Advertisement

இதமான இசையோடு இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பேருந்து ஓடிக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த கோபால கிருஷ்ணனிடம், “இன்னும் என்னங்க யோசனை, அதான் உங்க தங்கச்சி பொண்ணுங்க ரெண்டு பேரையும் நல்லபடியா கட்டிக் கொடுத்துட்டிங்களே… கடமை முடிஞ்ச சந்தோஷம் இல்லாம எதையோ பறி கொடுத்த போல யோசிச்சிட்டு இருக்கீங்க…?” அஷ்டலட்சுமி கேட்க மனைவியை யோசனையுடன் பார்த்தார் கோபால்.

“இத்தனை நாள் என் தங்கச்சியும், பொண்ணுங்களுமா கலகலன்னு இருந்த வீடு… இனி அவங்க யாரும் இல்லாம நாம மட்டும் தனியா இருக்கணும்னு நினைச்சுப் பார்த்தா மனசு கஷ்டமா இருக்கு லட்சுமி… அப்பாவை இழந்து அழுதிட்டு இருந்த புள்ளைங்களை மாமா இருக்கேன்னு கையைப் பிடிச்சு கூட்டிட்டு வந்தேன், என்னால முடிஞ்ச போல அவங்களைப் பார்த்துக்கவும் செய்தேன், இப்ப எல்லாரும் நம்மளை விட்டுப் போயிட்டாங்க… இனி நமக்குன்னு வாழ்க்கைல என்ன இருக்கு…?”

“என்னங்க நீங்க, அவங்க நல்லபடியா வாழ்க்கைல செட்டில் ஆனதுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா… எப்பவும் நம்ம தயவுல இருக்கணும்னு சொல்லறிங்களா…?”

“சேச்சே, நான் அந்த அர்த்தத்துல சொல்லல… என் தங்கையும், பொண்ணுங்களும் வாழ்க்கைல நிறைய கஷ்டப் பட்டுட்டாங்க, இனியாச்சும் அவங்க சந்தோஷமா இருக்கட்டும்… அவங்க இல்லாத வீட்டோட வெறுமையை நினைச்சு தான் நான் பீல் பண்ணேன்…”

“அதுக்கென்னங்க, இந்தா இங்க இருக்கிற சென்னை… எப்ப அவங்களப் பார்க்கத் தோணுதோ வந்து பார்த்திட்டுப் போவோம்… உங்களுக்கு கடையைப் பார்த்துக்க முடியாத காலத்துல எல்லாத்தையும் வித்துட்டு இங்கயே வந்து அவங்க பக்கத்துல செட்டில் ஆகிடுவோம், என்ன சொல்லறிங்க…?” என்றதும் முகம் மலர்ந்தார் கோபால்.

“ம்ம்… இது நல்ல யோசனையா இருக்கு… நமக்குன்னு புள்ள குட்டிகளா இருக்கு, வயசான காலத்துல இவங்க தானே நமக்கு ஆதரவு… இங்க வந்து செட்டில் ஆகிடுவோம்…” அவர் சந்தோஷமாய் சொல்ல புன்னகைத்தார் அஷ்டலட்சுமி.

“நீங்க மனசு விட்டு சொல்லிட்டிங்க, நான் சொல்லலை அவ்ளோ தான்… எனக்கும் அவங்க யாரும் இல்லாத அந்த வீட்டுல இருக்கப் பிடிக்கலங்க…” என நினைத்தபடி கண்ணை மூடிப் பாட்டை ரசிக்கத் தொடங்கினார் லட்சுமி.

ஆனந்தக் குயிலின் பாட்டு தினம்

எங்களின் வீட்டுக்குள்ளே…

பூக்களில் நனையும் காற்று தினம்

எங்களின் தோட்டத்திலே…

தனது அறையில் மனைவிக்காய் காத்திருந்தான் ரிஷி. எதிர்பார்ப்பை வீணாக்காமல் சீக்கிரமே கதவு திறக்கப்பட்டு பால் சொம்புடன் உள்ளே வந்தாள் பாரதி.

கழுத்தில் புத்தம் புதிய மஞ்சள் தாலி மின்ன, காலில் அணிந்திருந்த புது மெட்டி மெருகூட்ட, முகத்தில் புதிதாய் வெட்கத்தை அணிந்து கொண்டு தயக்கத்துடன் அடி எடுத்து அவனை நோக்கி வந்தவளைப் புன்னகையுடன் நோக்கினான்.

“ரதி…! இப்படி உக்கார்…” எனவும் அருகே அமர்ந்தவள் பால் சொம்பை நீட்ட, கிண்டலாய் சிரித்தான்.

“என்ன இது…?” அவன் கேள்வி புரியாமல் நிமிர்ந்தாள்.

“பால்…!”

“அது தெரியுது… இது வரைக்கும் உலக வரலாற்றில் நான் நேரில் காணாத அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு புக்ல படிச்சதை எல்லாம் உன் முகம் பிரதிபலிக்குதே, அதான் என்னன்னு கேட்டேன்…” என்றதும் மேலும் சிவந்தாள் பாரதி.

“ப்ச்… போங்க ரிஷி…! ஆயிரம் தான் பழகினவரா இருந்தாலும் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு காஷுவலா வர முடியுமா…?”

“ஏன்…? அது என்ன ஸ்பெஷல்…? ஓ…! சம்திங், சம்திங் ஸ்பெஷல்…!” எனக் குரலில் குறும்பு தொனிக்க கண்ணடித்துக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள், செல்லமாய் அவன் நெஞ்சில் குத்த, “ஆ…” அலறினான் ரிஷி.

“மெல்ல தான குத்தினேன், அதுக்கே வலிச்சிருச்சா…?”

“எனக்கு வலிக்கல, என் இதயத்துல குடியிருக்கிற உனக்கு வலிக்குமேன்னு தான் கத்தினேன்…” என்றவனை நோக்கி அவள் செல்லமாய் முறைக்க இழுத்து நெஞ்சில் சாய்த்து அணைத்துக் கொண்டான் ரிஷி.

“ரதி…!”

கண் மூடி அவன் அணைப்பில் லயித்திருந்தவள், “ம்ம்…” என்று முனகலாய் பதில் சொன்னாள்.

“உனக்கு நிஜமாலுமே என் குறை பெருசாத் தெரியலியா…?” அவன் கேள்வியில் விலகியவள் முறைத்தாள்.

“இப்ப எதுக்கு, இந்தக் கேள்வி…?”

“என்னதான் நீ இந்தக் குறை எல்லாம் பெருசா எடுத்துக்கிறவ இல்லன்னாலும் உனக்கும் எல்லாரையும் போல எந்தக் குறையுமில்லாத புருஷன் வரணும்னு ஆசை இருக்கும்ல…” என்றவனைக் குறுகுறுவென்று பார்த்தாள்.

“அப்படில்லாம் எனக்கு எந்த ஆசையும் இல்லை… என் மனசுக்குப் பிடிச்சவன் புருஷனா வரணும்னு மட்டும் தான் நினைச்சேன், வந்துட்டிங்க… நிறைவா இருக்கு…”

அவளது பதில் திருப்தி ஆகாமல் ரிஷி அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

“ரிஷி…! இத்தனை நாள் கழிச்சு உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கேள்வி வந்துச்சு…?”

“ரதி…! மண்டபத்துல ரெண்டு பேர் பேசினதைக் கேட்டதுல  இருந்து மனசு அதையே யோசிச்சு பீல் பண்ணிட்டு இருக்கு…”

“ஓ… அப்படி அவங்க என்ன பேசினாங்க…?” பாரதி கேட்க அதை யோசித்தவனின் முகம் வாடியது.

“ம்ம்… இந்த நொண்டிக் கால் உள்ளவனுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சுன்னு சொன்னாங்க…?” வலியோடு அவன் சொல்ல அவன் கையைப் பற்றி தனது கன்னத்தில் வைத்துக் கொண்டாள் பாரதி.

“ரிஷி…! உண்மைல அவங்க மனசுல தான் குறை இருக்கு… மனுஷங்க மனசைப் புரிஞ்சுக்காம வெளித்தோற்றத்தை மட்டுமே பிரதானமா நினைக்கிறவங்களுக்கு இதெல்லாம் புரியாது… உங்க மனசு எத்தனை நிறைவானதுன்னு எனக்குத் தெரியும்… அம்மாவா நினைச்ச அண்ணி உங்களுக்கு செய்த துரோகம் தெரிஞ்ச பின்னாடியும் அவங்களை வெறுக்காம நேசிக்கிற மனசை என்னன்னு சொல்ல… அதை யோசிக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு, எப்படி உங்களால அவங்களை மன்னிக்க முடிஞ்சுதுன்னு…?”

“ரதி… அண்ணி என்னை முடங்கிப் போக சில வேலைகள் செய்தாலும் என் பசியறிஞ்சு, ருசி தெரிஞ்சு வயிறு காயாம பார்த்துகிட்டவங்க… சின்ன வயசுல பெத்தவங்களை இழந்து அன்புக்காக ஏங்கி நின்ன எனக்கு நிழல் கொடுத்து நேசத்தைக் காட்டினவங்க… அந்த நேசம் அவங்களைப் பொறுத்தவரை வேணும்னா வேஷமா இருக்கலாம்… ஆனா, எனக்கு அந்த நேசம் தான் யாருமில்லைங்கிற உணர்வு வராம பாதுகாப்பா உணர வச்சுது… அவங்க எனக்கு அண்ணி இல்ல, அம்மான்னு மனசு ஆழமா நினைக்கத் தொடங்குச்சு… என் நேசம் உண்மையா இருக்கும்போது என் அம்மாவா நினைச்சவங்களை மன்னிக்காம எப்படி வெறுக்க முடியும்…?” ரிஷி குரல் தழுதழுக்கக் கூற பாரதியின் மனம் நெகிழ்ந்தது.

அவனைக் காதலுடன் நோக்கியவள், “இப்பப் புரியுதா, என் ரிஷியோட மனசு எத்தனை நிறைவானதுன்னு… வேஷமா பாசத்தைக் காட்டின அண்ணியை நீங்க இவ்ளோ நேசிக்கும் போது உண்மையான நேசம் கிடைச்சா எப்படிக் கொண்டாடுவீங்க… உண்மையான நேசம் எப்படி இருக்கும்னு உங்களை நான் உணர வைப்பேன், உங்க நேசத்தால என்னைக் கொண்டாட வைப்பேன்… இனி உள்ள விடியல்கள் நமக்கு வெளிச்சத்தை மட்டும் கொடுக்கிறதா இருக்கட்டும்…” அழுத்தமாய் அமைதியாய் சொன்னாள் பாரதி.

அவன் இரு கையையும் விரித்து அவளை வாவென்று தலையசைக்க, வேகமாய் அந்த நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டவளை நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் ரிஷி.

“ரதீ…! உண்மையான விடியல் எதுன்னு தெரியாம இருந்த எனக்கு வெளிச்சத்தைக் காட்டின வெண்ணிலவு நீ… என் விடியலில் வந்த வெண்ணிலவு நீ…” என்று காதில் கிசுகிசுக்க கிறக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள் பாரதி.

“ராத்திரி எல்லாம் கவிதை மட்டுமே சொல்லிட்டு இருக்க உத்தேசமா என்ன…?”

அவள் மெல்லிய குரலில் காதலுடன் கேட்க, அதற்குப் பின்னும் அவன் வாயால் கவிதை சொல்லுவானா என்ன…? காதல் கவிதைகளை அவள் மேனியெங்கும் எழுதிய படியும், வாசித்தபடியும் புதுவித உலகத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருக்க வானத்திலிருந்த வெண்ணிலவு அவர்களின் காதல் களியாட்டத்தை ஜன்னல் வழியே கண்டு, நாணம் கொண்டு, அதற்கு மேல் காண நாணியபடி மேகத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டது. ரிஷியின் விடியலில் நிச்சயம் பாரதி என்னும் வெண்ணிலவு உடனிருப்பாள்.

கங்காவின் துரோகத்தில் வெறுத்து இறுகிக் கிடக்கும் ஹரியின் மனதை காலமும், கங்காவின் நல்ல செயல்களும் மட்டுமே மாற்ற முடியும்… அதற்கான விடியலுக்காய் கங்காவும் காத்திருக்கிறாள். காலமே எல்லாவற்றுக்கும் சிறந்த மருந்து… ஹரி மனம் மாறி அவளை ஏற்றுக் கொள்வானா என்பதும் காலத்தில் கையில்தான் உள்ளது. எல்லாம் நன்மையில் முடிய வேண்டுமென்ற வேண்டுதலுடன் நாமும் விடை பெறுவோம்…

விடியலில் வெண்ணிலவின்

வெளிச்சம் உலகத்திற்குத்

தெரியாதிருக்கலாம்…

அது கதிரவனின் வெளிச்சப்

போர்வைக்குள் வெண்ணிலா துயில்

கொள்ள சென்றதால் இருக்கலாம்…

ஆனாலும் விடியல்கள் என்றும்

வெண்ணிலவோடே விடிகிறது…

Advertisement