Advertisement

கல்பனாவிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கும் சந்தோஷம். மதிய உணவை அவள் வீட்டில் முடித்துக் கொண்டு இருவரும் விடைபெற்று ஊருக்குக் கிளம்பினர்.

பேருந்தில் பயணிக்கையில் பாரதியின் மனது ஒரு நிலையிலேயே இல்லாமல் குதூகலித்தது. இளையராஜாவின் குரலில், ‘நான் தேடும் செவ்வந்திப்பூவிது… ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது…’ பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அதைக் கூட ரசிக்க முடியாமல் மனது தத்தளித்துக் கொண்டிருந்தது.

“இப்பவும் என்னால நம்ப முடியல, இந்த ரெண்டு நாள்ல என்னெல்லாம் நடந்திருச்சு… அம்மாவும், அக்காவும் வேலை கிடைச்சது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவாங்க, இதை போன்ல சொல்லாம நேர்ல சொல்லி அவங்க எக்ஸ்பிரஷனைப் பார்க்கணும்… கிளம்பும்போது அத்தை என்னை ராசிகெட்டவ, இந்த வேலையும் கிடைக்காதுன்னு சொன்னாங்க, அவங்ககிட்ட அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை நீட்டினா எப்படி இருக்கும்…?” யோசிக்கும்போதே மனது சிறகு முளைத்து பறக்க இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது.

“என்னடி, சிரிச்சுட்டு இருக்க…?” வான்மதி கேட்க மனதில் நினைத்ததை சொல்ல அவளும் சிரித்தாள்.

“வானு, இனியும் மாமா, அத்தையை சிரமப்படுத்தாம அம்மாவையும், அக்காவையும் அழைச்சிட்டு சென்னை போயிடலாம்னு நினைக்கிறேன்…”

“பண்ணலாம், ஆனா இந்த கங்கா வேலை கொடுத்ததையே என்னால இன்னும் நம்ப முடியல, அவளை நம்பி அடுத்த ஆக்ஸன்ல இறங்கணுமா… அப்படி அந்த வேலை நல்லதாவே இருந்தாலும் உனக்கு ஸ்டார்ட்டிங் கிடைக்கிற இருபதாயிரம் சம்பளத்துல வாடகை, மளிகை, அம்மாவோட ட்ரீட்மென்ட் எல்லாம் சமாளிக்க முடியுமா…?” வான்மதி அவர்களின் நிலையை யோசித்து தோழியிடம் கேட்டாள்.

“ம்ம்… நீ சொல்லுறதும் சரிதான் வானு, நான் மூணு மாசம் ஹாஸ்டல்ல தங்கிட்டு அப்புறம் பர்மனன்ட் ஆனதும் அவங்களை இங்கே அழைச்சிட்டு வர்றதுதான் நல்லதுல்ல…”

“ம்ம்… ஆமா…” என்றவள் அலைபேசி சிணுங்கவே எடுத்துப் பார்க்க கல்பனா லைனில் இருக்க ஸ்பீக்கரில் போட்டாள்..

“வானு, ரெண்டு பேரும் பஸ் ஏறிட்டிங்களா…”

“ஆமா கல்ப்ஸ், பஸ் எடுத்து இருபது நிமிஷம் ஆச்சு…”

“ஓ… பத்திரமாப் போங்க, அங்க ரீச் ஆனதும் கால் பண்ணு…”

“சரி கல்ப்ஸ்…”

“அப்புறம் வானு, நேத்து பூங்காவுல நடந்த விஷயத்தை நான் அவர்கிட்ட சொன்னேன்… ரிஷி அண்ணா இப்படி நடந்துகிட்டது கொஞ்சம் கூட சரியில்ல, பணம் இருந்தா, யாருகிட்டயும் என்ன வேணும்னாலும் பேசலாமா…? பொண்ணுங்ககிட்ட இப்படியா நடந்துப்பாங்க, நீங்கள்லாம் சொல்ல மாட்டீங்களான்னு கேட்டேன்…” கல்பனா சொல்லவும் பாரதியின் முகத்தில் ஒரு ஆர்வம் தெரிய வான்மதி வேண்டுமென்றே கல்பனாவிடம் கேட்டாள்.

“ம்ம்… அதுக்கு உன் உட்பி அந்த குடிகார பிரண்டை விட்டுக் கொடுக்காம அதுக்கொரு நியாயம் சொல்லி இருப்பாரே, என்ன சொன்னார்…?” என பாரதி அமைதியாய் பார்த்தாள்.

“வானு, ரிஷி அண்ணா ரொம்ப நல்லவராம்… காலேஜ்ல படிக்கும்போது ஒரு ஜூனியர் பொண்ணை உயிருக்கு உயிரா நேசிச்சு இருக்கார்… அவதான் அந்த காலேஜ்க்கே பியூட்டியாம், அவளோட காலேஜ் பீஸ், போட்டுக்கிற டிரஸ், நகைன்னு நிறைய செலவு பண்ணுவாராம்… அவ படிச்சு முடிச்சதும் இவர் கல்யாணத்தைப் பத்தி பேசத் தொடங்க, அவ இவரை மெல்ல அவாய்ட் பண்ணத் தொடங்கிருக்கா… ஒருநாள் வேற ஒரு பணக்கார பையனோட அவ ரொம்ப குளோசா இருக்கிறதைப் பார்த்திட்டு இவர் கேள்வி கேட்க அந்தப் பொண்ணு, நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிருக்கா… இவருக்கு கோபம் வந்து என்னை லவ் பண்ணிட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிப்பியான்னு அடிக்கப் போகவும், அவ பிடிச்சுத் தள்ளி விட, இவர் விழுந்துட்டாராம்…”

“அச்சச்சோ, காலுக்கு முடியாதவரைப் பிடிச்சு தள்ளி விட்டிருக்காளே அந்தப் பாதகி…” என்றவள் பாரதியை நோக்க அவள் முகத்திலும் வேதனை தெரிந்தது.

“ம்ம்… அவளும் இதே தான் சொல்லிருக்கா… நொண்டிக்காலை வச்சிட்டு உனக்கு என்னைப் போல அழகான பொண்ணு கேக்குதா, உனக்கு ஏதாச்சும் கண்ணு, காது கேட்காத பொண்ணு கிடைக்குமான்னு பாரு, இல்லேன்னா உன்னைப் போல ஒரு நொண்டிப் பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க… என்னால எல்லாம் உன்னோட வாழ்நாள் முழுசும் குப்பை கொட்ட முடியாது… ஏதோ கொஞ்சநாள் என்னோட பழகினது உன் பாக்கியம்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்கன்னு ரொம்ப கேவலமாப் பேசி அவமானப் படுத்திருக்கா…” கல்பனா சொன்னதைக் கேட்ட இருவரின் உள்ளமும் வருந்தியது.

“அச்சச்சோ, இப்படி ஒரு பெண்ணா…?”

“ம்ம்… அந்த சம்பவத்துல ரிஷி அண்ணா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டாராம்… அவரோட ஊனத்தை அதுவரை பெருசா நினைக்காதவர் அப்புறம் எப்பவும் தன்னைக் குறைச்சலா நினைக்கத் தொடங்கி இருக்கார்… கால் நொண்டியா இருக்கிற என்னை உண்மையா எந்தப் பொண்ணாலும் நேசிக்க முடியாதா…? இந்தப் பணம் மட்டும் இல்லேன்னா என்னை யாருக்கும் வேண்டாமான்னு புலம்புவாராம்…? அதுக்கப்புறம் தான் ரிஷி அண்ணா குடிக்கத் தொடங்கி இருக்கார்… பொண்ணுங்க மேல பொதுவாவே அவருக்கு ஒரு வெறுப்பு, கோபம்… பணத்துக்காக எதையும் பண்ணுவாங்க, ஏமாத்துவாங்கன்னு நினைப்பு…”

“கல்ப்ஸ், அவரோட வாழ்க்கைல நடந்த தப்பான ஒரு சம்பவத்துனால எல்லாப் பொண்ணுங்களும் அவளைப் போல தான் இருப்பாங்கன்னு நினைக்கிறது தப்பில்லையா…? அதுவுமில்லாம கால் ஊனமான எத்தனையோ பேர் வாழ்க்கைல எத்தனையோ சாதனையை செய்யலியா…? ஒரு சம்பவத்துல வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு எப்படி நினைக்கலாம்…” என்றாள் பாரதி.

“சரிதான், ஆனா அவருக்கு அதெல்லாம் புரிய வைக்க யாரு இருக்கா…? வேதனையை மறக்கக் குடி… கை நிறையப் பணம்னு நாளைக் கடத்திட்டு இருக்கார்… இந்த சாலஞ்ச் எல்லாம் வேண்டாம்னு தான் ரகு அண்ணா சொல்லிருக்கார்… நொண்டிக் காலை வச்சிட்டு என்னால முடியாதுன்னு நினைக்கறியான்னு ரிஷி அண்ணா கேட்கவும் தான் வருத்தப்பட விட வேண்டாம்னு அமைதியாகிட்டார்… அந்த ஊனம் ஒரு காம்ப்ளெக்ஸ்ஸா அவர் மனசுல ரொம்பப் பெரிய பள்ளத்தைத் தோண்டி வச்சிருக்கு, அதான் தன்னைத் தானே ஏமாத்திக்க என்னால எல்லாம் முடியும்னு தேவையில்லாம ப்ரூவ் பண்ணிட்டு இருக்கார்…”

“எல்லாம் சரி, முன்னப் பின்னத் தெரியாத பாரதிகிட்ட அப்படிப் பேசினதுக்கு அவ ஓங்கி அறைஞ்சிருந்தா இவர் என்ன பண்ணிருப்பார்…”

“ரதீஷ்கிட்ட தான் நடந்து கிட்டதைப் பத்தி ரொம்ப பீல் பண்ணி சாரி சொல்லிருக்கார்… முதல்ல ரெஸ்டாரண்டுல இவகிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டது அவருக்கு நியாபகமே இல்லை… அந்தளவுக்கு அன்னைக்கு போதைல இருந்திருக்கார்… சூர்யா அண்ணா சொல்லவும் ரொம்பவே வருத்தப்பட்டார்… எனக்கு கால் பண்ணி உங்க பிரண்டுகிட்ட நான் மன்னிப்பு கேக்கணும், அவங்க போன் நம்பர் கொடுங்கன்னு கேட்டார்…”

“ப்ச்… சொல்லுறதெல்லாம் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா… நீ போன் நம்பர் கொடுக்கல தானே…”

வான்மதியின் கேள்விக்கு சில நொடிகள் மௌனம் காத்த கல்பனா, “நான் போன் நம்பர் கொடுத்துட்டனே…” என்றாள்.

“ஏய், உனக்கு அறிவிருக்கா… அவன் கேட்டா போன் நம்பர் கொடுத்துருவியா… இவளுக்கு ஆல்ரெடி உள்ள பிரச்சனை போதாதா, ஏண்டி இப்படிப் பண்ண…”

“சாரி, அவர் பீல் பண்ணி கேட்கவும் கொடுத்துட்டேன்…”

“கல்ப்ஸ், பரவால்ல விடு… நான் பார்த்துக்கறேன், நீ வொர்ரி ஆகாத…” என்றாள் பாரதி.

“ம்ம்… சரி, நீங்க ரீச் ஆனதும் கால் பண்ணுங்க, நான் வைக்கிறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டிக்க வான்மதி பாரதியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“எம்மா, மீசையில்லாத பாரதி… என்னதான் உன் உத்தேசம்…” அவன் கால் பண்ணா எடுத்து பேசப் போறியா…?”

“அதுல தப்பொண்ணும் இல்லையே, பாவம்… அவரோட காம்ப்ளெக்ஸ் போக்கறதுக்காக எதையோ பண்ணி வச்சிருக்கார், அதுக்காக அவர் தப்பானவர் ஆயிடுவாரா… மன்னிச்சுட்டேன்னு சொல்லிட்டா வேலை முடிஞ்சுதுல்ல…”

“ம்ம்… என்னமோ போ, அந்த ரிஷி விஷயத்துல நீ ரொம்பவே சாப்ட்டா நடந்துக்கற…”

“அப்படி இல்லடி, அவர் மனநிலை புரிஞ்சுக்க முடியுது…”

“ஹூம், என்னமோ போ… அந்த சூர்யா கூட கொஞ்சம் நல்ல டைப்பா தெரியுறார், எனக்கு என்னவோ ரிஷியைப் பார்த்தாலே கோபம் வருது…” என்றாள் வான்மதி.

“அது அவர் என்கிட்ட அப்படி சொன்னதால இருக்கும்…”

“ம்ம்… பேசணும்னு நீ முடிவு பண்ணிட்ட, நான் வேண்டாம்னா கேக்கவா போற… பார்த்துப் பேசு…”

“சேச்சே, வீடியோகால் எல்லாம் பேச மாட்டேன்…” எனச் சொல்லி குறும்பாய் கண் சிமிட்ட, சட்டென்று புரியாமல் யோசித்து பின் புன்னகைத்தாள் வான்மதி. இருவரும் காஞ்சிபுரம் அடைவதற்குள் வேறு ஒரு பிரச்னையை சொல்லுவதற்காய் காத்திருந்தாள் அக்கா சக்திப் பிரியா.

நிலவென்றும் தொலைவதில்லை

நிஜமென்றும் அழிவதில்லை…

இரவென்றால் விடியலுண்டு…

இமைகளுக்குள் கனவுண்டு…

விண்ணுக்குள் மறைந்தாலும்

வெளிவருவான் ஆதவனும்…

கண்ணுக்கு இமையாக

காத்திடுவான் கண்மணியை…

Advertisement