Advertisement

அத்தியாயம் – 35

மூன்று மாதம் ஓடிப் போயிருந்தது. வீடே கல்யாணப் பரபரப்பில் இருக்க கங்கா ஓடியோடி வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹரி…! உனக்கு நல்ல மனைவி அமைஞ்சிருக்கா… அம்மா, அப்பா இல்லாத உங்களை நல்லாப் பார்த்துக்கிறதோட பொறுப்பா தாய் ஸ்தானத்துல இருந்து சின்னவனுக்கு கல்யாணத்தையும் நல்லபடியா முடிச்சு வச்சுட்டாளே…” பெரிய மனுஷி ஒருவர் கங்காவை சிலாகித்து ஹரியிடம் கூற கணவனின் முகத்தையே ஆவலுடன் பார்த்தாள் கங்கா.

“ஜூஸ் ஏதாச்சும் குடிக்கறிங்களா மாமி… மாமாவை இன்னும் காணமே, ஈவனிங் ரிசப்ஷனுக்கு ரெடியாக வேண்டாமா…?” அவர் சொன்னதுக்கு சற்றும் சம்மந்தமில்லாமல் பேசி பேச்சை மாற்றினான் ஹரி. கங்காவின் முகத்தில் ஏமாற்றம் படிய காட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையை கவனிக்க நகர்ந்தாள். கங்கா இந்த மூன்று மாதத்தில் வெகுவாய் மாறிப் போயிருந்தாள். அலுவலகத்துக்கு செல்வதைக் குறைத்துக் கொண்டு ஹரி, ரிஷி, பாரதியின் பொறுப்பில் அலுவல்களை விட்டுவிட்டு வீட்டை கவனித்துக் கொள்ளத் தொடங்கினாள்.

ஹரியின் பாராமுகமும், மௌனமும் ஒவ்வொரு நிமிடமும் அவள் மனதைக் கூறு போட்டுக் கொண்டிருந்தது. தன்னைக் கண்டதும் பாறையாய் இறுகிப் போகும் கணவனின் முகத்தைக் காண வருந்தியே தன்னை ஒடுக்கிக் கொண்டாள். ரிஷி அவளிடம் இயல்பாய் இருந்தாலும் பழைய நேசமும், உரிமையும் குறைந்தது போல் கங்காவுக்குத் தோன்றியது. அது அவளது தோணலாகவும் இருக்கலாம்.

காலையில் காமாட்சியம்மன் கோவிலில் ரிஷி, பாரதியின் கல்யாணம் நல்லபடியாய் நடந்து முடிந்திருக்க, மாலை சென்னையில் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ரிஷி கல்யாணம் முடிந்து பெண் வீட்டுக்கு சென்றிருக்க, மாப்பிள்ளை வீட்டினர் சென்னை திரும்பி இருந்தனர்.

“மம்மி, சித்துவும் சித்தியும் எப்ப வருவாங்க…?” ரோஷன் ஓடி வந்து அன்னையிடம் கேட்டான்.

“இப்ப அங்கிருந்து கிளம்பிருப்பாங்க, அஞ்சு மணிக்கெல்லாம் வந்திருவாங்க தங்கம்…”

“ஓகே…” என்றவன் ஓடி விட்டான். ரோஷனுக்கு முழு ஆண்டு பரீட்சை முடிந்திருக்க விடுமுறையைக் கழிக்கவும், ரிஷியின் கல்யாணத்திற்குமாய் அழைத்து வந்திருந்தனர்.

“ரோஷனை சென்னையிலேயே ஸ்கூலில் சேர்த்து விடலாம் அண்ணா… அண்ணிதான் இப்ப அதிகமா வீட்டுல இருக்காங்களே…” என்ற கங்காவின் ஆசையை, ரிஷி தனது ஆசையாய் அண்ணனிடம் பரிந்துரைக்க ஹரியும் ரோஷனை இங்கே ஸ்கூலில் சேர்த்த சம்மதித்திருந்தான். கங்கா இப்போது மகனுக்காய் சென்னையில் நல்ல ஸ்கூலை விசாரித்துக் கொண்டிருக்கிறாள்.

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு வீடே களையிழந்து போயிருக்க, கல்யாண வேலைகளும், ரோஷனும் வந்த பிறகே சற்று உயிர் கொண்டிருந்தது.

கங்கா என்ன முயற்சித்தும் ஹரி அவளை விட்டு விலகியே நிற்க, அவளும் வருத்தத்துடன் ஒதுங்கி இருந்தாள்.

தனக்கு இந்த தண்டனை தேவை தான். கணவனிடம் தான் இழந்த நம்பிக்கையை இனி தனது செயல்களால் மட்டுமே மீட்க முடியும் எனப் புரிந்திருக்க அதற்கான முயற்சிகளில் முழு மனதுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

அதை ஹரியும் உணர்ந்தாலும் சூடு கண்ட பூனையாய் மீண்டும் மனம் அவளை நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ மறுக்க, இப்போது அவள் மாறி இருந்தாலும் செய்த துரோகத்துக்கு தன் மௌனம் ஒன்றே தண்டனை என்று ஹரியும் அவளை எட்டியே நிறுத்தி இருந்தான்.

ஹரியின் அலைபேசி சிணுங்க, ரிஷி அழைத்திருந்தான்.

“சொல்லுடா தம்பி, சென்னை ரீச் ஆகிட்டீங்களா…?”

“இன்னும் அரை மணி நேரத்துல வீட்டுக்கு வந்திடுவோம் அண்ணா…” என்றான் ரிஷி புது மாப்பிள்ளை உற்சாகத்துடன்.

“சரி, பத்திரமா வாங்க…” என்றவன் எழுந்து உறவுக்காரப் பெண்மணி ஒருவரிடம் விவரம் சொல்லி ஆரத்தி கலந்து வைக்கும்படி சொல்ல, அவர் கங்காவிடம் கூறினார்.

“கங்கா, கொஞ்ச நேரத்துல மாப்பிள, பொண்ணு வந்திருவாங்களாம், ஹரி ஆரத்தி ரெடி பண்ண சொல்லுச்சு…”

“சரி பெரியம்மா…” என்றவள் நகரப் போக, “அத்தை… நீங்க அப்பா கூடப் பிறந்தவங்க, நீங்களே அவங்களுக்கு ஆரத்தி சுத்திடுங்க…” ஹரி சொல்லவும் கங்கா முகம் வாடியது.

அமைதியாய் ஆரத்தியைக் கலந்து வைக்க, சிறிது நேரத்தில் மணமக்களும், பெண்ணின் வீட்டாருமாய் வந்து இறங்கினர்.

அத்தை மணமக்களுக்கு வாசலில் நின்று ஆரத்தி எடுக்க ரிஷி சங்கடத்துடன் அண்ணியை நிமிர்ந்து பார்க்க, அவள் தலையசைத்து புன்னகைத்தாள். அனைவரையும் வரவேற்று அமர வைக்க சக்தியைக் கண்டதும் கங்காவுக்கு குற்ற உணர்ச்சியில் முகம் சுருங்கியது.

அதைப் புரிந்து கொண்ட பாரதி, கங்காவின் கையில் மெல்ல தட்டிக் கொடுக்க, “பீல் பண்ணாதிங்க அக்கா, கடந்தது எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்திடுவோம்… இனி நல்லதே செய்வோம்னு நினைப்போம்… என் அக்காவுக்கு எதுவும் தெரியாது, அது அப்படியே இருக்கட்டும்…” என்று மண்டபத்தில் சமாதானம் சொன்னது நினைவு வர அவளை நேசத்துடன் அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்தாள்.

மாப்பிள்ளையின் பெரிய பங்களாவை கண்கள் விரியப் பார்த்தபடி வந்தார் அஷ்டலட்சுமி.

“பரவால்லங்க, சின்னவ வாய்த் துடுக்குக்கு எங்க போயி மாட்டிகிட்டு முழிக்கப் போறாளோன்னு நினைச்சேன், ஆனா அவ மனசு போலவே நல்ல பெரிய இடத்துக்கு வந்து சேர்ந்துட்டா… ரெண்டு புள்ளைங்களும் இது வரைக்கும் வாழ்க்கைல கஷ்டத்தைத் தவிர எதையும் பார்த்ததில்ல, இனியாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்…” என மனதார கணவனிடம் சொல்ல அவருக்கும் சந்தோஷமாய் இருந்தது.

சத்யனின் அன்னை திலகாவுக்கு தங்களை விட மிகப் பெரிய இடத்தில் சின்னவளுக்கு சம்பந்தம் கிடைத்தது சற்று பொறாமையைக் கொடுத்தாலும் சத்யனிடம் ரிஷி மிகவும் அன்போடும், சகலை என்ற மரியாதையோடும், எந்த பணக்காரத் திமிரும் இன்றி நடந்து கொள்ள அவருக்கும் எல்லாரையும் பிடித்துப் போனது.

தேவிகாவை ஒரு சக்கர நாற்காலியில் அமர்த்தி அழைத்து வந்திருக்க அவருக்கும் மகள் வாழப் போகும் இடத்தைக் கண்டு மிகுந்த சந்தோஷம். அவரை சென்னையில் தங்களுடனே வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று கங்கா சொல்ல, பாரதிக்கு மிகுந்த சந்தோஷம்.

ரிஷி சத்யனிடம் ஏதோ தீவிரமாய் பேசிக் கொண்டிருக்க அவர்களிடம் வந்த ஹரி, “என்னடா, புதுசா சகலை கிடைச்சதும் அண்ணனை மறந்துட்டியா…?” என்று கிண்டல் செய்ய அங்கே இருந்த ரிஷியின் நண்பர்கள், “அதை ஏன் கேக்கறிங்கண்ணா, எங்களை எல்லாம் ரிஷி யாருன்னு கேக்கறான்னாப் பார்த்துக்கங்க…” என்று சமயம் பார்த்து கிண்டலடிக்க எல்லாரும் சிரித்தனர்.

“சரி, மண்டபத்துக்கு கிளம்பலாமா…? ரிசப்ஷனுக்கு ரெடி ஆகணுமே…” ஹரி சொல்ல சிறிது நேரத்தில் கிளம்பினர்.

பியூட்டிஷியன் ஒருவர் பாரதியைப் புறப்பட வைக்க முன்னமே இருந்த இயற்கை அழகோடு அவரது கை வண்ணமும் சேர மேலும் மிளிர்ந்தாள் பாரதி. மேடையில் பளிச் உடையில் புன்னகையில் குளித்த முகமாய் நின்ற ஜோடியைக் காண எல்லாரின் மனமும் நிறைந்தது.

ரிஷியின் கண்கள் அவளை விட்டு மாறுவேனா என மொய்த்துக் கொண்டிருக்க சங்கோஜமாய் குனிந்தவள் யாரும் காணாமல் அவன் காதில் அதட்ட சிரித்தான்.

“அழகாப் பொறந்தது உன் குத்தம்… என்னால எல்லாம் பார்க்காம கன்ட்ரோல் பண்ண முடியாதுமா, இப்ப லைசன்ஸ் வேற கிடைச்சிருச்சு, இனி நீ என்ன சொன்னாலும் தடை அதை உடை தான்…” என்றான் வம்புடன்.

அவனை முறைத்தவளை நோக்கி சின்னதாய் உதட்டைக் குவித்து பட்டென்று காற்றில் முத்தத்தைப் பறக்க விட, சட்டென்று சிவந்த முகத்துடன் குனிந்து கொண்டாள் பாரதி.

“சித்து, சித்தி ரொம்ப அழகாருக்காங்க…” ரிஷியின் காதில் ரோஷன் கிசுகிசுக்க, “ம்ம்… அதானடா, கண்ணா நான்   விழுந்துட்டேன்…” எனவும் புன்னகைத்தாள் பாரதி.

கணவனுடன் வந்திருந்த கல்பனா, வான்மதியைப் பிடித்துக் கொள்ள இத்தனை நாள் விட்டுப் போன கதைகளை எல்லாம் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

சூர்யாவின் பார்வை அடிக்கடி வான்மதி இருக்கும் திசை தேடிப் பறக்க அதை நோட்டமிட்ட நண்பர்கள், “அடுத்த கல்யாணத்துக்கு மாப்பிள ஜோடியை ரெடியாக்கிட்டான் போல…” என்று கிண்டல் செய்தனர்.

கல்யாணத்துக்கு வந்த சூர்யாவின் பெற்றோருக்கும் மகனின் ஆர்வம் புரிய, அவர்கள் வான்மதியின் பெற்றோரிடம் பொதுவாய் விசாரிக்க இரு குடும்பத்துக்கும் விருப்பம் தோன்ற அவர்களும் விவரங்களைப் பேசிக் கொண்டனர்.

அழகான அந்த வைபவம் சுற்றமும், நட்பும் கூடி வாழ்த்த இனிதாய் அருமையான டின்னரோடு முடிந்தது.

பெண் வீட்டார் கிளம்ப தேவிகாவை சக்தி கொஞ்ச நாட்கள் தன்னுடன் வைத்துக் கொள்வதாக சொல்ல, பாரதியும், கங்காவும் இங்கேயே இருக்கட்டும் என்று மறுக்க திலகாவுக்கு அது குறைச்சலாய் தோன்றியது.

“அண்ணிக்கு மூத்த பொண்ணு வீட்டுலயும் கொஞ்ச நாள் இருக்கணும்னு ஆசை இருக்காதா…? எங்க வீட்டுல கொஞ்ச நாள் இருந்திட்டு அப்புறம் சின்னவ கூட இருக்கட்டும்…” திலகா சொல்ல திகைப்புடன் சத்யனைப் பார்த்தாள் சக்தி.

அவன் புன்னகைத்து தலையாட்ட, முன்னமே இதைப் பற்றி அவன் அன்னையிடம் பேசியிருக்க வேண்டுமென்று புரிந்தது. தேவிகாவை அழைத்துக் கொண்டு சக்தி கணவன் வீட்டுக்குக் கிளம்ப கோபால கிருஷ்ணனும், அஷ்டலட்சுமியும் காஞ்சிபுரத்தில் இருந்து ரிசப்ஷனுக்கு வந்தவர்களை அழைத்துக் கொண்டு கல்யாண பஸ்ஸில் கிளம்பினர்.

Advertisement