Advertisement

“தினேஷ், எங்க தனு…”
“அவன் அப்பவே விளையாடப் போயிட்டான் மா… நான்தான் கேட் லாக் பண்ணிட்டு எழுதப் போனேன்…” அதற்குள் பரத் உடை மாற்றி வர அவனுக்கு காபி போடப் போனாள் அனு.
“தனும்மா, பாத்திரம் மட்டும் தேச்சுடேன்… அம்மா இந்தக் கிழங்கைத் தோல் எடுத்து வேக வச்சிடறேன்…” அனு சொல்ல, “அதை இங்க குடு… நான் பண்ணறேன்… நீ மத்த வேலையைப் பார்த்துக்க…” என்றான் பரத்.
“அப்பாடா தப்பிச்சோம்…” என்று தன்யா மீண்டும் அவள் வேலையை செய்ய செல்ல அனு எதையோ யோசித்துப் புன்னகைத்துக் கொண்டே வேலையைப் பார்த்தாள்.
அவளை கவனித்த பரத் மரவள்ளியின் தோலை சீவிக் கொண்டே, “என்னடி அனு, ஒரே சிரிப்பா இருக்கு… என்ன யோசிச்சுட்டு இருக்க…” என்றான்.
“ஒண்ணும் இல்லங்க… பழசெல்லாம் நினைச்சுப் பார்த்துட்டு இருந்தேன்… நாம சொந்தமா வீடு கட்டிட்டோம்னு இப்பவும் நம்ப முடியல… நாம இருந்த நிலைமைக்கு இதெல்லாம் கனவு போல இருக்கு…”
“ம்ம்… என்னாலயும் தான் நம்ப முடியல… எப்படியாச்சும் கடனைத் தீர்த்தாப் போதும்னு தான் நாம நினைச்சோம்… ஆனா, கடவுள் அருளும், நம்ம நேரமும் கூடி வர வீடாச்சு…”
“அதுதாங்க உண்மை… கடவுளோட அருள் மட்டும் இல்லேன்னா நாம எப்பவோ பூமிக்குள்ள போயிருப்போம்…”
“இப்பவும் இந்த வீடு கட்ட நாம ஓடினது எல்லாம் அப்படியே மனசுல இருக்கு… கொஞ்ச நஞ்சமா பிளான் பண்ணோம்…”
“ஆமாங்க… உங்க ஆபீஸ்ல யாரோ HBA லோன் வாங்கிட்டு அந்தப் பணத்துல வேற எங்கயோ வீடு கட்டுறதா சொல்லவும் தான் எனக்கும் ஒரு ஐடியா வந்துச்சு…”
“ம்ம்… நாம வாங்கின இடத்தை நல்ல விலைக்கு வித்து அந்த விலைல இங்கே இடம் வாங்கி, நகையை வச்சு அங்க கொஞ்சம் அவுட்டர்ல கம்மி விலைக்கு வாங்கின இடத்தை HBA லோனுக்கு காமிச்சு பணத்தை வாங்கி இங்க வேலையைத் தொடங்கினோம்… இதெல்லாம் சொன்னா யாருக்கும் நம்பக் கூட முடியாது…”
“ஹாஹா… ஆமாங்க, தெய்வத்தோட கருணையால எல்லாம் சரியா கூடி வந்துச்சு… நமக்கு இங்கயும் லோன் கிடைச்சது…”
“ம்ம்… நாம வீடு கட்டுறதுக்கு முன்னாடி அத்தைக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்துடனும்னு தான் எனக்கு ஆசை…”
“ம்ம்… அம்மா தான் இனி என் பேருல எதுக்கு வீடு… அந்தப் பணத்துல அக்காக்கும், தம்பிக்கும் இடம் வாங்கிக் கொடுத்திருன்னு சொல்லிட்டாங்களே… நாமும் இடம் வாங்கிக் கொடுத்துட்டோம்…”
“ஆமாங்க, அவங்களுக்கு எதுவும் செய்யாம நமக்கு மட்டும் வீடு கட்டிகிட்டா அது சரியில்லை… அவங்களுக்கும் நம்மால முடிஞ்சதை செஞ்சு கொடுத்துட்டோம்…”
“ஹூம்… இப்பவும் நமக்கு கடன் இருக்கு… கணக்கு பார்த்தா இந்த வீடு மொத்தமும் லோன் தான்… ஆனாலும், இந்த லோன் நமக்காக நாம வாங்கினது… இதை கண்டிப்பா நம்மால அடைச்சிட முடியும்னு நம்பிக்கை இருக்கு…”
“ம்ம்… நம்ம பொண்ணு படிச்சு முடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கடனை முடிச்சிட்டு அடுத்து அவ கல்யாணத்து வேண்டியதை பார்க்கணும்… எதுவும் இல்லாம எல்லாமே தொலைச்சுப் போயி இங்க வந்தோம்… நம்ம வாழ்க்கைல இனி எழுந்திருக்க மாட்டோம்னு தான் நம்மை சுத்தி இருந்த எல்லாரும் நினைச்சாங்க… ஆனா நாம வாழ்ந்திருக்கோம்…” கண்கள் நிறைந்து உணர்ச்சிவசப்பட்டு சொன்ன மனைவியை நோக்கி சிரித்தான் பரத்.
“எல்லாமும் எல்லாருக்கும் ஈசியா கிடைச்சிடறதில்லை… நம்ம வாழ்க்கைல கிடைச்ச எல்லாமே நாம கஷ்டப்பட்டு உருவாக்கினது… நமக்குன்னு நம்ம அப்பாக்கள் யாரும் சொத்து எல்லாம் சேர்த்து வைக்கல… நாம எப்பவும் கஷ்டப்பட தயாராத்தான் இருக்கோம்… அதுக்கான பலன் மட்டும் கிடைச்சாப் போதும்…”
“ம்ம்… உண்மை தாங்க… வாழ்க்கைல சந்தோசம், துக்கம் எது வந்தாலும் அதோட போக்குல அதை அனுபவிச்சிட்டுப் போயிடனும்… வலியோ, சுகமோ அதுவும் வாழ்க்கைல ஒரு அனுபவம் தான… நாமும் பிறந்தோம், செத்தோம்னு இல்லாம எல்லாத்தையும் அனுபவிச்சு வாழ்ந்திருக்கோம்…”
“ம்ம்… நம்மள நினைச்சா சில நேரம் பிரமிப்பா இருக்கும் அனு… நம்ம பிரச்சனைகள் போல மத்தவங்களுக்கு வந்திருந்தா தாங்கிக்கறவங்க ரொம்ப கம்மி… சிலர் எல்லாம் வாழ்க்கை வெறுத்து எப்பவோ தற்கொலை பண்ணிட்டுப் போயிருப்பாங்க… ஆனா, உன்னோட அன்பும், பொறுமையும் தான் எனக்கு வாழனும், உன்னை நல்லா வாழ வைக்கனும்கிற பிடிப்பைக் கொடுத்துச்சு… நீ மட்டும் என் வாழ்க்கைல வராம வேற யாராச்சும் எனக்கு மனைவியா வந்திருந்தா நான் என்னாகி இருப்பேன்னு தெரியல…” குரல் தடுமாற நெகிழ்ச்சியுடன் கூறினான் பரத்.
“ஹாஹா… அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல… நமக்கு இதுதான்னு கடவுள் விதிச்சதை யாரால மாத்த முடியும்…” சொன்னவள் பரத் நறுக்கி வைத்திருந்த கிழங்கைக் குக்கரில் போட்டு நீர் ஊற்றி அடுப்பில் வைத்தாள். இருவரும் ஹாலுக்கு வந்து அமர்ந்தனர்.
“ஏன் அனு… உனக்கு எப்பவாச்சும் ச்சே, ஏன் இவனைக் கல்யாணம் பண்ணினோம்னு ஒரு வெறுப்பு தோணிருக்கா…”
ஆவலுடன் கேட்டவனிடம், “வெறுப்புன்னு சொல்ல முடியாதுங்க… உங்களோட பொறுப்பையும், கஷ்டத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவ நான்… எனக்கென்னவோ எது வந்தாலும் அதன் போக்கில் போயி வாழ்க்கையை சரி பண்ணிக்க தான் தோணுச்சு… துக்கமோ, சந்தோஷமா அதுக்காக அதிகம் அலட்டிக்கத் தோணல…” என்றவளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் பரத்.
“உன்னைப் போல பொறுமையும், அனுசரணையும் உள்ள பொண்டாட்டி கிடைச்சா அந்த வானத்தைக் கூட வசப்படுத்த எந்தப் புருஷனாலயும் முடியும்…”
“ஹஹா… சந்தோஷமும், சுகமும் போல வலியும், வேதனையும் ஒரு உணர்வு தான்… முன்னதை ஏத்துக்கிற மனசுக்கு பின்னதை ஏத்துக்க ஏனோ முடியறதில்லை… எல்லாமே வாழ்க்கைக்கான அனுபவங்கள் தான்னு நினைச்சு பொறுமையா கடந்து வந்தோம்னா வாழ்க்கையை நம் வசப்படுத்த முடியும்… வாழ்க்கையை வசப்படுத்த முடிஞ்சவனுக்கு வானம் ஒரு பொருட்டில்லைங்க…”
“பார்றா… என் பொண்டாட்டி எத்தனை அழகா பேசறா…”
“பின்ன, உங்க பொண்டாட்டிக்குப் பேசவா சொல்லித் தரணும்…” கேட்டவளின் இடுப்பை வளைத்து தன்னை நோக்கி இழுத்தவன் கன்னத்தில் முத்தமிட சிணுங்கினாள்.
“பிள்ளைங்க வந்துடப் போறாங்க…”
“அப்ப வா, நம்ம ரூமுக்குப் போயிடுவோம்…”
“போங்க, நேரம் காலம் இல்லாம, நைட் டிபன் வேலையைப் பார்க்கணும்…”
“அதெல்லாம் எதுவும் வேணாம்… கிழங்கு செய்யறியோ, அது போதும்…” என்றவன் காதலுடன் அவளைப் பிடித்து இழுக்க பழைய நினைவுகளில் கனிந்திருந்தவள் கண்களிலும் தாபம் மின்னினாலும் மறுப்பாய் அடுக்களைக்கு சென்றவளைத் தன்னை நோக்கி இழுத்தவன் சட்டென்று கைகளில் அள்ளிக் கொண்டான்.
“அச்சோ, என்னங்க பண்ணறீங்க… இப்பவும் இளவயசுன்னு நினைப்பா… நமக்கு வயசாகிடுச்சு…”
“இந்த விஷயத்தில் மட்டும் எனக்கு எப்பவும் வயசே ஆகாது… அனுக்குட்டி….” அவள் காதில் கிசுகிசுத்தவன் கட்டிலில் அவளைக் கிடத்தி கதவைத் தாளிட எப்போதும் போல் அவன் காதலில் சிவந்தாள் அனு.
வேகமாய் அவன் அவள் கன்னத்தைக் கவ்வ, “ஸ்ஸ்… மெதுவா…” என்றவள் வலியுடன் அவன் மீசையைப் பிடித்து இழுத்தாள்.
அதையே சாக்காய் வைத்து அவளை இறுக்கிக் கொண்டவன் அவள் முகத்தை ஏறிட மையலில் நிறைந்திருந்த விழிகளில் மெல்ல முத்தமிட்டு இதழுக்குத் தாவினான். அவனது விரல்கள் அவள் தேகத்தின் மெல்லிய பாகங்களைத் தழுவிக் கொண்டிருக்க, தேகத்தில் புறப்பட்ட காதல் உணர்வுகளில் அவன் கேசத்தைப் பற்றி இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் அனு.
மனம் நிறைந்த காதலோடு இருவரும் மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்க என்றோ வசப்பட்ட காதலில் வாழ்க்கையையும் வசப்படுத்தி, இப்போது வானத்தை வசப்படுத்தும் முயற்சியில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.
அதுவும் ஒருநாள் அவர்கள் வசமாகக் கூடும்….
இங்கே எத்தனையோ பேர் வலியோடு வாழ்க்கையை கடந்து செல்கின்றனர். எப்போதாவது வலித்தால் தான் அதைப் பத்தி கவலைப்படுவோம்… வலியே வாழ்க்கையாக இருந்தால் பழகிக்கொண்டு கடந்து தானே செல்ல வேண்டும்…
அப்படி கடந்து செல்கையில் ஒருநாள் அந்த வலிக்கே போரடித்து நம்மை விட்டு ஓடிவிடும்… அதுவரை பொறுமை, விடா முயற்சியை மட்டும் விடாமல் இருக்க வேண்டும்…
வாழ்க்கை, இன்பமோ துன்பமோ… அது நம்முடையது… அதன் போக்கில் அதனை ரசித்து வாழப் பழகிக் கொண்டால் வாழ்க்கையே அழகாய் மாறி விடும்…
வானம் தனக்குள் ஒளித்து
வைத்த அதிசயங்கள் போலவே
வாழ்க்கையும் தனக்குள்
நிறைய விஷயங்களை
ஒளித்து வைத்திருக்கிறது…
கண்ணை சிமிட்டும்
நட்சத்திரம் மட்டுமல்ல…
கண்ணைப் பறிக்கும்
மின்னலும் வானத்தில் உண்டு…
உவகை கொள்ள வைக்கும்
மேகம் மட்டுமல்ல…
உலகை நடுங்க வைக்கும்
பெரும் மழையும் வானத்தில் உண்டு…
வாழ்க்கையும் அப்படிதான்…
ஆனாலும் விடாமுயற்சி
என்னும் கவசம் உடனிருந்தால்
எதையும் வசப்படுத்த முடியும்…
……………………………..சுபம்……………………………

Advertisement