Advertisement

வானம் – 18
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்…
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை…
வாடி நின்றால் ஓடுவதில்லை…
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்…
டீவியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டதும் மனம் லேசாக, இதழில் புன்முறுவல் நெளிந்தது அனுவுக்கு.
“தனு, சீக்கிரம் வா, ஸ்கூல் பஸ் வந்திடும்…” மகளை அவசரப்படுத்த யூனிபார்முடன் ஓடிவந்தாள் தன்யா.
சீக்கிரம் அவளது கிராப் தலையை வாரிவிட்டு ஹேர்பேன்ட் போட்டு ஒதுக்கியவள் வேகமாய் இட்லியை எடுத்து ஊட்டிவிட குழந்தை வேகமாய் விழுங்கினாள்.
தினேஷ் கார் ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருக்க வாசலில் ஸ்கூட்டர் சத்தம் கேட்டது.
“தாத்தா வந்துட்டாங்க போலருக்கு… வா…” என்றவள் பேகை எடுத்துக் கொள்ள தம்பிக்கு டாட்டா சொல்லிவிட்டு தன்யா கிளம்பினாள். ஸ்கூல் பஸ்ஸில் ஏற ரோடை கிராஸ் பண்ணி நிற்க வேண்டும் என்பதால் காலையில் அவளை பஸ்ஸில் ஏற்றவும் மாலையில் அழைத்து வருவதையும் அனுவின் தந்தை பார்த்துக் கொண்டார்.
அனு இங்கே வந்து இப்போது ஆறு மாதங்களுக்கு மேலே ஆகிவிட்டது. ஒரு தனியார் நிறுவனத்தில் தோழியின் உதவியுடன் பணிக்கு சேர்ந்தவள் மூன்றே மாதத்தில் நிரந்தரமாகி நல்ல சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கிறாள்.
அதுவும் வீட்டுக்குப் பக்கத்தில் நடந்து செல்லும் தூரத்திலேயே அலுவலகம் அமைத்திருக்க மதியம் உணவுக்கு வீட்டுக்கு சென்று வர முடிந்தது. பரத் இப்போதும் அங்கேயே தான் இருக்கிறான் வாரம் ஒருமுறை இங்கே வந்து எல்லாரையும் பார்த்து செல்வான்.
முதலில் அனு இங்கே வந்து விடுவதாக சொன்னபோது அவளது தந்தைக்கும் சித்திக்கும் அத்தனை ஏற்புடையதாய் இருக்கவில்லை. மகளை நல்லபடியாய் மணமுடித்துக் கொடுத்தும் அவள் அங்கே வாழ முடியாமல் தாலியைத் தவிர வேறு தங்கம் கூட இல்லாமல் இங்கேயே திரும்பி வந்தது அவளது தந்தைக்கு வருத்தத்தையும் பரத்தின் மீது கோபத்தையும் வரவழைத்தது.
குடியும், கடனும் ஒரு மனிதனின் வாழ்க்கையை செல்லரிக்கக் கூடியவை. அனுவை நல்லபடியாய் வைத்து வாழாமல் இந்நிலைக்கு ஆளாக்கிய மருமகன் மீது ஒரு தந்தையாய் அவருக்குத் தோன்றிய நியாயமான கோபத்தை அனுவால் புரிந்து கொள்ள முடிந்தது. அதுவுமில்லாமல் அப்போது அனுவின் தந்தைக்கு ரிட்டயர்மென்ட் முடிந்து அந்தப் பணம் கிடைக்கும் நேரத்தில் மகளின் வரவு உண்மையில் அவர்களுக்கு சற்று பயத்தைக் கொடுத்தது. அனுவின் தந்தை பெரிதாய் சம்பாதிக்கவில்லை. இந்த ஓய்வுப் பணமே அவர்களின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு.
இது எல்லாமே அனுவுக்குப் புரிந்தாலும் யாரிடமும் எதற்கும் அவள் பணம் கேட்கவில்லை. எத்தனை காலம் தான் அவளது பொறுமையை சோதிப்பது என்று இறைவனுக்குப் பாவம் தோன்றியதோ என்னவோ… முதல் மாற்றமாய் நல்ல வேலையை அவளுக்குக் கொடுத்தார்..
இங்கே வந்த சில நாளிலேயே தனது நெருங்கிய தோழி மூலம் பக்கத்தில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேகன்ட் இருப்பது தெரிந்து முயற்சிக்க உடனே வர சொல்லி விட்டனர். நல்ல முதலாளி, தோழமையுடன் பழகும் சக பணியாளர்கள், நிம்மதியான புதிய சூழ்நிலை என்று அவளது வாழ்க்கை சட்டென்று அழகானது போலத் தோன்றியது.
எதுவும் மாறாவிட்டாலும் இந்த மாற்றமே சந்தோசத்தையும், நின்று போராட வேண்டுமென்ற தைரியத்தையும் கொடுத்தது.
அனுவுக்கு வாழ்க்கையில் பெரிதாய் எந்த எதிர்பார்ப்புகளும் இருந்ததில்லை. சந்தோஷமோ, வருத்தமோ அந்த நேரத்தின் உணர்வுகளை அப்படியே அனுபவித்துவிட்டு அடுத்த நிமிடம் என்னவோ அதை எதிர்நோக்கத் தயாராகி விடுவாள்.
இப்போதும் அப்படித்தான். கணவன் ஒரு பக்கம், தானும் குழந்தைகளும் ஒரு பக்கம்… வருங்காலம் என்ன வைத்திருக்கிறதோ என்றெல்லாம் யோசிக்கவில்லை. இந்த நிமிட இயல்புக்கு வாழத் தொடங்கி விட்டாள்.
பரத்துக்கு அனுவும், குழந்தைகளும் இல்லாத வீடு நரகமாய் தோன்றியது. தனிமை ஒவ்வொரு நிமிடமும் விரட்டி கலங்க வைத்தது. தன்னை விரும்பி சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற ஆசையில் வந்தவளைத் தனது இயலாமையால் பிரிய வேண்டி வந்ததை எண்ணி தினமும் கலங்கினான். யாருமில்லாத வீட்டில் அழுவதற்கும் வசதியாய் போனது.
மகளை நல்ல பள்ளியில் சேர்த்தும் தொடர முடியாமல் சாதாரண இங்லீஷ் மீடியம் ஸ்கூலில் இப்போது சேர்த்து இருப்பது அவனுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு வாரமும் விடுமுறைக்காய் காத்திருப்பவன் இரவோடு இரவாக அவர்களைக் காண ஓடினான். இரண்டு நாள் தங்கிவிட்டு அதிகாலை ரயிலில் தனது ஊருக்குக் கிளம்பி விடுவான்.
ஆனால் அனுவின் தந்தைக்கு பரத் மீதிருந்த கோபம் அவன் வருகையின் போது முகம் காணிக்க வைத்தது. கணவனை தந்தை ஜாடையாய் திட்டுவதை அறிந்தாலும் அனு எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. குவார்டர்சில் இருந்து மாற வாடகை வீடு தேடியவர்களுக்கு அனுவின் அலுவலகம் இருந்த தெருவிலேயே வீடு கிடைத்தது.
அவர்கள் அங்கே மாறிய பிறகு பரத்தின் வரவு மாதம் ஒரு முறையாய் குறைய தந்தையின் முகத்தில் தெரிந்த விருப்பமின்மையே காரணம் என்பது அனுவுக்கும் தெரியும்.
ஆறு மாதத்திற்குப் பிறகு ஒருநாள் சித்தியிடம் கூறினாள்.
“சித்தி… எங்க பொருள் எல்லாம் குவார்டர்சில் சும்மாதான்  கிடக்குது… இங்கே ஒரு வாடகை வீடு எடுத்து அதைக் கொண்டு வந்துட்டா நாங்க அங்க மாறிக்கலாம்னு நினைக்கறேன்…” என்றாள். யாரிடமும் பகைத்துக் கொள்ளும் சூழ்நிலையில் அனு இல்லை. அவளைப் பொறுத்தவரை எல்லாரும் எப்போதும் வேண்டும்.
தனது தோழியிடம் சொல்ல அவள் தனக்குத் தெரிந்த புரோக்கர் ஒருவரிடம் சின்னதாய் வாடகைக்கு வீடு பார்க்க சொல்ல இரண்டு நாளில் அதே தெருவில் வீடு கிடைத்தது. ஒரு காம்பவுண்டில் வரிசையாய் இருந்த மூன்று வீடுகளில் நடுவில் இருந்த வீடு அனுவுக்கு. ஒரு அடுக்களை, படுக்கை அறை மட்டுமே கொண்ட சின்ன வீடு. முன்னில் இருந்த இடத்தில் சிமென்ட்டு தரையுடன் கேட் இருந்தது.
அலுவலகம் அருகில் இருந்ததால் அதுவே போதுமென்று அனு சொல்லிவிட அட்வான்ஸ் கொடுத்து வீட்டுக்கு வெள்ளை அடித்து பால் காய்ச்சினர். பரத் அங்கிருந்து பொருட்களை எல்லாம் பாக் பண்ணி மாமன் மகன் உதவியுடன் லாரியில் இங்கே கொண்டு வந்து விட்டான்.
அந்த குட்டி வீட்டில் அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை தயாரானது. குழந்தைகள் என்பதால் எளிய சமையல், அதிக செலவில்லாத வாழ்க்கை. வாடகை, பீஸ் எல்லாம் அனுவே அவளது சம்பாத்தியத்தில் கொடுக்க முடிந்தது.
வார விடுமுறைக்கு பரத் வந்து விட்டான்.
“அப்பா…” மாமன் வாங்கிக் கொடுத்த குட்டி சைக்கிளைத் தள்ளி விளையாடிக் கொண்டிருந்த தினேஷ் தந்தையைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக் கொண்டான்.
அவனை வாரி அணைத்துக் கொண்டவன் புன்னகையுடன் வர ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்த தன்யா, “அம்மா, அப்பா வந்துட்டாங்க…” என்று கத்திக் கொண்டே அவனிடம் ஓட குழந்தைகளின் தேடலில் நெகிழ்ந்து போனான் பரத்.
அன்று கணவன் வருவான் எனத் தெரிந்து பூரி கிழங்கு தயார் செய்து கொண்டிருந்த அனு ஹாலுக்கு வர, அவளையும் பிள்ளைகளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் பரத்.
“அனுக்குட்டி…” அவனது அணைப்பிலும், அழைப்பிலும் குளிர்ந்தவள், புன்னகையுடன் நோக்கி, “ட்ரெயின்ல கூட்டமா, சீட் கிடைச்சுதா…” என்று கேட்க, “ம்ம்…” என்றான்.
“பிரெஷ் ஆயிட்டு வாங்க… டீ தரேன்…” அவள் சொல்லவும் அவள் நெற்றியில் செல்லமாய் முட்டியவன், “டீ மட்டும் தானா…” என்று காதலுடன் கேட்க அவள் முகம் சிவந்தது.
“அப்பா, அம்மா உங்களுக்குப் பிடிக்கும்னு பொட்டாடோ போண்டா செய்து வச்சிருக்கா… ஸ்நாக்ஸ் கூட இருக்கு… அதும் தருவா…” மகள் சொல்லவும் பரத் புன்னகைக்க அனு நாணத்துடன் அடுக்களைக்கு சென்று விட்டாள்.
அந்த அறையிலேயே உடை மாற்றி பாத்ரூம் சென்று பிரஷ் ஆகிவிட்டு வந்தான். நல்ல வேளையாக ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியே பாத்ரூம் வசதி இருந்தது.
ஒரு குளியல் போட்டுவிட்டு டவலால் தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவன் அடுக்களைக்குள் நுழைந்தான்.
அனு டீயை ஆற்றிக் கொண்டிருக்க அவள் பின்னில் நின்று தலையைக் குலுக்க நீர்த்துளிகள் தன் மீது தெறித்ததில் சிலிர்த்து சிணுங்கலுடன் கூறினாள்.
“ப்ச்… என்னங்க, விளையாடிட்டு… பிள்ளைங்க பார்க்கப் போறாங்க…” அவள் சிணுங்கலை ரசித்துக் கொண்டே அவளைப் பின்புறமாய் அணைத்தவன் அவள் கழுத்தில் உதட்டை உரச நெளிந்து திரும்பியவளின் இதழை இசைக்கத் தொடங்கியவன் சில நிமிடம் கழித்தே விடுவித்தான்.
அவளுக்கும் அந்த முத்தமும் அணைப்பும் தேவையாய் இருந்ததோ என்னவோ அவனுக்குள் அடங்கி ஆழ்ந்து நின்று கொண்டிருந்தாள்.
“அப்பா…” தினேஷ் அழைத்துக் கொண்டே வரவும் சட்டென்று இருவரும் விலகினர்.
அனு கொடுத்த தேனீர் வித் போண்டாவை உள்ளுக்குள் தள்ளிவிட்டு குழந்தைகளிடம் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருக்க அனு வேலை முடிந்து சாப்பிட அழைத்தாள்.
“குழந்தைகளுக்கு கொடு… நான் அப்புறம் சாப்பிடறேன்…” பரத் சொல்லவும் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டாள்.
“நான் அப்பாக்கு ஊட்டி விடறேன்…” சொன்ன தன்யா ஒரு துண்டு பூரியை எடுத்து அவனுக்கு ஊட்ட தினேஷும் சேர்ந்து கொண்டான்.
“அம்மா பாவம்ல, அவளுக்கு நான் ஊட்டி விடறேன்…” சொன்னவன் அனுவுக்கு ஊட்ட சந்தோஷமாய் கழிந்தது.
குழந்தைகள் சாப்பிட்டு டிவி பார்க்கத் தொடங்க, இவர்கள் அடுக்களையில் அமர்ந்து சாப்பிட்டனர்.

Advertisement