Advertisement

சத்ரிய வேந்தன் – 12 – கரடு மலை
எத்தனை பாவங்கள்
செய்தால் என்ன?
உனக்கென இழப்பு
வரும் பொழுது,
நீயும் வருந்த
வேண்டும் அன்றோ!
உன் இழப்புகளின்
வலியே உனக்கு
சாதாரணமாய்
தோன்றுகிறதென்றால்…
நீ பிறருக்கு
இழைத்த அநீதிகளின்
அளவு???
தமது உடல்நிலை ஏற்கனவே தேறி வந்த நிலையில், மார்பில் ஏற்பட்ட காயங்களுக்கான சிகிச்சை மட்டுமே சில நாட்களாக ரூபன சத்ரியர் எடுத்து வந்தார். புதிதாக மருத தேசத்திலிருந்து வந்த வைத்திய குழுக்களின் மிக சிறப்பான வைத்திய திறமையால், ஏற்கனவே குணம் ஆகி தொடங்கியிருந்த காயங்கள், விரைவினில் குணம் அடைந்தது.
இத்தனை விரைவினில் உடல் நலம் தேறுவோம் என ரூபனர் துளியும் எண்ணவில்லை. அதற்கு அவருடைய மனோதிடமும், உடல் வலிமையும் தான் அதிமுக்கிய காரணங்கள். சக்கரவர்த்தி வீரேந்திரர் சென்ற சில தினங்களிலேயே, தமது உடல் நலம் முற்றிலும் தேற, எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டான் அந்த மாவீரன்.
உடல்நலம் குணமடைந்ததும் விஜயபுரி அரசர் வேலவரை அரண்மனையில் சென்று கண்டான். அவர் எவ்வளவோ தேறி இருக்கிறார் என்பதே பெரிய ஆறுதல். அதிலும் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்பது பெரிய நிம்மதி. அரசர் வேலவரின் உடல் நலம் தேறிக் கொண்டு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் அந்த வீரன்.
பின்னர், அரசரின் நல்லாசியோடும், அரசவையில் இருந்தோரின் வாழ்த்துக்கள் மற்றும் நல்லாசியோடும் மருத தேசத்தின் விருந்திற்காக புறப்பட்டான்.
மருத தேசத்தையும், அதன் அரண்மனையைக் காண்பதுமே பெரிய பாக்கியம். அப்படி இருக்கையில் அங்கே அரசருடன் விருந்துண்ண அழைப்பு வந்தால்? எல்லையில்லா மகிழ்வோடு மருத தேசத்திற்கு தமது பயணத்தை மேற்கொண்டார் ரூபனர்.
** மருத தேசத்தில், நவிரனின் இல்லத்தின் முன்பு சில வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடைய தோரணையும், உடற்கட்டும், திண்ணிய தோள்களும், திடமான மார்புகளும் அவர்கள் அனைவரும் சிறந்த பயிற்சி பெற்ற வீரர்கள் என்பதை உணர்த்தும். அவர்கள் ஐவருக்கும் பயிற்சி அளிப்பது நவிரனும் அவனுடைய சகோதரர்களுமே.
மல்யுத்த குரு நெடுமாறனார், அவ்வளவு எளிதில் யாருக்கும் நேரடியாக பயிற்சி அளிக்கமாட்டார். பெரும்பாலும் தமது சிஷ்யர்கள் மூலமாகவே பயிற்சி வழங்குவார். அவருடைய நன்மதிப்பை குறுகிய காலத்தில் பெற்றது நவிரனும் அவனுடைய சகோதரர்களுமே. அதோடு அவரின் சிஷ்யர்களாகவும் இருப்பது இவர்கள் மூவருமே.
நவிரனின் வீட்டு வாயிலில் காத்திருந்த ஐந்து வீரர்களும், நவிரனின் வரவிற்காக காத்திருந்தனர். சிறிது நேரத்தில் நவிரன் தமது சகோதரர்களோடு அங்கே வந்தான்.
“சென்ற காரியம் என்னவாயிற்று?” கடுகடுத்த முகத்தோடு, காத்திருந்தவர்களை நோக்கிக் கேட்டான் நவிரன்.
நவிரன் மருத தேசத்திற்கே சிம்ம சொப்பனம். அதிக வீரத்தோடும், நான்காண்டு தொடர்ந்து மற்போரில் வென்றவன் என்கிற கர்வத்தோடும், அரசரின் நன்மதிப்போடும் வலம் வருபவனிடம் எப்பேர்ப்பட்ட வீரனும் தன் நிலையை மறந்து தாழ்ந்து போவான்.
அப்படி இருக்கையில் அவனால் பயிற்சி பெற்ற வீரர்கள், அதுவும் அவன் கூறிய வேலையை முடிக்க முடியாமல் திரும்பி வந்தவர்கள், எப்படி அவனிடம் பதிலைக் கூற முடியும்? ஐவரும் மிகுந்த தயக்கத்தோடும், பயத்தோடும் நா உலர, இதயம் தடதடக்க, அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெற்கதிர்களைப் போன்று தலை தாழ்த்தி காத்திருந்தனர்.
“உங்களைத்தான் கேட்கிறேன். இப்படி பதில் கூறாமல் தலை தாழ்த்தி இருந்தால் என்ன அர்த்தம்?” சற்றே உருமிய படி கேட்க அந்த ஐவரும் அரண்டு போனார்கள்.
“குருவே! நதியை ஒட்டியே பல காத தூரங்கள் வரை தேடிவிட்டோம். எந்த பலனும் கிடைக்கவில்லை. குரு நெடுமாறனார் புதல்வியின் உடல் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் நன்கு தேடி விட்டோம்” என்றான் ஒருவன் நடுக்கத்தோடு.
அதைக்கேட்டதும் நவிரனின் முகம் செந்தனலாய் சிவக்க, அவனுடைய சகோதரர்கள் சேந்தனுக்கும், கயிலனுக்கும் வார்த்தையால் வர்ணிக்க இயலாத வண்ணம் முகம் சோகத்தில் மூழ்கியிருந்தது.
நவிரனின் முகமாற்றத்தை கணித்த மற்றொருவன், அவன் கோபத்தில் எதுவும் கூறும் முன்பாக விரைந்து, “ஆனால் குருவே இங்கிருந்து அரை காத தூரம் தள்ளி அமைந்துள்ள மெட்டூரில், கடந்த வாரம் ஆற்றில் அடித்து வரப்பட்ட சிதிலமடைந்த ஒரு இளம் பெண்ணின் உடலை, ஊர் மக்களே எரியூட்டினார்கள் என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதோடு அந்த பெண்ணைத்தேடி இதுவரை யாரும் வரவில்லை என்றும் அவ்வூர் மக்கள் கூறினார்கள்” என்று வேகமாக பதிலுரைத்தான்.
“ஆமாம் குருவே. அந்த ஊரில் இருந்தவர்கள் கூறிய அடையாளங்கள், குருவின் மகள் நிலவிகாவுக்கு பொருந்தும்படி இருந்தது” என்று மற்றவர்களும் கூறினர்.
மேலும் ஒருவன் தொடர்ந்து, “நாங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஊர்களிலும், மடங்களிலும், வைத்திய சாலைகளிலும் நன்கு தேடி விட்டோம். எங்கும் குருவின் மகளைக் காணவில்லை” என்ற தகவலைக் கூறினான்.
அவர்கள் கூறிய செய்தியின் சாரம்சம், இப்பொழுது நிலவிகா இந்த உலகில் இல்லை என்பதே ஆகும். நவிரனின் சகோதர்கள் சேந்தனும், கயிலனும் தன்னிலை மறந்து அழத்தொடங்கி விட்டனர். அவர்களால் இந்த இழப்பை தாங்கவே முடியவில்லை. அவர்களும் எத்தனை துயரங்களைத்தான் தாங்கிக்கொள்ள முடியும். மிக சமீபத்தில் தான் அவர்களுடைய தாயாரும், மல்யுத்த குரு நெடுமாறனாரும் அடுத்தடுத்து உயிர் துறந்திருந்தினர்.
“அண்ணா! நாம் யாருக்கு என்ன கெடுதலை செய்தோம். இப்படி ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அனாதைகளாய் தவிக்கிறோமே! இந்த சில மாத கால இடைவெளியில் எத்தனை இழப்புகளைத்தான் தாங்க முடியும்.
முதலில் தாயை இழந்தோம். பிறகு தந்தையாய், காவலனாய், நமக்கு அரணாய், ஆசனாய் இருந்த குருவை இழந்தோம்.
அந்த இழப்புகளில் இருந்தே இன்னும் மீள முடியாமல், தவிக்கிறோம். குருவுக்கு செய்யும் நன்றி கடனாக, நிலவிகாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும், குருவின் ஆசைப்படி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என்று தானே எண்ணினோம். இப்பொழுதே அவளே கனவாகிப் போனாளே!” என்று கயிலன் ஆற்றாமையில் புலம்ப,
சேந்தனும் உடன் சேர்ந்து, “அண்ணா! கடவுளுக்கு நம் மீது இரக்கமே இல்லையா? நமக்கு இத்தனை சோதனைகளைத் தர வேண்டுமா? நம்மை விடுங்கள். பாவம் நிலவிகா வளர்ந்திருந்தாலும் பாசம், அரவணைப்பு எதுவும் இல்லாமல் வளர்ந்த குழந்தை குணம் கொண்டவள்.
பிறந்ததும் தாயை இழந்தவள், வயதில் முதிர்ந்த பாட்டியின் அரவணைப்பில் அனாதை போல வளர்ந்தாள். பாட்டியையும் இழந்து, தந்தையின் நிழல் தேடி வந்தவள், வந்த சில வாரங்களிலேயே தந்தையையும் இழந்து விட்டாள். இந்த கடவுளுக்கு அவளிடம் இருந்து இத்தனையை பறித்ததோடு மனம் தாங்கவில்லையா? அவளின் உயிரையும் பறித்து விட்டாரே!” என மாறி மாறி கதறியவர்களை தேற்ற வழி தெரியாமல் நவிரன் தவித்தான்.
அவர்கள் அழத்தொடங்கியதுமே வாயிலில் இருந்த ஐந்து வீரர்களையும் கிளம்பி செல்லும்படி சைகை செய்திருந்தான்.
இருவரும் வாசலிலேயே அழுது கரைய அவர்களைத்தேற்றி, வீட்டு கூடத்தில் அமர வைக்கவே நவிரன் பெரும்பாடு பட்டு விட்டான். இருவரும் இயல்பை தொலைத்து மாற்றி மாற்றி புலம்பவும், அருகில் இருக்கும் உறவினர்கள் ஓரிருவரை வீட்டிற்கு அழைத்து, சகோதர்களுடன் இருக்க சொல்லிவிட்டு கோட்டை வாயிலின் பாதுகாப்பு பணிக்கு கிளம்பினான்.
‘இன்னும் சிறு குழந்தைகள் போல அழுது வடிகிறார்கள். இழப்புகளை தாங்க தெரியாதவர்கள் என்ன வீரர்கள்? இவர்களை எப்படித்தான் சமாளிப்பதோ?’ என்று எண்ணியபடியே தமது பணிக்கு சென்றான் அந்த கல்நெஞ்சக்காரன்.
மற்றவர்களுக்கு இதை விட பல துன்பங்களைக் கொடுத்த நவிரனுக்கு, எத்தனை துன்பங்கள் வந்தாலும் அது துரும்பாகவே தெரிகிறது. ஆனால், இதுவரை பாவத்தின் நிழல் கூட படிந்திடாத சேந்தனுக்கும், கயிலனுக்கும் இது மிகப் பெரும் துன்பமே! அடுத்து வந்த சில தினங்களும் அவர்கள் இருவரும் தங்கள் சோகத்திலேயே மூழ்கியிருக்க, நவிரன் சிறு சலிப்புடன் காவல் பணிக்கு சென்றான்.
தினமும் கோட்டை காவல் பணிக்கு நவிரனுடன் ஒருவனும், மல்யுத்த பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்க மற்றொருவனும் இருப்பதும் வழக்கம். சேந்தனும், கயிலனும் மாறி மாறி இந்த வேலையை செய்வார்கள். நவிரன் தினமும் தவறாமல் காவல் பணிக்கு சென்று விடுவான்.
கோட்டை வாயிலில் காவல் வேலை தொடங்கியதும், தம்மை வணங்கி கோட்டையை கடந்து செல்வோரைக் காண, என்றும் போல இன்றும் கர்வம் தலைக்கேறியது.
“அரசர் இவனை கௌரவப் படுத்த மற்றவர்களை இழிவு படுத்திவிட்டாரே!” என்ற எண்ணம் மக்களிடம் எழத் தொடங்கியிருந்தது. அதற்கு முக்கிய காரணம் நவிரனின் கர்வமும், தீய நடத்தையும், அவனுடைய அக்கிரமங்களுமே ஆகும்.
** மருத தேச கோட்டையினை சுற்றிலும் பல ஊர்கள் அமைந்திருந்தது. மருத கோட்டையின் மேற்கு புறத்தில் சில மைல் தொலைவில் அமைந்துள்ளது வயலூர். வயலூரில் அமைந்துள்ள முருகப்பெருமான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கரடு மலையில், மலையின் உச்சியில் பிரமாண்டமான முருகப்பெருமான் சந்நிதியும், மலை முழுவதும் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனமும், மலை அடிவாரத்தில் மலர் தோட்டங்களும், மூலிகை தோட்டங்களும், மிகப்பெரிய வைத்திய சாலையும், கோயில் மடமும் அமைந்திருந்தது.
ஆதவன் தமது வெம்மையைக் குறைத்து கீழ் வானில் புதையத் தொடங்கும் நேரம், மாவீரன் ரூபனர், தமது குதிரையை மெதுவாக செலுத்தியபடி, மேற்கு திசையில் இருந்து மருத கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
விஜயபுரி நகரத்திலிருந்து, மருத தேசத்திற்கு புறப்பட்டு இரண்டு தினங்கள் ஆகி இருந்தது. வரும் வழியில் எதிரினில் ஒரு முதியவரைக் கண்டவன், அவரிடம் இறங்கி வழி கேட்பதற்காக பேச்சுக் கொடுத்தான்.
“ஐயா! வணக்கம். நான் மருத கோட்டைக்கு செல்ல வேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
அவனுடைய நிமிர்வும், கண்களின் தெளிவும், திடகாத்திரமான உடல் கட்டமைப்பும் அவன் ஒரு வீரன் என்பதை தெளிவாக உணர்த்துவதோடு, அவனுக்கான மரியாதையை இயல்பிலேயே கொடுக்கத் தோன்றியது அந்த பெரியவருக்கு. “வணக்கம் தம்பி! சூரியன் அஸ்தமிக்கப் போகும் நேரத்தில் வந்திருக்கிறாயே! முன்னமே வந்திருக்கக் கூடாதா?” என்றார் அந்த பெரியவர்.
“ஏன் ஐயா? இப்பொழுது செல்ல இயலாதா?”
“இல்லை தம்பி. சூர்ய அஸ்தமனத்தில் கோட்டை வாயிலை அடைத்து விடுவார்கள். மீண்டும் நாளை காலையில்தான் வாயில் திறக்கப்படும். நீ இப்பொழுது செல்வது இயலாத காரியம். இன்னமும் சில மைல் தொலைவு பயணம் செய்ய வேண்டும். உன்னைப் பார்த்தால் வெகுதூரம் பிரயாணம் செய்து வந்தவன் போல தெரிகிறாயே?” என்றார் முதியவர்.
“ஆம் ஐயா. நான் மேற்கே விஜயபுரி நகரத்தில் இருந்து வந்திருக்கிறேன். தங்கள் தகவல்களுக்கு நன்றி ஐயா. இது என்ன இடம் இங்கே தங்குவதற்கு எதுவும் கோயில் மடமோ, சத்திரமோ இருக்கிறதா?” என்று ரூபனர் முதியவரிடம் கேட்டார்.
“இது வயலூர் தம்பி. அருகினில் ஒரு முருகர் சந்நிதி இருக்கிறது. இங்கிருந்து நேரே சென்றால், வடக்கிலும், கிழக்கிலும் இரண்டு வழிகள் பிரியும். வடக்கே பிரியும் வழியில் பார்த்தாயானால், கரடு மலை தெரியும். அந்த மலையில் சந்நிதியும் அதன் அடிவாரத்தில் மடமும் இருக்கிறது. நீ அங்கே தாங்கிக்கொள். காலையில் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு செல்லப்பா, நீ எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்” என பதிலுரைத்தார் பெரியவர்.
“மிகவும் நன்றி ஐயா” என்று ரூபனர் கூற,
“தம்பி விஜயபுரி நகரம் என்று கூறினாயே, ஜீவசுடர் நதியினருகே நடந்த போரினில் பெரிய சேதமாமே. மன்னர் கூட மிகுந்த காயமடைந்திருந்தார் என்று கேள்வி பட்டோமே. இப்பொழுது மன்னரின் உடல்நிலை எப்படி இருக்கிறது?” என முதியவர் கேட்டார்.
‘என்ன மாதிரியான நேசம் இது, முன்பின் அறியாதவர்கள், இங்கிருந்து நெடுந்தூரம் தள்ளி அமைந்துள்ள நாட்டில் நடந்த போருக்காக இவர் வருந்துகிறாரே! அதிலும் நம் மன்னரின் உடல்நிலை குறித்து இந்த நாட்டு மக்கள் கவலை கொள்கின்றனரே!’ என்று எண்ணி ரூபனரின் மனம் நெகிழ்ந்து போயிருந்தது.
அதே மனநிலையோடு, “இப்பொழுது மீளத் தொடங்கி விட்டோம் ஐயா. மன்னரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம். விரைவில் குணமடைந்து விடுவார்” என பதிலுரைத்தான்.
“நல்லது தம்பி. சரி நீங்கள் மடத்திற்கு சென்று ஓய்வெடுங்கள். ஏற்கனவே பயணக் களைப்பில் இருக்கிறீர்கள். அங்கேயே இரவு உணவும் தந்துவிடுவார்கள்” என்று கூறினார்.
“நன்றி ஐயா” என்று அவரிடமிருந்து விடைப்பெற்று கரடு மலை நோக்கி குதிரையை செலுத்தினான். சில நிமிட பிரயாணத்தில் கரடு மலையை அடைந்து விட்டான்.
மலை அடிவாரத்தில் இருந்த மிகப்பெரிய மடமும், தோட்டமும் அதிக பிரமிப்பை ஏற்படுத்தியது. மடத்தின் தூய்மையும், பணியாளர்களின் அர்ப்பணிப்பும் மெச்சுதல் பார்வையை செலுத்த வைத்தது.
‘எத்தனை சிறந்த பராமரிப்பு!’ அவனால் வியக்கமல் இருக்க முடியவில்லை.
மடத்தினுள்ளே சென்றவன், தமது உடைமைகளை பத்திரப்படுத்தி பயணக்களைப்பு தீர, குளிப்பதற்காக சென்றான். அங்கே பணியாளர்கள் இவன் தேவை உணர்ந்து, வெந்நீர் கொடுக்கவும் ஆச்சரியப்பட்டுப் போனான்.
“நான் சாதாரணமான தண்ணீரிலேயே குளித்துக் கொள்கிறேன்” என ரூபனர் மறுக்க,
“இல்லை ஐயா, இது குளிர் காலம், அதிலும் மாலை மங்கிய நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர்கள். குளிர் நீர் தரக்கூடாது என்பது எங்களுக்கான உத்தரவு. இதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை, இங்கே இருக்கும் வைத்திய சாலையின் தேவைக்காக எப்பொழுதும் வெந்நீர் தயார் நிலையிலேயே இருக்கும். ஆகையால் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்” என அந்த பணியாள் கூற,
மடத்தை கவனிப்பரின் பொறுப்பையும், திட்டமிடும் பண்பையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பணியாளுக்கு நன்றியை கூறிவிட்டு, வெந்நீரில் குளித்து வந்தவனுக்கு பயணக்களைப்பில் கண்கள் சுழற்றிக் கொண்டு வந்தது.
அவனுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தினில் படுத்தவனுக்கு, படுத்த உடனேயே நித்திரா தேவி அருள் பாலித்துவிட்டாள். இரவு உணவையும் மறந்து, பயணக்களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
ஓரளவு களைப்பு தீர்ந்ததும், சற்றே நினைவு பெற்று எழுந்தவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய்ய, நள்ளிரவில் எப்படி உணவு கேட்க என்று தவித்தவனுக்கு அருகில் பழங்களும், அவன் அருந்துவதற்கான நீரும் இருக்கவே, பெரிதும் வியந்தான். எத்தனை சிறப்பான திட்டமிடும் பண்பு! அவனால் இப்பொழுதும் வியக்காமல் இருக்க முடியவில்லை. பழங்களை உண்டு விட்டு, மீண்டும் உறக்கத்திற்கு சென்றான்.

Advertisement