Advertisement

“என்ன டி.. அடங்க மாட்டீயா?” மனைவி முதுகில் முகம் புதைத்துக்கொண்டே கொஞ்சியவன் புறம் திரும்பி…
“முடியாதனால வாந்தி இல்ல… எல்லாம் நல்ல படியா முடிஞ்ச நால வாந்தி”
அவள் முகம் பார்க்க.. அவள் பார்வையில் அப்படி ஒரு காதல்.. இதழ் அளவுக்கு அதிகமாய் மயக்கத்தை ஏந்தி சிரித்தது.
“ம்ம்..?” என்று அவன் புருவம் சுருக்க
அவள் மீண்டும் அவன் கையை வயிற்றில் வைக்க..
மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான்… அவளை அள்ளி வாரி அவன் மேல் போட்டுக் கொண்டான்… அலைகளின் கொந்தளிப்பாய் உள்ளத்தின் உணர்வுகள். இன்னும் இன்னும் அவளை தன்னுள் புதைத்துக் கொண்டு அவனும் அவளுள் தொலைந்து போனான்.
இருவர் மூச்சும் இணைந்து உயிர்பெற்று அவள் கருவறையில் அவன் வாரிசாய்.. அவனை மட்டுமே அப்பா என்று கூப்பிட அவன் வாரிசு… பெறமுடியா வரத்தை அவன் வரம் தந்துவிட்டது. வரம் தந்த வரத்திற்கு மூச்சு முட்டும் அளவுக்கு முத்தம் தந்தாயிற்று… இருந்தும் ஆசை அடங்கவில்லை..
அவன் மனைவி அவன் உயிரைச் சுமந்து கொண்டு… விதைத்த அன்று இல்லாத இன்பம் இன்று. இன்னும் எட்டே மாதத்தில் அவனைப் போலவே ஒரு மகள் அவன் கையில்… அவன் இதயம் எல்லாம் கொள்ளைக்கொள்ள.. பஞ்சுப் பொதியாய்… ஒரு பொக்கிஷமாய்..
‘என் உயிராய்.. என் சரி பாதியாகிய நீ, பட்ட பாடெல்லாம் போதும்.. என் நெஞ்சில் நீ இருந்துவிடு… என் வீட்டின் மகாராணியாய் என்றென்றும்’ என்று நினைக்கமட்டும் இல்லை… வாழவும் வைத்தான் அவள் கடைசி மூச்சு வரை.
மறுநாள் காலை என்றும் போல் அவள் வாந்தி எடுத்துவிட்டு வரவும் மங்களம் கேட்டார், “தலைக்கு ஊத்தி எத்தன நாள் ஆச்சு?” என்று!
மங்களத்திற்கு மகன் என்றால் கொள்ளை பாசம். அவன் அப்படிப் பேசிய பின்னும் அதற்கு அவனைக் கடியவில்லை. அதற்கும் அமுதா தான் காரணம் என்றே எண்ணினார். ஆனால் அர்ஜுன் அப்படியே விடவில்லை. பேசினான். பேசி பேசியே கல்லையும் கரைத்தான். எது புரிந்ததோ இல்லையோ… ஒன்றை மட்டும் தெளிவாய் புரியவைத்தான். அது, அவன் மனைவி அவன் சரி பாதி என்று! அவன் உள்ளமும் உயிரும் அவள் தான் என்று!
அர்ஜுன் மனம் அமுதாவிடம் தான் என்று தெரிந்த பின் மங்களம் அவர்களைப் பிரிக்க முயற்சி எல்லாம் எடுக்கவில்லை. அவருக்கு அவர் மகன் வேண்டும்.. எதையும் கெடுத்துக் கொள்ள விருப்பமில்லை மாறினாரா? தெரியாது! அதனால் முன்போல் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் மருமகளிடம் பேசும் பேச்சில் அவ்வப்போது குத்தல் இருக்கத் தான் செய்யும்.. பிறவிக் குணம்!
அவரை யாருக்குப் பிடித்ததோ இல்லையோ ஒரு குட்டி வாண்டிற்கு அவரை பிடித்துப் போனது. ஏன்னென்று அவனுக்குத் தான் தெரியும். மங்களம் எங்குச் சென்றாலும் சிப்பி வாய் திறந்து.. தன் பெரிய கண்ணால் அவரை ஆர்வமாய் பார்த்துக்கொண்டே அவர் பின் சென்ற பட்டுக் குட்டி அவர் மனதில் இடம் பிடித்தது. யாராலும் சாதிக்க முடியாததை அந்த கள்ளம் கபடமில்லாத குழந்தை சாதித்தது.. அவன் ஈர முத்தத்தால்.
பணத்தை விடத் தெவிட்டா இன்பம் இருக்கிறது அனுபவி என்று அவர் முகத்தை அவன் எச்சிலால் நனைத்தான். அவருக்கும் இனிக்கத் தான் செய்தது.
மங்களம் இருக்கும் போதே அம்முவின் மாமா குடும்பமாய் வந்தார். மங்களம் ஒழுங்காக நடந்துகொண்டார்.. எல்லாம் அர்ஜுனால்.
அதோடு நிற்கவில்லை.. வசந்தனை வீட்டை விட்டு தனிக்குடித்தனம் செல்ல வைத்தான் இங்கிருந்தே. மங்களமும் கூறிவிட்டார், “நீ செஞ்ச வேலைக்கு நீ முதல்ல இடத்தை காலி பண்ணு. நீ இருந்தா என் மருமக வந்து போகமாட்டா… அவ வராட்டி என் மகன் வரமாட்டான். நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு தனியா போய்டு” என்று!  
அடுத்த இரண்டு வாரத்தில் அம்மு வாந்தி நிற்க, மங்களமும் பாரதியும் கிளம்ப… மங்களம், “எப்படியோ என் மகன உன் முந்தியில முடிஞ்சுட்ட அவன ஒழுங்கா பாத்துக்கோ… நீயும் உடம்ப பாத்துக்கோ.. இதோ இவள மாதரி இல்லாம நீயாவது ஒழுங்கா ஒன்ன பெத்து என் கைல குடு!” என்றார்.
சிலரை எல்லாம் திருத்த முடியாது!  
அமுதா பாரதியை பார்க்க, அவள் இவளைப் பார்த்துக் கண்ணடித்தாளே தவிரக் கவலை எல்லாம் படவில்லை. அவளுக்குக் கேட்டுக் கேட்டு பழகிப் போய்விட்டது போலும்.
“அம்மா போனதும் மறந்திடாத.. லீவ் கிடைக்கும்போது உன் பொண்டாட்டியையும் மகனையும் கூட்டிடு வா..” என்றார்.
அவர் என்ன தள்ளிப் போனாலும் ப்ரணவ் அவரை ஆர்வமாய் பார்த்துப் பார்த்தே அவரை கவுத்துவிட.. இப்பொழுதெல்லாம் அவன் பாதி நேரம் அவர் இடுப்பில் தான்.
இடுப்பிலிருந்த குட்டி ப்ரணவ் கன்னத்தில் முத்தமிட்டு, “பாட்டிய பாக்க வா என்ன?” என்று அர்ஜுனிடம் பேரனைக் கொடுத்துவிட்டு அம்முவிடம், “வேலை வேலைனு அவன் வரமாட்டான்… நீ தான் உன் புருஷன கூட்டிட்டு வரனும் புரியுதா.. உனக்கு வளைகாப்பும் நம்ம வீட்டுல தான்.. வந்து சேரு!” என்றுவிட்டு கிளம்பினர்.
வாழ்வு அழகாய் மாறி போனது அர்ஜுனுக்கும் அம்முவுக்கும். அவன் வானில் நிலா மட்டும் இல்லை நட்சத்திரங்களும்..
மாடியில் பாய் விரித்து படுத்திருக்க.. அவன் அருகில் அவனோடு நட்சத்திரத்தை எண்ணிக்கொண்டு மகனும்! அவன் நெஞ்சில் தலை வைத்துக் கதை பேசிக்கொண்டு மனைவியும்.
“ஒரு மரம் வளர வருஷங்கள் ஆகும். அப்படி பொறுமையா வளர்ந்த மரம் பல ஜீவ ராசிக்கு இருப்பிடமா மாறுது. மரத்த வளக்க தான் வருஷம் தேவை படுது. வெட்ட ஒரு மணி நேரம் போதும். வளக்கரது தான் கஷ்டம்.. வெட்டிட்டு போரது ரொம்ப சுலபம்.
ரெண்டு வருஷம் தனியா தான் வாழ்ந்தேன்… ஒரு ஜுரம் வந்தா.. தல வலி வந்தா.. நான் தான் என்னை பார்த்துக்கணும். ஒரு சந்தோஷமான விஷயம் நடந்தா.. யார் கிட்டச் சொல்லி சந்தோஷ பட முடியும்?
உறவ உடைச்சிட்டு போக என்ன ஒரு நிமிஷம் ஆகுமா? அதுனால யாருக்கு என்ன பிரயோஜனம்? நீங்க பேசனீங்க தான்.. அதுல உங்களுக்கு மனசு ரொம்ப குதுகலமாவா இருந்துது? என் மார்பு பூர உங்க கண்ணீர் தான். உங்களுக்கு ஒரு வலி.. அதை உணர்த்த நீங்க எடுத்துகிட்ட வழி தான் அந்த பேச்சு. நான் கிளம்பி போரதில என்ன லாபம்?
பார்த்தேன்… அந்த இருட்டில தொலைஞ்சு போன குழந்த மாதரி என் ஃபோட்டோவ பார்த்து கண்கலங்கி உக்காந்திருந்ததைப் பார்த்தேன். நான் எப்படி போவேன்… இப்படி பட்ட உங்களை விட்டுட்டு?
கோவிச்சுட்டு போயிருந்தா… இப்படி உங்க நெஞ்சில படுத்திட்டு கதை பேச முடியுமா? ஒரு நிமிஷ கோபத்துல என் சொர்கம் என் கை விட்டுப் போயிருக்குமே…
கோபத்துல பேசக்கூடாது. கோபத்தில முடிவும் எடுக்கக் கூடாது. வார்த்தை கொட்டினா எடுக்க முடியாது. நாக்கை காக்காட்டி.. குடும்பம் உடைஞ்சு போய்டும்.  நான் பிச்சுகிட்டு போயிருந்தா… யாருக்கும் லாபம் இல்ல.. நான் பொறுமையா போகவே.. உங்க அன்பு இப்போ எனக்கு தானே… கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கறீங்க…
சேர்ந்து இருக்கத் தான் போராடனும்.. அதுக்குத் தான் ரீசன் தேடணும்.. பிரிஞ்சு போகரதுக்கு இல்ல. உங்க கூட சேர்ந்து வாழ எனக்குக் காரணமே வேண்டாம்.. உங்க ஒரு அம்முவே போதும்.. கூடவே எங்கனாலும் கேள்வியே கேக்காம வருவேன்.” 
‘நீ ஏன் என்னை விடவில்லை’ என்று அர்ஜுன் கேட்க இதைத் தான் கூறிக்கொண்டிருக்கிறாள் அமுதவள்ளி அவன் விரலரோடு அவள் விரல்களைப் பிணைத்துக்கொண்டே.
நாவை கட்டி ஆள வேண்டும்.. பல குடும்பங்கள் பிரிய அதிலிருந்து வரும் வார்த்தைகளே காரணமாகிவிடுகிறது. 
மங்களமும் அர்ஜுனும் நாவை அடக்கி ஆளவில்லை. கண்டிப்பாக குடும்பம் உடைந்து போயிருக்கும், அமுதவள்ளி உணர்ச்சிவசப் பட்டிருந்தால்!
எல்லோர் குடும்பத்திலும் அமுதா போல் எண்ணம் கொண்டவர் இருப்பதில்லையே..
பல பௌர்ணமிகள் சென்றபின்…
“அம்மூ..” காபி வேண்டி மனைவியை கூப்பிட்டுக்கொண்டே அர்ஜுன் சோஃபாவில் அமர.. தலை முடியைத் தூக்கி கொண்டை போட்டுக்கொண்டே “என்னங்க?” என்று வந்தவள், பதிலில்லாமல் போகவே கணவன் முகம் பார்க்க.. அவன் பார்வை போன இடம் அவள் முகத்தில் புன்னகையை அரும்பச் செய்தது.
தன் வடிவை இழந்து பெரிதாக உருண்டு திரண்டு தன் பானை வயிற்றுக்குள் சுகமாய் மிதந்துகொண்டு அவனின் வாரிசை ஏந்திக்கொண்டு.. நின்றிருந்தவள் வயிற்றைத் தான் பார்த்து அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
சுமை.. கண்டிப்பாய் அது ஒரு சுமை தான்… அதன் கனம் தாங்கமுடியாமல் முதுகும் வளைந்து விட்டதே..  ஆனால் அவளிடம் கேட்டால் சுமையும் சுகம் என்பாள்.
பார்த்துக்கொண்டிருந்த கண்களை அவள் உள்ளங்கை மூடவும், “ஏன் அம்மு குட்டி?” என்று அவள் கையை விலக்கவும்..
வாகாய் அவன் ஒற்றை தொடையில் அமர்ந்தவள், “கொஞ்சம் கூட வெக்கமே இல்ல உங்களுக்கு. போதும் பார்த்தது!” என்று சிணுங்க..
“நல்லாயிருக்கே நீ சொல்றது… என் பொண்டாட்டி நான் பாக்கறேன். இன்னும் ஒரு மாசம் தான் இந்த அழகான பானையைப் பாக்க முடியும்…” அழகான நிறைந்த பானை வயிற்றை அவன் தடவிக்கொண்டே பேச, ஒரு ஜோடி கண்களுக்குப் பொறாமை வந்துவிட்டது. அது தான் அவன் இடமாயிற்றே..
அதிமுக்கிய வேலையாய் அவன் குடும்ப படத்தை சுவற்றில் வரைந்து கொண்டிருந்தவன், ஓடி வந்து அப்பா கையை எடுத்துவிட்டு, “அப்பாக்கு நேனா… குத்திமாக்கு பாப்பா..” என்றது குழந்தை.
அப்பா கை அங்கிருந்து போனதும் முகத்தில் ஒரு திருப்தி.
அரிசிப் பல் வயிற்றை நோக்கிச் சென்றது. அழகான மென்மையான முத்தம்… பாப்பாவிற்கு வலிக்காமல்.
“அப்பாக்கும் மகனுக்கும் அங்க என்னதான் இருக்கோ..” அலுத்துக்கொள்வது போல் பெருமைப் பட..
“ப்பா.. நானு நானு” என்று அடுத்த தொடையில் ஏறி நின்று கொண்டான்.
ப்ரணவ் குட்டிக்கு என்ன தோன்றியதோ, குனிந்து அம்மாவின் இட்டிலி கன்னத்தில் ஆசையாய் அரிசிப் பல்லைப் பதித்து, ஒரே ஒட்டமாய் கைக் கொட்டிக் கொண்டே ஓட..
“டேய்.. நில்லுடா வாலு..” தன் கனமான வயிற்றைத் தூக்கிக் கொண்டு ப்ரணவை துரத்த…
“அப்பா.. சூக்கு!” ப்ரணவ் அப்பாவின் காலைக் கட்டிக் கொள்ள
“வா டா என் பட்டுக்குட்டி..” என்று மகனைத் தலைமேல் தூக்கிப் பிடிக்க
“அப்பாட்ட போனா விட்டுடுவேனா?” என்று கண்ணாடி வளையல் குலுங்க மகனைப் பிடிக்க அவள் முயல..
அங்குச் சிரிப்பு மழை வீட்டை நிரப்பியது.
அம்மூவின் பானை வயிறு செல்லமாய் உரசி அர்ஜுனுக்கு முத்தம் கொடுக்க.. கூடவே அவன் மகள் எட்டி உதைக்க..
அர்ஜுன் இறக்கை இல்லாமல் பறந்தான்.  
இனி எல்லாம் சுகமே…

Advertisement