Advertisement

“என்னடா சொல்லற…? நான் எங்கே போகப் போறேன்…”

“என்ன அண்ணி, நீயும் இத்தனை வருஷமா எங்களுக்காகவும், இந்த கம்பெனிக்காவும் ரோஷனைக் கூட கவனிக்காம எவ்வளவு பாடுபட்டுட்ட…? இனியாச்சும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா…? அதான் உனக்கு வாலன்டரி ரிட்டயர்மென்ட் கொடுக்கலாமான்னு சும்மா  யோசிச்சேன்…” எனவும் கங்காவின் முகம் மாறியது.

“அடடா, இது நல்ல யோசனையா இருக்கே…” என்றான் ஹரி.

“என்ன நல்ல யோசனை…? என்னை வீட்டுல ரெஸ்ட் எடுக்க விட்டா ஆச்சா…? இந்த கம்பெனி நான் இல்லாம வளர்ந்திடுமா…? அவன்தான் ஏதோ புரியாம சொல்லுறான்னா நீங்களும் ஆஹான்னுட்டு…” கடுப்புடன் சொன்னவள் அந்த டாக்குமென்ட்சை எடுத்துக் கொண்டு நகர ஹரி சிரித்தான்.

“உன் அண்ணி சொன்னதைக் கேட்டியா…? நாம ரெஸ்ட் எடுக்க வீட்டுல உக்கார்ந்தாலும் அவ எந்த பொறுப்பையும் விட்டு நகர மாட்டா, இந்த கம்பெனிதான் அவ உயிரு…”

ஹரி மனைவியைப் பெருமையாய் சொல்ல ரிஷிக்கு அண்ணனை நினைத்து பரிதாபமே தோன்றியது.

அலுவல் சம்மந்தமாய் சில விஷயங்களை பேசிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான் ரிஷி. கங்கா அவன் பாரதியைக் காண செல்லுவான் என நினைத்துக் காத்திருந்தது ஏமாற்றமாக யோசனை அதிகமானது.

அன்றைய நாள் வேறு பிரச்சனையின்றி கழிய அடுத்தநாள் காலையில் சீக்கிரமாகவே எழுந்து ரிஷி கிளம்பி விட்டான்.

“என்னடா ரிஷி, நேரமா கிளம்பிட்ட…? இன்னிக்கு ஆபீஸ் வரலியா, வெளிய எங்காச்சும் போறியா…?” கங்கா விசாரிக்க புன்னகையுடன் நின்றவன் பதில் சொன்னான்.

“ஆமா அண்ணி, ரொம்ப நாளா தகிடுதத்தம் பண்ணற பிரண்டு ஒருத்தனை பொறி வச்சுப் பிடிக்க போறேன்…”

“பார்றா, பொறி வச்சுப் பிடிக்க உன் பிரண்டு என்ன பெருச்சாளியா…? சரி, டிபன் சாப்பிட்டுப் போ…”

“வேண்டாம் அண்ணி, நான் நினைச்சது மட்டும் நடக்கட்டும்… விருந்தே சாப்பிடறேன், என்னை விஷ் பண்ணுங்க…” எனவும் கிண்டலாய் சிரித்தாள் கங்கா.

“ஹாஹா… யுத்தத்துக்கு கிளம்பறதா நினைப்பா…? சரி, சென்று வென்று வா…” என கையைத் தூக்கி ஆசிர்வதிக்க, புன்னகையுடன் வெளியேறினான் ரிஷி.

“தன்னையே பெருச்சாளின்னு சொல்லி, நான் வைக்கப் போற ஆப்புக்கு விஷ் பண்ணியும் அனுப்பற உங்களை நினைச்சா கொஞ்சம் பரிதாபமா தான் இருக்கு அண்ணி… பட் வேற வழி இல்லை… கூட இருந்து குழி பறிக்கிற உங்க புத்திக்கு அந்த பேரை சரியாதான் சொல்லி இருக்கீங்க…” மனதுக்குள் நினைத்தபடி ரிஷி காரை எடுக்க ஹரி வந்தான்.

“கங்கா…! இவ்ளோ காலைல ரிஷி எங்க கிளம்பிட்டான்…?”

“தெரியலங்க, ஏதோ பிரண்டுக்கு பொறி வச்சு கையோட பிடிக்கப் போறேன்னு சொன்னான்…”

“ஓ…! இன்னிக்கு சாயந்திரம் சில முக்கியமான முடிவெல்லாம் எடுக்க வேண்டிருக்கு… அவனையும் வீட்டுல இருக்க சொல்லு… அடுத்த வாரம் பாரதிக்கும், ரிஷிக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டா அவளும் இந்த வீட்டுப் பொண்ணாகிடுவா… உனக்கு சமமான அந்தஸ்தை அவளுக்கும் கொடுக்கணும் இல்லியா, அதனால அவளையும் பார்ட்னரா சேர்த்து டாக்குமென்ட்ஸ் மாத்தி ரெடி பண்ணனும்… அவங்க கல்யாணத்துக்கு நாம கொடுக்கிற சர்ப்ரைஸ் கிப்ட் இதுவா இருந்துட்டுப் போகட்டுமே…”

ஹரி சொன்னதைக் கேட்டு எரிந்தது கங்காவுக்கு.

“ஒரு கேடுகெட்ட அன்னாடங்காச்சிக்கு இப்படி ஒரு வாழ்வா… எங்கயோ குப்ப பொறுக்கிட்டு இருந்தவளுக்கு எனக்கு சமமான தகுதியா…? அவ கல்யாணம் முடிஞ்சதும் இந்த உலகத்தை விட்டே போகப் போறா, அது தெரியாம இவன் வேற புதுசு புதுசா பிளான் பண்ணிட்டு இருக்கான்…” கடுப்புடன் யோசித்தவளை ஹரியின் குரல் மீட்டது.

“என்ன கங்கா, நீ எதுவுமே சொல்லலை…”

“அதுக்கென்னங்க, நம்ம புள்ளைங்களுக்கு நாம தானே செய்யணும்… நீங்க சொன்னபோலவே பண்ணிடலாம்…” சொன்னவள் நகர்ந்துவிட ஹரியும் புறப்பட சென்றான்.

அக்கோபத்தில் கடுகளவும் குறையாமல் ஆபீஸ் வந்த கங்கா அதிர்ந்து போனாள். பூட்டியிருந்த அவளது அறைக்கதவு வெறுமனே சாத்தப்பட்டிருக்க மேஜை, அலமாரி எல்லாம் கலைக்கப் பட்டிருந்தது. யாரோ எதையோ தேடி கலைத்துப் போட்டது போல் கிடந்தது. வேகமாய் கைப்பையில் மேஜை சாவியைத் தேடி எடுத்து திறக்க அதற்குள் பத்திரமாய் பதுக்கப்பட்டிருந்த பென் டிரைவ்கள் எதையும் காணவில்லை. அதிர்ந்து பைத்தியம் போல் மீண்டும் தேடியும் கிடைக்கவில்லை.

“யார்… யார் உள்ளே வந்தது…? என் ராஜ்யத்தைக் கலைக்க எவன் செய்த வேலை இது…?” தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டாள் கங்கா. எழுந்து தண்ணியைக் குடித்துவிட்டு அமைதியாய் அமர்ந்து  யோசித்தாள்.

“என் அறைக்கு ஒரு சாவி மட்டும் தான், அது என்னிடம் பத்திரமாய் இருக்கிறது… அப்படியானால் வேறு யார் திறந்திருக்க முடியும்…? நேற்று மாலை கிளம்பும்போது சரியாகத் தானே இருந்தது… நான்தானே பூட்டிவிட்டு சென்றேன், பிறகு எப்படி திறந்திருக்கிறார்கள்…?” குழப்பமாய் யோசித்தவள் செக்யூரிட்டியை அழைத்துக் கேட்டாள்.

“ராத்திரி ஏழு மணிக்கு மேல யாராவது வந்தாங்களா…?”

“இல்ல மேடம்…”

எப்படி கேட்டும் அவனிடம் சந்தேகப்படும்படி எந்த பதிலும் கிடைக்காமல் போகவே அவனை அனுப்பிவிட்டு சிஸ்டத்தை ஆன் செய்து ஒரு போல்டரை பாஸ்வேர்டு போட்டுத் திறக்க அதில் நிறைய வீடியோ, போட்டோ கிளிப்பிங்ஸ் இருந்தது. அதில் பாரதியின் அக்கா வீடியோவும் அடக்கம்.

“நல்லவேளை…! இதுல உள்ள ஆதாரத்தை எதுவும் பண்ணல, பாரதியை அடக்க எனக்கு இது போதும்…” நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் ருக்மணியை அழைத்தாள்.

“ருக்மணி…! பாரதியும், ரிஷியும் நேத்து எப்ப வீட்டுக்குக் கிளம்பினாங்கன்னு செக் பண்ணிட்டு வந்து சொல்லுங்க…”

“அவங்க ஆறு மணிக்கு கிளம்பியிருக்காங்க மேடம்…” என்றாள் அறைக்குள் பதட்டமாய் நடந்தபடி இருந்தவளிடம்.

“என்னாச்சு மேடம்…? ஏன் பதட்டமா இருக்கீங்க, எதுவும் பிராப்ளமா…?” ருக்மணி கேட்க விஷயத்தைக் கூறினாள்.

“என் ரூம் சாவி என்கிட்ட மட்டும்தான் இருக்கு, ஆனா, யாரோ என் ரூமுக்குள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் கலைச்சு, நாம டீலரை மிரட்ட ரெடி பண்ணி வச்ச வீடியோ பென் டிரைவ், பாரதியோட அக்கா சம்மந்தமான பென் டிரைவ் எல்லாத்தையும் எடுத்திட்டுப் போயிருக்காங்க…”

“ஓ…! செக்யூரிட்டிய விசாரிச்சீங்களா…?”

“விசாரிச்சேன், அவருக்குத் தெரியலை…”

“ஒருவேளை பின்பக்க டோர் வழியா வந்திருக்கலாம் மேடம், CCTV ல பார்த்தா தெரிஞ்சிடும்…” அவள் சொல்ல கம்ப்யூட்டரில் அதைத் தேடி எடுத்துப் பார்க்க, இரவு பத்து மணிக்கு ஒரு நபர் தலையில் தொப்பியுடன் முகம் மறைத்து பின் கதவைத் திறப்பது தெரிந்தது. முதுகு மட்டுமே தெரிய உயரம், உடைகளை கவனிக்க கெளதம் போல் தோன்றியது.

“கெளதம் போல இருக்கு மேடம்…”

“ம்ம்… ஆனா அவன் எதுக்கு இப்படி திருட்டுத்தனமா உள்ள வரணும்… கெளதம் இப்ப எங்கே…?”

“கெளதம் இன்னைக்கு லீவு மேடம், நேத்தே ரெண்டு நாளைக்கு லீவு சொல்லிட்டு போயிருக்கார்….” ருக்மணி சொல்ல அதிர்ச்சியுடன் நோக்கினாள் கங்கா.

“ஒருவேளை, இந்த கெளதம் பாரதிக்கு ஆதரவாய் எனக்கு எதிரே செயல்படுகிறானா…?” யோசிக்க குழம்பியது.

“கெளதமுக்கு எப்படி என் ரூம் சாவி, பேக் டோர் சாவி கிடைத்தது… அவனுக்கு இந்த பென் டிரைவ் பற்றி எப்படித் தெரிந்திருக்கும்…” புரியாமல் தலையை வலித்தது.

“ஒருவேளை…! ரிஷிக்கு பாரதி எல்லாம் சொல்லி இருப்பாளா…? மூவரும் சேர்ந்து தான் எனக்கு எதிரே ஆட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்களா…?” கொதித்தாள். கோபத்துடன் எழுந்து பாரதியின் அறைக்கு சென்றாள்.

பாரதி இவளை நோக்கியும் கண்டு கொள்ளாமல் வேலையைத் தொடர அருகே வந்து கத்தினாள்.

“ஏய் பாரதி…! உன்கிட்ட அவ்ளோ சொல்லியும் எத்தனை தைரியம் இருந்தா எனக்கு எதிரா உன் வேலையைத் தொடங்கிருப்ப…?” கேட்டதோடு ஓங்கி அவள் கன்னத்தில் அறையவும் செய்ய பாரதி துடித்துப் போனாள்.

“என்னடி முறைக்கிற…? அந்த கெளதமை கைக்குள்ள போட்டுகிட்டு நைட்டோடு நைட்டா என் ரூமைத் திறந்து பென் டிரைவை எடுத்திட்டா உன் அக்காவோட மானத்தைக் காப்பாத்திடலாம்னு கணக்கு போட்டியா, நடக்காதுடி…”

“என்ன சொல்லற, நான் என்ன பண்ணேன்…?”

“தெரியாத போல நடிக்காத… நீ எதுவும் பண்ணாமலா என் ரூம்ல இருந்த பென் டிரைவ் காணாமப் போச்சு… சொல்லுடி, நீயும் அந்த கெளதமும் மட்டும் தான் இதுல கூட்டா…? இல்ல ரிஷியும் இருக்கானா…?” அவளை உலுக்கினாள். அப்போது கதவு திறக்கப்பட இருவரும் திரும்பினர். ஹரி கோபத்துடன் கங்காவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெயிப்பது போல்

தோன்றினாலும்

உண்மையில் என்றும்

தீமை ஜெயிப்பதில்லை…

காலமே கடந்தாலும்

தளராது நின்றால்

நன்மை என்றும்

தோற்பது இல்லை…

Advertisement