Advertisement

அத்தியாயம் – 8

வான்மதியின் பெற்றோரிடம் தனக்கு வேலை கிடைத்த விவரத்தை சொல்லிவிட்டு அவள் அன்னையின் கையால் சூடான காபியைக் குடித்துவிட்டு சந்தோஷத்துடன் வீட்டுக்குக் கிளம்பினாள் பாரதி.

வாசல் கதவைத் திறந்து உள்ளே நுழையும்போதே அத்தை அஷ்டலட்சுமியின் குரல் வெண்கலப் பானைக்குள் ஒலிப்பது போல் கிறீச்சிட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.

“தினம் யாருகிட்டயாச்சும் பஞ்சாயத்து பண்ணறதே தலை எழுத்தாப் போயிருச்சு… அந்த மனுஷன் நிம்மதியா கடைக்குப் போயி வியாபாரத்தைப் பண்ண முடியுதா… ஆத்தாகாரி படுக்கையே கதின்னு படுத்துக் கிடக்கா… சின்னவ யாரு சொன்னாலும் கேக்காம வேலை தேடறேன்னு கிளம்பிப் போயிடறா… சரி, பெரியவளாச்சும் நிம்மதியா இருக்க விடுறாளா, அவளாலயும் பிரச்சனை…”

ச்சே… இந்த அத்தை அஷ்டலட்சுமி இல்லை, சரியான கஷ்டலட்சுமி… சந்தோஷமா ஒரு விஷயத்தை சொல்ல வந்தா புலம்பிட்டே இருக்க வேண்டியது… அக்காவால என்ன பிரச்சனையா இருக்கும், ஒருவேள அத்தான் வீட்டுல இருந்து…” யோசித்தவள் பதட்டமாய் உள்ளே நுழைய அவளை எரிச்சலுடன் பார்த்தாள் அத்தை.

“என்னடி, வேலை தேடறேங்கற பேருல நல்லா ஊர் சுத்தி முடிச்சு வந்துட்டியா…?” என்றவருக்கு பதில் சொல்லாமல் அன்னையின் அறைக்குள் நுழைய அங்கே அக்கா சக்திப்பிரியா கண்ணீருடன் அன்னையின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். தேவிகாவின் கண்ணிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. தங்கையைக் கண்டதும் சக்தியின் கண்ணீர் அதிகமாக விசும்பியவளின் அருகில் ஆதரவாய் அமர்ந்த பாரதி, “அக்கா, என்னாச்சு…? எதுக்கு அத்தை புலம்பிட்டு இருக்காங்க, நீ எதுக்கு அழற…?” என்றாள் மனம் பதைக்க.

அவள் பதில் சொல்லாமல் விசும்பிக் கொண்டிருக்க அன்னையைக் கேள்வியுடன் நோக்கிய பாரதி, “அத்தான் வந்திருந்தாரா…?” என்றாள்.

“திலகா வந்தி…ருந்தா…” அன்னை குழறலாய் சொன்னாலும் பாரதிக்குப் புரிந்தது. பாரதியின் தந்தை திலீபனின் தங்கை தான் இந்த திலகா. சக்திபிரியா பிறந்ததும் அண்ணனிடம் தன் மகனுக்குதான் அவளை மணமுடிக்க வேண்டுமென்று சொல்லி வைக்க, அந்தப் பேச்சு அவர்கள் வளரும்போதும் தொடர, இருவர் மனதிலும் வேரூன்றிப் போயிருந்தது.

நடுவில் திலீபனின் மரணமும், இவர்களின் வாழ்க்கை முறை மாற்றமும் திலகாவைத் தடுமாறச் செய்தாலும் அவளது ஒரே மகன் சத்யன் எத்தனை காலமானாலும் சக்தியைத் தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதமாய் கூறிவிட்டதால் அரை மனதாய் ஒத்துக் கொண்டார். சென்னை கார்ப்பரேஷனில் உத்தியோகத்தில் இருந்த திலகாவின் கணவன் வேலையில் இருக்கும்போதே ஆக்சிடன்டில் இறந்து போக, வாரிசு அடிப்படையில் சத்யனுக்கு கிளர்க் வேலை கிடைத்தது. அரசாங்க வேலை, கம்பீரமான சத்யனுக்கு பெண் கொடுக்க சொந்தத்திலும், வெளியிலுமாய் நிறையப் பேர் பேச்சுவார்த்தை நடத்த, திலகாவின் மனது தத்தளிக்கையில் இங்கே வந்து கல்யாணப் பேச்சை எடுத்து சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அதட்டி, மிரட்டி செல்வது வழக்கமாய் போயிற்று.

சக்திக்கும் இருபத்தைந்து முடிந்திருக்க, சத்யனுக்கு முப்பது முடியும் தருவாயில் இருந்தது. சத்யன் எப்போதாவது இவர்களைக் காண இங்கே வந்தாலும் அஷ்டலட்சுமிக்கு பயந்து உடனே கிளம்பி விடுவான். மாதம் ஒருமுறை பாரதியின் அலைபேசிக்கு அழைத்து எல்லாரைப் பற்றியும் நலன் விசாரித்துக் கொள்வான். அவன் இவர்களுக்கு உதவ நினைத்தாலும் கோபால் சம்மதிக்கவில்லை. “முறையாய் மாப்பிள்ளையாகும்போது பார்த்துக் கொள்ளலாம், அதுவரை என் தங்கை குடும்பம் என் பொறுப்பு…” என்றுவிட்டார்.

“என்ன…? அத்தை வந்து கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்னு கேட்டு ஆடிட்டுப் போச்சா…?” பாரதி கேட்க சக்தியின் கண்கள் மேலும் வேகமாய் கண்ணீரை சுரந்தது.

“அக்கா… இப்படி அழுதுட்டே இருந்தா என்ன பண்ணறது, அவங்க வந்தப்ப மாமா வீட்டுல இருந்தாரா…?” எனவும் இடவலமாய் தலையாட்டி இல்லையென்றாள் சக்தி.

“திலகா அத்தை என்ன சொன்னாங்க…?”

“இன்னும் காத்திருக்க முடியாது, உடனே கல்யாணத்தை வைக்கணும், இல்லேன்னா வெளிய வேற பொண்ணைப் பார்த்துக்கறோம்னு சொன்னாங்க…” சொல்லும்போதே சக்திக்கு மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது.

“அத்தை அப்படிதான் சொல்லும், அத்தான்கிட்ட பேசி நீதான் கொஞ்சம் அவகாசம் கேக்கணும்…”

“இல்ல, எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம்… அவங்கள வெளிய பொண்ணு பார்த்துக்க சொல்லிடு…” இதழ்கள் சொன்னாலும் எதிராய் கண்கள் கலங்கியது.

“ப்ச்… அத்தை ஏதோ புரியாம அவசரப்படறாங்க, அத்தான் அப்படியில்லை… உன்னைப் புரிஞ்சுகிட்டு காத்திருக்கார், அவருக்குத் தெரியாம தான் அத்தை இங்க வந்து சாமி ஆடிட்டுப் போயிருக்கும்னு நினைக்கிறேன்… அவர்கிட்ட நான் பேசறேன், நீ பீல் பண்ணாம இரு…” தங்கை அக்காவை சமாதானப் படுத்தினாள்.

“இல்ல பாரு, நான் நிஜமா தான் சொல்லறேன், அத்தை சொன்னதும் சரிதான… அவங்க நல்லாருக்கும்போதே அவங்க ஒரே பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்படுறதை தப்பு சொல்ல முடியாது… அத்தானுக்கும் வயசாகிட்டே போகுது, அவங்க கவலை நியாயமானது தானே…” என்றாள் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு.

“அக்கா, இன்னும் எத்தன வருஷம் தான் நீ அம்மாவை கவனிச்சிட்டு பக்கத்துலயே இருக்க முடியும், உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாமா…? அத்தான் உனக்காக தானே இத்தன வருஷமா காத்திருக்கார்…”

“அதுக்காக…? என் கல்யாணம்தான் முக்கியம்னு உன்னையும், அம்மாவையும் அப்படியே விட்டுட்டுப் போக முடியுமா… திலகா அத்தை, அம்மாவை கூட வச்சிக்க சம்மதிச்சா நான் நாளைக்கேகூட கல்யாணத்துக்கு சம்மதிப்பேன்… அதோட மாமாவால அவங்க எதிர்பார்க்கிற சீரெல்லாம் செய்ய முடியுமா…? அத்தை தான் விடுவாங்களா…? இதெல்லாம் நடக்காது பாரு, நான் இப்படியே இருந்துடறேன்… என்னால யாருக்கும் எந்த சிரமமும் வேண்டாம்…”

“அக்கா, முதல்ல கண்ணைத் துடை, எல்லாத்துக்கும் நிச்சயம் ஒரு வழி இருக்கும்… இப்பகூட நான் ஒரு சந்தோஷமான விஷயத்தோட தான் வந்தேன்…”

பாரதி சொல்லவும், அப்போதுதான் தங்கை சென்னை சென்ற விஷயம் மூளையில் உறைக்க ஆவலுடன் ஏறிட்டாள் சக்தி.

“அக்கா, எனக்கு வேலை கிடைச்சிருச்சு…” என்றதும் அதுவரை அவள் முகத்திலிருந்த கவலை மேகங்கள் சுவிட்ச் போட்டது போல் விலக சூரியனாய் பளிச்சென்று சிரித்தாள்.

தேவிகா சின்னவளின் கையைப் பற்ற அன்னையிடம் திரும்பியவள், “ஆமாம் மா… நல்ல சம்பளத்தோட வேலை, மூணு மாசத்துல கன்பர்ம் பண்ணுவாங்க, அதுக்கப்புறம் உங்களைப் பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு… அக்காவோட கல்யாணத்துக்கும் பேசிடலாம்…” என்றதும் தேவிகாவின் முகத்தில் யோசனை தெரிந்தது.

“நான் பாவி, என் பொண்ணு..ங்களுக்கு பாரமா என்னைப் படுக்கப் போ…டாம சீக்கிரம் கடவுள் கொண்டு போயி…ட்டா பரவால்ல…” என்றார் கண்ணீருடன்.

“அம்மா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க… படுக்கைல இருந்தாலும் அம்மான்னு நீங்க இருக்கிறதால தான் நாங்க அநாதைன்னு பீல் பண்ணாம நிம்மதியா இருக்கோம்… மாமாவுக்கு ரொம்ப சிரமத்தைக் கொடுக்கக் கூடாது… அவர் நமக்காக ரொம்ப கடன் பட்டுட்டார், அக்காவோட கல்யாணம் என் பொறுப்பு…” என்றாள் பெரிய மனுஷியாக.

“இல்ல பாரு… அத்தை எதிர்பார்க்கிற போல எல்லாம் நம்மால சீர் செய்ய முடியாது, அவங்க இதுல கறாரா இருப்பாங்க…” என்றாள் சக்தி கவலையுடன்.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்… அம்மா, உங்களுக்கும் தான் சொல்லறேன்… இந்த உலகத்துல யாரும் யாருக்கும் பாரமில்லை, எல்லாருக்கும் அவங்கவங்களுக்கான கடமை ஏதாச்சும் இருக்கும்… இனி நீங்களும் வருத்தப்படவோ சாவைப் பத்தி பேசவோ கூடாது, சொல்லிட்டேன்… அக்கா, இந்தா என் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்… வர்ற ஒண்ணாம் தேதி வேலைக்கு ஜாயின் பண்ணனும்…” சொன்னவள் பையிலிருந்த கவரை எடுத்து நீட்ட வாங்கிப் பார்த்த சக்தியின் முகம் மலர்ந்தது.

“பரவால்லடி, முதல்லயே நல்ல சம்பளம்…” சந்தோஷமாய் சொன்னவள் அன்னைக்கு வேலையைப் பற்றிப் படித்துக் காட்ட அவர் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.

“அம்மா, இந்த மூணு மாசம் பல்லைக் கடிச்சு ஹாஸ்டல்ல நின்னுட்டு பர்மனன்ட் ஆனதும் சென்னைல ஒரு வீடு பார்த்து அங்க போயிடலாம்… உங்களைப் பார்த்துக்க யாரையாச்சும் ஏற்பாடு பண்ணிக்கலாம்… அக்காவுக்கும், சத்யன் அத்தானுக்கும் கல்யாணத்தை முடிச்சுடலாம்…” அடுத்தடுத்து அவள் கற்பனைகளை அடுக்கிச் செல்ல கேட்டவர்களின் முகம் மலர்ந்தது.

“அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம், இப்போதைக்கு உனக்கு வேலை கிடைச்சதே பெரிய சந்தோஷம்டி…”

சொன்ன சக்தியின் கையைப் பற்றிக் கொண்ட பாரதி, “அக்கா, நீ எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்க… உன் நல்ல மனசுக்கு நீ விரும்பிய அத்தானே புருஷனா வருவார்க்கா…” பாரதி சொல்லவும் சக்தியின் முகத்தில் நாணப் புன்னகை.

“ச்சீ, போடி… பெரிய மனுஷி போல பேசிட்டு…” சிணுங்கினாள்.

“அக்கா, முதல்ல எனக்கு வேலை கிடைச்ச விஷயத்தை நம்ம அஷ்டலட்சுமிகிட்ட சொல்லி அவங்க முகம் எப்படி அஷ்டகோணலாப் போகுதுன்னு பார்க்கலாம், வா…” எனவும் புன்னகைத்த சக்தி எழுந்து தங்கையுடன் வந்தாள்.

சீரியலில் கண்ணைப் பதித்ததால் வாய்க்கு சற்று ஓய்வு கொடுத்திருந்த அஷ்ட லட்சுமியிடம் வந்தவள், “அத்தை… ஒரு நிமிஷம், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,…” என்றதும் எரிச்சலுடன் திரும்பியவர் முறைத்தார்.

Advertisement