Advertisement

மின்னல்-32
அவள் கேள்வி என்றவுடன் ‘ஏன் எங்கிட்ட பேசல??’ என்பதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்க அவளோ சரியாய் நாடியை பிடித்துவிட்டாள்!
என்ன கேட்டுவிடுவாள் என்ற தைரியத்தில் அவர் இருக்க அவளோ அவர் சற்றும் எதிர்பாராத ஒரு கேள்வியை கேட்டிருந்தாள்.
அவர் பதிலுக்காக அவள் அவர் முகம் பார்த்து நிற்க அவரோ அவரது வழக்கமான முகமூடியை அணிந்துக் கொண்டார்…
மௌனமாகிவிட்டார்!
ஆனால் இம்முறை இவரை விட்டால்…பின்பு இவரிடம் நெருங்கக்கூட முடியாமல் போய்விடும் என்பதை உணர்ந்தவளாக தொடர்ந்தாள்.
“எனக்குத் தெரியும்! “ என்க அவர் என்ன தெரியும் என்பதைபோல் பார்த்தார்.
“உங்களுக்குள்ள என்னவோ கெடந்து  கஷ்டபடுத்திட்டிருக்கு ஆச்சி! நீங்க உங்களையே நத்தையா சுருக்கிக்கறீங்க!” என்றவளை கண்டவரின் மனமோ இவளிடமாவது இறக்கிவை என்று தள்ள…இன்னொரு பக்கம் தயக்கம் பிடித்திழுக்க என்று அவருக்குள்ளேயே ஒரு போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது!
அவர் அவளை எவ்வளவோ அவமதித்திருக்கிறார்…இருந்தும் முகத்தை திருப்பாமல் முதல் நாளில் இருந்த அதே மரியாதையுடன் பேசும் இவளை எந்த கணக்கில் சேர்ப்பது??? என்றவர் சிந்தனை இருக்க அவளோ
“ஆச்சி…” என்றாள் மென்மையாய்!
“ஆமா உள்ளுக்குள்ள உறுத்திட்டுதான் கெடக்கு!! ஆனா…”
“ஆனா..??”
“இந்த உறுத்தல் என்னைக்குமே சரியாவாது!” என்றார் கசப்பான முறுவலுடன்!
“ஆச்சி”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிக்கூட நான் சொன்னேனே…ரெண்டு உசுர காப்பாத்திருக்கன்னு…” என்க அவளும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.
“நீ பண்ணது பெரிய விஷயம்த்தா  ஒரு அம்மாவுக்கு அவளோட உலகத்த மீட்டு குடுத்துருக்க….ஆனா நான்??!” என்றவர் ஏளனமாய் சிரித்தார்.
“ஆச்சீ…?!” என்றாள் சிறியவள் அதிர்ச்சியாக!
“கோமக்கா!!” என்றார் ஒரே வார்த்தையில் அவளுக்கு  புரிந்தும் புரியாத நிலை!
“கோமக்காக்கு ஒரு பையன் இருந்தான்…இப்போ எங்கயோ இருக்கான்…வீட்டுச் செல்லபிள்ள…சித்தி சித்தினு கால சுத்தி வந்த பையன்!” என்றவரின் முகம் கசங்கி கண்கள் கலங்க “ஆச்சி!!” என்றவர் தோள்களை இவள் ஆதரவாக தொட அவள் கையை பிடித்துக் கொண்டவர் அத்தனையையும் கொட்டிவிடும் முயற்சியில்!
அத்தனை காலம்…உள்ளே அழுத்திக் கொண்டிருந்தவை எல்லாம் வெளியே வந்துக் கொண்டிருந்தது!
சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டவர்…”ஆனா அந்த பையனுக்குனு ஒன்னு வரும்போது  அவன்  பக்கம் நிக்கலயே!! குடும்பம் கௌரவம்னு யோசிச்சேனே தவிர…கோமக்காவ பத்தி யோசிக்காம போயிட்டேனே???!” என்றவரின் கண்களில் கண்ணீர் மட்டுமின்றி அவரது மனத்தில் அவ்வளவு நாள் அடைபட்டு கிடைந்தவைகளும்  வழிந்துக் கொண்டிருந்தன.
“என் கோமக்காக்கு நான் அநியாயம் பண்ணிட்டேன் குறிஞ்சிமா! மகன் வீட்ட விட்டு போனதுக்கு அப்புறம் அந்த மனுஷி பட்டபாடு… வாய்விட்டு சொல்லவும் முடியாம…மெள்ளவும் முடியாம… கொஞ்ச வருஷத்துல அமர் அப்பாவும் என்ன விட்டுட்டு போய்ட்டாரு! அப்போதான்…எனக்கும் இன்னும் இன்னும் வலிச்சது! நமக்கு பிடிச்சவங்க இறந்து போனாலே நம்மால தாங்க முடியலையெ….அவங்க எங்க எப்படி இருக்காங்கன்னு தெரியாம போனா???? அது நரக வேதனை இல்லையா??? அப்படியொன்ன அவங்க அனுபவிக்க நானும் ஒரு காரணமா இருந்துட்டேனே!!” என்றவர் அரற்ற
எழுந்துக் கொண்டவள் அவர் தலையை தன் மேல் சாய்த்துக் கொண்டாள் அவள்.
“ஒரு அம்மாவும் புள்ளயும் பிரியறதுக்கு நானும் ஒரு காரணமா இருந்துட்டேனே……” என்றவரின் புலம்பலை தடுத்து நிறுத்தியது அந்த
“செல்வீ!!!” என்று வந்த அதிர்ச்சிக் குரல்!
அந்த குரலில் அதிர்ந்தவர்களாக இருவரும் திரும்ப  அவர்களுக்குமேல் அதிர்ந்தவராக வாசலில் நின்றுக் கொண்டிருந்தார் கோமதி!
செல்வியின் முகம் இறுகிவிட உள்ளே நுழைந்தவர்  “செல்வி!” என்றழைக்க அவரை நிமிர்ந்து  உணர்ச்சியற்ற பார்வை ஒன்றை பார்த்தார் செல்வி!
“ஏன் செல்வி…இந்த அக்காட்ட கடைசிவர பேசவேக்கூடாதுன்னு முடிவெடுத்திட்டியா???” என்றார் வலிகள் நிறைந்த குரலில்!
“அக்கா!!!…” என்ற அழுகுரலில் அழைத்தவாரே அவர் கோமதியை அணைத்துக் கொள்ள கோமதியோ “ஏன் செல்வி இதுக்காகவா நீ இத்தனை வருஷம் உனக்குள்ளேயே  புழுங்கிட்டு கிடந்த???” என்று வினவியவரின் குரலிலோ அத்தனை அதிர்ச்சி!
இப்படியொரு காரணம் இருக்கும் என்பதை அவர் கனவில்கூட நினைத்துபார்க்கவில்லையே!
“நான் எந்த முகத்த வச்சிட்டு உன்கிட்ட வந்து பேசுவேன்க்கா??? செல்வி செல்வின்னு என்ன  எப்படி பாத்துக்கிட்ட நீ???” என்றவரின் கண்களில் கண்ணீர் குளம்கட்டியிருந்தது!
“ஏன்ட்டீ??? உனக்கு என்மேல அவ்வளவுதான் நம்பிக்கையா???”
“என்னக்கா இப்படி கேக்கற???”
“அன்னைக்கு நானும்தானே எதுவும் பேச முடியாம நின்னேன்…பழச மறந்துரு செல்வி! இத்தன வருஷம் இத தான் மனசுல போட்டு புழுங்கிட்டு இருந்தனுகூட தெரியாம இருந்துட்டனே… மன்னிச்சிரு செல்வி!” என்றவர் கண்ணீர் உகுக்க அதில் பதறிப்போனார் செல்வி.
“ஏன்க்கா  மன்னிப்பெல்லாம் கேக்க??? நான்தானே தப்பு பண்ணேன்…”
“நீ ஒருத்தி இவ்வளோ கவலைல இருந்திருக்க…அது தெரியாம…உன்ன சரியா கவனிக்காம விட்டுட்டேனே…”
என்று அக்காவும் தங்கையும் பாச பரிமாற்றம் செய்துக் கொண்டிருக்க அதை கண்கள் பனிக்க பார்த்து நின்ற சிறியவளின் உள்ளத்திலோ மயிலிறகின் வருடல்..!!
தன் காயங்களை பார்த்த குறிஞ்சி  ‘ஹ்ம்ம் இப்படியொன்னு நடக்கும்னா…இந்த காயம் ஒன்னும் அவ்வளோ பெரிசில்லதான்!’ என்றெண்ணியவாரே  மௌனமாய் அமர்ந்துவிட்டாள்.
அவளால் எழ முடியுமென்று தோணவில்லை… அப்படியே அவள் எழுந்து நடந்தாலும் அது அவர்களை கலைத்துவிடக்கூடும்! எனத் தோன்ற அமைதியாய் அமர்ந்துவிட்டாள்.
மெல்லிசையாய் இருந்த அந்த அக்கா தங்கையின் உரையாடலை கலைப்பதுபோல் அமைந்தது…அந்த கதவை தட்டும் சத்தம்!
‘யார்ரா அது பூஜ நேரத்துல புல்டோஸர் விடறது???!!!’  அவர்கள் பேச்சு தடைப்பட்டதில் சலிப்பாக குறிஞ்சி பார்க்க வாசலிலோ ஒரு தம்ளர் நிறைய பாலுடன் பேச்சி நின்றிருந்தாள்!
‘ஹோ! பேச்சி பேபியா!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் அமைதி காக்க பேச்சியின் கையிலிருந்த தம்ளரை வாங்கிக் கொண்ட செல்வி அவளுக்கு வேறொரு வேலையை கொடுத்து அனுப்பிவிட்டு  குறிஞ்சியிடம் திரும்பினார்.
கையிலிருந்த தம்ளரை அவள் கைகளுக்குள் திணித்தவர் அவளிடம் “இதமான  சூட்டுல கொண்டு வரச் சொன்னேன்…பால குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுத்துக்கோ… உடம்புல இருக்க காயத்தவிட அதிர்ச்சிதான் அதிகமாயிருக்கும்! நல்லா தூங்கி எழுந்தா சரியாகிடும் குடி!” என்று அவள் முழு தம்ளரையும் காலி செய்யும்வரை விடாமல் அவளை குடிக்க வைத்தவர் பின் அவள் படுப்பதற்காக படுக்கையை சரிசெய்ய அவளோ அவருக்கு உதவ நினைத்து எழும் முயற்சியில்.
“அய்யோ அதெல்லாம் நானே பாத்துக்கறேன் ஆச்சி!!” என்க அவரோ
“அதெல்லாம் நான் விரிக்கறேன்… நீ ஒழுங்க ஒரு எடத்துல உக்காரு!” என்றுவிட்டார்.
அவளுக்கானால்…’என்னடா இது??? ஒன்னு பேசவே மாட்டேங்கறாங்க…இல்லன்னா இப்படி  ஓவர் உரிமையா இருக்காங்க….???’ என்றானது!
படுக்கையை விரித்தவர் தம்ளரை கையோடு எடுத்துக் கொண்டார்.
அவளிடம் வந்த கோமதி அவளை லேசாய்  அணைத்தவராக…”என் வாழ்க்கைல முக்கியமான ஒன்னு எனக்கு திருப்பி கிடைக்க நீதான் காரணம்!” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தவர் வாசல்வரைச் செல்ல அவருடன் கிளம்பிய செல்வி ஒரு நிமிடம் தயங்கி பின் திரும்பியவர்…
“நான் உனக்கு ஏத்துட்டு பேசினேன்ங்கறதுக்காக நீ பண்ணது சரியாகிடாது குறிஞ்சி! நீ பண்ணது நல்ல காரியம்தான்…ஆனா அவன் சொல்றதுலயும் நியாயம் இருக்கு!” என்றவர் திரும்பிச் சென்றுவிட்டார் கோமதியுடன்!
வசதியாய் படுத்துக் கொண்டவளின் மனமோ அந்த ஆத்தங்கரையையே வட்டமிட்டது!
அவளையும் ரேவதியையும் அங்கே இறக்கிவிட்டவனுக்கு ஃபோன் வர அதை எடுத்து பேசியவனோ ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறிச் சென்றான்.
அவளும் ரேவதியும் சற்று நேரம் நடக்கலாம் என்று முடிவெடுத்தவர்களாக நடக்க ஆரம்பித்தனர்.
வலதுபக்கம் ஆறாய் ஓடிய நீர்…இடது பக்கம் அருவியாய் கொட்டியது!
நடுவில் நடைபாதை ஒன்று!  கால்களை உரசிச்செல்லும் நீரை ரசித்தவண்ணம் அவள் நடந்துக் கொண்டிருக்க அவர்களது கவனத்தை கலைத்தது அந்த அழுகுரல்!
குரல் வந்த திசையில் நடந்தவர்களுக்கு கண்களில் அது பட்டது!
இடது பக்கம் அருவியைபோல் விழுந்து ஆறாய் ஓடிக்கொண்டிருந்த இடத்தில் சற்று உள்ளே தள்ளி இரண்டு பெண்கள் அழுகுரலில் கத்திக் கொண்டிருந்தனர் உதவி வேண்டி!
என்னவென்று இவள் பார்வை அலச அங்கு சற்று தொலைவில் இருந்த இரு பாறைகளுக்கு இடையே மாட்டிக் கொண்டிருந்தது  மூன்று வயது குழந்தை!
அவ்வளவுதான்! வேறெதையும் யோசித்து நேரத்தை வீணடிக்காமல்  பக்கவாட்டில் இருந்த பாறைகளில் மேல் கால் வைத்து இறங்கினாள்!
சரிவான பாதையில் முதலில் தடுமாறினாலும் பின் சமாளித்து இறங்கியவள்  ரேவதியும் இறங்கிவிட அங்கு அந்த பெண்கள் கொண்டு வந்திருந்த புடவையில் ஒன்றை எடுத்தவள் ஒரு முனையை கயிற்றைபோல் முறுக்கி தன் இடுப்பைச் சுற்றி கட்டிக் கொண்டவள் இன்னொன்றை ரேவதியின் புறம் வீசினாள்.
“ரேவ்ஸ்!! அத பிடிச்சிக்கோ எப்போல்லாம் சொல்றேனோ அப்போ பிடிச்சு இழு!” என்றவாறு நீரில் இறங்கியவள் அங்கிருந்த பாறையொன்றின் மேல் ஏற அதுவோ வழுக்கி அவள் இடது கால் வசமாய் சிக்கிக் கொண்டது அதன் இடுக்கில்.
உயிர்போகும் வலி! ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பிள்ளைக்காய் கதறும் அந்த அன்னையின் குரல்! முடிந்தளவு முன்னேறியவள் எதிர்பாராத வண்ணம் பாறையிலிருந்த கால் விடுபட எதிரில் இருந்த பாறையில் தலை குப்புற விழ இருந்தாள்! தக்க சமயத்தில் ரேவதி பிடிக்கவில்லை என்றால்…அவள் என்னவாகிருப்பாள்??? வழுக்கியவளுக்கு ஒரு நொடி எல்லாம் முடிந்தது என்றே தோன்றிவிட்டது! அதுதான் உயிர்பயம் போலும்!
தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அந்த குழந்தையின் அழுகை நிரூபிக்க  குழந்தையை காப்பதில் கவனம் செலுத்தினாள்.
எப்படியோ காப்பாற்றியும் விட்டாள்…ஆனால் குழந்தையை அதன் அன்னையிடம் குடுத்தபின் அங்கு நிற்க கூட அவளால் முடியவில்லை!
ஒரு பக்கம் வலி என்றால் இன்னொரு பக்கம் பயம்! மரணத்தின் விளிம்பிற்கு சென்று வந்திருக்கிறாள்…!!
அவள் நரேந்திரனை அங்கு எதிர்ப்பார்த்திருக்கவில்லை…ஆனால் அவனது  அணைப்பு அந்நேரத்திற்கு அவளுக்கு ஆறுதலாய் இருந்தது!
அவனது கோபம் எல்லாம் அவள் கவனத்தில் பதியவேயில்லை!
அவள்தான் அதிர்ச்சியில் இருந்தாளே! செல்வியின் குரல் கேட்கும்வரை!
எதை எதையெல்லாமோ யோசித்தவள் தன்னையறியாமல் உறங்கிப்போனாள்!
************************************************************************************************************
“யாழி யாரு இந்திரா??”
“எதையாவது மறைக்கரீயா இந்திரா???” என்ற ரேவதியின் கேள்விகளிலேயே அவன் மனம் தேங்கிவிட்டது!…அவன் பேச்சற்று போனான்!
அதே கேள்வி! அன்று ஊரில் இருந்து கிளம்பும் சமயம் அவன் அன்னை அவனிடம் கேட்ட அதே கேள்வி!
அன்று சத்யபாமா அப்படி கேட்டதும் முதலில் அதிர்ந்தவன் பின் சின்ன சிரிப்பினூடே… “நம்ம வீட்டு பொண்ணுமா!” என்றுவிட்டு கிளம்பியிருந்தான்.
அவர் எதற்காக கேட்டார் என்று புரியாமல் இல்லை! அவனுக்கு அவள் யார்??? அதே கேள்விதான் இன்று ரேவதியும் கேட்கிறாள்.
முகேஷ் ஒருபடி மேலே சென்று வெளிப்படையாகவே  கேட்டுவிட்டான் அவ்வளவுதான் வித்தியாசம்…ஆனால் கேள்வி ஒன்றுதான்!
தன்னிடம் பதில் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இருவரையும் பார்த்தவனோ ‘தெரியவில்லை’ என்பதாக தலையாட்டினான்.
அவர்களிருவரும் புரியாமல் பார்க்க அவனே தொடர்ந்தான்…
“எனக்குத் தெரியல ரேவதி…  எனக்கு அவ எப்பவுமே சிரிச்சிட்டே  இருக்கனும்…ஸேஃபா இருக்கனும்….  இன்னைக்கு அவள அங்க அப்படி பாத்தப்போ…எனக்கு எப்படி சொல்றதுனு தெரியல…எனக்கு வார்த்தைல சொல்ல வரல ரேவதி… “
“எதா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடு இந்திரா…” என்ற ரேவதியை அதிர்ச்சியாய் நோக்கியவன் அவளிடம்
“ஏன் ரேவதி உனக்கு யாழிய பிடிக்கலயா???” என்றான் சந்தேகமாய்!
“எனக்கு யாழிய ரொம்ப பிடிக்கபோய்தான் இந்திரா இத சொல்றேன்! “  என்றவளிடம் தலையசைத்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
**************************************************************************************************************
பேரனின் கவலைத் தோய்ந்த முகத்தை கண்ட யதீந்திரன் என்னவென்று வினவ முதலில் சொல்லலாமா??? என்று யோசித்தவன் பின் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்  சொல்லியிருந்தான்.
“எப்படி இருந்துச்சு  தெரியுமா தாத்தா???” என்றவன் வருந்த அவரோ லேசான சிரிப்பு சத்ததுடன் “உங்க ஆச்சியும் இப்படிதான்….” என்றார்.
“ஏன் ஆச்சி என்ன பண்ணாங்க???” என்றவனின் குரலில் ஆர்வம் கூடியிருந்தது.
“ஒரு நா கடைக்கு போயிட்டு வீட்டுக்கு வாரேன்…கையில இவ்வளவு நீட்ட பாம்ப புடிச்சிட்டு நிக்கா…” என்றவரின் கண்களில் அந்த நாளின் ஞாபகங்கள்.
“வயல்ல வேலை செய்யற பொம்பளையலுக்கு பாம்புலாம் ஒன்னுமே இல்லதான்…ஆனா…அன்னைக்கு அவ கைல அத பாத்ததும எனக்கு உசுரே போயிருச்சு!!! “
“ஏன்னு கேக்கலையா தாத்தா???”
“பிள்ளையல் விளையாடற எடத்துல வந்துடுச்சாம்…” என்றவர்
“ஆனா ஒன்னுடே! உங்காச்சி கைய கால வச்சிக்கிட்டு சும்மா கிடக்க மாட்டா…இந்த மாதிரிதான் எதாவது பண்ணிருவா…. அவ பண்றது சரியாதான் இருக்கும்….நான்தான்  பதறிக்கிட்டு கெடப்பேன்…”   என்றவர் அந்த காலத்துக்கே சென்றுவிட அவருக்கு தொந்திரவு கொடுக்காமல் அங்கிருந்து அகன்றான் அவன்.
மெதுவாக…சப்தம் எழுப்பாமல் யாழியின்  அறைக்கதவை திறந்தவன் கண்ணில் விழிமூடி உறங்கிக் கொண்டிருந்தவளேபட பூனை பாதம் வைத்து உள்ளே நுழைந்தவன் கதவை லேசாக சாத்திவிட்டு அவளிடம் வந்தான்…..
மின்னுவாள்…..

Advertisement