அத்தியாயம் – 34

கங்கா கை கூப்பி கண்ணீருடன் கெஞ்ச அதை சற்றும் பொருட்படுத்தாமல் அவளை நெருங்கினான் அந்த ரௌடி.

“காமெரா ஆன் தானே, ஒரு சீன் மிஸ் ஆகிடக் கூடாது…” ராஜேஷ் சொல்ல, “ரெடி சார்…” என்றான் மற்றொருத்தன். அந்த ரௌடி கதறிக் கொண்டிருந்த கங்காவின் அருகே வந்து அவள் முகத்தை விரலால் வருடி அவள் உதட்டை நோக்கிக் குனிய, “எல்லாம் முடிந்துவிட்டது…” என நினைத்து அருவருப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கங்கா.

மனதுக்குள் கணவன் ஹரியும், குழந்தை ரோஷனும் வந்து போக கதறியபடி கண்ணை இறுக மூடிக் கொண்டாள்.

“டேய், போதும்…” சில நிமிடங்கள் ஆகியும் தன் மேல் யாருடைய ஸ்பரிசத்தையும் உணராத கங்கா ராஜேஷின் அந்தக் குரலில் கண்ணைத் திறந்தாள்.

அந்த ரவுடி அமைதியாய் அருகே நிற்க அவள் புரியாமல் எல்லாரையும் பார்க்க ராஜேஷ் எழுந்து வந்தான்.

“என்ன…? யாரும் இன்னும் உன்மேல கை வைக்கலயேன்னு  பார்க்கிறயா…? நான் ஒண்ணும் உன்னப் போல ஈனப்புத்தி உள்ளவன் இல்லை… பெண்களை மதிக்கிறவன் நான், காசுக்காக உடம்பை விக்கற பொண்ணுங்களைத் தொடுவனே ஒழிய குடும்பப் பொண்ணுங்களை எதுவும் பண்ண மாட்டேன்… எனக்கும் அம்மா, தங்கச்சி, பொண்டாட்டி, பொண்ணுன்னு எல்லாரும் இருக்காங்க… உன்னை நாசப்படுத்தணும்கிறது என் எண்ணம் இல்லை… எனக்குத் தேவை, உன்கிட்ட இருந்து விடுதலை, என் சம்மந்தமான அந்த பென் டிரைவ்… அதை எடுத்து அழிக்கவும் செய்துட்டேன்… ஆனா, உன்னை இப்படியே விட்டா நீ இன்னும் திருந்த மாட்ட, அதுக்காக தான் நீ பண்ணற விஷயத்தோட பின்விளைவு என்னன்னு உனக்கு தெரிய வைக்கனும்னு இப்படிப் பண்ணேன்… மானம்கிறது உனக்கு மட்டும் சொந்தமானதில்லை, என்னைப் போல ஆண்களைப் பகடைக் காய் ஆக்கி எங்க மானத்தோட விளையாடி சம்பாதிக்க நினைக்காத… எங்களுக்கும் குடும்பம் இருக்கு, மானம், மரியாதை எல்லாம் இருக்கு… நாங்களும் வாழணும், எத்தனை காசு, பணம் சேர்த்தாலும் மானம் போனா எல்லாம் போச்சு… இனியாச்சும் திருந்தி மனுஷியா வாழப் பாரு, அவளை அவிழ்த்து விடுங்கடா…” வெறுப்பைக் கக்கும் வார்த்தைகள் தீப்பிழம்பாய் அவள் காதில் விழ அவன் முன்னில் மிகவும் சிறுத்துப் போனாள் கங்கா. யாரும் தொடாமலே உடம்பெல்லாம் அருவருப்பாய் கூச கண்ணீருடன் தலையைக் குனிந்து கொண்டாள்.

சட்டென்று யாரோ கை தட்டும் ஓசை கேட்க ரிஷியும் பாரதியும், அந்தப் பெரியவருடன் உள்ளே வந்தனர்.

“சபாஷ், ராஜேஷ்… என்ன இருந்தாலும் நீங்க நல்ல குடும்பத்தில் பிறந்தவர்னு நிரூபிச்சுட்டீங்க, இதுக்கு மேல யாரும் அவங்களை அசிங்கப்படுத்த முடியாது…”

ரிஷியின் குரலை உணர்ந்தாலும் அவனை நிமிர்ந்து நோக்கும் திராணியின்றி தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அந்த நொடியே பூமி பிளந்து தன்னை உள்வாங்கிக் கொள்ளாதா என்று மனம் துடித்தது.

“கடவுளே…! எத்தனை கேவலமானவளாய் இருந்திருக்கிறேன் நான்… எனக்கு என்ன இல்லை..? அழகான கணவன், பிள்ளை, வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தும் எதற்காக இத்தனை அசிங்கத்தையும் செய்திருந்தேன்… ஆசை, இந்த உலகையே காலடியில் அடக்கி விடும் பேராசை… இப்படி உயிருடன் செத்த பிணமாக இவர்கள் முன் மண்டியிடும் நிலமைக்கு நானே என்னைக் கொண்டு வந்து விட்டேனே…” உள்ளுக்குள் உடைந்து மருகினாள் கங்கா.

ரிஷி ராஜேஷிடம் பேசிக் கொண்டிருக்க எதுவும் கங்காவின் காதில் விழவில்லை. மனம் நிலையின்றித் தவிக்க தலை குனிந்து அமர்ந்திருந்தவளிடம் வந்தாள் பாரதி.

“மேடம்… எழுந்திருங்க…!” கங்காவின் கைபற்றி எழுப்ப அவளுக்கு பாரதியின் முகம் நோக்க முடியவில்லை.

“வாங்க…!” என்றவள் கங்காவை காருக்கு அழைத்துச் செல்ல ரிஷி ராஜேஷிடமும், பெரியவரிடமும் நன்றி கூறிவிட்டு வந்தான். அவன் மனதில் ராஜேஷ் மேலிருந்த மதிப்பு உயர்ந்திருந்தது. அவனுக்குத் தேவை அவன் சம்மந்தப்பட்ட வீடியோ உள்ள பென் டிரைவ்… அதை மட்டும் அழிக்காமல் அதோடு இருந்த எல்லா பென் டிரைவ்களையும் அழித்து, கங்காவுக்கும் அதிரடியாய் ஒரு பாடம் புகட்டி சில நிமிடத்தில் வில்லனாய் வந்தவன் ஹீரோவாய் உயர்ந்து கலக்கி விட்டான். அந்த பென் டிரைவில் சக்தி சம்மந்தமான வீடியோவும் அழிந்து போனதில் அவர்களுக்கும் நிம்மதி.

ஹரிக்கு போன் செய்து இங்கே நடந்ததை சுருக்கமாய் சொல்ல அவன் மேலும் உடைந்து போனான்.  கங்காவின் மீதிருந்த நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியானதில் அவளை நினைத்து பெரும் ஏமாற்றத்தை உணர்ந்தான். கங்காவைக் கடத்தி வந்த காருக்குப் பின்னால் தொடர்ந்து வந்த சூர்யா வழியில் அவர்களை மிஸ் பண்ணியிருக்க, ரிஷி தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி அவனைத் திரும்ப சொல்லி இருந்தான்.

ரிஷி காரை எடுக்க கங்கா குனிந்த தலை நிமிராமல் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க பாரதி, ரிஷியும் அவளை யோசிக்க விட்டு மௌனமாகவே இருந்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள் கார் நுழைய கங்காவின் மனம் தவிக்கத் தொடங்கியது.

கணவனைக் கண்டு அவன் காலைப் பிடித்து மன்னிப்பு கேட்க சொல்லி ஒரு மனமும், அவனை எந்த முகத்துடன் ஏறிடுவது என்று மறுமனமும் வாதம் செய்ய தவிப்புடன் அமர்ந்திருந்தவளை ரிஷியின் குரல் கலைத்தது.

“அண்ணி…! இறங்குங்க…” அவனது அண்ணி என்ற அழைப்பு அவளை உடைந்து போகச் செய்ய சட்டென்று கலங்கினாள்.

“ரிஷி…! என்னை மன்னிச்சிடுடா… என்னை அம்மாவா நினைச்சு கொண்டாடின உன்னையும் நான் ஏமாத்திட்டேன், நான் மனுஷ ஜென்மமே கிடையாது… ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு…!” அவன் கையைப் பற்றிக் கொண்டு கதறினாள்.

“அண்ணி…! என்னை விடுங்க, நீங்க செய்த தப்பை உணர்ந்து திருந்தினா எனக்கு அதுவே போதும்…”

“இதுக்கு மேலயும் நான் பண்ணின தப்பைப் புரிஞ்சுக்காம இருந்தா நான் மனுஷியே கிடையாதுப்பா… பாரதி…! நீயும் என்னை மன்னிச்சிடு மா…” மனதார வந்த வார்த்தைகளில் அவள் கண்ணில் நீர் வழிந்தது.

“நீங்க திருந்தினதே சந்தோஷம்… தப்பு பண்ணாத மனுஷங்க இல்லை, ஆனா, தப்பு மட்டுமே பண்ணிட்டு இருந்தா அவன் மனுஷனே இல்லை… நீங்க தெளிஞ்சு மீண்டு வந்துட்டிங்க, இனியாச்சும் எல்லாரோட நம்பிக்கைக்கும் ஏத்த மாதிரி நடந்துக்கங்க… எங்களை எல்லாம் விட ஹரி சார் தான் உடைஞ்சு போயிருப்பார், அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க…” பாரதி சொல்ல தவிப்புடன் வீட்டுக்குள் நோக்கினாள் கங்கா.

“வாங்கண்ணி…!” ரிஷி அழைக்க தயக்கத்துடன் நுழைந்தாள்.

ஹால் சோபாவில் கண் மூடி சரிந்து கிடந்தான் ஹரி. விழிகளில் ஈரம் வழிந்து பளபளத்தது.

“அண்ணா…!” ரிஷியின் குரலில் மூக்கை உறிஞ்சிக் கொண்டு நிமிர்ந்தவன் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.

கங்காவைக் கண்டதும் அவன் முகம் கோபத்தில் சிவக்க, “இவ எதுக்கு இங்கே வந்தா, முதல்ல என் கண் முன்னாடி இருந்து அவளைப் போகச் சொல்லு…” கத்தினான்.

அடுத்த நிமிடம் கங்கா அவன் காலில் விழுந்திருந்தாள்.

“ஹரி…! என்னை மன்னிச்சிருங்க ஹரி… நான் பண்ணது ரொம்பப் பெரிய தப்புதான், தொழில்ல இதெல்லாம் பண்ணினா தான் சாதிக்க முடியும்னு என் அண்ணன் சொன்னதைக் கேட்டு தப்பா நினைச்சுட்டேன்… இனி இப்படிப் பண்ண மாட்டேன்… தயவு செய்து என்னை வெறுத்திடாதிங்க…” காலைக் கட்டிக் கொண்டு கதறினாள்.

“ச்சீ… குடும்பப் பொண்ணுங்க பண்ணுற வேலையா நீ பண்ணிருக்க… உன் மேல நான் வச்சிருந்த நம்பிக்கை எல்லாம் தவிடு பொடியாக்கிட்டு இப்ப காலைப் பிடிச்சு கதறினா சரியாப் போகிடுமா, எவ்ளோ அசிங்கம்…? இத்தனை செய்தபிறகு நீ திருந்தினா என்ன..? உயிரோட இருந்தின்னா என்ன…? இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல, எந்த ஜென்மத்திலும் நான் உன்னை மன்னிக்க மாட்டேன், உன் அண்ணன் பேச்சைக் கேட்டு பாவம் பண்ணின உன்னைக் கொன்னு என் கையை அசுத்தப்படுத்திக்க விரும்பல… இனி எனக்கு மகன் மட்டும் தான்… பொண்டாட்டி செத்துட்டா…! நீ எங்க வாழ்க்கைலயே வரக் கூடாது, என் கண்ணு முன்னாடி நிக்காம, எங்காவது போயிடு…” கத்தினான்.

“ஐயோ..! ஹரி, நான் செய்தது தப்புதான்… அதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க, என்னை வெறுத்து மட்டும் ஒதுக்கிடாதிங்க… நீங்களும், ரோஷனும் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது… ப்ளீஸ், என்னை மன்னிச்சிருங்க…” கதறினாள்.

“என்னடி, நடிக்கிற…? ஒரு புள்ளைக்கு அம்மா போலவா நீ நடந்துகிட்ட, நீ செய்த காரியத்தை அவன்கிட்ட சொல்ல முடியுமா…? என் தம்பியும் உன்னை அம்மாவா நினைச்சானே… அவனுக்கு நீ என்ன பண்ணின…? அம்மாங்கிற வார்த்தையை சொல்லக் கூட உனக்குத் தகுதி இல்லை, வெளிய போடி… வெளிய போ…” ஆங்காரத்துடன் அவளைப் பிடித்துத் தள்ளினான் ஹரி.

“என்னங்க…! என்னை மன்னிச்சிருங்க…” அவள் மீண்டும் கதறியபடி கேட்க, பாரதிக்கே பாவமாய் இருந்தது. அதுவரை விலகி நின்ற ரிஷி அண்ணன் அருகே வந்தான்.

“அண்ணா…! அண்ணி எல்லாத் தப்பையும் பண்ணிட்டு இருந்தப்ப நாம அவங்களை ரொம்ப நம்பினோம், ஆனா இப்ப அடிபட்டு, அசிங்கப்பட்டு, தான் செய்த தப்பை உணர்ந்து திருந்தி வந்து மன்னிப்பு கேக்கறாங்க… அவங்களை தண்டிச்சு எதுவும் ஆகப் போறதில்லை, தயவுசெய்து மன்னிச்சிருங்க அண்ணா… ரோஷன் என்னைப் போல அம்மா இல்லாத பிள்ளையா வளரக் கூடாது…” குரல் உடைந்து கலங்கிய குரலில் சொல்ல தம்பியை அணைத்துக் கொண்டான் ஹரி.

“ரிஷி…! என்னை மன்னிச்சிடுடா… இவ இப்படி ஒரு கேவலமான புத்தியோட இருக்கிறது தெரியாம, உன்னை அவ அம்மா போல பார்த்துக்கிறான்னு நானும் கண்டுக்காம இருந்துட்டேன்… இனி இவளை நம்ப மாட்டேன், என் புள்ளையை நான் வளர்த்துப்பேன்… இவ நமக்கு வேண்டாம்…”

“அண்ணா…! அண்ணி நமக்கு என்ன துரோகம் பண்ணி இருந்தாலும் ரோஷனைப் பெத்த அம்மா… அவனுக்கு நல்லதைத் தவிர வேற எதையும் நினைக்க மாட்டாங்க, எனக்காக, ரோஷனுக்காக அண்ணியை நீங்க மன்னிச்சு ஏத்துக்கங்க ப்ளீஸ்…”

“ஹூம்… அவ இத்தன பெரிய நம்பிக்கை துரோகம் பண்ணின பிறகும் அவளை விட்டுக் கொடுக்காமப் பேசுறது உன்னால வேணும்னா முடியலாம்… ஆனா, என்னால இந்த துரோகத்தை மன்னிக்க முடியாது… என் வாழ்க்கையைப் பொறுத்தவரை என் மனைவி செத்துட்டா… ரோஷனுக்காக அவனோட அம்மாவா இந்த வீட்டுல இருந்திட்டு போகட்டும், ஆனா என் மனைவிங்கற எந்த உரிமையும் அவ எடுத்துக்கக் கூடாது…” தீர்மானமாய் சொன்னான் ஹரி.

கங்கா ஓரமாய் நின்று அழுது கொண்டிருக்க பாரதி பரிதாபமாய் அவளைப் பார்த்து நின்றாள்.

அகம்பாவமும், துரோகமும் எப்போதும் யாரையும் வாழ வைப்பதில்லை… சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவே அவர்களின் வாழ்க்கையைப் படுகுழியில் தள்ளி விடுகிறது. ஹரி சொல்லிவிட்டு அவனது அறைக்கு சென்றுவிட கதறி அழும் கங்காவைத் தேற்றும் முயற்சியில் இருந்தனர் ரிஷியும், பாரதியும்.

அப்போது ரிஷியின் அலைபேசி சிணுங்க, ரகுநாத்தின் எண்ணைக் கண்டவன் எடுத்து காதுக்குக் கொடுத்தான். அவர் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ந்தான்.

“என்ன சொல்லறிங்க, ரகுநாத்… கணேஷை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்களா…? எதுக்கு…?”

“லாட்ஜ்ல ஏதோ பொண்ணோட இருந்தவரை போலீஸ் ரைடு நடத்தும்போது பிடிச்சிருக்காங்க சார்… கைல வேற இருபது லட்சம் காஷ் வச்சிருந்திருக்கார், கங்கா மேடம் போன் சுவிட்ச் ஆப் வந்ததால ஆபீஸுக்கு கால் பண்ணி என்கிட்ட இன்பார்ம் பண்ணாங்க… அதான் மேடம்க்கு இன்பார்ம் பண்ண முடியாம உங்களுக்கு கால் பண்ணேன்…”

“ம்ம்… சரி, இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்…”

“ஓகே சார்…” என்ற ரகுநாத் போனை வைத்துவிட்டார்.

“அ..அண்ணி…! ஒரு விஷயம், ரகுநாத் கால் பண்ணார்…” அவனை கண்ணீர் வழியும் கண்களுடன் பார்த்தாள் கங்கா.

“போலீஸ், லாட்ஜ்ல ரைடு நடத்தினப்ப உங்க அண்ணன் கணேஷை ஒரு பொண்ணோட அரஸ்ட் பண்ணிருக்காங்க, அதோட அவர்கிட்ட இருபது லட்சம் பணமும் இருந்ததாம்… அதான், இன்ஸ்பெக்டர் கால் பண்ணி ஆபீஸ்ல இன்பார்ம் பண்ணிருக்கார்… ரகுநாத் அட்டன்ட் பண்ணிட்டு உங்க போன் ஆப்ல இருந்ததால எனக்கு விவரம் சொன்னார்…”

ரிஷி சொல்ல கண்ணைத் துடைத்துக் கொண்ட கங்கா, ஒரு தீர்மானத்துடன் சொன்னாள்.

“ரிஷி, எனக்காக கடைசியா ஒரு உதவி பண்ணறியா…?”

“என்ன பண்ணனும் அண்ணி, சொல்லுங்க…!”

“வயசுல மூத்தவங்க சின்னவங்களுக்கு நல்லது கெட்டது, சொல்லிக் கொடுத்து சரியான பாதைல அழைச்சிட்டுப் போகணும்… ஆனா அவன் அப்படி இல்லை, என்னை தப்பா மோட்டிவேட் பண்ணி அடுத்தடுத்து தப்பு பண்ண வச்சு இந்த நிலமைக்கு கொண்டு வந்ததே அவன்தான்… இனி எனக்கு இப்படி ஒரு அண்ணனே வேண்டாம், ஸ்டேஷன்ல என்ன பைன் கட்டனுமோ, கட்டிட்டு அவனை ரிலீஸ் பண்ணி ஊருக்கு அனுப்பிடு… அந்த இருபது லட்சத்தை அவனையே எடுத்துக்க சொல்லு, இனி என் லைப்ல அவனைப் பார்க்க விரும்பல, என்ன பண்ணணுமோ நீயே பண்ணிடு…” என்றாள்.

ரிஷி திகைப்புடன் பாரதியை நோக்க அவள் ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

“சரி அண்ணி, நான் பார்த்துக்கறேன்…” என்ற ரிஷி சூர்யாவை அழைத்து மேலோட்டமாய் எல்லா விஷயத்தையும் சொல்லி வக்கீலிடம் ஏற்பாடு செய்யச் சொன்னான்.

நேரம் மாலையாகியிருக்க யாரும் மதிய உணவைப் பற்றிய யோசனை கூட இல்லாமலிருந்தனர். கங்கா ஒருபுறம் அமர்ந்து மௌனமாய் அழுது கொண்டிருக்க ஹரி அறைக்கு சென்றவன் ஆளையே காணவில்லை.

“மேடம்…! இப்படியே அழுதிட்டு இருந்தா எப்படி…? யாருமே சாப்பிடலை… முதல்ல பிரஷ் ஆகிட்டு ஏதாச்சும் சாப்பிடுங்க, இங்க சர்வன்ட் யாரும் இல்லியா…?” என்றாள் பாரதி.

“இன்னைக்கு சர்வன்ட் லீவு… மதியம் எல்லாருக்கும் ஹோட்டல்ல தான் ஆர்டர் பண்ணலாம்னு இருந்தேன்…”

“ஓ…! சரி, நானே காபி கலந்து எடுத்திட்டு வர்றேன், நீங்க போயி பிரஷ் ஆயிட்டு வாங்க…” பாரதி சொல்ல கண்ணீருடன் அவளை ஏறிட்டாள் கங்கா.

“பாரதி…! உனக்கு நான் எவ்ளோ பெரிய துரோகம் பண்ணி இருக்கேன், அதெல்லாம் மறந்திட்டு எப்படி உன்னால என்கிட்ட இயல்பா நடந்துக்க முடியுது…”

“மறக்கறதும், மன்னிக்கறதும் தானே மனித குணம்… ஒருத்தர் செய்த தப்பை பூதக்கண்ணாடி வச்சு பார்த்துட்டு இருந்தா நம்மாலயும் சந்தோஷமா இருக்க முடியாது… தப்பு பண்ணினவங்ககிட்ட நாம காட்டுற மன்னிப்பும், மௌனமும் தான் மிகச் சிறந்த தண்டனையா இருக்கும்னு எதுலயோ படிச்சிருக்கேன்… உங்ககிட்ட நிறைய நல்ல திறமைகள் இருக்கு, எத்தனையோ முறை உங்க நிர்வாகத்திறமையைப் பார்த்து வியந்திருக்கேன், முன்னேற நினைச்சு நீங்க போன பாதை தான் தவறே ஒழிய முன்னேறனும்கிற எண்ணம் தவறில்லை… ஒரு இலக்கை அடைய நாம போகும் வழிதான் நாம நல்லவங்களா, கெட்டவங்களான்னு தீர்மானிக்குது… உங்க பாதையை மாத்திட்டா நீங்களும் நல்லவங்க தான்…” என்றவளைத் திகைப்புடன் நோக்கினாள் கங்கா.

“ரதி…! அண்ணி ரொம்ப டயர்டா இருக்காங்க, அண்ணாவும் எதுவும் சாப்பிடலை, எல்லாருக்கும் காபி போட்டுத் தர்றியா…” ரிஷி கேட்க, “இதோ அஞ்சே நிமிஷம்…” என்றவள், “மேடம்… நான் உங்க கிட்சன் யூஸ் பண்ணலாமா…?” என்றாள் கங்காவிடம் திரும்பி தயக்கத்துடன்.

“பாரதி…! ப்ளீஸ், நீயும் இந்த வீட்டுல ஒருத்திதான்… இனியும் என்னை மேடம்னு கூப்பிட்டு தள்ளி வைக்காத…” கங்கா சொல்ல புன்னகையுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

ஐந்து நிமிடத்தில் மணக்கும் காபிக் கோப்பையுடன் வந்தவள் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, “ரிஷி… வாங்க, ஹரி சார்க்கு இந்த காபியைக் கொடுக்கலாம்…” என்று அவனையும் அழைத்துக் கொண்டு ஹரியின் அறைக்கு சென்றாள் பாரதி.

கங்கா வேறு ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டு தனிமையில் அழுகையைத் தொடர்ந்திருக்க, காபி கூடக் குடிக்க மாட்டேனென்று மறுத்த ஹரியிடம், கெஞ்சி ஒருவழியாய் குடிக்க வைத்துவிட்டு வந்தனர்.

“ரிஷி…! டைம் ஆச்சு, நான் ஹாஸ்டலுக்குக் கிளம்பட்டுமா…?” பாரதி கேட்கவும் ரிஷியின் முகம் வாடியது.

“ரதி…! இன்னைக்கு நீ இங்கயே இருக்கலாம்ல, அண்ணி வேற அழுதுட்டே இருக்காங்க… அண்ணனை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலை, நீயும் இருந்தா உதவியா இருக்கும்…” தவிப்புடன் கூறினான் ரிஷி.

பாரதிக்கும் அவன் சொல்வது சரியென்று தோன்றினாலும் அங்கே இரவு தங்க தயங்கினாள்.

“அதுக்கில்ல ரிஷி… கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இங்க தங்கறது, தப்பில்லையா…? வான்மதி வேற கேப்பா…”

“ம்ம்… சரி, நானே உன்னை ஹாஸ்டல்ல விட்டுட்டு வர்றேன்…” என்றவன் அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

அடுத்தநாள் கங்கா கணவனிடம் பேச முயற்சிக்க அவன் மௌனத்தை பதிலாகத் தந்து அவளைத் தண்டித்தான்.

மௌனத்தை விட

மிகச் சிறந்த தண்டனை

வேறொன்றுமில்லை…

ஆயிரம் வார்த்தைகள்

தராத வலியை மௌனத்தின்

உதாசீனப் பார்வையில்

அறுபடும் மனம் உணர்ந்திடும்…