Advertisement

சத்ரிய வேந்தன் – 7 – யுத்த களம்
ரூபனர் தமது படை வீரர்களுக்கு வில் எய்தும் பயிற்சி, வாள் வீச்சு என அனைத்து பயிற்சிகளையும் நுணுக்கமாக கற்றுக் கொடுத்திருந்தார். வீரர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியினை மிகுந்த ஈடுபாட்டோடு கற்றுக் கொண்டு அவர்களின் தரத்தை நன்கு முன்னேற்றியிருந்தனர்.
ரூபனர், விஜயபுரி நகரத்தின் படை வீரர்களை, தான் எண்ணியதை விடவும் சிறப்பாக தயார் செய்திருந்தார். அவர்களது முன்னேற்றத்தை கண்கூடாக பார்த்தவரின் மனம், மழலையின் வளர்ச்சியை ரசிக்கும் அன்னையைப் போன்று மகிந்தது.
ஆனால், நாட்கள் கடக்க கடக்க, மலைக்கள்ளர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் ரூபனரின் கோபத்தை தூண்டிக் கொண்டே இருந்தது. ரூபனரின் மனம் மலைக்கள்ளர்களை அவர்கள் இடம் சென்றே அழித்திட வேண்டும் என்பது போல எரிமலையாய் சினந்தது.
மாவீரன் ரூபனரைப் பொறுத்த வரையிலும்,
“விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.”
என்ற வள்ளுவரின் வாக்கினைப் போல, அவன் முகத்திலோ, மார்பிலோ போரின்போது புண்படாத நாட்கள் எல்லாம் பயனற்ற நாட்களாகவே தோன்றியது.
பெரும்பாலான மாவீரர்களின் எண்ணங்கள் இவ்வாறாகவே இருக்கும். இத்தகைய எண்ணங்கள் கொண்ட மாவீரன் போருக்காக தயாராகி வந்த பின்னர், இப்படி வெறுமனே காத்திருப்பது கோபத்தை அதிகரிக்க செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யமே!
ஆனால், மலைக்கள்ளர்களின் தாமதத்தில் கூட ஒரு நன்மை இருக்கத்தான் செய்தது. வீரர்களுக்கு சிறப்பான ஒரு பயிற்சியினைத் தர முடிந்ததே! அதுமட்டிலும் ரூபனருக்கு ஆறுதல். இதுவரை மாபெரும் வீரனாக மட்டுமே திகழ்ந்து வந்தவருக்கு, தம்மால் ஒரு பெரிய அணியையே தயார் படுத்த முடியும் என்ற நம்பிக்கையை, இந்த காத்திருப்புக் காலம் கொடுத்திருந்தது.
‘ஒருவேளை, அவர்கள் தாமதம் செய்யாமல் உடனே போர்தொடுக்க வந்திருந்தாலும், நம்மிடம் இருக்கும் ஐயாயிரம் வீரர்களும் அந்த இரண்டாயிரம் மலைக்கள்ளர்களை எதிர்த்து தாக்கு பிடிப்பது சிரமமாகவே இருந்திருக்கும். தலைமை குருதான் அவர்களின் வீரத்தை தெளிவுற கூறினாரே!
ஆனால், அத்தனை வீரம் மிகுந்தவர்கள் ஏன் உடனடியாக போர் தொடுக்க வரவில்லை?’ இந்த கேள்வி ரூபனரின் மனதைக் குடைந்தது.
நன்கு சிந்தித்திருந்தால் காரணம் விளங்கி இருக்கும். விஜயபுரி நகரம் ஒன்றும் தனித்து செயல் படவில்லேயே. மலைக்கள்ளர்களுக்கு விஜயபுரி நகர வீரர்களை வெற்றி பெறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், அதன் பின்பு அவர்களின் நிலைமை, மருத தேசத்தின் படைகள் மலைக்கள்ளர்கள் கூட்டத்தையே அழித்து விடுமே!
போர் தொடங்கிய உடனேயே அருகில் உள்ள நாடுகளுக்கும், மருத தேசத்திற்கும் செய்தி கிடைத்துவிடும். விஜயபுரி வீரர்களை வென்று தப்பிப்பதற்குள் பெரும் படை சூழ்ந்து மொத்தக் கூட்டத்தையும் அழிக்க வாய்ப்பிருக்கிறதே! இந்த காரணங்களால்தான் மலைக்கள்ளர்கள் பதுங்கி இருக்கிறார்கள்.
ஆனால், என்ன செய்ய தளபதி ரூபனருக்கு அனுபவம் குறைவென்பதால், அவருக்கு வீரம் இருக்கும் அளவு அதிக அளவினில் சிந்தனைத் திறன் இருப்பதில்லை. எதையுமே தனது வீரத்தைக் கொண்டே எடை போடும் குணம் கொண்டவர். தமக்கு எதிரினில் ஆயிரம் போர் வீரர்கள் எதிர்த்து நின்றாலும் துளியும் சிந்திக்காது தமது வீரத்தினை துணையாகக் கொண்டு தம் பாதையில் முன்னேறுபவர். அவரைப் பொறுத்தவரையில் செய் அல்லது செத்து மடி. சிந்திப்பதும், தீர யோசித்து ஆராய்ந்து முடிவெடுப்பதும் அவர் அகராதியில் பெரும்பாலான நேரங்களில் இருந்ததே இல்லை.
** மலைக்கள்ளர்கள் கூட்டம் பதுங்கி வாழ்ந்து, அடிக்கடி இருப்பிடம் மாற்றி, பெரும் கள்ளத்தனம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் இருப்பிடம் வெளிப்படும் என்று அவர்கள் யோசித்ததே இல்லை. பல தேசங்களுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள், இப்பொழுது இருந்தது மருத தேசத்தின் ஒரு எல்லையில்.
இயன்றவரை இங்கே தங்களது கைங்கரியத்தை காட்டிவிட்டு வேறு இடம் நகர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இப்படி மாட்டிக் கொண்டனர்.
மலைக்கள்ளர்களுக்கு விஜயபுரி போரினை எதிர்த்து பதுங்கி வாழ்வது சாதாரணமாக இருக்கவில்லை. சில நாட்கள் பதுங்கி இருந்தால் விஜயபுரி நகரத்து படைகள் பின்வாங்கி விடும், பின்னர் நமது தொழிலில் ஈடுபடலாம் அல்லது வேறு தேசம் சென்று விடலாம் என்று எண்ணி இருந்தவர்களுக்கு, விஜயபுரி நகரப்படை இப்படி மாதக்கணக்கினில் முகாமிட்டது பெரிய இடி.
அவர்களின் இருப்பிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் அமைத்திருந்தவர்களுக்கு, இப்படி மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணமே இதுவரை வந்ததில்லை. ஏனெனில் அவர்கள் பதுங்கி இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மிகவும் பெரியது. அங்கே பல மாத காலமாக பதுங்கி வாழும் இவர்களுக்கே ஒரு சில பகுதிகள் மட்டுமே பரிட்சயம்.
எனவே, எந்த படை அவர்களை அழிக்க இந்த வனாந்திரம் வந்தாலும் அவர்களை எதிர்கொள்வதற்கு, பதுங்கி இருந்து அழிப்பதற்கு என இவர்களிடம் பல திட்டங்கள் இருந்தது. ஆனால், இப்படி காட்டினை விட்டு வெளியேறும் பகுதியினில் ஒரு படை வந்து காத்திருக்கும் என்பது அவர்கள் கனவிலும் எண்ணாத ஒன்று.
ஏனெனில் அதற்கும் காரணங்கள் இருந்தது. ஜீவ சுடர் நதி, மேற்கு மலைத்தொடர்களிலிருந்து உருவாகி பாய்ந்தோடும் நதி. அதில் எப்பொழுதும் கரையினை தொட்டபடி நீரோட்டம் இருக்கும். பல நேரங்களில் வெள்ள அபாயம் உள்ளது. அதோடு மற்றொரு பகுதியினில் இருக்கும் காடும் மிக மிக ஆபத்தானது. அங்கே வசிக்கும் விலங்குகளால் உயிருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தீங்கு நேரலாம், ஏன் அந்த காட்டினை கடந்து உயிருடன் வெளிவருவதே சாத்தியமற்றது.
இப்படிப்பட்ட ஆபாத்தான இடங்களுக்கு இடையே அமைந்துள்ள பகுதியினைக் கடந்து, கொள்ளை அடிக்க செல்வதே மிகவும் கடினமான விஷயம். அப்படிப்பட்ட இடத்தினில் மாதக்கணக்கினில் முகாமிடுவார்கள் என்பதை அவர்கள் எண்ணியதே இல்லை.
அவர்கள் முகாமிட்ட பொழுதும், சில நாட்களில் தாக்கு பிடிக்கமுடியாமல் சென்று விடுவார்கள், அதுவரை நாம் களவாக கொண்டு வந்த நெல் மூட்டைகள் மூலமும், காட்டில் கிடைக்கும் பழங்களைக் கொண்டும் நாட்கள் கடத்திடுவோம் என்று எண்ணி இருந்தனர். அந்த எண்ணமும் பொய்த்து போனது.
இப்பொழுது அவர்களிடம் இருந்த உணவுப் பொருட்களுக்கும் பஞ்சம் ஏற்பட, கொள்ளை அடித்த செல்வங்களால் என்ன பயன்? பொற்காசுகளை பசிக்காக புசிக்க முடியுமா? இதில் இடையில் பெய்த பெருமழை வேறு பெரும் சேதாரத்தையும், உடல் சோர்வையும் கொடுத்திருந்தது.
இனி அவர்களுக்கு விஜயபுரி வீரர்களை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத நிலை. எவ்வளவு விரைவினில் அவர்களை வென்று இந்த தேசத்தை விட்டு செல்ல முடியுமோ அவ்வளவு விரைவினில் செல்ல வேண்டும் என்ற முடிவோடு களம் காண தயாராகினர்.
“கொள்ளை அடித்த மொத்த பொருட்களையும் கொண்டு செல்லாமல், வேண்டியனவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நாம் அவர்களை அழிப்பது நமது நோக்கமில்லை. இயன்றவரை அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல வேண்டும்.
தப்பிப்பவர்கள் அனைவரும் புவனகிரியின் வடக்கு வனத்தில் அமைந்துள்ள பாழடைந்த மண்டபத்திற்கு வந்து விடுங்கள். அங்கிருந்து எங்கு செல்லலாம் என்பதனை தீர்மானித்துக் கொள்ளலாம்” என்றவாறு கள்வர் கூட்டத்தின் தலைவன் மற்ற அனைவருக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தான்.
கட்டளைகளுக்கு ஏற்றவாறு அனைவரும் தங்களது உடைமைகளுடன் போருக்கு தயாராகினர். அடுத்த நாளின் விடியலில் இரண்டாயிரம் பேரும் மிகுந்த ஆக்ரோஷத்தோடு விஜயபுரி வீரர்களைக் களம் கண்டனர்.
மலைக்கள்ளர்கள் காட்டினைத் தாண்டும் பொழுதே, ரூபனருக்கு செய்தி கிடைக்கும் படி தலைமை குரு செய்திருந்த ஏற்பாட்டினால், ரூபனரும் தமது படை வீரர்களுடன் எதிர்கொள்ள தாயாராக இருந்தார்.
அவர் எதிர்பார்த்ததைக் காட்டிலும் ஆக்ரோஷமான போராக அது அமைந்திருந்தது. விஜயபுரி வீரர்கள் இயன்றவரை தங்களது முழு திறமையையும் பயன்படுத்தி எதிர் அணியினரை கலங்கடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், மலைக்கள்ளர்களின் வீரம் அவர்கள் எண்ணியதை விடவும் பெருமடங்காக இருந்தது.
வெறும் ஐநூறு பேரினைக்கொண்டு இரண்டாயிரம் பேரை சமாளிப்பது எளிதானதாக இருக்கவில்லை. விஜயபுரி நகரத்திற்கு செய்தி அனுப்பி மீதம் உள்ள படைகளோடு அவர்கள் வந்து இணையவே அன்றைய நாளின் பிற்பகுதி ஆகிவிட்டது.
அதற்குள் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருந்தது. இதனால் ரூபனர் தான் மிகவும் மனமுடைந்து போனார். யுத்தம் தொடங்கிய முதல் நாள் மாலையில், இருள் சூழ தொடங்கிய வேளை மலைக்கள்ளர்கள் கூட்டம் பின்வாங்கி மீண்டும் காட்டினில் பதுங்கியது.
மலைக்கள்ளர்கள் எண்ணியதை விடவும் இந்த போர் கடுமையாக இருந்தது. மிக சிறிய, கரடு முரடான இடம் என்பதால் அவர்களால் அந்த ஐநூறு வீரர்களைக் கூட கடக்க முடியவில்லை. அதற்கு விஜயபுரி போர் வீரர்களின் வீரமும் முக்கிய காரணமாகும். வெறும் ஐநூறு போர் வீரர்கள் நம்மை சமாளிக்கிறார்கள் என்றால், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை.
மலைக்கள்ளர்களின் தலைவன் மிகவும் கோபத்தில் இருந்தான். அவன் பிற கள்ளர்களிடம், “வெறும் ஐநூறு பேரை நம்மால் சமாளிக்க இயலவில்லை. நாளை எவ்வாறு ஐந்தாயிரம் பேரை சமாளிக்கப் போகிறோம்? நீங்கள் அனைவரும் இவ்வளவு மந்தமாக செயல்பட்டால் இந்த கூட்டம் முற்றிலும் அழிந்துவிடும்.
முதலில் விஜயபுரி மன்னனை அழிப்போம். அவர் மண்ணில் சாய்ந்தால் போதும், அந்த சோகத்தினில் மீதம் இருப்பவர்களை எளிதினில் அழித்து விடலாம்” என்று கூறியவன் மன்னனை வீழ்த்துவதற்காக, சில திட்டங்களை வகுத்தான்.
ஜீவசுடர் நதியின் கரையெல்லாம் ரத்தம் உறைந்து, பல வீரர்களின் உடல் ஆங்காங்கே கிடந்தது. அவர்களின் உடல்களை எல்லாம் நாட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்தது.
ரூபனர், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். ஒரு மாவீரனுக்கு இறப்பு என்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால், ரூபனரைப் பொறுத்த மட்டில், தமது படை வீரர்களை இவ்வளவு தயார்படுத்தியும் இப்படி ஒரு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறதே என்பதே பெரும் கவலை.
நூற்றுக்கணக்கான வீரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது மண்ணில் வீழ்ந்து விட்டது அவரது உயிர்வரை சென்று பிசைந்தது. பலரும் வைத்திய குழுக்களிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தனர். இனி இயன்றவரை உயிர் சேதத்தை குறைக்க வேண்டும் என்று எண்ணினார்.
மன்னரையும் தலைமை குருவையும் சந்தித்த ரூபன சத்ரியர், இதனைப்பற்றி ஆலோசனை நடத்தினார். போர் வீரர்களுக்கான சிறப்பு கவச உடைகளை ஏற்கனவே வரவழைக்க ஆணை பிறப்பிக்கப் பட்டதையும், நாட்டில் உள்ள பெரும்பான்மையான வைத்திய குழுக்களைக் கொண்டு வைத்திய முகாம் அமைக்கப் பட்டிருப்பதைப் பற்றியும் தலைமை குரு ரூபனரிடம் கூறினார்.
ரூபனருக்கு மனம் சற்று நிம்மதி அடைந்தது. நாட்டின் மொத்த படையும் இப்பொழுது இணைந்திருந்ததால் அடுத்த நாளுக்கான போரினை எதிர் நோக்கி காத்திருந்தார்.
இரண்டாம் நாள் போரும் தொடங்கியிருந்தது. முன்தினம் போரினில் மன்னர் இல்லாத காரணத்தால் ரூபனர் தலைமை தாங்கியிருக்க, இன்றைய போரினில் மன்னர் வேலவர் தலைமையில், மலைக்கள்ளர்களை எதிர்த்து கடும் போர் புரிந்தனர்.
இரண்டாம் நாள் போர், மிக கடினமான போராக அமைந்திருந்தது. விஜயபுரி வீரர்களின் வீரத்தின் முன்பும், இன்று கூடியிருந்த நான்காயிரத்திற்கும் அதிகமான படை பலத்திற்கு முன்பும் மலைக்கள்ளர்களால் தங்கள் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
மலைக்கள்ளர்கள் மன்னரை குறி பார்க்க பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்களால் முற்பகல் முழுவதும் அது முடியவில்லை. எப்படியேனும் மன்னரை வீழ்த்தி விஜயபுரி வீரர்களை திசை திருப்பி இங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதற்காக அவர்களும் விடாது சூழ்ச்சி செய்தனர். அவர்கள் முந்தைய தினம் போட்ட திட்டங்கள் அனைத்தும் இன்று செயல்படுத்த இயலாமல் வரிசையாக தோல்வியைத் தழுவியது.
மலைக்கள்ளர்களால் விஜயபுரி வீரர்களை அழிக்க முயற்சி கூட செய்ய இயலவில்லை. கிட்டத்தட்ட நான்காயிரம் வீரர்களும் ஒரு சேர தாக்க, அதிலிருந்து தடுப்பதே பெரும்பாடாக இருந்தது. அதற்குள் பல உயிர் சேதங்களும் ஏற்பட்டிருந்தன.
மலைக்கள்ளர்களின் தலைவன் இறுதியாக அவர்களின் அடுத்த திட்டத்தை செயல்படுத்த ஆயுத்தமானான். அதன்படி அனைவரையும் அருகே கூடும்படி கூறிவிட்டு, பல வீரர்களைக் கொண்டு அவர்களின் கேடயத்தின் உதவியால் முன்னே அரண் அமைக்கும்படி கட்டளையிட்டான். வீரர்கள் அமைத்த கேடயத்தினால், விஜயபுரி வீரர்களின் அம்புகள் கேடயத்திற்கு பின்னால் இருந்த கள்ளர்களை தீண்ட முடியாமல் இருந்தது.
அதன் பின்னர், மிகவும் பயிற்சி கொண்ட மாவீரர்களோடு சேர்ந்து அரசர் வேலவரை மட்டும் அனைவரும் ஒருசேர குறி வைத்தனர். அனைவரின் இலக்கும் ஒன்றாக இருப்பதினால், நிச்சயம் வேலவரை ஒரு அம்பு வேணும் தீண்டும். அவர் மண்ணில் வீழ்வார். அந்த கலவரத்தில் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது தற்போதைய திட்டமாகும்.
தொடர்ந்து அரசரை மட்டும் நோக்கி வந்த பல அம்புகளால் மலைக்கள்ளர்களின் எண்ணப்படியே, விஜயபுரி வீரர்களின் கவனம் சிதறியது. படை எடுத்து வந்த அம்புகள், அரசரின் கவச உடையையும் தாண்டி அவர் உடலில் பாய்ந்து, அவரை ரத்த வெள்ளத்தில் நிலத்தில் சரியச் செய்தது. நடப்பதை ஊகிப்பதற்கே அனைவருக்கும் சில கனங்கள் ஆனது.
முதலில் தெளிவு பெற்ற ரூபனர், சில வீரர்களுக்கு ஆணை பிறப்பித்து, உடனடியாக அரசரை வைத்திய சாலை முகாமிற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
மலைக்கள்ளர்கள் எண்ணப்படியே அனைத்தும் நடந்து கொண்டு வந்தது. விஜயபுரி வீரர்கள் அனைவரும், மன்னர் மீது கொண்ட பற்றினால், அவரைப் பற்றி சிந்தித்து கவலை கொள்ளும் தருணத்தில் மலைக்கள்ளர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பிக்க காத்திருக்க, அவர்களின் எண்ணத்தை தவிடுபொடி ஆக்கும்படியாக, சோகத்தை மீறிய ஆக்ரோஷத்தோடு ரூபனர் அவர்களை நோக்கி முன்னேறி வந்தார்.
ஏற்கனவே மலைக்கள்ளர்கள் மீது கட்டுக்கடங்கா கோபத்தினில் இருந்த ரூபனருக்கு, இப்பொழுது விஜயபுரி மன்னரையே வீழ்த்தும் அளவு துணிந்தவர்கள் மீது கடும் கோபம் வந்தது. சோகத்தில் மூழ்கவிருந்த வீரர்களுக்கும் தைரியம் கொடுத்தார்.
“வீரர்களே! நம் மன்னரையே வீழச்செய்தவர்களை இனி ஒரு போதும் விட்டு வைக்கக் கூடாது. நமது நாட்டின் வளத்தையும், சேமிப்பையும் சுரண்டியவர்கள். ஏன் நமது நாட்டின் பெண்கள், தமது உயிரை விடவும் பெரிதாக கருதிய கற்பை சூறையாடி, அவர்கள் தம்மைத்தானே மாய்த்துக் கொள்ள காரணமாயிருந்த மிருகங்கள் இவர்கள். இனி இவர்கள் வாழவே தகுதி இல்லாதவர்கள் ஒருவரையும் விட்டு விடாதீர்கள். ஜீவசுடர் தாயின் மடிக்கு அனைவரையும் விருந்தாக்குங்கள்” என்று ஆக்ரோஷமாக கூறியபடி எதிரிகளை நோக்கி முன்னேறினார்.
ரூபனரைத் தொடர்ந்து பிற வீரர்களும் அவரோடு முன்னேறி சென்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மலைக்கள்ளர்கள் கூட்டம், அங்கிருந்து தப்பிக்க எண்ணியிருந்ததை கைவிட்டு, பின்னோக்கி ஓட எத்தனிக்க, அதற்குள் அவர்களை சூழ்ந்த விஜயபுரி வீரர்கள் மலைக்கள்ளர்களின் தலைகளை பூமிதாய்க்கு காணிக்கை ஆக்கத் தொடங்கினர்.
மலைக்கள்ளர்களும் சுதாரித்து, விஜயபுரி வீரர்களின் தலைகளை கொய்யத் தொடங்க, அதனை பொருட்படுத்தாது, துளியும் ஆவேசம் குறையாது அங்கிருந்த மலைக்கள்ளர்கள் அனைவரையும் கொன்று விடும் எண்ணத்தோடு ரூபனரும், மற்ற படை வீரர்களும் அவர்களுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தனர்.
இதோ இப்பொழுது போர் மிகத்தீவிரமடைந்து, இரண்டு புறங்களிலிருக்கும் வீரர்களும் மிகுந்த ஆக்ரோஷத்தோடு போரிட்டுக் கொண்டிருந்தனர். இரண்டு புறமும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
ஒரு கட்டத்திற்கு மேல் தாக்கு பிடிக்க இயலாமல், மலைக்கள்ளர்கள் வனாந்திரத்தை நோக்கி பின்னோக்கி ஓடத் தொடங்கினார். ஆனாலும், ரூபனரின் ஆக்ரோஷம் துளி கூட குறையவில்லை. அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, அவரது வாளினை வேகமாகவும், லாவகமாவும் சுழற்றி எதிரிகளின் தலைகளை மண்ணில் வீழ்த்தி, நிமிடத்திற்கு ஒருவராய் கொன்று குவித்து, ஒருவரைக் கூட தப்ப விடாமல் அனைவரின் தலையையும் கொய்தார். அனைவரையும் கொன்று குவிக்கும் வரை அந்த மாவீரனுக்கு ஆக்ரோஷம் துளியும் குறையவில்லை.
அவர் எண்ணம் போலவே மற்ற விஜயபுரி வீரர்களும், அவர்கள் உடலில் இருக்கும் காயங்களையும் பொருட்படுத்தாது மலைக்கள்ளர்கள் காட்டிற்குள் செல்லும் முன்பே அவர்களை கொன்று குவித்தனர்.
இருகரைத் தொட்டு ஓடும் ஜீவசுடர் நதிக்கு இணையாக அந்த பகுதி ரத்த வெள்ளமாய் காட்சி தந்தது. ஒட்டு மொத்த மலைக்கள்ளர்கள் கூட்டமும் மண்ணில் வீழ்ந்த பின்பே, ரூபனரின் வாளின் தலை பூமித்தாயை பார்த்தது.
இந்த கோர காட்சியைக் கண்ட ஆதவன் மெல்ல மெல்ல தன்னை மலைகளின் பின்னால் புதைத்துக் கொண்டான்.

Advertisement