Advertisement

“பாக்க லட்சணமா இருக்க.. நல்ல உத்தியோகம்.. கை நிறையச் சம்பளம்.. போதாக் குறைக்கு உன் பங்கு குடும்ப சொத்தே கோடிகள தாண்டிடும்.. அத பார்த்துத் தான் உன்ன கட்டிகிட்டா.. நீயே சொல்லு எத்தன நாள் உன் கூட பொண்டாட்டியா இருந்தா? பிடிச்சு கட்டிகிட்டா ஏன் நீ தூங்கர வரைக்கும் அடுக்களையே சுத்தி சுத்தி வாரா? நீ எழுந்துக்கரதுக்கு முன்னமே வெளில வந்திடுரா..  பாதி நாள் பாத்திரம் போடுர ரூம்ல தான் கிடக்குறா.. சொல்லு அர்ஜுன் அவ உன் பொண்டாட்டியா? அவள தொரத்தீடு.. நான் உனக்கு ஏத்தவளா.. நல்லவளா பார்த்து கட்டி வைக்கறேன்”.. இது திருமணம் முடிந்த இரண்டாம் மாதம்! இதை யார் சொன்னது? அம்மாவா பாட்டியா? அவன் நினைவில் இல்லை.. ஆக மொத்தம் அவனைத் தவிர அவன் மனைவியை அனைவரும் அறிந்திருந்தனர். அப்படி தான் தோன்றியது அவனுக்கு!
“டேய் போனவ கண்டிப்பா திரும்பி வருவா.. கொண்டு போனவன் ஆசை அடங்கினதும் கழட்டி விட்டுடுவான். திரும்பி வருவா பாரு.. உன் பணத்துக்காக அவ வந்தா.. காதல் கன்ராவினு திரும்பவும் அந்த நடத்த கெட்டவ கூட சேர்ந்து குடும்பம் நடத்த நினைச்சா, வீட்ட விட்டு வெளில போய்டணும்! அவ முகத்தில எங்களால முழிக்க முடியாது!” அம்மா திட்டவட்டமாய் கூறிவிட்டாள்..! மூன்றே மாதத்தில் அவள் சென்றதும் அம்மா கூறியது.
கோயம்புத்தூரில் பெரிய குடும்பம் அவனுடையது. கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சிற்றப்பா, சித்தி, சித்தி மகன், அண்ணா, அண்ணி, அண்ணன் குழந்தைகள் இருவர். என்று பெரிய கூட்டு குடும்பம். இவர்கள் இத்தனை பேர் இருந்து என்ன பயன்? இன்று தனி மரமாய் சென்னையில். 
ஒரே ஊரின் தனித் தனியாய் இருக்க முடியாதென்று இந்த சென்னை வாழ்க்கை!
‘பணம்.. பாதாளம் வரை பாயும். என்பது உண்மைதானோ.. உண்மை தான்!’ ஏதேதோ எண்ணங்கள் எப்பொழுது கண்ணயர்ந்தான் தெரியாது.
காலை சூரியன் தன் தங்க கரம் நீட்டித் துயில் கலையச் செய்தான். தலைக்கடியில் தலையணை. குளிருக்கு(?) இதமாய் போர்வை.. ‘அன்னம்!’ என்று மனது அன்னத்தைத் தேடியது. நேற்று எதுவும் யோசிக்கவில்லை. அன்னம் எப்படி இங்கே, அவர் மகள் என்ன ஆனாள்? ஆஸ்பத்திரியில் அவளுக்குத் துணையாய் இவர் இருக்க வேண்டாமா?
குளித்து முடித்து வந்தவனிடம் காபியை நீட்டிய அன்னம் ஒன்றும் சொல்லாமல் அடுக்களைக்குள் சென்றுவிட்டார். முகத்தில் அப்படி ஒரு சோர்வு, கண்களில் தூங்காத காளைப்பு.. 
மகனின் சத்தம் கேட்கவில்லை, உள்ளே சென்று பார்க்கக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் அவன் தூங்கியதே இல்லை. ‘என்னவெல்லாம் பேசிவிட்டேன்.. எனக்குப் பிறந்திருந்தால் இப்படிப் பேசி இருப்பேனா?’ கண்கள் கரித்துக்கொண்டு இரண்டு சொட்டு உப்பு நீர் எட்டிப் பார்த்தது. கண்ணீரோடு அவன் கர்வமும் கரைந்தது.
மகனின் நெற்றியில் முத்தம் பதிக்க அது கொதித்தது. மனம் கனத்தது. முதல் முதலாய் ஒருத்தியை அவன் கட்டியணைத்து நேற்று முத்தம் கொடுத்து அம்மா என்றது நினைவில் வந்து சென்றது.
இருவரும் ஒரே நிறம் என்பதால் ஈர்க்க பட்டுவிட்டானோ? அர்ஜுனுக்கு எப்படித் தெரியும் அந்த இரண்டு நாள் அவள் ப்ரணவை எப்படி கவனித்துக்கொண்டாள் என்று?
ஒய்யாரமாய் அவள் மார்பில் படுத்துக்கொண்டு அவன் பின்னலில் விளையாடியது.. எல்லாம் நினைவில் வந்து போனது.
‘அனுப்பியிருக்க கூடாதோ? அவள் எப்படிப் பட்டவளாய் இருந்தால் என்ன.. என் மகனுக்காகப் பொருத்து போயிருக்கவேண்டாமா?’ மனம் அவனையே கடிந்தது.
‘ஜுரத்திற்கு மருந்து தரவேண்டுமே’ அன்னத்தைக் காணச் சென்றான். அடுக்களை சுவரில் ஓய்ந்து அமர்ந்திருந்தார். அவர் நிலை இன்னும் பரிதாபமாய் இருந்தது.
‘சீதா.. சீதா என்ன ஆனாள்?’
“அன்னம்?” மென்மையாய் அழைத்தான்.
அரக்கப்பரக்க எழுந்தவரிடம்.. “எதுக்கு இப்படி.. பொறுமையா எழுந்திருக்கக் கூடாதா?”
“சொல்லுங்க தம்பி” என்று நின்றவரிடம் ‘எதற்கு வந்தேன்’ என்று நின்றுவிட்டான்.
“சீதா? என்ன அச்சு? குழந்தை பிறந்தாச்சா? ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? சாரி அன்னம்.. என்னால வர முடியலை!”
“ஏன் இப்படி எல்லாம் பேசுர ராசா? ஆம்பள புள்ள.. ரெண்டு பேரும் ஆஸ்பத்திரில தான் இருக்காங்க! நல்லா இருக்காங்க தம்பி.. நேத்து மத்தியமா அந்த பொண்ணு தான் எனக்கு ஃபோன் போட்டுச்சு.. ஏதோ அவசர விஷயமா போகவேண்டி வரவே கிளம்பிடுச்சாம்.. தனியா நீ கஷ்ட்ட படுவேனு என்னைக் கொஞ்சம் வந்து பாக்க சொல்லிச்சு!
அத கேட்டதும் என்னால எப்படி அங்க இருக்க முடியும் சொல்லு. சீதா சொல்லிடுச்சு அண்ணன போய் பாருமா.. என் மாமியார் என்னை பார்த்துப்பாங்கனு!”
‘ஓ.. அவ தான் சொன்னாளா? அவ்வளவு அக்கரையோ? அப்புறம் எதற்குப் போனாள்? நடிப்பு எல்லாம் நடிப்பு!’
“அந்த பொண்ணு.. அசராம வீட்டு வேல செய்யுது தம்பி.. குட்டி பையனை அவ்வளவு பிரியமா பார்த்துகுது. என்னமோ அவனுக்கும் அந்த பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு! அவனே அத அம்மானு கூப்பிட்டானா பாரேன்..
நான் நினைக்கிறேன்.. அது இங்க உன் கூட தனியா இருக்க சங்கட பட்டுட்டு போயிடுச்சுனு.. நான் போய் அதுட்ட பேசி கூட்டியாரட்டா? நல்ல பொண்ணு.. நம்ம நிலமைய சொன்னா புரிஞ்சுப்பா! நேத்து சாயங்காலமா ஆஸ்பத்திரி கூட வந்துச்சு.. சம்மந்தி அம்மா வர வரைக்கும் துணையா இருக்கேன்னு சொல்லி என்னை உடனே இங்க அனுப்பிடுச்சு! இல்லாட்டி நான் காலைல தான் வந்திருக்க முடியும்”   
தோற்றுவிட்ட உணர்வு.. வேரு வழி தெரியவில்லை.. நாளையாவது வேலைக்குச் செல்ல வேண்டும். பணம் கொடுப்பதால் அன்னம் என் அடிமை இல்லையே.. எனக்கு தான் குடும்பம் இல்லை அவராவது அவர் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா.. நான் கொஞ்சம் அவள் விஷயத்தில் விட்டுக் கொடுத்தால் எல்லாம் சரி ஆகிவிடும்.’
“அன்னம் ப்ரணவ தூக்கிட்டு வா.. நீ போய் சித்தாவ கவனிச்சுக்கோ.. அவங்க நம்பர் இருக்கில்ல..? நான் கூப்பிட்டுகறேன் அவங்கள”
நேரே அரசு மருத்துவ மனை நோக்கி கார் விரைந்தது. வாழ்வின் நிதர்சனத்தைச் சத்தமாய் உறைக்குமிடம்! எங்கும் கண்ணீரும் கவலையும்..
ஒரு பக்கம் இறப்பின் அழுகையின் கூக்குரல்.. மறுபக்கம் புதிதாய் பிறந்த சிசுவின் அழுகை. இரண்டிற்கும் நிரம்பவே வித்தியாசம் இருந்தது.
ஒருவன் தூங்க மற்றவர் அழுதனர்.. மழலை அழ மற்றவர் சிரித்தனர். நாம் கேட்டுப் பிறப்பதில்லை.. ஆசைப் பட்டு மரிப்பதில்லை.
ஏன் வந்தோம் எதற்கு வந்தோம் இன்றுவரை அது யாருக்குமே அறிவிக்கப் பட்டதில்லை. இருந்தும் மற்றவர் நமக்காக அழும் வரை எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
“அன்னம்.. ப்ரணவ வச்சுட்டு இங்கே இரு.. நான் சீத்தாவ பார்த்துட்டு வந்துடுறேன்.. அப்புறம் நீ போ..”
சீதா படுத்திருக்க, பக்கத்தில் புத்தம் புதிய புதையலும் உறங்க.. நாற்காலியில் அமர்ந்தவாறு கட்டிலோரம் தலை சாய்த்து தூங்கிகொண்டிந்தாள் கருங்குயில். அவன் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை. இரவு முழுவதும் இங்கா? ‘தனி அறை தரணும்.. அவ அடுக்களையில எல்லாம் இருக்க மாட்டா!’ நீண்ட பெருமூச்சு வந்து போனது.
“அமுதா..” ஒருவரையும் எழுப்பிவிடக் கூடாதே.. பெயருக்குக் கூட வலித்திருக்காது அவன் அழைப்பு.
அவளுக்குக் கேட்கவில்லை. மெல்ல அவள் தோள் தொட்டு, “அம்மு.. அம்மு”, என்றான்.
அடித்துபிடித்து அவனை இடித்துக்கொண்டு எழுந்து நின்றாள். முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் கண்ணைக் கசக்கி தன்னை நிதானித்து, “சொல்லுங்க சர்” என்றாளே.. மலைத்து நின்றுவிட்டான்.
அவனை மீண்டும் பார்த்தால் ‘எங்க டா வந்த?’ என்று கேட்பாள் என்று எதிர்பார்க்க.. அவளோ விசுவாசம் உள்ள தொழிலாளியாய் அவன் முன் நின்றாள். ஆனால் அதே நிமிர்வு!
“ப்ரணவுக்கு ஜுரம்..”
கையை மார்புக்கு குருக்காய் கட்டிக்கொண்டு, ‘சொல்லு’ என்பது போல் பார்த்து நின்றாள்.
சத்தம் கேட்டு சீதா எழும்ப அவளிடம் பேசிவிட்டு குழந்தையைப் பார்த்து இரண்டு நிமிடம் பயந்துகொண்டே கையில் ஏந்தி.. கிளம்பும் சமயம் நின்றிருந்தவளை தான் பார்த்தான்.
அவள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. ஒதுங்கியே நின்றாள்.
“கொஞ்சம் வேளில வரியா? பேசணும்” என்றான் அவளைப் பார்த்து
“வள்ளி கா.. நீங்க கிளம்புங்க.. துணையா இருந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்கா”
வாசலுக்கு வரவும் நின்றவளிடம், “அம்மு வா..” என்றான்.
“வள்ளி சர்.. அமுதவள்ளி” என்றாள்.
பல்லைக் கடித்து, “வீட்டுக்கு வா அமுதா.. ப்ரணவுக்கு ஜுரம்.. என்னாலா அவன தனியா பாத்துக்க முடியாது.. வா” என்றான்.
‘திமிர் பிடித்தவன் அப்பொழுதும் அவன் பேச்சிற்கு ஒரு மன்னிப்பு வேண்டவில்லை. ஆண்களே அப்படி தானா? இல்லை இந்த திமிர் பிடித்தவன் மட்டும் தான் அப்படியா?’
“இது என் வாழ்க்கை. நான் விருப்பப் பட்ட மாதரி வாழுவேன். நீங்க யாரு அத ஜட்ஜ் பண்ண? நான் பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. அது என் இஷ்டம்!” அவள் முடிக்கவில்லை.. அவளை எரித்துவிடும் அளவு அவன் முறைக்க.. அவள் பேச்சின் கோணம் மாறியது.
“என் வயத்துக்கு நான் தான் சம்பாரிக்கணும்.. என்னை பத்தி எதுவுமே உங்களுக்குத் தெரியாது.. என் மேல தவறான எண்ணம் இருந்தா என்னை விட்டுடுங்க.. நான் வரலை.. சரி படாது. எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம். என்னை நம்பினா மட்டும் வரேன்!
ஆனா.. இன்னும் ஒரு தரம்.. ஒரு வார்த்த.. அதுக்கப்புறம்..” கண்ணை மூடி திறந்தவள்.. “என் தன்மானத்தை சீண்டாதீங்க. அத மட்டும் நான் பொறுத்துக்கவே மாட்டேன். வாங்க போலாம்” என்று நடக்க ஆரம்பித்தாள். பார்க்க பாரதியின் புதுமைப் பெண் தோற்றாம்; அவள் நிமிர்வான பேச்சிலும் நடையிலும். ‘இவளா இப்படி?’ என்று தோன்றினாலும்..
‘ஆமா.. இவ ஒழுக்கத்தின் மறுபிறப்பு! நம்பிட்டேன் உன் நடிப்ப..’ என்று தான் எண்ணினான். அவளைப் பற்றி அப்படி தான் சொல்லப்பட்டது அவனிடம்.
அவள் பேச்சு.. அவளை கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் அளவு வெறியைக் கிளப்பியது. காட்ட முடியவில்லை வார்த்தையிலும் செயலிலும்.. மகனுக்காக! 
ஆனால், கண் காட்டியது அவள் முதுகின் பின்!

Advertisement