Advertisement

சத்ரிய வேந்தன் – 6 – ஜீவசுடர் நதி
மருத தேசத்தின் கீழே இயங்கும், மேற்கு மலைத்தொடர்களை ஒட்டியுள்ள, மன்னர் வேலவர் ஆளும் விஜயபுரி நாட்டினை வளம் கொழிக்க செய்து கொண்டிருந்தது, அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த மலைத்தொடர்களில் இருந்து பாயும் ஜீவசுடர் நதி.
ஜீவசுடர் நதி, என்றுமே தன் ஜீவனை இழக்காமல் ஓடும் அதியற்புதமான நதி. எப்பொழுதுமே இரு கரை தொட்டு ஓடும் நதியினில் வெள்ளம் பெருக்கெடுத்த தருணங்கள் வேண்டுமானால் பலமுறை இருக்கலாம். ஆனால் அது வற்றியோ, நீரோட்டம் குறைந்த தருணங்கள் என்பது இல்லவே இல்லை. அதனாலேயே அந்த நதிக்கு ஜீவசுடர் நதி என்ற பெயர் வந்தது.
விஜயபுரி நகரத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள மலைத்தொடர்களின் கீழே, வெள்ளமென பாய்ந்து வரும் ஜீவசுடர் நதியின் அருகினில், அந்த போர் நடந்து கொண்டிருந்தது.
போர் நடக்கும் இடத்தினில் மண்ணோடு மண்ணாக சங்கமித்திருந்த ரத்தக் கரைகளும், ஆங்காங்கே உடைந்து சிதறிக் கிடந்த ரத்தம் தோய்ந்த வாள்களும், வில் அம்புகளும், மடிந்து கிடந்த மனித உடல்களும் அந்த போரின் வீரியத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
இரண்டு புறமிருந்து போரிடும் வீரர்களும் தமது ஆக்ரோஷத்தையும், கோவத்தையும் எதிர் அணியினர் மீது காட்டியபடி இருந்தனர். போர் தொடங்கி இன்றோடு மூன்று தினங்கள் ஆகி இருந்தது. இந்த மூன்று தினங்களிலும் விஜயபுரி நாட்டினை தோற்கடிப்பதற்காக பல தந்திரங்களை உபயோகித்தும், அந்த மலைக்கள்ளர்களால் இன்னும் வெற்றி வாய்ப்பை பெற இயலவில்லை.
** மலைக்கள்ளர்கள், அருகினில் இருக்கும் மேற்கு மலைத்தொடரில் பதுங்கி வாழும் கள்ளர் கூட்டம். அவர்களது அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை கொன்று, பெண்களின் கற்பை சூறையாடி என அவர்கள் செய்த குற்றங்கள் கொஞ்சமானது இல்லை.
விஜயபுரி நாட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள பல நாடுகளிலும், நகரங்களிலும் அவர்களது கைங்கரியம் அரங்கேறிக் கொண்டிருந்தது. யார் இவர்கள், எங்கிருந்து வருகிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லாமல் இருக்கவே, அந்த கள்ளர் கூட்டத்தை தடுக்க பெரும்பாடு பட்டனர் மன்னர் பெருமக்கள்.
ஒரு வழியாக சில மாதங்களுக்கு முன்பு, விஜயபுரி நகரத்தின் ஒற்றர் படையில் இருந்த திறமையான ஒற்றர்களின் உதவியாலும், முயற்சியாலும் மலைக்கள்ளர்களைப் பற்றியும், அவர்களுடைய இருப்பிடம் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.
விஜயபுரியின் மாமன்னர் வேலவர், மலைக்கள்ளர்கள் கூட்டத்தை பற்றி தகவல் கிடைத்தவுடன், அக்கூட்டத்தை முற்றிலும் அழிப்பதற்காக சிறப்பு ஆலோசனை நடத்தினார்.
“நாம் மலைக்கள்ளர்கள் மீது போர் தொடுப்போம்” என்று தமது ஆலோசனையை கூறினார் முதன் மந்திரியார். அதுவே அனைவருக்கும் சரியென பட, அதில் உள்ள சதாகங்கள், பாதகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அப்பொழுது விஜயபுரி நகரத்தின் படைத்தளபதி ரூபன சத்ரியர் தமது ஆட்சேபனையை தெரிவித்தார். கடந்த இரண்டாண்டு வகித்த படைத்தளபதி பதவி, அவரின் முகத்தில் கம்பீர தோரணையை அதிகரித்திருந்தது. இளம் பிரயாயத்தில் இருந்தவர், இப்பொழுது படைத்தளபதிக்கே உரிய வயதினில், மிகமிக கம்பீரமாக காட்சியளித்தார்.
“அரசே! மேற்கு மலைத்தொடர் என்பது மிகவும் பெரியது. அதில் நமக்கு பரிச்சயப்பட்ட இடங்கள் என்பது மிகவும் குறைவே. அதுவும் என்றாவது வேட்டையாட செல்லும் சமயம் பழக்கப்பட்ட இடங்கள் மட்டும்தான் நமக்கு பரிச்சயமானது. அப்படி இருக்கையில் அங்கேயே தங்கி, அந்த இடம் பற்றி நன்கு அறிந்த மலைக்கள்ளர்கள் கூட்டத்தினரை, அவர்கள் இடம் சென்று தாக்குவது சரியென படவில்லை.
நாம் பெரும் படையை திரட்டி சென்றாலும், அவர்கள் தப்பிக்கவும், ஒளிந்து கொள்ளவும் போதுமான வசதியை அந்த வனாந்திர பகுதி அவர்களுக்கு தந்து விடும். இதனால் நமக்கு பெரும் சேதம் ஏற்படலாம். ஏன் நமக்கு தோல்வி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது அரசே. ஆகவே நன்கு ஆலோசித்து இந்த முடிவினை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று தம் கருத்தினை பதிவு செய்தார் ரூபன சத்ரியர்.
“ஆம் அரசே! ரூபனன் கூறுவதும் சரியென படுகிறது. அவர்களை அவர்கள் இடத்தினில் தாக்குவது சரியானதாக படவில்லை” என்று தமது கருத்தினை முன்வைத்தார் இன்னொரு மந்திரியார்.
“நாம் அங்கு செல்லாமல் வேறு எப்படி அவர்களை அழிப்பது. அவர்கள் எந்த நாட்டிற்குள் எப்பொழுது நுழைகிறார்கள் என்பதும் சரிவர தெரியவில்லை. அப்படி இருக்கையில் இனி அவர்களின் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறாமல் தடுக்க வேண்டும். மேலும் அவர்கள் கூட்டத்தையே அழிக்க வேண்டும் இதற்கு என்ன வழி?” என்ற கேள்வி எழுந்தது.
“அரசே! அவர்கள் தங்கி இருக்கும் பகுதியிலிருந்து நாட்டிற்குள் நுழைவதற்கு, ஜீவசுடர் நதியினை ஒட்டியுள்ள பகுதியினைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால், ஆற்றை சுற்றி வருவதும் கடினம், அதோடு மற்றொரு பகுதியில் இருக்கும் காடும் மிக அடர்ந்தது, மிக மிக ஆபத்தானது. ஆகையால், அவர்களால் அந்த காட்டின் வழியேயும் வர இயலாது. அதனால் இடையினில் இருக்கும் ஆற்றினை ஒட்டிய பகுதியின் வழியாகத்தான் அவர்கள் வரக்கூடும். நாம் அவர்களை அங்கு தாக்கினால் சரியாக இருக்கும்” என்ற யோசனையை முதன் மந்திரியார் முன் வைத்தார். அனைவருக்கும் அதுவே சரியெனப்பட்டது.
முதன் மந்திரியாரைத் தொடர்ந்து ரூபன சத்ரியரும், “மந்திரியார் கூறுவது சரி வரும் அரசே. நாம் இப்பொழுது படைகளுடன் ஜீவசுடர் நதியின் அருகில் சென்று காத்திருப்போம். அவர்கள் போர் புரிய வராவிடினும் கொள்ளை அடிக்க வேணும் வரக்கூடும் அல்லவா? அவர்கள் கூட்டத்தை வேரோடு அழித்து நாடு திரும்புவோம்” என்று ஆவேசத்தோடும் உறுதியோடும் கூறினான் அந்த மாவீரன்.
அனைவரும் ஒருமனதாக இந்த முடிவினையே ஏற்றுக் கொண்டனர். அன்றிலிருந்து இரண்டே தினங்களில் படையினை திரட்டிக் கொண்டு, நாட்டின் மேற்கு எல்லையில் உள்ள ஜீவசுடர் நதியை ஒட்டியுள்ள பகுதியினை அடைந்தனர்.
வீரர் படைகள் அங்கேயே கூடாரம் அமைத்து மலைக்கள்ளர்கள் கூட்டத்திற்காக காத்திருக்கலாயினர். என்னதான் முடிவினை எளிதாக எடுத்து விட்ட போதிலும், அதனை செயல் படுத்துவது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.
விஜயபுரி நகரத்து வீரர்கள் பெரும்படையொடு காத்திருப்பதை அறிந்த மலைக்கள்ளர்கள் கூட்டம், காட்டினை விட்டு வெளிவரவே இல்லை. இவ்வாறாக நாட்கள் நகர்ந்த வண்ணம் இருந்தது.
மலைக்கள்ளர்கள் வருகைக்காக காத்திருப்பது நீண்டு கொண்டே சென்றது. இவ்வாறு எத்தனை நாட்கள் கடத்த முடியும். நாட்டையும் கவனிக்க வேண்டுமே, அரச அலுவல்களும் இருக்கிறதே!
சில நாட்கள் கடந்த பின்னர், மன்னர் வேலவரும், தளபதி ரூபனனும் சில மந்திரிகளையும், தலைமை குருவையும் வரவழைத்து கலந்தாலோசித்தனர்.
“இந்த இடத்திலேயே கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக காத்திருந்தாகி விட்டது. இன்னும் மலைக்கள்ளர்கள் வருவதாய் தெரியவில்லை. நமக்கு கிடைத்த தகவல்கள் சரியானது தானா?” என அரசர் மற்றவர்களிடம் கேட்டார்.
“மன்னர் பெருமானே! அதில் தங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். நமக்கு வந்த தகவலை, எனக்கு கீழ் உள்ள ஒற்றன் மூலமும் சரி பார்த்து விட்டேன்” என்றார் முதன்மை மந்திரியார்.
“வேலவா! இதில் நீ சந்தேகம் கொள்ள என்ன இருக்கிறது? இத்தனை நாட்களில் நமது நகரத்திலோ அல்லது சுற்றியிலும் உள்ள நாடு, நகரங்களிலோ எந்த களவும் நடக்கவில்லை. மலைக்கள்ளர்களது கைங்கரியம் நடந்ததற்கான எந்த செய்தியும் நம்மை அடையவில்லை. அப்படியென்றால் என்ன அர்த்தம்? நாம் முகாமிட்டிருப்பது தெரிந்து அவர்களால் வெளிவரமுடியவில்லை என்றுதானே!” என்று தெளிவு படுத்தினார் தலைமை குரு.
அதனை கேட்ட அரசருக்கு உள்ளம் சற்று தெளிவடைந்தது. மேலும் தாம் நினைத்து வந்ததில் பாதியேனும் நடந்ததே என்ற நிம்மதியும் மனதினில் உருவானது. மலைக்கள்ளர்களை தடுத்தது அவருக்கு மகிழ்வைக் கொடுத்தாலும், இன்னும் அவர்களை அழிக்க முடியவில்லையே என்று எண்ணும் பொழுது அதிக கோபமும், வருத்தமும் மனதில் சூழ்ந்தது.
“ஆனால், குருவே நம்மால் எத்தனை நாட்கள் இங்கேயே தங்கி இருக்க முடியும்? அவர்கள் வெளியினில் வருவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லையே?” அடுத்தது என்ன செய்வது என்ற குழப்பமான சூழலில் அரசர் இவ்வாறு தலைமை குருவிடம் கேட்டார்.
“இங்கேதான் நாம் இன்னும் சிந்தித்து செயல் பட வேண்டும். அவர்கள் பதுங்குவது நிச்சயம் பாய்வதற்காத்தான். அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களை தயார் படுத்திக் கொண்டு, நம்மை எதிர்த்து போர் புரிய வரலாம். இது நாடுகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் இல்லை. முன் அறிவிப்போடு வந்து, எதிர் அணியினரின் கோட்டையையோ அல்லது எல்லையையோ தாக்கி போர் தொடுக்க. இது எங்கு வாழ்கிறார்கள் என்ற விவர்களையே தெரியாது, கானகத்தின் அருகினில் நடக்கவிருக்கும் யுத்தம். இதற்கு உடனடியாக எதிர் அணியினர் செயல்படுவர் என்று எதிர்பார்க்க இயலாது.
நாம் இப்பொழுது இங்கிருந்து திரும்பி விட்டால், அவர்கள் நம்மை நாம் எதிர்பாரா நேரம் பார்த்து தாக்கி வீழ்த்தி விடுவார்கள், ஏனெனில், அவர்களை அழிக்க நாம் முதல்படியை எடுத்து வைத்தது அவர்களுக்குள் ஒரு பயத்தினை நிச்சயம் விதைத்திருக்கும். அது உயிர் பயம். நம்மை அழிக்கும் வரை குறையாத உயிர் பயம். நமக்கு அவர்கள் இருப்பிடம் தெரியாமல் தடுமாறுவதைப் போல, அவர்களுக்கு எந்த தடையோ தடுமாற்றமோ இருக்காது. எளிதினில் நமது இருப்பிடத்தை ஆராய்ந்து தக்க சமயத்தில் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழித்து விடுவார்கள்” என தலைமை குரு இங்கிருந்து கிளம்பினால் ஏற்படும் பாதகங்களை அனைவருக்கும் விளக்கினார்.
“ஆம் குருவே! நீங்கள் கூறுவது மிக மிக சரியானது. தற்போது என்ன செய்யலாம் என்ற ஆலோசனையையும் கூறி விடுங்கள்” என்றார் மன்னர் வேலவர்.
“வேலவா! நான் இதனைப்பற்றி ஏற்கனவே தெளிவாக ஆலோசித்து வைத்திருக்கிறேன். இனியும் இங்கு ஒட்டு மொத்த படையோடு இருப்பது உசிதமில்லை. ஏனெனில் அவர்கள் கொள்ளை அடித்த பொருட்கள் அவர்களுக்கு இன்னும் பல நாட்களுக்கு, ஏன் சில வாரங்களுக்கு கூட தாக்குபிடிக்கலாம்.
எனக்கு வந்த தகவல்களின்படி, மலைக்கள்ளர்கள் இரண்டாயிரம் பேருக்கு மிகாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் ஒவ்வொருவரும் பத்து போர் வீரர்களுக்கு சமமானவர்கள். நாம் அவர்களின் ஒட்டு மொத்த கூட்டத்தையும் அழிக்க, நன்கு திறமையான போர் வீரர்களை இந்த போரில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு நம்மிடம் முதல் தரத்தில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவே.
நமது சிற்றரசில் இருக்கும் ஐயாயிரம் படை வீரர்களில் பலரும் புதிதாய் சேர்க்கப்பட்டவர்களும், சரியான பயிற்சி பெறாதவர்களுமே ஆகும். நாம் மருத தேசத்து உதவியைக் கூட நாடலாம். ஆனால் போர் எப்பொழுது என்று தெரியாமல் அவர்களை நாடுவதோ, அண்டை நாடுகளை நாடுவதோ சரியென படவில்லை. ஆகவே, நாம் நமது முதல் தர போர் வீரர்கள் ஐநூறு பேரை இங்கே காவலில் வைத்திடுவோம். அவர்களுக்கு தலைமையாக படைத்தளபதி ரூபனனை நியமித்து விடுவோம்.
எனது கணிப்பு சரியென்றால் இன்னும் குறைந்தது அவர்கள் நான்கு மாதங்களுக்கு வெளி வர மாட்டார்கள். ஆனால், நாம் அவ்வாறு எண்ணி இங்கிருந்து நகர்ந்தோமானால் அல்லது குறைவான வீரர்களை காவலுக்கு வைத்தோமானால், மலைக்கள்ளர்கள் நிச்சயம் நம் படையினை தாக்கி அழித்து மீண்டும் பதுங்கி விடுவார்கள். நமது படை பலம் குறைப்பது அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.
ஆகவே ஒவ்வொரு மாதமும் ஐநூறு வீரர்களை இங்கேயும், நாட்டிலும் காவலுக்கு வைப்போம். மாதம் ஒரு முறை அவர்களின் முறைமையை மாற்றுவோம். ஏனெனில் இங்கேயே தொடர்ந்து பல மாதங்கள் வீரர்களால் தாக்கு பிடிக்க இயலாது” என்றவாறு தமது திட்டங்களை தலைமை குரு தெளிவுற விளக்கினார். அனைவரும் தலைமை குருவின் கருத்துக்களை ஒருமனதாக ஏற்றனர்.
படைத்தளபதி ரூபன சத்ரியர், “அரசே! நான் இங்கேயே மலைக்கள்ளர்கள் வரும் வரை தலைமை ஏற்கிறேன். அவர்கள் வந்ததும் நாட்டிற்கு தகவலை பகிர்ந்து கொள்கிறேன். அதற்குள் நாட்டிலுள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த பயிற்சியினை கொடுத்து விடுங்கள்” என்றவாறு கூறினார்.
அரசருக்கும் அது சரியென பட்டது. “சரி ரூபனா. அவர்கள் போர்தொடுக்க வந்ததும் நாங்கள் படைகளோடு வந்து இணைந்து கொள்கிறோம். நீங்கள் அதுவரை அவர்களை சமாளித்து இருங்கள். எந்த உதவி தேவை என்றாலும் உடனடியாக செய்தி அனுப்புங்கள்” என்றவாறு முதல் தரத்தில் இருக்கும் ஐநூறு வீரர்களையும் அவர்களின் தலைமைக்கு ரூபனனையும் நியமித்து விட்டு, மற்ற படையினரோடு நாடு திரும்பினார்.
எல்லையில் இருக்கும் வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், வைத்திய வசதிகள், தங்குவதற்கு தேவையான வசதிகள் என அனைத்தையும் மன்னர் அனுப்பி வைத்தார்.
ஜீவசுடர் நதியின் கரையில் வீரர்களுடன் ரூபனர் முகாமிட்டிருந்தார். ஏற்கனவே, இரண்டு வாரங்கள் வெறுமனே நாட்களை கடத்தியதில் அவருக்கு பிடித்தம் இல்லை. ஆகவே, அடுத்த நாளிலிருந்து அந்த வனாந்தரத்திலேயே போர் பயிற்சியை தொடங்கினார்.
தலைமை குரு கூறிய கருத்தினில், “மலைக்கள்ளர்கள் ஒவ்வொருவரும் பத்து வீரர்களுக்கு சமமானவர்கள்” என்ற கருத்து மீண்டும் மீண்டும் அவனது மனதினில் எதிரொலித்தது.
விஜயபுரி நகரம் என்பது சிற்றரசு ஆகும். சிறிய நாடு, குறைவான மக்கள் ஆனாலும் வளத்தினில் எந்த குறைவும் இருந்ததில்லை. அதோடு நாட்டின் படையும் பெரிய அளவில் இல்லை. என்னதான் இங்கே பிரித்து தந்த ஐநூறு வீரர்களும் முதல் தர வீரர்களாக பிரிக்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்த படையினில் சிறந்தவர்கள் அவ்வளவே. அதற்காக மிக சிறந்த போர் வீரர்கள் என்று எல்லாம் சொல்ல முடியாது.
பத்து பேருக்கு சமமான ஒருவனை அழிப்பது என்பது இங்கே இருக்கும் வீரர்களால் இயலாத காரியம். அந்த அளவு குறைவான பயிற்சியில் தான் இருக்கிறார்கள். முதலில் இவர்கள் அனைவரையும் மலைக்கள்ளர்களுக்கு இணையான வீரர்களாக மாற்ற வேண்டும் இன்னும் அவர்களை விடவும் மேம்படுத்த வேண்டும். தமது படையின் அளவு சிறிது கூட குறையக் கூடாது. அதேநேரம், மலைக்கள்ளர்கள் கூட்டம் மொத்தமும் அழிக்கப்பட வேண்டும்.
அதற்கு தேவையான பயிற்சியை படை வீரர்களுக்கு தர ஆயுத்தமானார். அதற்கேற்றவாறு படை வீரர்களை மனதளவிலும், உடலளவிலும் தயார் படுத்தினார்.
ரூபனருக்கு தேவையான அனைத்தையும் மன்னர் அனுப்பிவிட, அதோடு வீரர்களும் மிகுந்த ஈடுபாட்டோடு பயிற்சியில் ஈடுபட, அவரது வேலை இன்னும் எளிதானது.
அவ்வப்பொழுது தலைமை குருவும், மன்னரும் வந்து மேற்பார்வை இட்டனர். வீரர்களிடம் தெரிந்த முன்னேற்றம் குறித்து பெரிதும் மகிழ்ந்து ரூபனரை வெகுவாக பாராட்டினர்.
ஒரு மாதம் பிறகு, இங்கிருந்த ஐநூறு வீரர்களும் நாட்டிற்கு திரும்ப மற்றொரு படை வரலாயிற்று. அவர்களுக்கும் அதே போல சிறந்ததொரு பயிற்சியை ரூபனர் கொடுத்தார். நாடு திரும்பிய வீரர்களும், தங்களது பயிற்சியை ரூபனன் கூறிய முறைப்படியே மேம்படுத்தியதோடு, போர் படையினில் இருக்கும் பிற வீரர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.
ரூபனரின் விடா முயற்சியால் அதிக அளவில் முன்னேற்றம் இருந்தது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வீரர்கள் தனியே முகாமிட்டு இருப்பதால் அவர்களுக்கான உணவுப் பொருட்களுக்காகவும், வீரர்களின் பயிற்சிக்கான செலவுக்காகவும், அவர்கள் வாழும் கானகத்தில் எளிதில் நோய் தொற்று ஏற்படுவதால் வைத்திய செலவுகளுக்காகவும் நாட்டின் கஜானா குறையத் துவங்கி இருந்தது.
இத்தோடு நில்லாமல் திடீரென வந்த பெருமழை, நல்ல வேலையாக அதை முன்கூட்டியே கணித்து, அந்த தகவல் நாட்டிலிருந்து வரவும் தலைமை குருவின் ஆலோசனைப்படி முகாமிட்டிருந்த வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறி இருந்தனர்.
தொடர்ந்து நான்கு தினங்களாக பெய்த பெருமழையில் ஜீவசுடர் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முகாமை மாற்றி அமைத்ததால் உயிர் சேதம் பெரிதாக இல்லை. ஆனால், பலரும் உடல் நிலை சரியில்லாமல் வாடினர். அவர்களை மீண்டும் தேற்றுவதற்கே பெரும் பாடாய் போனது.
நாட்டிலும் பயிர்கள் எல்லாம் வீணாகி பெரும் சேதம் ஆனது. ரூபனர் ஒருவரே இரும்பில் வார்த்த மனிதனாய் அத்தனை இன்னல்களையும் தாங்கி மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று, போர் வீரர்களை உடலளவிலும் மனதளவிலும் தேற்றி அவர்களை பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.
இவ்வாறாக நாட்களும், வாரங்களும், மாதங்களும் கடந்து கொண்டே இருந்தது. மலைக்கள்ளர்கள் எதிர்த்து போராடவும் வெளி வரவில்லை. அதேபோல அவர்களது கைங்கரியத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை.

Advertisement