Advertisement

“அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா…”
“ஹூம்… எனக்கு தான் நீங்க இல்லாம கஷ்டமா இருக்கு… சீக்கிரம் டிரான்ஸ்பர்க்கு ஏற்பாடு பண்ணனும்… ஆனா, கடன் கொடுத்தவங்க நான் டிரான்ஸ்பர் ஆகறது தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டாங்க…” என்றான் யோசனையுடன்.
“ஏன் பரத், எதுவும் பிரச்சனை பண்ணுவாங்களா…” என்றவளிடம்,
“கண்டிப்பா… பணத்தைக் கொடுக்காம ஓடிப் போறதா நினைப்பாங்க…” என்றான் கவலையுடன்.
“அவங்களை அப்படி நினைக்க விடாம நீங்களே பார்த்துப் பேசி டைம் கேளுங்க…”
“ம்ம்… கொஞ்சம் பிரச்சனையா இருக்கற கடனை மட்டுமாச்சும் முதல்ல தீர்க்கணும்…” என்றான்.
“என்னங்க, கொஞ்சம் டைம் கிடைச்சா நாம ஏதாச்சும் ஏல சீட்டுல சேர்ந்து ஒவ்வொருத்தர் கடனா அடைக்க முடியும்… நம்பிக்கையான சிட்டா இருக்கணும்… நானும் ஒரு சிட்டுக்கு பணத்தைத் தரேன்… நீங்களும் ஒண்ணு போடுங்க… ஒவ்வொருத்தர் கடனா அடைக்க முடியுமா பாருங்க…”
“ம்ம்… அரசு நடத்தற ஒரு சீட்டு கம்பெனியே இருக்கு அனு… அது நம்பிக்கையானது தான்… சீட்டுல சேர்ந்து அந்தப் பணத்துலயே லோன் கூட கொடுப்பாங்க… நல்ல ஐடியா தான்… நான் முதல்ல பேசிப் பார்க்கறேன்…”
சாப்பிட்டு எழுந்து படுக்கைக்கு செல்ல குழந்தைகள் உறங்கி இருந்தனர். அவன் மார்பில் சாய்ந்து கொண்டு ஒரு வாரத்தின் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள் அனு.
“கதை சொன்னது போதும்… கொஞ்சம் விளையாடலாமா…” என்றவனை அவள் செல்லமாய் முறைக்க, இழுத்து நெஞ்சில் அணைத்துக் கொண்டவன் ஒரு வாரத்தில் அவள் தேகத்தில் எதுவும் மாற்றம் இருக்கிறதா எனத் தடவித் தேடத் தொடங்க அவனுள் அடங்கினாள் அனு.
பரத் விடுமுறை முடிந்து அதிகாலையில் கிளம்ப மகளை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு மகனுடன் கிளம்பிய அனு மகனைத் தந்தை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்துக்கு சென்றாள்.
மதியம் அங்கேயே சாப்பிட்டுக் கொள்வான் தினேஷ். மாலையில் ஸ்கூல் முடிந்து தன்யா வந்ததும் சாப்பிட்டு அனுவின் வரவுக்காய் இருவரும் காத்திருப்பார்கள். அனு வந்ததும் பிள்ளைகளுடன் வீட்டுக்கு செல்வாள்.
நாட்கள் இப்படியே பிரச்னை இல்லாமல் தொடர பரத்துக்கு அங்கே பிரச்சனை பெரிதானது.
ஒரு பைனான்சில் இவன் கடன் வாங்கும்போது கொடுத்த செக் பணமில்லாமல் திரும்ப அவர்கள் போலீசில் கேஸ் கொடுத்து விட்டனர். போலீஸ் இவனைத் தேடி வீட்டுக்கு வர அமிர்தவள்ளி பயந்து போனார்.
பரத் அந்த நேரத்தில் வீட்டிலில்லை. தெரிந்த போலீஸ்காரர் என்பதால் “சீக்கிரமே பணத்தை அடைக்க சொல்லிருங்க… மறுபடி வாரன்ட் வந்தா என்னால ஏதும் பண்ண முடியாது…” என்று விஷயத்தை சொல்லி சென்றார்.
பரத் வந்ததும் அமிர்தவள்ளி விஷயத்தைக் கூற “இல்லாத பணத்தை எங்கிருந்து எடுத்து அடிப்பேன்…” என்றவனின் மனநிலை வருவது வரட்டும் என்ற நிலையில் தான் இருந்தது. மீண்டும் வேறு பைனான்சில் இருந்து வாரன்ட் வரவே இவனைத் தேடி வீட்டுக்கும் அலுவலகத்தும் வந்தனர் போலீசார்.
இவன் அங்கே  எங்கும் இல்லை என்பதால், “வந்ததும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க… இல்லேன்னா இந்த வேலைக்கே ஆபத்தாகிடும்…” என்று எச்சரித்து சென்றனர்.
வேறு வழியில்லாமல் வக்கீலுடன் பரத் ஸ்டேஷனுக்கு சென்றான். ஒரு வாரத்தில் வாங்கிய பணம் முழுவதையும் அடைக்க வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் பைனான்ஸ்காரர்கள் கேசை வாபஸ் வாங்கிக் கொண்டனர்.
அரசு வேலையில் இருப்பவர்கள் பேரில் இந்த மாதிரி செக் மோசடி வழக்குகள் வந்தால் வேலைக்கே ஆபத்தாகிவிடும்.
வீட்டுக்கு வந்த பரத் தலையில் கை வைத்து கண்ணீருடன் அமர்ந்து விட்டான்.
“எப்படி அடைப்பேன்… பணத்துக்கு எங்க போவேன்… கேஸ் ஆனா வேலையும் போயிடும்… நான் என்ன பண்ணுவேன்…” என்றவன் கலக்கத்துடன் அமர்ந்திருந்ததைக் கண்ட அமிர்தவள்ளி பயந்து போனார்.
இத்தனை வருடத்தில் ஏதேதோ பிரச்சனைகள் வந்தபோதும் அவன் கலங்கி அமர்ந்தோ, புலம்பியோ பார்த்ததில்லை. ஒரு மாதிரி எல்லாமே கை விட்டுப் போன மனநிலையில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவனைக் காண ஒரு தாயாய் அவர் உள்ளம் தாங்கவில்லை.
முதலில் கடனை அடைக்க வீட்டை விற்றும் எந்த பலனும் இல்லாமல் தம்பியின் கால் விபத்தில் அதை விட அதிகம் செலவானது அவர்களுக்கும் தெரியுமே.
நந்தினி, தம்பிக்கும் இந்தப் போலீஸ் கேஸ் எல்லாம் பயத்தைக் கொடுக்க அவர்களும் கலங்கிப் போயிருந்தனர்.
“என்னால முடியலைம்மா… இனி நான் யாருகிட்ட பணம் கேப்பேன்… எப்படி ஒரு வாரத்துல பணத்தை அடைக்க முடியும்… என்னால முடியலம்மா…” அன்னை மடியில் கிடந்து கலங்கினான் பரத். அந்த நொடியில் அவரது தாய் மனம் ஒரு முடிவுக்கு வர மகனிடம் கூறினார்.
“பரத், இந்த வீட்டை வித்து முடிஞ்ச கடனை அடைச்சிடு… முடியும்போது வீடு வாங்கிக்கலாம்… எங்களுக்கு உன்னை விட இந்த வீடு பெருசில்லை… இப்பவும் உன்னோட குவார்ட்டர்ஸ் சும்மா தான இருக்கு… அங்கேயே போயிடலாம்… நீ வேண்டிய ஏற்பாடைப் பண்ணு…” என்றார்.
“அம்மா… என்னமா சொல்லறீங்க…”
“ம்ம்… முதல்ல நீ எங்களுக்கு உயிரோட இருக்கணும்… அப்புறம் தான் இந்த வீடு எல்லாம்…” அன்னை சொல்லவும் நெகிழ்ந்து அவர் கையைப் பிடித்து அழுதான் பரத்.
அடுத்து சீக்கிரமே புரோக்கர் மூலம் வீட்டை விற்க ஏற்பாடு செய்தனர். தெரிந்த ஒருவரே வீட்டைக் கேட்க அட்வான்ஸ் பணத்தை வாங்கி பைனான்ஸ்க்கு பணத்தை அடைத்து முதல் பிரச்சனையைத் தீர்த்தான். சின்ன வீடுதான் என்பதால் பெரிய தொகை ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிடைத்த பணத்தில் பிரச்சனை உள்ள வட்டிக் காரர்களுக்கும் பைனான்ஸ்காரர்களின் கடனை அடைத்தான் பரத்.
மீண்டும் அவர்கள் பரத்தின் குவார்ட்டர்சுக்கு மாறினர். சிறிது நாள் பிரச்சனை இல்லாமல் போனது. இப்போதும் சில பாங்கிலும், தம்பியின் விபத்தின் போது நண்பன் ஒருவனிடம் வட்டிக்கு வாங்கிய தொகையும் மிச்சம் இருக்கவே செய்தது.
அன்னையுடன் அதே வீட்டில் இருந்த போதும் பரத்தின் மனது மனைவி, பிள்ளைகளைத் தேடியது. அப்போதும் வார இறுதியில் அவர்களைக் காண செல்லுவதை மட்டும் அவன் நிறுத்தவில்லை. அனு சொன்னது போல் புதிய சீட்டு சேர்ந்தனர்.
பரத்தின் தம்பி அப்போதும் பொறுப்பு இல்லாமல் தண்ணி அடித்து சுற்றிக் கொண்டு தான் இருந்தான். அவனை பைக்கில் அழைத்துச் சென்று கூட்டி வரும் டிரைவர் வேலையை பரத் செவ்வனே செய்து வந்தான். அவ்வப்போது அவனும் போதையில் வருவான்.
நந்தினிக்கு சட்டப்படி விவாகரத்து வேண்டுமென்று கோர்ட்டில் பதிவு செய்ய இருவரையும் அழைத்தனர்.
சுரேஷ், “எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை… சேர்ந்து வாழ தான் விருப்பம்…” என்று சொல்ல நந்தினி, “எனக்கு அவரோட வாழ விருப்பமில்லை… பையனை மட்டும் நான் வச்சுக்க அனுமதி வேணும்…” என்று சொல்லி விட்டாள்.
“உங்களுக்கு எதுவும் ஜீவனாம்சம் வேண்டுமா…” நீதிபதி கேட்க, “அதெல்லாம் ஏதும் வேண்டாம்… விவாகரத்து கொடுத்தாப் போதும்… இனி எங்களைப் பார்க்க கூட வரக் கூடாது…” என்றாள் பிடிவாதமாக. அவளுக்கு சாதகமாய் விவாகரத்து கொடுத்து விட்டது நீதிமன்றம்.
அதற்கான வக்கீல் பீஸ், அவளை அழைத்துச் செல்வது எல்லாம் பரத் தான் பார்த்துக் கொண்டான். கேஸ் முடிந்து நிம்மதியாய் வெளியே வந்தாள் நந்தினி.
நாட்கள் நகர்ந்தோட தன்யாவையும் தினேஷையும் இப்போது ஒரே கான்வென்டில் சேர்த்திருந்தாள் அனு. அவள் அங்கே சென்று இரண்டு வருடங்கள் ஆகியிருக்க பரத்துக்கு அவள் ஊருக்கு அருகே உள்ள ஊரில் பணிமாற்றம் கிடைத்தது.
அனுவின் தாய் வீட்டு உறவுகள் அந்த ஊரில் தான் இருந்தனர். அங்கிருந்து இங்கே வர இரண்டு மணி நேரப் பயணம் மட்டுமே. இன்னும் கடன் பாக்கி வைத்திருந்தவர்களை சந்தித்து, “எனக்கு டிரான்ஸ்பர் வந்திருக்கு… கொஞ்சம் டைம் கொடுங்க பணத்தை அடைச்சிடறேன்…” என்று சொல்லி புரிய வைத்தான் பரத்.
அப்போதுதான் பரத்தின் அன்னை கூறினார். “பரத்… இங்க இருந்தா உன் தம்பி குடிச்சே நாசமாப் போயிருவான்… நாங்களும் உன்னோட வந்துடறோம்… அங்க ஒரு வீடு வாடகைக்கு பார்த்துட்டா இந்த ஸ்கூல் லீவுல அஸ்வினை அங்க சேர்த்துடலாம்… என்ன இருந்தாலும் உன் அப்பாவோட ஊரு தானே…” என்றார்.
“ம்ம்… சரிம்மா… இந்த குவார்ட்டர்ஸ் காலி பண்ணிட்டு அங்க அப்ளிகேஷன் கொடுத்தா எனக்கு குவார்ட்டர்ஸ் கிடைக்கும்… ஆனா சீனியாரிட்டி உள்ளவங்களுக்கு கொடுத்த பிறகு தான் எனக்கு கொடுப்பாங்க… எப்படியும் ரெண்டு வருஷம் ஆகலாம்……” என்றான் பரத்.
திட்டப்படி எல்லாம் சரியாய் வர அந்த ஊரில் இரண்டு நாட்கள் சுற்றி அலைந்து ஒரு வாடகை வீட்டைக் கண்டு பிடித்தான் பரத். அந்த வீட்டு ஓனருக்கு சொந்தமாய் மெடிக்கல் ஷாப் இருக்கிறது என்பதை அறிந்தவனுக்கு இரட்டை சந்தோசம். வீட்டோடு அக்காவுக்கு அங்கே ஒரு வேலையும் சரியான சந்தோஷத்தோடு வந்தான்.
பள்ளி விடுமுறையில் அஸ்வினை அங்கே உள்ள பள்ளிக்கு மாற்ற இவர்களும் குடும்பத்தோடு பொருட்களை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாய் புது விடியலைத் தேடி அந்த ஊருக்கு கிளம்பினர்.
எப்போதும் இருட்டு மட்டுமே
ஏகோபித்து இருப்பதில்லை…
இருட்டுக்குள் ஒளிந்திருக்கும்
வெளிச்சமும் சில நேரம்
வெளிச்சத்திற்கு வரும்…
இரவில் ஒளிந்திருக்கும்
பகலைப் போலவே…

Advertisement