Advertisement

அம்மாவிடம் பேசவேண்டும்.. பொறுமையாய் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும்… ‘இவள் என் மனைவி.. உன் உயிராய் போனவள்.. இரண்டு வருடம் தனியே இருந்தேன்.. அந்த இரண்டு வருடமும் அவள் நினைவு தான் என்னைக் கொன்றது. எனக்கு அமுதாவை மிகவும் பிடித்திருக்கின்றது. அதனால் அவளோடு அன்பாய் இரு’ என்று சொல்லவேண்டும். அம்மா புரிந்து கொள்வார்..
என்ன சொல்லவேண்டும் எப்படிச் சொல்லவேண்டும்.. எல்லாம் மனதில் சொல்லிப் பார்த்துக்கொண்டான்… இது எதுவும் அவன் பேசப் போவதில்லை என்பதை உணராமலே..
இரவும் வர.. அனைவரும் படுக்கச் செல்ல.. மகனோடு அம்முவும் உள்ளே செல்லவும் அர்ஜுன் காற்றுக்காய் கொல்லைப்புற திண்ணையில் அமர்ந்து கொண்டான்.
யார் கெட்ட நேரமோ தண்ணீர் குடிக்க வந்த மங்களம் அடுக்களையில் வெளிச்சம் பார்க்கவும் அங்கே வர.. பின் வராண்டாவில் அர்ஜுனைப் பார்த்துவிட்டார்.
“தூங்கலையா? மணி பத்தாச்சே…” என்று வந்து நின்ற அன்னையைப் பார்த்ததும்
“ம்ம்.. நீ என்ன பண்ற படுக்காம? போய் படு” என்று அவன் சிந்தனையில் மூழ்கினான்.
சத்தம் போட்டால் வேலைக்காகாது என்று நினைத்தாரோ என்னவோ.. அமைதியாய் ஆரம்பித்தார் மங்களம், “எதுக்கு டா இந்த ஓடுகாலியோட இங்க இருக்க? அவ தான் எவன் கூடவோ போனாளே.. அவ எதுக்கு உனக்கு?”
மீண்டுமா? இதற்கு இன்றே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவன்
“நீ ஏன்மா இப்படி எல்லாம் பேசர? அவள விடு.. என்னை நினைச்சு பார்.. என் நிம்மதியை கெடுக்கர மா நீ! நீ இப்படிப் பேசும் போது அவள இல்ல, என்னைக் கேவல படுத்தர.. தெரியுதா…? நான் என் பொண்டாட்டிய சந்ஷோமா வச்சுக்க தெரியாத பயலா? அப்படி தான் இருக்கு உன் பேச்சு. நான் சரி இல்லேனா தானே அவ என்னை விட்டுட்டு போகனும்.. யோசிச்சியா?”
“அவ வேணாம்டா.. அவள தொரத்திவிடுடா..”
“சரி.. இவள வீட்டை விட்டு அனுப்பீட்டு என்ன பண்ணபோரதா ஐடியா?” என்றான் 
“300 பவன் பவுன் போட்டு, மணி அவர் பொண்ண உனக்குக் கட்டி வைக்கறேனு சொல்றார் டா..”
“நான் ஆசை பட்டேன்னு நீ தான் இவளை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்ச… மறந்துட்டியா? ரெண்டரை வருஷமா இவ தான் என் மனைவி. ஆறு மாசமா இவ கூட தான் குடும்பம் நடத்துறேன். என்ன பேசரனு புரியுதா உனக்கு?”
“பொழைக்க தெரியாதவனா டா நீ..? 300 பவுன் போட்டு அம்பது லட்சம் தராங்கடா..” கண்ணில் ஆசை பொங்கக் கேட்டவரை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தான் அவனுக்குப் புரியவில்லை. வீட்டில் வசதிக்குப் பஞ்சமில்லை.. நினைத்த அன்றே 300 பவனுக்கு வாங்கி மாட்டிக்கொள்ள முடியும்.. 50லட்சம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல… இருந்தும் என்ன பேராசை இது?
“இவ ஏழ குடும்பத்தில இருந்து வந்திருக்கா… அதனால ஆறு மாசமா புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்த அப்புறமும் நான் என் மனைவியை அனுபிடனும்… நீ எனக்கு 300 பவன் போடுர ஒருத்திகூட கல்யாணம் பண்ணி வைக்கப் போர. அவ கூட ஆறு மாசம் இருந்த பிறகு வேற ஒருத்தி 400 பவன் நகை போடுவா… அப்போ என்ன பண்ணுவ? 300-அ தள்ளிவிட்டுட்டு 400-அ கட்டி வைப்பியா?” அவனுக்கு பெருத்த சந்தேகம் அவன் அம்மாவின் நோக்கத்தில்.
“என்ன டா புரிஞ்சுக்காம பேசர… வர லட்சுமிய வேண்டாம் சொல்ர? பிழைக்கத் தெரியாத பயலா இருக்க?”
“நீ அம்மா தானே எனக்கு? காசுக்கு என்னை வில பேசுர. இப்படிப் பணத்துக்கு ஆசை பட்டு நான் ஒவ்வொருத்தி கூட குடும்பம் நடத்தினா அதுக்கு குடும்பம் நடத்திரதுனு பேரு இல்ல. அதுக்கு வேற பேரு இருக்கு. என்ன பார்த்தா உனக்கு அப்படி தான் தெரியுதா? என்னை கேவல படுத்தனும்னு ஒரு முடிவுல இருக்கியா?
உன் பேச்ச கேட்டு இவள அனுபினா.. அவ வாழ்க்கை பத்தி யோசிச்சியா? ஒரு பொண்ணுக்கு துரோகம் செய்ய சொல்லறியே.. கொஞ்சமாவது ஈவு இறக்கம் இருக்க உனக்கு?”
“என்னமோ நல்லவளை அனுப்பச் சொன்ன மாதரி நியாயம் பேசர..? அவ லட்சணம் தெரியாதா? அவ தான் உன் தம்பிக்கே வல விரிச்சவ ஆச்சே..”
அவனுக்கு பொறுமை எல்லாம் கரைய ஆரம்பித்தது.. “என்னைக் கேவல படுத்தர நீ.. அம்மு என் மனைவி. அம்மு பேர நீ கெடுக்கும் போது கூடவே என் பேரையும் கெடுக்கர அத நினைவில வச்சுக்கோ… அசிங்கமா பேசாதா…”
“நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைல.. நீ வசந்து கிட்ட கேளு.. நம்ம வீட்டுல இருக்கும் போது அவ அடுக்களையில ஏன் கிடந்தானு?  அவன் மட்டும் இவ நல்லவனு சொல்லட்டும் நான் வாய் திறக்கலை! இவளே என் மருமகளா இருக்கட்டும்”
“நான் ராமனும் இல்ல… என் பொண்டாட்டி சீதையும் இல்ல… அவ யாருக்காகவும் தீ குளிக்க மாட்டா. தீ குளிச்சா தான் நீ அவள உன் மருமகளா ஏத்துப்பேனா… அப்படிப் பட்ட நீ எனக்கு வேண்டவே வேண்டாம்.”
இதற்கு மேல் பேச ஏதும் இல்லை என்பது போல் அவன் வாசலை நோக்கி நடக்க.. மங்களத்தால் அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்ன சொன்னாலும் கேட்டுவிட்டு சும்மா போகும் மகனா இவன்… அவர் பின்வாங்கத் தயாராயில்லை.
“நான் சொல்றது சத்தியம். இன்னைக்கு கூட நீ வீட்டில இல்லாத நேரம் போனா டா.. எங்கேயோ போய்டு தான் வந்தா.. நீ இருக்கும் போது நல்லவ மாதரி இருக்கா… உன் தலை மறைஞ்சதும் எவனையோ பார்க்க கிளம்பிடுரா?”
மகளுக்கு பால் காய்க்க வந்த பாரதி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தாள். படுத்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் மகன் தூங்கிவிட, இரவு ஒழுங்காய் உண்ணாததால் பசிக்கவும் அடுக்களைக்கு வந்த அமுதாவும் பேச்சு சத்தம் கேட்கவும் வாசலில் நின்று கொண்டாள்.
மறைந்தெல்லாம் நிற்கவில்லை. மங்களம் கவனிக்கவில்லை. அர்ஜுன் அவளுக்கு முதுகை காட்டிக்கொண்டிருக்கவே அவள் இருப்பது தெரியவில்லை.
கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு மயக்கமே வந்துவிட்டது. இப்படி தான் மகனுக்கு விஷம் கலக்கிக் கொடுத்தாரா… அதனால் தான் அர்ஜுன் அன்று இப்படி எல்லாம் பேசினாரா? அம்முவிற்கு எப்படியோ போல் ஆகிவிட்டது. தினம் தினம் தீ குளித்தாலும் இவரைத் திருப்திப்படுத்த முடியாதே..
பால் காய நின்று கொண்டிருந்த பாரதிக்குமே ‘ச்சீ.. என்ன பொம்பளை இது! இது திருந்தவே திருந்தாதா? இது பாவம் பூரா இது பெத்ததுங்க தலைமேலத் தானே.. ஒரு தரம் என் வயறில தங்காம போனது பத்தாதா?’ என்ற எண்ணம் தான்.
மகளை எந்த வித்தியாசமும் இல்லாமல் கொஞ்சிய அமுதா அவள் இதய ஆசனத்தில் ஏற்றி வைத்துவிட..  மாமியார் மேல் வெறுப்பு தான் வந்தது. இனி அவரோடு சேர்ந்து பேசினால் அடுத்து ஒன்று பிறந்தாலும் அதுவும் மூத்த மகள் போல் ஆகிவிடும் என்ற ஒரு பயம் ஒட்டிக் கொண்டதின் விளைவாய் கூட இருக்கலாம்.
இம்முறை அர்ஜுனால் அடக்கவே முடியவில்லை. கோபம் தலைக்கு ஏற ஆரம்பித்தது.
“நீ எனக்கு அம்மா ஆகிட்ட… அதனால் மட்டும் தான்.. நான் பேசரதுக்கு முன்னாலையே உன் கிட்ட மன்னிப்பு கேக்கறேன்.
சொல்லுமா.. அப்பா வெளியில போனதும் நீ இப்படி தான் கிளம்புவியா? அந்த பழக்க தோஷத்தில தான் என் பொண்டாட்டியை பேசரியா? நீ எப்படியோ எனக்குத் தெரியாது… ஆனா என் பொண்டாட்டிய எனக்கு நல்லாவே தெரியும்.
இதுக்கு மேல.. நீ ஒரு வார்த்த பேசினாலும்… என்னை மறந்திடு… உன் ரெண்டாவது மகன் செத்துட்டான்னு நினைச்சு தலை முழுகிட்டு ஒரேயடியா என் வாழ்கையில இருந்து போய்டு!”
கூறிவிட்டு அவன் உள்ளே நுழையவும் அடுக்களையில் சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தவன் சுள்ளென்று விழுந்தான். “இங்க என்ன பண்ற..”
“பால்..”
“போ.. போய் படு!” அவன் சத்தம் போட அவள் படுக்கச் சென்றுவிட்டாள்.
ஹாலில் டீவியைப் போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டான். அப்படி ஒரு எரிச்சல் அவனுள்.
இனி மகனிடம் பேசி பயனில்லை என்று புரிந்துவிட்டது. பின்னோடு வந்த மங்களம் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே போனார்.. “நல்லதுக்கு சொன்னா என் மேல பாயுது நான் பெத்த புள்ள.. ஒரு நாள் என் அருமை தெரியும்…” மகன் பேசியது எதுவும் அவர் காதில் ஏறியதா? இல்லை ஏறாதது போல் செல்கிறாரா? ஆனால் வருத்தம் என்ற ஒரு அம்சம் முகத்தில் துளியில்லை. 
“அவ ஒழுங்காவே சாப்பிடல அர்ஜுன்… இந்த பால குடுத்திடு” என்று ஒரு டம்ளர் பாலோடு வந்து நின்றாள் பாரதி.
மதனியின் முகம் பார்க்க, “சாரி அர்ஜுன். நான் அவள புரிஞ்சுக்காம ஏதேதோ பேசியிருக்கேன். மன்னிச்சிடு. உன்ன மாதரியே அவளுக்கும் நல்ல மனசு.. உனக்குத் தான் மாமியை தெரியுமே.. எதையும் நினைக்காம போய் படு.. அவட்ட இத குடுத்திடு”
பாலை அவனிடம் கொடுத்துவிட்டு அவள் செல்ல அறைக்குள் சென்றவன் “இந்தா” என்று அவளிடம் பாலை கொடுத்தக் கையோடு, தனியாய் குட்டி கட்டிலில் கொசுவலைக்குள் உறங்கிக் கொண்டிருந்த மகனைப் பார்த்துவிட்டு வந்து அவனிடத்தில் படுத்துக் கொண்டான்.
மாலை முதலே இன்றைய இரவுக்காக ஒரு எதிர்பார்ப்போடே அமுதா காத்திருக்க.. பொங்கி வந்த பாலில் நீர் தெளிக்கப்பட்ட நிலையாய் படுத்துக்கொண்டாள்.
கட்டிலின் மறுபக்கம் கணவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்தவளைப் பார்த்தவன், “அம்மு.. நான் இங்க இருக்கேன்” என்று அவளுக்கு அவள் இடத்தை நினைவு படுத்தினான்.
திரும்பிப் படுத்தவள் அவன் முகம் நோக்க, அது எப்பொழுதும் போல் தான் இருந்தது.
“என்ன பாக்கர?” என்றான் புருவம் உயர்த்தி..
“கோபமா… வருத்தமா இல்லையா?”
சாய்வாய் அமர்ந்தவன் கையை அவளை நோக்கி விரித்து, “நீ அங்கேயே இருந்தா எல்லாம் வரும்.. வா என்ட்ட..” என்றதும்,
அவன் கைக்குள் அடங்கியவளுக்குச் சுனாமி உள்ளுக்குள்.. எப்படிச் சொல்ல.. முகம் முழுவதும் மலர்ச்சி… அவன் நெஞ்சோடு சேர்த்து வைத்திருக்கவே மனைவி முகம் தெரியவில்லை அவனுக்கு.
அவனுக்குள்ளும் உணர்வுகளின் எழுச்சிகள்..
“அம்மா பேசினது கேட்டியா?” குரலில் வலி…
“நீங்க பேசினதைக் கேட்டேன்..” அவள் குரலில் பெருமை..
“இப்படி தான் உங்கிட்ட பேசுவாங்களா.. முன்னெல்லாம்?” அவள் அன்று வாங்கிய பேச்சுக்கு இன்று வலித்தது அவனுக்கு.
அவன் வலி அவளுக்கு ஒரு சுகத்தைக் கொடுக்க… அவனுள் இன்னுமே ஒன்றிக் கொண்டாள்.
“முடிஞ்சு போன விஷயம்.. இப்போ எதுக்கு?” என்றாள் முகம் உயர்த்தி அவன் மகம் பார்த்து…
“எனக்கு உனக்கு நடந்த எதுவுமே தெரியல.. என்ன புருஷன் நான்? ரொம்ப அவமானமா இருக்கு…”
“பச்… விடுங்க… அத. இப்போ இருக்கத பார்ப்போமே…” அவன் கன்னம் வருட
அவள் உள்ளங்கையை அவன் உதட்டில் பொருத்தி, “இல்ல அம்மு எனக்கு தெரியணும்… உன்ன பத்தி, நீ இந்த ரெண்டு வருஷம் என்ன பண்ணின எல்லாம்..” என்றான்.
இதைத் தானே அவன் கேட்க மாட்டானா என்று ஏங்கினாள். வானம் திறந்து பூ மழை பொழிய.. அவள் உள்ளம் திறந்து கவலை எல்லாம் உடைய.. கண்வழியே நீர் பாய ஆரம்பித்தது. முதன் முதலாய் கணவனிடம் இதம் தேடியது அவள் மனம்.  
ஏக்கம் எல்லாம் போன இடம் தெரியவில்லை. ‘நீ போதும் எனக்கு’ என்று கணவனை காதலாய் கட்டிக் கொண்டாள்.

Advertisement