Advertisement

அத்தியாயம் – 33

கண்களில் கோபம் மின்ன தன்னையே பார்த்துக் கொண்டு நின்ற கணவனைக் கண்டதும் கங்கா திகைத்துப் போனாள்.

சட்டென்று பாரதியைப் பற்றியிருந்த கையை விலக்கிக் கொண்டவள் சிரித்து சூழ்நிலையை சகஜமாக்க முயன்றாள்.

“ஹ..ஹரி, எதுக்கு வந்திங்க…? எ..ஏதாச்சும் வேணுமா…? அ..அது வேறொண்ணுமில்ல… நானும், பாரதியும் சும்மா பேசிட்டு இருந்தோம்… இல்ல பாரதி…?” என்றவள் கண்களில் அவளுக்கு ஆணையிட பாரதி யோசித்தாள்.

“கங்கா கையும் களவுமாய் மாட்டி இருக்கிறாள், உண்மையை ஹரி சாரிடம் சொல்லி விடலாமா…? அந்த பென் டிரைவும் காணவில்லை என்கிறாள்… சொன்னால் வேறு பிரச்சனை வருமா…?” அவள் யோசிக்க ஹரி கேட்டான்.

“பாரதி…! என்ன நடக்குது இங்க…? எதுக்கு கங்கா உன்னைத் திட்டிட்டு இருக்கா, என்ன பிரச்சனை…?”

“அ..அது வந்து… சார்…” பாரதி சொல்லத் தயங்க கங்கா இடையில் வந்தாள்.

“அதெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லங்க, நாங்க சும்மாதான் பேசிட்டு இருந்தோம்… நீங்க ரூமுக்குப் போங்க…”

“பேசாத…! நீங்க சும்மா பேசின லட்சணத்தை தான் நான் என் ரூம்ல இருந்து பார்த்தனே…! எதுக்கு நீ பாரதியை கோபமா கன்னத்துல அறைஞ்ச…?” ஹரியின் கேள்விக்கு கங்கா பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நிற்க ஹரியின் பின்னால் ரிஷியின் குரல் கேட்டது.

“உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா, அண்ணா…” அவன் குரலில் திகைத்து மூவரும் நோக்க அவனும் அறைக்குள் வந்தான்.

“என்ன அண்ணி, சொல்லிடவா…?” கங்காவிடம் கேட்க அவள் முகம் அதிர்ச்சியும் கோபமும் போட்டியிட சிவந்திருந்தது.

“என்ன…? நீ என்ன சொல்லப் போற…? உன் அண்ணன் கேள்விக்கு நானே பதில் சொல்லிக்கறேன், நீ போ…”

“எதுக்கு அண்ணி என்னை விரட்டறிங்க…? நீங்க பதில் சொன்னா பொய் தான சொல்லுவிங்க, அப்புறம் அண்ணனுக்கு உண்மை தெரியாமப் போயிடுமே…” ரிஷி கிண்டலாய் சொல்ல ஹரி புரியாமல் பார்த்தான்.

“ரிஷி…! நீங்க என்ன பேசறிங்க…? எதுன்னாலும் எனக்குப் புரியுற மாதிரி தெளிவாப் பேசுங்க….” என்றான் கோபத்துடன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க… ரிஷி..! நீ முதல்ல கிளம்பு, அவர்கிட்ட நான் சொல்லிப் புரிய வச்சுக்கறேன்…” கங்கா விரட்ட ரிஷி சிரித்தான். பாரதி நடப்பதை நம்ப முடியாமல் திகைப்புடன் பார்த்து நின்றாள்.

“கங்கா..! நீ வாயை மூடிட்டு ஓரமா நில்லு… ரிஷி என்ன நடந்துச்சுன்னு சொல்லட்டும்…” ஹரி சொல்லவும் கங்காவின் முகம் இருண்டு போனது.

எல்லாம் அவளது கை விட்டுப் போவது போல் தோன்ற காலடி மண் நழுவியது.

“அண்ணி…! எங்க ரூம்ல காமிரா வச்சு நீங்க மட்டும் தான் வேவு பார்க்க முடியுமா…? இங்க நடக்கிறதை பாவம், அண்ணனும் தெரிஞ்சுகிட்டுமேன்னு தான் அவர் ரூம் டீவில பார்க்கிற போல ஏற்பாடு பண்ணேன்…”

“ஐயோ…! இதெல்லாம் எதுக்கு…? முதல்ல விஷயத்தை சொல்லு…” ஹரி கோபத்தில் கத்தினான்.

“அண்ணா…! அண்ணி நம்மளை எல்லாம் வருஷக் கணக்கா ஏமாத்திட்டு இருக்காங்க… அவங்களோட இன்னொரு முகத்தை இத்தனை நாளா நமக்குக் காட்டாமலே இருந்தாங்க… இப்ப தான் நானே தெரிஞ்சுகிட்டேன், உனக்கும் தெரியணும்னு தான் இப்படிப் பண்ணேன்…”

“ஹரி…! இவன் இந்த பாரதியோட சேர்ந்து ஏதோ டிராமா பண்ணறான், இவன் சொல்லுற எதையும் நம்பாதீங்க…” கங்கா கணவனின் கையைப் பற்றி சமாதானம் செய்ய வர உதறி விட்டவன் அவளை முறைத்தான்.

“சரி..! அப்ப நீயே சொல்லு… பாரதி நம்ம வீட்டுக்கு மருமகளா வரப் போற பொண்ணு… அவளை எதுக்கு நீ அடிச்ச…?”

“அ..அது வந்து, அவ சரியில்லைங்க… நான் எதுக்காக இவ ரூம்ல காமெரா செட் பண்ணி வாட்ச் பண்ணறேன், எதுக்காக அவளை அடிச்சேன்னு நினைச்சிங்க… ரிஷி இவ மேல உயிரையே வச்சிருக்கான், கல்யாணம் பண்ண நாமளும் சம்மதிச்சாச்சு… அப்புறமும் இவ வேற ஒருத்தனோட பழகினா நம்ம குடும்ப கௌரவம் என்னாகறது…? இவ கொஞ்ச நாளாவே அந்த கெளதம் கூட ரொம்ப குளோசா பழகறா, ஆஸ்திக்கு கால் ஊனமுள்ள ரிஷி கூட பழகிட்டு, ஆசைக்கு கெளதம் கூட சுத்தறா… ஒரு அண்ணியா நான் இதை எப்படித் தாங்கிக்க முடியும்…?” கங்கா வாய்க்கு வந்ததை கூசாமல் சொல்ல ஹரியும், ரிஷியும் அதிர்ச்சியுடன் நோக்க அதுவரை அமைதியாய் நின்றிருந்த பாரதியின் கை கங்காவின் கன்னத்தில் ஆழமாய் பதிந்தது.

“ச்சீ… பணத்துக்காக கண்டவங்களை கூட்டிக் கொடுப்பேன்னு தெரியும்… ஆனா, இப்படி அபாண்டமா என் முன்னாலயே என்னைக் கேவலப்படுத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு…? நீயெல்லாம் ஒரு பொம்பளையா…? நீ பண்ணின தப்பை மறைக்க என் மேல இப்படி ஒரு பழியை சுமத்த வெக்கமாயில்ல… எங்க கிட்ட பணம் காசு குறைவா இருக்கலாம், அதுக்காக மானத்தை வித்துப் பொழைக்க நினைக்க மாட்டோம்…” சீறினாள் பாரதி.

பாரதி கொடுத்த அறையில் வெலவெலத்து கண்கள் சிவக்க மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள் கங்கா.

“ஏய்… என்னையே அடிச்சுட்டியா…? உன்னை…” என்று கையை ஓங்கியவளின் கையைத் தடுத்து பிடித்தவள், “ச்சீ… நிறுத்து…! கங்கான்னு புனிதமான பேரை வச்சுக்கிட்டு இப்படி கேவலமா நடந்துக்கற உன்னோட விரல் கூட இனிமே என் மேல படக் கூடாது…” என்றாள் பாரதி.

“சபாஷ்… அப்படி சொல்லு ரதி…!” ரிஷி பாரதியைப் பாராட்ட மனைவியின் செயல்களையும், பேச்சையும் கண்டே மனம் விட்டுப் போன ஹரி நடப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கங்கா வேகமாய் வெளியேறினாள்.

“ரிஷி…! எ..என்ன இது, க..கங்காவா இப்படி…?” நிலைகுலைந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான் ஹரி.

“அண்ணா… மனசு விட்டுடாதிங்க…!” என்ற ரிஷி தண்ணி பாட்டிலை எடுத்துக் கொடுக்க வாங்கிக் குடித்தான் ஹரி.

“அண்ணா, நாங்க சொல்லுறதைப் பொறுமையா கேளுங்க… உங்களுக்கு அண்ணியைப் பத்தி தெரிஞ்சே ஆகணும், இதுக்கு மேலயும் அவங்க நம்மளை ஏமாளியாக்கக் கூடாது…” என்ற ரிஷி பொறுமையாய் கங்கா செய்த ஒவ்வொன்றையும் எடுத்துக் கூற அதிர்ச்சியுடன் மனைவியைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தான் ஹரி.

இத்தனை வருட கங்காவுடனான குடும்ப வாழ்க்கை, அவள் மீது கொண்டிருந்த நம்பிக்கை, எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள் எல்லாம் தவிடு பொடியாக, அவள் செய்த துரோகத்தின் தாக்கத்தில் இடிந்து போய் அமர்ந்திருந்தான். அவளது இன்னொரு முகம் இத்தனை அசிங்கமானதாய் இருக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பாரதியின் அக்கா சம்மந்தமான வீடியோவை வைத்துக் கொண்டு அவளையும் பிளாக்மெயில் செய்ததை அறிந்தவன் மனம் வெறுத்துப் போனது.

“ரிஷி…! இப்ப அந்த பென் டிரைவ் எல்லாம் எங்கே…? பாரதி அக்காவுக்கு கல்யாணம் வேற இருக்கு, அந்த வீடியோ தப்பான யார்கிட்டயும் கிடைச்சிடக் கூடாது…”

“பயப்படாதீங்க அண்ணா…! நேத்து நைட்டு அண்ணி ரூமுக்கு வந்து பென் டிரைவ் எல்லாத்தையும் எடுத்திட்டுப் போனது கெளதம்னு தெரிஞ்சிடுச்சு… அதை உடனே ஓபன் பண்ணிட முடியாது, அதுக்கு பாஸ்வர்டு போட்டு வச்சிருக்காங்க… அண்ணியும், ருக்மணியும் பேசறதை அவங்க ரூம்ல செட் பண்ணின காமிரா மூலமா நான் பார்த்திட்டு தான் இருந்தேன்… கெளதமைப் பிடிச்சுட்டா எல்லாம் சேப்…”

“ச்சே… இப்படி ஒருத்தியோட இத்தனை காலம் குடும்பம் நடத்தினதை நினைச்சா அருவருப்பா இருக்கு…”

ஹரி வேதனையுடன் சொல்ல, “அண்ணா, அண்ணிகிட்ட தன்மையா பேசி அவங்களை மாத்தணும், இப்படி நடந்தது வெளிய தெரிஞ்சா நம்ம குடும்பத்துக்கு தான் அசிங்கம், நீங்க கொஞ்சம் பொறுமையா பேசுங்க… அவங்க கெமிக்கல் பாக்டரிக்கு தான் போயிருப்பாங்கன்னு நினைக்கறேன்…”

“அந்த கேடுகெட்டவ முகத்துலயே நான் முழிக்க விரும்பல, அவ எங்கயோ தொலையட்டும்… எனக்கு மனசு சரியில்ல, வீட்டுக்குப் போறேன்… அவ ரூம்ல வேற எதுவும் வீடியோ இருந்தாலும் பார்த்து அழிச்சிருங்க, கெளதமைப் பிடிக்கற வேலையைப் பாருங்க…” சொன்னவன் தளர்ந்து கிளம்ப பாரதியும், ரிஷியும் கங்காவின் அறைக்குள் நுழைந்தனர்.

“ரிஷி…! ஒருவேளை, சிஸ்டத்துல வீடியோ கிளிப்பிங்ஸ் இருக்கலாம்…” பாரதி சொல்ல, ரிஷி தலையாட்டினான்.

“ம்ம்… நீ அதெல்லாம் பார்த்து டெலீட் பண்ணு…”

பாரதி சிஸ்டத்தை இயக்கி சந்தேகமாய் உள்ள பைல்களை எல்லாம் டெலீட் செய்தாள். ரிஷி கெளதமின் எண்ணுக்கு முயற்சி செய்ய, அது சுவிட்ச் ஆப் என்றதும் டெலிபோன் துறையில் இருந்த நண்பனுக்கு அழைத்தான். அவனிடம் கெளதமின் எண்ணைக் கொடுத்து டிரேஸ் செய்ய சொல்லிவிட்டு காத்திருந்தான்.

அந்த நேரத்தில் ரிஷிக்கு சூர்யாவின் எண்ணிலிருந்து அழைப்பு வர எடுத்து காதுக்குக் கொடுத்தான்.

“சொல்லுடா சூர்யா…”

“டேய் ரிஷி, நான் ஒரு வேலையா நீலாங்கரை வந்திருந்தேன்… உங்க அண்ணி காரை வழிமறிச்சு நாலஞ்சு ரவுடிங்க வம்பு பண்ணிட்டு இருந்தாங்க, என்னன்னு பார்க்க பக்கத்துல போறதுக்குள்ள அவங்க முகத்துல மயக்க மருந்து ஸ்ப்ரே பண்ணி கார்ல ஏத்தி கடத்திட்டுப் போயிட்டாங்க…”

“எ..என்னடா சொல்லற…? யார் அவங்க…? அண்ணியை எதுக்குக் கடத்தினாங்க…?”

“அது தெரியல, நான் அந்தக் காரை பாலோ பண்ணி போயிட்டு இருக்கேன்… நீ கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வர முடியுமா…?”

“இதோ கிளம்பிட்டேன் டா…” சொன்னவன் அவசரமாய் பாரதியிடம் விஷயத்தை சொல்ல அவளும் கிளம்பினாள். நீலாங்கரையில் தான் அவர்களின் கெமிக்கல் பாக்டரி இருந்தது. அங்கே செல்லும் வழியில் தான் கங்காவைக் கடத்தி இருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டான் ரிஷி.

அதற்குள் தொலைபேசி இலாகாவில் இருந்த நண்பனும் அழைத்து கெளதமின் நம்பர் இருக்கும் டவரை சொல்ல அது ராஜேஷின் பாக்டரி உள்ள ஏரியா என்பது புரிய ரிஷியின் மனது சட்டென்று எல்லாவற்றையும் லிங்க் செய்தது.

உடனே ராஜேஷின் சித்தப்பாவான அந்த பெரியவரின் எண்ணுக்கு அழைத்தான் ரிஷி. அவரிடம் விஷயத்தை சொல்ல அவரும் உடனே அங்கே வருவதாகச் சொன்னார்.

ராஜேஷின் பாக்டரிக்குப் பின்னில் இருந்த குடோனில் ஒரு மர நாற்காலியோடு சேர்த்து கங்காவைக் கயிறில் கட்டி வைத்திருந்தனர். சுற்றிலும் நான்கைந்து தடிமாடுகளைப் போன்ற ஆண்கள் நின்றிருக்க அவளைக் குரோதம் வழியும் கண்களுடன் பார்த்தபடி நின்றிருந்தான் ராஜேஷ்.

ஒருத்தன் அவள் முகத்தில் தண்ணியைத் தெளிக்க மெல்ல உணர்வு நரம்புகள் விழித்துக் கொள்ள கண்ணைத் திறந்தவள் எதிரே நின்றவர்களைக் கண்டு அதிர்ந்தாள்.

“ஏய்…! என்னை எதுக்கு கட்டிப் போட்டிருக்கிங்க…? இங்க எதுக்கு கொண்டு வந்திங்க…? நான் யாருன்னு தெரியும்ல, அவிழ்த்து விடுங்கடா… ஏய் ராஜேஷ்…! என்னைப் பத்தி தெரிஞ்சும் விளையாடறியா…” அப்போதும் எச்சரித்தாள்.

கோபத்துடன் அவள் அருகே வந்த ராஜேஷ் பளாரென்று கன்னத்தில் அறைந்தான்.

“என்னடி…! இந்த நிலமைலயும் கொக்கரிக்குற…? இது உன் இடம்னு நினைச்சியா…? என் இடம், என்னோட ஆளுங்க…”

“வேணாம் ராஜேஷ், என்னோட விளையாடாத… முதல்ல என்னை அவிழ்த்து விடு…” கெஞ்சினாள்.

“இருடி, அவிழ்த்து விடவா உன்னைத் தூக்கிட்டு வந்தோம்… எப்படி, எப்படி..? கான்ட்ராக்ட் உனக்குக் கிடைக்கறதுக்காக எங்களை கவனிக்கறேன்னு பொண்ணும், தண்ணியும் ஏற்பாடு பண்ணுவ… அப்புறம் அதை நாங்க அனுபவிக்கும் போது வீடியோ எடுத்து வச்சு பணம் கேட்டு மிரட்டுவ… ஒரு பொட்டச்சி நாய், உனக்கு இவ்ளோ தில் இருக்கும்போது ஆம்பளைங்க நாங்க நினைச்சா என்னாகும் தெரியுமா…?” அவனது பேச்சில் மிரண்டு போயிருந்தாள் கங்கா.

“ரா..ராஜேஷ்… வேணாம் என்னை விட்டிரு, இனி உன்னை மிரட்டி தொந்தரவு பண்ண மாட்டேன்… என்னை எதுவும் பண்ணிடாத, ப்ளீஸ்…”

“இனி நீ என்னடி என்னைப் பண்ணறது… நீ பதுக்கி வச்சிருந்த பென் டிரைவ் எல்லாத்தையும் தான் நான் தூக்கிட்டனே, கெளதம்… அதைக் கொண்டு வா…” குரல் கொடுக்க கையில் நிறைய பென் டிரைவுடன் வந்தான் கெளதம்.

“டேய் துரோகி… என்கிட்ட சம்பளம் வாங்கிட்டு எனக்கே துரோகம் பண்ணிட்டல்ல…” கெளதமைக் கண்டதும் கங்கா கத்த அவள் முகத்தில் ஓங்கி அறைந்தான் ராஜேஷ்.

“உஷ்ஷ்ஷ்… சத்தம் போடக் கூடாது, என்னமோ நீ யாருக்கும் துரோகமே பண்ணாத உத்தமி போலப் பேசற… கட்டின புருஷனுக்கு, நம்பின கொழுந்தனுக்கு, வாழ வைச்ச தொழிலுக்கு விஸ்வாசமா இல்லாத நீ அதைப் பத்தி பேசக் கூடாது… இந்த மாதிரி எத்தனை பேரை பிளாக்மெயில் பண்ணி அவங்க தொழிலைக் கெடுத்து, நிம்மதியைக் கெடுத்து எல்லாத்தையும் தொலைச்சிட்டு ஓட வச்சிருக்கே… ஆனா உனக்கு ஒரு சந்தேகம் இருக்கும்… கௌதம் எப்படி உன் ரூமுக்குள்ள நுழைஞ்சு இதை எல்லாம் எடுத்திட்டு வந்தான்னு… என்ன…? இருக்கு தானே…” என்றவன், “கெளதம், நீயே அந்த சந்தேகத்தைப் போக்கிடு…” என்றான்.

“ஒரு நாள் உன் ரூம் சாவி வளைஞ்சு போச்சுன்னு சரி பண்ண ருக்மணிகிட்ட கொடுத்தியே, நினைவிருக்கா…? அந்த லூசு அதை என்கிட்ட கொடுத்து சரி பண்ணிட்டு வர சொல்லுச்சு, கிடைச்ச சந்தர்பத்தை விடுவேனா…? அதே போல ஒரு டூப்ளிகேட் சாவி ரெடி பண்ணி வச்சுகிட்டேன்…”

“என்ன கங்கா, கெளதம் எதுக்கு இதெல்லாம் எனக்கு பண்ணறான்னு யோசனையா இருக்கா… அவன் வேற யாரும் இல்லை, என் சித்தப்பா பையன் தான்… என் பிரச்சனை தெரிஞ்சப்ப அவன்தான் உதவி செய்யறேன்னு சொன்னான்… எல்லா மனுஷனுக்கும் ஏதாச்சும் ஒரு விஷயத்துல வீக்னஸ் இருக்கும்… அதுக்காக அந்த வீக்னசைப் பிடிச்சுகிட்டு மேலேறி வர நினைக்கக் கூடாது, உன்னைலாம் ஒரு பொம்பளைன்னு நினைக்கவே கேவலமாருக்கு…  கெளதம், அதை இவ கண்ணு முன்னாடியே பெட்ரோல் ஊத்திக் கொளுத்து…” ராஜேஷ் சொல்ல கெளதம் செய்தான்.

சுடர் விட்டு எரியும் நெருப்பில் அந்த பிளாஸ்டிக் பென் டிரைவ்கள் சிறு சத்தத்துடன் வெடித்து எரிவதை குருதி வழியும் உதட்டுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கா.

“கெளதம், நீ செய்தது பெரிய உதவி… கிளம்பு, இந்தப் பிரச்னையை நாங்க முடிச்சுக்கறோம்… நீ இதுல இன்வால்வ் ஆக வேண்டாம்…” ராஜேஷ் சொல்ல, கெளதம் கிளம்பினான்.

“ராஜேஷ், அதான் எல்லாத்தையும் அழிச்சிட்டியே… இனி நான் உன் வழியில் வரவே மாட்டேன், என்னை விட்டுடு ப்ளீஸ்… நான் போயிடறேன்…”

“என்னது, விட்டுடறதா…? நீ மத்தவங்க வாழ்க்கைல விளையாடும்போது எவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு, உன் வாழ்க்கைல நாங்களும் விளையாட வேண்டாமா…? என்னடா பசங்களா…? நம்ம விளையாட்டு என்னன்னு மேடத்துக்கு காட்டிடுவோமா…?” அவன் நக்கலாய் கங்காவைப் பார்த்துக் கொண்டு கேட்க சுற்றி நின்றவர்களின் கண்களில் காம வெறி நிழலாடியது.

கங்காவின் இதயம் துடிக்கும் ஓசை காதுக்குள் முரசொலி போல் பயங்கர சத்தமாய் கேட்டது.

“டேய்… அந்த காமெரா ரெடி பண்ணு…” ராஜேஷ் சொல்ல ஒருத்தன் டிஜிட்டல் காமெராவுடன் அங்கே வந்தான்.

“டேய் பசங்களா, யாரும் ஆக்ரோஷம் காமிக்கக் கூடாது… நிறுத்தி நிதானமா விளையாடுங்க… எல்லாருக்கும் நிச்சயம் வாய்ப்பு உண்டு, சரியா…?” அதைக் கேட்ட கங்காவுக்கு அச்சத்தில் ரத்தம் கொதிக்க கை, கால் குழைந்து மயக்கம் வரும் போல் இருந்தது.

“டேய், எனக்கு ஒரு சேர் எடுத்துப் போடு…” சொன்ன ராஜேஷ் பார்வையாளராய் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“யாருடா, முதல்ல விளையாட்டைத் தொடங்கறது…?” ராஜேஷ் கேட்க கஞ்சாவில் தோய்ந்த பல் சிரிப்புடன் ஒருவன் கையைத் தூக்க சம்மதமாய் கண் காட்டினான். அவன் அவளை நோக்கி அடியெடுத்து வைக்க கங்கா அச்சத்தில் எதிர்க்கக் கூட முடியாமல் பார்த்திருந்தாள்.

அந்த நேரத்தில் அவளது அகம்பாவமும், பணத்திமிரும், மற்றவர்களை காலுக்குக் கீழ் தூசியாய் நினைக்கும் உதாசீன குணமும் தவிடு பொடியாய் நொறுங்க அவளுக்குள் இருந்த பெண்மை துடிக்கத் தொடங்கியது. மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் தவிப்பு கண்ணில் நீரை வரவழைத்தது.

உலகத்தில் வேறு எதுவுமே முக்கியமின்றிப் போக மானம் மட்டுமே பிரதானமாய் தோன்ற தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கதறினாள்.

“வேண்டாம், என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க, ஐயோ கடவுளே…! என்னைக் காப்பாத்து… நான் பண்ணது தப்புதான், அதுக்கு என் மானத்தைப் போக்கி தண்டிச்சுடாத…” கதறலாய் ராஜேஷை நோக்கி கை கூப்பி கெஞ்சத் தொடங்கினாள்.

விதை ஒன்று விதைத்தால்

திணை ஒன்று முளைப்பதில்லை…

வினை விதைத்தால்

வினையே பலனாகிறது…

நன்மையை விதைத்து

நல்லதை மட்டுமே

அறுவடை செய்வோம்…

Advertisement