Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 8
கைக்கெட்டும் தூரத்தில் மலர். கண்ணுக்கும் மனதுக்கும் உகந்த மலர். வண்டாய் அதை ருசிக்க எண்ணம் எழும்பவில்லை. பூசைக்குரிய மலராய் அதை அரவணைக்க மட்டும் ஆசை. ஆனால் தொட முடியாத தூரம்..
அமுதாவின் முதுகையே பார்த்துப் படுத்திருந்த அவள் கணவன் நிலை இது.
ஆமையாய் நாட்கள் நகர்ந்தாலும் வேகமாய் மாதம் இரண்டு ஓடிவிட்டது, அமுதா அர்ஜுனோடு சிரித்துப் பேசி. அவள் முகத்திலும் உடலிலும் ஒரு வாட்டம்.
“நான் பேசரத நீங்க கேட்டுத் தான் ஆகனும்!” என்று அன்று அவன் முகம் பார்த்தவள்.. அவன் கண்ணைப் பார்த்ததும் என்ன நினைத்தாளோ.. ப்ரணவோடு படுத்துக் கொண்டாள்.
தன்னை கணவன் நம்பவில்லை என்ற வலி.. ஏன் நம்பவில்லை என்ற வலி.. ‘நீ இன்றி நான் இல்லை’ என்பதான வாழ்க்கை தனக்கு கிடைக்கவே கிடைக்காதா என்ற ஏமாற்றத்தின் வலி.. எல்லாமாய் சேர்ந்துகொள்ள, அன்று மூன்று வேளையும் சாப்பிடவில்லை. தண்ணீர் கூட தொண்டையைத் தாண்டி கீழே போவேனா என்று அடம்பிடித்தது.
அன்று மட்டுமா.. அதன் பின் அவள் உணவை ருசி பார்த்து உண்ணவில்லை. அவள் உடல் உணவையும் உறக்கத்தையும் மறுத்தாலும், கணவனுக்கும் மகனுக்கும் குறை வைக்கவில்லை.
பேசிவிட்டாள்… அவன் தவற்றோடு அவளுடையதையும் சொல்லிவிட்டாள். ஆனாலும் மனம் ஆற மறுத்தது. அவனை வெறுக்கவெல்லாம் இல்லை. அர்ஜுனை மூன்று மாதமாகப் பார்க்கத் தானே செய்கிறாள்.
மிகவும் நல்ல மனிதன்.. சாட்சியாய் ப்ரணவும், அன்னமும்.
வீட்டு வேலையாளை அன்பாய் யார் அரவணைப்பார்? தோழனின் மகனை தன் மகனாய் எத்தனை பேர் வளர்க்கிறார்கள்.? அதுவும் அவன் குடும்பத்தைப் பகைத்து? அவள் வேலை செய்த இடங்களில் பெற்ற தாயைக் கூட திரும்பிப் பார்க்க நேரமில்லாமல் எத்தனை மகன்கள்? பெற்ற பிள்ளையை ஒரு பாரமாய் பார்த்த எத்தனை பெற்றவர்கள்…? இதெல்லாம் பார்த்தவளுக்கு அர்ஜுனின் அன்பான மனது பிடிக்கத் தான் செய்தது. வெறும் பிடித்தம் மட்டுமென்றால் பரவாயில்லை.. இது அதையும் தாண்டிய நிலையாயிற்றே.. 
இது தான் கொடுமை.. காதலித்ததால், கணவன் சொல் சுட்டது. அதே காதலால்.. அவன் சுடு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்க முடியவில்லை. கொன்று புதைத்த காதலனே ஆறுதல் படுத்த மாட்டானா என்று பார்த்து நின்றது காதல் மனது… இது என்ன காதலோ கன்றாவியோ? அவளுக்கும் புரியவில்லை.
ஒரு நாள் குக்கர் கையை சுட்டுவிட்டால், அதைத் தூரப் போடுவதில்லையே? அர்ஜுனும் நல்லவன் தான்… ஒரு நாள் அவன் வார்த்தை சுட்டுவிட்டது. அதற்காக அவனை வெறுத்துவிட அவளால் முடியுமா?
கோபம் இருந்தது. பிழை அவள் மேலும் இருக்க… அதை இழுத்துப் பிடிக்க விருப்பமில்லை. அவனுக்குத் தண்டனை கொடுத்தாலும் அது அவளுக்கே அவள் கொடுக்கும் தண்டனை அல்லவா…
அவனுக்குள் ஒரு ஏமாற்றம், ஒரு வலி… வார்த்தையாய் வந்துவிட்டது. அது நெருப்பாய் அவளுக்குள் இறங்க அவளும் இறக்கமில்லாமல் பேசிவிட்டாள். இருவருக்கும் ஒரு ஒற்றுமை.. அவன் பேச அவள் வாய் திறக்கவில்லை.. அவள் பேச அவன் வாய் திறக்கவில்லை… அதனாய் சண்டை பெருசாகவில்லை.
மனக்குமுறலைக் கொட்டிவிட்டு அமுதா மகனோடு படுக்கவும், அர்ஜுன் அவன் அறைக்குச் சென்றான். அவனால் மெத்தையில் படுக்க முடியவில்லை. பகலெல்லாம் தூங்கி இருக்கத் தூக்கமும் வரவில்லை. முன்னிரவு கொல்லாமல் கொன்றது. அவளில்லாமல் அங்குப் படுக்கவும் பிடிக்கவில்லை. அம்முவோடு எல்லாம் சரி ஆக வேண்டும் என்பது மட்டும் தான் அவன் நினைவில்.
தள்ளியிருந்தால் சரியாகுமா? யோசிக்கவில்லை அவள் படுத்திருந்த அறைக்குச் சென்றான்.
வாசலுக்கு முதுகை காட்டி படுத்திருந்தாலும் அர்ஜுன் உள்ளே வந்தது தெரியும். மெத்தைக்கு நடுவில் அம்மாவும் மானும் படுத்திருக்க, அவள் அருகில் படுத்துக் கொண்டான். அவளுக்குத் தெரிந்தது அவன் அருகில் இருப்பது. கவனம் முழுவதும் அவள் முதுகின் பின். அவன் மூக்சு விடும் சத்தம் வரை கேட்டது.
அவள் வலியில் இருப்பது அவனுக்குத் தெரியத் தான் செய்தது. எப்படி ஆறுதல் சொல்ல.. பிள்ளையும் கிள்ளி, அவனே தொட்டிலையும் ஆட்ட வேண்டிய சூழல். அவள் முதுகைப் பார்த்துப் படுத்தவன் அவளை அணைத்துக் கொள்ளத் தூண்டிய மனதை அடக்கினான்.
“மன்னித்துவிடு” என்று கூற ஆசை தான். ஆனால் அவள் அதை எதிர்ப்பாக்கவில்லை என்பது அவனுக்கு தெரியத்தான் செய்தது. அவன் பேச்சை ரசிக்கும் நிலையில் அவளில்லை.
அதைப் பற்றி அவன் பேச.. அவள் எழுந்து சென்றுவிட்டால்? ஒரு பக்க மனது சொன்னது.. ‘நீ அவளை அணைத்தாலும் அசைய மாட்டாள்’ என்று.
அவளைச் சுற்றி தான் சிந்தனை.. அம்முவை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டிருந்தனர் என்பது அவனுக்குச் செய்தியே… இன்னும் என்னென்ன கொடுமை அவளுக்கு நேர்ந்ததோ.. அவள் கூறியது உண்மை தான்.. ‘கணவனாய் இருக்கவே இல்லை… உரிமை மட்டும் எடுத்துக் கொண்டேன்.’
எப்பொழுது தூங்கினானோ.. காலை கண்விழிக்க, அமுதா எப்படிப் படுத்திருந்தாளோ அப்படியே தான் படுத்திருந்தாள். இரவெல்லாம் முழித்திருக்கக் காலை மகன் எழுந்து அவள் மேல் உருண்டு புரளும் வரை அவள் எழுந்திருக்கவில்லை.
“ம்மா.. ஏந்தி.. ஏந்தி..” என்று அம்மா மேல் ஏறிப் படுத்துக்கொண்டு அம்மாவின் கன்னம் வருடியவன் கண் அருகில் இருந்த அப்பாவைப் பார்க்கவும், குழந்தைக்கு குஷி தாங்க முடியவில்லை.
“ம்மா.. அப்பா” என்று அப்பா நெஞ்சுக்கு தாவினான். ப்ரணவுக்கு அப்படி ஒரு சிரிப்பு.. அம்மா அப்பா நடுவில் படுத்து கொண்டு இருவரிடமும் ஒரே கொஞ்சல். யார் மேல் தலை வைப்பது .. யார் மேல் கால் வைப்பது..?
அவனின் சிரிப்பு இருவரையும் தொற்றவில்லை.
அர்ஜுன், அம்மு முகம் பார்க்க அதில் அப்படி ஒரு சோர்வு. அவள் தூங்கட்டும் என்று எண்ணி, மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
ஒரு வாரம் ஆகியும் அவளிடம் மாற்றமில்லை. சோர்வாய் தான் இருந்தாள். கொஞ்சம் அழுதால் சரி ஆகியிருப்பாளோ? ஆதரவாய் ஒரு தோள் கிடைத்தால் அழுதிருப்பாள்.
அவள் அவளாயில்லை. தோற்றத்தில் மாற்றமில்லை ஆனால் முகத்தில் பொலிவில்லை. அர்ஜுனைப் பார்த்தால் புன்முறுவல் இல்லை. மகனோடு ஓடிப் பிடித்து விளையாடுவதில்லை. சிரிப்பெல்லாம் காணாமலே போய்விட்டது. கடனே என்ற ஒரு வாழ்க்கை.
அர்ஜுன் மெதுவாய் பேச ஆரம்பித்தான்.. பேசினால் முகத்தைத் திருப்புவது இல்லை. கேட்கும் கேள்விக்குப் பக்தியுள்ள மாணவியாய் பதில் வந்துவிடும். ஏதாவது வீட்டிற்கு வேண்டுமானால் தயங்காமல் கேட்டாள். உரிமை பேச்செல்லாம் இல்லை. இன்னுமே அதே நிலை தான்; ஏதோ நானும் வாழ்கிறேன் என்ற ஒரு வாழ்க்கை.
அடுத்த ஒரு வாரம் பொருத்த அர்ஜுனால் அதற்கு மேல் பொருக்க முடியவில்லை. தேவைக்குப் பேசினால் சரி வராது என அவனே வலியச் சென்று கதை பேசினான். ஏதாவது.. அவன் அலுவலகத்தில் நடந்தது முதல் அரசியல் வரை! அவள் பதில் பேசாவிட்டாலும் எழுந்து போக மாட்டாள். அவன் என்ன கேட்டாலும் மறுக்காமல் செய்தாள். பதில் வேண்டி நின்றால், ஒரு வரிப் பதில் தந்தாள்.
அவள் கைபிடித்து கதை பேச ஆரம்பித்தான். அவன் எதிர்பார்த்தது போல் அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. கையை அவள் அசைக்கக்கூட இல்லை. 
உள்ளுக்குள் பாரம் அவளை அழுத்தியது.. மனம் வெடித்துவிடும் அபாயம். அர்ஜுன் மேல் கோபமா? அதுவும் இல்லை.. சேர்ந்து வாழ முடிவெடுத்தபின் வாரக் கணக்காய் கோபத்தை இழுத்துப் பிடிக்கக் கூடாது என்பது அவள் எண்ணம். அதில் வெற்றியும் பெற்றுவிட்டாள்.
எதையோ எதிர்பார்த்து, கிடைக்காத வலி.. ஒரு ஏமாற்றம். அவள் கண் உணர்த்தியது. ஆனால் அவனுக்குத் தான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. அவள் கண்ணை படிக்கும் உக்தியை கற்றானில்லை.
வாரங்கள் பல சென்றும் இன்னும் ஒரு மாற்றமில்லை அவர்கள் வாழ்க்கையில். அவள் ஒழுங்காய் சாப்பிடாமல் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அது மட்டும் தான் நடந்த ஒரே மாற்றம்.
சில நாட்களாகவே மாலையானால் சோர்ந்துவிடுகிறாள். என்ன சொல்லியும் ஒழுங்காய் சாப்பிடுவது இல்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை. அசதியாய் அவ்வப்போது சுருண்டு விடுகிறாள்.
அர்ஜுனால் பார்க்கவே முடியவில்லை அவள் படும் பாட்டை, “டாக்டர பாக்கலாம் அம்மு” ஆயிரம் முறை கேட்டாயிற்று
எப்பொழுதும் போல் அதே பதில், “நல்லா தான் இருகேன்.. பசி இல்ல.. கொஞ்சம் அசதி.. வேற ஒன்னும் இல்ல!”
என்றும் போல் இன்றும்.. கைக்கெட்டும் தூரத்தில் மனைவி. கண்ணுக்கும் மனதுக்கும் உகந்த மலர். வண்டாய் அவளை நெருங்க தோன்றவில்லை. அன்பாய் அவளை அரவணைக்க ஆசை. காதல் மனது அவளைப் பார்த்துக் கரைந்தது.
அமுதாவின் முதுகையே பார்த்துப் படுத்திருந்த அர்ஜுனுக்கு மனம் கேட்கவில்லை. ‘என் மனைவி தானே… கொஞ்சம் ஆருதலாய் இருந்தால் என்ன?’ என்று தோன்றவும் அவள் முதுகைப் பார்த்திருந்தவனுக்கு அணைத்து ஆறுதல் சொல்லும் உந்துதல்.
அவள் மனதும் ஒரு நிலையில் இல்லை. என்ன வேண்டும் உனக்கு என்று கேட்டால்.. உடனே சொல்லி விடுவாள்… ‘எனக்கு என் அர்ஜுன் வேண்டும்.. இழந்த இன்பமெல்லாம் அவனிடமிருந்து வேண்டும்.. ஆனால் அவனாய் உணர்ந்து என்னிடம் வர வேண்டும்..’ என்று.
அர்ஜுன் அன்று பேசியதை மனதை விட்டு எடுத்தாயிற்று.. ஆனாலும் இன்னும் ஒட்டுதல் வரவில்லை. அவன் மீண்டு வர.. ஒரு தவம்.. பலனாய் உடல் நிலையில் சோர்வு.
படுக்கையை விட்டு அர்ஜுன் எழுந்து அமர்ந்தான்.. சாய்வாய். விழித்துக் கிடந்தவள் அவன் புறம் திரும்பி, “ஏதாவது வேணுமா?” என்றாள். 
‘எனக்கு உழைக்கத் தான் பிறவி எடுத்தாளா?’ மனம் அலுத்துக் கொண்டது.
“இல்ல.. தூக்கம் வரல” என்று மீண்டும் படுத்துக் கொண்டான், அவள் முகம் பார்த்து.
ஒரே படுக்கை.. இருவரும் அருகருகே.. இருவர் மூச்சுக் காற்றும் மோதும் தூரம்… ஆனால் அனல் பரவவில்லை. உள்ளத்தின் குளிர் இன்னும் குறையவில்லை. உடல் உரச மனம் ஏங்கவில்லை… ஆனால் ‘மனம் ஒன்றாதா’ என்ற ஏக்கம் இருவருக்குள்ளும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
அவள் நெற்றியில் இருந்த முடியை பின் தள்ளி தலையை மென்மையாய் தடவ, அவள் எச்சில் விழுங்கினாள். உடல் சோர்வு அவள் கண்ணில் தெரிய.. அவன் வருடலை நிறுத்தவேயில்லை. கொஞ்சம் நேரத்தில் அவள் கண் சொருக ஆரம்பித்தது. ஏதோ ஒரு நிம்மதி..
அவள் கண்ணசரவும் அவளை அணைத்துக் கொண்டான். இன்னும் நிம்மதியாய் தூங்கினாள்.
மறுநாள் காலை அவன் ஜாகிங் முடித்து வீட்டுக்குள் நுழையவும் அம்மு வாந்தி பண்ணும் சத்தம் கேட்டது.
“அம்மு.. கதவ திற” குளியலறை கதவைத் தட்டி நின்றான்.
அப்பா காலை கட்டி கொண்டு ப்ரணவ், “ப்பா அம்மா ஊ ஊ” என்று அம்மா அழுததைப் போட்டுக் கொடுத்தான்.
முகம் துடைத்துக் கொண்டே வெளிவந்தவள், “க்டீன் டீ போட்டுக்கரீங்களா… எனக்கு முடியலை” சோஃபாவில் சாய்வாய் அமர்ந்தவள், காலடியில் அமர்ந்து கொண்டான். ஏன் இந்த பாடு இவளுக்கு..
இருவருக்குமே புரியல்லை. ஏதோ ஒரு வலி அவள் உள்ளத்தோடு உடலையும் தின்று கொண்டிருக்கின்றதா? எல்லாம் சரியாகிவிட்டது போல் தான் அவளுக்கும் தோன்றியது.. இன்னும் என்ன?
சத்துமாவு கஞ்சி கட்டியாகக் காச்சி கொண்டுவந்து கொடுத்தான். அதைப் பார்த்துமே புரட்டிக்கொண்டு வந்தது. “வேண்டாம்..” என்றாள்.
கண்களில் ஏதோ ஒரு ஏக்கம்..
இதே பார்வையைப் பார்த்திருக்கிறான்… அன்று ஒரு நாள் வெளியே சென்று டெட்டாள் வாடையோடு  வீடு வந்தவள் இப்படி தான் அவனைப் பார்த்து நின்றாள்.
பார்வைக்கு அர்த்தம் தெரியவில்லை. கொஞ்ச நாளாகவே அவன் பார்க்காத நேரம் அவனை இப்படி தான் பார்க்கிறாள்.
“சாப்ட்டு தான் ஆகனும்! அடம் பிடிக்காத அம்மு..” அவன் ஊட்ட, ஒருவழியாய் உள்ளிறக்கினாள்.
மீண்டும் எல்லாம் வெளிவர.. துவண்டு போனாள்.
நித்தம் இது வழமையாய் மாறியது. எதையுமே உடல் எடுத்துக் கொள்ளவில்லை. அசதி ஒரேயடியாய் அவளை ஆட்டிப் படைத்தது. உறங்கும் வேளை அவன் தோள் சாய்த்துக் கொள்வான்.. அது அவளுக்கும் பிடித்திருந்தது. அந்த ஏக்க பார்வை மட்டும் மாறவே இல்லை.
விடியலைக் கண்டாலே பயம்.. அடிவயிறு வரை இழுத்துப் பிடிக்கும் உமட்டல்… ஆனால் ஒன்றுமே வெளி வராது. அவளால் முடியவே இல்லை. சாப்பிட்டு தெம்பாய் வாந்தி எடுக்கலாம் என்றால் மூக்கும் தொண்டையும் எரிந்தது. களைப்பும் குறையவில்லை. காலை, மாலை மட்டும் தான் இப்படி. மற்ற நேரம் ஏதோ உண்டாள்.. உப்பு சப்பில்லாமல். அதனால் நடமாடினாள். காலை மாலை மட்டும் தான் தொந்தரவு.. மற்ற நேரம் எந்த தொந்தரவும் இருக்காது. ‘இது என்ன மாதரி நோய்?’ என்று பெரிய சந்தேகம் அவளுக்கு!
காலை வழக்கம் முடித்து சோர்வாய் சோஃபாவின் அமர்ந்தவள், “நான் செத்திடுவேனா?” என்று அவனைப் பார்த்தாள். கேட்டவளுக்கு மட்டுமா தொண்டை அடைத்தது?
அவள் முகம் பார்க்க முடியாமல், அவள் காலருகில் அமர்ந்திருந்தவன், அவள் முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டான். அம்மா அவஸ்தை மகனுக்கு பொறுக்கவில்லை… வீல்லென்று குரல் எழுப்பினான்.
அம்மா கழுத்தை கட்டிக்கொண்டு ஒரு குழந்தை.. காலை கட்டிக் கொண்டு மற்றது.
ஒரு குழந்தை அழுதது. மற்றொன்று துடித்தது. அம்முவுக்குள் ஒரு சாரல்.. முதல் முதலாய் அவள் கை நீட்டி அர்ஜுன் கேசம் கோதினாள்.
அவள் கையை பிடித்து கொண்டு, தலை  தூக்கி மனைவியைப் பார்த்தவன்.. “ப்ளீஸ் டாக்டர பார்க்கலாம்” என்றான்.
அவனையே பார்த்தாள். அதே பார்வை! பதிலில்லை.
“நீ எனக்கு வேணும் அம்மு..
நான் என்ன சொல்லியும் என்னை விட்டுட்டு போகவே இல்ல நீ.. அதுக்குக் கைமாறா நான் என்ன தருவேன்? என்னை தரேன்.. எடுத்துகரியா?
நான் தப்பு தப்பா பேசிட்டேன். நான் மன்னிப்பு கூட கேக்கல… கேக்கவும் மாட்டேன். அப்போ தான் அந்த வலி எனக்குள்ள இருந்துட்டே இருக்கும். வாயடக்கம் இருக்கும். என் வாழ் நாள்ல ஒரு தரம் கூட நான் உன் கிட்டச் சாரி கேக்கர மாதரி நடந்துக்கவே மாட்டேன்… எனக்கு நீ வேணும் அம்மு” என்றான் குரல் கரகரக்க.. கண்ணில் மன்னிப்பு யாசித்து.
அவள் கண்ணில் வலி இல்லை… அதனால் அவன் யாசிப்பைப் பார்த்தாள் அவள் இதயம் கொண்டு! முகத்தில் ஒரு தெளிவு வந்து ஒட்டிக் கொண்டது.
இப்பொழுதெல்லாம் அர்ஜுன் தான் அவளை பார்த்துக்கொண்டான்.. ஒரு தாயாய். தகப்பனாய் அரவணைத்துக் கொண்டான். தோழனாய் தோள் சாய்த்துக்கொண்டான். எல்லாம் சரியாகிக் கொண்டிருக்க, அவன் அதற்குமேல் அவளிடம் உரிமை எல்லாம் எடுத்துக் கொள்ளவே இல்லை.
அர்ஜுன் முகம் பார்த்து, அவன் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஒருவழியாய் சனிக்கிழமை மாலை மருத்துவரைப் பார்க்க ஒத்துக் கொண்டாள்.
சனிக்கிழமையும் வந்தது. என்றும் போல் காலை எழுந்து அம்முவிற்கும் மகனுக்கும் கஞ்சி காச்சி, இருவரையும் உண்ண வைத்து.. சாம்பார் செய்து, இட்டிலி அவித்து.. அம்மு வாந்தி செய்த குளியலறையைக் கழுவி, மகனைக் குளிப்பாட்டி… பின் உணவு ஊட்டி… மீண்டும் வாந்தி செய்த குளியலையைக் கழுவி.. துணி துவைக்கப் போட்டு.. வீட்டைப் பெருக்கு.. அழுக்கில் விழுந்த பாத்திரங்களைக் கழுவி.. என்று வீட்டு வேலை எல்லாம் முடித்து அலுவலக வேலையைப் பார்க்க அமர்ந்தான்.
ஒரு வாரமாக இப்படி தான் அவன் வாழ்வு செல்கிறது. பத்து மணிக்கு மேல் அன்னம் வந்துவிடுவார். அன்நேரத்திற்கெல்லாம் அம்மு சரியாகிவிடுவாள். இருந்தும் இவன் இல்லாத நேரம் மனைவியைப் பார்த்துக் கொள்ள, அன்னம் வரவேண்டும், அர்ஜுனிக்கு. இன்று விடுமுறையாய் இருக்கவே, அன்னம் வரவில்லை.
ஹாளில் இருந்த சுவரில் அம்மு சாய்ந்து சப்பளங்கால் போட்டு அமர்ந்துகொள்ள, அர்ஜுனும் அங்கிருந்த மேசையில் அவன் மடிக்கணினியுடன் அமர்ந்துகொண்டான்.
அடுக்களை பாத்திரங்களை எல்லாம் ஹாளில் பரப்பி, அம்மாவிற்கு ஒரு கரண்டியைக் கொடுத்துவிட்டு, ஒன்றை அவன் கையில் எடுத்துக்கொண்டு ப்ரணவ் ட்ரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தான். புன்னகை முகமாய் மகனின் சேட்டைகளை ரசிக்க ஆரம்பித்தாள். அவ்வபோது அவளும் வாசித்தாள்.
வாழ்க்கை ஒரு வழியாய் ஒரு புரிதலோடு கூட்ஸ் வண்டி வேகத்தில் பயணத்தை ஆரம்பித்தது.
வீட்டில் அழைப்பு மணி அடிக்கவும் எழும்ப எத்தனித்தவளை, “நீ உக்காரு… நான் பாக்கறேன்” என்று கதவை அர்ஜுன் திறக்க…
“என்ன டா அம்மானு ஒருத்தி இருக்கது நினைவுல இருக்கா இல்லியா?” என்று உள்ளே நுழைந்தார் மங்களம், அர்ஜுன் அம்மா. அவரோடு அவரது ஜால்ரா, பாரதி… அர்ஜுன் மதனியும் அவள் மகளும்… ஒரு வருடத்திற்கு பின்.. அழையா விருந்தாளிகளாய்.

Advertisement