Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 4
“டேய் வாலு பையா.. நில்லு டா..” அமுதா அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தாள் ‘கக்கப் பிக்க’ என்று சிரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ப்ரணவோடு. ஒரு ஜோடி கண்கள் அவள் பின்னோடு ஆசையாய் ஓடிக்கொண்டிருந்தது.
ப்ரணவ் கொஞ்சம் புஷ்டி ஆகி இருந்தான். குட்டி தொப்பையும்.. நிமிர்ந்து நிற்க முடியாமல் தொங்கிய அழகு கன்னமும்… பார்ப்பவர் உள்ளம் கொள்ளை கொள்ளும்.
அந்த குட்டி தொப்பையில் முத்தம் கொடுப்பதில் அமுதாவிற்கு கொள்ளை இஷ்டம்.. அவனுக்கு கூசும். ஒரு முத்தத்திற்கு அவன் பின்னே ஓட வேண்டும்.. முத்தம் முடியும் முன் அவள் மல்லிகை சரத்தில் நார் மட்டும் தான் மிஞ்சும்! ஒரு போராட்டமே நடக்கும் இருவருக்கும்.
அவள் முத்தம் கொடுக்க.. அதோடு நிறுத்தாமல் உதடு குவித்து அவன் குட்டி தொப்பையில் சத்தம் எழுப்ப.. அவன் அப்படிச் சிரிப்பான்… மழலை சிரிப்பு யாருக்கு தான் பிடிக்காது?
மேசை மீது அவனை அமர்த்தி அவன் தலை வார.. இன்று அவள் குட்டி மகனுக்கு என்ன தோன்றியதோ.. அவள் புடவையை விலக்கி அவள் வயிற்றைக் கடித்துவிட்டு இறங்கி ஓட.. அவள் துரத்த.. அங்கு ஒரே ‘கக்கப் பிக்க’ சிரிப்பு மழை!
“ம்மா.. நேனா… நேனா..” எனக் கைகொட்டி அவன் அரிசிப் பல் தெரியச் சிரித்துக் கொண்டே ஓட அவள் அவன் பின் ஓடிக் கொண்டிருந்தாள். அம்மா மகனாய் முற்றிலும் மாறிப் போயிருந்தனர். இன்று வைஷ்ணவி வெறும் புகைப்படத்தில் மட்டுமே.
இப்பொழுதெல்லாம் அர்ஜுனுக்கும் ஆசை அம்மா மகனோடு தானும் விளையாட வேண்டுமென்று.
“ப்பா.. சூக்கு..” என்று காலை கட்டி கொண்ட மகனை அர்ஜுன் தூக்க..
“அப்பாட்ட போனா தப்பிக்க முடியும்னு யார் டா சொன்ன…” வரேன் இரு…
அவள் ப்ரணவை பிடிக்க கை நீட்ட.. இவன், மகனை அவளிடமிருந்து காப்பாற்ற இப்படியும் அப்படியுமாய் திரும்ப.. மகன் கை கொட்டி சிரிக்க… இவள் உடல், அவள் உணராமல் அர்ஜுனை உரைய.. அர்ஜுன் இந்த உலகில் இல்லை.
இன்று தான் இவர்கள் விளையாட்டில் முதல் முறையாய் அவனும் இணைந்து கொண்டது.
மற்றபடி வெறும் பார்வையாளன் மட்டுமே.. ஆசையாய் பார்த்து அமர்ந்திருப்பான்… அவளின் ஒவ்வொரு அசைவையும்.. கண்குளிர..
சனி ஞாயிறானால் அது தான் அர்ஜுனின் ஒரே வேலை. அவளும் அதைக் கவனிக்கத் தான் செய்தாள்.
அவனிடம் ஒன்றும் கேட்க முடியாது. ‘ஆமா.. பாக்கறேன்.. இப்போ என்ன?’ என்பான். அதனாலேயே அவள் கண்டுக் கொண்டதாய் காட்டிக் கொள்ளவில்லை. 
அவன் மேல் அவள் வைத்திருந்த அபிப்பிராயமும் மாறிப்போயிருந்தது.
கொஞ்ச நாளில் அவன் பார்வை அவளுடையதாக மாற்றிக்கொண்டாள். அவனைப் போல் நேராக இல்லை.. கொஞ்சம் கள்ளத்தனமாய் அவனை ரசித்தாள். வேண்டுமென்றே அவன் மாடியில் உடற்பயிற்சி செய்யும் வேளை துணி காயப் போடுவாள்.
மகன் அப்பாவோடு விளையாடும் வேளை அவனுக்கு ஏதாவது கொடுக்கவென்று ஒரு ஓரம் நின்று கொள்வாள்.
தொலைக்காட்சியைப் பார்த்து அர்ஜுன் சிரிக்க, அவன் சிரிப்பில் அவள் தொலைவாள். கொஞ்சம் கொஞ்சமாய் அவளை அவனுக்குள் தொலைக்க ஆரம்பித்தாள்.
கோவிலுக்கு குடும்பமாய் சென்றனர். பூ விற்ற பெண்மணி.. “இவ்வளவு போதுமா பா? உன் பொஞ்சாதி முடி நீளத்துக்கு இன்னும் நாலு மொழம் வாங்கிக்கோ” என்றாள். அவன் மறுப்பாய் ஒரு வார்த்தை பேசவில்லை. பூ வாங்கி அவள் கண் பார்த்துக் கொடுத்தான். அவளுக்கு வாங்கப் பயம்.
“வச்சு விடவா?” என்றான்.
“ம்ம்ஹூம்” என்று விழித்தாள்.
அவள் கையை பிடித்து கையில் வைத்தான்.
“நான் எது கொடுத்தாலும் வாங்கணும்..” என்றான்.
“ஏனாம்?” என்று கேட்டு நின்றாள்.
“ஏனா.. நான் தான் உன் ‘சர்’ ஆச்சே.. நான் என்ன சொன்னாலும் கேப்பனு சொன்ன!”
விழி சிரிக்க வாங்கி சூடிக் கொண்டாள்.
அவன் ‘அம்மு’வில் குழைவு தெரிந்தது. பார்வையில் ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தது.
அவள் கட்டுப்பாடும் தவுடு பொடியாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். இன்னும் எத்தனை நாள் தள்ளியிருக்க முடியும் அதுவும் ஒரே வீட்டில்?
அன்றும் அப்படி தான் அவளையே அவன் பார்வை தொடர, அவளால் முடியவில்லை. இதை இன்றே பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டாள்.
ஆனால் தைரியம் வரவில்லை. ‘என் கண் நான் பார்க்கிறேன்.. அதற்கு என்ன?’ என்றுவிட்டால்?
அர்ஜுன் நினைத்தால், நினைத்ததை முடித்துவிடுவான். தள்ளிப் போடும் பழக்கம் எல்லாம் இல்லை. அவனே ஒன்றும் சொல்லாத போது அவள் வாயை எப்படித் திறப்பாள்?
காபி வேண்டி, “அம்மு” என்றான் மத்திய தூக்கம் களைந்து சோஃபாவை நோக்கி சென்றவன். அவளும் அப்பொழுது தான் எழுந்து வெளி வந்து கொண்டிருந்தாள். முடியைத் தூக்கி கொண்டை போட்டுக்கொண்டே அவன் முன் வந்தவள் தூக்கக் கலக்கத்தில் ‘சர்’-ரை மறந்திருந்தாள்.
“என்னங்க..?” என்று வந்து நின்றாள்.
அவனிடம் பதிலில்லாமல் போகவே அவன் முகம் பார்க்க, அவன் பார்வை நிலைத்த இடம்.. கையை சட்டென்று இறக்க.. இன்னுமே மோசமான நிலை. ஓட்டமும் நடையுமாய் ஹாளின் ஓரத்திலிருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். கண்ணாடியில் தன் நிலை பார்த்தவள் தன்னையே நொந்துகொண்டாள்.
இனி எப்படி அவன் முகத்தில் முழிப்பாள்? தன்னை என்ன நினைத்திருப்பான்? ஏற்கனவே அவனிடம் அவளுக்கு நல்ல பெயர்!
“என்ன டி.. எப்படி என் மகனை இதையும் அதையும் காமிச்சு வளைச்சுப் போடாலாம்னு கனவு கண்டுட்டு நிக்கரியோ? இழுத்து மூடிட்டு போய் வேலையை பாரு.. குப்ப.. குப்பத்தொட்டில தான் இருக்கணும்.. நீ குப்ப மறந்திடாத!” துணி கல்லில் துணி துவைக்கும் போது இடுப்பில் சொருவிய புடவைக்கு வாங்கியது இது! வீட்டில் துவைக்கும் இயந்திரம் இருந்தாலும் அனைவர் துணியும் இவள் தான் துவைக்க வேண்டும்.
“உன் ஆத்தா.. எதைக் காட்டி எப்படி மயக்கணும்னு சொல்லி குடுத்து தான் உன்ன வளத்தாளா?…” வீட்டைத் துடைக்கும் பொழுது தெரிந்த இடுப்பிற்கு வாங்கிய வசை.. இன்னும் மறக்காமல் நெஞ்சில் பச்சை குத்தியது போல்.. 
எப்பொழுது பேச்சு வாங்கினாலும் அது உடம்பை காட்டி வளைத்துப் போடுவதும்.. ஆண் சுகத்திற்கு ஏங்குவதுமாகவே இருக்கும்.. வருடங்கள் ஓடியபின்னும் அதை நினைக்கையில் நடுக்கம் நிற்கவில்லை. அவளைக் கூனி குறுக வைத்த பேச்சு.. அப்படி ஒரு பேச்சை இனிமேலும் கேட்க அவளுக்கு திராணி இல்லை.
தலை வாரினால்.. முகம் கழுவினால்.. பொட்டு வைத்தால்.. பூ வைத்தால்.. ஒரு புதியது உடுத்தினால்… எது செய்தாலும் அது அவள் எவனையாவது மயக்கத் தான்.
ஒரு ‘நாள்’ தள்ளி போய்விட்டால் அவள் தொலைந்தாள்.. “எவன் கூட படுத்து எழுந்த.. இல்ல நான் வீட்டில இல்லனதும் முந்தி விரிச்சுட்டியா என் மகனுக்கு? பெரியவனுக்கா? சின்னவனுக்கா?” என்பாள் இறக்கமே இல்லாமல்.
அந்த வீட்டு ஆண்பிள்ளைகள் முன் செல்லக் கூடாது.. மீறி சென்றால் அவள் கற்பை ஏலம் விடாத குறையாய் பேச்சிலேயே சூரையாடி விடுவாள் அந்த வீட்டு பெண்மணி! அதற்குப் பயந்தே ஓடி ஒளிந்துக் கொள்வாள், வீட்டில் ஆண்கள் இருக்கும் வேளை.
கால் பந்து கூட அவளை விட கொடுத்து வைத்தது. வெறும் உதை மட்டும் தான் அதற்கு! பெண்ணாய் பிறந்தது குற்றமா.. பதினேழு வயதிலேயே அங்கு மாட்டிக்கொண்டது அவள் குற்றமா? இது வரை அவளுக்கு விடை கிடைக்கவில்லை.
தினம் தினம் குத்தி கிழித்த வார்த்தைகள். அங்கிருந்து வரும் வரை ஒவ்வொரு நாளும் அவளை உயிரோடு கொன்ற வார்த்தைகள். வெறும் வார்த்தைகள் மட்டுமா? எவ்வளவு வேலை.. முதுகு ஒடிந்து கீழே விழும் வரை செய்யவேண்டும். அப்பொழுதும் வேலை கொடுப்பவளுக்கு ஆசை தீர்ந்தது கிடையாது.
சனி ஞாயிறானால் அவள் கதை அடுப்படியிலேயே முடிந்து விடும். அவள் அங்குச் சென்றதும் வேலைக்கு இருந்த இரண்டு வேலையாள் விடுப்பில் போனவர்கள் தான்.. மீண்டும் வரவே இல்லை.
“எவனை நினைச்சுட்டே தாளிச்ச.. கடுகு வெடிக்கவே இல்ல.. சாயங்காலம் வடைக்கு அரைச்சிடு… நீ பாட்டுக்கு க்ரைண்டர்ல போட்டுடாத.. ஆட்டு கல்லுல அரை அப்போ தான் உன் கொழுப்பு குறையும்..”
குறைந்து தான் போனாள். புசு புசு என்று வந்தவள், பதினைந்து கிலோ குறைந்து தான் போனாள். ஐந்தரை அடிக்கு மேல் உயரம்.. வெறும் நாற்பத்தி ஐந்து கிலோ எடையிருந்தாள் அங்கிருந்து வெளி வரும் வேளை… இன்னும் சில மாதங்கள் அங்கு இருந்திருந்தால் வெறும் கூடு தான் மிஞ்சி இருக்கும். 
இவள் வரும் வரை இந்த வேலையெல்லாம் யார் செய்தது? கேட்க பயம்.. போக்கிடம் இல்லாத அந்த வீட்டின் ஏழை அனாதை அடிமைக்குப் பேச உரிமை இல்லை.
“போர இடத்தில உன் துடுக்கு தனத்தைக் காட்டி திரும்பவும் இங்க வந்து நிக்காத.. ஒத்த ஆளா சாக கிடக்கர உன் அப்பாவ பாக்கணும்.. எனக்கும் உடம்பு முடியல! எதனாலும் பார்த்து பக்குவமா இருந்துக்கோ கண்ணு.. என்ன சொன்னாலும் பொறுத்துக்கோ…” அவள் அம்மா கூறி தான் அங்கு அனுப்பினாள், மீண்டும் வீட்டிற்கு செல்ல முடியாது.
காலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் வேலை.. இறவு பதினொன்று ஆகிவிடும் அவள் வேலை முடிய. விடிய விடிய அடுக்களையில் சமைத்தாலும் அவள் வயிற்றிற்கு முன்தின பழையது மட்டுமே.. அந்த வீட்டு நாய் கூட தினமும் புதிதாய் சமைத்த மாட்டுக் கறி தின்றது.. தனி வீட்டில் வசித்தது. தினமும் குளித்து பளிச்சென்று இருந்தது.
வேலை முடிந்தால் வியர்வை நீங்க குளிக்கவெல்லாம் கூடாது. “பதினோரு மணிக்கு குளிச்சுட்டு என் மவனை மயக்கவா?” என்பாள். அடுத்தநாள் ஆண்கள் வேலைக்கு சென்றபின் தான் குளியலறைக்கு அனுமதி.. ஹப்பப்பா.. என்னென்ன சட்ட திட்டங்கள்!!
நிம்மதியாய் ஒரு நாள் கண்ணயர்ந்திருப்பாளா? கண்ணால் துயிலுரியும் துச்சாதனன்.. சொந்தம் என்ற பெயரில் அந்த வீட்டில் ஒருவன் சுற்றித் திரிந்தது, ஏன் ஒருவர் கண்ணிலும் பட்டது இல்லை? இவளை அவன் தொட்டாலும் கேட்க நாதி இல்லை என்ற தைரியத்தில் அவன் அவளை வார்த்தையாலும் பார்வையாலும் படுத்திய பாடு கொஞ்சமா? யாரிடம் அந்த அவலத்தை சொல்ல முடியும்? கேட்பாறற்று அனாதையாய்.. எத்தனை இரவுகள் அவனுக்குப் பயந்து தூக்கமில்லாமல் அழுதிருப்பாள். இரவில் தனியாய் வீட்டின் ஒதுக்குப்புறத்தில்! எப்பொழுது வாருவானோ.. என்ன செய்வானோ.. என்ற நடுக்கம் அவளை நிம்மதியாய் விட்டதே இல்லை. அன்று அவளுக்காக ஒருவர் கூட அங்கிருக்கவில்லையே..
எல்லாம் நினைவில் வந்தது. உதடு துடிக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“அம்மு..” அர்ஜுன் குளியலறை கதவைத் தட்டி நின்றான்.
முகம் கழுவி வெளி வந்தவள் அர்ஜுன் முகம் பார்க்கவில்லை. அவன் துண்டை நீட்ட வாங்கிக் கொண்டு அடுக்களைச் சென்றாள். அவன் மேல் எழுந்த ஆசை எல்லாம் ஆசிட் பட்டுக் கருகியது.
போதுமடா சாமி.. மீண்டும் ஒரு முறை இது போல் அமில சொற்கள் கேட்க முடியது.. மூளை எச்சரித்தது. ‘அர்ஜுன் வேண்டாம் என் வாழ்வில்’ சொல்லிக்கொண்டாள். 
அடுப்பை பற்ற வைக்காமலே.. பாலை ஊற்றி.. அது கொதிக்க காத்திருந்தாள். கை கால் நடுக்கம் நீங்கவில்லை.
‘ஐயோ… நினைவுகளை அழிக்க அழிப்பானே இல்லையா? எனக்கும் குடும்ப வாழ்விற்கும் ராசி இல்லையா?’ கண் வரை முட்டிக்கொண்டு வந்த அழுகையை உள்ளிழுத்து கொண்டாள்.
நேரமாகியும் அவள் வெளிவராமல் இருக்கவே அர்ஜுன் அடுக்களைக்குள் வந்தான். அவன் வரவுமே இதயம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
அவன் கை, அவள் இடை உராய அடுப்பைப் பற்றவைத்தான். சிலையாய் அவள் சமைந்து நிற்க, அவள் தோள் தொட்டு அவன் பக்கமாய் திருப்ப அவள் தலை நிமிரவில்லை.
“அம்மு”
“..”
“கூப்பிட்டா முகம் பார்க்கணும்!” அவன் கண்டிப்பான தோரணை அவள் முகம் உயரச் செய்தது. அவன் கண் பார்க்க திராணி இல்லை.
அவள் நாடி பிடித்து உயர்த்தி, “பச்.. நீ என்னைப் பார்த்தா தானே நான் பேச முடியும்..” என்றான்
அவள் கண் உயர்த்தி அவனைப் பார்த்தவள் முகத்தில் அப்பட்டமான பயம். அவன் முகம் பார்க்கவும் என்ன நினைத்தாளோ கை கூப்பி, “சத்தியமா நான் கவனிக்கல.. தூக்க கலக்கத்தில எழுந்து அப்படியே வந்துட்டேன்.. ரொம்ப சாரிங்க. இனி மேல் ஒழுங்கா பின் குத்திட்டு தான் வருவேன்.. நான் சத்தியமா அப்படி பட்டவ இல்ல.. நான் வேணும்னு செய்யலங்க.. மயக்க எல்லாம் நினைக்கவே இல்ல..” என்றாள்.
என்ன பேச்சிது? அவனுக்குள் ஏதோ செய்தது. நடுங்கிக்கொண்டிருந்த கையை பிடித்தவன், “என்ன மா பேசர.. யார் கிட்ட.. என் கிட்ட இப்படி பேசுவியா? ஏன்?” என்று பதிலுக்காய் அவள் முகம் பார்த்து நின்றான்.
நின்று கொண்டிருந்தவள் முகத்திலிருந்த ஒவ்வொரு தசையும் நடுங்க அழ முடியாமல் தவித்து நின்றாள்.
அவனுக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது.
“நீயா சொல்றியா? இல்ல யாராவது சொன்னதா?” கேட்டு நின்றான்.
உதடு துடிக்கப் பார்த்தாள்.. பதில் வெளிவரவில்லை. 
“சொல்லு அம்மு.. நான் உன்ன பார்த்தா அது என் தப்பு தானே? நீ எதுக்கு அப்படி பேசர?”
“நான்.. நான் தானே அப்படி உங்க முன்ன..? மயக்க எல்லாம் நினைக்கல” என்று எச்சில் விழுங்கினாள். என்றோ.. யாரோ விதைத்த வார்த்தைகளின் வலிகள், இன்று வார்த்தையாய்.. பயமாய்.. வெளியே விழுந்தது.
“நீ.. நீ தான்.. அதுக்கென்ன?
இது நான் தான்.. என் முன்ன தானே நின்ன அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? நியாயபடி பார்த்தா.. நான் உன்ன அப்படி பார்த்தா நீ வெட்கப்படனும்.. அழக்கூடாது! புரியுதா?”
என்ன புரிந்ததோ.. அப்படியே நின்றிருந்தாள்.
காய்ந்த பாலில் காபி கலக்கி இருவருக்குமாய் எடுத்து சென்றான். அவளுக்குக் கொடுத்து அவனும் குடிக்க அமர்ந்தான். இருவரும் ஒன்றும் பேசவில்லை. பல கேள்விகளுக்கான விடை கிடைத்தது போல் இருந்தது அவனுக்கு.
அவன் முகம் தெளிவு பட, புன்னகை பூசியது. அவளைப் பார்த்தான்,, காபியை வெறித்து அமர்ந்திருந்தாள்.
அர்ஜுன் கண் இருவரின் அனுமதியில்லாமலே அமுதாவை குடிக்க ஆரம்பித்தது. சிற்பி இவளைப் பார்த்தபின் தான் சிற்பம் செதுக்க நினைத்திருப்பானோ?
‘என்னையே பாக்க விடல.. சிற்பியை விட்டுடாலும்’ சத்தமாய் சிரித்தான். அவன் கண்ணோரம் ஒரு சொட்டு நீ எட்டிப் பார்க்கும்வரை சிரித்தான்.. காரணமே இல்லாமல்.    

Advertisement