Advertisement

சத்ரிய வேந்தன் – 8 – பிரயாணம்
மாலை மங்கும் வேளை, ஆதவன் தனது பொன்னிறக் கதிர்களை செந்நிறமாக்கி, கீழ்வானத்தின் மீதும் அந்த செம்மை நிறத்தினை தெளித்து, அந்த பொழுதினை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தான். வேங்கை நாட்டின் அரண்மனையில் அமைந்திருந்த மலர் தோட்டத்தின் மலர்கள் எல்லாம் அந்த பொன்மாலைப் பொழுதினில் மலர்ந்து மனம் வீசிக் கொண்டிருந்தது.
இத்தனை அழகான சூழலிலும், தமது சிந்தை பதியாமல் எதனையோ ஆழ்ந்து சிந்தித்த வண்ணம் இருந்தார் இளவரசர் சேயோன்.
சிறிது நேரத்தில் அங்கே வந்த காவலாளி ஒருவன், “இளவரசே! தாங்கள் கூறியபடி ஓலையை உரிய இடத்தினில் சேர்த்து விட்டேன்” என்று தமது முன்தலையை தாழ்த்தி கூறினான்.
“நல்லது. சரி இன்னும் சிறிது நேரத்திற்கு இங்கே யாரையும் அனுமதிக்காதே!” என்ற கட்டளையை பிறப்பித்து காவலனை அனுப்பிவிட்டு, அங்கே இருந்த ஒரு மரத்தடியில் தமது கைகள் இரண்டையும் பின்னே கட்டியபடி மீண்டும் சிந்தனையில் மூழ்கினான்.
‘நாம் எண்ணியது போலவே இந்நேரம் அவர்களுக்கு செய்தி கிடைத்திருக்கும். எனது யூகம் சரி என்றால் இனி என் எண்ணப்படி அனைத்தும் நடந்தேறும்’ என்று எண்ணியவரின் மனம், மருத தேசத்து அரசர் வீரேந்திர மருதருக்கு தாம் அனுப்பி விட்ட செய்தியை எண்ணிப் பார்த்தது.
“மருத தேசத்து சக்கரவர்த்தி வீரேந்திர மருதருக்கு எங்களது அன்பு வணக்கங்கள்.
உங்களிடம் சிறிய உதவியினை நாடி இந்த மடலினை எழுதி இருக்கிறோம். எமது தங்கை, வேங்கை நாட்டின்இளவரசி தோகையினிக்கு விரைவினில் திருமண ஏற்பாடு செய்யவிருக்கிறோம். சுயம்வரத்திற்கானபொறுப்புகளை தந்தையார் என்னிடமும், எனது இளைய சகோதரன் அருளோனிடமும் ஒப்படைத்திருக்கிறார்.
சுயம்வரத்திற்கு இன்னும் முழுமையான ஏற்பாடுகள் தொடங்கப்படவில்லை. முதல் கட்டமாக தோகையினிக்கானஆடைகளை வாங்குவது என முடிவு செய்திருக்கிறோம். தங்கள் தேசத்து நெசவாளர்களின் பெருமையை அதிகமாககேள்விப்பட்டு இருக்கிறோம்.
ஆகையால், தாங்கள் தங்கள் தேசத்திலுள்ள சிறந்த நெசவாளர்களை, அவர்கள் நெசவு செய்த பட்டாடைகளோடுஇங்கே அனுப்பி வைத்தீர்கள் என்றால் பெரும் உதவியாக இருக்கும்.
இளவரசி சமுத்திர தேவிகையின் தேர்வு நன்றாக இருக்கும் என்பது தாயார் சுபமித்திரையின் எண்ணம். ஆகவேஅவரின் மேற்பார்வையில் எமது தங்கை தோகையினிக்கு பொருந்தும்படியான நல்ல பாட்டாடைகளை தேர்வுசெய்து அனுப்பி விடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு, 
வேங்கை நாட்டின் இளவரசன் சேயோன்”
தாம் அனுப்பிய மடலில் இருந்த செய்தியை நினைத்து பார்த்த பொழுது சேயோனுக்கே வேடிக்கையாக இருந்தது.
“இந்த மடல் கிடைத்ததும் சக்கரவர்த்தி என்ன நினைத்திருப்பார்?”
” ‘வேங்கை நாட்டில் இல்லாத பட்டாடைகளா? இல்லை அங்கே நெசவாளர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? இந்த சேயோனுக்கு திடீரென்று என்ன நேர்ந்தது’ என்றபடியெல்லாம் அவரது சிந்தனை செல்லுமோ? பாவம் எப்படி எல்லாம் எண்ணிக் கொள்வாரோ?
சரி அவர் எதையாவது எண்ணிக்கொள்ளட்டும். நம் எண்ணப்படி, நாம் அனுப்பிய செய்தி சமுத்திராவை அடைந்திருந்தால் சரிதான். இந்த இரண்டு ஆண்டுகளில் தோகையினி செய்யும் ஒரே ஒரு வித்தியாசமான வேலை, சமுத்திராவிற்கு தூது அனுப்புவது மட்டுமே. ஆகையால், சமுத்திராவின் மூலம் இந்த பிரச்சனை முடிவுக்கு வரலாம். என் எண்ணம் பொய்க்காமல் இருக்க வேண்டும் இறைவா” என மனதார வேண்டிக் கொண்டார்.
** சந்திர நாட்டிலிருந்து ஒரு சாதாரண வாலிபனைப் போன்று வேடமிட்டு தமது குதிரையைப் பயன்படுத்தாமல், வேறு ஒரு வீரரின் குதிரையில் தமது பயணத்தை மேற்கொண்ட தீட்சண்யர், மருத தேசம் நோக்கி வந்தார். வரும் வழியினில் தந்தையிடம் என்ன கூறி சமாளிப்பது என்ற
எண்ணமே வலுவாக இருந்தது.
சந்திர நாட்டிற்கு சென்ற இந்த இரண்டு வருடங்களில், வைகாசி திருவிழா நடக்கும் சமயங்களில் கூட, மருத தேசத்திற்கு வருவதற்கான அனுமதி கிடைத்ததில்லை. “எடுத்துக் கொண்ட பணியினிலேயே உன்னை முழுவதும் மூழ்கடித்துக் கொள். அது முடியும் வரையிலும் எதிலும் கவனம் சிதறக்கூடாது” என்பதே தந்தையின் தாரக மந்திரம்.
இப்பொழுது அவரிடம் அனுமதி பெறாமலேயே உடனடியாக கிளம்பி வந்தாயிற்று! இதை நினைக்கையிலேயே உள்ளே ஏதோ நடுங்குவதை தீட்சண்யரால் தடுக்க முடியவில்லை. எவ்வளவு வளர்ந்தால் என்ன, தந்தைக்கு மகன் தானே! இயல்பாய் தவறு செய்துவிட்ட பிள்ளைகளுக்கு பெற்றோரிடம் இருக்கும் பயம் தீட்சண்யருக்கும் இருந்தது.
இந்த பயம் ஒருபுறமென்றால், சமுத்திரா எதற்கு அழைத்திருப்பாள் என்கிற குழப்பம் மறுபுறம். சமுத்திரா அனுப்பும் மடல்களில், அவள் இதுவரை வெளிப்படையாக தோகையினியின் பெயரைப் பயன்படுத்தியது இல்லை. ஆனால், தோகையினியைப் பற்றிய பல விஷயங்களை இலை மறை காயாக சமுத்திரா வெளிப்படுத்தியுள்ளாள்.
எப்பொழுதுமே தங்கையின் அறிவுத்திறமையை எண்ணி வியக்கும் தீட்சண்யர், ஓலை வரும் தருணங்களிலும் அவளது அறிவினை எண்ணி வியந்து மெச்சிக்கொள்வார். ஒருவரின் பெயரைக் கூட வெளிப்படுத்தாமல், ஓலை அனுப்பியதின் அர்தத்தினை உணர வைக்க இயலுமா? அது சமுத்திராவால் மட்டுமே சாத்தியம் என தோன்றும்.
‘ஆனால், இப்பொழுது எதற்கு இத்தனை அவசரமாக வரச் சொல்லியிருக்கிறாள். தோகையினிக்கு என்ன நேர்ந்து இருக்கும்? அவளை உடனே காண வேண்டும் போல உள்ளதே!’ என தீட்சண்யரின் மனம் கவலைக் கொண்டது.
முதன் முதலாக தோகையினியைப் பார்த்த தருணம் அவரது மனத்திரையினில் வலம் வந்தது. அன்றும் வழக்கம் போல மாறுவேடம் அணிந்து, நகர் வளம் சென்று விட்டு, தாமரைக்குளத்தின் அருகினில் உள்ள ரகசிய பாதை வழியாக அரண்மனையினுள் தீட்சண்யர் பிரவேசித்தார்.

அந்த இருள் சூழும் வேளையில், தாமரைக்குளத்தினில் உள்ள அல்லி மலர்களைப் பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பெண்ணைக் கண்டார்.

‘என்ன இது இந்த பெண் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாள். பொதுவாக இங்கே யாரும் வருவதில்லையே! அதுவும் பொழுது மங்கிய பிறகு யாராக இருக்கும்?’ என்றபடி அவளை சிறிது நேரம் நோட்டம் விட்டார்.
அவளது ஆடைகளிலிருந்தே அவள் ஒரு அரச குடும்பத்து பெண் என்பது புரிந்தது. மென் இருட்டு, பௌர்ணமி தினம் என்பதால், விண்ணில் தெரிந்த பூரண நிலவொளியினில் அவளது வதனம் வியக்கும்படியாக இருந்தது. அருகில் ஒருவர் இருப்பதைக் கூட உணராமல் அவளது சிந்தனை முழுவதும் மலரிலேயே பதித்து, குளத்தின் அருகினில் மண்டியிட்டு அமர்ந்து ஒரு குச்சியின் உதவியால் குளத்தினுள் இருந்த ஊதா வண்ண அல்லி மலரை அருகே இழுக்க முயற்சித்துக்
கொண்டிருந்தாள்.
வளையல்கள் நிறைந்த கைகளும், கண்களுக்கே புலப்படாத கால்களும், இருளைக் கூட உணராமல் மலரிலேயே கவனம் பதிந்திருந்த அவள் அழகிய விழிகளுமாக ரதியாகவே ஜொலித்தவளைக் கண்ட தீட்சண்யருக்கு, அவளது வதனம் மனதினில் பதியாது, ‘இந்த பெண் இந்த நேரத்தில் என்ன விளையாடிக் கொண்டிருக்கிறாள்?’ என்ற கோபமே முதலில் எழுந்தது.
பிறகு அவளிடம் பேச்சுக் கொடுத்து, அவளை அங்கிருந்து அழைத்து சென்றவருக்கு, சுற்றி உள்ள அனைவரும் தீட்சண்யரின் புகழ் பாட, அதைக் கேட்டவரது உள்ளத்தில் சலிப்பு சூழ்ந்தது. அவரை மனிதனாக எண்ணாமல் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவன் போல அனைவரும் புகழ்வது
பொதுவாக தீட்சண்யருக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் ஒரு விஷயமாகும்.
அந்த தருணத்தில், அதே எண்ணத்தோடு தோகையினியும் பேச, அதுவும் தான் யார் என்று தெரியாமல், தம்மிடமே தம்மைப் பற்றி பேச முதன்முதலாக அவள் மீது ஆர்வம் வந்தது. ஏனோ முன்பு அவர் கண்ணிலும் கருத்திலும் படாத அவளுடைய வதனம், இப்பொழுது தோகையினி பேசப்பேச அவர் மனம் முழுவதும் நிறைந்து கொண்டே வந்தது.
ஒரு மென்சிரிப்போடு தோகையினியை அவளும் உணராமல் ரசித்து வந்தார். இன்றும் அதே நினைவினில் அவரது இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.
தமது நெடுந்தூர பயணத்தின் முடிவினில், மருத தேசத்தை அடைந்த தீட்சண்யர், ரகசிய பாதையின் வழியே தாமரைக் குளம் அருகே செல்ல,

நல்ல வேளையாக அங்கே சமுத்திராவே இவரை எதிர்நோக்கி காத்திருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து தன் அண்ணனைக் காண்பதால், விழிகளில் அவளும் உணராமல் ஆனந்த நீர் பெருக்கலாயிற்று.

தாயினைக் கண்ட கன்றினைப் போல, “அண்ணா…” என்றபடி ஓடிவந்து அவன் மார்பில் முகம் புதைத்து விம்மத் தொடங்கிவிட்டாள்.
ஏற்கனவே என்னவோ, ஏதோ என்று பதறி வந்த தீட்சண்யருக்கு தங்கையின் கண்ணீர் மேலும் கலக்கத்தைக் கொடுக்க, “என்ன சமுத்திரா? எதற்கம்மா அழுகிறாய்? யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்து விட்டதா? நீ அழுவதை தாங்க முடியவில்லை சமுத்திரா. முதலில் அழுவதை நிறுத்தி விட்டு விவரத்தைக் கூறு” என தம் தங்கையின் அழுகை பொறுக்க மாட்டாமல் துடி துடித்துப் போனார்.
சட்டென விலகியவள் கேலியாக சிரித்து, “என்ன அண்ணா இரண்டு முழு வருடங்கள் கழித்து உங்களைக் காண்கிறேன். அந்த பிரிவிற்காக அழுதால், அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல், வந்ததும் வராததுமாக என் நலனைக் கூட விசாரிக்காமல், யாருக்கேனும் ஏதேனும் நேர்ந்து விட்டதா என்று உங்களுக்கு உரியவரின் நலனை விசாரிக்கிறீர்களே! நன்றாக இருக்கிறது போங்கள்” என்று கேலி பேசினாள்.
‘இவள் ஒருத்தி அனைத்தையும் சரியாக புரிந்து கொள்ளுவாள். இது பல நேரங்களில் உதவியாக இருந்தாலும், சில நேரங்களில் தொல்லையில் வந்து முடிந்து விடுகிறது’ என தீட்சண்யர் மனதிற்குள் எண்ணியபடி,
“உனது கற்பனைத்திறமை அழகாக இருக்கிறது சமுத்திரா. ஆனால், நான் உண்மையில் உன் அழுகை பொறுக்க மாட்டாமல் தான் அவ்வாறு கூறினேன். அது சரி நீ என்ன நான் கிளம்பும் பொழுது சிறு பெண்ணாய் இருந்தாய். இந்த இரண்டு வருடத்தில் நன்கு வளர்ந்து விட்டாயே!” ஆச்சர்யம் மேலோங்க தங்கையை ஆராய்வதைப் போல பார்த்து அவளுடைய முந்தைய கேலியில் இருந்து தப்பிக்க எண்ணினார்.
அவர் எண்ணம் சரியாகவே வேலை செய்தது. அவர் எண்ணியதுபோலவே சமுத்திராவும் தனது கேலியை விடுத்து, “என்ன அண்ணா நான் அப்பொழுதும் பெரிய பெண்தான் நீங்கள் வேண்டுமென்றே சீண்டுகிறீர்கள்” என்று செல்லமாக சிணுங்கினாள்.
மெலிதாக புன்னகைத்தவர், “ஆகட்டும் சமுத்திரா! நான் அரசு அலுவல் காரணமாக சென்றிருக்கிறேன். இது போன்ற தருணத்தில் இப்படி உடனடியாக புறப்பட்டு வர சொல்லி இருக்கிறாயே, தந்தையிடம் என்ன சொல்லி சமாளிப்பது. இங்கு எதுவும் பிரச்சனையா? என்னை ஏன் உடனடியாக வர சொன்னாய்?”
“இங்கே ஏதேனும் பிரச்சனை என்றால் தீர்ப்பதற்கு பலர் இருக்கின்றனர் அண்ணா. நான் ஏன் தங்களை தொந்தரவு செய்யப் போகிறேன்? இது தாங்களே முன் நின்று தீர்க்க வேண்டிய, சொந்த பிரச்சனை” என்றவள் முகத்தில் குழப்பம் நிறைந்திருந்தது.
“நானே பயணக் களைப்பில் இருக்கின்றேன். அதோடு தந்தையிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றேன். நீ என்னைக் கலவரப்படுத்தாமல் விவரத்தைக் கூறு சமுத்திரா”
“அண்ணா… அது வந்து வேங்கை நாட்டு இளவரசர் சேயோனிடம் இருந்து தந்தைக்கு ஒரு ஓலை வந்திருந்தது” என சொல்லி அந்த விவரங்களை சேயோனிடம் கூறினாள்.
“எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அண்ணா. தந்தையிடம் நான் தோகையினியைக் காண செல்கின்றேன் என மன்றாடி சம்மதம் பெற்று விட்டேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனியாக செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடன் படைத்தளபதியை அழைத்து செல்ல சொன்னார், நான் மறுத்து ‘அண்ணனை அழைத்து செல்கிறேன் தந்தையே, அவர்தான் மாறுவேடங்களை சரியாக போடுவார். வழியில் எந்த பயமும் இருக்காது’ என்று ஏதேதோ கூறி சம்மதம் பெற்று விட்டேன்.
ஆனால், நீ வருவது யாருக்கும் தெரியக்கூடாது என்று கூறி விட்டார். ஆகையால் தான் ஓலையைக் கூட காவலாளியிடம் நேரடியாக கொடுத்து விடாமல் ஆடைகளின் நடுவே வைத்து உனக்கு கிடைக்கும்படி செய்திருந்தேன். நாம் உடனே வேங்கை நாடு செல்ல வேண்டும் அண்ணா. நெசவாளர்கள் அவர்கள் ஆடையோடு விடியலில் தயாராய் வந்து விடுவார்கள். நாமும் அதே போல வேடமிட்டு, விடியலில் இங்கிருந்து புறப்பட்டு செல்லவேண்டும் அண்ணா. இன்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”
“சரி சமுத்திரா. நானும் தந்தையை கண்டுவிட்டு வருகிறேன்”
“அண்ணா நீங்கள் வந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன் அல்லவா. அதோடு தந்தையும் இங்கில்லை, விஜயபுரி நகரத்தில் ஏதோ போர் நடந்து பெரும் சேதமாம். அந்த நாட்டு மன்னர் வேலவர் பலத்த காயம் அடைந்துள்ளாராம். அவரைக் காண சென்றிருக்கிறார்.”

“ஆம்! நான் கூட கேள்விப் பட்டேன். ஆனால் எனக்கிருக்கும் அலுவல் என்னை எங்கேயும் நகர விடுவதில்லை.”

“அது இருக்கட்டும் அண்ணா கவலைப்படாதீர்கள். போர் நல்ல படியாக முடிந்தது. நான் கூறியது நினைவிருக்கட்டும் அண்ணா, நீங்கள் வந்தது யாருக்கும் தெரியக்கூடாது காவலாளி உடையிலேயே தென்புறம் உள்ள மாளிகையில் ஓய்வெடுங்கள். விடிந்ததும் கிளம்ப வேண்டும்.”
“அது சரி சமுத்திரா. நான் ஒருவேளை ஓலை படிக்காமல் இருந்திருந்தால், அல்லது தாமதமாக படித்திருந்தால்? நீ எப்படி சரியாக எனக்காக இந்த நேரத்தில் காத்திருக்கிறாய்?”
“நீங்கள் வரும் நேரம் குறித்து தந்தையிடமிருந்து தகவல் வந்திருந்தது அண்ணா. அதனால்தான் காத்திருந்தேன். அவர் எப்படி கூறினார் என்று எனக்கு தெரியவில்லை அண்ணா.”
“தந்தையார் நிச்சயம் எதையோ கணித்துவிட்டார். இல்லாவிடில் நான் வருவதற்கு சம்மதம் தந்திருப்பாரா? சரி அது இருக்கட்டும். நான் விடியலில் கிளம்பி முன்வாசல் வந்து விடுகிறேன். நீயும் சென்று ஓய்வெடு” என்று அவளிடம் இருந்து விடைபெற்று, தென்புறம் உள்ள மாளிகையினுள் ரகசிய பாதை வழியாக உள்நுழைந்தார். அங்கே அவருக்கான உணவும் அடுத்த நாளுக்கு தேவையான ஆடைகளையும் சமுத்திரா ஏற்கனவே தயாராக வைத்திருந்தாள்.
பஞ்சணையில் படுத்தவரது எண்ணங்கள் முழுவதும், ‘தோகையினிக்கு சுயம்வர ஏற்பாடா? ஆனால் அவள் ஏன் என்னிடமோ சமுத்திராவிடமோ தெரியப்படுத்தவில்லை. ஒரு வேளை அவளுக்கே இன்னமும் தெரியாதோ?’ என்றெல்லாம் தமது சிந்தனையை படர விட்டவர், அவரையும் அறியாமல் பயணக் களைப்பினால் கண்கள் சொருக உறங்கி விட்டார்.
அதிகாலையில் ஒரு நெசவாளி போல வேடம் அணிந்து, சமுத்திராவும், தீட்சண்யரும் மற்ற நெசவாளர்களோடு வேங்கை நாட்டினை நோக்கி தமது பயணத்தை தொடர்ந்தனர்.
இளவரசர் சேயோனின் எண்ணம் போலவே அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.

Advertisement