Advertisement

அத்தியாயம் – 7

ஹாலைக் கடந்து வேகமாய் அறைக்குள் சென்ற கங்காவை அதிர்ச்சியுடன் தொடர்ந்த தோழியரின் பார்வை அந்த அறையின் முன்னில் இருந்த பெயர்ப்பலகையில் நிலைத்தது. கறுப்புப் பிளாஸ்டிக் பலகையில் தங்க நிறத்தில் பளபளத்த பெயர்ப்பலகை மிசஸ் கங்கா ஹரி, மேனேஜிங் பார்ட்னர் என்ற எழுத்துகளை கம்பீரமாய் தாங்கி நிற்க தோழியர் இருவரும் அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டனர்.

“இ…இவங்க தான் மிசஸ் ஹரியா…?” பாரதி நம்ப முடியாமல் கேட்க வான்மதி முகத்தை சுளித்தாள்.

“ஹூம், இந்த வேலையும் கோவிந்தாவா…? இந்தத் திமிர் பிடிச்சவ தான் ஹரி சார் ஒயிப்னு தெரிஞ்சிருந்தா நாம   இங்க வராமலே இருந்திருக்கலாம்…” எனக் கவலையுடன் சொல்ல பாரதியின் கண்களில் கலக்கம் தெரிந்தது.

அமைதியாய் இருந்தவளின் தோளில் ஆறுதலாய் கை வைத்த வான்மதி, “கால் சுகமில்லாத பொண்ணை காருல இடிச்சுத் தள்ளிட்டு கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லாம பணத்தை நீட்டின பிசாசு, உன்னை எப்படில்லாம் பேசினா… இனி இங்க இருக்க வேண்டாம்… எழுந்திரு, தேவை இல்லாம அவங்க முன்னாடி போயி நின்னு அவமானப் படறதை விட நாமளே கிளம்பிடலாம்…” என்றாள்.

வான்மதி சொன்னதைக் கேட்டு யோசித்த பாரதிக்கும் அதுவே சரியென்று தோன்றியது. நேற்று அப்பெண்ணுக்கு ஆறுதலாய் பேசியதற்கே அத்தனை ஆத்திரமாய் பேசியவள் கங்கா. “இப்போது அவளது அலுவலகத்தில் நிச்சயம் தனக்கு வேலை கொடுக்க சம்மதிக்க மாட்டாள், கிளம்புவது தான் சரி…” எனத் தோன்ற சோர்வுடன் எழுந்து கொண்டாள்.

“எங்க போனாலும் ஏமாற்றமாவே இருக்குதே…” என தவிக்கத் தொடங்கிய மனதை அடக்கி, “ப்ச்… துவளாதே, பார்த்துக் கொள்ளலாம்…” சமாதானப்படுத்தி எழுந்தவள் முன் மஞ்சுளா புன்னகையுடன் வந்து நின்றாள்.

“மிஸ் பாரதி, மணிகண்டன் சார் உங்களை கங்கா மேடம் ரூமுக்கு வர சொன்னார்… வாங்க…” என அழைக்க கேள்வியுடன் தோழியை நோக்கினாள் பாரதி.

அவள் பார்வை, “போகத்தான் வேண்டுமா…” என்று கேட்க, இவளும், “போயித்தான் பார்க்கிறேனே…” என்று பதிலைக் கண்ணிலேயே சொல்லிவிட்டு மஞ்சுளாவுடன் நடந்தாள்.

மனதை கங்கா தன்னைக் கண்டதும் கொட்டப் போகும் வார்த்தைகளுக்குத் தயாராக்கி அறைக்குள் நுழைந்தாள்.

ஏசி இதமாய் அந்த அறையைக் குளிரூட்டி இருக்க, அழகாய் பைல்கள் அடுக்கப்பட்ட செல்பின் அருகே பெரிய மேஜையின் பின்னில் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த கங்கா பார்வைக்குக் கிடைத்தாள்.

மணிகண்டனுடன் பேசிக் கொண்டே பாரதியைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டு அவர் தயார் செய்து நீட்டிய அப்பாயின்ட்மென்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட பேனாவை எடுத்தவள் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த பாரதியைக் கண்டதும் திகைத்தாள். அந்தத் திகைப்பு மெதுவாய் மாறி இதழில் ஒரு இளக்காரப் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

பாரதியைக் கண்ட மணிகண்டன், “மேம், ஷீ ஈஸ் பாரதிப் பிரியா, இவங்களைப் பத்தி ஹரி சார் உங்ககிட்ட சொல்லிருப்பார்னு நினைக்கிறேன்…”

“இவதான் ஹரி ஆஹா, ஓஹோன்னு சொன்ன பாரதியா…?” என்பதுபோல் நோக்கியவள், “ம்ம்… சொன்னார்… மிஸ்டர் மணிகண்டன், நீங்க கொஞ்சம் வெளிய இருங்க… நான் பாரதிகிட்ட பேசிட்டு எந்த டிபார்ட்மென்ட்ல போஸ்டிங் கொடுக்கலாம்னு சொல்லறேன்…” எனவும் அவர் எழுந்து செல்ல பாரதியை ஏறிட்டாள் கங்கா.

“ம்ம், உக்கார்…” என்றாள் அதிகாரமாக. பாரதி அமைதியாய் நாற்காலியில் அமர ஒரு நிமிடம் கையிலிருந்த பேனாவை சுழற்றியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

“பாரதிங்கற பேரு வச்சதாலதான் போராட்ட குணம் அதிகமா இருக்கோ…?” எனவும் நிமிர்ந்தாள் பாரதி.

“அது போராட்ட குணம் இல்லை மேடம்… நம்ம முன்னாடி நடக்கிற எந்த ஒரு விஷயத்திலயும் மனசாட்சியோட நடந்துக்கணும்னு எங்க அப்பா சொல்லிக் கொடுத்திருக்கார்… எனக்கு சரியில்லைன்னு தோணற விஷயத்தை மட்டும் தான் கேப்பேன், போராடவெல்லாம் தெரியாது…”

“ஓ… நேத்து என்கிட்டே நடுரோட்டுல அவ்ளோ கேள்வி கேட்டுட்டு இன்னைக்கு என் புருஷன்கிட்ட நல்ல பேரை வாங்கி என் சாம்ராஜ்யத்துக்குள்ளயே நுழையப் பார்க்கறியா, எந்த தைரியத்துல என்னைப் பார்த்தும் அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைக்கும்னு நினைச்சிட்டு வந்திருக்க…”

“இதுக்கு தைரியம் எதுக்கு மேடம்… என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அதுக்கான வேலை கிடைச்சா அதில் என் உழைப்பைக் கொடுக்கப் போறேன்… நேத்து நடந்த இன்சிடன்ட் நீங்களோ, நானோ பிளான் பண்ணிப் பண்ணது கிடையாது, இன்னைக்கு நடக்கிறதும் அப்படிதான்… உங்க சரியை நீங்க செய்ங்க, என் சரியை நான் செய்யறேன், மத்தபடி நீங்க எனக்கு விரோதியா என்ன…?”

அவள் பேசியதைத் திகைப்புடன் கேட்ட கங்கா, “ஓ… உன் திறமை மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்க, அப்புறம் ஏன் இவ்ளோ நாளா வேலை கிடைக்கல… ஏதோ என் ஹஸ்பன்ட் தயவுல இங்க வந்திருக்க ஆனா நல்லாவே பேசற… எப்படி…? நான் உனக்கு விரோதியான்னு கேட்டல்ல, அதுக்கான தகுதி உனக்கு இருக்கான்னு முதல்ல யோசிச்சுப் பேசு…”

“இதுல யோசிக்க என்ன இருக்கு மேடம்… காலமும், சூழ்நிலையும் தான் ஒருத்தருக்கு நண்பனையும், எதிரியையும் தீர்மானிக்குது, சரி… உங்க நேரத்தை வீணாக்க விரும்பல, நான் கிளம்பறேன், மேடம்…” சொன்னவள் எழுந்து கொள்ள புன்னகைத்தாள் கங்கா.

“என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஓடிடலாம்னு பார்க்கறியா, முதல்ல உக்கார்…” எனவும் பாரதி புரியாமல் பார்க்க, கங்கா புன்னகையுடன் அந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு அவளது டெசிக்னேஷனில் மார்க்கெட்டிங் ஜூனியர் ஆபீசர் என எழுதி நீட்ட திகைப்புடன் பார்த்தாள் பாரதி.

“மே..மேம்…!”

“என்ன நம்ப முடியலியா…? பர்சனலா எனக்கு உன்மேல கோபம் இருக்கு தான், அதுக்காக என் ஹஸ்பன்ட் ரெகமன்ட் பண்ணின, என்கிட்டயே இவ்ளோ தைரியமாப் பேசற உன் திறமையை என் பிசினஸ்க்கு யூஸ் பண்ணாம இருக்க மனசு வரலை… உன் பேச்சுத் திறமையை மார்கெட்டிங்ல காட்டு, வர்ற ஒண்ணாம் தேதி இதே பிராஞ்சுல ஜாயின் பண்ணலாம்…” சொல்லிக் கொண்டே எழுதி அவளிடம் நீட்ட திகைப்பு மாறாமலே புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

“தே..தேங்க் யூ மேடம்…”

“ம்ம்… யூ மே கோ நவ்… மணிகண்டனை உள்ளே வர சொல்லிட்டு கிளம்பு…” என்றவள் மேஜை மீது அடுக்கி வைத்திருந்த பைல் ஒன்றை எடுக்க நடந்ததை நம்ப முடியாமல் பிரமிப்புடனே வெளியே வந்தாள் பாரதி.

முன்னில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த மணிகண்டன் அவளைக் கண்டதும், “மேடம் என்ன சொன்னாங்க…?” என்று கேட்க, “உங்களை வர சொன்னாங்க, சார்…” என்றவள் வான்மதியிடம் செல்ல அவள் எரிச்சலுடன் எழுந்தாள்.

“என்னடி, உனக்கு இங்க வேலை இல்லன்னு சொல்லி அனுப்ப அந்த கங்காவுக்கு இவ்ளோ நேரம், தேவையா…” எனக் கோபமாய் கேட்க, “ஹேய், கத்தாத… அவங்க இப்ப என் மேடம்…” என்றதும் விழிகளை விரித்தாள் வான்மதி.

“என்னடி சொல்லற, உன் மேடமா…?”

“எஸ்… இங்கே பாரு, அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்…” என்று கையிலிருந்த கவரை நீட்ட வியப்புடன் அதை வாங்கிப் பிரித்து உள்ளே இருந்த பேப்பரைப் பார்த்தவள் விழிகள் மேலும் விரிந்தது.

“மார்க்கெட்டிங் ஜூனியர் ஆபீசர், மாசம் இருபதாயிரம் சாலரி, மூணு மாசம் டிரெயினிங் முடிஞ்சு ஜாப் கன்பர்ம் ஆனதும் முப்பதாயிரம் சம்பளம்… வாவ், செம ஆபரா இருக்கேடி… நிஜமாலுமே இது அந்த கங்கா தானா…?” என்றாள் நம்ப முடியாமல்.

“ஷாக்கைக் குற, வானு… நாம் நேத்துப் பார்த்த அதே கங்கா தான் இவங்க… அவங்களுக்குள்ளயும் ஒரு நல்ல மனசு இருக்கும்ல, நாம தான் தப்பாப் புரிஞ்சுகிட்டோம்…”

“ஹூம்… என்னமோ சொல்லற, நேத்து அவங்க ஆடுன ஆட்டத்துக்கு உன்னை இப்ப சிக்ஸர் அடிச்சு வெளிய தூக்கிப் போடுவாங்கன்னு தான் நினைச்சேன்… இதை நம்ப முடியலியே…” என்றாள் வான்மதி மீண்டும்.

“ப்ச்… ஒருத்தங்க நல்லது செய்தாலும் நம்பாம இருந்தா எப்படி… நேத்து கோபத்துல கத்தி இருக்கலாம், அந்த பர்சனல் விஷயத்தை ஆபீஸுக்குள்ள கொண்டு வராம பிசினஸை வேறயாப் பார்க்கிறது கூட நல்ல விஷயம் தானே…” என்றவள் மீண்டும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை எடுத்துப் படித்தாள். வான்மதியின் மனது அப்போதும் முழுமையாய் சமாதானம் அடையாமல் இருக்க பாரதியின் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பாமல் அமைதியானாள்.

Advertisement