Advertisement

வானம் – 19
புதிய இடமும், சூழ்நிலையும் ஓரளவுக்குப் பழகி இருக்க அஸ்வின் அங்கே பள்ளிக்கு செல்லத் தொடங்கி இருந்தான். நந்தினி மெடிக்கல் ஷாப்புக்கு செல்ல வாழ்க்கை சற்று நிம்மதியாய் நகரத் தொடங்கியது.
பரத்துக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் அலுவலகம் போனால் போதும் என்பதால் அந்த சமயத்தில் மட்டும் அன்னையுடன் இருந்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் மனைவி, குழந்தைகளோடு கழித்தான்.
புதிய இடத்தில் குடிப்பது அசிங்கம் என்று குடிக்காமல் இருந்தான். இங்கே யாரும் அவனுக்கென்று நண்பர்களும் இல்லை. குழந்தைகள் ஸ்கூலுக்கும், அனு ஆபீசுக்கும் சென்று விட்டால் போரடிக்கத் தொடங்கியது.
“அனு… எனக்கு இங்க எதாச்சும் பார்ட் டைம் வேலை கிடைக்குமா… சும்மா இருக்கறதுக்கு அது ஒரு வருமானம் ஆகுமே…” பரத் கேட்க யோசித்த அனு, “சரிங்க… இங்க நிறைய சின்ன கம்பெனி இருக்கு… நமக்கு ஏத்த போல எதுவும் வேலை கிடைக்குமா பார்ப்போம்… சொல்லி வைக்கறேன்…” என்றாள்.
பரத்தும் அடுத்த வீட்டில் பனியனில் ஸ்டோன் வொர்க் காண்டிராக்ட் எடுத்து நடத்தும் பையனிடம் சொல்லி வைத்தான்.
பரத் நினைத்தது போலவே பார்ட் டைம் வேலை கிடைத்தது. பனியனில் ஸ்டோன் ஒட்ட வைத்துக் கொடுத்தால் பீசுக்கு இத்தனை என்று வாங்கிக் கொள்ளலாம்.
பரத் உற்சாகமாய் செய்யத் தொடங்கினான். வேலை செய்ய அவனுக்கு எப்போதும் சோம்பேறித்தனம் இருந்ததில்லை. வருமானம் வந்தால் முடிந்தவரை கடனை சமாளிக்க முடியும்… என நினைத்து விடாமல் உழைத்தான். அவன் சம்பாதிக்கும் பணத்தை வட்டி அடைக்கவும், சீட்டு கட்டவுமே செலவு செய்ய வைத்தாள் அனு.
தீபாவளிக்கு கிடைத்த போனஸ் பணத்தில் பரத்தின் அன்னைக்கும், நந்தினிக்கும் புதிய தங்கக் கம்மல், ஆடைகள் என்று வாங்கிக் கொடுத்தாள்.
அவர்களும் அம்மாவுக்குக் கிடைத்த பென்ஷன், நந்தினியின் சம்பளம் என்று அதில் வாழத் தொடங்கினர். பரத்தின் தம்பியும் புதிய இடத்தில் தண்ணி அடிக்காமல் இருந்தான்.
அங்கே ஏதாவது வேலை சரி பண்ணிக் கொடுக்குமாறு அண்ணனிடம் கேட்க அனுவின் ஆபீசில் வேலை செய்யும் ஒருத்தரின் உதவியால் ஒரு நிட்டிங்கில் வேலைக்கு சேர்ந்தான். அங்கேயே அவர்கள் கொடுத்த வீட்டில் தங்கிக் கொண்டு வேலைக்கு செல்லத் தொடங்க அமிர்தவள்ளிக்கும் சற்று நிம்மதியானது.
இரண்டு வருடம் ஓடியிருக்க “பரத்… உன் தம்பி தான் இப்ப வேலைக்குப் போறானே… அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா நிம்மதியா இருக்கும்… அவனும் அவன் வாழ்க்கையைப் பார்ப்பான்…” என்றார் அமிர்தவள்ளி.
“ம்ம்… கொஞ்ச நாள் போகட்டும் மா… இவன் எப்ப குறுக்க திரும்புவான் சொல்ல முடியாது…” என்றான் பரத்.
பரத் ஓரளவுக்கு வெளியில் உள்ள கடனை சமாளித்துக் கொண்டான். சீட்டு போட்டதில் லோன் வாங்கி பிரச்சனை உள்ளவர்களின் கடனை அடைத்து விட்டான். அனு சம்பாத்தியத்தில் மீதமான பணத்தை எடுத்து வைத்து மகளுக்கு கம்மல், தனக்கு செயின் என்று வாங்கத் தொடங்கினாள்.
பரத்தின் தம்பிக்கு பெண் பார்க்கத் தொடங்க அதே ஊரிலேயே ஒரு பெண் அமைந்தது.
கல்யாணத்திற்கு பெண் வீட்டினர் செலவு என்பதால் உடை, தாலிச் செயின் மட்டுமே இவர்கள் செலவு. அதை பரத் ஏற்றுக் கொண்டான். அந்தப் பெண்ணும் கொஞ்சம் துடுக்காக இருக்க தனியாக அந்த பெண்ணின் வீட்டு அருகிலேயே ஒரு வீட்டைப் பார்த்து குடி வைத்தனர். அவர்கள் வாழ்விலும் ஒரு மாற்றம் வர இயல்பாய் வாழ்க்கை நகர்ந்தது. சிறிது நாள் கழித்து ஒரு பாரில் பார் மேன் வேலைக்கு ஆள் வேண்டுமென்று சொல்ல அங்கே சேர்கிறேன் என்றவனைக் கண்டு அமிர்தவள்ளிக்கு சற்று அச்சமாகவே இருந்தது. ஆனால் கால மாற்றமோ, அவர்களின் ஜாதக மாற்றமோ பாரில் வேலைக்கு சேர்ந்த பின்னும் தம்பி குடிக்காமல் இருந்தது அதிசயமாகவும் நிம்மதியாகவும் இருந்தது.
அனுவின் தம்பியும் நல்ல வேலை, கார் என்று முன்னேற அடுத்த வருடத்தில் அவனுக்கு கல்யாணம் முடித்தனர்.  அன்று அனு வீட்டுக்கு சென்றபோது அவளுடைய தம்பி வீடு கட்ட இடம் பார்த்திருப்பதாக சொன்னான்.
“நாளைக்கு எல்லாரும் போயி பார்த்திட்டு வரலாம்… முதல்ல ஒரு தொகையை பிரமோட்டர் கிட்ட கொடுத்திட்டா அவங்க வேலையைத் தொடங்கிருவாங்க… அதுக்குள்ள நமக்கு லோனும் ரெடியாகிட்டா சீக்கிரம் வீடாகிரும்…” என்றான்.
அப்போது தன்யா ஆறாவது படித்துக் கொண்டிருந்தாள்.
அந்த இடமும் சூழ்நிலையும் அனுவுக்கும் பிடிக்க முதன்முதலாய் மனதில் இடம், வீடு வாங்குவது பற்றி யோசனை வந்தது. அவளும் அதைப் பற்றி விசாரித்தாள். இப்போதைய சூழ்நிலையில் இடத்தை மட்டும் வாங்கினால் பிறகு கூட வீடு கட்டிக் கொள்ளலாம் என நினைத்தாள்.
“இப்போதைக்கு இடமா யாருக்கும் கொடுக்கல மா… நாங்களே வீடு கட்டிக் கொடுக்கிறது போல தான் பண்ணிட்டு இருக்கோம்…” பிரமோட்டர் சொல்லவும் விட்டு விட்டாள். ஆனாலும் மனதுக்குள் அந்த எண்ணம் அழுத்தமாய் அமர்ந்து கொண்டது.
“என்னங்க, தனு பெருசாகிட்டு வரா… அவளுக்குன்னு நாம எதுவும் சேர்த்து வைக்கலை… ஒரு இடம் எதுவும் வாங்கிப் போட்டா அவ கல்யாண சமயத்துல உதவியா இருக்கும்ல…”
“நல்ல விஷயம் தான் அனு… அந்த அளவுக்கு நம்ம கிட்ட பணம் எங்க இருக்கு…” பரத் கேட்கவும் யோசித்தாள்.
“ஆபீஸ்ல லோன், என்னோட நகை அப்புறம் சீட்டுப் பணம்னு சரி பண்ணிக்கலாங்க… முதல்ல நமக்குத் தகுந்த போல இடம் பார்ப்போம்… சரியாச்சுன்னா பண்ணிக்கலாம்…” அவள் ஏதோ கால்குலேஷனில் சொல்ல பரத்தும் சம்மதித்தான்.
சில புரோக்கர்களிடம் சொல்லி வைத்தும் தெரிந்தவர்கள் மூலமாகவும் இடம் தேடத் தொடங்கினர்.
ஒரு இடத்தைப் பார்த்ததுமே அனுவுக்குப் பிடித்தது. ஐந்து சென்டில் சதுர வடிவில் சுற்றிலும் நிறைய வீடுகளும் பிளாட்டுக்களுமாய் அமைதியான சூழலுடன் கிடைத்தது. தொகை சற்று அதிகம் என்றாலும் அதே போதும் என்றவள் பரத்துக்கு எந்த கஷ்டமும் வைக்காமல் தனது நகைகளை அடமானம் வைத்தும் ஆபீசில் லோன் போட்டும், சீட்டில் இருந்தும் பணத்தை எடுத்து போதாமல் நன்றாகப் பழகும் மேனேஜரிடம் விஷயத்தை சொல்ல அவரும் உதவினார்.
அனுவின் பெயரில் அந்த இடத்தை பதிவு செய்யவும் முதன்முதலாய் எதையோ சாதித்த சந்தோசம்.
அதன் பிறகு வைத்த நகைகளை மீட்டவும், லோனை அடைக்கவும் கடனை அடைக்கவும் சம்பாத்தியத்தை செலவு செய்தாள் அனு.
அனுவின் தோழி ஒருத்தியின் கணவன் சின்னதாய் இண்டஸ்ட்ரி ஒன்றை வைத்திருந்தான் அங்கே வேலைகளை மேற்பார்வை செய்ய சூப்பர்வைசராய் பரத்தை வர முடியுமா என்று கேட்க அவனுக்கு சந்தோஷமானது.
ஸ்டோன் தொழிலில் விடாமல் குனிந்து ஒரே இடத்தில் நின்று வேலை பார்க்க வேண்டும். இது வேலையை மேற்பார்வை செய்வது தானே என்று சம்மதித்தான். வருமானமும் அதை விட அதிகம் சம்பளமாய் பெற்றுக் கொள்கையில் உதவியாய் இருக்கும் என்று நினைத்தான்.
புதிய செலவுகள் ஒன்றும் சேராததால் கடன் மெல்லக் குறைந்து வந்தது. “என்னங்க, அத்தைக்கு எப்படியாச்சும் சீக்கிரம் ஒரு வீடு வாங்கிக் கொடுக்கணும்…” என்றாள் அனு.
“ம்ம்… இன்னும் கடன் இருக்கு… ஒரு பெரிய ஏல சீட்டு ஒண்ணு சேர்ந்திருக்கேன்… அது கிடைச்சுட்டா இன்னும் கொஞ்சம் கடனை அடைச்சிடலாம்…” என்றான் பரத்.
மேலும் மூன்று வருடங்கள் வாழ்க்கைத் தேடலுக்கான ஓட்டத்திலேயே கழிய இப்போது பரத்தின் கடன் சுமை மேலும் குறைந்து அனு அவளது நகைகளை மீட்டு புதியது வாங்கிக் கொண்டிருந்தாள்.
கடன் சுமைகளின் பெரும் சோதனைகளில் சிக்கி வாழ வழி அறியாமல் தோல்வியோடு புதிய இடம் நோக்கிப் பயணித்தவர்களுக்கு காலம் ஒரு வாய்ப்பு கொடுக்க அதை இருவரும் அழகாய் பயன்படுத்திக் கொண்டனர். அவர்களின் விடா முயற்சியும், உழைப்பும் கண்டு காலமும் மெல்லக் கனிந்து வந்தது.
“ட்ரிங்க்க்க்கக்க்க்…..” அழைப்பு மணியின் ஒலியில் பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த அனு சட்டென்று திடுக்கிட்டு விழித்து நிதானத்துக்கு வந்தாள்.
மாலை மயங்கி வெளியே எங்கும் இருள் சூழ்ந்திருக்க, “அட, இத்தன நேரமா பழைய நினைவுல உக்கார்ந்திருக்கேனே… லைட் கூடப் போடல…” என வேகமாய் சென்று சுவரில் இருந்த சுவிட்சைத் தட்ட வீடெங்கும் வெளிச்சம் நிறைந்தது.
“ட்ரிங்க்க்க்கக்க்க்…”
மீண்டும் அழைப்பு மணி வீறிட, “இதோ வந்துட்டேன்…” சொல்லிக் கொண்டே சென்று கதவைத் திறந்தாள். கேட்டுக்கு வெளியே நின்றிருந்த பரத் இவளைக் கண்டதும், “எவ்ளோ நேரமா பெல் அடிக்கறேன்… கேட்டைக் கீழ வேற லாக் பண்ணிருக்க…” என்றான் கடுப்புடன்.
“சாரிங்க… ஏதோ பழைய நினைவுல அப்படியே உக்கார்ந்துட்டேன்…” என்றவள் வேகமாய்த் திறந்து அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள். “வழியில மரவள்ளிக் கிழங்கு பார்த்தேன்… உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கினேன்…” பிள்ளைங்க ரெண்டும் எங்கே…” என்றான் வீடு அமைதியாய் இருந்ததால்.
“மாடில இருப்பாங்கன்னு நினைக்கறேன்…” என்றவள் அதை அடுக்களையில் கொண்டு போய் வைத்துவிட்டு, மேலே நோக்கிக் குரல் கொடுத்தாள்.
“தனு… தினேஷ்… என்னடா பண்ணறீங்க…”
“இதோ வரேன் மா…” பதில் குரல் கொடுத்தாள் தன்யா.
அறையில் ரெகார்டு நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தவள் மூடி வைத்துவிட்டு எழுந்து வந்தாள்.

Advertisement