Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 10
இரண்டு வருடம் தனியாய்.. அதன்முன் மூன்று மாதம் நரகத்தில்… எல்லாம் இவனால். ஆனால் ஒரு நாளும் அதைப் பற்றி அவள் கணவன் கேட்கவோ.. அறிந்து கொள்ளவோ ஆவல் காட்டவே இல்லை.
கணவனிடம் தன் இதயத்தைக் கொடுத்துவிட்டதும்.. அவளுக்குள் ஒரு ஏக்கம்.. தன்னை பற்றி அறிந்து கொள்ள விழையமாட்டானா? ஒரே ஒரு முறை.. ‘நீ ரொம்ப கஷ்ட பட்டியா அம்மு’ என்று கேட்க மாட்டானா என்று.
இன்று கேட்டே விட்டான். ஏக்கம் எல்லாம் கண்ணீராய் கரைந்தது. உடல் குலுங்க.. அவன் சட்டை அவள் கைகளில் கசங்க.. அவள் வலியெல்லாம் வெளியே சென்று விட்டது.
அம்மு அழுது அவன் பார்த்ததே இல்லை. வருடங்கள் முன் ஒரு இரவு பார்த்திருக்கிறான்.. தனி அறையில் கிழிந்த பாயில்.. அழுக்கு போர்வைக்குள்… அன்று புரியாததெல்லாம் இன்று புரிந்தது.
அவள் அன்று மிரண்டு எழுந்ததும், “வேண்டாம் என்னை விட்டுடு.. ப்ளீஸ்..”  என்று அவனைத் தள்ளிவிட்டு கை கால் உதற இரண்டடி பின்சென்றதும்.. எல்லாம் புரிந்தது. அவளை இன்னும் அதிகமாய் தன்னுள் அணைத்துக் கொண்டான்.
உதட்டை அவள் உச்சந்தலையிலிருந்து எடுக்கவேயில்லை. கை முதுகை தடவிக்கொண்டே இருக்க.. அவள் வலி எல்லாம் அவனுள் வடிந்தது.
அம்மு அழுகை நிற்காமல் போகவே, அவள் முகத்தைக் கையில் ஏந்தி கண்ணைத் துடைத்து… “நீ அழுதது போதும் அம்மு.. முகம் கழுவிட்டு வா..” என்று மென்மையாய் அவள் கண்ணில் இதழ் பதித்தெடுத்தான்.
காயங்கள் தான்.. அவனால் அவள் வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள் தான். எல்லாம் இன்று ஆறிவிட்டது. ஆறாத காயங்கள் என்று ஒன்று அவள் வாழ்வில் இனி இல்லவே இல்லை. 
அவள் போகவும் அவன் ஈரமான சட்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். மனம் கனத்து போனது.
‘ஆசையாய் மகனை வளர்கின்றனர். சல்லடை போட்டுத் தேடியோ.. இல்லை மகனுக்குப் பிடித்ததாலோ ஆசை மகனுக்குத் திருமணம் முடிக்கின்றனர். திருமணம் முடியும் வரை மகன் மகிழ்ச்சி மட்டுமே முக்கியமாய் தோன்றிய அன்னைக்கு அதன்பின் என்ன ஆகுமோ தெரியாது.. பின் மருமகளை வதைப்பதே அவர் குலத் தொழிலாய் எடுத்துச் செய்கிறார். வந்த பெண்ணும் ஒரு வீட்டின் செல்லப்பிள்ளை என்பது ஏன் இவர்களுக்குத் தெரிவதில்லை. மனைவிக்கு நிம்மதி இல்லாமல் போனால்.. கணவனுக்கு எப்படி வாழ்வு சுகிக்கும்.. இதெல்லாம் ஏன் அம்மா மார்கள் யோசிப்பதே இல்லை?’
முகம் கழுவி வந்தவள் அவன் ஈரச் சட்டையைக் கழட்டவும்.. அவள் தலையை வருடிக்கொண்டே கேட்டான்.. “வசந்த் உன்ன.. உங்கிட்ட…” அடுத்த வார்த்தை வரவில்லை.. அவன் மனைவியை அங்குத் தள்ளியது வேண்டுமானால் அம்மாவாயிருக்கலாம்… ஆனால் எல்லாம் அவனால் தானே… பிடிவாதம் பிடித்து மணம் செய்தவனுக்கு, அதே பிடிவாதம் பிடித்து அவளைக் காக்கத் தெரியவில்லையே..
“ரொம்ப படுத்தியிருக்கான்… பார்வையால.. வார்த்தையால. அன்னைக்கு நீங்க ஒரு நைட் என்கிட்ட வந்தபோ.. அவன் தானு பயந்துட்டேன். ஒரு நிமிஷம் உயிரே போய்டுச்சு. அன்னைக்கு காலைல உங்க ரூம்ல வேலையா இருந்தபோ உள்ள வந்துட்டான்.. நான் வெளியில போகவும் இடுப்பில கை வைக்க வந்தான்… கைல இருந்த தொடப்பையால அவன் அடிச்சுட்டு போய்டேன்… ‘தனியா மாட்டுவ என்ட்ட.. அப்போ இருக்குனு..’ சொல்லிட்டு போனான். அவன் தான் வந்துட்டானு பயந்துட்டேன்..
உங்கள பார்த்ததும்.. பயம் எல்லாம் கோபமா மாறிச்சு. என்னை இந்த நிலமைல விட்டதுக்கு உங்க மேல தான் கோபம். அதனால தான் கத்திட்டேன். மறுநாளும் நீங்க என்னை நெருங்கவே.. ‘ச்ச.. இதுக்கு மட்டும் தான் பொண்டாட்டியானு’ ஒரு வெறுப்பில பேசிட்டேன்.. சாரி.. எனக்கு அப்போ தெரியல.. நீங்களும் என்னை மாதரியே இருட்டுல இருந்தீங்கனு.”
“நான் சொல்லவேண்டிய சாரிய எத்தன தரம் நீயே சொல்லுவ?” அவளை அவனோடு அணைத்துக்கொண்டே மீண்டும் கேட்டான்..
“உன் மாமாட்ட ஒரு லட்சம் வேணும்னு சொல்லிட்டு இருந்த… உன் அம்மா, அப்பாக்கு உடம்புக்கு எதுவும் பிரச்சினை இல்லையே..?”
சட்டென்று அவனை விட்டு விலகியவள், “உங்களுக்குத் தெரியாதா?” எனவும்
“என்ன தெரியாது?” என்றவனிடம்
“உங்க வீட்டுல இருக்கும்போதே அப்பா தவறிட்டார்… என் காதுக்கு விஷயம் வரக் கூட இல்ல.. உங்க வீட்டுல தெரியும்… ஆனா சொல்லவே இல்ல. கூடவே அம்மாவும் படுத்த படுக்கை ஆனதும், ஒரு நாள் மாமா, அம்மாவோட தம்பி… வந்தாங்க உங்க வீட்டுக்கு சொல்லிடு போக. உங்க அம்மா செலவாகும்னு விடவே இல்ல.
அம்மா நிலம மோசம ஆக ஆரம்பிக்கவும், அவருக்குப் பொறுக்கவே முடியல… திரும்பவும் வந்தாங்க, என்னை போய் அம்மாவ பாக்க சொன்னாங்க..
ஒரு தரம் உங்க அம்மாட்ட கேட்டுட்டு அம்மாவ பார்த்துட்டு வந்தேன். மாமாவே வந்து கூட்டிட்டு போனாங்க.
அதுக்கே உங்க அம்மா ரொம்ப பேசினாங்க. எனக்குனு ஒரே சொந்தம்.. என்னைப் பாக்க வந்தா.. நான் அவங்களோட போனா.. அவர அப்படி எல்லாம் பேசலாமா? என் மாமா எனக்கு அப்பா மாதரி, உங்க அம்மா புரிஞ்சுக்கவே இல்ல! நீங்களும் தான்!
மாமா தான் எல்லா செலவையும் பார்த்துகிட்டாங்க. அத்தைக்கு ஆஸ்துமா ஜாஸ்தி ஆகிடுச்சு.. மாமாவால ஊர்ல இருக்க முடியல. என்னைப் போக சொன்னாங்க. அம்மாக்கு மருத்துவம் பாக்க எங்கிட்ட பணம் இல்ல. என் நிலமைய பார்த்துட்டு மாமா கடன் வாங்கி 50000 குடுத்திட்டு போனாங்க…  அவங்க அக்கா வைத்திய செலவுக்கு! அதையும் உங்க அம்மா பார்த்துட்டு.. எடுத்துகிட்டாங்க! அதுக்கும் ஏதேதோ பேசிட்டாங்க… அம்மாவையும் காப்பாத்த முடியல. விடுங்க.. இப்போ எதுக்கு இந்த பேச்சு?”
“அப்போ ரெண்டு வருஷம் அம்மா அப்பா இல்லாமலா இருந்த?” அதிர்ச்சியே… மேலும் மேலும் அதிர்ச்சி கூடிக் கொண்டே போனது.
“ம்ம்.. தனியா தான் இருந்தேன்.. மாமாவும் அத்தையும் கூப்பிட்டாங்க. எனக்கு தான் இஷ்டம் இல்ல. வீட்டோட தங்கி வேலை பார்த்தேன். லீவ் கிடைக்கும் போது மாமா வீட்டுக்கு போய்வருவேன்.. அவங்களுக்கு ஒரு குட்டி பொண்ணு இருக்கு, பார்கவி. அவள பாக்கவே போவேன்.
வேலைக்குப் போர இடத்துல உங்க சித்தி மகன் மாதரி யாராவது இருந்திட கூடாதேனு என்னைச் சுத்தி ஒரு கோட்டை கட்டிகிட்டேன்… யாரும் என்னை நெருங்க முடியாதபடி.. நிறைய கண்டிஷன்ஸ் போடுவேன்.. பிரச்சினை வர மாதரி தெரிஞ்சாலே.. அங்க இருந்து கிளம்பிடுவேன்”
நெஞ்செல்லாம் அடைத்தது.. துள்ளிக் குதித்த மான் குட்டியைத் திருமணம் என்ற பெயரில் காலை உடைத்து அவள் நிம்மதியைப் பறித்து.. படிப்பைக் கெடுத்து.. அவள் வாழ வேண்டிய வீட்டில் அவளை வேலைக்காரி ஆக்கி… அனாதையாக்கி.. அவப்பெயர் சூட்டி.. நிர்க்கதியாய் தெருவில் விட்டு.. யார் யார் விட்டிலெல்லாமோ வீட்டு வேலை பார்க்கக் காரணமாய் இருந்து… அவள் வாழ்வை நரகமாக்கிய புண்ணியவான் நான்!
என் மனைவியை இதை விடச் சித்திரவதை செய்ய முடியுமா? என்ன கணவன் நான்… அவள் கேட்டது சரியே.. ஆப்பிளைத் தானா நான்?’ மனம் பதறியது.
“அப்போ எதுக்கு அவ்வளவு பணம்?”
“யாருக்காது உடம்புக்கு முடியாட்டி மதர்ட்ட கேப்பாங்க… மதர் ஏற்பாடு பண்ணி தருவாங்க. அம்மாக்கு முடியாதப்போ.. ஆஸ்பத்திரி செலவுக்குப் பணம் இல்லாம தான் இறந்தாங்க. அதனால, அப்போ அப்போ நானும் சம்பள காச சேர்த்து மதர்ட்ட கொடுப்பேன். இங்க வந்த பிறகு அத எல்லாம் விட்டுடேன்.. ஆனாலும் இந்த தரம் இல்ல-னு சொல்ல முடியல. என் கூட வேல பார்த்திட்டு இருந்த வாணிக்கு முடியல.. அவளுக்கு தான்!
உங்கட்டையும் கேக்க மனசில்ல… உரிமையா கேக்கர அளவுக்கு நெருங்கல.  அது தான் உங்கட்ட கூட சொல்லாம, முன்ன ஒரு தரம் வேலைக்கு போன இடத்துல ஞாயத்துகிழமை மட்டும்னு வேலைக்குச் சேர்ந்தேன்.. ஆனா மனசு ஒப்பல… எனக்கு உங்க கூட வாழணும்னு தோண ஆரம்பிச்சதும்.. உங்களுக்கு இந்த கேர்-ரேக்கர் வேலை பிடிக்காதுனு நான் இங்க வந்த அன்னைக்கே தெரிஞ்சுகிட்டேனா… சோ ஒரு நாள் தான் போனேன்.. அன்னைக்கே இனி மேல் வர முடியாதுனு சொல்லிவிட்டு வந்துட்டேன்”
கையில் நயா பைசா இல்லை.. வீட்டு வேலை பார்ப்பவளுக்கு உதவும் உள்ளம். வீட்டில் அப்படி ஒரு வசதி இருந்தும் அவன் அம்மாவிற்குப் பேராசை அடங்கவில்லை. என்ன மாதரி மனிதர்கள் உலகில்? அவன் பார்வையில் அவன் மனைவி உயர்ந்து கொண்டே போனாள்..
ப்ரணவ் சிணுங்க.. அவர்கள் சம்பாஷனை ஒரு வழியாய் முற்றுப்புள்ளி பெற்றது. மகனைத் தட்டி கொடுத்துவிட்டு அவள் வர அவன் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தான். அருகில் மனைவி உரசிக் கொண்டே படுத்ததைக் கூட உணராமல் அவன் சிந்தனையில்..
‘அவள் சென்றதும் ஏதோ அவன் தான் வாழ்வில் தோற்றுவிட்டது போல் விட்டத்தை வெறித்துப் பார்த்து படுத்திருந்தான். இன்று மனைவியின் கதை நெஞ்சைக் கரித்தது. அவனைக் கைப்பிடித்த நேரம் அவள் வாழ்வின் பொல்லாத நேரமாய் மாறிப் போனது. இனி அவள் பழைய வாழ்வைக் கனவில் கூட நினைக்கக் கூடாது’ என்ற எண்ணமே.
அமுதாவிற்கோ மனம் நிறைந்திருக்க.. உள்ளுக்குள் நிம்மதி பரவ.. சொல்லக் காத்திருந்த விஷயம் சொல்லவேண்டும்.. உடல் மனம் எல்லாம் ஒரு புத்துணர்ச்சியில் துள்ள.. எப்படிச் சொல்ல என்று யோசனை.
அவன் கையில் தலை வைத்துப் படுத்திருந்தவள், கணவன் நெஞ்சோடு அவள் முதுகை இன்னும் ஒன்றிக்கொண்டாள். இன்னும் இன்னும் அவனை நெருங்கி அவன் கையை அவள் வயிற்றில் வைத்துக்கொண்டாள். அவனிடம் ஒரு அசைவும் இல்லாமல் போகவே.. அவன் கையாலேயே அவள் வயிற்றில் கோலம் போட.. அவனும் எத்தனை நேரம் தான் தாக்குப்பிடிப்பான்? அவனுக்கு அதற்கு மேல் முடியவில்லை..
அவள் காதுமடல் உரைய, “அம்மூ… நான் அவ்வளவு எல்லாம் நல்லவன் இல்ல டி…” கிசி கிசுத்தான்.
அவள் ஏதோ நினைத்து ஆரம்பிக்க அது வேறு திசையை  நோக்கிச் சென்றது. புன்னகை முகமாய், “நான் ஒன்னும் நல்லவனா இருக்க சொல்லலையே..” என்றதுதான் தாமதம்.. அவளை தன் பக்கம் திருப்பியவன்…
“என்ன சொன்ன? நிஜமாவா?” அவள் கண் நோக்க.. நாணம் அவள் முகத்தில் எட்டி பாக்க.
“நான் என்ன சொன்னேன்.. ஒன்னும் சொல்லலையே…” என்றவள் கண்ணில் என்ன தெரிந்தோ.. கிறங்கித் தான் போனான். இருவர் வாயும்  மூட.. கைகள் தேட.. அவன் விரலாய் மாற.. அவள் வீணையாய் மீட்டப்பட.. அது அவர்களுக்கு மட்டுமேயான மாய உலகம்.
அதன் பின் நேரம் நெருப்பிலிட்ட பனியாய் கரைந்தது.
இன்னும் ஆரம்பித்ததை சொல்லவில்லையே… மீண்டும் அவன் கையை வயிற்றில் வைக்க… “அம்மூ வேண்டாம்.. உனக்கு ஏற்கனவே முடியல.. வாந்தியும் அடங்க மாட்டேங்குது… ஏன்னே தெரியல.. இதுக்கு மேல தாங்கது உன் உடம்பு..” என்று கையை உருவ.. இன்னும் இழுத்து பிடித்துக்கொண்டாள்.

Advertisement