Advertisement

சத்ரிய வேந்தன் – 01 விஜயபுரி வீரன்
உனது வாள் பேசும் மொழி…
உனது விழி வழி கசியும் தீர்க்கம்…
உனது மௌனத்தில் மறைந்திருக்கும் மேன்மை…
புது வரலாறு படைக்கும் வீரனே!!!
ஏகாந்தமான மாலை மங்கிய வேளையில், விஜயபுரி நகரத்து கோட்டை, தீஞ்ஜுவாலைகளால் சுடர் விட்டுக் கொண்டிருந்த தீப்பந்தங்களின் துணையுடன் இருளை விரட்டத் தொடங்கியிருந்தது. பௌர்ணமியை நெருங்கிய நிலவின் வெண்ணிற ஒளியும், ஆதவனின் வண்ணத்தை பொழியும் தீஞ்சுடர்களின் ஒளியும் அந்த கோட்டையின் மீது பொழிந்து அதை தங்க வண்ணத்தில் ஜொலிக்க செய்து கொண்டிருந்தது.

விஜயபுரி நகரம், மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள வளமான நாடு. அந்த நாட்டினை வேலவர் என்னும் அரசர் ஆண்டு வருகிறார். அரசர் வேலவரும், அவரது குடும்பத்தினரும், அவர்களுடன் மேலும் சில மந்திரிப் பெருமக்களும் மருத தேசத்தில் நடைபெறும் வைகாசி திருவிழாவிற்கு சென்றிருந்த சமயம் அது.

வெகு சமீபத்தில் தான் விஜயபுரி நகரத்தின் படைத்தளபதி இறந்திருக்க, புதிய படைத்தளபதியாய் இளம்பிரயாயத்தில் இருந்த அவரின் மகனை அப்பதவிக்கு நியமித்திருந்தனர். மன்னரும், முக்கிய மந்திரிகளும் இல்லாத சமயம், படைத்தளபதியும் இளம்பிரயாயத்தினன் இதுவே நல்ல சமயமாக பட்டது, அந்த கூட்டத்தினருக்கு.

கயவர்கள் கூட்டம், ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் வளங்களையும், செல்வங்களையும் தாங்கள் வந்த சுவடு தெரியாமல் கொள்ளையடித்து செல்வதில் வல்லவர்கள். அதற்கேற்ப திட்டமிடுவதில் சிறந்தவர்கள். வீரர்களும், விவேகமானவர்களும் நிறைந்த சிறு கூட்டம். அவர்களின் ஒரே பிழை, முன்பிருந்தே திட்டமிட்டு வந்த இந்த திட்டத்தில், சமீபத்திய படைத்தளபதியைப் பற்றி அதிகம் தெரிந்த கொள்ளாமல் விட்டது.

அதற்கு போதிய நேரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. புதிய படைத்தளபதி நியமிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, இப்படி நாட்டில் பெரும்பாலானவர்கள் இல்லாமல் இருக்கும்படியான வாய்ப்பு வந்திருந்தது. அதை சரியாக பயன்படுத்த முடிவு செய்து விட்டார்கள்.

அரண்மனையில், காவல் காக்கும் கோட்டைத்தலைவனிடம், அன்றைய தினம் காவல் காக்கும் நடைமுறைகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் விஜயபுரி நகரத்தின் படைத்தளபதி ரூபன சத்ரியர்.

மற்றவர் நிமிர்ந்து பார்க்கும் அளவு உயரம், தோள் வரை புரளும் கருமை வண்ண சுருள் சுருளான கேசம், ஆஜானுபாகுவான தோற்றம், வலிமையான தோள்கள், அடர்ந்து நீண்ட புருவங்கள், மிகவும் கூர்மையான, எதிரில் இருப்பவர்களை எடைபோடும் விழிகள், அடர்ந்த முறுக்கிய மீசை, அழுத்தமான இறுக்கமான உதடுகள் என பார்ப்பவர் அனைவரையும் மரியாதை தரத்தூண்டும் தோற்றம் ரூபன சத்ரியருக்கு.

ரூபன சத்ரியர், சத்ரிய வம்சத்தில் பிறந்து, சத்ரிய குல வழக்கப்படி வளர்ந்த மாவீரன். ஆஜானுபாகுவான தோற்றத்துடனும், போரில் பங்குகொண்டதன் விளைவாய் மார்பிலும், வாள் ஏந்தும் கைகளிலும் தழும்புகளுடனும் காட்சியளித்தார்.

அவருடைய தந்தையார் விஜயபுரி நகரத்தின் படைத்தளபதியாய் இருந்து சமீபத்தில் நடந்த போரினில் உயிர் துறந்திருந்தார். ரூபனர் தமது சிறிய வயதிலேயே விஜயபுரி நகரத்தின் சிறுவர் படையில் இணைந்து அதன்பிறகு, இளம்பிராயத்தை அடைந்ததும், நாட்டின் படை வீரனாய் தனது பணியைத் தொடங்கினார். ரூபனரின் வீரம் அனைவரிடமும் அவருக்கு நன்மதிப்பை பெற்றுக் கொடுத்தது.

சமீபத்தில் விஜயபுரி நகரத்தில் நடந்த போரினில் ரூபனரின் பங்கு அதிகம். அதில் அவருடைய திறமையை பார்த்து பிரமித்த மன்னர் வேலவர், ரூபனரின் வயதையும் கருதாது, அவருடைய தந்தை இறக்கும் முன்பு ஆற்றிய படைத்தளபதி பதவியை ரூபனருக்கு கொடுத்து கௌரவித்தார்.

ரூபனரின் திறமைக்காகவும், வீரத்திற்காகவும் மிகவும் இளம்பிராயத்திலேயே அடைந்திருந்த படைத்தளபதி பதவி, மற்ற மூத்த படை வீரர்களுக்கு பொறாமையைத் தந்தது. மன்னர் வேலவர் நாட்டில் இல்லாத நிலையைப் பயன்படுத்தி, நேற்று நள்ளிரவு ரூபனரிடம் கைங்கரியத்தை காட்ட முயற்சிக்க… இப்பொழுது அனைவரும் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

ஆனாலும், எதுவுமே நடவாதது போல இன்று காலையில் இருந்து வழக்கமாக பணியைத் தொடர்ந்து கொண்டிருப்பவரைக் கண்டு அனைவரும் வியந்திருந்தனர். “என்ன இது நமது படைத்தளபதி வழக்கமாக இருப்பது போலவே இருக்கிறார்?” என ஒரு காவலன் வியப்பாய் கேட்க,

“வேறு என்ன செய்வார் என்று எதிர்பார்த்தாய்? அவருக்கும் நேற்று ஆட்களை அனுப்பியது யார் என்று தெரிந்திருக்கும். நமக்கே தெரியும்பொழுது அவருக்கு தெரியாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். ஆனால், அவர் எதுவும் செய்ய மாட்டார் என்று தோன்றுகிறது” என்றான் மற்றொரு காவலன்.

“அதெப்படி இவ்வளவு ஆணித்தனமாக கூறுகிறாய்?” என்றான் முதலாமவன்.

“அவர்களை எதுவும் செய்ய வேண்டும் என்று தளபதியார் நினைத்திருந்தால், காலம் கடத்தி இருக்க மாட்டார். அதோடு இப்பொழுது அந்த மூத்த வீரர்களுக்கு உள்ளூர பயம் வந்திருக்கும். நமது படைத்தளபதியை நேரடியாக எதிர்க்க துணிவின்றி தானே, ஆட்களை அனுப்பினார்கள். நமது தளபதியை வீழ்த்த முடியுமா? அதைக்கணிக்காமல் இந்த காரியத்தை தொடங்கி, இப்பொழுது திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார்கள்” என்று விளக்கம் அளித்தான்.

“நமது தளபதியாய் இருக்கப்போய் இவ்வளவு பொறுமை காக்கிறார். எல்லாம் அவரின் நல்ல குணம். இல்லாவிடில் அவரின் கோபத்திற்கு அவர்கள் எல்லாம் என்ன கதி ஆகி இருப்பார்களோ! இனியேனும் திருந்தி இருந்தால் சரி” என்று முதலாமாவனும் தன் கணிப்பை கூறினான்.

“இனி திருந்தி தானே ஆக வேண்டும். இல்லாவிடில் விஷயம் மன்னருக்கு தெரிந்து விடுமே!” என்று சிறு புன்னகையுடன் மற்றொருவன் கூற, பிறகு அவர்கள் சம்பாஷணை மெல்ல வேறு விசயத்திற்கு மாறியது.

ரூபனர் தமது வீரத்தில் சிறந்தவர், அதே அளவு நற்குணங்களும் நிறைந்தவர். ஆனால், ஒருவித இறுக்கத்துடனும், யாராலும் எளிதில் நெருங்கமுடியாதபடி தோரணையுடனும் தான் காட்சியளிப்பார். அவர் தந்தையின் கண்டிப்பில் வளர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.

ரூபனரின் நல்ல குணங்கள் அவரின் கோபமான, அழுத்தமான தோற்றத்தின் முன்பு அவ்வளவு எளிதில் உணரப்படுவதில்லை. ஆனால், அவரின் இறுக்கம் தளர்த்தவும், அழுத்தமான உதடுகளை புன்னகையால் விரிய செய்யவும், அந்த ஆஜானுபாகுவான வீரனை சேவகனாய் மாற்றவும், அவனை அடிபணிய செய்யவும் ஒரேயொரு தேவகன்னிகையால் மட்டுமே முடியும். அவளை காணும் நாள் சற்று தொலைவில் தான் இருந்தது. அதுவரை அவர் விருப்பம் போல இருந்து கொள்ளட்டும்.

நேரம் சற்று கடந்திருக்க, மன்னர் அரண்மனையில் இல்லாத காரணத்தால் அரண்மனையிலேயே தங்கியிருந்த ரூபனருக்கு மனதில் எதுவோ உறுத்தல் இருந்த வண்ணம் இருந்தது. ஏதோ விபரீதத்ததை எதிர்பார்த்து காத்திருந்தது மனம்.

நேற்றும் இதுபோல தான் மனம் எதையோ எதிர்பார்த்து காத்திருக்க உயிரைப்பறிக்கும் திட்டத்துடன் அவரை சூழ்ந்திருந்தனர் சிலர். இன்றும் மனம் அதேபோல் எதிர்ப்பார்த்திருக்க, இம்முறை சற்று அதிகமாவே எதையோ எதிர்பார்த்தது மனம்.

உறக்கம் கண்களை தழுவாமல் ஆட்டம் காண்பிக்க, நித்திராதேவியை வலுக்கட்டாயமாக தழுவும் பழக்கம் இல்லாதவர் என்பதால் அரண்மனையை சுற்றி வந்தார்.

ரூபனர் அவரது அறையில் இருந்து வெளியேறவும், அவருடன் மேலும் இரண்டு காவலர்கள் இணைந்து கொள்ள, “அவசியமில்லை. நான் சிறிது நேரம் அரண்மனை பாதுகாப்பை கண்காணித்து விட்டு வந்து விடுகிறேன்” என்றபடி அவர்களை தடுத்து இவர் மட்டும் சென்றார்.

அனைத்து இடங்களுமே சாதாரணமாக காட்சியளிக்க, மனதில் எதுவோ நெருடியபடியே இருந்தது. தனது பார்வையை கூர்மையாக்கி ஒவ்வொரு இடத்தையும் அளவிட, அந்த வித்தியாசம் அவருக்கு புரிந்தது.

ஒரு இடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த வீரர்களின் காவல் உடை முதல், வாள் வரை அனைத்தும் பொருத்தமானதாக இருந்தாலும், அந்த உடையில், அந்த முகங்களில் ஏதோ ஒரு மாற்றம்.

மற்ற காவலர்கள் இயல்பாக ஒருவரிடம் மற்றொருவர் பேசியபடியும் ரூபனரைக் கண்டதும் விழி தாழ்த்திய படி சங்கடத்துடன் அமைதியை கடைபிடிக்க, இங்கிருந்த ஐவருமோ சுற்றிலும் மிகுந்த சிரத்தை எடுத்து கண்காணித்தபடி இருந்தனர்.

கோட்டைக்கான பாதுகாப்பு திட்டங்களை ரூபனர் தான் வகுப்பார் என்பதால், இவ்விடத்தில் இருக்கும் முக்கிய செல்வங்களின் பாதுகாப்பை முன்னிட்டு இங்கு இன்னும் சற்று அதிக வீரர்களை நியமித்திருந்த நினைவு அவருக்கு எழாமல் இல்லை. அது தொடர்பாக சிந்தனையில் இருந்த சமயம், இரண்டு வீரர்கள் அவ்விடம் நோக்கி செல்வதை கவனித்தார்.

ரூபனரும் அவர்கள் அறியாமல் பின்தொடந்து அவர்கள் பேச்சு சப்தம் கேட்கும் அளவு நின்று கொண்டார். அவ்விடத்தில் இருந்த இருள், ரூபனரின் இருப்பை காட்டி தரவில்லை.

புதிதாக சென்ற காவலர்களோ அங்கு ஏற்கனவே இருந்த காவலனிடம், “கண்ணப்பன் எங்கே? அவனது மனைவிக்கு பிள்ளைவலி வந்துவிட்டதாம். அவனை அழைத்து வரசொல்லி கோட்டை தலைவரின் உத்தரவு” என்க,

அதைக் கேட்டவர்களின் முகங்களில் பதற்றம் குடிகொண்டது. “எங்களுக்கு தெரியாது” என்று கூறிய பதிலிலும் பதற்றம் அப்பட்டமாய் தெரிய, ரூபனரின் விழிகள் கூர்மையானது.

“தலைவர் அவனை இவ்விடத்திற்கு தானே காவலுக்கு அனுப்பியதாக கூறினார்” என்றொருவன் யோசனையாக கேட்க,

கூடவந்த மற்றொருவனோ, “உங்களையெல்லாம் இதற்கு முன்பு பார்த்தது போல இல்லையே! யார் நீங்கள்?” என்னும் கேள்வி எழுப்ப,

அந்த ஐவர் கூட்டமோ சுற்றிலும் பார்வையை ஓட்டியது, வேறு யாரும் இருக்கிறார்களா என்பது போல, நொடியில் நடக்கவிருப்பதை கிரகித்த ரூபனர் அந்த ஐவரும் வாள் ஏந்தும் முன்பு அவர்கள் முன் வாளுடன் களம் இறங்கினர்.

புதிதாய் வந்த இருவரும் நடப்பது புரியாமல் விழித்து நிற்க, “ஏதோ சதி வேலை போல தெரிகிறது” என்றார் ரூபனர் ஏளனமாய் அந்த ஐவரையும் பார்த்து.

ஏற்கனவே ரூபனரின் திடீர் வருகையிலும், தோற்றத்திலும் அந்த ஐவரும் திகைத்து நிற்க, இப்பொழுது கூறிய சொற்களில் மேலும் திகைத்தனர். பார்வை தானாக அவர்கள் காவல் காக்கும் அறையை தொட்டு மீள, ரூபனரோ அதையும் கவனித்து வேகமாக அந்த அறையை தாளிட்டார்.

ரூபனரின் வாள் அந்த ஐவரிடம் போர் செய்து கொண்டிருக்க, மற்ற இரு காவலர்களும் இணைய பார்த்தனர். ரூபனரோ சண்டையிட்டபடியே ஒருவனிடம், “நீ போய் கோட்டைத்தலைவனையும் மேலும் சில வீரர்களையும் அழைத்து வா” என கட்டளையிட்டு அனுப்பிவிட்டு, மற்றொருவனிடம், “இங்கே காவலில் இருந்த வீரர்களை காணவில்லை. அருகே எங்கேயும் மறைத்து வைத்திருக்கிறார்களா, அவர்களின் நிலை என்ன என்று கண்டறிந்து வா” என்று அனுப்பி வைத்தார்.

அந்த மாவீரனுக்கு அந்த ஐவரை சாமாளிப்பது இலகுவாக இருந்தது. சப்தம் கேட்டு அறையினுள் இருந்தவர்கள் கதவை திறக்க இயல, அது முடியாமல் போனதால் தங்களின் நிலை புரிந்து கொண்டனர்.

இதுவரை எங்குமே மாட்டிக் கொண்டது இல்லை, இப்பொழுது எப்படி மாட்டிக் கொண்டோம் என புரியாமல் விழித்தனர். அதற்குள் அந்த ஐவரையும் ரூபனர் வீழ்த்தியிருக்க, இறந்துவிட்ட மூவரை விடுத்து உயிரோடிருந்த இருவரை அங்கிருந்த தூணில் கட்டியிருந்தார்.

அதற்குள் சிறு படையோடு கோட்டை தலைவர் வந்திருக்க, ரூபனர் தனது கட்டளைகளை பிறப்பித்தார். “உள்ளே எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால், ஒருவர் கூட தப்பிக்க கூடாது. அவர்களின் உயிரே பிரிந்தாலும் பரவாயில்லை” என கர்ஜனையாய் கூற, வீரர்கள் அனைவரும் ஆயத்தம் ஆயினர்.

அந்த அறைக்கு ஒரேயொரு வழி தான் இருந்தது ஆகவே, அதனை அடைத்து விட்டதால் மாற்று வழி இல்லை. அந்த அறையின் கதவு திறக்கப்பட, தீப்பந்தங்களை எடுத்தபடி வீரர்கள் மூவர் முதலில் உள்நுழைய, அவர்கள் தொடர்ந்து ரூபனர் உட்பட மேலும் சிலரும் சென்றனர். உள்ளே சிதறியிருந்த பொருட்களையும், அதை அனைத்தையும் மூட்டை கட்டி வைத்திருந்ததையும் பார்த்தே அங்கு நடக்கவிருந்த விபரீதம் புரிந்திருந்தது.

மிகவும் சிறிய கூட்டம் என்பதால் காவலுக்கு சிலரை வெளியே நிறுத்திவிட்டு மீதம் இருந்தவர்கள் கொள்ளையடிக்கும் ஆசையுடன் உள்ளே நுழைந்திருந்தனர். உள்ளிருந்த அனைவரோடும் பெரும் சண்டை நடக்க, அவர்களை ஒருவழியாக வெளியேற்றி சிலரை கொன்றும், சிலரை உயிரோடும் பிடித்தனர் வீரர்கள்.

நாட்டின் முக்கிய செல்வங்களை பாதுகாத்து, நடக்கவிருந்த பெரும் கொள்ளை சம்பவத்தை தடுத்தமையால், ரூபனரின் புகழ் நாடு, நகரம் முழுவதும் பரவியது. அவரின் மீது அனைவருக்கும் நன்மதிப்பு கூடியது. அவரே சிறந்த படைத்தளபதி என மக்கள் அனைவரும் உளமார ஏற்றனர்.

Advertisement