Advertisement

அத்தியாயம் – 9

பாரதி ரிஷி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் அமைதியாய் இருக்கவே அவன் சிரிப்புடன் தொடர்ந்தான்.

“என்ன, பேச்சையே காணோம்… என்னடா இவன்…? அன்னைக்கு தண்ணி போட்டுட்டு போதைல புரபோஸ் பண்ணான், இன்னைக்கு தண்ணி போடாமலே புரபோஸ் பண்ணறான்னு ஷாக் ஆயிட்டீங்களா…?”

அவன் குரலில் தன்னை மீட்டுக் கொண்டவள், “ஹலோ, என்ன மிஸ்டர் இது… சாரி சொல்லறேன்னு நம்பர் வாங்கி கூப்பிட்டு மறுபடி லவ் யூன்னு சொல்லிட்டு இருக்கீங்க…?” படபடவென்று கேட்டாள் பாரதி.

“சாரி சொல்லணும்னு தான் நம்பர் வாங்கினேன், ஆனா என்ன பண்ணறது, உங்க காரக்டர் பத்தி தெரிஞ்சதும் மறுபடி மனசு லவ் யூ சொல்ல சொல்லுது, இதுக்கும் வேணும்னா ஒரு சாரி கேட்டுகிட்டுமா…?”

“என்ன விளையாடறீங்களா… ரொம்பதான் ஓவராப் போறீங்க, ரதீஷ் அண்ணா பிரண்டாச்சேன்னு பார்க்கிறேன்…”

“ஓஹோ, இல்லன்னா என்ன பண்ணுவிங்களாம்…?” ரிஷி சிரிப்புடன் கேட்க பாரதிக்கு கடுப்பானது.

“ச்சே, உங்களுக்குப் போயி பாவம் பார்த்தனே, அன்னைக்கு ரெஸ்டாரண்டுல அத்தனை பேரு முன்னாடி புரபோஸ் பண்ணப்பவே ஓங்கி அறைஞ்சிருக்கணும்…” பாரதிக்கு கோபத்தில் வார்த்தைகள் தடித்தது.

“ஓ… சாரி ரதி, நான் சொன்ன ஐ லவ் யூ உங்களுக்குப் பிடிக்கலன்னா அதை ரிட்டர்ன் பண்ணிடுங்க… நீங்க அழகா இருக்கீங்க, படிச்சிருக்கீங்க, தைரியமான பொண்ணா வேற இருக்கீங்க… என்னை எல்லாம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்காது, இப்ப சொன்ன லவ் யூக்கும் சேர்த்து ஒரு பெரிய சாரி சொல்லிக்கறேன்… முடிஞ்சா என் ஐ லவ் யூ வைத் திருப்பிக் கொடுத்திருங்க…” சிரித்தபடி சொன்னவன் பதிலை எதிர்பாராமல் போனை வைத்துவிட அவளுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.

ரிஷி அவன் அறையிலிருக்க,, அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சூர்யா தலையில் அடித்துக் கொண்டான்.

“டேய் ரிஷி, என்னடா பண்ணி வச்சிருக்க… அந்தப் பொண்ணுகிட்ட சாரி கேக்கணும்னு சொன்னதால தான கல்பனாகிட்ட பேசி நம்பர் வாங்கிக் கொடுத்தேன்… இப்ப மறுபடி இப்படிப் பேசி வச்சிருக்க…”

“ப்ச்… நான் தான் இப்ப சொன்ன லவ் யூக்கும் சேர்த்து மொத்தமா பெரிய சாரி கேட்டுட்டனே, அப்புறம் என்னடா உனக்குப் பிரச்சனை…?” என்றான் ரிஷி அசால்ட்டாய்.

“ஒரு விஷயத்தை சுமுகமாத் தீர்த்து வைக்கலாம்னு போன் நம்பர் வாங்கிக் கொடுத்தா அதை இன்னும் ஊதிப் பெருசாக்கிட்டு என்ன பிரச்சனைன்னா கேக்கற…” என்றவன் கையிலிருந்த தலையணையை அவன் மீது எறிந்தான்.

அழகாய் அதைக் காட்ச் பிடித்த ரிஷி புன்னகைத்தான்.

“டேய் சூர்யா, நான் சாரி சொல்லதான் நினைச்சேன்… அவளோட பேசிட்டு இருக்கும்போதே மனசுக்குள்ள யாரோ ஐ லவ் யூ சொல்லுன்னு பிராண்டிற போல இருந்துச்சு…”

“ஏன், விஸ்க்கற போல இல்லியா…? என்னடா ஆச்சு உனக்கு, ரெண்டு தடவையும் போதைல அப்படி சொன்னன்னு நினைச்சா இன்னைக்கு போதை இல்லாதப்பவும் லவ் யூன்னு சொல்லிட்டு இருக்க… உன் லெவலுக்கு நீ இப்படி எல்லாம் விளையாட்டா நடந்துக்கற ஆளே கிடையாதே…”

சூர்யா கேட்கவும் மென்மையாய் சிரித்தான் ரிஷி.

“அப்ப நான் விளையாட்டுக்கு புரபோஸ் பண்ணதா தான் நீயும் நினைச்சுட்டு இருக்கியா…?”

“பின்ன…? முன்னப் பின்னத் தெரியாத ஒரு பொண்ணுகிட்ட சட்டுன்னு யாராச்சும் புரபோஸ் பண்ணுவாங்களா…?”

“அவளை எனக்குத் தெரியாதுன்னு யாரு சொன்னா…?” ரிஷியின் கேள்வியில் முழித்தான் சூர்யா.

“என்னடா சொல்லற, பாரதியை முன்னமே தெரியுமா…?”

“ம்ம்… டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்…”

“ஆமா, நீ கூட அந்தன்னைக்கு ஏதாவது ஒரு உடல் ஊனமுற்றோர் இல்லத்துக்குப் போயி அவங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துட்டு வருவயே…”

“ம்ம்… போன வருஷம் காஞ்சிபுரத்துல ஒரு ஊனமுற்றோர் மறுவாழ்வு இல்லத்துக்குப் போயிருந்தேன், அங்கதான் பாரதியைப் பார்த்தேன்… அங்கே உள்ளவங்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்க வந்திருந்தா… உடல் ஊனம் இல்லாத ஒரு பொண்ணுக்கு எப்படி குறை உள்ளவங்களோட வலியும், வேதனையும் புரியும்னு நினைச்சேன்… ஆனா அவ்ளோ அருமையா அவங்களோட மனநிலையை, மத்தவங்க செய்யற உதாசீனத்துல மனம் சுருண்டு போறதை எல்லாம் எடுத்து சொன்னா… உடல் ஊனம் குறையில்லை, மனஊனம் தான் மனுஷனை முடக்கிப் போடும்னு சொன்னா, சமூகத்துல எங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பத்தி நிறையப் பேசினா, பிரமிப்பா இருந்துச்சு… அவளை அப்பவே பாராட்ட நினைச்சேன், முடியல… அதுக்கப்புறம் எப்பவாச்சும் மனசு சோர்வடையும்போது அவ பேசினதை நினைச்சுப்பேன்… அந்த அன்பான முகமும், பேச்சிலிருந்த சமூக அக்கறையும், உடல் ஊனமுள்ளவங்ககிட்ட காட்டின பரிவும் இப்பவும் கண்ணுக்குள்ளயே இருக்கு… மறுபடி அவளைப் பார்க்க முடியாதான்னு நினைச்சுட்டு இருந்தேன்…”

“ஓ… இதைப்பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்லையே, நான் அப்ப உன்னோட வரலியா…?”

“இல்லடா, போன வருஷம் உன் அப்பாவுக்கு உடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்ததால நீ வரலை, நான் மட்டும் காஞ்சிபுரம் போயிருந்தேன்…”

“அதெப்படி, ஒரு பொண்ணைக் கண்டதும் காதல் வருமா…?”

“நானும் அதைக் காதல்னு நினைக்கல, இப்படி ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டா வாழ்க்கை நல்லாருக்கும்னு தோணுச்சு… அன்னைக்கு ரெஸ்டாரண்டுல அவ குரலைக் கேட்டேன்… அவ பேசின விஷயமும் அது பாரதிதான்னு கன்பர்ம் பண்ணுச்சு, இவ்ளோ நாள் மனசுல நினைச்சுட்டு இருந்தவளை அங்கே பார்க்கவும் எப்படி பேசறதுன்னு தெரியல, சரி போதைல இருந்ததால புரபோஸ் பண்ணிட்டு சமாளிச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்…”

“ஓ… அப்ப அது நீ போதைல சொன்னது இல்லையா…?”

“அந்தளவுக்கு அன்னைக்கு போதை ஒண்ணும் இல்லை…”

“ஹூம், உன்னை அடிக்காம விட்ட பாரதி உண்மைலயே அற்புதமான பெண்தான்…” என்ற சூர்யா நண்பனைக் கிண்டலாய் நோக்க, “ரொம்ப பொறுமையானவளும் கூட…” ரிஷி சொல்ல திகைத்தான் சூர்யா.

“பின்ன… ரெஸ்டாரண்டுல சட்டுன்னு லவ் பண்ணறேன், கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டும் அவ என்னை அடிக்காம அமைதியா இருந்தாளே, அது பொறுமை தானே…” என்றவனை யோசனையுடன் நோக்கினான்.

“ம்ம்… அப்புறம் எதுக்குடா, ரதீஷ் எங்கேஜ்மென்ட் பங்ஷன்ல பாரதியை அறிமுகப்படுத்தினப்ப அப்பதான் முதல் முறை பாக்குற போல ரியாக்ட் பண்ணின…?”

“பின்ன, நான் ஏதோ போதைல சொன்னேன்னு நினைச்சுட்டு இருக்கறவகிட்ட இல்ல, தெரிஞ்சுதான் சொன்னேன்னு சொல்லி சபைல அடிவாங்கவா முடியும்…?”

“அப்ப நேத்து பூங்காவுல சாலஞ்ச் பண்ணிட்டு சொன்னது…?”

“அதெல்லாம் இவனுங்க எந்தப் பொண்ணுன்னு செலக்ட் பண்ணதுமே பாரதிதான்னு தெரிஞ்சிடுச்சு… கிடைச்ச சான்ஸை மிஸ் பண்ண வேண்டாம்னு தான் அவனுங்க சொல்லி புரபோஸ் பண்ணற போல சொன்னேன்…”

“அடப்பாவி, பச்சப்புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு எனக்குத் தெரியாம இவ்ளோ வேலை பார்த்திருக்கியா நீ… இந்த விஷயத்தை இத்தன நாளா யாருகிட்டயும் சொல்லாம வேற இருந்திருக்க…”

“அதான், இப்ப உன்கிட்ட சொல்லிட்டனே…”

“ஹூம், நல்லா சொன்ன… சரி, உனக்கு பாரதியைப் பிடிச்சிருக்கு ஓகே, அந்தப் பொண்ணுக்கும் உன்னைப் பிடிக்காம இப்படித் தொந்தரவு பண்ணறது தப்பில்லையா…?”

“ம்ம்… நானும் என் குறையை நினைச்சு முதல்ல அவகிட்ட சொல்ல தயங்கினேன்… சொல்லாம மனசுல வச்சு தவிக்கிறதுக்கு சொல்லிட்டு அவளுக்கு விருப்பமில்லேன்னா விலகிடலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்…”

“இப்ப பாரதியை மறுபடி சீண்டி விட்டுட்டு வந்திருக்கியே… போனாப் போகுதுன்னு உன்னை மன்னிக்க நினைச்ச பொண்ணு உன்மேல கோபமானா உன் லவ் ஊத்திக்காதா…”

“அப்படிலாம் அவளால என்னை ஈசியா தூக்கிப் போட்டுட முடியாது, மூணு தடவை புரபோஸ் பண்ணிருக்கேன்…” சொன்னவன் சிரித்துக் கொண்டே எழுந்து பிரிட்ஜைத் திறந்து விஸ்கி பாட்டிலை எடுத்து வர முறைத்தான் சூர்யா.

“நல்ல விஷயம் பேசிட்டு இருக்கோம், இப்பவாச்சும் இந்தக் கருமத்தைக் குடிக்காம இரேன் டா…”

“ரதி என் காதலுக்கு ஓகே சொல்லட்டும், அப்புறம் மொத்தமா நிறுத்திடறேன்…”

“ரதியா…? அது யாரு…?” என்ற சூர்யா, “ஓ… பாரதிக்கு செல்லப் பேரெல்லாம் வச்சுட்டியா…?” திகைப்புடன் கேட்க, தலையாட்டிய ரிஷி கன்னத்தில் குழி விழ சிரித்தான்.

“ம்ம்… இனியாச்சும் எல்லாம் நல்லா நடக்கட்டும்…” சூர்யா சொல்ல, “சரிடா, கொஞ்சம் தனியா இருக்க நினைக்கிறேன், நீ வீட்டுக்குக் கிளம்பறதுன்னா கிளம்பு…” என்றான்.

“ம்ம்… பார்த்துடா, ஹரி அண்ணா ஊருல இல்லாத தைரியத்துல ரொம்ப ஏத்திக்காத, அண்ணி திட்டப் போறாங்க…”

“சேச்சே, அண்ணி என்னை எப்பவும் எதுக்கும் திட்ட மாட்டாங்க, அவங்க எனக்கு அண்ணி இல்ல, அம்மா…”

“சரிடா, பார்த்துக்க, நான் கிளம்பறேன்…” சொன்ன சூர்யா பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பாரதியை யோசித்துக் கொண்டே குடித்தவனுக்கு முதல் ரவுண்டிலேயே போதுமென்று தோன்ற பாட்டிலை எடுத்து வைத்துவிட்டு கட்டிலில் விழுந்தான். அவளுடன் பேசியதை யோசித்தவனுக்கு இதழில் முறுவல் பூக்க, மனது லேசாகி பறவை போல் பறப்பதாய் தோன்றியது.

“ரதீ… பாரதீ…”

“நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா…

தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்…”

சுகமாய் பாடிக் கொண்டு கண் மூடிக் கிடந்த ரிஷி கதவு திறக்கும் ஓசையில் கண் திறந்தான். அண்ணி கங்கா அவனை சிரிப்புடன் பார்த்து நின்றாள். பதறி சட்டென்று எழுந்து அமர்ந்தவனின் அருகே வந்தாள்.

“ரிஷி, என்னாச்சு… பாட்டெல்லாம் தூள் பறக்குது, புதுசா ஏதாச்சும் சைட்டு மாட்டிகிச்சா என்ன…”

“போங்கண்ணி, கிண்டல் பண்ணிட்டு… சும்மா பாடினேன்…”

“ம்ம்ம், ம்ம்… நம்பிட்டேன்… இன்னைக்கு என்ன, எங்கயும் வெளிய போகாம வீட்டுல இருக்கே… இந்த நேரத்துல வழக்கமா நீ பார்ல தானே இருப்ப, உன் அண்ணன் ஊருல இல்லேன்னா சொல்லவே வேண்டாம்… விடியக்காலை தான் வீட்டுக்கே வருவ, என்னாச்சு இன்னைக்கு…”

“ஒண்ணும் இல்ல அண்ணி, எங்கயும் போகப் பிடிக்கல… அதான் லைட்டா வீட்டுலயே லிக்கர் எடுத்துகிட்டேன்…”

“ஹூம்… அந்தக் கஷாயத்தை எப்படித்தான் குடிக்கறியோ… ஏதோ, அதைக் குடிச்சா உன் குறையை நினைச்சு பீல் பண்ணாம இருக்கேன்னு தான் நான் அலவ் பண்ணறேன்… உன் அண்ணனுக்கு மட்டும் தெரிஞ்சுது, அவ்ளோதான்…”

“எனக்குத் தெரியும் அண்ணி… என் மேல உள்ள பிரியத்துல தான் இதுக்கெல்லாம் நீங்க அலோ பண்ணறீங்கன்னு… எனக்கும் கால் எல்லாரையும் போல இருந்திருந்தா நானும் உங்களோட ஆபீஸ் வந்துட்டு பிசினஸைப் பார்த்திட்டு இருப்பேன்… கடவுள் எனக்கு இப்படி ஒரு குறையைக் கொடுத்துட்டாரே…” என்றான் வருத்தத்துடன்.

“பீல் பண்ணாத ரிஷி… உனக்கு இருக்கிற பிரச்சனையோட பிசினஸ் பிரச்சனையும் சேர்த்து மண்டைல ஏத்திக்க வேண்டாம்னு தான் உன்னை ப்ரீயா இருக்க விட்டு நானும், உன் அண்ணணுமே அதைப் பார்த்துக்கறோம்… நீ எப்பவும் போல சந்தோஷமா இரு…”

“ம்ம்… உங்களைப் போல அண்ணி கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்… நீங்க அண்ணனைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்த பிறகு அம்மா இல்லைன்னு என்னை பீல் பண்ணவே விட்டதில்ல…” என்றான் நெகிழ்வுடன்.

“டேய் ரிஷி, நீ என் வயித்துல பிறக்கலைன்னாலும் நான் உனக்கு அம்மா தான் டா… சரி, டின்னர் ரெடி பண்ணனும், நைட்டுக்கு உனக்கு என்ன வேணும்…”

“எனக்கு ரெண்டு பொடி தோசை வித் தேங்கா சட்னி…”

“அரை மணி நேரத்துல ரெடி பண்ணிடறேன், சாப்பிடாம தூங்கிடாத…” சொன்னவள் எழுந்து வெளியே சென்றாள்.

“அண்ணிக்கு தான் என்மேல எவ்ளோ பாசம்… சொந்தப் பிள்ளையை ஹாஸ்டல்ல விட்டுட்டு என்னைப் புள்ளை போல பார்த்துக்கறாங்க…” யோசிக்கையில் மனம் கனிந்தது.

அங்கேயோ இரவு உணவு முடிந்து உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் பாரதி. ரிஷி சொன்ன வார்த்தைகள் மீண்டும் காதுக்குள் கேட்பது போலவே தோன்றியது. முதலில் தோன்றிய கோபமும், சிறிது நேரத்தில் காணாமல் போய் அவனது குறும்பு நிறைந்த புன்னகைக் குரல் இம்சை செய்து கொண்டிருந்தது.

அதோடு கங்காவின் வார்த்தைகளும் மனதுக்குள் மோத புதிய வேலை எப்படி இருக்குமோ என்ற தவிப்பும் இருந்தது.

அப்போதுதான் அடுக்களையில் வேலை முடிந்து வந்த சக்தி அன்னையின் அறைக்கு சென்று நோக்க, நிம்மதியான உறக்கத்தில் இருந்தார் தேவிகா. அவரது அறைக்கதவை வெறுமனே சாத்திவிட்டு ஒட்டி இருந்த தங்கள் அறைக்குள் நுழைந்தாள். அரைகுறையாய் சாப்பிட்டு நேரமே படுக்க சென்ற தங்கை உறங்காமல் புரண்டு கொண்டிருப்பதைக் கண்டு புன்னகையுடன் அருகே அமர்ந்தாள்.

“பாரு… என்னடி, தூக்கம் வரலியா…?” அக்காவின் குரலில் திடுக்கிட்டு கண்ணைத் திறந்தாள் பாரதி.

“ம்ம்… என்னவோ தெரியலக்கா, தூக்கம் வரல…”

“படுத்து அஞ்சு நிமிஷத்துல தூங்கற ஆளு நீ… என்னாச்சு இன்னைக்கு…? புது வேலை, புது ஆளுங்கன்னு பழகப் போற, அதை யோசிச்சு கவலைப்படறியா… உன் சுபாவத்துக்கு எந்த இடமா இருந்தாலும் நீ பொருந்திப் போயிருவ, அப்புறம் எதுக்குடி கலக்கம்…”

“அதில்லக்கா…” சுரத்தில்லாமல் வந்தது தங்கையின் குரல்.

“அப்புறம் என்ன, என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கறியா…? அதுக்கு தான் மாமா, திலகா அத்தைகிட்ட பேசறேன்னு சொல்லிட்டாங்களே, அம்மாவைப் பத்தி யோசிக்கறியா…?” பாரதி அமைதியாய் இருக்க சக்தியே கேட்டாள்.

“அத்தை அம்மாவைப் பார்த்துக்கறேன்னு சொன்னாலும் அவங்களுக்கும் வயசாகுது, அவங்களை சிரமப்படுத்த வேண்டாம்… எனக்கு கல்யாணமானாலும் நான் சென்னைல தானே இருக்கப் போறேன்… கூட வச்சுக்க திலகா அத்தை சம்மதிக்கலேன்னாலும் பக்கத்துலயே ஒரு வீடு பார்த்துட்டா நீ வேலைக்குப் போகும்போது பகல்ல நானே அம்மாவைப் பார்த்துப்பனே…” என்றாள் சக்தி.

“ம்ம்… இதும் நல்ல யோசனைதான்…” பாரதியின் இதழ்கள் சொன்னாலும் யோசனை எங்கேயோ இருப்பது போல் தோன்றியது சக்திக்கு.

“என்னடி, என்ன உன் மனசை அலட்டிட்டு இருக்கு…?”

“ஒ..ஒண்ணுமில்லைக்கா… உங்களை எல்லாம் விட்டுட்டு சென்னைல ஹாஸ்டல்ல தனியா இருக்கறதை யோசிச்சேன், வேற ஒண்ணுமில்ல…” சமாளித்தாள் பாரதி.

“இவ்ளோ தானா, சனிக்கிழமை கிளம்பி வந்திரு… மண்டே முதல் பஸ்ல கிளம்பிக்கலாம்… நீ இல்லாம எனக்கு தான் பேசக் கூட ஆளில்லாம ரொம்ப கஷ்டமா இருக்கும்…” சொன்ன சக்தி தங்கையின் கையைப் பற்றிக் கொள்ள,

“அக்கா, கொஞ்சநேரம் உன் மடில படுத்துக்கவா…?” என்ற தங்கையைப் புன்னகையுடன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.

“பாரு, மனசைப் போட்டு அலட்டிக்காத… எந்த சூழ்நிலையா இருந்தாலும் அதுக்கு தீர்வுன்னு ஒண்ணு நிச்சயம் இருக்கும்… நிதானமா யோசிச்சு முடிவெடுக்கிற தைரியம் உனக்கு இருக்கு… உன் திறமையும், அறிவும் உன்னை நல்ல உயரத்துக்கு கொண்டு வரும்… நீ புத்திசாலி, எந்த விஷயத்துலயும் மத்தவங்க இடத்துல இருந்து யோசிச்சுப் பார்த்தா அதுக்கான காரணம் புரியும்… மத்தவங்க சரியைப் புரிஞ்சுக்க, ஆனா உனக்கு சரின்னு தோணினதை மட்டும் பண்ணு…” நிதானமான குரலில் சொன்னாள் சக்தி.

“ம்ம்… சரிக்கா…” என்றவளுக்கு மனம் சற்று அமைதியானது.

“நாளைக்கு சத்யன் அத்தானுக்கு போன் பண்ணி எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தை சொல்லணும், அப்படியே கல்யாண விஷயமும் பேசணும்க்கா…”

“ம்ம்… கல்யாண விஷயத்தை மாமா பேசிப்பார்… நீ வேலை கிடைச்சதை மட்டும் சொல்லு…” என்றவளின் கண்களில் சத்யனை சொன்னதும் சிறு புன்னகை தெரிய, “இந்தக் காதல் ரொம்பப் பொல்லாதது, இல்லக்கா…” என்றாள் பாரதி.

“ச்சீ போடி, எங்களது காதல் எல்லாம் தாண்டி அத்தானை புருஷனாவே நினைக்கத் தொடங்கி பல வருஷம் ஆச்சு… ஆமா, உனக்கு எப்ப காதல் பொல்லாதது ஆச்சு…” என்றாள் தங்கையைக் குறுகுறுவென்று நோக்கி.

“அ..அது பொதுவா சொன்னேன்…” என்று எழுந்து கொண்டாள்.

“உனக்கும் அசதியா இருக்கும், நீ தூங்குக்கா…”

“ம்ம்…” சக்தி படுத்துக் கொள்ள அவள் மீது கையைப் போட்டு அணைத்தபடி அருகே படுத்துக் கொண்டாள் பாரதி. மெல்ல கண்ணை மூடி உறங்கத் தொடங்கியவளின் காதுக்குள் “ரதீ…” என குரல் கேட்க சட்டென்று கண்ணைத் திறந்தாள். கன்னத்தில் குழி விழ அவளை நோக்கி காதலுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான் ரிஷி.

எனை வீழ்த்தவென்றே

தோண்டினாயோ உன்

கன்னத்தில் குழியை…

எத்தனை எழுந்தாலும்

எனை இழுத்தே சாய்க்கிறது…

புரியாமல் தத்தளிக்கும்

என் மனதிற்கு உன்

புன்னகையே மருந்தாகிறது…

Advertisement