Advertisement

யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 2
ப்ரணவை அணைத்து நின்றவள் நல்ல உயரம். ஒல்லியும் இல்லாமல் சதைப் பிடிப்பாயும் இல்லாமல் சரியான அளவில் எல்லாம்… சந்தேகமே இல்லை கட்டழகி தான்! கண்ணை உறுத்தாத நிறத்தில் பருத்தி புடவை நேர்த்தியாய் எங்கும் கசங்காமல் உடுத்தியிருந்தாள். 
கருப்புக்கும் மாநிறத்திற்கும் நடுவே கருப்பை சார்ந்த அழகான நிறம்.. தேகத்தில் கிரானைட் பளபளப்பு.. சின்னதாய் சிகப்பு பொட்டு. அடர்த்தியாய் மை தீட்டியிருந்தாள். தாலியில்லை, மெட்டியில்லை, வகிட்டிலும் மேல் நெற்றியிலும் குங்குமம் இல்லை.
குளித்து முடியை தளர்வாய் பின்னியிருந்தாள். அது இருக்கும் ஒன்றரை மீட்டருக்கு.. தொடை வரை நீண்டு! கொஞ்சமாய் மல்லிப்பூ கூந்தலை அலங்கரித்தது.
மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்துவிட்டான். முன்பைவிட அழகாய் மாறியிருந்தாள். கடைசியாய் பார்த்த வேளை பஞ்சத்தில் கிடந்தவள் போலிருந்தாள். பணம் கொடுத்த செழிப்பாய் இருக்கும் என்று எண்ணிக்கொண்டான்.
நிமிர்வாய் நின்றுகொண்டிருந்தாள். பார்வையில் கூர்மை. வீட்டு வேலையாள் என்றால் ஒருவரும் நம்பமாட்டார்கள். புன்னகை இல்லை ஆனால் அர்ஜுனைத் தான் இன்முகமாய் பார்த்திருந்தாள்.
அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வயிற்றைப் பிசைந்தது. ‘எப்படி இவளால் நிமிர்ந்து என் கண் பார்க்க முடிகிறது? எத்தனைத் துணிவடி உனக்கு’ என்று பார்த்தான்.
அன்னம் சென்றிருந்தார்.
“வணக்கம் சர்” என்றாள். வேலையாள் போல் கூனி குறுகவில்லை. ‘ஹாய் மேன் குட் மார்னிங்’ என்பது போல்… அவன் முகம் பார்த்து.. கண் பார்த்துக் கூறினாள்.
அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
“சர்ரா?” என்றான் உதடு சுழித்து, ஏளன சிரிப்போடு.. “ம்ம்.. அப்புறம்?” என்றவனிடம்
“சம்பளம் தரவங்க நீங்க.. சர் தானே? இல்ல பாஸ்-னு கூப்பிடனுமா? நீங்க என்ன சொன்னாலும் சரி தான் சர்..”
“உனக்குச் செய்ய வேற வேலையே கிடைக்கலியா? இது என்ன ஆயா வேலை? நர்ஸ் வேலை? மானத்தை வாங்கவா?”
“காலேஜ் சேர்ந்ததோட சரி.. என் படிப்ப நீங்க முழுசா முடிக்க விடல.. என் பன்னெண்டாவது மார்க் ஷீட்டுக்கு.. கலெக்டர் உத்தியோகமா கிடைக்கும்? உழைப்பில என்ன உயர்வு தாழ்வு? இது என் வேலை.. இதுல உங்க மானம் எங்க கெட்டுதுனு புரியல!”
“செய்யரது ஆயா வேல.. வாய் கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” அவள் காது கேட்க முணுமுணுத்தான்.
“ஆமா கொழுப்புதான். இருக்காத பின்ன? இந்த ஆயா வேணும்னு தானே தவம் கிடந்தீங்க..”
அவன் முறைக்க, எதற்கு வீண் பேச்சென்று நினைத்தவள், 
“பச்.. நான் இங்க வேலைகு வந்திருக்கேன். நீங்க சொல்லுங்க.. நான் என்ன செய்யணும் சர்?”
அவள் வெறுமனே தான் கூறினாள் ஆனால் அவனுக்குத் தான் அவள் தன்னை ஏளனமாய் பேசுகிறாளோ என்ற எண்ணம்.
“என்ன நக்கலா?” என்றான் முறைத்துக்கொண்டே
“இல்ல சர்.. நீங்க என்ன சொன்னாலும் சரி.. என்ன செய்ய சொல்றீங்களோ செய்யறேன்.. அத தான் சொன்னேன்” என்றாள்.
அவள் பதில்… துணிவான பேச்சு, அவனுக்கு இன்னுமே பற்றிக் கொண்டு வந்தது.
“நீ செய்வ.. நீ பணம் குடுத்தா என்ன வேணும்னாலும் செய்வ.. எனக்கு உன்ன தெரியாதா” என்றான் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல்.
எச்சிலை விழுங்கி முகம் மாறாமல் கண்டிப்பான தோரணையில் உறைத்தாள்.
“இல்ல. உங்களுக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது. தெரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணல நீங்க..” தயக்கமே இல்லாமல் குற்றம் சாட்டினாள்.
“அதனால தான் இந்த நிலை ரெண்டு பேருக்கும்! தெரிஞ்சிருந்தா.. நான் இந்த வீட்டுக்குச் சம்பளத்துக்கு வேலை செய்ய வந்திருக்க மாட்டேன்!” அடுத்து வரயிருந்த வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.
“நான் இங்க வேலைல இருக்க போறேனா இல்லையா? இருக்க போரேன்னா, எனக்கு இந்த குத்தல் குதர்க்கம் ஆகாது. நீங்க முதலாளி. நான் இங்க வேலை பாக்கரவ.. அவ்வளவு தான். உங்க எல்லையை மீறாதீங்க வார்த்தையாலும் பார்வையாலும் பழக்கத்தாலும்!
இல்ல வேலையில இல்லேனா.. இன்னையோட சேர்த்து மூணு நாள் சம்பளம் குடுங்க நான் கிளம்புறேன்.”
மதர் கூறியது நினைவில் வந்து போனது. ‘கறார் பேர்வழி!’
அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை. மகனுக்கு அவளைப் பிடித்தது இன்னுமே பிடிக்கவில்லை.
பர்சிலிருந்து சிகப்பு தாள்களை எடுத்து அருகிலிருந்த மேசையில் போட்டான். ‘எடுத்திட்டு இடத்தை காலி பண்ணு’ என்ற தோரணையில்.
‘போவென்றுவிட்டானா?’ அவளுக்கு வலித்தது. நெஞ்சை அடைத்தது. ‘அந்த குடும்பத்தைச் சேர்ந்தவனிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறாய்?’ மனம் கேட்டது. அவளிடம் பதில் இல்லை. வலியைக் காட்டிக் கொள்ளவில்லை முகத்தில்.
இது போல் நிறையப் பார்த்திருப்பாள் போல.. அனுபவசாலி!
குழந்தைக்காகக் கைநீட்டினான். பணத்தைக் கையில் கொடுக்காமல் விட்டெறிந்தவனுக்கு அதே மரியாதை கொடுக்க நினைத்தவள் ப்ரணவை அணைத்து உச்சிமுகர்ந்து, மனமே இல்லாமல்  அங்கிருந்த சோஃபாவில் அமர்த்திவிட்டு அறையில் சென்று அவள் பொருட்களை எடுத்து வந்தாள்.
‘திமிர் திமிர்.. எது இருக்கோ இல்லையோ.. உடம்பு பூரா கொழுப்பு மட்டும் நிறையவே இருக்கு’ அவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க, அவன் போட்ட பணத்தை எடுத்தவள் அதை எண்ணி மீதி பணத்தை அதே இடத்தில் வைத்து அதன் மீது கனமான பொருளை வைத்துவிட்டு, “த்..தாங்க்ஸ்” என்றாள் அவன் கண்பார்த்து.
அந்த பார்வையில் என்ன இருந்தது என்று சத்தியமாய் அவனுக்குத் தெரியவில்லை.
‘குற்றம் சாட்டுகிறாளோ? போடி..’ நினைத்தவனுக்கு அவளைப் பிடிக்கவில்லை தான்.. ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ செய்தது. கிளம்பு என்றதும் கிளம்பிவிடுவாள் என்று நினைக்கவில்லையா.. அவன் பேச்சு கேட்டு இங்கேயே அவள் இருக்க வேண்டுமென்று நினைத்தானா? அதுவும் விளங்கவில்லை.
‘போறாளா?’ பார்த்து நின்றான். கொஞ்சம் நிறையவே ஏமாற்றமாய் உணர்ந்தான். ‘போகாதே’ சொல்ல ஆழ்மனம் துடித்தாலும்.. மனமில்லை. அவன் கர்வம் தடுத்தது.
‘போய் தொலையட்டும்.. மனுஷன் நிம்மதியை கெடுத்திடுவா.. அவள் வேண்டாம்’ மீண்டும் மீண்டும் அவன் காது கேட்க வாய் விட்டுச் சொல்லிக் கொண்டான். அவனுக்கும் மனம் வலித்தது. பிடிக்காதவள் போவதைப் பார்த்து தொண்டை வரை அடைத்துக் கொண்டு வந்தது. கண் பனிக்க.. தண்ணீர் குடித்து உள்ளிறக்கி கொண்டான்.
குழந்தையை விளையாட விட்டுக் குளிக்கச் சென்றான். பசித்தது. சாப்பாட்டு மேசைக்கு வர, மத்திய உணவு தயாராய் ஹாட் பேக்கில் இருந்தது. மகனுக்கு மசித்த காய் கறியோடு பருப்பு சாதமும், கூடவே அவனுக்கு மட்டுமே ஒரு சிறு கப்பில் ரசமும் இருக்க இருவரும் அமர்ந்தனர். ஊட்டிவிட ப்ரணவ் சேட்டை செய்யாமல் உணவருந்தினான். பார்க்கவே மலைப்பாய் இருந்தது. இரண்டே நாளில் என்ன வித்தை செய்தாள் பிள்ளையின் மாற்றத்திற்கு.
அவனுக்குச் சாதம், குழம்பு, ரசம், அவியல், பொரியல், கீரை என்று அவனுக்குப் பிடித்த வகைகள் அவன் சாப்பிடும் அளவு இருக்க வயிறு நிரம்ப உண்டான். ‘இவனை வைத்துக் கொண்டு எப்படி இதைச் செய்தாள்?’ உள்ளத்தின் ஓரம் குத்தியது. சமையல் ருசியே சொன்னது யாரின் கைபக்குவம் என்று. அன்னத்தின் சமையல் திறன் தான் இவனுக்குத் தெரியுமே.
‘அப்போ அங்க.. அது எல்லாம் இவள் செய்தது தானா?’ முன்காலத்தை அசைபோட்டது மனது. இவள் கூறியது போல் எனக்கு இவளைப் பற்றி தெரியாதா?’
‘எனக்குப் பிடித்தது இன்னும் நினைவு வைத்திருக்கின்றாளா? மத்திய வேளை.. சாப்பிட்டிருப்பாளா?’ மனம் மீண்டும் அவளையே அசை போட்டது. கஷ்ட்டபட்டு அவள் நினைவுகளை ஒதுக்கித் தள்ளினான்.
‘அவ தின்னா என்ன பட்டினி கிடந்தா என்ன? வாங்கின காசுக்கு சமைச்சு வச்சிருக்கா..’ யோசனை அப்படியே நிற்க.. ‘எனக்கு பிடிச்சதா எப்படி? அப்போ இது என் வீடுனு நான் வரதுகுள்ள தெரிஞ்சுகிட்டாளா?’
‘அதனால் தான் என்னைப்பார்த்ததும் அதிர்ச்சி அடையவில்லையோ?’
வீடு முழுவதும் அப்பாவும் மகனும் இருந்த புகைப்படங்கள் கண்ணை ஈர்க்க, “தைரியம் தான்” என்று எண்ணிக்கொண்டான்.
பயணக்களைப்பு, உண்ட மயக்கம்.. இருவரும் படுத்துவிட்டனர். மூன்று மணியளவில் இம்சையாய் கைப்பேசி அலற.. குழந்தை பயத்தில் அழுது வீரிட்டது.
மகனை தோளில் போட்டு தட்டிக் கொண்டே அதை எடுக்க ஆஃபீஸில் இருந்து அழைப்பு.
‘ஐயோ..’ என்றாகிவிட்டது. பிள்ளையை என்ன செய்ய? யாரிடம் விட?
நான்கு மணிக்கு முக்கிய மீட்டிங்.. வேளியூர் சென்று வந்த ரிப்பொர்ட்டை தொகுத்து பெரிய தலைகளுக்கு வழங்க வேண்டும்.
அவசர அவசரமாய் உடை மாற்றி, மகனுக்கு டையப்பர் மாற்றி, உடை மாற்றி.. லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வெளியே வரவும் குழந்தை அவன் கன்னம் வருடி சமத்தாய், “அப்ப.. குத்திமா பசிக்கி.. பால் நேனும்!” என்றது.
இப்படி எல்லாம் என்று கேட்டான்? தொட்டதிற்கும் அழுத குழந்தையா இது? 
டையப்பர் மாற்றுவதிலேயே பதினைந்து நிமிடம் போயிருக்க, தலையை பிய்த்துக்கொள்ளும் நிலை.. “டென் மின்ட்ஸ் குட்டிமா.. அப்பா ஆஃபீஸ் கான்டீல இருந்து வாங்கி தரேன்..” 
அன்று வேலையில் அவனால் கவனம் செலுத்தமுடியவில்லை. தோழியும் அன்று அவனை சோதிக்கவென்றே வந்திருக்கவில்லை. மகனை அங்கிருக்கும் வேலைசெய்யும் பெண்மணியிடம் கொடுத்திருக்க.. ப்ரணவாவது சும்மா இருப்பதாவது.
அவன் ஹெட் அழைத்து அவனிடம் கூறிவிட்டார் இது போல நடக்கக் கூடாதென்று.
முதன் முறையாய் மகன் மேல் எரிச்சல் வந்தது.
காரை ஓட்டிக்கொண்டே, “எல்லார் தல வலியும் என் மேல.. பேத்துட்டு அவ செத்து தொலைஞ்சா.. உன்னால நான் நித்தமும் சாக வேண்டி இருக்கு..
இப்போ வாய மூடலை.. போர வழிலயே ஏதாவது அனாதை இல்லத்தில தூக்கி போட்டுட்டு போய்டுவேன் ஜாக்கரத!” காட்டு கத்து கத்தினான்.
அவன் கத்த, மிரண்ட குழந்தை இன்னும் அதிகமாய் வீரிட.. அவன் கார் ஜன்னலைத் திறந்து வைக்க, அந்த பக்கம் வந்த காவல்துறை அவன் வண்டியை நிறுத்த.. அவரிடம் தான் தான் பிள்ளையின் தகப்பன் எனக் கூற.. அவர் இருவரின் நிறத்தைக்கொண்டு நம்பாமல் பார்க்க.. அவன் உத்தியோகமும் உயர் பதவியும் கொண்டு அவன் பிள்ளை பிடிப்பவன் இல்லை என்று நம்பி, அவனின் விரிவான தகவல்களை வாங்கிவிட்டு அனுப்ப.. போதுமடா பிள்ளையும் குட்டியும் என்றாகிவிட்டது அர்ஜுனுக்கு.
நான்கு மணி நேரம் அவனால் ப்ரணவை சமாளிக்க முடியவில்லை. ஒன்று வேலை.. இல்லை மகன் என்ற நிலை.. ‘வேலையை விட்டால்.. பூவாக்கு என்ன செய்ய?’
கார் வீட்டு வாசலில் நிற்க, வாசலில் அன்னம் அமர்ந்திருந்தார். போன உயிர் மீண்டது. இருவரும் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.
ப்ரணவை தோளில் போட்டுக்கொண்டு அந்த வயதிலும் அவனை இங்கும் அங்குமாய் தூக்கிக் கொண்டு நடந்தார். ஒரு மணி நேர அழுகை அவன் தூக்கத்தில் நின்றது.
மொட்டை மாடியில், வெறும் தரையில், நிலவில்லா வானத்தை வெறித்துக் கொண்டு தலைக்கு கை கொடுத்துப் படுத்திருந்தான் அர்ஜுன்.
‘என் வாழ்வும் இப்படி தானே ஆகிவிட்டது’ கழிவிரக்கத்தில் பெருமூச்சுவிட்டான். அவன் மனைவியைப் பற்றி வீட்டில் கூறியதெல்லாம் காதில் ஒலித்தது.
“நமக்கிருக்க வசதிக்கு உனக்கு வேற பொண்ணே கிடைக்கலியாடா.. ‘இவ தான் வேணும்னு’ நிக்கர அளவுக்கு அவளுக்கு என்ன டா தகுதி இருக்கு? உன் படிப்புக்கு, அழகுக்கு, அந்தஸ்துக்கு எதுக்குமே அவ சரி வர மாட்டா அர்ஜுன்.
உன் படிப்பு என்ன.. அவ என்ன படிச்சிருக்கா? படிச்சவதானா? அவ குலம் என்ன நம்மது என்ன? நம்ம வீட்டு வேலைக் காரி மாதரி இருக்கா டா.. வயசு என்ன பதினெட்டு இருக்குமா? ஒரு மேச்சுரிட்டி இருக்காது!
சொல்லு, அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு அவ தான் வேணும்னு ஒத்த கால்ல நிக்கர? சொன்னா கேளு.. அவளைக் கட்டின அவ உன் கூட கடைசி வரைக்கும் வர மாட்டா.. இந்த கல்யாணம் கண்டிப்பா கண்ணீரோட பாதியிலேயே முடியும்!” எத்தனை முறை படித்துப் படித்து அம்மா கூறினாள்.. கேட்டேனா? அவள் தான் வேண்டும் என்று திருமணம் செய்துக் கொண்டேனே..
“அவளுக்கு எவனோடோ தொடர்பிருக்குனு நினைக்குறேன்.. பார்த்துக்கோ அர்ஜுன்! ஒரு பிச்சைகாரன் மாதரி ஒரு கருப்பன், அவ உறவுனு சொல்லி வந்து பார்த்துட்டு போரான்.. அப்பப்போ எங்கையோ அழைச்சுட்டு போரான்.. பார்த்துக்கோ அர்ஜுன்!” திருமணமாகி ஒரு மாதத்தில் மதனி கூறினாளே.. காது கொடுத்துக் கேட்கவில்லை. மதனியை முறைத்துவிட்டுச் சென்றதாய் நினைவு.

Advertisement