Advertisement

மின்னல்-35
அமைதியான தெரு…ஒவ்வொரு வீட்டின் முன்பும் வரிசையாய் நிற்கும் வாகனங்கள்…தெருவின் இருபக்கமும் வளர்ந்து நின்ற மரங்கள் என அந்த இடமே அவ்வளவு ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
மனதிற்கு குளுமை தரக்கூடிய அந்த இடத்தினால் சற்றும் கவரப்படாதவளாக தன் வீட்டபால்கனியில்  அமர்ந்து ஏங்கோ தூரத்தில் கடந்துச் செல்லும்  முகில் கூட்டங்களையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் அவள்…அஷ்மிதா!
காலை வகுப்புகளை முடித்துக் கொண்டு வந்தவளுக்கோ அந்த அறையின் வெறுமை தாங்காமல் பால்கனியிலேயே தஞ்சமடைந்துவிட்டாள்.
தோளில் கரம்படிய திரும்பினால்…பரிவாய் அவள் கேசம் கலைந்தபடி நின்றிருந்தார் லீலாமதி.
“என்னடா? இங்கேயே உட்கார்ந்துட்ட??” என்றவரின் கேள்விக்கு
“ப்ச் ப்ச்! ஒன்னுமில்லமா…ஒருமாதிரி இருந்துச்சு…” என்றாள்.
அவளையே உற்று நோக்கியவர் “என்னடா யாழிய மிஸ் பண்றீயா???” என்று கேட்டார் அவருக்கா தெரியாது அவளை பற்றி…!
முதலில் இல்லையென்று மறுத்தாலும் பின் “ஆமா மா…ஏதாவது பண்ணிட்டே இருப்பா…ஒரு இடத்துல இருக்க மாட்டாளா…இப்போ அவ இல்லாம வீடே ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி ஃபீல் ஆகுது”  என்றவளின் கண்கள் லேசாய் கலங்கிவிட்டன.
“அஷ்மீ!! என்னடா இது?? இன்னும் மூணே நாள் வந்துருவா….வேணும்னா நாம இப்போவே வர சொல்வோமா???” என்று அவர் வினவ அவளோ
“அதெல்லாம் வேணாம் மா!” என்றுவிட்டாள்.
“சரி வா! காஃபி குடிக்கலாம்”  என்று அழைத்தவர் அங்கிருந்துச் சென்றுவிட அந்த அறையையே ஒரு முழு நிமிடம்  பார்த்திருந்தவள்  வெளியேறினாள்.
குறிஞ்சி கிளம்பிய அன்றிரவே இவளுக்கு இருப்புகொள்ளவில்லை! அதே சமயம் தங்கையை தடுக்கவும் மனம் வராமல்போக  இன்னும் எட்டே நாள்…ஏழே நாள் என்று எண்ணிக் கொண்டு இத்தனை நாட்களை கழித்தவளால் ஏனோ அன்று அப்படி முடியாமல் போனது!
அவர்களிருவரும் சகோதரிகள் என்பதைவிட முதலில் நல்ல நண்பர்கள்!!
ஒருவரை விட்டு மற்றொருவர் இத்தனை நாட்கள் பிரிந்திருந்ததில்லை…இதுவே முதல் முறை.
வெளியே வந்தவள் ஜிதேந்திரனின் பக்கத்தில் தொப்பென்று அமர்ந்துக் கொண்டாள்.
அவளை ஆச்சர்யமாய் பார்த்த ஜிதேந்திரனை அவள் கேள்வியாய் நோக்க அவருக்கு புரிந்துவிட்டது அஷ்மியின் மனநிலை இப்பொழுது தாறுமாறாய் ஓடிக் கொண்டிருக்கிறதென்று!
“என்னாச்சு அஷ்மிமா???” என்றவரின் கேள்வியில் நிமிர்ந்தவள் அவரிடமே பாய்ந்தாள்.
“எல்லாம் உன்னால வந்ததுபா!!”
“நான் என்ன பண்ணேன்டா??” என்றவர் புரியாமல் விழித்தார்.
“பின்ன… இப்ப வெகேஷன் போலன்னு யார் அழுதா??? என்னையும் சேர்த்து அனுப்பியிருக்கலாம்ல??”  என்றவளின் குரலில் பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்துதான் போனர்.
இதே வாக்கியத்தை குறிஞ்சி கூறியிருந்தாள் பெரிதாக தோன்றியிருக்காது…காரணம் அவள் மனதில் தோன்றியதை செய்பவள்!
ஆனால் அஷ்மி…அவள் எல்லாவற்றையும் கருத்தில் வைத்து முடிவெடுப்பவள்! அவளுக்கும் குறிஞ்சிக்குமான வயது வித்தியாசம் மிகக் குறைவுதான் இருந்தும் அவளை அப்படி பார்த்துக் கொள்வாள்.
அப்படிப்பட்ட அஷ்மிதா இன்று சிறுபிள்ளையாய் முகத்தை திருப்பினால்!?
“அஷ்மிமா! நீதானேடா  க்ளாஸ் இருக்குனு சொன்னே…”
“நான் அப்படிதான் சொல்லுவேன்! நீங்களாவது திட்டி கூட அனுப்பியிருக்கலாம்ல…” என்பவளிடம் என்னவென்று சமாதானம் செய்வது என்று புரியாமல் அவர் விழித்துக் கொண்டிருக்க அவரை காக்கவென்றே(?) ஒலித்தது அந்த ஃபோன்.
“நான் எடுக்கறேன்!” என்றவள் ஓடிச் சென்று அதை உயிர்பித்தாள்.
“ஹலோ!”  என்றவளின் குரலுக்கு நேரெதிராய்
“குறிஞ்சி யாழோட வீடா???” என்று அதிகாரத் தொனியில் ஒலித்தது அந்த பக்கத்து குரல்!
“ஆமா! நீங்க யாரு??” என்ற கேள்வியை கண்டு கொள்ளாதவனாக அவன் தொடர இவளுக்கோ இங்கு பீபி தாறுமாறாய் எகிறியது!
“என்ன பொண்ண வளர்த்து வச்சிருக்கீங்க???….”
“ஏ! ஹலோ! மைன்ட் யுவர் வர்ட்ஸ்!!!” என்றவளின் கத்தலில் ஜிதேந்திரனும் லீலாமதியும் என்னவோ ஏதோவென்று பதறியபடி வந்தனர்.
“என்னாச்சு அஷ்மி???” என்ற ஜிதேந்திரனிடம் திரும்பியவள்
“தெரியலப்பா! யாரோ நம்ம யாழிய பத்தி தப்பா பேசறான்!”  என்க “இங்க குடுடா!” என்றவர் அவளிடம் இருந்து ஃபோனை வாங்கிக் கொண்டார்.
“ஹலோ! யாருங்க வேணும் உங்களுக்கு???” என்றவரின் அதட்டலான குரலில் அந்த பக்கம் இருந்தவனின் கோபம் தலைக்கேறியது!
“எனக்கு எதுவும் வேணாம். மொதல வந்து உங்க குடிகார பொண்ண கூட்டிட்டு போங்க!” என்றான் ஏளனமாய்.
“நீ யாரு எங்க இருந்து பேசற???”
“அடேங்கப்பா! எங்கனு சொல்லாமத்தான் உங்க பொண்ணு  வந்தாளா?? சரி கேட்டுக்கோங்க! திருநெல்வேலில இருந்து இந்திரன் & கோ  குடும்பத்த சேர்ந்தவன்….” என்றவன் சொல்லிக் கொண்டேபோக அவருக்கோ அங்கு இதயமே நின்றுவிட்டதுபோலானது!
கையிலிருந்த ஃபோன் நழுவி கீழே விழுந்துச் சிதறியது!
அவரின் அதிர்ந்த நிலை கண்டவர்களோ அவரை போட்டு உலுக்கிக் கொண்டிருந்தனர்.
“அப்பா என்னாச்சுபா??? “ என்றவள் கீழே விழுந்த ஃபோன் பாகங்களை ஒன்றினைத்தாள்.
அது வேலை செய்யாமல் போக தன் எண்ணிலிருந்து அவள் குறிஞ்சிக்கு பல முயற்சித்தும் அழைப்பு ஏற்கபடவேயில்லை!
“என்னாச்சுபா???” என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்கும் மனைவியை கண்டவருக்கோ பழைய நினைவுகள் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்தது!
“எங்க இருந்து ஃபோன் வந்தது???” என்ற லீலாமதியை  உணர்ச்சிகளற்ற பார்வை ஒன்று பார்த்தவர் ஒற்றை வார்த்தையாக
“திருநெல்வேலி!” என்றார்.
****************************************************************************************************************
குறிஞ்சியை அவள் அறையில் படுக்க வைத்தவன் வெளியேற அதிர்ந்த முகத்தோடு அவனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் விமலா.
அவரது பார்வையே சொல்லிற்று அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டார் என்பதை!
இனி அவரிடம் இருந்து எதையும் மறைக்க இயலாது…அப்படி மறைக்க நினைத்தால்…இப்பொழுது அரைகுறையாக அவர் தெரிந்துக் கொண்டவையெல்லாம் பூதாகரமாய் வந்து நிற்க கூடும்.
அதைவிட முக்கியம் அவர் ராகவேந்திரனின் அன்னை, அவரிடம் மறைப்பது சரியில்லை என்றுத் தோன்றிவிட  தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நிற்கும் விமலாவிடம் “அத்தை…” என்று அழைத்துச் சென்றான் அவர் அறைக்கு!
அவன் நடந்தவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லச் சொல்ல அவரோ உள்ளுக்குள்…’ராகவனா?? ராகவனா இப்படி நடந்துக் கொண்டான்??? ‘ என்று நம்பமாட்டாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அதே சமயம் எல்லாம் பொய் என்று அவரால் ஒதுக்கவிடவும் முடியவில்லை.
அத்தனையும் உரைத்தவன் அவர் முகம் காண அதில் அவனால் ஒன்றும் கண்டுக் கொள்ள முடியாமல் போனது.
மென்குரலில் அவரை அழைத்தவன்…”அத்தை…இத யார்க்கிட்டயும் சொல்ல வேணாம்… இப்போதைக்கு…” என்றுவிட்டு வெளியேறினான்.
அவருக்கு  அதற்குமேல் ஒன்றும் ஓடவில்லை…யாரையும் எதிர்கொள்ளும் மனநிலையில் அவரில்லை. அறையிலேயே அமர்ந்துவிட்டார்.. ஏதேதோ சிந்தனைகள் வலை பின்ன அதில் அமிழ்ந்துவிட்டார்.
வீடு திரும்பிய கார்த்திகா அவர் தோள்களை பிடித்து உலுக்கும்வரை!
“அம்மா!! என்னாச்சுமா??°” என்று சிறியவள் பதற அவளது உலுக்கலில் தன்னை மீட்டவராக  ஒன்னுமில்லை என்பதாக முதலில் தலையசைத்தார்.
பின் அவளையே கேள்வியாய் நோக்கியவர் ராகவேந்திரன் குறிஞ்சியிடம் நடந்துக் கொண்டதை பற்றி விசாரிக்க  ஒன்று விடாமல் ஒப்பித்திருந்தாள் கார்த்திகா!
அவளும் அன்று அதே முடிவுடன்தான் வந்திருந்தாள்…அன்னையிடம் அண்ணனை பற்றி சொல்லிவிட வேண்டுமென்று…முதலில் குறிஞ்சியின் பேச்சை கேட்டு யாரிடமும் சொல்லாமல் விட்டதுகூட தவறோ என்ற எண்ணத்தில் இருந்தவள் அவரே கேட்கவும் அத்தனையையும் கொட்டிவிட்டாள்.
அவரால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு அதிர்ச்சி!
ராகவன் அப்படிபட்டவனல்லவே! எந்தவித வம்பு தும்புக்கும் போகாதவன்…தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன்…அவனா இப்படி???
ஒரு தாயாய் தான் எங்கு சறுக்கினோம்??? என்று அவர் மனம் அவரை குத்தி கிழித்துக் கொண்டிருந்தது!
ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பதுபோல் இருந்தது!
“ஏம்மா?? எதாவது ப்ரச்சனையா???” என்று வினவிய மகளிடம் ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தவர்  அமைதியாய் கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டார்.
வழமைபோல வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அமரேந்திரன் அறையினுள் நுழையவும் மனைவி கட்டிலில் படுத்துக் கிடப்பதை கண்டு பதறியபடி விமலாவிடம் விரைந்தார்.
“என்னாச்சுமா???” என்றவாறு அவர் தலையில் கை வைத்து பார்க்க எழுந்தமர்ந்த விமலாவின் முகமே சொல்லியது எதுவோ சரியில்லை என்று.
அவர் கேள்வியாய் நோக்க ஒரு கேவலுடன் அவரை அணைத்துக் கொண்ட விமலா அழுகையினூடே அவருக்கு ராகவேந்திரனின் மாற்றத்தையும் அவன் நடந்துக் கொண்ட விதத்தையும் எடுத்துரைக்க அமரேந்திரனின் முகம்  இறுகியது!
மகனின் செயலில் கோபம் தலைக்கேறினாலும் அழுது கொண்டிருக்கும் மனைவியை சமாதானம் செய்வதே பிரதானமாய்பட விமலாவை  முடிந்த அளவு தேற்றினார்.
அழுது அழுது ஓய்ந்தவராக விமலா உறங்கிவிட… மனதை ஒருநிலை படுத்தும் பொருட்டு ஓரு ஃபைலுடன் அமர்ந்துவிட்டார்.
அதை புரட்டிக் கொண்டிருந்தவரின் கவனத்தை கலைத்தது அந்த குரல்!
“நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா???” என்ற கேள்வியுடன் வாசல்படியில் நின்றுக் கொண்டிருந்தவளைக் கண்டவரின் புறுவங்கள் முடிச்சிட தலையசைத்தார்..
“வாம்மா! உள்ள வா!”
தயக்கம் சிறிதுமின்றி  அறையினுள்ளே அடியெடுத்து வைத்தாள் குறிஞ்சி!
நரேந்திரன் சென்றபின் அவன் சொல்படி உறங்க முயற்சித்தவளுக்கு அவ்வளவு சிரமமாய் இருக்கவில்லை சீக்கிரமே கண்ணயர்ந்துவிட்டாள்.
அவள் கண் விழித்து பார்த்த பொழுது கருமையை பூசிக் கொண்ட வானமே கூறியது அவள் நெடுநேரம் உறங்கிவிட்டதை!
கண்களை கசக்கியபடி எழுந்தவளுக்கு இன்னும் அசதியாய்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சொல்லி உடல் கெஞ்சியது… ஆனால் அதைவிட முக்கியமான ஒன்று இருப்பதாக நினைத்தவள் அமரேந்திரனை தேடி வந்துவிட்டாள்.
அவள் ஆரம்பிக்கும் முன்பு அவரே மகனின் செயலிற்காக அவளிடம் மன்னிப்பு வேண்டினார்..
“அய்யோ!! அதெல்லாம் வேண்டாம்ப்பா நான் மறந்துட்டேன்…” என்றவளை உற்று நோக்கியவர்
“ஏன்மா அவன் இவ்வளவு பண்ணதுக்கு அப்புறமும் இப்படி பேசற?” என்றுவரின் கேள்வியை இளநகையொன்றால் தவிர்த்தவள்
“அப்பா…நான் உங்க கிட்ட ஒன்னு கேக்கலாமா???” என்று அவர் அனுமதி வேண்டினாள்.
ஃபைலை மூடி வைத்தவர் கேளு என்பதாக கையசைக்க  ஒரு நொடி ஆழ மூச்செடுத்தவள் அவரை பார்த்து…
“நான் கேக்கறனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க…உங்களுக்கு என்னதான்பா ப்ரச்சனை???”  
அவள் கேள்வியின் அர்த்தம் விளங்காமல் அவர் பார்க்க அவளே தொடர்ந்தாள்.
“ராகவ் கிட்ட உங்களுக்கு அப்படி என்ன ப்ரச்சனை???…அவன்  ட்வெல்த்ல அதிக மார்க் எடுக்காததா?…இல்ல உங்களுக்கு பிடிச்ச பிஸ்னஸ்ஸ விட்டுட்டு அவனுக்கு பிடிச்ச கேம் டெவலப்பிங் ஃபீல்ட்ல அவன் கால் பதிக்கனும்னு நினைக்கறதா…இல்ல இது எல்லாத்துக்கும் மேல அவன் பிஸ்னஸ்ல அதிக இன்ட்ரெஸ்ட் காட்டாததா??? எதுப்பா???” என்றவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக எதிரில் இருந்தவருக்கோ ஒன்றும் புரியாத நிலை.
“உன்ன காய படுத்தனும்னு நினைச்சவனுக்கு நீ ஏன் ஏத்துட்டு பேசற?”  என்றவரின் கண்களின் கூர்மையை உணர்ந்தவள்
“கார்த்திக்கு அண்ணானா அவன் எனக்கும் அண்ணாதான்ப்பா!” என்றாள் அழுத்தமாய்.
“அந்த கிறுக்குபயலுக்கு இது புரியுதா??? ஒன்னுத்துக்கும் ஆகமாட்டான்!!” என்று அவர் தன்போக்கில் அவனை திட்டிக் கொண்டே போக அவரை இடைமறித்தாள் சிறியவள்.
“இதோ! இதுதான் ப்ரச்சனையே!” என்றவளை அவர் புரியாமல் பார்க்க அவளோ
“இப்போ சொன்னீங்களே…ஒன்னுத்துக்கும் ஆகமாட்டான்னு… ஞாபகமிருக்காபா?  நான் இங்க வந்த இரண்டாவது நாள் நீங்க என்கிட்ட நான் அடுத்து என்ன பண்ண போறேன்னு கேட்டீங்க… நான் சொன்னதும் நீங்க ராகவ்வ ஒரு பார்வை பார்த்தீங்களே…அந்த பார்வைலயே அவன நீங்க ஆயிரம் தடவ கொன்னுட்டீங்கபா!”
“குறிஞ்சீ!!”
“என்மேல கோவம் வருதாப்பா?? இவ யாரு இதெல்லாம் சொல்லனு தோணுதா???” என்றவளின் கேள்வியில் நிதானித்துக் கொண்டவராக இல்லையென்று தலையசைத்தார்.
“ஆப்வியஸ்லி! எல்லா அப்பாம்மாவும் அவங்க பசங்க பெஸ்ட்டா இருக்கனும்னுதான் நினைப்பாங்க நீங்களும் அப்படிதான்..ஆனா நீங்க நினைக்கறத அவனால பண்ண முடியலைங்கறபோது நீங்க அவன உங்கள அறியாமலயே காய படுத்திடறீங்கபா…
நான் இப்படி உங்க கிட்ட வந்து பேசறது சரியா…தப்பானுலாம் தெரியல… நான் சொல்றது சரியா தப்பானு தெரியல…ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்பா… He is depressed!  இருக்கதுலேயே  ரொம்ப மோசமான மனநோய்…தான் எதுக்குமே லாயக்கில்லனு நாமளே நம்பறதுதான்.
நான் சொல்ல வந்தத சரியா  சொன்னேனானு தெரியல… நான் உங்களுக்கு அட்வைஸ் பண்ண வரலப்பா… அந்தளவு நான் வளரல… உங்க பையன்…முடிவ நீங்கதான் எடுக்கனும்…”
அவரின் மௌனம் அவர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டதை உணர்த்த “நான் வரேன்பா” என்று எழுந்துக் கொண்டாள்.
வாசல்வரை வந்தவள் ஒரு நொடி தேங்க அவர் என்ன என்பதுபோல் பார்வையை நிமிர்த்த… “இன்னைக்கு நடந்ததுக்கு ஆரம்பம்…ராகவேந்திரனால இல்ல…பதினேழு வயசுல மனசுல அடிவாங்கின ராகவ்வால…” என்றவள் வெளியேறிவிட்டாள்.
அவள் வெளியேறவும் ‘ஹகூனா மடாட்டா’ என்ற பாடல் இசைக்கவும் சரியாய் இருக்க  சத்தம் வரும் இடத்தை கண்டவளின் கண்களில் பட்டது அவளது ஃபோன்.
அறையின் வாசலில்….கீழே கிடந்தது!
‘இது எப்படி இங்க???’ என்று யோசித்தவள் அழைப்பது யாரென்று பார்க்க அதில் புவன் என்றப் பெயர் ஒளிரவும் அதை சைலென்ட் மோடில் போட்டுவிட்டாள்.
அந்த அழைப்பை அவள் ஏற்றிருக்க வேண்டுமோ???
மின்னுவாள்……

Advertisement