Advertisement

சத்ரிய வேந்தன் – 8 – பசலை நோய்
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்
உன் பார்வையில் விழும் பொழுதை
நான் ரசித்தேன்
பசலை நோய் கொண்டு வாடவிட்டாய்
உன் நினைவுகளால் நிதமும் மூழ்கடித்தாய்
தலைவா
நின்னைச் சரணடைய தவம் புரிந்தேன்
வேங்கை நாட்டின், பிரதான அரண்மனையில், வீணையை மடியினில் ஏந்தி அதனை மீட்டியபடி, தமது சிப்பி இமைகளை மூடியபடி சோகம் இழையோடிய குரலில் தோகையினி பாடிக்கொண்டிருந்தாள். பொன்னில் வெள்ளியை குழைத்து செய்த நிறத்தினில் மிளிரும் தோகையினி, பசலை நோயின் (தலைவனின் பிரிவாற்றாமை) தாக்கத்தால், தமது மேனியின் நிறம் குன்றி, அவளது வதனம் குலைந்து, தேகம் இழைத்து சோர்ந்து இருந்தாள்.
வீணையை மீட்டும் விரல்கள் மெலிந்து ஜீவன் இழந்து, மூடிய இமைகளிலிருந்து நீரினை வெளியேற்றியபடி பாடியவளின் சோகம் அங்கிருந்தோரையும் வாடச்செய்தது. இதனை எல்லாம் வாயிலின் அருகினில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வேங்கை நாட்டின் இளவரசன், தசர வேந்தரின் மூத்த மகன் சேயோனின் மனமும், நீரினைக் கண்டு பல நாட்களான நெற்பயிர்களைப் போன்று வாடியது.
தம் தமையன் வந்திருப்பதைக் கூட உணராமல் தோகையினி இருந்தாள். பணிப்பெண்களிடமும் தமது இருப்பை தோகையினியிடம் கூற வேண்டாம் என சேயோன் தமது சைகையில் கூறி இருந்ததால், அவர்களாலும் தோகையினியிடம் தெரிவிக்க இயலவில்லை.
“இளவரசி இன்று மலர்ந்த அல்லி மலர்கள்” என்றபடி பணிப்பெண் தாம் பறித்து வந்த அல்லி மலர்களை, இளவரசி பாடலைப் பாடி முடித்ததும் அவளிடம் கொடுத்தாள்.
மலர்களைப் பெற்றவளது முகம் பொய்யோ எனும்படியாக சிறிது நேரம் பிரகாசித்து மீண்டு பழையபடி மங்கிய நிலையினில் வாடியது. மீண்டும் பணிப்பெண்ணை தோகையினி பார்க்க, அவள் வண்ணக் கலவைகளையும், தூரிகையையும் இளவரசியின் அருகினில் நகர்த்தி வைத்தாள்.
ஊதா வண்ணத்தை தூரிகையில் எடுத்து வெண்மையில் ஜொலித்த அல்லி மலர்களின் இதழ்களில் பூசினாள். சிறிது நேரத்தில் அனைத்து மலர்களும் தமது வெண்மை நிறத்தை இழந்து, ஊதா நிறம் பெற்றது. அது கூட அந்த அல்லி மலர்களுக்கு தனிப் பொழிவினைக் கொடுத்தது. பிறகு அந்த மலர்களை தமது படுக்கையின் அருகினில் இருக்கும் வெள்ளியினால் செய்த அகன்ற கிண்ணத்திலிருந்த நீரினில் போட்டாள்.
இது அவளுடைய அன்றாட செயல்களில் ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் அவள் ஊதா வண்ண அல்லி மலர்களைக் கொண்டு வரும்படிதான், பணிப்பெண்களிடம் கட்டளையிட்டாள். அவர்கள் தாங்கள் இதுவரை ஊதா வண்ணத்தில் அல்லி மலர்களை கண்டதே இல்லை என்று திகைத்த பொழுதிலும், தோகையினிக்காக ஊதா வண்ண அல்லி மலர்களைத் தேடி அலைந்து இறுதியில் வெறும் கையோடு திரும்பி வந்தனர். ஏற்கனவே பசலை நோயினால் வாடி வதங்கியவள், விரும்பிய மலர்களைப் பெற முடியாமல் மேலும் வாடினாள்.
அதன் பிறகே வெள்ளை நிற அல்லி மலர்களுக்கு ஊதா வண்ணத்தை குழைத்து பூசி அதனை ரசிப்பதில் சிறிது ஆறுதல் அடைந்தாள். அவளது அரங்கேற்றம் முடிந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆகியிருந்தது. மருத தேசத்தினிலிருந்து வந்தது முதல், தீட்சண்யரின் பிரிவினை தாங்க முடியாமல் வாடத் தொடங்கினாள்.
தீட்சண்யர் முதன்முதலாக தோகையினிக்கு மயில் மூலம் கொடுத்தனுப்பிய ஊதா வண்ண அல்லி மலர்களை, இன்று வரையும் பத்திரப்படுத்தி வைத்திருப்பவளுக்கு அந்த வாடிய மலர்களைக் காண்பதிலும், அதன் நினைவாக அதே வண்ணத்தில் மாற்றி அமைக்கப்பட்ட, இந்த வண்ணம் பூசப்பட்ட அல்லி மலர்களைக் காண்பதிலும் மட்டுமே மனதிற்கு சிறிது ஆறுதல்.
தோகையினியின் தவம் கலைந்து சேயோனை உணர்வதாகவே தெரியவில்லை. ஆகையால், சேயோனே அவளை நோக்கி “தோகையினி…” என்று குரல் கொடுத்த வண்ணம் அறையினுள் சென்றார். திடீரென தமையனைக் கண்டவள் பதறி எழுந்தாள்.
“தோகையினி! எதற்கு பதற்றம்? அமர்ந்து கொள்ளம்மா. ஆமாம் உனக்கு உடல் நிலை எதுவும் சரி இல்லையா. மிகவும் சோர்ந்து தெரிகிறாயே?” என்றவாறு மிக இலகுவாக பேச்சை தொடங்கினார்.
“அவ்வாறெல்லாம் இல்லை அண்ணா” என்று முயன்று புன்னகைத்து பதில் கூறியவளின் முகத்தில் அந்த புன்னகை சுடர் எள் அளவிலும் இல்லை.
அவள் விழிகளையே ஆழ்ந்து நோக்கிவிட்டு, “எனக்காகா ஒரு உதவி புரிவாயா தோகையினி?” என்று கேட்டார்.
“என்ன அண்ணா பெரிய வார்த்தைகளை எல்லாம் கூறுகிறீர்கள். என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.”
“நீ இன்றி உணவே ருசிப்பதில்லை அம்மா. இப்பொழுதெல்லாம் அனைவரும் உணவருந்தும் வேளையில் ஒன்றாக உணவருந்த நீ வருவதில்லை. நாளையிலிருந்து வழக்கம் போல உணவருந்த வருகிறாயா?”
“மன்னித்து விடுங்கள் அண்ணா! நான் இவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஏதொ சிந்தனையில் தவற விட்டு விட்டேன். இனி சரியாக நடந்து கொள்கிறேன் அண்ணா.”
குற்ற உணர்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க கூறியவளின் தலையை ஆதுர்யமாக தடவியவர், “என்னிடம் எதுவும் கூற வேண்டுமா தோகையினி?” மீண்டும் அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி கேட்டார்.
மறுப்பாக தலை அசைப்பவளைக் கண்டு, லேசாக பெருமூச்சினை வெளியேற்றி விட்டு, “சரி நீ உறங்கி ஓய்வெடு. நான் வருகிறேன்” என்றபடி வெளியேறினார்.
சேயோன் அங்கிருந்து வெளியேறி, தமது தாயார் சுபமித்திரையைக் காணச் சென்றார். “அம்மா…” என்ற அழைப்புடன் அன்னையிடம் நெருங்க,
“வா சேயோன்… உனக்காகத்தான் காத்திருந்தேன். தோகையினியிடம் பேசிப் பார்த்தாயா?” எதிர்ப்பார்ப்புடன் மகனை ஏறிட்டார்.
“இல்லை அம்மா சுயம்வரம் பற்றிய பேச்சினை என்னால் எடுக்கவே முடியவில்லை அம்மா. மிகவும் சோர்ந்து தெரிகிறாள். என்ன, ஏது என்றும் கூற மாட்டேன் என்கிறாள். அவளை இந்த கோலத்தில் என்னால் காணவே முடியவில்லை அம்மா.
எதையோ பேசச் சென்று, எப்படித் தொடங்க என்று தெரியாமல், இறுதியில் அவளை தனியாக உணவருந்தாதே என்று மட்டும் கேட்டுக் கொண்டு வந்து விட்டேன்” என்று கூறிய சேயோனின் முகத்தில் தங்கையை எண்ணி கவலை ரேகைகள் படர்ந்து இருந்தது.
“என்ன மகனே! நீ கூட இப்படி பின்வாங்கி விட்டாயே? இரண்டு வருடங்களாக நான் மட்டும் கேட்கிறேன். அவள் பிடி கொடுப்பதாகவே தெரியவில்லை. எதையோ நினைத்து மருகுகிறாள் அதையும் வெளிப்படுத்த மாட்டேன் என்கிறாள்” கண்களில் கலக்கத்த்துடனும், தவிப்புடனும் சுபமுத்திரை கூறினார்.
“எல்லாம் அந்த திருவிழாவிற்கு சென்று வந்த பின்னர் வந்தது மகனே! அவளின் அரங்கேற்றத்தை நீ கண்டிருக்க வேண்டுமே! தேவகன்னியர்களே பொறாமை படும் அளவு எவ்வளவு அழகாக ஆடினாள் தெரியுமா? யார் கண் பட்டதோ அங்கிருந்து திரும்பியதில் இருந்து என் மகள் இப்படி ஆகி விட்டாள். நத்தை தன் கூட்டிற்குள் சுருண்டு கொள்வது போல, நாளாக நாளாக அறையினுள்ளேயே முடங்கி கொள்கிறாளே!” மகளை எண்ணி கவலையில் அந்த தாயார் கண் கலங்க கூறினார்.
“கவலை வேண்டாம் அம்மா. நான் வேறு ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன். விரைவில் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். நீங்கள் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு நிம்மதியாக இருங்கள்.”
“அப்படியா சேயோன்! என்ன செய்திருக்கிறாய்?” ஆர்வம் மேலோங்க சுபமுத்திரை கேட்டார்.
“பொறுத்திருங்கள் அம்மா. எல்லாம் நல்லபடியாக நடந்தால் கூறுகிறேன்.”
“உனது திட்டமிடும் திறமையைப் பற்றி நன்கு அறிவேன் மகனே! அதிலும் கடந்த ஓராண்டாக பொறுமையாக, உன் தங்கையின் விஷயத்தை நீ கையாண்டு வருகிறாய். ஆகையால் நீ சரியான ஏற்பாட்டைத்தான் செய்திருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உன் எண்ணப்படியே எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று கூறியவரது மனதிலிருந்து பெரும் பாரம் இறங்கியதைப் போன்ற உணர்வு.
“எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தாயே!” என்று தம் அன்னையின் மனதை குளிர வைத்து விட்டு, சேயோன் தம் அறைக்கு சென்றார்.
அங்கே அவர்கள் அறையினில் சேயோனுக்காக காத்திருந்த அவருடைய மனைவி வருணதேவி, “வாருங்கள் வாருங்கள். நீங்கள் எண்ணியது எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?” என முகத்தில் புன்னகையை படர விட்டபடி வரவேற்பளித்தாள்.
வருணதேவியையே ஆழ்ந்து நோக்கிய சேயோன், “என்ன வருணா இன்னும் என்னை அழைக்கும் முறை உன் இதழ்களில் இலகுவாக வருவதில்லை போலும்” கேலியாக கேட்டு அவருடைய மனையாளை கன்னம் சிவக்க வைத்தார்.
“என்ன நீங்கள் நான் என்ன கேட்கிறேன், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் அத்தான்.”
“இதை முன்னமே கூறியிருந்தால், நான் ஏன் உன்னை வம்பு செய்யப் போகிறேன். ஆனால், உன் முகசிவப்பு கூட ஒரு தனி அழகு தெரியுமா?”
“சற்று மெல்ல பேசுங்களேன். பிள்ளைகள் உறங்குகிறார்கள். நான் உங்களை அத்தான் என்று அழைத்தால், உங்கள் அருமைப் புதல்வனும் அவ்வாறே அழைக்கிறான். நான் என்ன செய்ய?”
“அது பிள்ளைகள் முன்னிலையில் என்றால் சரி. உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு கேட்கவா போகிறது.”
“கேலிப் பேச்சினை தாங்கள் விடப்போவதில்லையா?” பொய்யாக முகத்தை திருப்பியபடி கேட்டாள் அவரின் மனையாள்.
“சரி சரி சமாதானம். இன்றும் வழக்கம்போலதான் வருணா, தோகையினி எதையுமே கூறவில்லை” குரல் மெலிந்து சேயோன் கூற, அதிலிருந்த வருத்தத்தை அவளால் உணர முடிந்தது.
“சரி விடுங்கள் அத்தான். நீங்கள் வேறு எதையோ முயற்சித்திருக்கிறீர்கள் என்றீர்களே அது நிச்சயம் நல்ல பலனைத்தரும்” ஆருடமாய் சொல்லி ஆறுதல் தந்தாள்.
“உன் வாக்கு பலித்தால் மகிழ்ச்சிதான். தந்தையும் தாயும் தினமும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களை சமாளிக்கவே முடியவில்லை தெரியுமா?”
“முன்பெல்லாம் தோகையினி அதிக ஆர்ப்பாட்டம் செய்து, துறுதுறுவென வளம் வராவிடினும், அவளது புன்னகை நிறைந்த முகத்தினைப் பார்த்தாலே மனதினுள் இருக்கும் கவலைகள் எல்லாம் பறந்துவிடும். அவள் பயின்றதை தினமும் ஆடிக்காட்டுவாள் அவளது அபிநயங்கள், நடனம் என பார்க்க பார்க்க தெவிட்டாது. மனதினில் பட்டதை மறைவில்லாமல் கூறுபவள். அவளை இப்படி காணவே முடியவில்லை வருணா.
எப்படி மெலிந்து, பொலிவிழந்து, நடனமாடுவதைக் குறைத்து, பேசுவதை குறைத்து தாயார் கூறுவதைப் போன்று யார் கண் பட்டதோ தெரியவில்லை” என்று சேயோன் தனது கவலைகளை எல்லாம் மனையாளிடம் கொட்டலானார்.
வருணதேவியும் அனைத்தையும் அறிந்தவர்தான். அவர் திருமணமாகி வேங்கை நாட்டிற்கு வரும் பொழுது, தோகையினி பதின்வயதின் தொடக்கத்தில் இருந்தாள். மிகவும் அமைதியான, அன்பான பெண். அவள் நடனத்தை தினமும் வருணதேவியும் ரசிப்பாள். தன் மகள் தோகையினியைப் போல பிறக்க வேண்டும் என்று கூட பிரியப்பட்டவர். அனைத்தும் அறிந்த அவரிடமே, புதிதாக கூறுவதைப் போல சேயோன் கூறியதிலிருந்தே, அவருடைய சோகத்தின் அளவினை வருணதேவியினால் உணர முடிந்தது.
ஆனால் வருணாவும் எவ்வளவோ முயன்றும் தோகையினியின் சோகத்திற்கான காரணத்தை அறிய முடியவில்லை. குடும்பத்தினரின் கவலைக்கு ஆறுதல் கூட கொடுக்க இயலவில்லை. என்ன சொல்லி இவர்களை தேற்றுவது. மெல்ல சேயோனின் தலையினை வருடி உறங்க வைத்தார்.
கணவன் மேற்கொள்ளும் முயற்சிகள் பலித்து, விரைவினில் தோகையினி பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர அந்த பூமகளால் எதுவும் செய்ய இயலவில்லை.
** சந்திர நாட்டிற்கு சென்ற இளவரசர் தீட்சண்யர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் முயற்சி செய்து சந்திர நாட்டின் எதிரிகளை களையெடுத்தார். இதற்கிடையில் சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்தரின் உடல் நிலை தேறுவதும், குன்றுவதுமாக இருந்தது. எப்படியும் அவரால் இனி அதிக காலம் வாழ இயலாது என்பது தெளிவாக புரிந்தது. அதனைப் பற்றிய விவரங்களையும், விரைவில் சந்திர நாட்டினை ஆள்வதற்கு புதிய மன்னரை ஏற்பாடு செய்யும்படியும் தமது தந்தையார் வீரேந்திர மருதருக்கு செய்தி அனுப்பி இருந்தார்.
சந்திர நாட்டிற்கு புதிய மன்னரை ஏற்பாடு செய்வதற்குள் உள்நாட்டு சதிகள் மொத்தத்தையும் களை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே தீட்சண்யரின் குறிக்கோளாய் இருந்தது. அதற்கான கடும் முயற்சியினை மேற்கொண்டார்.
கண்ணுக்கே தெரியாத எதிரிகளை அழிப்பது அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை. அதிலேயே முழுவதிலும் ஈடுபட்டவரால், நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை புதிதாக வகுக்கவோ, செயல் படுத்தவோ இயலவில்லை. அதற்கான நேரமும் இல்லை என்றே கூறலாம். இதற்கு முன்பு மன்னர் அருள் வேந்தர் வகுத்த நலத்திட்டங்களையே தொடர்ந்து செய்யும் படி மட்டும் மந்திரி பெருமக்களையும், அரசு அலுவலர்களையும் பணித்திருந்தார்.
இன்னும் ஒரே ஒரு சதி கூட்டத்தை மட்டும் முறியடிக்க வேண்டும், அவர்கள் யார் என்றும் இனம் கண்டு பிடித்து விட்டார். ஆனால், அதற்குள் அவர்கள் மொத்த கூட்டமும் எங்கேயோ பதுங்கி விட்டனர். அவர்களின் சதியை முழுவதும் முறியடித்து விட்டார், இப்பொழுது அவர்கள் கூட்டத்தை மட்டும் அழித்து விட்டால், தாம் வந்த வேலை அவருக்கு முடிந்துவிடும். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாய் இருக்கப் போவதில்லை என்பது அவருக்கு தெரியாது.
இவ்வாறான ஒரு தருணத்தில், தீட்சண்யரின் தங்கை சமுத்திரையிடமிருந்து ஒரு ஓலை வந்திருந்தது.
“அண்ணா! உடனே கிளம்பி வாருங்கள் மிகவும் அவசரம்” என்று மொட்டையாக வந்த ஓலையிலிருந்தே இது தோகையினி சம்மந்தப்பட்ட விஷயம் என்பது புரிந்துவிட்டது.
நாட்டின் நிலைமை ஒருபுறம், தங்கையின் செய்தி மறுபுறம் என மிகுந்த குழப்பமடைந்து, இறுதியில் நாட்டிற்கு பலத்த காவலை ஏற்படுத்தி, அந்த சதி கூட்டத்தினர் யாரைப் பார்த்தாலும் கொல்லும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, அந்த நாட்டின் தளபதியாரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, மாறு வேடத்தில் மருத தேசம் நோக்கி புறப்பட்டு சென்றார்.

Advertisement