Advertisement

சத்ரிய வேந்தன் – 5 – மற்போர்
கிழக்கு முகம் சிவக்க தொடங்கும் முன்பு, அரண்மனை எங்கும் சூழ்ந்த இருட்டினில் ஆங்காங்கே எரியும் தீபங்கள் அழகாய் சுடர்விட, அரண்மனையே பொன்னிறத்தில் பேரழகாக ஜொலித்தது.

அரண்மனையின் பின்புறத்தில் சில மாளிகைகளைக் கடந்து இருக்கும் குதிரை இலாயத்திலிருந்து, செறிந்த பிடரி மயிரினை உடைய நான்கு வலிமையான குதிரைகளை, அழைத்துக் கொண்டு இரண்டு காவலர்கள் அரண்மனையின் முன்வாயில் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

“அண்ணா! குதிரைப்படை தனியாக இருக்கிறதல்லவா? அதற்கென்று பெரிய குதிரை இலாயம் (குதிரைகளைக் கட்டிவைக்கும் இடம்) கூட இருக்கிறது. அப்படி இருக்க இந்த இலாயம் எதற்காக?” என்று புதிதாய் சேர்ந்த காவலன் குதிரைகளை அழைத்துக் கொண்டு செல்லும் பொழுது தனது சந்தேகத்தை முன்வைத்தான்.

“அந்த குதிரைகள் போர் புரிவதற்கு ஏற்ற க்ஷத்திரிய ஜாதி குதிரைகள். இவைகள் பிரம்ம ஜாதி குதிரைகள். ஆகையால்தான் தனித்தனி இலாயங்கள்.”

“என்ன அண்ணா! குதிரைகளில் ஜாதிகள் இருக்கிறதா?” முன்பின் கேள்வி படாத விஷயம் என்பதால் ஆச்சர்யம் மேலோங்க கேட்டான் அந்த காவலன்.

“பின்னே குதிரைகளின் ஜாதியினை தெரிந்து தானே அதனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்று கணக்கிட முடியும். அசுவ சாஷ்திரத்தின்படி அதன் ஜாதிகளை பிரித்தறிவதற்கு வழிகள் உண்டப்பா”

“அது எப்படி என்று கூறுங்களேன். அதோடு உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும் அண்ணா?”

“குதிரைகளை பிரித்தறிந்து அழைத்து வரும் பொழுது நானும் பார்த்திருக்கிறேன். அதை வைத்தே தெரிந்து கொண்டேன். சிறிது கேள்வி ஞானமும் உண்டு.

குதிரைகளின் நீர் அருந்தும் பண்பினை வைத்தே அந்த காலத்திலிருந்து அதன் ஜாதிகளை அறிவர், அதன் மூலம் அதன் குணத்தையும் கணிப்பர். குதிரைகள் பொதுவாக பிரம்ம ஜாதி, க்ஷத்திரிய ஜாதி, வைசிய ஜாதி மற்றும் சூத்திர ஜாதி என நான்கு வகைகளாக பிரிப்பர்.

இதில் பிரம்ம ஜாதி வகைகள் நீரைக் கண்டவுடன் கண்வரையில் நீரில் தலையை மூழ்க விட்டு நீரைப் பருகும், இந்த வகை குதிரைகள் மிகவும் புத்திசாலியானது. க்ஷத்திரிய ஜாதி வகைகள் மூக்கு வெளியே தெரியும் படிக்குத் தண்ணீர் குடிக்கும், இவைகள் எஜமானரைக் காக்கும், போருக்கு ஏற்றது.

வைசிய ஜாதி வகைகள் வாய் பட்டும் படாமலும் நீரைப் பருகும், கடினமான வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். சூத்திர ஜாதி வகைகள் சவுக்காலடித்தாலொழிய நீரில் கால் வைக்காது, இந்த குதிரை எஜமானரை கொன்று விடும் அளவு மோசமானது” என்று தமக்கு தெரிந்தவற்றை கூறி முடித்தார் அந்த காவலர்.

“குதிரைகளில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா அண்ணா. ஆச்சர்யமாக இருக்கிறது. நம்முடன் வருவது எந்த ஜாதியினை சேர்ந்த குதிரைகள் அண்ணா?”

“இவை நான்கும் பிரம்ம ஜாதி வகைகள். அரச அலுவலுக்காக வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதனையே உபயோகிப்பர்” என்று பேசியபடி இருவரும் அரண்மனையின் முன்வாயிலை அடைந்தனர்.

மருத தேசத்தின் அரண்மனையின் முன்பு நான்கு பிரம்ம ஜாதி குதிரைகளையும் காவலர்கள் கொண்டு வந்து விட்டுவிட்டு குதிரை இலாயத்திற்கே திரும்பி விட்டனர். ஏற்கனவே தயாராய் இருந்த இளவரசரின் குதிரையோடு அதனையும் நிற்க வைத்து, வீரர்களின் உடமைகளை அதில் தயார் செய்தனர் அங்கிருந்த வீரர்கள்.

அந்த அதிகாலை பொழுதினில் தீட்சண்ய மருதர் தம் பெற்றோரிடம் நல்லாசி பெற்று விட்டு, தங்கை சமுத்திராவிடம் விடை பெற்று விட்டு தாம் தேர்ந்தெடுத்த நால்வருடனும், தமக்கு பிரயாணத்திற்கு தேவையான பொருட்களுடனும் தெற்கே அமைந்துள்ள சந்திர நாட்டினை நோக்கி, அங்கு தயார் நிலையில் இருந்த குதிரைகளில் தமது பயணத்தை தொடங்கினார்.

வீரேந்திர மருதர், தமது மந்திரி பெருமக்களிடம் ஆலோசித்து தீட்சண்யருக்கு தேவையான அறிவுரைகளைக் கூறி அனுப்பி இருந்தார்.

தனது மைந்தன் போருக்கு செல்லும் பொழுது கூட அவர் இத்தனை மன சுணக்கம் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தற்போது உள் நாட்டில் நடக்கும் சதி என்பது போரினைக் காட்டிலும் அதிபயங்கரமானது என்பதனை அனுபவத்தில் அறிந்தவர் என்பதால், அவரது மனதினில் ஒரு வித கவலை சூழ்ந்தது.

எதிரிகள் எங்கிருக்கிறார்கள் என்பதனைக் காட்டிலும், யார் எதிரிகள் என்பது கூட அறியாத நிலையினில் இருக்கும். இப்படி சிரமமான வேலைக்கு மகனை முதன் முதலாக அனுப்பியது, அதுவும் முன் பின் அறியாத நாட்டிற்கு அனுப்பியது அவரது மனதினை பெரிதும் வாட்டியது.

முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றார் அந்த மாவீர சக்ரவர்த்தி. நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து, முதன்மை அமைச்சர் அரசரிடம், “அரசே! இன்றோடு வைகாசி திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்கிறது” என கூற தமது சிந்தனையிலிருந்து முற்றிலும் வெளி வந்தார்.

“நல்லது அமைச்சரே. இன்று நடக்கும் மற்போருக்கு (மல்யுத்த போட்டி) தேவையான ஏற்பாடுகள் கூட முடிந்துவிட்டது அல்லவா?”

“ஆம் அரசே. எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கிறது. நேற்றே அனைத்தையும் சரி பார்த்து விட்டோம்.”

“எதற்கும் கூட இருந்து கவனித்துக் கொள்ளுங்கள்.”

“அப்படியே செய்கிறேன் அரசே!” என்றபடி அரசரிடம் இருந்து விடைபெற்றார்.

** தமது சிவந்த நிறத்தினை வானத்திற்கும் பூசி விட்டபடி, தமது மலைக்கூட்டினில் இருந்து மெது மெதுவாய் தலையினை வெளியினில் எட்டிப் பார்த்து இந்த பூவுலகை மலர செய்து கொண்டிருந்தான் ஆதவன்.

அந்த அதிகாலை வேளையில் சூர்ய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான் நவிரன். சூர்ய நமஸ்காரத்தை முடித்துவிட்டு, அவனுடைய குரு நெடுமாறனார் முன்னிலையில் அன்றைய உடற்பயிற்சிகளையும் ஆற்றங்கரையினில் தொடங்கி இருந்தான்.

நவிரன் மற்போரில் மாவீரன். சென்ற ஆண்டு வைகாசி திருவிழாவின் போது நடந்த மற்போரில் தமது வீரத்தாலும், திறமையாலும் வெற்றி வாகை சூடியவன். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் மற்போரிலும் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

நவிரனுடன் அவனுடைய தாயாரும், மூன்று தம்பிகளும் வசித்து வருகின்றனர். முதல் இரண்டு தம்பிகளும் மற்போருக்கான பயிற்சியினை கற்றுக் கொண்டு இருப்பவர்கள், அவர்களில் மூத்தவன் சேந்தன், அடுத்தது கயிலன். மூன்றாமவன் புகழன் மட்டும் இவர்களில் இருந்து விடுபட்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துபவன், மிகவும் புத்திசாலி.

புகழன் தமது எட்டு வயதினில் உபநயன சடங்கு (பூணூல் அணிவிக்கும் விழா) முடித்து கல்வி கற்பதற்காக குருகுலத்தில் சேர்க்கப்பட்டவன், தமது ஒன்பது வருட கல்வியை இதுவரை முடித்து இருக்கிறான். இன்னும் மூன்று ஆண்டுகள் குருகுலத்தில் இருந்து கல்வி பயில வேண்டும். இயல்பிலேயே கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவனுக்கு குருகுலம் என்றுமே சலிப்பைத் தட்டியது இல்லை.

ஆனால், குடும்பத்தினரிடம் இருந்து விலகி இருப்பது மட்டுமே அவனுக்கு கவலை தரும் விஷயம். குடும்பத்தின் இளைய மகன் என்பதால் அனைவருக்கும் அவனிடம் பாசம் அதிகம். குருகுல வாசம் அவனை குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க விடுவதில்லை என்பதே அவனது ஒரே குறை.

கடந்த வருடம் குருகுலத்தில் இருந்த புகழனால் வைகாசி திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் தமது தமையன் வெற்றிவாகை சூடியதையும் காண முடியவில்லை. நல்லவேளையாக இந்த முறை அவனுடைய குருகுலத்தில் விடுப்பு கிடைக்கவே குடும்பத்தினரைக் காணவும், தமது தமையன் வெற்றி வாகை சூடுவதை காணவும் விரைந்து வந்து விட்டான்.

அதிகாலையில் நவிரன், சேந்தன், கயிலன் தமது அன்றாட பயிற்சிகளுக்காக செல்லவும் அவர்களுடனேயே புகழனும் இணைந்து கொண்டு ஆற்றங்கரைக்கு வந்து விட்டான்.

நவிரன் மட்டும் அவனுடைய குரு நெடுமாறனார் முன்னிலையில் அன்றைய பயிற்சிகளை செய்ய மற்ற மூவரும் அங்கேயே இருந்தனர்.

“அண்ணா! நீங்கள் இருவரும் ஏன் பயிற்சி செய்யாமல் இருக்கிறீர்கள்?” புகழன் தமது தமையன்களிடம் கேட்க,

“இன்று அண்ணனுக்கு போட்டி இருக்கிறதல்லவா! ஆகையால், குருவின் கவனம் முழுவதும் அவர் மீது செலுத்தி பயிற்சி தருகிறார். ஆகையால் நாங்களும் விலகி இருக்கிறோம்.”

“அண்ணா! அதற்காக நீங்கள் அன்றாட பயிற்சியை செய்யாமல் ஏன் இருக்கிறீர்கள். சூர்ய நமஸ்காரம் செய்ததோடு சரி. மற்ற பயிற்சிகளை குருவினை தொல்லை செய்யாமல் செய்யலாம் இல்லையா?”

மற்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். புகழன் எப்பொழுதுமே இப்படித்தான், அதிக கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பான். பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இன்று வரையிலும் அந்த பழக்கம் மாறாதிருப்பதனைக் கண்டே இருவரும் சிரித்துக் கொண்டனர்.

அதற்குள் புகழனுக்கு அடுத்த கேள்வி உதயமானது. “அண்ணா! சென்ற முறை வரும் பொழுதே, மற்போர் களத்தினை எவ்வாறு தயார் படுத்துவார்கள் என்று சொல்வதாக கூறினீர்களே? அதனை இப்பொழுதேனும் கூறுங்களேன்”

அதிக ஆர்வத்தோடு கேட்கும் தம்பிக்கு கயிலன் விளக்கமாக கூறினான். “புகழா! முதலில் செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி விடுவார்கள். பிறகு, அதன் மீது நல்லெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை, தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு விடுவார்கள்.

மீண்டும் ஒரு வார காலம் கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்” என்று தெளிவாக கயிலன் கூறினான்.

“பரவாயில்லை அண்ணா! அழகாக அடுக்கடுக்காய் பேச கற்றுக்கொண்டீர்கள். நீங்கள் பேசுவதைக் கேட்கவே அழகாக இருக்கிறது” என்று மனதார புகழ்ந்தான் புகழன்.

** வைகாசி திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழா வெகு சிறப்பாக தொடங்கியது. பொதுமக்கள் அனைவரும் மற்போரைக் காண்பதற்காக பேராவலோடு இருந்தனர். மற்போர் நடக்கும் மைதானத்தை சுற்றிலும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.

இரண்டு வீரர்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் தற்காப்புக் கலைக்கு மக்களிடம் எப்பொழுதுமே பெரும் வரவேற்பு இருக்கும். இன்றும் அவ்வாறே அனைத்து மக்களும் அதிக ஆர்வத்தோடு போட்டியினை ரசித்தனர்.

கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் நவிரன் மற்போரில் வெற்றி வாகை சூடினான். அவன் வெற்றி வாகை சூடியதும், அந்த அரங்கமே பெரும் ஆராவாரமாக இருந்தது. இதுவரை யாரும் இப்படி தொடர்ந்து இரண்டு வருடம் வெற்றி வாகை சூடியதில்லை என்பதினால், மக்கள் அனைவரும் பெரிதும் மகிழ்ந்தனர்.

ஏற்கனவே தான் ஒரு பெரிய வீரன் என்றிருந்த கர்வம், மக்களின் ஆராவாரத்தாலும் அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவனுக்கு கிடைத்த கௌரவத்தாலும், மரியாதையாலும் மென்மேலும் வளர்ந்து அனைவரையும் நாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை நவிரனுக்கு தந்தது. தன்னை வெல்ல யாருமில்லை என்கிற கர்வமும், நம் வீரத்தால் எதையும் அடையலாம் என்கிற தவறான எண்ணமும் அவன் மனதில் வளர ஆரம்பித்தது.

அவனது வீரத்தினால் எளியோரை வதைக்க தொடங்கினான். தமது தவறுகளை பிறர் பார்வைக்கு எட்டாதவாறு மிகவும் சரியாக செய்யத் தொடங்கினான். அவன் உடன் இருந்தவர்களால் கூட அவனது தவறுகளை அறிய முடியவில்லை. அவ்வப்பொழுது தமக்கும், தமது குடும்பத்திற்கும் தேவையானதை தமது வீரத்தால் பெற்றுக் கொண்டான். இதனால் தீமை அடைந்தவர்களும் அவனது செயலை வெளியில் சொல்ல முடியாமல் அவன் மீது கொண்ட அச்சம் தடுத்தது.

அவன் செய்த வதைகளுக்கும், குற்றங்களுக்கும் சாட்சி இல்லாமல் போனதால், அவனால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர அது வேறு யாருக்கும் தெரியவில்லை. இது அவனுக்கும் சாதகமாகவே தமது குற்றங்களை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ந்தான்.

வெற்றி போதையில் திளைத்தவன், அடுத்த வந்த இரண்டு ஆண்டுகளிலும் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டு, வைகாசி திருவிழாவில் வெற்றி வாகை சூடினான். தொடர்ந்து நான்கு வருடங்கள் வெற்றி பெற்றவனுக்கு தானே இந்த தேசத்தின் மாவீரன் என்ற எண்ணம் வளர்ந்து வலுப்பெற்றது.

இந்த இரண்டு ஆண்டு திருவிழாவிற்கும் தோகையினி வேங்கை நாட்டிலிருந்து வருகை தரவில்லை. தீட்சண்யர் இல்லாத திருவிழாவில் கலந்து கொள்ள அவருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.

தீட்சண்யரோ சந்திர நாட்டில் எதிரிகளின் சதிகளை முறிப்பதில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அவர் அரசு அலுவல் காரணமாக எங்கு சென்றாலும், அந்த அலுவல் முடியும்வரை திரும்ப மாட்டார் இது அவரது தந்தையார் அவருக்கு கற்று கொடுத்திருந்த அறநெறிகளில் ஒன்று. 

நான்கு வருடங்கள் தொடர்ந்து வெற்றி வாகை சூடிய வீரன் நவிரன் மீது அரசருக்கும், அரசவையினருக்கும் பெரும் மதிப்பு வந்தது. அவனது வீரத்தை கௌரவிக்கும் வகையினில், அவனுக்கு அரசாங்கத்தில் ஒரு பதவி அளிக்கப்பட்டது. அரண்மனையை காவல் காக்கும் பொறுப்பினை அவனுக்கும் அவனுடைய சகோதரர்களுக்கும் வழங்கப் பட்டது.

“இனி வரும் நாட்களில் அரசரை காண வருவது யாராக இருப்பினும், வாசலில் கட்டப்பட்டிருக்கும் தங்க சங்கிலியை தலை குனிந்து வணங்கி தான் செல்ல வேண்டும். அந்த சங்கிலியின் ஒருபுறம் நவிரனின் காலிலும், மற்றொரு முனை தூணிலும் கட்டப்பட்டிருக்கும். இப்படி வணங்கி செல்ல விருப்பம் இல்லாதவர்கள் நவிரனுடன் மல்யுத்த போட்டியில் பங்கேற்று வென்று செல்ல வேண்டும்” என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டதும், ஏற்கனவே கர்வத்தில் மிதந்தவனது கர்வம் பன்மடங்கானது.

அவனது அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் தருணத்தில் மன்னர் பிறப்பித்த ஆணை, அவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்மடங்கு கவலை அதிகரித்தது. அவனால் நிலங்கள், உடைமைகளை இழந்தவர்களுக்கும், உயிரினை இழந்தவர்களது குடும்பத்தினருக்கும் மன்னரின் உத்தரவு பெரிய கலக்கத்தைக் கொடுத்தது.

மகாராஜாவை காண வரும் மக்கள், குறுநில மன்னர்கள் என அனைவரும் நவிரனை வணங்கிய பிறகே மருத அரசரை தரிசித்து வந்தனர். இது அவனது குடும்பத்திற்கு பெருமையாக இருந்தது என்றால், நவிரனுக்கோ தலைக்கனமாய் இருந்தது.

தமது வீரத்தால் நினைத்ததை சாதித்து சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருந்தான் நவிரன். அரசருக்கோ அல்லது அரசருக்கு நெருக்கமானவர்களுக்கோ இவனது அக்கிரமங்கள் போய் சேரவில்லை என்பது அவனின் நல்ல நேரமா இல்லை மக்களின் கெட்ட நேரமா என்று தெரியவில்லை.

Advertisement