் குதிரையை கைகளில் ஏந்தியபடி சென்றார். அதனை தொடர்ந்து யானை படைகளும், குதிரை படைகளும் அணிவகுத்து வந்தது.
மருத தேசத்தின் இளவரசி சமுத்திர தேவிகை, தனது விழிகளை அசைக்காது அனைத்து நிகழ்ச்சிகளையும் கவனித்துக் கொண்டிருந்தாள். பூரண சந்திரனைப் போன்று அழகு நிறைந்தவள் இளவரசி. அவளது நீண்ட, வளைந்த புருவங்கள், பெரிய விழிகள், மென்மையான செவ்விதழ்கள், மலரினும் மெல்லிய சருமம், முகத்திலேயே பிரகாசிக்கும் அறிவுக்களை என பார்ப்பவர் அனைவரையும் நொடியில் வசீகரிக்கும் பேரழகு.
அவளோடு அவள் தோழிகளும், மற்ற நாட்டு இளவரசிகளும் சேர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்வத்தோடு கண்டு கழித்தனர். எதிலும் சிறு குறையும் வந்துவிடக்கூடாது என்னும் எண்ணம் இளவரசியின் மனதை ஆக்கிரமித்திருந்தது.
அணிவகுப்பு முடிந்த பின்னர் மத்தளங்களின் இசையும், அதனை தொடர்ந்து முதன்மை கடவுள் விநாயகரின் துதியும், மருத தேசத்தின் குலக்கடவுளான ஈசனின் புகழையும், மருத தேசத்தின் சிறப்பையும், அரசர் வீரேந்திர மருதர் புகழையும் வரிசையாக பாடிய வண்ணம் வரவேற்பு நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. இந்த இசை விழாவிற்கும், நடன விழாவிற்கும் ஏற்பாடுகளை கவனித்தது மருத இளவரசி சமுத்திர தேவிகை.
தோழிப்பெண்களில் ஒருத்தி, “நமது இளவரசி தமது பதினான்காம் பிரயாயத்திலேயே, எத்தனை திறமையாக இசை விழாவின் ஏற்பாட்டினை கவனித்துக் கொண்டார். மிகவும் சிறப்பாக இருந்ததல்லவா?” என பெருமையாக கூற,
மற்றொருவள், “ஆமாம். அரசர் வீரேந்திர மருதரே ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறார் என்றால், இளவரசியின் திறமையின் அளவு அவ்வாறு…” என்றாள் மற்றொருவள்.
“இது மட்டுமா? இயல்பிலேயே இளவரசிக்கு ஆர்வமும், துடுக்கும் அதிகம். இப்பொழுதும் அதுபோலவே, அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியோடு சேர்த்து, மத்த ஏற்பாட்டுகளையும் தெரிந்து வைத்துக் கொண்டார் பார்த்தாயா? அதுதான் நமது இளவரசியின் சிறப்பு” என்றாள் இன்னொருவள்.
“ஆம்! தற்பொழுதும் எத்தனை ஆர்வத்தோடு, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்.”
“பின்னே, இதுவரை அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று கவனித்தார். இப்பொழுது வில்வித்தை நிகழ்வு நடக்கும் இல்லையா? நமது இளவரசர் பங்கு பெறுவார். தமையனின் வீரத்தை பார்க்க இளவரசிக்கு எத்தனை ஆர்வம் பாருங்கள்!” என்று அந்த பெண் கூறிக்கொண்டிருக்க,
அவர்கள் ஆர்வமாய் விவாதித்த வில்வித்தை நிகழ்வு தொடங்கப்பட்டது. இதில் அனைத்து நாட்டு இளவரசர்களும், வீரர்களும் பங்குபெறுவர். கோட்டைக்குள் இருக்கும் மிகப்பெரிய சிவன் ஆலயத்தின் தலைமை கோபுரத்தில் பல அடுக்குகள் இருக்கும். ஒவ்வொரு அடுக்கிலும் ஒரு கடவுளின் திருவுருவ சிலை அமைந்து இருக்கும். இளவரசர்கள் வில்லின் உதவியால் ஒரு பூ மாலையை எடுத்து கோபுரத்தில் இருக்கும் ஏதாவது சிலைக்கு சாற்ற வேண்டும்.
விண்ணைமுட்டும் உயரத்துடன் இருக்கும் கோபுரம், விழாத்திடலில் இருந்து பல அடி தொலைவில் இருக்கும். சிறியவர்கள் முதல் இளம் பிரயாயத்தில் இருக்கும் இளவரசர்கள் வரை பங்குபெறும் நிகழ்ச்சியில் அவரவர் விருப்பத்திற்கும், பயிற்சிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு கீழ் அடுக்குகளிலோ அல்லது மேல் அடுக்குகளிலோ அம்பை எய்துவர்.
ஆனால், மிகவும் ஒரு சிலரே உச்சியில் வீற்றிருக்கும் ஈசன் சிலைக்கு முயற்சித்து அந்த முயற்சியில் வெற்றியும் பெறுவர். இளவரசிகளின் பார்வைகள் முழுவதும் அந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்திருக்க, சிவன் சிலைக்கு மாலையை அணிவிக்கும் நேரத்திற்காக காத்திருந்தனர்.
இளம் பிரயாயத்தில் இருக்கும் இளவரசர்கள் சிலர் சிவன் சிலைக்கு எய்த முயற்சித்து, அந்த முயற்சி பலன் இல்லாமல் போனது. ஆகையால், யார் முதலில் சிவனுக்கு மாலை சூட்டுவர் என்னும் ஆர்வத்தில் அரங்கமே காத்திருந்தது.
அடுத்ததாக மருத தேசத்து இளவரசர் தீட்சண்ய மருதர் தனது வில்லோடு களம் கண்டார். தமது தமையன் களம் இறங்கியதும் இளவரசி சமுத்திர தேவிகைக்கு ஆர்வம் பலமடங்கு தொற்றிக் கொண்டது. அதுவும் இளவரசர் திரிசூலத்தின் குறியீடாகக் கருதப்படும் வில்வ இலையினால் ஆன மாலையினை அம்பின் பிடியில் வைத்த பொழுது தமையனாருடைய இலக்கு சிவன் சிலை என்று உணர்ந்ததும், ஆர்வம் மேலும் அதிகரித்தது. விழிகளைக் கூட இமைக்காமல் பார்வையை தமது தமையன் மீதே பதித்திருந்தாள்.
தீட்சண்ய மருதர் தமது இலக்கை நோக்கி எய்திய மாலை, மிகச்சரியாக ஈசன் சிலையின் கழுத்தில் தவழ்ந்தது. ஈசனின் கழுத்தினை சுற்றி அலங்கரித்த மாலை அங்கே கூடி இருந்த மக்களையும், அரச குடும்பத்தினரையும் மகிழ்ச்சி அடைய செய்தது. அங்கே வீற்றிருந்த அனைவரும் எழுப்பிய ஆராவாரா சப்தம் விண்ணை முட்டும் முழக்கத்துடன் இருந்தது.
விழா மேடையின் ஒருபுறம் அமைந்திருந்த, இளவரசிகள் வீற்றிருந்த மேடையில் அதிக சலசலப்பு கூடியது. அனைவரும் தீட்சண்ய மருதரின் வெற்றியை தங்கள் வெற்றி போல எண்ணி மகிழ்ந்தனர். அவரின் முகத்தையே ஆர்வமாக அனைவரும் பார்த்தனர்.
ஆனால் தீட்சண்யரோ, தாம் வென்று விட்டோம் என்ற செருக்கினை முகத்தினில் துளியும் வெளிப்படுத்தாது, மிகவும் சாந்தமான முகத்தோடும், தன்னடக்கத்தோடும், முகத்தில் மிக மிக மெல்லியதாய் ஒரு புன்னகையை தவழ விட்டபடியும் இருந்தார். அவரைக் காண்பவர் அனைவரையும் கொள்ளை கொள்ளச்செய்தது அவரது தோற்றமும், செருக்கில்லாத புன்னகையும்.
இளவரசிகள் பெரும்பாலானோர் அவருடைய செயலில் வசீகரிக்கப்பட்டு மயங்கி போயிருந்தனர் என்று கூறினால், அது மிகையாகாது. இவரை கணவராக அடையும் பாக்கியம் வேண்டுமென பலரும் தங்கள் இஷ்ட தெய்வங்களை பிரார்திக்கத் தொடங்கினர்.
சமுத்திர தேவிகைக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. தமையனின் வெற்றி அவரை வானில் பறக்கச் செய்தது. தமையனின் வெற்றிக்கு பெரிய பரிசினை தர வேண்டும். தடபுடலான விருந்து பரிமாற வேண்டும் என்றெல்லாம் தமது திட்டங்களை தீட்டத் தொடங்கினார்.
இளவரசரைத் தொடர்ந்து மேலும் ஒரு சில இளவரசர்களும் ஈசனின் கழுத்தில் மாலையை அணிவிக்கும் வேலையினை சிறப்புற செய்தனர். ஈசன் சிலை மாலைகளால் கம்பீரத்துடன் வீற்றிருக்க, மக்களின் ஆரவார ஒலி மேலும் மேலும் விண்ணைமுட்டியது.
வில்வித்தை பயில்வதில் முதல் நிலை கடந்த இளவரசர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு மாலையினை கோபுரம் நோக்கி செலுத்தினர். கீழ் அடுக்குகளில் இருக்கும் சிலைகளுக்கு அவர்கள் செலுத்திய மாலை மிக சரியாக சிலைகளின் கழுத்தினில் தவழ்ந்தது. அத்தனை சிறிய வயதினில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி அனைவரையும் வியப்பிலும், ஆனந்தத்திலும் ஆழ்த்தியது. அதனை மக்கள் தங்கள் கரகோஷங்களால் வெளிப்படுத்தினர்.
வில்வித்தை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்து முடிந்ததை ஒட்டி மற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. இசைக்கச்சேரி நிகழ்ச்சி அனைவரையும் மிகவும் கவர்ந்தது. பல விதமான இசைக்கருவிகளின் இசையும் அனைவரும் மயங்கும் வண்ணம் பாடல்களும் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. பாடல்களிலும், இசைக்கருவிகளின் இசையிலும் அனைவரும் மெய்மறந்து போயினர்.
இசை நிபுணர்கள் மட்டுமில்லாது, இசைக்கலையை கற்றவர்களும், பல தேசத்து இளவரசிகளும் இளவரசர்களும் கூட தங்களது கச்சேரியை மேடையில் அரங்கேற்றினர். வைகாசி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாகவும் சிறப்பாகவும் நடந்து முடிந்தது.

Advertisement