Advertisement

மின்னல்-20
மனம்கவரும் மாலை நேரமது!
மஞ்சள் வானில் கலப்படமாய் சிவப்பு ரேகைகள் சில படர்ந்து அதை சிவப்பும் இல்லாமல் மஞ்சளும் இல்லாமல் தங்கமாய் தகதகத்துக் கொண்டிருந்தது அந்த வானம்..!!
கீழோ ஆர்பரிக்கும் ஆழியும் அதன் அழகிய நிறமும்..!!
கால் நனைக்கும் அலைகளின் நுனியில் துள்ளி விளையாடும் சிறு பிள்ளைகள்..!
தயங்கி தயங்கி கால் பதிக்கும் பூக்குவியல்கள் என அந்த இடத்தில் எல்லாமே கண்களை கவரக் கூடியவைகள்தான்..!!
கண்களை கடலினில் பதித்திருந்தவளின் மனமோ கரைபுரண்டோடியது!
அவள் கவ(ம)னம் அங்கில்லை..!
பையிலிருந்த அலைபேசியை எடுத்தவள் இன்னொரு முறை அழைத்துப் பார்த்தாள்… ம்ஹும் பலனில்ல.. அந்தப் பக்கத்தில் அழைப்பை எடுக்கவில்லை!
மஞ்சள் வானின் சிகப்பு ரேகைகளில் பார்வையை பதித்தவளுக்கோ உள்ளுக்குள் குழப்ப ரேகைகள்..!!
லேசான மணியோசையுடன் வந்து சேர்ந்தது அந்த குறுந்தகவல்!
அவள் ஃபோனை பையினுள் போட்டிருக்கவில்லை… இது வரும் என்று அவளுக்கு நிச்சயம்போலும்.
அதை திறந்து பார்க்கவேண்டிய அவசியமில்லை ஏனெனில் என்ன வந்திருக்கக்கூடும் என்று அவள் அறிவாள் இருந்து ஓரத்தில் ஓர் எண்ணம்!
திறந்தாள்…அவள் கணிப்பு வீண் போகவில்லை ஆனால்…எதிர்ப்பார்ப்பு…
கடலலையை ரசிப்பதை விட்டுவிட்டு தன் எண்ண அலைக்குள் சிக்கியிருந்தவளை கலைத்தது அவள் அம்மாவின் குரல்.
“பாப்பு!!!” என்றழைத்தவாரே அவளருகில் வந்தமர்ந்தவர் அவள் முகம் கண்டு பதறித்தான் போனார்.
“பாப்பு என்னாச்சு???” என்றவர் பதற சற்று தெளிந்தவளாக
“ஒன்னுமில்லம்மா இந்த குறிஞ்சி இருக்காள…” என்றிழுக்க அவரோ
“அவளுக்கு என்னடா??” என்று அடுத்தக்கட்ட பதட்டத்திற்கு தயாரானார்…தாய்மனம் அதுதானே…அவருக்கு அவளும் ஒரு பெண்ணல்லவா?!
“அவளுக்கு ஒன்னுமில்லமா பதறாதீங்க!” என்று சமாதனம் செய்த புவனா பின் பொறுமையாய்…அதே நேரம் சற்று வருத்தமாய்…
“ஏன்னே தெரிலம்மா  கொஞ்ச நாளா அவ சரியா பேசல…” என்று வருந்த அவரோ
“இப்போ கூப்பிட்டு பார்த்தியா??” என்று வினவ அவளோ அவள் ஃபோனையே எடுத்து அவர் கையினில் திணித்தவள் அந்த மெஸேஜை திறந்து குடுத்துவிட்டு
“இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி கூப்டேன். எடுக்கல மெஸேஜ் அனுப்பிருக்கா”
“will call you later” என்ற வரிகளிலேயே அவள் கண்கள் தேங்கிவிட அதை கவனித்தவர் அவள் தோளில் தட்டியவாறு
“டென்ஷன் ஆகாத பாப்பு அவளே கூப்பிடுவா ஊருக்கு போய் என்னன்னு கேப்போம்…ஏதாவது வேலை இருக்கும்” என்று அவர் சமாளிக்க முயல்வதை புரிந்துக் கொண்டவள் அகத்தினில் ஆயிரம் குழப்பங்கள் குடி கொண்டிருந்தாலும் வெளியில் புன்னகை சிந்தினாள்!
“சரி வா எல்லாரும் காருக்கு போயாச்சு நாமதான் லேட்”என்று அவழை எழுப்ப அவளும் தன் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்நதாள்…ஆனால் அவள் மனம்…அது நகர மாட்டேன் என்றது!
நினைத்த நேரமெல்லாம் குறிஞ்சியை சந்திக்க அவள் ஒன்னும் பெங்களூரில் அல்லவே! விடுமுறையை அனுபவிக்க குடும்பத்துடன் வெளியூர் பயணம்.
அவளுக்கோ மண்டை குழம்பிய நிலை!
அவர்களிருவருக்குள்ளும் ஒளிவுமறைவு இருந்ததில்லை! குறிஞ்சியும் இதுவரை எதையும் அவளிடம் மறைத்ததில்லை…அப்படியிருக்கையில் அவளின் சிறு மாற்றம்கூட இவளுக்கு வெட்ட வெளிச்சம்தானே?!
குரலை வைத்தே அவள் மன நிலையை கண்டுக் கொள்வாள் இவள்! அதனால்தானோ என்னவோ குறிஞ்சி இவள் அழைப்பினை  ஏற்பதே இல்லை!
மனதில் குழப்பங்களை சுமந்தவாரே பயணித்தவள் ஹோட்டலில் வந்திறங்கிய மறு கணம் அவனை அழைத்திருந்தாள்..!
தன் முன் அந்த பெரிய சைஸ் புத்தகமொன்று திறந்திருக்க அதை சட்டை செய்யாது அந்த பால்கனி வழியாக தெரிந்த வானையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி!
முகம் முழுக்க சிந்தனையின் சாயல்!
அன்று  ட்ரேயில் காஃபி கப்புகளுடன் அங்கு வந்தவன் அவளிடம் “ என் தலைய உருட்டுனதுலாம் போதும்… இப்போ என்ன ரீசன் சொல்லிட்டு நீ கிளம்புவ???” என்று அடுத்த குண்டை அமைதியாக தூக்கி வீசினான்.
இந்த திடீர் கேள்வியில் திடுக்கிட்டவள்  பின் எரிச்சலுற்றாள்
“இவன் வாயில நல்ல விஷயமே வராதா ரேவ்ஸ்???!” என்றவள் பின்
“ஆனா இவன் கேக்கறதும் கரெக்ட்தான்…என்ன சொல்ல?!” என்ற சிந்தனையில் மூழ்கிப் போனாள்.
ஒன்றும் பிடிபடாமல் போக நரேந்திரனிடம் திரும்பியவளோ “ஏதாவது சொல்லேன்!!!” என்று கேட்க அவள் கண்களை நோக்கியவனின் மனமோ  கறுப்பான உண்மைகளை அவன் முன் சட்டமிட்டு காட்ட அதில் பதறியவனின் உள்ளமோ ‘நான் அந்த உண்மைய சொன்னா நீ தாங்கமாட்ட யாழி…நானும் சொல்ல மாட்டேன்! கடைசிவரை… என்னோடவே இருந்துட்டு போகட்டும்!’ என்று ஊமையாய் கதறியது..!
வெளியில் போலியான புன்னகை ஒன்றை மாட்டிக் கொண்டவன் தானும் யோசிப்பதுப் போல் பாவனை செய்யலானான்!
என்ன யோசித்தும் ஒன்றும் தோன்றாமல் போக அதில் சோர்ந்துப் போனவள் அங்கு கிடந்த  சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தாள். அவளின் சோர்வைக் கண்டு உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி குறுகுறுக்க அவனோ
“நாளைக்கு நான் வீட்டுக்கு வரேன் யாழி நாம யோசிப்போம் இப்போவே லேட்டாகிடுச்சு சாப்பிட போலாம் வா” என்றழைக்க  அப்பொழுதுதான் அவள் அதை உணர்ந்தாள் அவள் வந்ததில் இருந்து அங்கு வேறெந்த வேலையும் ஓடவில்லை என்பதை!
“வீட்டுக்கு வாங்களேன் இன்னைக்கு” என்று இருவரையும் அழைத்தாள்
“இல்ல யாழி மாமா ரேவதிய நேர்ல பாக்காத வரைக்கும் நல்லது…” என்று இழுத்தவன் இடைவெளிவிட்டு தொடர்ந்தான் “அவ சித்தி ஜாடை!”
அவற் சொல்ல வருவது புரிந்துவிட அதற்குமேல் அவள் யாரையும் வற்புறுத்தவில்லை.
அங்கு அவர்கள் வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு சின்ன ரெஸ்டாரன்ட்டில் தங்களது உணவை முடித்துக் கொள்ள அவள் அங்கிருந்தே வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். அவர்களிருவரும் கூட கிளம்பிவிட்டனர்.
வீடு வந்ததிலிருந்து அவள் அந்த பால்கனியில்தான் தஞ்சம்!
அந்த பால்கனியில் அமர்ந்தபடி கையில் புத்தகத்தையோ இல்லை காபியையோ வைத்துக் கொண்டு அந்த பால்கனியில் போடப் பட்டிருந்த சிறிய ஊஞ்சலில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பதும்… அந்த நீல வானை வெறிப்பதும் அவளுக்கு புதிதல்ல..! அவள் தனிமை வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம்  தஞ்சமடைவது பால்கனியில் தான்.
அன்றும் அப்படிதான் அவளுக்கு தனிமை வேண்டியிருந்தது.
அவளால் எதையும் யோசிக்க இயலவில்லை. முயற்சித்துப் பார்த்தவளுக்கு தோல்வியே மிச்சம்!
அதனால்தான் அவள் பால்கனியில் தஞ்சம்!
நடுவில் புவன் வேறு அழைத்திருந்தாள்… இவளுக்குத்தான் அழைப்பை ஏற்கும் மனநிலை இல்லை. எடுத்து பேசினால் ஆயிரம் கேள்வி வருமே..! சமாளிக்கும் மனமும் இல்லை… பொறுமையும் இல்லை..
சிந்தனையிலேயே உலன்றுக் கொண்டிருந்தவள் தன்னை அறியாமல் கண்ணயர்ந்து விட்டாள்.  தலையில் படிந்த பாசாமான வருடலில் அவள் விழித்துப் பார்க்க எதிரிலோ ஜிதேந்திரன்.
எப்பொழுதும் அவர் வீட்டினுள் நுழையும்பொழுது  வந்து கட்டிக் கொள்ளும் மகளை இன்று காணவில்லை. அஷ்மியிடம் கேட்டவரோ தன் பையை வைத்துவிட்டு மேலே வந்திருந்தார்.
அமர்ந்தபடியே கண்ணயர்ந்துவிட்ட மகளைக் கண்டவருக்கோ உள்ளுக்குள் அன்பலை! அவள் தலையை பரிவாக வருடியவர் அவளை தூக்கிக் கொண்டு அவளறை நோக்கி நடந்தார்.  அவளோ அவர் கரம்பட்ட மறுநொடி விழித்து விட்டாள்தான்! இருந்தும் அந்த இதத்தில் கண்களை மூடி மௌனம்காத்தாள்.
அவளை படுக்கையில் இட்டவர் கால்மாட்டில் கிடந்த போர்வையையும் போர்த்திவிட்டு  ஒருமணி நேரத்தில் இசைக்குமாறு ஒரு அலாரத்தையும் வைத்துவிட்டே சென்றார்.
இன்னும் ஒரு மணி நேரத்திற்கு அவளை யாரும் தேட மாட்டார்கள்.
எண்ணங்களின் அழுத்தம் தாளாமல் ஒரு கட்டத்தில் உறங்கிவிட்டாள்.
“நீ ஜித்துகிட்ட எனக்கு அடிவாங்கி குடுக்காம விடமாட்ட போலயே..”.என்க  எதையோ யோசித்துக் கொண்டிருந்தவனுக்கோ அந்த ஜித்து யாரென்று பிடிபடவில்லை! ‘ யார்ரா அவன்’ என்று அவளிடம்
“அது யாரு ஜித்து??” என்று  கேட்க  அவளோ
“ஹூம் என்ர அப்பூ”.என்று இடக்காக பேச அவனோ அவள் பதிலில்
கடுப்பாகிப்போனான்.
“ஏன்டியம்மா இப்படி படுத்தற?”என்று அவன்  வாய்த்தவறி  சொல்லிவிட அவளோ
“வாடீ போடீன்ன பல்ல கழட்டிடுவேன் பாத்துக்கோ!!”என்றாள் மிரட்டலாக.
நரேந்திரனோ “என் பல்லு என்ன உங்க வீட்டு பல்பா?! டக்குன்னு கழட்டி கையில குடுக்க..”.என்றுவிட
அங்கிருவரும் ஒரு மினி பானிபட் க்கு தயாராகியிருந்தனர்
இவர்கள் போட்ட சத்தத்தில் அங்கே வந்த அஷ்மியோ அவனை
‘டேய் நீயுமாடா?’ என்று பார்க்க அவனோ பார்வையாலேயே
‘அவதான்’ என்று திரும்பிக்கொண்டான்.
அவளும் பார்வையாலேயே ஒரு ஆட்டம் பாமை அவன் மேல் வீசிவிட்டு இன்னொரு பக்கம் திரும்பிக்கொள்ள
எதிரும் புதிருமாக நின்றவர்களைப் பார்த்த அஷ்மி  எந்தப் பக்கச் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்ற யோசனையில் இறங்கினாள்.
“என்னத்தான் ப்ரச்சனை உங்க இரண்டு பேருக்கும்!?” என்ற அஷ்மியின் அழுத்தமான கேள்வியில் ஒரு நிமிடம் இருவரும் திருதிருவென விழித்தனர்.
என்னவென்று சொல்வார்கள்? ஊருக்கு போனும் ஐடியா குடு அஷ்மி என்றா???
அடுத்த நாள் காலையிலேயே நரேன் வந்திருந்தான்.
சற்று நேரம் அவனுடன் அமர்ந்து பேசிவிட்டு ஜிதேந்திரன் அலுவலகம் கிளம்பிவிட கோச்சிங் க்ளாஸ் முடிந்து வந்த அஷ்மியோ வேலையை முடித்துவிட்டு வருவதாக அறைக்குச் சென்றுவிட்டாள்.  லீலாமதியும் அடுத்தடுத்த வேலைகளென ஓடிக் கொண்டிருக்க இங்கு இவர்களுக்கிடையிலோ வாக்கு வாதங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அவன் ஒன்று சொன்னால் அதில் இவள் ஒரு குறையும் இவள் ஒன்று சொன்னால் அதில் அவன் ஒரு குறையுமாக கண்டுபிடிக்க கடைசியில் இருவரும் முட்டிக் கொண்டு நின்றனர். இதில் அஷ்மி வேறு வந்து இப்படியொரு கேள்வி கேட்டால்… முதலில் விழித்தவர்கள் பின்  ‘அவன்தான்…இல்ல அவதான்’ என்று ஆரம்பிக்க அஷ்மிதாவோ வந்த வேகத்தில் உள்ளே சென்றுவிட்டாள். இவர்களிடம் மாட்டினால் உருளப் போவது அவள் தலைதானே!?
அவள் சென்றுவிட்டதை உறுதி படுத்திக் கொண்டவன் இவளிடம் திரும்பினான்
“இது சரிவராது!” என்க அவளோ
“ஏனாம்!? அதெல்லாம் சரிவரும்!” என்றாள் அழுத்தமாக.
“லூசா நீ? அதெப்படி அங்கிள் ஒத்துப் பாங்க??”  என்க அவளுக்கோ ‘ ஓ…படிக்கு அந்தப் பக்கம் மாமா… அதுக்கு இந்த பக்கம் அங்கிளா?’ என்றுத் தோன்ற
“என் அப்பூவ பத்தி எனக்குத் தெரியும்!” என்று முடித்து விட்டாள் அதுதான் கடைசி என்பது போல.
மின்னுவாள்…

Advertisement