Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 1
“அன்னம் எங்க போன?” காலை ஜாகிங் முடித்து வீட்டில் நுழைந்த அர்ஜுன் காதில் குழந்தையின் அலறல் விழவே வீட்டு வேலையாள் மேல் எரிந்து விழுந்தான். அர்ஜுன் கோபக்காரன் இல்லை.. அவன் இயலாமை கோபமாய் வெடித்தது.
“தம்பி?” என்று இடுப்பில் முகம் கருக்க வீரிட்ட பதினான்கு மாதமேயான  ப்ரணவோடு வந்து நின்றார் அன்னம்மாள்.
அப்பாவை கண்டதும் அவனிடம் தாவ, உடல் முழுவதும் வியர்வையாய் இருக்கவே, “அப்பா ரொம்ப அழுக்கா இருக்கேன் டா குட்டிமா.. ஒரு ஃப்பை மின்ட்ஸ் சமத்தா இருப்பியாம், அப்பா குளிச்சிட்டு வந்து தூக்குவேனாம்” குழந்தையிடம் பக்குவமாய் கூறிவிட்டு மீண்டும் அன்னத்திடம் காய்ந்தான்.
“நித்தம் இதே தான் நடக்குது.. அவன அழாம பாத்துக்க முடியாத உன்னால?”
கூறியவன் தலை மறையவும் குழந்தைக்கு என்ன புரிந்ததோ, அப்பா தன்னை தூக்காமல் சென்றுவிடவே குழந்தை தொண்டை கிழிய வீரிட்டான், முகம் நிறம் மாற, கண்ணிலும் மூக்கிலும் வாயிலுமாய் நீர் வழிய.
பிள்ளையின் கண்ணையும் மூக்கையும் அன்னம் முந்தியால் துடைத்துக் கொண்டே, “பெத்தவ போய் சேந்துட்டா.. இந்த மனுஷனாவது ஒரு பொண்ண பார்த்து கட்டிகிட்டா என்ன.. உன்ன வச்சுகிட்டு இந்த அறுபது வயசு கிழவி பாடா படுறேன்.. கொஞ்சம் அழாத ராசா… பால் வர லேட் ஆகிடுச்சு குட்டி பையா.. இந்தா இந்தா.. இத குடி கண்ணு!” என்று பால் டம்ளரைக் குழந்தை அருகில் கொண்டு போனது தான் தாமதம் அவன் அதைத் தட்டிவிட தரைக்குப்  பாலாபிஷேகம் நடந்தது.
“டேய்.. ஆறவச்ச பால இப்படித் தள்ளி விட்டா நான் என்ன பண்ணுவேன்..? நீ அழுகைய நிருத்தி கீழ இறங்கினா தானே ஒரு இட்டிலியாது அவிச்சு தர முடியும்? இப்போ உன் அப்பன் வந்து நிப்பான் குடிக்க அத குடு இத குடுனு.. தரைல இருக்கப் பால பார்த்தா அதுக்கும் காட்டு கத்து கத்துவான்” முணுமுணுத்து கொண்டே மீண்டும் பாலை ஆரவைக்கச் சென்றார் அன்னம்மாள்.
வீட்டு வேலையைப் பார்த்துக்கொண்டு, சமையலையும் கவனித்து, பதினான்கு மாதமேயான ப்ரணவை சமாளிப்பது அவருக்கு அவ்வளவு எளிதாயிருக்கவில்லை. உடல் பலவீனமும் வயதும் அவருக்குச் சுத்தமாய் ஒத்துழைக்கவில்லை.
ப்ரணவ் வயிற்றிலிருக்கும் பொழுதே பலமெல்லாம் இழக்க ஆரம்பித்த வைஷ்ணவி, எட்டு மாத கர்ப்பிணியாயிருக்கையில் படுக்கையில் விழுந்துவிட்டாள். அன்றிலிருந்து அன்னம்மாள் தான் எல்லா வேலைக்கும்.
படுத்தப்படுக்கையில் கிடந்த கர்ப்பிணியைக் கவனித்துக் கொண்டு, பைத்தியக்காரன் போல் எப்பொழுதும் விட்டத்தை வெறித்து கிடந்த அர்ஜுனையும் கவனித்து, வீட்டின் சகல வேலையும் இழுத்துப் போட்டுச் செய்தார், சம்பளத்திற்குப் பார்ப்பவராய் இல்லாமல் பெற்ற தாய் போல். பின் ப்ரணவ் பிறந்ததும் வேலை இன்னும் அதிகமேயானது. என்ன.. அர்ஜுன் பிள்ளை முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான்.  
மகன் முகத்தைப் பார்த்தாவது வைஷ்ணவி உடல் தேருவாள் என்று எதிர்பார்க்க எதையோ பறிகொடுத்த முகத்தோடே கணப்பட்ட அவள், மகன் மூன்று மாதம் எட்டியவேளை தன் இன்னுயிர் நீத்தாள்.
கடந்த எட்டு மாத்தில் மூன்று பெண்கள் வந்து சென்றுவிட்டனர் குழந்தையை பார்த்துக்கொள்ள.. ஒருவரிடமும் குழந்தை ஒட்டவில்லை. ஒவ்வொருவரும் சில மாதங்களே இருந்தனர்.. அன்னம்மாளுக்கும் அர்ஜுனுக்குமே போதும் போதும் என்றாகி விட்டது.
மாதங்கள் நகர மகனின் அழுகையும் பிடிவாதமும் அதிகமாகவே, அர்ஜுனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குழந்தையிடம் கோவத்தைக் காட்ட முடிவதில்லை. காட்டினாலும் அவனுக்கு ஒன்றும் புரியப்போவதும் இல்லை. நடுவில் மாட்டிக்கொண்டு முழிப்பதெல்லாம் அன்னம்மாள் தான்.
அர்ஜுன், அன்னம்மாளின் மகள் திருமண செலவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுவதுமாய் செய்திருந்தான். அந்த நன்றியுணர்ச்சி அன்னத்திற்கு என்றுமுண்டு. அன்னம்மாளின் கணவன் வேலை செய்த இடத்தில், கன்டெய்னர் அவர் மேல் சரிய.. இன்று உயிர் மட்டுமே மிச்சம்.
அன்னம்மாளின் வீட்டுச் செலவு, அவர் கணவன் வைத்திய செலவு எல்லாம் அர்ஜுன் தரும் சம்பளத்தில் தான். அவனும் வஞ்சனையில்லாமல் கொடுக்கவே அன்னத்திற்கு அர்ஜுன் மகனாய் தெரிந்தான். 
வாழ்வில் நாம் யாருக்காவது பிரயோஜனமாய் இருக்கவேண்டும்.. எங்கோ உள்ள முதியோர் இல்லத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை உதவி செய்வதை விட, கண்முன் தேவையில் இருக்கும் அன்னத்திற்கு கொடுத்தால் அவர் முகவாட்டம் இல்லாம் இருப்பதை கண்கூட பார்க்க முடியும் என்ற எண்ணமே அர்ஜுனுக்கு!
“என்ன அன்னம்.. இன்னும் அழறான்?” குளித்து உடைமாற்றி வந்தவன் பிள்ளையைக் கையில் வாங்கவும்.. பிள்ளை வீரிடுவதை நிறுத்தித் தேம்ப ஆரம்பித்தது.
“என்னால முடியல ராசா.. உன் புள்ளைய பாக்க அவனுக்கு ஒரு ஆத்தா தான் வேணும்.. காசுக்கு வரவ எப்படி பாப்பா.. இம்புட்டு கை மாறினா அந்த குழந்தையும் யார் கிட்ட தான் ஒட்டும் சொல்லு? உனக்கு என்ன ராசா.. நெசத்துக்கே ராசா மாதரி உசரமா செக்கசெவேனு  இருக்க.. உன்ன கட்டிக்க யாருக்காது கசக்குமா? நீயும் தங்கம் உன் குணமும் தங்கம். யேன்யா, உன் அம்மா பேச்ச கேட்டு ஒரு கன்னாலம் கட்டினா என்ன?”
“என்ன அன்னம் நீ.. புரியாம பேசுர? மூட்ட பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்த சொல்ற? ஒரு தரம் பட்டதே போதும். ஆயிசுக்கும் எனக்குப் பொண்டாட்டியே வேணாம்.. பொண்ணுங்கனாலே அலர்ஜியா இருக்கு அன்னம்.. சும்மா சும்மா அதையே பேசாத!”
மகனை அர்ஜுன் தூக்கி வைத்திருக்க, அவன் அழுகை அடங்கவும் அன்னம் இட்டிலியை ஊட்ட ஆரம்பித்தார். அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு இட்டிலியை உண்டு, கால் டம்ளர் பாலை குடித்து முடித்தான்.
அன்னம் அவனைக் கையில் வாங்கவும் மீண்டும் அழுகை ஆரம்பமானது.. அப்பாவிடம் தூக்கச் சொல்லி கை நீட்ட, “உன் அம்மாவோட அதே பிடிவாத குணம்..” என்றவன்.. “நீ பாத்துக்கோ அன்னம்.. எனக்கு ரொம்ப லேட் ஆகுது. இன்னைக்கும் நான் லேட்டா போக முடியாது.. சீட்டை கிழுச்சிடுவாங்க..”
அரை மணி நேரப் போராட்டம் தரையில் வாந்தியாய் முடிந்தது. இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பசி வயிற்றை கிள்ளினாலும் சாப்பிடவும் பிடிக்கவில்லை. மனதை கடினப்படுத்திக் கொண்டு அர்ஜுன் அலுவலகம் கிளம்பினான். 
அவனால் தினம் தினம் இந்த போராட்டத்தைப் போராட முடியவில்லை. வேலையிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. 
மகனுக்குள் ஏதோ தவிப்பு, அழுகையாய் தினம் தினம்.. 
இவன் தவிப்பை யாரிடம் உறைப்பான்? அவனால் தகப்பனாய் மாற முடிந்தது.. தாயாய் மாற முடியவில்லை. அவசியம் ஒரு பெண் உதவிக்கு வேண்டும். அவன் அலுவலக தோழி கொடுத்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து மனதில் வேண்டுதலோடு காத்திருந்தான்.
மூன்று ரிங்கில் தொலைப்பேசி எடுக்கப்பட்டது. அர்ஜுன் தன்னை அறிமுக படுத்திக்கொண்டு தன் தேவையைச் சொல்ல அடுத்த முனையிலிருந்த மதர் அவனை நேரில் வரச் சொல்லி வைத்துவிட்டார்.
வேலை முடியவும் நேரே சென்றது காலையில் பேசியவர் சொன்ன இடத்திற்கு. துணையில்லாமல் வாழும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிறுவனம் அது. அதை ஒரு வயது முதிர்ந்த கன்னியாஸ்திரி நடத்தி வந்தார். அலுவலக அறையில் கட்டுமான வேலை நடக்கவே வெளியிலிருந்த நாற்காலியில் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
மீண்டும் அவரிடம் தன் நிலையை விளக்க, அவருக்கு அங்கு ஒரு பெண்ணை வேலையில் அமர்த்துவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கவே, நெற்றியைத் தேய்த்துக்கொண்டே யோசனையாய் அமர்ந்திருந்தார். குடுப்பமாய் இருக்கும் இடத்தில் ஒரு பெண்ணை அனுப்புவதற்கும் தனியாய் கைக்குழந்தையோடு இருக்கும் ஒரு ஆண்மகன் வீட்டிற்கு வேலைக்கு அனுப்புவதற்கும் வித்தியாசம் இருக்கத் தானே செய்கிறதது?!
அவரின் சிந்தனை ரேகையைப் பார்க்கவுமே அவனுக்குப் பீதி கிளம்பியது. பிஞ்சு குழந்தையை நம்பிக்கையான ஆளிடமே விட வேண்டும். இங்கிருக்கும் பெண்களிடம் தைரியமாக விடலாம் என்று அவன் தோழி சொல்லவே இங்கு வந்து அமர்ந்திருக்கின்றான். அடுத்த இரண்டு தினங்கள் அவன் வேலையாய் வெளியூர் கிளம்ப வேண்டியிருக்க உடனடியாய் ஆள் தேவை. அன்னத்தால் தனியாய் இரவும் பகலும் ப்ரணவை கவனிக்க முடியாது.
“நீங்க ஒரு வயசுப் பையன். நீங்களோ அங்கையே தங்கி முழு நேரம் இருக்க மாதரி கேக்கறீங்க! இப்போதைக்கு என் கிட்ட ரெண்டு பேரு தான் உடனே சேர்ர மாதரி இருக்காங்க. ரெண்டு பேருமே வயசு பொண்ணுங்க மிஸ்டர்.அர்ஜுன்.
கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.. பொண்ணுங்க இல்லையா..
அவங்களால உங்களுக்கும் உங்களால அவங்களுக்கும் பிரச்சினை வந்திடக் கூடாது பாருங்க,,” என்று அவர் தயங்க
“மதர்.. ப்ளீஸ் என்னால வரவங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. அப்படி எனக்கு ஒரு பெண்ணோட துணை வேணும்னா இந்நேரம் நான் வேற கல்யாணம் பண்ணியிருப்பேன்.. சோ.. வரவங்க பிரச்சினை கிளப்பாதவங்களா இருந்தா போதும். என்னை நீங்க நம்பலாம். வீட்டில ஃபுள் டைம் அன்னம், என் ஹெல்பர் இருப்பாங்க.. ப்ளீஸ்.. இல்லனு மட்டும் சொல்லிடாதீங்க!”
காலை அவன் பேசி தன்னை பற்றிய தகவலைத் தந்ததும் அவனை இங்கு அனுப்பிய அவன் தோழியிடம் மதர் விசாரித்து அவனைப் பற்றி அறிந்திருந்தார். அவரை நம்பி அவரிடம் பணிபுரியும் பெண்கள் நல்வாழ்விற்கு அவர் தானே உத்தரவாதம்.
“உள்ள வேலை நடக்குது மிஸ்டர்.அர்ஜுன்.. என்னால அவங்க ஃபைல எடுக்க முடியாது. வேலையாள் போனதும் தான் எடுத்துப் பார்க்க முடியும். அப்புறம் அவங்கட்ட பேசிட்டு சொல்றேன். நீங்க நாளைக்கு வீட்டில இருக்க மாட்டீங்கல.. இப்போவே பேப்பர்ஸ் சைன் பண்ணிடுங்க.. ரெண்டு பேர்ல யார அனுப்பரதுனு பேசிட்டு நைட் உங்களுக்கு கன்ஃபார்ம் பண்றேன்..”
ஒருவழியாய் ஃபார்மாலிட்டீஸ் முடிய, வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாய் இருக்க, குழந்தையைப் பார்க்க சென்றான். ப்ரணவ் தூங்கிக் கொண்டிருந்தான். அழுதிருப்பான் போலும் தூக்கத்தின் இடையே தேம்பினான்.
பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. ‘இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை ஆண்டவா?’ என்று மனம் ஆண்டவனிடம் கேள்வி கேட்டது.
ஆயாசமாயிருக்கவே அப்படியே அமர்ந்துவிட்டான். அழகு குழந்தை. பெற்றவளிடம் பால் குடித்து அவள் மார்பிலும் தோளிலும் தவழ வேண்டிய இளங்குருத்து.. இன்று? 
‘இரக்கமற்ற அரக்கி.. உனக்காகக் கூட அவளுக்கு வாழத் தோன்றவில்லையே.. அப்படி யாரை நினைத்து நினைத்து உருகி இறந்தாள்?’ மனம் பொருமியது. அதற்குப் பதில் அவன் அறிந்ததே.. கோபமாய் வந்தது… பெண்கள் மேல் வெறுப்பாய் தோன்றியது. “பெண்கள் துரோகிகளடா.. சுயநலவாதிகள்.. அவர்களை நினைத்து நாம் அழக்கூடாது” வாய் விட்டுச் சொல்லிக் கொண்டான்.
எட்டு மணியளவில் மதரிடமிருந்து அழைப்பு வர ஆர்வமாய் எடுத்தான். திருமணத்தின் போது கூட ஒரு பெண்ணிற்காக இவ்வளவு ஏங்கவில்லை அவன். ‘கிடைக்கவேண்டுமே.. நல்லவளாய்.. மகனை தன் பிள்ளையாய் பார்த்துக்கொள்பவள் வேண்டுமே’ என்ற வேண்டுதல் நின்றபாடில்லை.
ஒரு பெண் ஒத்துக்கொண்டதாய் கூறினார். அவனுக்குப் போன உயிர் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால் இன்னும் மதரின் தயக்கம் குறைந்தபாடில்லை.
“எதனாலும் சொல்லுக மதர்” என்று காத்திருந்தான்.
“அவ ரொம்ப நல்ல பொண்ணு. ஆனா கொஞ்சம் கறார் பேர்வழி. நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு.. நீங்க சரினு சொன்னா நாளைக்கு விடியகாலைல புறப்பட்டு முதல் பஸ்ல வந்திடுறேனு சொல்றா.”
“அவங்க இங்க இல்லியா?”
“இல்ல பா.. வேற வீட்டில வேல செய்யரா.. படுக்கையில இருக்க ஒரு வயசான அம்மாவ பார்த்துகிட்டா.. நர்ஸ் மாதரி.. அங்க அவ கண்டிஷன்ஸ்-அ மீறீட்டாங்காளாம் அதனால இனி மேல் அங்க இருக்க மாட்டேனு நேத்து காலைல சொல்லிட்டா. நான் தான் ரெண்டு நாள் பொருத்துக்கோ.. வேற வேல கிடைச்சதும் மாத்தி விடுறேன்னு சொன்னேன். அவள இங்க வர சொல்லிட்டு.. வேர ஒரு பொண்ண அங்க போக சொல்லலாம்னு இருக்கேன்..”
கேட்கும் போதே கண்ணைக் கட்டியது அவனுக்கு. ‘செய்யரது வீட்டுல ஆயா வேல இதில ஆயிரம் கண்டிஷன்ஸ் வேற..’ நினைக்க மட்டுமே முடிந்தது அவனால்.
“சொல்லுங்க மதர் அவங்க என்ன எதிர்பார்க்கராங்க?”
“அவ செய்யர வேலையா கண்ணும் கருத்துமா செய்வா.. அதுல அவ மேல யாரும் குறை சொல்லவே முடியாது. வெறும் குழந்தை மட்டும்னா சம்பளம் குறைச்சலா இருக்கும்.. வீட்டில இருக்க எல்லாவேலையும் பாத்துகறேன்… ஆனா சம்பளம் அதிகம் வேணும்னு சொல்றா.
ஒன்னு குழந்தையோட தங்குவா இல்ல அவளுக்குத் தனி ரூம் வேணும். விருந்தாளிங்க வராங்க கொஞ்சம் அடுக்களைல இருந்துகோன்னு சொல்லக் கூடாது.. அவ இருக்க மாட்டா.
ஒரு காலத்திலேயும் உங்களாலையோ உங்க வீட்டுக்கு வர கெஸ்ட்டாலையோ அவளுக்கு எந்த வித தொந்தரவும் வரக் கூடாது.. மீறினா அடுத்த நிமிஷம் இடத்தை காலி பண்ணிடுவா.
சன்டே காலைல 7:00-ல இருந்து நைட் 7:00 வரைக்கும் அவளுக்கான நேரம். அன்னைக்கு அவ எங்க போரா வாரனு கேட்கக் கூடாது. ஆனா அன்னைக்கான சமையல் காலைலயே செஞ்சிடுவா.. நைட்டுகானது எட்டுக்குள்ள ரெடி பண்ணிடுவா.
இதுகெல்லாம் ஒத்துகிட்டா வரேனு சொல்றா!”
தலை சுற்றியது அவனுக்கு. இதுவரை வந்த ஒருவரும் இப்படி எல்லாம் சொன்னதேயில்லை. அவளின் சம்பளம் கேட்டவனுக்கு மயக்கம் வரை வந்துவிட்டது. ஒரு வாரம் வந்திருக்கட்டும், இருவருக்கும் ஒத்துப் போனால் பார்ப்போம் என்று விட்டான்.
இவன் சம்பாதிப்பதெல்லாம் செலவு செய்ய.. வீட்டிற்கு வருபவளுக்கு வெறும் துணிமணி செலவு மட்டும் தான். ‘ஆக, அவள் என்னை விட வசதியானவளாக இருக்க வேண்டும்’ என்று எண்ணவும் முகம் புன்னகையை பூசிக்கொண்டது. 
பிழைக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு வாழ வழியா இல்லை. துணையில்லா பெண் தனித்துப் போராடவில்லையா.. வாழவில்லையா. சம்பளம் கொடுக்கும் முதளாளிக்கு ‘டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்’! பிழைத்து கொள்வாள் என்று தனக்குள் சிரித்துக்கொண்டான்.
இரண்டு நாள் வெளியூர் பயணம் முடித்து வீட்டிற்கு வந்தவன் காதில் மழலையின் சிரிப்பு வரவேற்றது. கேட்கவே ‘தேன் வந்து காதினில் பாயும்’ எஃப்க்ட். கூடவே மென்மையாய் ஒலித்த ‘நர்ஸ்சரி ரைம்ஸ்’ !
அவள் சத்தமும் சோழியைக் குலுக்கியது போல்.. ஒழுங்காய் கேட்கவில்லை, ஏதோ மழலை மொழியில் கொஞ்சிக் கொண்டிருந்தாள். 
வீடு படு சுத்தம்.. தூசி இல்லை. எல்லாம் அதன் அதன் இடத்தில். டெட்டாள் மணக்கவில்லை.. பால் வாடை இல்லை. சாம்பிராணி போட்டிருப்பாள் போலும்.
செயற்கை பூவிற்குப் பதிலாய் மல்லி தொங்கிக் கொண்டிருந்தது வைஷ்ணவி படத்தில்.
வாசம் கமழும் மல்லி சரத்துக்கு நடுவில்  வைஷ்ணவி படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள். இளம்பெண், வாழ வேண்டிய வயது. லட்சனமான முகம். அர்ஜுன் நல்ல நிறம், அவள் அர்ஜுனைக் காட்டிலும் நல்ல நிறம், நடிகை தம்மான போல்.. ஆம் அவளை ஒத்த சாயல்.. அழகிலும் நிறத்திலும்.
வந்தவளைப் பார்க்காமலே அவள் வேலையின் தரம் பிடித்துப் போனது.
“அன்னம்..” ஹாலில் இருந்து கொண்டே அன்னத்தை அழைத்தான். விழுந்தடித்து ஓடிவந்த அன்னம், “வந்துட்டியா ராசா.. உனக்காகத் தான் காத்து நிற்கிறேன். பொண்ணுக்கு நிறைமாசம்.. பாவி பாத்து நடக்காம வழுக்கி விழுந்துட்டாளாம்.. பிரச்சினை இல்லனு சொல்றாங்காளாம்.. ஆனா பிள்ளையை எடுத்திடலாம்னு டாக்டர் சொல்லிடுசாம்.. நீ வந்ததும் சொல்லிட்டு போகத் தான் காத்திருக்கேன்.. போகட்டாய்யா?”
“என்ன அன்னம் ஆர அமர சொல்லிட்டு.. இரு ‘கேப்’ புக் பண்றேன்.. கிளம்பு நீ” என்று பர்சிலிருந்து சில சிகப்பு தாள்களை எடுத்து அவரிடம் நீட்டி, “செலவைப் பத்தி கவல படாத.. சீத்தாவ  பாத்துக்கோ.. சாயங்காலமா ஃபோன் போட்டுட்டு வாறேன்..” எனவும் அன்னத்திற்குக் கண் பனித்துவிட்டது.
“பணம் வேண்டாம் ராசா.. நீ கொடுக்கர சம்பளமே ஆயுசுக்கும் போதும் சாமி! நான் ஒரு மகன பெத்து வளத்திருந்தா கூட என்னை இப்படி எல்லாம் கவனிச்சிருக்குமான்னு தெரியல.. நீ என்னமோ நான் தான் உன்ன பெத்த ஆத்தா மாதரி என் மேல உன் பாசத்தையும் காசையும் வாரி வாரி எறைக்குர.. இதுக்கெல்லாம் ஏழு சென்மம் எடுத்தாலும் நன்றி கடன் தீராது எஞ்சாமி!” என்று அவன் கையை அவர் கண்ணில் ஒற்றிக்கொள்ள,
அவன் அவர் கையில் பணத்தைத் திணித்து, அவரை தோளோடு அணைத்தவன், ‘பெத்தவ எல்லாம் அம்மா ஆக முடியாது அன்னம்.. நான் இவனை யாருகிட்டையாது கொடுத்திட்டு வேற கல்யாணம் பண்ற வைக்கும் என் கூட உறவில்லனு என் பெத்தவ எங்கள திரும்பிக் கூட பாக்கரது இல்ல.. என்னால எப்படி முடியும் அன்னம்? இவன் என் பொறுப்பு இல்லையா?
இப்படி தள்ளியே இருந்திட்டா சொத்து பிரச்சினை இல்லனு நினைக்குர மதனி!.. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கூட எங்கண்ணன் அளவுக்குத் தலையாட்டி நான் பார்த்ததில்ல!’ இதெல்லாம் சொல்ல நினைத்தாலும் எதுவும் சொல்லவில்லை.
“நீ என்னை பெத்து போடலா.. ஆனா இன்னைக்கு எங்களுக்குனு நீ மட்டும் தான்.. நானும் என் மகனும் உன்னால தான் உயிரோட இருக்கோம் அன்னம்.. என்னை பிரிச்சு பேசாத.. நான் உன் மகன் தான்.. காசு இன்னைக்கு வரும் நாளைக்கு போய்டும்.. போ போய் சீத்தாவ பாரு!” என்றதோடு நிருத்திக்கொண்டான்.
வாசலில் கார் வந்து நிற்கவும்.. “அன்னம் அந்த பொண்ண கூப்பிட்டு என் கிட்ட அறிமுகம் படுத்திட்டு போ”
“ஆமால்ல.. இரு ராசா” என்று குழந்தையின் அறையினுள் அன்னம் ஓட்டமும் நடையுமாய் நுழைந்தார்.
அடுத்த நிமிடம் அன்னம் வர பின்னால் வந்தாள் அவள்.. கையில் குழந்தையோடு புன்னகை முகமாய்.
“நீயா?” பார்த்தவன் விழி பிதுங்கி கீழே விழவில்லை. இதயம் துடிக்கவில்லை. கண் இமை மூடவில்லை.
மகன் இவனைப் பார்த்த பின்னும் இவனிடம் தாவ முற்படவில்லை. ஒய்யாரமாய் அவள் மார்பில் சாய்ந்து கொண்டு அவள் இடையைத் தாண்டி தொடை வரை தொங்கிக்கொண்டிருந்த பின்னலை ஆட்டி சிரித்துக்கொண்டிருந்தான்.
அவள் கன்னத்தில் எச்சில் ஈரம் பட முத்தமிட்டு “ம்மா.. அப்ப்ப” என்றது குழந்தை, அந்த திராட்சை நிற கட்டழிகியை கழுத்தோடு கட்டிக்கொண்டு.
பார்க்க அம்மா மகன் போல் தான் இருந்தனர் இருவரும். கருப்பு திராட்சை போல் நிறமாய், பளபளப்பாய், அழகாய்.
“ரெண்டு நாள்… ரெண்டே நாள்.. அவனையும் விட்டு வைக்கலையாடி நீ” என்று முழு வெறுப்பைக் கக்கியது அவன் கண்கள்.

Advertisement