Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 9
 
“என்ன டா அம்மா                                                                         னு ஒருத்தி இருக்கது நினைவுல இருக்கா இல்லியா?” அர்ஜுனிடம் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த மங்களத்திற்கு மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி.
‘அச்சோ.. அவளுக்கே முடியல.. இவங்கள எங்க இருந்து சமாளிக்க? இப்போ தானே கொஞ்சமா கட்டிப்பிடிக்கவே ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ளவா..’ என்ற எண்ணம் தான் முதலில் வந்து போனது அர்ஜுன் மனதில்.
“வாங்க மா.. வாங்க மன்னி…” என்று உதறலோடு அழைத்தான்
அவர் மகனுக்கு மறுமணம் செய்வது பற்றிப் பேச வந்திருக்க… அவர் கண் எதிரில் அவரின் பூர்வ ஜென்ம வேலைக்காரி.. அவருக்கு அப்படி தான் தோன்றியது. போதாக் குறைக்கு.. அவளை அப்படியே உரித்து வைத்தார் போல் அவள் மடியில் ப்ரணவ்.
புது ஆள் வீட்டுக்குள் சத்தம் போட்டுக்கொண்டே வரவும் ப்ரணவ் ஓடிச்சென்று அம்மா மடியில் அமர்ந்து கொண்டிருந்தான். பயம் இல்லை… குண்டுக் குண்டு கன்னம் தொங்க.. சிப்பி வாய் கொஞ்சமாய் திறந்திருக்க.. பெரிதாய் விரிந்து பார்ப்பவரை, தன்னுள் இழுக்கும் பெரிய கண்களில் ஒரு ஆர்வ பார்வை மட்டுமே.
சிகப்பாய்.. குள்ளமாய்… உருண்டு திரண்டு.. பட்டுப் புடவையில் நடமாடும் நகைக் கடையை அவன் இது வரை பார்த்தது இல்லையே..
அமர்ந்திருந்தவளுக்கு அதற்கும் மேல் அதிர்ச்சி… வாந்தி எடுத்துச் சாவு வருவதற்குள் எமன் வந்துவிட்டானா?
அவள் அதிர்ச்சியிலிருந்து மீண்டால் தானே வீட்டிற்கு வந்தவர்களை ‘வா’ என்று அழைக்க!
அப்படியே மிரண்ட பார்வையோடு அமர்ந்திருந்தாள்.
“டேய்.. இவ இங்க என்னடா பண்றா..?” கத்தியே விட்டார் மங்களம்.
ப்ரணவ் பயந்துவிட்டான். நகைக் கடை முகத்தில் அப்படி ஒரு கோபம்..
மடியின் நின்றுகொண்டு அம்மா தோளில் முகம் புதைத்துக் கொண்டது குழந்தை.
“பச்…. உள்ள வா மா,..” என்று கூறிக்கொண்டே அமுதாவைத் தான் பார்த்தான்.
மகன் பயந்துவிட்டது பார்த்தாலே தெரிந்தது. அமுதா முகத்தில் உணர்ச்சி இல்லை.  
மீண்டும் அவர் “டேய்..” என்று ஆரம்பிக்கவும்,
“அம்மா.. இப்ப எதுக்கு கத்தர? அவ வீட்டுல வந்துட்டு அவ இங்க என்ன பண்றானு என்ன கேள்வி இது?” என்றான் அவன் பங்கிற்கு. தாய்க்கு மகன் சளைத்தவன் இல்லை போலும்.
அம்முவிடம் சென்றவன் குழந்தையை வாங்கி தோளில் போட்டுக் கொண்டே, “என்ன பண்ற பாருமா.. வந்ததும் வராததுமா குழந்தைய பயமுறுத்திகிட்டு!”
கணவன் கை அவள் மேனியில் பட்டதும், சுதாரித்துக் கொண்டவள் எழுந்து, “வாங்க.. வாங்க..” என்று வந்த இருவரையும் பார்த்து கூற,
“நீ யாருடியம்மா.. என் வீட்டுல என்னை வானு சொல்றது…” என்று கடுகடுத்தார்.
அம்மு அர்ஜுனைத் தான் பார்த்தாள். அவனுக்குமே தெரியவில்லை இந்த பேச்சுகளை எப்படி எதிர்கொள்ளவேண்டுமென்று. வழக்கமாய் தனித்தனியே தான் காய்வார்… இன்று கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டார் மங்களம்.
“சரி.. அம்மு நீ உக்காரு.. அவங்க வீட்டுல அவங்க என்ன வேணுமோ செஞ்சுக்கட்டும்” என்று அவன் விட்ட வேலையை தொடரப் போனான்.
சிறிது நேரம் நின்று பார்த்தவள் மீண்டும் அப்படியே அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்ததும், அவளையே பார்த்துக்கொண்டிருந்த பாரதியின் மகள், நிவேதா, ஓடிச் சென்று அவள் மடியில் அமர்ந்து கொண்டு, “சித்தி” என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
வயது ஐந்து… பார்த்தால் மூன்று வயதுக் குழந்தை போல் இருந்தது. மெலிதாய் காற்றுபோல்…
பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே பெரிய அதிர்ச்சி. நிவி யாரிடமும் போகமாட்டாள். பாரதியைத் தவிர. இரண்டு வருடம் முன் அம்மு பழக்கம்.. இன்னுமா அவள் நினைவில் அமுதா? ஆச்சரியம் தான்! இத்தனைக்கும் மற்ற குழந்தைகள் போல் இல்லை, வளர்ச்சியில் கொஞ்சம் குறைபாடு..
போதாக் குறைக்கு ஏதோ சரும பிரச்சினை வந்திருக்கவே உடலில் சிறு சிறு கட்டிகள்.. சிலது புண்ணாய் மாறியிருக்க பார்ப்பவர் தூக்க விரும்பமாட்டார்கள். ஏன் மங்களமே தூக்க மாட்டார்.
அம்மு ‘தூர போ’ என்று சொல்லிவிட்டால் குழந்தை மனநிலை என்ன ஆகுமோ என்று பாரதிக்கு ஒரே படபடப்பு… அமுதா சொல்லுமுன், “நிவி வா” என்று தூக்கப் போக… அவள் சித்தி கழுத்தை இன்னும் இறுக்கிக் கட்டிக் கொள்ள… அம்மு அவளைக் கட்டிக்கொண்டு.. ”இருக்கட்டுமே..” என்றாள் வேண்டுதலாய்.
பாரதிக்கு எப்படியோ போல் ஆகிவிட்டது. ஒரு திருமணத்திற்காக மாமியாரும் மருமகளும் வந்திருக்க… நிவியை மாமியார் பார்த்துகொள்ளவே இல்லை. இரண்டு நிமிடம் கூட அவர் பேத்தியை தூக்கவில்லை…  
இந்த மாமியாரோடு சேர்ந்துகொண்டு தானே இவளை பற்றி இல்லாததும் போல்லாததுமாய் சொல்லி ஒரு குடும்பத்தை பிரித்தாள். ஆண்டவன் என்று ஒருவன் இருக்கவே தான், இன்று அம்முவும் அர்ஜுனும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்று தோன்றியது. 
அவன் அம்மா மடியில் ஒரு புது நபரை பார்த்த ப்ரணவ் அப்பாவை விட்டு அம்மாவை நோக்கி வந்தான். ஒரு பக்கம் நிவி இருக்க… அடுத்த தொடையில் அவன் அமர்ந்து கொண்டான்… 
அது அவன் அம்மா என்பதை உணர்த்த விரும்பினான் போலும்..”ம்மா..” என்று கன்னம் வருடி, அம்முவிற்கு முத்தம் வைத்தான். பார்த்த நிவிக்கும் பிடித்து போக..”ம்மா” என்று அதையே சொல்லி மருகன்னத்தில் முத்தம் வைத்தது குழந்தை.
ப்ரணவ் அம்மா மடியில் இருந்துகொண்டே, “குத்திமா ம்மா..” என்றுவிட்டு அவள் நெஞ்சில் சாயா.. நிவிக்கு ஏதோ புரிந்தது. “நிவி பாப்பா சித்தி” என்று அவளும் அம்மூவின் மார்பில் சாய்ந்து கொண்டாள். 
இரண்டு பிள்ளைகளையும் அணைத்து கொண்டவள் இருவர் உக்சந்தலையிலும் முத்தம் கொடுக்க.. பார்க்கவே அத்தனை அழகு… பாரதிக்கு கண்ணீர் வந்துவிடுவா என்று முட்டிக்கொண்டு வந்தது.
இரண்டரை வருடம் மும் நிவி இப்படி இல்லை. அவளை அடக்க முடியாது. கோபம் வரும்.. பாரதியிடமும் மங்களமிடம்மும் தான் போவாள். கோபம் வரும் நேரம் கடித்து பிய்த்துவிடுவாள் இல்லை பிராண்டி விடுவாள். அன்நேரங்களில் மங்களம் அடித்துவிடுவார். அம்மு வந்தபின் கொஞ்சம் கொஞ்சமாய் அம்முவோடு பழக ஆரம்பித்தாள். அம்முவையும் சளைக்காமல் கடிப்பாள்.. இருந்தாலும் அம்மு அவளை கடிந்ததோ அடித்ததோ இல்லை. அம்முவை இழுத்துக்கொண்டு மங்களம் வெளியில் தள்ள.. அவளுக்காக இரண்டு நாள் அழுத ஓரே ஜீவன் நிவி மட்டும் தான்!
மாற்றி மாற்றி உரிமை போட்டி எல்லாம் கொஞ்சம் நேரம் தான்… குழந்தைகள் இருவரும் சேர்ந்து விளையாட ஆர்ம்பித்து விட்டனர். நிவியை பற்றி அம்மு விசாரிக்க, பாரதி அம்முவோடு ஒரு சுமூக உறவை ஏற்படுத்தும் எண்ணத்தோடு நல்ல முறையில் பேச ஆரம்பித்துவிட்டாள். செய்தபாவம் அடுத்த கருவை வயிற்றில் தங்கவிடவில்லை,  என்பது பாரதி உணர்ந்துகொண்டது. 
பாரதியும் அமுதாவும் மத்திய உணவை தயார் படுத்த, அர்ஜுன் பிள்ளைகளை பார்த்து கொள்ள மங்களத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. வீடு சிறிதாயிருக்க.. அமுதாவிடம் அதிகாரம் செய்ய முடியாது. அர்ஜுன் காய்வான். அர்ஜுனிடம் பற்ற வைக்க முடியாது அவளைப் பற்றி.. தனிமை கிடைக்கக் காத்திருந்தார்.
அன்று மாலையே அர்ஜுன் வெளியே செல்ல நேர்ந்தது. பிரச்சனை கிளப்ப நினைத்துக் கொண்டிருந்த மங்களத்திற்கு மகன் வெளியே சென்றது தெரியாமல் பயண களைப்பில் உறங்கி விட்டார்.
“அமுதா.. எனக்கு அலைச்சல்ல ரெண்டு நாள் கழிச்சு வர வேண்டிய விருந்தாளி இன்னைக்கே வந்திடுச்சு… நான் பிபேர்டா வரல… உன் கிட்ட இருக்கா?” என்று பாரதி வந்து நின்றாள்.
“ஒன்னே ஒன்னு இருக்குகா.. இப்போ இத வச்குக்கோங்க…. நான் அவர் வந்ததும் அவர் கூடப் போய் வாங்கிட்டு வரேன்..” என்றவளுக்கு உள்ளே மணி அடித்தது.
கடைசியாக அவளுக்கு வந்த நாள் கணக்கைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. உடனே தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் தலைக்கேற..
“அக்கா.. நான் ஃபார்மசி போய்ட்டு வரேன்…” என்றவள் தூங்கிக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவள் வீட்டிற்கு வரும்முன் மங்களம் எழுந்து ஒரு மூச்சுக்குக் கத்த… சத்தத்தில் ப்ரணவ் அழ.. அவன் அழவும் நிவி அழ.. பாரதிக்கு யாரை தூக்கவென்று தெரியவில்லை.
வீட்டிற்கு வந்த அர்ஜுனுக்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவே போதும் போதும் என்றாகி விட்டது.
மங்களம் நினைத்த தருணம் கிடைத்தது.
“இந்த பையன் யாருடா…?
ஃபோட்டோல இருக்கவ பிள்ளனு தானே சொன்ன? அப்போவே நினைச்சேன் அவ்வளவு சிகப்பா இருக்கவளுக்கு எப்படி இப்படின்னு?  ஃபோட்டோல தொங்கரவளோடைய புள்ள இல்லியா இது? போன தரம் நான் பாக்கும்போது இவ இல்லியே… இவ தான் எவனுக்கோ பெத்துட்டு உன்ட்ட வந்திருக்காளா? ஓடுகாலி!” ஆரம்பமே இப்படி தான் இருந்தது.
அமுதாவை அப்படிக் கூறிவிட்டாலும் அவருக்கு அவள் நடத்தையில் எல்லாம் சந்தேகம் இல்லை. அவள் அப்படிப் பட்டவள் என்ற மாயையை அர்ஜுனுக்கு கிளப்பியவரே அவர் தானே. அவருக்கு, ப்ரணவ் அர்ஜுனுக்கும் அம்முவிற்கும் பிறந்திருக்குமோ என்ற சந்தேகம்.. தீர்த்துக் கொள்ள ஆசை.
மகன் அழுகையை நிறுத்த பாடுபட்டுக் கொண்டிருந்தவனுக்கு இது எதுவுமே செவிப்பறையை அடையவில்லை. ப்ரணவ் சத்தம் அப்படி!
ஓரு வழியாய் அவனை சமாதானம் செய்து நிவியோடு வெளி வராண்டாவில் விட, பிள்ளைகள் விளையாட ஆரம்பித்தது, பாரதி மேற்பார்வையில்.
“அவ இங்க என்னடா பண்றா?” மீண்டும் ஆரம்பித்தார்
“பச்… யாருமா?” சலிப்பாய் ஒரு கேள்வி..
“அந்த ஓடு காலி தான்” கடித்து துப்பினார் மங்களம்.
“அவ ஓடினாளா இல்ல நீ தான் தொரத்தினியா? சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத.. அவ இப்போ என்னோட மனைவி! உனக்கு என்ன தான் பிரச்சினை?” எரிந்து விழுந்தான்.
“ஓ… என்னை பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லி குடுத்திருக்காளா?” என்று ஆரம்பித்து ஒரு பாட்டை ஸ்ருதி குறையாமல் பாடி முடித்தார். கேட்க முடியாமல் நிவியையும் ப்ரணவையும் தூக்கி கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
இரவு உணவுக்காய் அமுதா கூப்பிடும் வரை கீழே வரவேயில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த அம்மாவை சமாளிக்க வேண்டுமோ என்ற எண்ணம் அவனுக்கு. அமுதாவை மருத்துவமனைக்கும் கூட்டி செல்லவில்லை. 
தினமும் இந்த வேளை அவள் சோர்வாய் அமர்ந்திருப்பாள். இன்று அதற்கு வழி இல்லை… அவள் வேலை செய்ய அவனுக்கு தான் சோர்வாய் போனது.
அம்மா போவதற்குள் ஏதேனும் பிரச்சினை செய்து உள்ளதையும் கெடுத்து விடுவாரோ என்ன பயம் வந்துவிட்டது. பெற்றவளை ‘போ’வென்றோ ‘வாயை மூடு’ என்றோ சொல்லவும் முடியாது. மற்றவர்களுக்கு எப்படியோ… அவனை மங்களம் நல்ல முறையில் வளர்த்தார்.. தேனும் பாலும் ஊட்டி, அவருக்கு தெரிந்த அளவில் பாசம் காட்டி.. ஒரு அம்மாவாய் அவரிடம் குறை ஏதும் கண்டுபிடிக்க முடியாது. 
அம்மா.. அவரை நோகடிக்க அவனால் முடியவே முடியாது. எத்தனை தூங்கா இரவு அவனால்.. ஒரு நாள் முகம் சுழித்தது இல்லை. கடைகுட்டி என்றதால் அரிஜுன் ஐந்து வயது எட்டிய போதும் அவரை தூங்கவிடாமல் அவர் அணைப்பில் தூங்கியிருக்கிறான். அம்மா கையால் மட்டுமே சாப்பிடுவான். அவர் ஏதாவது அவர் வாயில் வைக்க போனாலும் அவன் அவர் கை பார்த்தாலே அது அவன் வாய்க்குத் தான். அவன் அம்மா அவனுக்கு என்றுமே பாசத்தின் மறுபிறப்பு தான்.
அவனிடம் இத்தனை அன்பு கொண்டவருக்கு அவன் மனைவி பிடித்தமில்லை. நித்தம் நித்தம் அவன் மனைவியை நோகடித்தால்… அவன் மனமும் அல்லவா பாடு படுகிறது?
அம்முவும் இப்பொழுது தான் இவன் முகம் பார்க்க ஆரம்பித்திருக்கிறாள். அவள் கண்ணில் வலியெல்லாம் வடிந்து வெறும் களைப்பு மட்டும் தான்… ஆனால் அம்மா அவளை சும்மா விடுவதாய் தெரியவில்லை.
இருதலைக் கொள்ளியின் நிலை தான், அர்ஜுனுக்கு.

Advertisement