Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 6
“என்ன அன்னம் இன்னைக்கே வந்துட்டீங்க? நாளைக்குத் தான் வருவீங்கனு பார்த்தேன்” அடுக்களையில் சமையல் செய்து கொண்டே அன்னத்திடம் கதை அடித்துக்கொண்டிருந்தவள் மேல் தான் அர்ஜுனின் முழு கவனமும். ஹாளில் இருந்தாலும் காது முழுவதும் அடுக்களையில்.
“தம்பி தான் மா, பார்த்து நாள் ஆச்சு வா அன்னம்.. உன்ன பார்க்கனும் போல இருக்குனு கூப்பிட்டுச்சு!”
அன்று மத்தியம் அவள் ப்ரணவை படுக்க வைத்துவிட்டு வந்து வீட்டின் பின்புற திண்ணையில் அமர்ந்து கொண்டாள். அர்ஜுனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. என்ன தான் செய்கிறாள் பார்க்க வேண்டும் என்ற உந்துதல்.
அவள் கைப்பேசி சிணுங்கியது.. ஒரே ரிங்கில் எடுத்தவளின் ‘ஹலோ’ கூட இவன் காதில் விழவில்லை. இத்தனைக்கும் பேசுவதை கேட்கும் தூரத்தில் தான் இருந்தான்.
அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.. மறுநாள் காலை ஏழு மணி அளவில் மகன் சிணுங்கிக் கொண்டிருந்தான். அவள் அடுக்களையில் பால் கலக்கிக்கொண்டிருந்ததை இரண்டு நிமிடம் முன் தான் பார்த்தான். அதனால் மகன் படுக்கையறைக்குள் ஏதோ யோசனையோடே செல்ல, அவள் அங்கு தான் இருந்தாள்.
என்றும்மில்லா திருநாளாய் சுடிதார் அணிந்திருந்தாள். காலர் வைத்த கழுத்து, அரை கை நீளம்.  அவன் உள்ளே நுழையும் நேரம் ஒரு தாலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு அதை கமீசின் காலருக்குள் மறைத்தாள். வந்த வழியே வெளியே சென்று விட்டான். அவள் அவனைக் கவனிக்கவில்லை.
என்ன யோசிக்க வேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. ‘ஐயோ’ என்றிருந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம் அவசர அவசரமாய் அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்கு ஓடினாள். சத்தமில்லாமல் அவள் பின்னே சென்றான் எதை எதிர்பார்க்கவேண்டும் என்று தெரியாமல்.
அங்கு ‘அவன்’ இருந்தான். அவனே தான்.. இரண்டு வருடம் முன் அவளை இப்படி தான் கூட்டிச் செல்வான் என்றனர். அதே போல் அவன் பைக்கில் இன்றும்.
ஏறிக்கொண்டு அவன் தோளைப் பிடிக்கவும் வண்டி பறந்தது. கைமுஷ்டி இறுகப் பார்த்து நின்றான்.
மாலை வீட்டிற்கு வந்தவள், முன் வாசல் வழி வரவில்லை. வீட்டைச் சுற்றிக்கொண்டு பின் திண்ணையில் வைத்துச் சென்ற புடவையோடு வெளியே இருந்த குளியலறையில் குளித்து உடை மாற்றி வந்தாள். டெட்டாள் மணம் அவள் மேல்.
நேரே அறைக்குச் சென்று கைப்பையை வைத்துவிட்டு வெளிக்கூடத்திற்கு வந்தவள், “என் செல்ல குட்டி.. வாங்க.. அப்பாவ தொந்தரவு பண்ணாம சமத்தா இருந்தீங்களா? பட்டுக் குட்டி.. என்ன சாப்பிட்டீங்க.. அம்மாக்கு உங்க குட்டி டம்மிய காட்டுங்க பார்க்கலாம்..” ப்ரணவைத் தூக்கி எப்பொழுதும் போல் அவன் வயிற்றில் அவள் மூக்கை உரச.. மகன் குலுங்கிக் குலுங்கி சிரிக்க.. பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு  பற்றிக் கொண்டு வந்தது. ‘எல்லோரையும் விரல்ல சுத்தி வச்சிருக்கா..’ என்று தான் நினைத்தான்.
“எங்க போன? இன்னைக்கு என்ன லேட்? வாரம் வாரம் எங்க தான் போர? வழக்கமா மகனை கூட்டிட்டு போவ.. ஏன் இன்னைக்கு குழந்தையை விட்டுட்டு போனா?” இப்படி எதையாவது அர்ஜுன் கேட்கமாட்டானா என்று அவனைப் பார்க்க, அவன் வாய் திறக்கவில்லை.
மகனை அணைத்துக்கொண்டே அவளே ஆரம்பித்தாள்,  “முன்னை வேலை போவேனே அங்க ஒரு வேல… போன இடத்தில லேட் ஆகிடுச்சு. இனிமேல் எங்கையும் போக மாட்டேன்.” என்றாள் அவன் முகம் பார்த்து..
அவனிடம் எல்லாம் கூறவேண்டும் என்ற ஆசை. ‘இரண்டு வருடமாய் என்னென்ன பாடுபட்டாய்? எங்கிருந்தாய்? எப்படி வாழ்ந்தாய்?’ ஏதாவது கேட்க மாட்டானா? அவன் மார்பில் சாய்ந்து எல்லா வேதனையும் அவனிடம் கொட்டிவிட முடியாதா என்று ஏக்கமாய் அவனையே பார்த்து நின்றாள். கொஞ்சம் பயமும் கூட.. போய் வந்த இடம் பற்றிக் கூறியதும் அவன் என்னென்ன சொல்லுவானோ என்ற பயம்.. அவனுக்குத் தான் பிடிக்காதே.. இருந்தும் ஒரு நாள் கண்டிப்பாய் எல்லாவற்றையும் ஊற்றிவிட வேண்டும் என்ற உந்துதல். இன்று அன்னம் இருக்கவே அவளாய் பேச்சை ஆரம்பிக்கவில்லை.
இங்கு வந்த அன்று அர்ஜுன் வீடு என்று தெரிந்ததும் கழுத்திலிருந்த தாலியைக் கழட்டியவள் அவன் மீண்டும் அதை அணிவிப்பான் என்ற எண்ணம் வரவுமே முன் இருந்த தைரியம் போன இடம் தெரியவில்லை.
ஒரு பயம்.. மீண்டும் இன்பம் பறிக்கப் பட்டுவிடக் கூடாதே என்ற பயம். அவனை அறிந்த பின்.. அவனைக் காதலிக்க ஆரம்பித்த பின்.. அவன் தான் வேண்டும் என்று மனம் அடம்பிடிக்க ஆரம்பித்தபின்.. அவளால் மீண்டும் ஒரு இழப்பை ஏற்கவே முடியாது. அவனுக்குப் பிடிக்காது என்று தெரித்தும் துணிகரமாய் இன்று படி தாண்டிவிட்டாள். ஏனோ இனி முடியாது… அவனுக்குப் பிடித்தபடி வாழ வேண்டும் என்ற தீர்மானம் வந்தாயிற்று… அவன் கேட்டால் கொட்டிவிடும் துடிப்பு.. அவனைப் பார்த்து நின்றாள்.
அவன் அவளை ஏற இறங்க பார்த்தான்.
எப்பொழுதும் போல் காட்டன் புடவை உடுத்தியிருந்தாள். கழுத்தில் காலையில் போட்டிருந்த தாலி இல்லை. என்ன குளித்தும் வகிட்டில் இருந்த சிகப்பு சாயம் முழுவதும் போகவில்லை.
அவனுக்கு எங்கே தெரியும்… அதில்லாமல் அவள் இருந்ததே இல்லை என்று. வாழ்ந்தாளோ இல்லையோ.. வாழ்க்கை பட்டபின்.. அதை பிடுங்கி அவளை நடுத் தெருவில் தள்ளிய பின்னும், அவளே ஒன்றை வாங்கி அணிந்து கொண்டது அவனுக்கு எங்கே தெரியும்? அவளைப் பற்றி அவனுக்கு என்ன தான் தெரியும்?
அர்ஜுனுக்கு வெறுத்து விட்டது. அவனால் தாங்கவே முடியவில்லை. அவள் மேல் வெறுப்பைக் காட்டிவிடுவானோ என்ற பயம் வேறு! இவன் நிலை அறிந்தோ என்னவோ அடுத்த வாரம் அலுவலக வேலையாய் அவனைக் கடவுள் பெங்களூரு அனுப்பி வைத்தார்.
மனதை ஓரளவிற்குச் சமாதான படுத்தி ஞாயிறு இரவு வீட்டிற்கு வர அன்னம் தான் இருந்தார்.
“அவ எங்க அன்னம்?”
“பாப்பா நேத்து ராக்கு அது சொந்த காரங்க.. மாமாவாம்.. அவங்க வீட்டுக்கு போச்சு. அவுக பொண்டாட்டி முடியாம ஆஸ்பத்திரில இருக்காம்.. இழுப்பு போல. உதவிக்கு அவ மாமா ஆஸ்பத்திரில இருக்காம்.. அவக பாப்பாவ பாத்துக்க போயிருக்கு! இன்னைக்கு காலைல தான் வந்துது பாவம்.. ஒரே களைப்பு. மூணு மணி நேரம் இருந்துட்டு திரும்பவும் போய்டுச்சு.. நாளைக்கு வெள்ளனே வந்திடும்னு சொல்லிச்சு! பாவம் புள்ள ஒரேடியா களைச்சு போச்சு!”
ஏதோ கதை கேட்பது போல் கேட்டான். ஒரு வெறுப்பு கலந்த புன்னகை. ‘நீயும் ஏமாந்திட்டியா அன்னம்?’ என்ற பார்வை.
“குட்டி தூங்கரானா?”
“ஆமா தம்பி.. அம்மா அம்மானு அதைத் தான் தேடுது கொழந்த!”
“சரி.. நீ படு அன்னம்.. நான் அவன்ட்ட போறேன்.”
மகன் நல்ல உறக்கம். துணை வேண்டும் போலிருக்க அருகில் படுத்துக் கொண்டான். என்ன முயன்றும் கண் கரித்தது. முகத்தின் இருபுறமும் கண்ணீர் வழிந்து காது மடலைத் நனைத்தது. ‘எப்படி உன்னால் என்னை ஏமாற்ற முடிந்தது? என் மேல் உனக்கு காதலே இல்லையா? என்னிடமும் வெறும் நடிப்பா? ஏன்ன்ன்ன்?’ அவளோடு 
பேசுவதாய் நினைத்து மனதோடு பேசிக்கொண்டான். அங்கு தான் அவளை வைத்திருந்தான். அவள் அங்கு இல்லை போலும்.. பதில் வரவில்லை.
அவள் தலையணையை எடுத்து முகம் புதைத்தான்.. மல்லிப்பூ வாசம் நாசியைத் தாண்டி மனதை அடைய.. அது வலித்தது. கோபம் உச்சத்தை தொட தலையணையை தூக்கி விட்டெறிந்தான்.
ஏதோ தோன்ற வேண்டுதலோடு அலமாரியை அலசினான். அவள் வைத்திருந்த ‘அவசர’ தாலி இல்லை. அவனிடம் வாங்கிய தொண்ணூறாயிரத்தோடு நான்காயிரம் சேர்த்து, தொண்ணுற்றி நான்காயிரம் ரூபாய் கையில் கிட்டியது. இன்னும் ஆறாயிரத்திற்கு அவள் உழைக்கச் சென்றிருக்கவேண்டும். கை நடுங்கப் பண கட்டை தவற விட்டான். பல நிறங்கள் இருந்தது அந்த கட்டில். அதை எடுத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டு மகனோடு அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
அடுத்து வந்த நாட்கள் அன்னம் கூடவே இருந்தார். அவனுக்கு வேண்டியதை அவரே பார்த்துக் கொண்டார். அமுதாவை நெருங்கவில்லை.. அவளையும் நெருங்கவிடவில்லை. ஆஃபீஸ், வேலை என்னும் திரையின்பின் ஒளிந்துகொண்டான்.
இருபத்தி நாலாம் தேதி காலை அன்னத்தை அனுப்பிவிட்டான்.
மாலை தள்ளாடிக்கொண்டே வந்தவன், உதவ வந்தவளைத் தட்டி தள்ளிவிட்டு உள்சென்று படுத்துக்கொண்டான்.
இரவு உண்ணவில்லை. அவளுக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. அவளுக்கும் மனது சரியில்லை. அவன் குடித்து அவள் பார்த்தது கிடையாது. இருட்டில் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் குளியலறையில் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டது. அவன் அறையில் விளக்கு எரியவும் எழுந்து வந்து பார்த்தாள்.
தலையைக் கையில் ஏந்தி அமர்ந்திருந்தான்.
“என்னங்க.. தல வலிக்குதா?” என்று வந்து நின்றவளை உயிறற்ற பார்வை பார்த்தான்.
“ஒரு ப்ளாக் காபி தரமுடியுமா?”
“இதோ..” என்று அவசரமாய் ஓடினாள்.
காபி குடித்தவன், “அந்த கப்பட்ல பட்டு புடவை இருக்கு பார்.. உடுத்திகோ” என்றவனை விசித்திரமாய் பார்த்தாள். “பூ வச்சுக்கோ.. நான் குளிச்சுட்டு வாரேன்” குரலில் தெளிவு.. போதை எல்லாம் இல்லை.
“நைட் எதுக்குங்க?” தயங்கு தயங்கி கேட்டாள்.
“சொன்னா தான் செய்வியா?” பதில் சொல்லாமலே சென்றுவிட்டான்.
‘நாளைக்கு தானே வெட்டிங் ஆன்வர்சரி… நடு ராத்தரி எதுக்கு புது துணி? நைட் கேக் வெட்டி கொண்டாட போராங்களா?’
அவன் குளித்துவிட்டு வர அவள் புடவை மாற்றி அவன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.
அவள் எதிரில் அவன் வரவும் எழுந்து அவனைப் பார்க்க, “அழகா இருக்க.. கொஞ்சம் கூட பழசாவே தெரியல” என அவள் தோள்களை பிடித்தான். பாவம் அவளுக்குத் தான் அர்த்தம் புரியவில்லை.
எந்த எதிர்ப்பும் அவளிடமிருந்து வராமலே அவளோடு கலந்தான். அவன் கோபம் தணிய.. ஆத்திரம் அடங்க.. ஆனால் அது எதுவுமே அவள் உணராதபடி மென்மையாய் ஒரு பூவை ஆட்கொள்ளுவது போல்..
அவள் கண்ணீர் அடங்க இரவு நீளாதா என்ற ஏக்கத்தைத் தந்தான். கண்ணீருக்கு எப்பொழுதும் போல் வேறு அர்த்தம் கொண்டான். ‘என்னிடம் மட்டும் பிடித்தம்  இல்லை’ என்று!
அவளோ வேறு மன நிலையில்.. கட்டுப்பாடுகள் தளர.. காதல் ஆரங்கேர.. அவள் ஆகாயத்தில் விண்மீன் நடுவில் புதுமையான உணர்வில்… சுகமான சிலிர்ப்போடு அவன் பெயரை மட்டுமே உச்சரித்து…
ஆடிக்கடி அவள் கைப்பேசி அலற.. நேரம் பார்த்தவன் ஒரு வெறுப்போடு அதை ம்யூட் செய்து தூர எறிந்தான்.
விடிய விடிய அவன் அணைப்பில் அவள் தன்னை மறக்க அவனுக்கும் அதே நிலை தான். ஏதோ ஒரு கணக்கில் ஆரம்பித்தான்.. ஆனால் அவள் உலகமாக உலகை மறந்தான்.
அவள் ஓர் உயிர் ஈருயிராய் மாறும்வரை.. அவன் களைத்து ஓயும்வரை அவளை விடவில்லை.. இன்றோடு அவன் இறக்கப்போவது போல்..
விடியவும் அவள் களைப்பில் கண்ணயர அவன் குளித்துவிட்டு வந்தான். அவள் இன்னுமே அவன் கண்ணுக்கு அழகாகத் தான் தெரிந்தாள்.
“வீட்டு வேலைக்காரி மாதரி இருக்கா.. உனக்குக் கண்ணு தெரியாத அர்ஜுன்.. உன்ன கண்ணாடில பாரு.. உனக்கும் அவளுக்கும் ஏணிவச்சா கூட எட்டாது” அவன் அம்மா கூறியது..
அழகு என்பது என்ன? அழகாய் தான் இன்னும் தெரிகிறாள் அவன் கண்ணிற்கு! அழகு கண் சம்பந்தப்பட்டது இல்லையோ? அப்படி பார்த்தாலும், அவளைப் பற்றிய எண்ணங்கள் மாறியபின்னும் இன்னுமே அவனுக்கு அவள் அழகு தான்!
‘யார் யார் கண்ணுக்கெல்லாம் நீ அழகாய் தெரிந்தாய்..?’ மனதிடம் கேட்டான்.
மனம் பதில் தரவில்லை. அவளிடமே கேட்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.
“அமுதவள்ளி..” நீட்டி முழக்கிக் கூப்பிட்டான் முதல் முறையாக.
அரைத் தூக்கத்திலிருந்தவள் போர்வையை அணைத்துக்கொண்டே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பார்வையில் அலாதி வெட்கம்.. புன்னகை தவழவிட்டுக்கொண்டே, “என்னங்க.. தூங்கலையா?” என்றவளிடம்
“இல்ல.. ஒன்னு கேக்கணும்” என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய், அவள் அறைக்குச் சென்று அவள் அவசர தாலியோடும், பூஜை அறையிலிருந்து குங்குமமும் கொண்டு வந்தான்,
“இங்க வா” என்றவனை புரியாத பார்வை பார்த்தாலும் போர்வையோடு எழுந்து வந்தாள்.
“சாரி.. மறந்திட்டேன்…” என்று கையிலிருந்த தாலியை அவளுக்கு அணிவித்து, வகிட்டில் குங்குமம் வைத்தவன் பேசாமலிருந்திருக்கலாம்.. விதி யாரை விட்டது?!
“உனக்கு இது தானே பழக்கம்..”
அவள் புருவம் உயர்த்த
“அது தான் உன் க்ளையன்ஸ் கூட போகும் போது இப்படி தானே தாலியும் குங்குமமுமா போவ? சாரி நைட்டே போட்டிருக்கணும் நான் தான் மறந்துட்டேன்.. நீயும் மறந்திட்ட போல! உன் ரேட் எனக்கு தெரியலை.. ஆனா நைட்டுக்கு ஒரு சார்ஜ்.. பகலுக்கு ஒரு சார்ஜ் இல்ல..? பத்தாயிரத்துக்கு எத்தன பேருக்கு போணி பண்ணுவ?
அவங்கள விடு.. எனக்கு உன் கிட்ட ஆத்தும திருப்தி..” என்று அவன் பர்ஸ் எடுக்கப் போக அவள் அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
அவன் அம்மாவின் வார்த்தைகள் தேள் கொட்டிய வலியைத் தரும்.. இன்று அதே வார்த்தைகள் இவனிடமிருந்து! யார் என்ன வேண்டுமானாலும் கூறட்டும்… இவன் வாயில் இப்படிப் பட்ட வார்த்தை வரலாமா? என்னைப் பற்றி அர்ஜுன் இப்படி நினைக்கலாமா?
மாமியார் அவளைக் குப்பையாய் மிதித்த போது வலித்தது. அந்த பெண்மணியின் வார்த்தைகள் இவளைக் கூனி குறுக வைத்தது. கணவனின் வார்த்தைகள்? இது அமிலமாய் மாறிப் போனது! அவளை உயிரோடு புதைத்தது.
பணத்தோடு வந்தவன், “இப்போதைக்கு என்கிட்ட 20 தான் இருக்கு.. இனி மேல் பணம் வேணும்னா உன் மாமாட்ட போகாத.. என்கிட்ட வா.. தரேன்.”
அமிலத்தை குடித்திறக்கியவள் போல் அமர்ந்திருந்தவள் அருகில் அமர்ந்தவன், “எதுக்கு டி உனக்கு இவ்வளவு பணம்.. சாகும் போது கட்டிகிட்டு சாகவா? இப்படியே நீ ஒவ்வொருத்தன் கூடப் போன.. அது சீக்கிரமே வந்திடும்..”
“ப்ரணவ் யார் மகன் தெரியுமா? உன் அண்ணன் வாரிசு.. வைஷுவும் அவனும் லவ் பண்ணினது எனக்குத் தெரிய கூட இல்ல! இந்த லட்சணத்தில அவ என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டு! ஏதோ ரெண்டு பேருக்கும் பிடிக்கும்னு நினைச்சேன்.. இவ்வளவு தூரம் போயிருப்பாங்கனு நான் நினைக்கல.. நீ போய் ரெண்டு மாசத்தில வந்தா.. அவ என் கைய பிடிச்சு கெஞ்சினா என் பிள்ளைய வயத்தில வச்சுக்க எனக்கு ஒரு வழி காட்டுனு!
இங்க தான் இந்த வீட்டில தான் அவள வச்சு பார்த்துகிட்டேன்.. உன் அண்ணனுக்காக.. அவன் வாரிசுக்காக.. என் சகோதரியை போல! ப்ரணவ்வ என் மகனா பாத்துகிட்டேன்.
உன்னால என் குடும்பத்தில என் மானம் போச்சு.. பொண்டாட்டிய வச்சு குடும்பம் நடத்த தெரியாதவனு.. உன் அண்ணனால அந்த குடும்பமே போச்சு..
அண்ணனும் தங்கையுமா சேந்து என் வாழ்கையை நாசம் பண்ணிட்டீங்களே டி.. உனக்கு என்ன குறை வச்சேனு எவனையோ தேடி போனா? ஒரு மாசம் நீ உன் அண்ணனை நினைச்சு அழரனு பார்த்தா.. என்னைக் கல்யாணம் செஞ்சதுக்கு அழுதிருக்க… உன் மாமன நினைச்சு அழுதிருக்க.
அவன பார்த்தேன்.. என்னடி அவன் கிட்ட கண்ட என் கிட்ட இல்லாததை? என் அம்மா என்னமோ தான் பேரழகனை பெத்ததா கனவு காண.. நீ என்னை ஒரு ஆம்பளையானு கேட்ட.. கட்டினவள தொட கூட முடியல..
நான் தான் உன்ன விட்டுடேன்ல? உன் இஷ்டத்துக்கு எவன் கூடாவது போனு.. உன்ன தேடக் கூட இல்லையே.. நீ ஏன் இங்க வந்த? திரும்பவும் முடிஞ்ச உறவ நான் புதுபிக்க.. ‘நான் இன்னும் மாறலை என்னை நம்பி மோசம் போகாதனு’ ஏன் டி நீ சொல்லலை?
கட்டினவன்ட்ட கழட்டி குடுத்துட்டு.. எங்க என் கிட்ட குடுத்த? அம்மாட்ட குடுத்திட்டு தான் போயுட்டியே? எவன் எவன் கூடயோ.. பொய் தாலியோட எப்படி உன்னலா முடியுது? வெறும் பிச்ச காசுக்கா? வீட்டில இருந்து எடுத்திட்டு போனதை எல்லாம் என்ன பண்ணின?
என் கிட்ட கேட்டிருந்தா என் சொத்தையே உன் காலில போட்டிருப்பேனே? இப்போ கூட ஏதோ பாக்கெட் மணி மாதரி தான் என் கிட்ட இருந்து வாங்கரதா நினைச்சேன்.. நீ சம்பளமா எடுத்துகிட்ட! மாச சம்பளம் பிடித்தம் போக ஒன்னர லட்சம் வாங்கறேன்.. அதையும் அப்படியே உன் கிட்ட கொடுத்திருப்பேனே? எவ்வளவு கனவோட உன்ன கல்யாணம் பண்ணினேன்.. என் மனசை நோகடிக்க எப்படி டி உன்னால முடிஞ்சுது? பாவி.. பச்ச துரோகி.. ச்சீ.. நீ எல்லாம் என்ன மனுஷியோ? 
என் நிலைமையை பார்த்தியா? பொண்டாட்டிட்ட ஒரு நைட் படுக்க.. இருபதாயிரம் கொடுக்க வேண்டி இருக்கு?!!”
வாய் விட்டு கண்ணீரோடு சிரித்தவன், மணி பார்த்து, “பாரு பேசிப் பேசி நேரத்தை வீண் பண்ணிட்டு இருக்கேன்… ஆறு மணிக்கு டான்னு விட்டுடுவேன்.. இப்போ வா” என்று அவன் அணைப்புக்குள் அவளை வலுக்கட்டாயமாய் கொண்டுவந்தான். அணைத்தவனால் கண்ணீர் விட மட்டும் தான் விட முடிந்தது.
ஏன் இப்படி எல்லாம் பேசினான்? அவளுக்கு வலிக்கவா? இல்லை அவன் வலி குறையவா? ஏன்னென்று தெரியவில்லை. இருவருக்கும் வலித்தது மட்டும் உண்மை. கணவன் நம்பவில்லையே என்ற வலி அவளுக்கு.. மனைவி தன்னிடம் உண்மையாயில்லையே என்ற வலி அவனுக்கு!
கட்டைபோல் கிடந்தாள். பிணமாய் சரியாக ஆறு மணி வரை. எதுவுமே உணரவில்லை. தன்னை மனைவி என்ற எண்ணத்தோடு தொடவில்லை என்ற எண்ணமே அவளைச் சாய்த்துவிட்டது. உடல் எரிந்தது. உள்ளம் உடைந்து அங்கேயே அவள் கனவு.. கணவனோடான குடும்ப வாழ்வு சமாதியானது!
கணவனாய் அவளுக்காக அவன் இருக்கவே இல்லை. அவன் வீட்டில் அவன் மனைவியின் நிலை கூடவா ஒருவனுக்குத் தெரியாது? கணவனாய், வீட்டில் சுற்றித் திரிந்த அவன் சித்திப்பா மகனிடமிருந்து அவளைப் பாதுகாக்கவில்லை. வீட்டுப் பெண்களெல்லாம் சொல்லாலும் செயலாலும் அவளை நொறுக்க, தனியாய் போராடினாள் இவன் கட்டிய ஒற்றை தாலி கயிற்றுக்காக! இன்று இவனே கொடுத்துவிட்டான் திருடி பட்டத்தோடு வேசி பட்டத்தை.
அவன் வார்த்தையில் உண்மை இல்லை. ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. கண் திறந்தே படுத்திருந்தாள். முழுதாய் நனைந்த பின் முக்காடெதற்கு என்று நினைத்தாளோ? அவனிடம் போராடவில்லை. அவள் மனதோடும் போராடவில்லை.
கணவன் என்பவன் யார்? மூன்று வேளை உணவைக் கொடுத்து அவன் உடல் பசியைத் தீர்த்து அவன் குடும்பத்துக்கு ஒரு வாரிசை ஏற்படுத்துபவனா?
ஒரு பெண் திருமணம் முடிந்து புதிதாய் ஒரு வீட்டில் நுழைந்ததும், அவள் கணவன் பொருட்டே அதை அவள் வீடாக ஏற்கிறாள். அங்கு அவனுக்காக அவள் மாற.. அவன் அவளுக்குத் துணையாய், பாதுகாப்பாய் இருக்க வேண்டாமா?
‘எந்த விதத்தில் இவன் எனக்குக் கணவனாய் இருந்தான்?’ மீண்டும் அம்மு.. அமுதவள்ளியாய் சிந்தித்தாள். கொட்ட கொட்டக் குனிய அவளுக்கு வயது பதினேழு இல்லை. உலகம் அவளை பயமுறுத்தவில்லை. உலகில் நிமிர்ந்து வாழ அவளுக்குத் தெரியும். அவளைப் பிணைத்து வைத்திருந்த சங்கிலி எல்லாம் உடைந்தது. மனதின் பயம் எல்லாம் போன திசை தெரியவில்லை.
வாழ்வு சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்கு கற்றுவிட்டாள். தனியாய் வாழ்ந்த போது ஒரு நிமிர்வு இருந்தது. அவள் கோட்பாடு அவளைக் காத்தது. இன்று.. எல்லாம் சரியாய் போக வேண்டும் என்ற பயம் நிரந்தரமாய் அவளை ஆட்கொண்டிருந்தது. தனக்குப் பிடித்ததைச் செய்ய ஒரு தயக்கம். தைரியமாய் ஒரு வார்த்தை பேச முடிவதில்லை… தயங்கித் தயங்கி அவன் முகம் பார்த்து… என்ன வாழ்க்கை இது? அவள் கோட்பாடுகளைத் தளர்த்த.. எங்கு வந்து கிடக்கிறாள்.. எப்பேர்ப்பட்ட அவப்பெயர் தாங்கி? இதெல்லாம் யாருக்காக? காதல் இல்லாத கணவனுக்காக!
கண்ணோடு மனமும் விழித்திருக்க படுத்தே இருந்தாள். அவன் போனது கூட தெரியாமல்..
எழுந்தவன் பணத்தை அவள் மேல் போட்டுவிட்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டான்..
அவன் கண்ணீரும் வெறுப்பும்.. தண்ணீரோடு!
 

Advertisement