Advertisement

சத்ரிய வேந்தன் – 04 – பெண் மயில்
விருந்தினர் மாளிகையில் அனைத்து விருந்தினர்களுக்கும் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பலவகை இனிப்பு வகைகள், நவதானிய உணவு வகைகள், பலவகையான பழ வகைகள் என்று அறுசுவையாக விருந்து படைக்கப்பட்டிருந்தது.
“என்ன அண்ணா யாரையோ தேடுகிறீர்கள் போல…” என்ற சமுத்திராவின் குரலில், அவள் புறம் தீட்சண்யர் தமது பார்வையை செலுத்தி மெல்லியதாக முறைத்தார்.
“என்ன அண்ணா உதவுவதற்காகத்தான் கேட்டேன். சரி உங்களுக்கு எனது உதவி தேவை இல்லையென்றால் பரவாயில்லை” என்றபடி உணவினில் கவனத்தை செலுத்தினாள்.
இதமாக புன்னகைத்துவிட்டு, “நான் யாரையும் தேடவில்லை சமுத்திரா” என்றதும், அவனது விழிகளையே ஆழ்ந்து நோக்கிவிட்டு, “சரி அண்ணா” என்றபடி அமர்ந்து கொண்டாள்.
உணவினை முடித்தபின்னர், பலரும் தீட்சண்யரிடம் வந்து அவரை புகழ்ந்து பேச, அவருக்கு அங்கே நிற்கவே வேண்டா வெறுப்பாய் இருக்க, அனைவரிடமும் விரைவில் விடைபெற்று அவ்விடம்விட்டு நகர்ந்தார்.
தமையன் விருந்து முடிந்ததும் வேகமாக கிளம்புவதை கவனித்த சமுத்திரா அவரிடம் விரைந்து வந்து, “அண்ணா முன்வாசலின் வழியே ஏன் செல்கிறீர்கள்? அங்கேயும் விருந்து உண்டுவிட்டு இளைப்பாறுபவர்கள் உங்களின் புகழ் பாட உங்களை பிடித்து வைத்துக் கொள்வர். ஆகையால், நீங்கள் மாளிகையின் பின்புறம் இருக்கும் தோட்டத்தின் வழியே சென்று விடுங்கள்” என்று கூறினார்.
எப்பொழுதும் அனைத்து விஷயங்களிலும் ஆழ்ந்து யோசித்து முடிவு எடுக்கும் தீட்சண்யரும், காலையிலிருந்து கேட்ட புகழ் பாடலிலிருந்து விடுதலை பெரும் பொருட்டு தங்கை கூறியதன் உள்ளர்த்தம் உணராமல், அவள் கூறியதை உடனே செயல்படுத்தும் பொருட்டு தோட்டத்தின் வழியே சென்றார்.
இளவரசி சமுத்திராவின் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது.
தோட்டத்தினுள் செல்ல செல்ல தீட்சண்யருக்கு இரண்டு பெண்களின் பேச்சுக்குரல் தெளிவற்ற நிலையில் கேட்டது. சற்று முன்னேறி சென்றதும், தெளிவாக கேட்ட குரலில் ஒன்று தோகையினியின் குரல் என்பதனை தீட்சண்யர் உறுதி செய்தார். அப்பொழுதே தங்கையின் உள்ளர்த்தம் உணர்ந்து, அவர் முகத்தில் லேசான புன்னகை வந்தது. ஒரே பார்வையில் தன்னை கண்டுகொண்ட, தங்கையின் புத்திசாலித்தனத்தை மனதினில் மெச்சாமல் இருக்க முடியவில்லை.
பேசிக் கொண்டிருப்பவர்கள் உணரும் முன்பு அவர்களை கடந்து செல்லவே நினைத்தார். ஏனெனில், தோகையினியின் தற்போதைய மனநிலையை அவர் ஊகித்தே இருந்தார்.
அவர்களை கடந்து செல்வதால் பேச்சுக்குரல்கள் தெளிவாகவே கேட்டது.
“இளவரசியாரே! நீங்கள் இன்னும் உணவருந்தாமல் இருக்கிறீர்கள். தங்கள் தாயார் என்னிடம் பலமுறை உங்களைப்பற்றி கேட்டுவிட்டார். வாருங்களேன்! என்னால் சமாளிக்கவே முடியவில்லை” என ஓய்ந்து போய் ஒரு பெண்ணின் குரல் கேட்க,
“அமுதா, எனக்கு இப்பொழுது பசி இல்லை. சிறிது நேரம் கழித்து உணவருந்துகிறேனே!” என மன்றாடியது தோகையினியின் குரல்.
“ஆனால் இளவரசி இன்று மருத தேசத்தின் அரச குடும்பத்தினரோடு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை தட்டிக்கழிப்பது சரியென படவில்லை. தாயார் நிச்சயம் வருந்துவர்”
“இல்லை அமுதா! நாளை எனக்கு அரங்கேற்றம் இருக்கிறதல்லவா அதனை காரணமாக கூறி பதட்டமாக இருப்பதாக கூறி விடுகிறேன். அரங்கேற்றம் பற்றிய பேச்சினை எடுப்பதனால், தாயார் நிச்சயம் மென்மேலும் எதையும் கேட்க மாட்டார்கள்.”
“ஆனாலும் இளவரசி இப்பொழுதே பலர் இரவு உணவை முடித்து விட்டார்கள். தாங்கள் இன்னும் செல்லாமல் இருப்பது சரியென தோன்றவில்லை. ஏற்கனவே தாயார் கோபமாக இருப்பார். இளவரசர் தீட்சண்யர் கூட உணவருந்தி விட்டு சென்று விட்டார். மீதம் இருப்பவர்கள் செல்லும்முன் தாங்கள் வந்தால் நன்றாக இருக்கும்” என தோழிப்பெண் சற்றே வற்புறுத்த,
தோகையினி அவள் கூறியதை உள்வாங்கிக்கொண்டு, “அப்படியா சரி வா செல்வோம்” என்றபடி பணிப்பெண்ணுடன் விருந்தினர் மாளிகைக்கு சென்றாள்.
இதனை கவனித்த தீட்சண்யரும் லேசாக புன்னகைத்துவிட்டு தனது நடையினைத் தொடர்ந்தார்.
** வைகாசி திருவிழாவின் இரண்டாம் நாள் கொண்டாட்டம் மிக கோலாகலமாக தொடங்கி இருந்தது. நடன கலைநிகழ்ச்சி தொடங்கியதும் மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கண்டு களித்தனர்.
தனது பரதநாட்டிய அரங்கேற்றத்திற்காக தோகையினி மேடையின் பின்புறத்தில் காத்திருந்தாள். ஏனோ அவளது பார்வை பார்வையாளர்களை நோட்டமிட்டது. எதையோ கண்டவளின் மனதினில் சந்தோஷமும், பதற்றமும் சம பங்கில் ஆக்கிரமித்தது.
தோகையினியின் நடனம் முதலில் ஒரு இறைவணக்க பாடலோடு தொடங்கியது. அதன் பிறகு தலைவனை எண்ணி அவன் மீது காதலில் கசிந்துருகம் தலைவியின் மனநிலையிலிருந்து பாடும்படியான பாடல் ஒன்றை அழகான குரல் வளத்தோடு பாடியவள், அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் மிக நேர்த்தியான முக பாவனைகளோடு ஆடிக்கொண்டிருந்தாள்.
அவளின் நடனத்தைப் பார்ப்பவர்களால் இமைகளை இமைக்கக்கூட முடியவில்லை. எத்தனை அபிநயம்! எவ்வளவு அழகான முகபாவனைகள்! நளினமான நடன அசைவுகள்! அந்த தலைவியாகவே மாறியவள் போல அத்தனை அழகான முகச்சிவப்பு! என்று பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அனைவருக்கும்.
அவளின் தத்ரூபமான முகபாவனைகளை அவளுடைய தாயார் சுபமித்திரை கூட எதிர்பார்க்கவில்லை. மகளை எண்ணி அவர் உள்ளம் உவகையில் மிதந்தது. தன்னையே மறந்து ஆடியவளால் அவளின் மறுபக்கத்தில் இருந்த மேடையில் அமர்ந்திருப்பவரை மறந்து ஆட இயலவில்லை. அவளின் முகபாவனைகளுக்கு காரணம் அவராகக் கூட இருக்கலாம்.
தீட்சண்யரோ இமைக்க மறந்தவராய், இரு விழிகள் போதாதவராய் தோகையினியின் மீதே பார்வையை பதித்திருந்தார். பெயருக்கு ஏற்றார் போலவே தோகையை விரித்தாடும் வண்ண மயிலைப் போலவே காட்சியளித்தவளை தமது விழிகளால் பருகிக் கொண்டிருந்தார்.
தோகையினியை அனைவரும் பாராட்டு மழையில் நனைய வைத்தனர். அவளுடைய தாயாரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அன்று மாலை வரையும் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாகவே நடந்து முடிந்தது.
** மாலை வேளையில் தீட்சண்யருக்கு மருத தேசத்தின் அரசரும் அவருடைய தந்தையாருமாகிய வீரேந்திர மருதரிடம் இருந்து அழைப்பு வந்தது. தமது தந்தையின் கட்டளையை ஏற்று விரைந்து அரண்மனைக்கு சென்றார்.
“வணக்கம் தந்தையே! தாங்கள் அழைத்ததாக செய்தி வந்திருந்தது” என்று அவர் முன்னால் நின்றார்.
“ஆம் தீட்சண்யா! எனக்கு தெண்ணாற்றங்கரையை ஒட்டியுள்ள சந்திர நாட்டு மன்னர் அருள் வேந்தரிடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தினால், உள்நாட்டினில் எதிரிகளால் ஏதோ கலகம் ஏற்பட்டிருக்கிறதாம். இப்பொழுது மன்னரும் நோய்வாய்ப்பட்டு இருப்பதினால் அது அவர்களுக்கு சாதகமாகி விட்டதாம்.
நம்முடைய உதவி உடனே தேவை என செய்தி அனுப்பி இருக்கிறார். அங்கே அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோய்க் கொண்டு இருக்கிறதாம். எதிரிகளை அழித்து நாட்டை மீண்டும் நல்வழிப்படுத்த நம் உதவியினை எதிர்பார்க்கிறார். நீ உடனடியாக அங்கு சென்று அந்த நாட்டின் பிரச்சனைகளை தீர்த்து அரசருக்கு உதவியாய் அவர் குணமடையும் வரை இருக்க வேண்டும். நீ நாளை காலையில் இங்கிருந்து புறப்படத் தயாராய் இரு. உனக்கு உதவிக்கு யார் யார் தேவை என்பதனையும், உனக்கு தேவையான ஆயுதங்களையும் படைத்தளபதியாரிடம் கூறி விடு. நாளை காலையில் அனைத்தும் தயார் நிலையில் இருக்கும்” என்று மன்னர் கூற,
“ஆகட்டும் தந்தையே! அவ்வாறே செய்கிறேன். ஆனால் இங்கே தங்களுக்கு உதவிக்கு…” என மகனாக கவலை கொண்டார் தீட்சண்யர்.
“அதனைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம் தீட்சண்யா. நம் மந்திரிப் பெருமக்கள் இருக்கின்றனர். கூடவே ஆயிரம் கண் கொண்டவளாய் உன் தங்கை சமுத்திர தேவிகை இருக்கிறாள். உன் உதவி தேவை என்றால், உனக்கும் அழைப்பு விடுக்கும் தொலைவினில் தானே நீ இருக்கிறாய். என்னைப்பற்றி கவலை வேண்டாம். அந்த நாட்டையும் நம் நாட்டினைப்போல பேணி பாதுகாக்க வேண்டியதே இப்பொழுது உன் கடமை” என தீட்சண்யருக்கு நம்பிக்கையளித்தார் வீரேந்திர மருதர்.
“தங்கள் எண்ணம் போலவே செயல் படுகிறேன் தந்தையே” என்று தனக்கு தந்த பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் தீட்சண்யர்.
“நீ இதுவரை போரினில் வெற்றி வாகை சூடி வந்தது பெரிய விஷயம் இல்லை தீட்சண்யா. கண்ணுக்கு தெரிந்த, கண் முன்னே எதிர்த்து நிற்கும் எதிரிகளை வீழ்த்துவது எளிது. ஆனால், எதிரிகள் யார் என்று தெரியாமல் அவர்களின் சதி எதுவென்று தெரியாமல் அவர்களை அழிப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இந்த பணியையும் சிறப்போடு செய்து வர வேண்டும்” என மகனுக்கு நிதர்சனத்தை மன்னர் விவரிக்க,
“ஆகட்டும் தந்தையே” என ஒப்புதல் தந்தார் தீட்சண்யர்.
மகனுக்கு கட்டளைகளை கூறியபின்னர். படைத்தளபதியை அழைத்து, “தீட்சண்யருக்கு வேண்டியனவற்றை ஏற்பாடு செய்து கொடு. நாளை சூர்ய உதயத்திற்கு முன்பு அவன் புறப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டார்.
“அப்படியே செய்கிறேன் அரசே!” என்றபடி படைத்தளபதியும், இளவரசருடன் அவருக்கு புறப்பட தேவையானவற்றை ஏற்பாடு செய்ய சென்று விட்டார்.
ஏற்பாடுகள் முடிவதற்கே அந்தி சாய்ந்து விட்டிருந்தது. தீட்சண்யர் ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்பார்வை பார்த்துவிட்டு, தன்னுடன் வருவதற்கென நான்கு வீரர்களையும் தேர்ந்தெடுத்துவிட்டு விருந்தினர் மாளிகையை நோக்கி நடந்தார்.
நாளையே கிளம்ப வேண்டும் என்றதும், தீட்சண்யர் மனதினில் உதித்தது தோகையினியின் முகமே. சந்திர நாட்டின் பிரச்சனைகளை தீர்த்து மீண்டும் தாய் நாடு திரும்ப எத்தனை மாதங்கள் ஆகுமோ தெரியாது. அத்தோடு தோகையினியும் வைகாசி திருவிழா முடிவு பெற்றதும் வேங்கை நாட்டிற்கு திரும்பிவிடுவாள். ஆகவே, அவளிடம் தன் மனதினில் இருப்பதனை கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
தோகையினி நேற்று போலவே இன்றும் தோட்டத்தில் இருக்க வேண்டும் என்று எண்ணியபடியே விருந்தினர் மாளிகையின் அருகே இருக்கும் தோட்டம் நோக்கி சென்றார். தீட்சண்யரின் எண்ணத்தை பொய்யாக்கமால் தோகையினி மல்லிகைப்பந்தலில் மலர்களை பறித்துக் கொண்டிருந்தாள்.
ஏதோ அரவம் கேட்கவும் யாராக இருக்கும் என்று எண்ணியபடி சப்தம் வந்த திசையினை பார்த்தாள். அங்கே அழகான வண்ண மயில் ஒன்று மெல்ல நடை பழகி, அதன் வாயினில் ஊதா வண்ண அல்லி மலர்களை ஏந்தியபடி அவளருகினில் வந்தது.
அந்த அழகிய காட்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் நெருங்கிய மயில், அவளருகே அந்த மலர்களை போட்டுவிட்டு வந்ததை விட பல மடங்கு வேகமாய் திரும்பி சென்று நொடியினில் அவள் பார்வையில் இருந்து மறைந்தது.
ஊதா வண்ண அல்லி மலர்களை பார்த்தவளுக்கு அதனை இங்கே இருக்கும் குளங்களில் கண்டதாய் நினைவே இல்லை. அதை அவள் கண்ட இடமும், அப்பொழுது அவள் அருகினில் இருந்தது யார் எனவும் மனதினில் தெளிவாய் ஓடியதால், இந்த வேலையை யார் செய்திருப்பார் என்பதனை ஊகிப்பதில் அவளுக்கு பெரும் சிரமம் ஏற்படவில்லை. மலர்களை கண்டு கொள்ளாமல் மீண்டும் மல்லிகையை பறிக்க சென்று விட்டாள்.
“இந்த அல்லி மலர்கள் மட்டும் என்ன பாவம் செய்ததோ?” அவளின் பின்னால் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட கம்பீரமான குரல் அவள் செவியினை வந்தடைந்தது.
யாருடைய குரல் என்று தெளிவுற தெரிந்தாலும் ஏனோ தோகையினியால் திரும்ப இயலவில்லை. பதில் கூறவும் முடியவில்லை. தனிமையில் அவள் இருக்கும் பொழுது அவரிடம் பேசினால், அது அவருக்கு ஏதேனும் தவறான பெயர் அமைந்து விடுமோ என்ற பயம் அவளை தீட்சண்யர் புறமாய் திரும்ப கூட விடவில்லை.
ஏனெனில் அவர்கள் இருப்பது விருந்தினர் மாளிகையின் தோட்டத்தில், திருவிழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்கள் பெரும்பாலானோர் இருக்கும் பகுதியில், எப்பொழுதும் யார் வேண்டுமானாலும் வரக்கூடும் என்று அவள் அஞ்சியதே அதற்கு காரணம்.
தீட்சண்யருக்கோ அவளின் அலட்சியம், கோபத்தை தந்தது. “உன்னிடம் தான் கேட்கிறேன் தோகையினி. நான் கேட்பதற்கு பதில் கூறுவது கூட சிரமமாக இருக்கிறதா?” குரலில் இருந்த அழுத்தம் கோபத்தை வெளிப்படுத்த,
அவரின் கோபத்தை கன நேரம் கூட தாங்க இயலாதவளாய் அவர் புறம் திரும்பியவள், “அதெல்லாம் ஒன்றும் இல்லை. இங்கே யாரேனும் வந்து விட்டால், உங்களை தவறாக எண்ணி விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான்” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி மெல்லிய தவிப்புடன் தோகையினி பதில் கூறினாள்.
‘என்னை யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது என்று எண்ணுகிறாள் என்றால் அது என் மீது கொண்ட நேசத்தின் வெளிப்பாடு தானே!’ என்று எண்ணியவரின் மனம் தெளிய மகிழ்ச்சி பிறந்தது.
“இல்லை தோகையினி. நாளை காலையில் சூரியோதயத்திற்கு முன்பே அரசாங்க அலுவல் காரணமாக நான் தெற்கு நோக்கி பயணம் செல்ல வேண்டும். அதற்கு முன்பு உன்னிடம் பேச வேண்டும் என்று வந்தேன்”
“ஓ…” என்று அவன் கூறியதை உள்வாங்கிக் கொண்டவளுக்கு, மேற்கொண்டு என்ன கூறுவதென்றே தெரியவில்லை.
ஏற்கனவே இங்கிருந்து வேங்கை நாட்டிற்கு இரு தினங்களில் சென்று விடுவோம் என்று கவலை கொண்டிருந்தவளுக்கு, நாளையே தீட்சண்யர் கிளம்பி விடுவார் என்பதனை எப்படி ஏற்றுக்கொள்வது என்றே தெரியவில்லை.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தவளைக் கண்டவன், “நீ பேசா மடந்தை போன்று இருந்தால், என்னால் எதையும் ஊகிக்க இயலாது” என அழுத்தமான குரலில் அவர் வார்த்தைகள் ஒலித்தது.
“சரி போய் வாருங்கள்! நாங்களும் நாளை மறுநாள் வேங்கை நாட்டிற்கு கிளம்புகிறோம்” என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்புடன் பதில் கூறினாள்.
இனி என்ன பேச என புரியாமல், “உனக்கு தூது அனுப்பலாம் இல்லையா?” என அவர் கேட்க,
“இல்லை வேண்டாம். வேறு எவரிடமும் ஓலை கிடைத்துவிட்டால், அது சரியாக இருக்காது” என்று உடனடியாக தனது மறுப்பை தெரிவித்தாள் அவள்.
“பிறகு எப்படி உனக்கு தகவல்களை அனுப்புவது?” என தனது கவலைகளை அவர் முன்வைக்க,
“அண்ணா! அதற்கு தானே நான் இருக்கிறேன். தாங்கள் எனக்கு அனுப்பி விடுங்கள். நான் இளவரசியாரிடம் பகிர்ந்து கொள்கிறேன்” என்றபடி சமுத்திரா வந்து சேர்ந்தாள்.
இருவரும் அதிர்ந்து திரும்ப முதலில் சுதாரித்த தீட்சண்யர், “சமுத்திரா, நீ எப்பொழுது வந்தாய்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என சிறு அதட்டல் தொனியில் கேட்க,
அதை துளியும் பொருட்படுத்தாதவளோ, “என்ன அண்ணா நான் கேட்க வேண்டியதை நீங்கள் கேட்கறீர்கள்…” என்றாள் கேலிப் புன்னகையுடன்.
“விளையாடாமல் கூறு சமுத்திரா” என தீட்சண்யர் தான் இறங்கி வரவேண்டியதாய் போனது.
“நான் தந்தையாரிடம் உரையாடிவிட்டு உங்களை தேடி வந்தேன். அப்பொழுது நீங்கள் விருந்தினர் மாளிகை பக்கம் வருவதைப் பார்த்து உங்களைத் தேடி வந்தேன். அண்ணா நீங்கள் இருவரும் எதற்கும் கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு இடையே தூது புறாவாய் நான் இருக்கிறேன்” என்றபடி மீண்டும் கேலி செய்தவளை செல்லமாக தீட்சண்யர் முறைத்தார். அதோடு சமுத்திரையிடம் இருந்து தோகையினியை காக்கும் முயற்சியாக தங்கையோடு அவ்விடத்தைவிட்டு நகர்ந்து விட்டார்.
இவர்களின் பேச்சு தோகையினிக்குதான் படபடப்பை ஏற்படுத்துவதாய் இருந்தது. இருப்பினும் அதனையும் தாண்டி நாளைய தீட்சண்யரின் பயணம் குறித்த கவலை அவளை மேற்கொண்டு எதனையும் சிந்திக்க முடியாமல் செய்தது

Advertisement